Print Version|Feedback
Macron turns France’s labor decrees on auto workers
பிரான்சின் தொழிற்சட்ட உத்தரவாணைகளை வாகன உற்பத்தித் தொழிலாளர்களை நோக்கி மக்ரோன் திருப்புகிறார்
Alex Lantier
29 December 2017
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தொழிற்சட்ட உத்தரவாணைகள் ஒரு பெரிய தொழில்நிறுவனத்தில் முதன்முறையாக பயன்படுத்தப்படுகின்றதான நிகழ்வில், வாகன உற்பத்தி நிறுவனமான PSA Peugeot-Citroën வரைமுறையற்ற பெருந்திரள் வேலைநீக்கங்களுக்கு அது தயாரிப்பு செய்து கொண்டிருப்பதாக நேற்று அறிவித்தது. மக்ரோனின் உத்தரவாணைகளின் படி பெருந்திரள் வேலைநீக்கங்களுக்கு தொழிற்சங்கங்களது ஒப்புதல் அவசியமாயிருக்கும் நிலையில், அவற்றுடனான பேச்சுவார்த்தைகள் ஜனவரி 9 அன்று தொடங்கவிருக்கின்றன.
ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது தொழிலாளர்களது வேலைகள், வேலை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான இடைவிடாத ஒரு சர்வதேச தாக்குதலின் பகுதியாக அமைந்திருப்பதாகும். 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கும் உலகளாவிய நெருக்கடிக்கும் பின்னர், உலகளாவிய அளவில் அரசாங்கங்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களை, எந்த வங்கிகளின் ஊகவணிகம் இந்த நெருக்கடிக்குக் காரணமாய் இருந்ததோ அந்த வங்கிகளின் கஜானாவுக்கே பாய்ச்சிய நிலையில், பிரெஞ்சு அரசானது PSA மற்றும் ரெனோல்ட் நிறுவனங்களைப் பிணையெடுக்க பில்லியன் கணக்கான யூரோக்களை செலவிட்டது. பதிலாக, இந்த வாகன உற்பத்திப் பெருநிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட செல்வத்தில் இன்னும் பில்லியன் கணக்கான யூரோக்களை பெரும்செல்வந்தர்களின் பைகளுக்குள் பாய்ச்சுவதற்காக தொழிலாளர்களை பெருந்திரளாய் வேலைநீக்கம் செய்கின்றன.
பிரான்சில் இப்போது “செல்வந்தர்களின் ஜனாதிபதி”யாக அலட்சியத்துடனும் அவநம்பிக்கையுடனும் பரவலாக பார்க்கப்படுகின்ற மக்ரோனால் முன்னிலை கொடுக்கப்படும் கொள்கையானது, தொழிலாள வர்க்கத்தை பல தசாப்தங்கள் பின்னால் தள்ள நோக்கம் கொண்டிருக்கிறது. PSA இன் துணைநிறுவனமான Opel Vauxhall ஜேர்மனியில் மட்டும் 4,500 வேலைகளை வெட்டுவதற்குக் காத்திருக்கிறது, ஐரோப்பாவெங்கிலும் பத்தாயிரக்கணக்கான PSA வேலைகள் அச்சுறுத்தலில் உள்ளன. டெட்ராயிட் வாகன உற்பத்தி நிறுவனப் பிணையெடுப்பானது புதிதாக வேலைக்கு எடுக்கப்படும் தொழிலாளர்களது சம்பளத்தை பாதியாக வெட்டிய ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், உற்பத்தி வேகத்தைக் கூட்டுவதும், வேலைநேர நெகிழ்நிலையை அதிகரிப்பதும், பிரான்சில் மணிக்கு 9 யூரோக்களுக்கு சற்றே அதிகமாய் ஊதியமளிக்கப் பெறும் தற்காலிகத் தொழிலாளர்களால் ஆன ஒரு தொழிலாளர் கூட்டத்திற்கு உருமாற்றுவதுமே இலக்காய் இருக்கிறது.
