Print Version|Feedback
French campaign on violence against women intensifies police repression
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பிரெஞ்சு பிரச்சாரம் பொலிஸ் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துகிறது
By Francis Dubois and Alex Lantier
1 December 2017
பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பிரச்சாரம் குறித்த ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சனிக்கிழமை அறிவிப்பு, இப்போது ஆறு மாத காலம் நிறைவடைந்திருக்கும் அவர் நிர்வாகத்தின் வலதை நோக்கிய இன்னும் அதிக திருப்பத்தை குறிக்கிறது. பாலியல் குற்றங்களுக்காக அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனையும் (Harvey Weinstein) பிற அமெரிக்க பிரபலங்கள் மீதும் குற்றம் சுமத்துகின்ற ஊடக பிரச்சாரத்திற்கு இடையேயும், மற்றும் பிரான்சில் ஆண்கள் ட்வீட்டரில் மேற்கொள்ளும் முறைகேடான அல்லது துஷ்பிரயோக பாலியல் நடவடிக்கைகளைக் கண்டிக்குமாறு பெண்களை ஊக்குவிக்கும் ஓர் ஊடக பிரச்சாரத்திற்கு இடையிலும், அவரின் இந்த முன்முயற்சி வருகிறது.
இப்பிரச்சாரத்தின் இலக்கு பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதல்ல. சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு பிரதான பெருவணிக கட்சிகள் நலிவடைந்துள்ளதாலும், மற்றும் இப்போது "செல்வந்தர்களின் ஜனாதிபதி" என்று வெறுக்கப்படும் மக்ரோனின் செல்வாக்கு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் நிலைதடுமாறிக் கொண்டிருக்கும் பிரெஞ்சு அரசியல் ஆட்சியை தணிக்கை மற்றும் பொலிஸை கட்டியெழுப்புவதன் மூலமாக ஸ்திரப்படுத்துவதற்கான நோக்கத்தை அது கொண்டிருக்கிறது.
மக்ரோனின் முன்மொழிவு, அவரே அதை எடுத்துரைப்பதைப் போல, “நமது ஒடுக்குமுறை அமைப்பை பலப்படுத்துவதற்காகும்.” இதற்கான நடவடிக்கைகளுக்காக அவர் 2018 இல் 420 மில்லியன் யூரோ செலவிட முன்மொழிந்தார், அந்த நடவடிக்கைகளில் பின்வருவன உள்ளடங்கும்:
* புதிய “நாளாந்த பாதுகாப்பு பொலிஸை" கட்டமைப்பது, இது தொழிலாள வர்க்க குடியிருப்புப்பகுதிகள் மீது கவனம்செலுத்தும், மற்றும் "பாலியல் அவமதிப்பு குற்றம்" என்ற ஒன்றை உருவாக்குதல், மற்றும் "உடனடியாகவே அவ்விடத்தில் ஒரு அபராத தொகையை விதிக்கும்.” ஒரு "பாலியல் அவமதிப்பு குற்றம்" என்ற முறையை உருவாக்குவதாகும்.
* "பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இட்டு" செல்லும் என்று அரசு நம்புகின்ற அனைத்து தரவுகளையும் நீக்குவதற்காக, இணையத்தை தணிக்கை செய்யும் தேசிய உயர்மட்ட ஒலி-ஒளித்துறை கவுன்சிலை (CSA) ஏற்படுத்துவது.
* பள்ளிக்கூடங்கள் மற்றும் மழலையர் பள்ளி குழந்தைகளிடையே பாலியல் முறைகேடுகளுக்கு எதிராக போராடுவதற்கான வகுப்புகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது.
* பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவ மற்றும் சமூக கவனிப்புக்கு நிதியுதவிகளை அதிகரித்தல், மற்றும் பெண்கள் வீட்டில் இருந்தவாறே நேரடியாக இராணுவ பொலிஸ் அல்லது உள்ளூர் பொலிஸிற்கு பாலியல் தொந்தரவு குறித்து கண்டனங்களைத் தெரிவிக்க அனுமதிக்கும் இணைய தொலைத்தொடர்பு அமைப்புமுறையை உருவாக்குதல்.
முஸ்லீம் உலகில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நவ-காலனித்துவ தலையீடுகளையும் அவர் ஊக்குவித்தார், பெண் பிறப்புறுப்பு அறுவைச்சிகிச்சைக்கு எதிரான போராட்டத்திற்கு அவற்றை அர்ப்பணித்ததன் மூலம் அவற்றுக்கு ஒரு பெண்ணிய சாயத்தை அளித்தார். “இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை மேற்கொள்பவர்கள் அனைவரையும் வேட்டையாடவும்" மற்றும் "தங்களுக்கும் தங்களின் சிறிய மகள்களுக்கும் பிறப்புறுப்பு அறுவைச்சிகிச்சை செய்வதிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் தத்தமது நாடுகளில் இருந்து வெளியேறி புலம்பெயரும் பெண்கள் மீது குறிப்பாக கவனம் செலுத்தவும்” அவர் சூளுரைத்தார்.