சர்வதேச அளவில், நிதிப் பிரபுத்துவமானது 2018 இல் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு வரலாற்றுப் பெரும் தாக்குதலுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. பில்லியன் கணக்கில் இலாபம் குவிப்பதற்காக சீமன்ஸ் 15,000 வேலைகளை வெட்டிக் கொண்டிருக்கிறது என்றால், GE (General Electric) 12,000 வேலை வெட்டுகளுக்கு திட்டமிட்டிருக்கிறது. ஐரோப்பாவின் அரசாங்கங்கள் பல பில்லியன் யூரோ இராணுவச் செலவின அதிகரிப்புகளுக்கும் செல்வந்தர்களுக்கான வரி வெட்டுகளுக்கும் -அமெரிக்காவில் 1.4 டிரில்லியன் டாலர் தொகையை பெருமளவு செல்வந்தர்களுக்கு பாய்ச்சுகின்ற அதேநேரத்தில், முக்கியமான அமெரிக்க சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூக வேலைத்திட்டங்களை உருக்குலைக்கும் விதமாக இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் ஒன்றுடன் போட்டியிடும் விதமாய்- நிதியாதாரம் திரட்டுகின்ற வகையில் புதிய சமூகத் தாக்குதல்களது ஒரு சுற்றுக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.
இந்தத் தாக்குதலானது சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகரப் பரிமாணங்களுடனான வெடிப்பான எதிர்ப்பை தூண்டவிருக்கிறது, அது முன்னோக்கு மற்றும் மூலோபாயம் குறித்த அதிமுக்கியமான பிரச்சினைகளை எழுப்பவிருக்கிறது. தேசிய அளவில் முதலாளித்துவ வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்ளத் தேடுவதன் அடிப்படையில் ஒரு போராட்டம் நடத்தப்பட முடியாது: அப்படியான எந்த தெரிவும் தொழிலாளர்கள் முன் இல்லை. ஒரு புரட்சிகர மற்றும் சோசலிச முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக, அத்துடன் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் பின்னால் அணிவகுக்கின்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் குட்டி-முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு எதிரான விதத்தில், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சர்வதேசப் போராட்டமாக நடத்தப்படும்போது மட்டுமே அது வெற்றிகரமானதாக ஆக இயலும்.
இது குறிப்பாக பிரான்சில் தொழிலாளர்களின் அனுபவத்தில் தெளிவாக வெளிவருகிறது. மக்ரோனும் அவருக்கு முன்னிருந்த சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் வங்கிகளின் உத்தரவுகளைத் திணிப்பதற்காக வெகுஜனக் கருத்தை காலில் போட்டு நசுக்கினர். பிரெஞ்சு மக்களில் முழுமையாக 70 சதவீதம் பேர் PS இன் தொழிலாளர் சட்டத்தை எதிர்த்தனர். ஆயினும், PS அதற்கு எதிரான பெருந்திரளான போராட்டங்களை ஒடுக்கியது, மாணவர் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் வேலைநிறுத்தங்களை நசுக்குவதற்கும் பத்தாயிரக்கணக்கில் போலிசை அனுப்புகின்ற பொருட்டு அவசரகாலநிலையைக் கொண்டுவந்தது, அதேநேரத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவமோ போலிஸ் ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்த நிலையில் ஒரு கோழைத்தனமான பின்வாங்கலை நடத்தியது.
மக்ரோனின் கொள்கைகள் ஜனநாயக அங்கீகாரம் பெற்றிருப்பதான எந்த நடிப்பும் இல்லாதிருக்கிறது. மே மாதத்தில், ஒரு பிற்போக்கான வங்கியாளரான மக்ரோனுக்கும், நவ பாசிஸ்ட் மரின் லு பென்னுக்கும் இடையில் இறுதிச்சுற்று ஏற்பட்டதில் பரந்த வெகுஜன அதிருப்தி நிலவியதன் மத்தியில் தேர்வான அவரது நடைபோடும் குடியரசு (LRM) கட்சி பாதிக்கும் குறைவான வாக்காளர்களே பங்குபெற முடிவு செய்திருந்த ஜூன் தேர்தலில் சட்டமன்றப் பெரும்பான்மையை வென்றது. ஆயினும் கூட LRM, அதன் பெருந்திரள் வேலைநீக்கங்கள் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் சமயத்தில் தொழிலாளர்களின் பல தலைமுறைகளது போராட்டங்களால் உருவாக்கப்பட்டிருந்த சமூக உரிமைகளை ஒழித்தலின் கொள்கைகளுக்கு பரந்த மக்கள் அங்கீகாரமளித்திருப்பதைப் போல நடந்துகொண்டது.