அவரது தொழில் சட்ட உத்தரவாணைகளைப் பிரெஞ்சு மக்களில் பெரும்பான்மையினர் எதிர்க்கின்ற நிலையில், அதை எதிர்ப்பவர்களை "சோம்பேறிகள்" என்று முன்னர் குற்றஞ்சாட்டிய மக்ரோன், சனிக்கிழமை பிரெஞ்சு மக்களை பாலியல்வாதிகள் (sexist) என்று கண்டனம் செய்து அவர் உரையைத் தொடங்கினார். “நமது ஒட்டுமொத்த சமூகமும் பாலியல்வாதத்தால் பீடிக்கப்பட்டுள்ளது,” என்று அறிவித்த அவர், பிரான்சில் கடந்த ஆண்டு தங்களின் துணைவரால் அல்லது முன்னாள் துணைவரால் கொல்லப்பட்ட 123 பெண்களுக்காக ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தினார். பிரான்சில் பெண்கள் கையாளப்படும் விதம் "அதிர்ச்சியையும் அவமானத்தையும்'' உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உண்மையில், பிரெஞ்சு அரசாங்கம் முன்வைக்கும் இந்த வெளிநாட்டு மற்றும் சமூகக் கொள்கை ஒரு அவலட்சணமான கேலிக்கூத்தாக உள்ளது. மக்ரோன் கட்டவிழ்த்துக் கொண்டிருப்பது தொழிலாள வர்க்கம் மீதான தன் விரோதத்தை அதிகம் மறைக்காத ஒரு வலதுசாரி மற்றும் ஒடுக்குமுறை பிரச்சாரமாகும். பிரான்சின் வெளிநாட்டு படையணியும் அதனால் இலக்கு வைக்கப்படும் படுகொலைத் திட்டமும், பெண் பிறப்புறுப்பு அறுவைச்சிகிச்சைக்கு எதிரான ஒரு தார்மீக சிலுவைப்போர் என்ற சிந்தனையே அபத்தமானதாகும். அகதிகளைப் பொறுத்த வரையில், ஆயிரக் கணக்கானவர்களை ஐரோப்பிய ஒன்றியம் மத்திய தரைக்கடலில் மூழ்கி மரணிக்க விட்ட நிலையில், இவர்கள் பிரான்ஸ் மற்றும் அதன் கூட்டாளிகளால் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா எங்கிலும் நடத்தப்படுகின்ற பல தசாப்த கால ஏகாதிபத்திய போர்களிலிருந்து தப்பி வருபவர்களாவர்.
பிரான்சுக்கு உள்ளேயும் கூட, மக்ரோனால் முன்வைக்கப்பட்ட இந்த கொடுங்கனவான கண்ணோட்டத்தின்படி, கட்டுப்படுத்த முடியாத மற்றும் பெண்கள் மீது வெறுப்பு எனும் "நோய்பீடித்த" ஆண்களால் நடத்தப்படும் பாலியல் தாக்குதல் எனும் ஒரு தொற்றுநோய்க்கு எதிராக, அரசு தணிக்கையின் உதவியுடன், இராணுவமும் பொலிஸூம் மட்டுமே, பெண்களைப் பாதுகாக்க முடியுமாம்.
இதுவொரு அப்பட்டமான பொய், பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த தேசிய ஆய்வகத்தின் தகவல்படி, சுமார் 223,000 பெண்கள் (அதாவது பிரான்சின் பெண்கள் தொகையில் 0.6 சதவீதம் பேர்) ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் குடும்ப வாழ்க்கை துணைவர்களால் பாலியல் வன்முறை அல்லது தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்; 84,000 பெண்கள் (0.2 சதவீதத்தினர்) வன்புணர்ச்சி அல்லது வன்புணர்ச்சி முயற்சிக்கு உள்ளாகிறார்கள். சொல்லப்போனால், 82,635 குடும்ப தாக்குதல்களில் 88 சதவீதத்தினர் பாதிக்கப்பட்ட பெண்கள் என்றும், 31,825 பாலியல் வன்முறை வழக்குகளில் 85 சதவீதத்தினர் பாதிக்கப்பட்ட பெண்கள் என்றும் 2014 இல் சட்ட அமலாக்கப் பிரிவு அறிவித்தது.
வீழ்ச்சி அடைந்து வரும் வாழ்க்கைத்தரங்கள், பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் பில்லியனர்களின் நிகர சொத்து மதிப்பு அருவெறுப்பூட்டும் மட்டத்திற்கு உயர்ந்தமை ஆகியவற்றால் நாசம் செய்யப்பட்ட ஒரு நாட்டின் சமூக யதார்த்தத்திற்கு ஓர் உறைய வைக்கும் அறிகுறியையே இந்த புள்ளிவிபரங்கள் அளிக்கின்றன. பிரெஞ்சு பாலியல்வாதம் குறித்த மக்ரோனின் அவமதிப்பான கண்டனம் இருப்பினும், மக்களில் பரந்த பெரும்பான்மையினர் பாலியல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லை.
மக்ரோனின் நடவடிக்கைகள், பயங்கரம் மற்றும் அவமதிப்பின் மூலமாக மக்களைக் கட்டுப்படுத்த நோக்கம் கொண்ட ஒரு வலதுசாரி சூழலை முடுக்கி விட நோக்கம் கொண்டுள்ளது. ஆரம்ப பள்ளிகள் அல்லது மழலையர் பள்ளிகளிலேயே கூட இளம் சிறுவர்களுக்கு, அவர்களின் வெட்ககரமான சொந்த பாலியல்வாத போக்குகளை அடக்கிக்கொள்ள வேண்டுமென கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. பாரீஸ் சுரங்க வழிப்பாதையும் இப்பிரச்சாரத்திற்கான ஒரு இடமாக மாறி வருகிறது: அங்கே பரந்தளவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு விளம்பரப் பலகை அறிவிக்கின்றது, “பிட்டத்தில் கை வைப்பது சட்டப்படி தண்டிப்பதற்குரிய —5 ஆண்டுகள் சிறை தண்டனை—75,000 யூரோ அபாரதத்திற்கு உரிய குற்றமாகும்.”
இதுபோன்ற விளம்பரப் பலகைகள் வெறுப்பூட்டுபவையாகவும் மற்றும் அதிர்ச்சியூட்டுபவையாகவும் உள்ளன. இதன் அர்த்தம் தகாத செயல்களையோ அல்லது குற்றவியல்த்தன்மையான பாலியல் குற்றங்களையோ நியாயப்படுத்துவது அல்ல. இயல்பான, பரஸ்பர மன ஒப்புதலுடனான பாலியல் உறவுகளின் போக்கில் நிகழும் நடவடிக்கைகள் இப்போது பெரும் சமூக மற்றும் சட்ட ஆபத்துக்களால் நிரப்பப்பட்டு உள்ளன. ஒரு ஜோடியில் யாரேனும் ஒருவர் மற்றவருக்கு எதிராக சட்ட வழக்கை கொண்டுவர முடிவெடுத்தாலும், அந்த ஆண் அல்லது பெண்ணின் துணைவர் முகம்கொடுக்கின்ற சாத்தியமான தண்டனைகள், பரந்த பெரும்பான்மை தொழிலாளர்களில், அவர்தம் எதிர்கால தொழில் வாழ்க்கை மற்றும் நிதிகளை சீரழித்து விடக்கூடியதாக உள்ளது.
வரலாற்றாளர் Mona Ozouf இன் பெண்களின் வார்த்தைகள் (The Words of Women) எனும் 1995 நூலை Le Monde தாக்குகிறது, ”பிரான்சில் நிலவுவதாக கருதப்படும் பாலுறவுகளுக்கு இடையிலான 'மென்மையான வியாபாரத்தையும்', 'அமெரிக்காவில் நிலவும் பாலுறவுகளுக்கு இடையிலான போர்' என்று விவரிக்கப்படும் ஓர் அமெரிக்க பெண்ணியத்தின் தனிமனித உறவுகள் மீதான கடுமையான மதக்கட்டுப்பாடு விதித்த புரிட்டன் (puritan) பாரம்பரியத்தினையும் எதிரெதிராக நிறுத்தினார் என அது குறிப்பிட்டது. ஆனால் Le Monde ஐ பொறுத்த வரையில், பாலினங்களுக்கு இடையிலான போரில் சமரசத்தைக் கைவிட இது சரியான நேரமாக உள்ளது. நடப்பு சம்பவங்கள், Ozouf இன் "வார்த்தைஜாலங்களைச் சிதறடித்துள்ளதாக" அது குறிப்பிட்டது.
20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிலிருந்து ஜாஸ் (jazz) மற்றும் பாரிய உற்பத்தி முறையை இறக்குமதி செய்த பிரான்ஸ், 21 ஆம் நூற்றாண்டில் புரிட்டனிசத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்று ஆளும் உயரடுக்கு ஏன் விரும்புகிறது?