அவசரகாலநிலையின் முக்கியமான ஷரத்துகளை பயங்கரவாத-எதிர்ப்புச் சட்டத்திற்குள் எழுதியமை மற்றும் கலகத் தடுப்பு ஆயுதங்களது நான்கு-ஆண்டு கொள்முதலுக்கு முன்கூட்டியஆணை விடுத்திருப்பமை ஆகியவை தவிர, ஆர்ப்பாட்டங்களைத் தணிப்பதற்காக PS தொழிலாளர் சட்டத்தில் இருந்து தற்காலிகமாக அகற்றியிருந்த மிகவும் மக்கள்வெறுப்பை சம்பாதித்த அதே நடவடிக்கைகளை மக்ரோன் உத்தரவாணைகளாக திணித்திருக்கிறார். PSA இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற வரைமுறையற்ற பெருந்திரள் வேலைநீக்கங்களுக்கான வசதியும் மக்ரோனின் அந்த உத்தரவாணைகளில் இடம்பெற்றிருக்கிறது. நிறுவனங்கள் பெருமளவில் இலாபகரமாக இயங்கும்போதும் கூட தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதற்கும், நிறுவனத்தின் நிதி நிலைமை மேம்படும்சமயத்தில் கூட வேலைநீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பயிற்சியளிப்பு பயன்களையோ அல்லது மீண்டும்-பணியமர்த்தும் சலுகைகளையோ மறுப்பதற்கும் இது அனுமதிக்கிறது.
தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலும் குட்டி-முதலாளித்துவ போலி-இடது கட்சிகளில் இருக்கும் அவற்றின் கூட்டாளிகளிடமும் எந்த பிரமைகளும் இருக்கக் கூடாது: அவை மக்ரோனுக்கு எதிரான எந்த திறம்பட்ட எதிர்ப்பையும் ஒழுங்கமைக்கப் போவதில்லை. அவை ஏற்கனவே வடக்கு பிரான்சில் இருந்த PSA இன் Sevelnord தொழிற்சாலையில் ஒரு பாரிய விட்டுக்கொடுப்பு உடன்பாட்டுக்கு 2012 ஜூலையில் உடன்பட்டன, PSA இன் எதிர்கால குறைந்த எண்ணிக்கை தொழிலாளர்கள் வேலைத்தளத்தை உருவாக்கியதற்காக அவை இப்போது ஊடகங்களில் பாராட்டப்படுகின்றன. தொழிலாளர் போராட்டம் (LO) கட்சியின் ஒரு உறுப்பினரும் 2013 இல் ஒல்னே என்னும் இடத்தில் இருந்த PSA ஆலை மூடப்படுவதை மேற்பார்வை செய்தவருமான ஜோன்-பியர் மேர்சியே (Jean-Pierre Mercier) தான் இப்போது PSA இன் ஸ்ராலினிச CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) சங்கக் கிளையின் தலைமையில் இருக்கிறார்.
தொழிற்சங்கங்கள் தமது தொழிலாள வர்க்க அடித்தளத்தைத் தொலைத்திருக்கின்ற, பெருமளவில் முதலாளிகளால் நிதியாதாரம் அளிக்கப்படுகின்ற மற்றும் கட்டுப்படுத்தப்படுகின்ற, முதலாளித்துவ அரசின் அங்கங்களில் ஒன்றாக பரிணாமவளர்ச்சி கண்டிருக்கின்றன என்பதை மக்ரோனின் உத்தரவாணைகள் உத்தியோகபூர்வமாக்குகின்றன. பெருந்திரளான வேலைநீக்கங்கள், தொழிற்சாலைகள் மூடப்படாமல் காப்பாற்றப்பட ஊதிய வெட்டுகளை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்த கருத்துவாக்கெடுப்புகள், மற்றும் அவர்களது சொந்த அங்கத்தவர்களுக்கு எதிரான மற்ற தாக்குதல்களை திட்டமிட்டுத் தருவதிலும் அவற்றுக்கு சட்ட ஒப்புதலை வழங்குவதிலும் இத்தொழிற்சங்கங்கள் உதவுகின்றன.
சேர்பியா மற்றும் ரோமானியாவில் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின், ஜேர்மனியில் சீமன்ஸ் தொழிலாளர்களின் மற்றும் மற்ற தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொழிலாள வர்க்கத்தை ஆளும் வர்க்கத்துடனும் அதன் பல்வேறு அரசியல் முகமைகளுடனும் நேரடியாக மோதலுக்குக் கொண்டுவரக் கூடிய அதன் அரசியல் எதிர்-தாக்குதலது ஆரம்ப அறிகுறிகள் ஆகும். 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தம் ஐரோப்பாவெங்கிலும் புரட்சிகரப் போராட்டங்களது ஒரு அலையை தொடக்கியதன் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், தொழிலாளர்களது போராட்டங்களின் வளர்ச்சியானது ஒவ்வொருநாட்டிலுமான நிலைமையின் மீது ஒரு தீர்மானகரமான தாக்கத்தைக் கொண்டிருக்கும். தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அமைப்புகள் மற்றும் அதன் புரட்சிகர முன்னணிப் படையைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை இது கூர்மையாக எழுப்புகிறது.
மக்ரோனின் முறையற்ற உத்தரவாணைகளில் இருந்து எழக் கூடிய தாக்குதல்களுக்கான எதிர்ப்பை விவாதிக்கவும் ஒழுங்கமைக்கவும், தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டி-முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனப்பட்டும் அவற்றுக்கு எதிரான விதத்திலும், வேலையிடங்கள் மற்றும் அதன் அண்டைஅருகாமைப் பகுதிகளில் தமது சொந்த அமைப்புகளையும் குழுக்களையும் கட்டியெழுப்புகின்ற பணிக்கு தொழிலாளர்கள் முகம்கொடுத்து நிற்கின்றனர். அவர்களின் செயல்பாடுகள் பரந்த மக்களின் தேவைகளைப் பேசுகின்ற தெளிவான முதலாளித்துவ-விரோத, ஏகாதிபத்திய-விரோத மற்றும் சோசலிசக் கோரிக்கைகளுடன் இணைக்கப்பட வேண்டும். 2008 இல் கிட்டத்தட்ட ஒரேநாள் இரவில் வங்கிகளுக்குள் டிரில்லியன் கணக்கான டாலர்களை ஆளும் உயரடுக்கினரால் பாய்ச்ச முடிந்தது என்றதன் பின்னர், இந்தத் தேவைகளுக்கான பணம் இல்லை என்பதான கூற்று அபத்தமானது அது நிராகரிக்கப்பட வேண்டும்.
இந்த அமைப்புகள் ஒரு ஐரோப்பிய மற்றும் சர்வதேசிய மட்டத்தில் தொழிலாளர்களது சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராட வேண்டும். உலகளாவிய உற்பத்தி ஒருங்கிணைப்பைக் கொண்ட ஒரு உலகத்தில், வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் சேர்பியாவில் மாதாந்திரம் 380 யூரோக்களோ அல்லது துனிசியாவில் 140 யூரோக்களோ சம்பாதித்தால் மேற்கு ஐரோப்பாவில் அவர்களால் கண்ணியமான வாழ்க்கை வாழ இயலாது. தொழிற்சங்கங்கள் மற்றும் LO போன்ற கட்சிகளது தேசிய-நோக்குநிலையுடனான கொள்கைகளின் திவால்நிலையையும், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய அரசியல் தலைமையின் -ஒவ்வொரு நாட்டிலும் போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள்- அவசர அவசியத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தொழிலாளர்களது சுயாதீன அமைப்புகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், அரசு-அதிகாரத்தை கைப்பற்ற சமூக தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கு செய்ய, மற்றும் திவாலாகிப் போன ஐரோப்பிய ஒன்றியத்தை ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தைக் கொண்டு இடம்பெயர்த்த ஒரு சர்வதேச, சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு இயக்கத்துடன் அவற்றைப் பிணைப்பதற்கும் ICFI போராடும்.