இக்கேள்விக்கு பதிலளிக்க, ஒருவர் அரசியல் நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் அடிப்படை சமூக உரிமைகள் மீது ஒரு தீவிர தாக்குதலை தொடுத்தது. ஐரோப்பிய ஒன்றியம் கிரீஸின் மருத்துவ பராமரிப்பு மற்றும் கல்வியைச் சீரழித்து, சராசரியாக 40 சதவீத கூலி வெட்டுக்களைத் திணித்த பின்னர், மக்ரோன் அதே போன்றவொரு எதிர்ப்புரட்சியை பிரான்சில் திணிக்க நோக்கம் கொண்டுள்ளார். ஆழ்ந்த சமூக கோபம் மற்றும் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் பொறிவுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அவர் இரண்டாம் உலகப் போர் மற்றும் நாஜி ஆக்கிரமிப்பு முடிவுற்றதற்கு பின்னர் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான சட்ட கட்டமைப்புகளை தகர்க்க விரும்புகிறார்.
தொழிலாளர்களிடையே பாரிய கோபத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில், மக்ரோனும் நிதியியல் பிரபுத்துவமும் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, அதற்கு எஞ்சியுள்ள ஆதரவு தளங்களிடையே ஆதரவை அபிவிருத்தி செய்ய முயன்று செய்கின்றனர். அது பாதுகாப்பு படைகளுக்கும் மற்றும் குட்டி-முதலாளித்துவ அரசு-சாரா அமைப்புகளின் அடுக்கிற்கும், குறிப்பாக மக்ரோனின் திட்டத்தில் வழங்கப்பட்ட அரசு மானியங்களைச் சார்ந்து தங்களின் வரவு-செலவு திட்டங்களைக் கொண்டுள்ள பெண்ணியம் சார்ந்த அரசு-சாரா அமைப்புகளுக்கும் முறையிட்டு வருகிறது.
புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற 1968 க்குப் பிந்தைய மாணவர் இயக்கத்திலிருந்து எழுந்த கட்சிகளும், இந்த தொழிலாளர்-விரோத சமூக அடுக்கைக் சேர்ந்தவை என்று இவற்றை குறித்து Les Inrockuptibles ஒரு திட்டவட்டமான சித்திரத்தை வழங்கியது. ஒரு Inrockuptibles பத்திரிகையாளர், மக்ரோனின் உரைக்கு "வன்முறை குறித்து பல மாதங்களாக ஜனாதிபதியை தொடர்பு கொண்டு வந்த பெண் உரிமை அரசு-சாரா அமைப்புகளின்" உறுப்பினர்களது எதிர்வினையைக் காண ஒரு காப்பிவிடுதிக்கு சென்றார். குறிப்பாக ஜூலைக்குப் பின்னர், இந்த சக்திகள் "அரசுசாரா அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டில் வெட்டுக்களைக்" குறித்து பயந்திருந்தன என்பதை Les Inrockuptibles சேர்த்துக் கொண்டது.
ஜனநாயக உரிமைகளை அலட்சியப்படுத்தி பொலிஸ் ஒடுக்குமுறைக்கு அடிப்படையான ஆதரவுடன், அவை பிரெஞ்சு பாலியல்வாதம் குறித்த மக்ரோனின் கண்டனங்களுடன் உடன்படுகின்றன என்பதோடு, நிதியுதவிகளைப் பெறுவதிலேயே தீவிரமாக கவனம் குவித்துள்ளன, “சிறிய வர்ணமிக்க இருக்கைகளில் அமர்ந்திருக்கும் இந்த இளம் பெண்கள் ஒருமுனைப்பட்டுள்ளனர். … அரசு-சாரா அமைப்புகளின் (NGO) உலகிலிருந்து வந்திருந்த முதலில் பேசிய ஒருவரிடம் இருந்து மத்திய கேள்வி வெடித்து கிளம்பியது: அது பெண்கள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அரசு ஒதுக்கும் நிதி குறித்ததாகும். வரவு-செலவு திட்டக்கணக்கு தான் இப்போரில் மத்திய பிரச்சினை, இது இந்நாள் முழுவதும் தொடர்ந்து கையிலெடுக்கப்பட்டிருக்கும்.”
அப்பத்திரிகையின் செய்திப்படி, மக்ரோனின் உரையைச் செவிமடுத்த பின்னர் அவர்களின் தீர்மானம் என்னவென்றால்: “அவர் எங்களுடன் நட்புபாராட்ட முயற்சிக்கிறார், ஆனால் வரவு-செலவின் பார்வையில் இருந்து பார்க்கும்போது அதற்குத் தக்கபடி இல்லை.”
மக்ரோனின் மற்றும் இந்த சமூக அடுக்கின் நடவடிக்கைகள் பெண்களின் பாதுகாப்புக்கானவை என்று கூறுவது, உத்தியோகபூர்வ அரசியலில் வலதை நோக்கிய ஒரு பரந்த மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்கு, ஓர் அரசியல் மோசடியை நடத்துவதாய் உள்ளது.