ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Twenty years since the death of Keerthi Balasuriya

கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்

By David North
19 December 2007


கீர்த்தி பாலசூரிய

கீர்த்தி பாலசூரியவின் எதிர்பாராத மற்றும் ஆகவும் உரிய காலத்திற்கு முற்பட்ட மரணத்தின் 20வது ஆண்டு நிறைவை இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மிக ஆழ்ந்த மதிப்புடனும் மற்றும் அவரது இழப்பினால் நீடிக்கும் கவலையுடனும் நினைவு கூர்கின்றது. மறைந்து பல ஆண்டுகள் கடந்தும் கூட, தோழர் கீர்த்தியை தெரிந்த மற்றும் அவருடன் இணைந்து வேலை செய்த அனைவருக்கும் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் கீர்த்தியை இழந்த உணர்வு ஆழ்மனதில் எஞ்சியிருக்கும்.

1987 டிசம்பர் 18ம் திகதி காலை, இலங்கை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி கீர்த்தியை மரணம் தழுவிக்கொண்டது. அப்போது அவர் ஐரோப்பாவில் அனைத்துலகக் குழுவின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு நாடு திரும்பி ஒரு மாதம் கூட கடந்திருக்கவில்லை. கீர்த்திக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட போது அவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட 1985-86 பிளவின் அரசியல் படிப்பினைகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை அவரது மேசையில் இருந்து எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு அப்போது 39 வயது மட்டுமே. தோழர் கீர்த்தி உயிருடன் இருந்திருந்தால் இப்போது அவர் தனது 60வது பிறந்த நாளை எதிர்பார்த்திருந்திருப்பார்.

அனைவரையும் பொறுத்தளவில் நாம் கீர்த்தியின் அகால மரணத்தில் அவரை இழந்திருந்தாலும், அவர் கணிசமான மற்றும் நீடித்திருக்கும் அரசியல் வேலையின் மரபுரிமையை விட்டுச் சென்றுள்ளார். அது உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் இன்றியமையாத ஒரு அத்திவாரத்தை நிறுவியுள்ளது.

கடந்த இரு தசாப்தங்களதும் மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் எப்படியிருப்பினும், கீர்த்தி இறுகப் பற்றி போராடிக்கொண்டிருந்த விவகாரங்களும் பிரச்சினைகளும் எதுவிதக் குறைவின்றி தொடர்ந்தும் நீடித்திருப்பதோடு அவை கீர்த்தியின் மறைவின் போது இருந்ததை விட இன்று மிகப் பொருத்தமாக உள்ளன.

இந்தியா, சிலோன் (1972 வரை இலங்கையின் பெயராக இருந்தது) ஆகிய இரு நாடுகளும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் துணைக்கண்டத்தின் தேசிய முதலாளித்துவத்திற்கும் இடையில் நடந்த இழிந்த கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையில் அரச சுதந்திரத்தை முயன்று பெற்று சற்றே ஓராண்டு கழிந்திருந்த 1948 நவம்பர் 4ம் திகதி கீர்த்தி பிறந்தார். பல்வேறு வழிகளிலும், ஒரு பக்கம் இந்திய மற்றும் இலங்கை தேசிய முதலாளித்துவத்திற்கும் மறுபக்கம் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள், அடுத்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக கட்டவிழ்ந்த அரசியல் துன்பங்கள் அனைத்துக்கும் களம் அமைத்தது.

இத்தகைய முடிவுகள், இந்திய மற்றும் இலங்கை தேசிய முதலாளித்துவவாதிகள் உண்மையான சுதந்திரத்தை விரும்பியதை விட அவர்கள் சமூக புரட்சியையிட்டு பீதிகொண்டிருந்தார்கள் என்பதை அம்பலப்படுத்தியது. காந்தியும் நேருவும் இந்தியா மத ரீதியில் பிரிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டமை, மில்லியன் கணக்கான உயிர்களை விலையாகக் கொடுத்த வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை காட்டிக்கொடுத்த செயலாகும். இது துணைக்கண்டத்தை மீண்டும் மீண்டும் நிகழும் யுத்தத்திற்குள் தள்ளியதோடு பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்தின் பிடியை பலப்படுத்தியது. இலங்கையில், தேசிய முதலாளித்துவத்தால் வடிவமைக்கப்பட்ட "சுதந்திரம்" தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாடுகளை நிலைநாட்டியதோடு எதிர்கால உள்நாட்டு யுத்தத்திற்கான விதைகளையும் தூவியது.

சர்வதேசியவாத சோசலிச வேலைத்திட்டமொன்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு மார்க்சிச கட்சியின் தலைமையில், தொழிலாளர் வர்க்கம் ஆட்சியை வெல்வதன் ஊடாக மட்டுமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, ஜனநாயகப் போராட்டத்தின் வரலாற்று ரீதியில் முற்போக்கான பணிகள் நிறைவேற்றப்பட முடியும் என வலியுறுத்தும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் தத்துவத்தின் மையக் கருத்தையே தேசிய முதலாளித்துவத்தால் சுதந்திரப் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டமை மெய்ப்பித்துள்ளது.

உண்மையில், இந்திய மற்றும் இலங்கை முதலாளித்துவத்திடம் அரச அதிகாரம் உத்தியோகபூர்வமாக கைமாற்றப்பட்ட பின்னர், சுதந்திரம் அடையப்பட்ட நிபந்தனைகளை கண்டனம் செய்த, இலங்கை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவர்கள் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படைகளை நாடினர். ஆயினும், அடுத்து வந்த தசாப்தங்கள் பூராவும், ட்ரொட்ஸ்கிசக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி வலதுசாரிகள் பக்கம் நெறிபிறழ்ந்து போனது.

இந்த முன்னெடுப்புகள், பாராளுமன்ற வெற்றிகளை பின்பற்றும் சகல சந்தர்ப்பவாத அடிபணிவுகளையும் ஊக்குவித்த தேசிய சூழ்நிலையின் அழுத்தத்திற்கு பிரதிபலிப்பாக அபிவிருத்தி கண்ட அதே சமயம், நான்காம் அகிலத்தினுள் பொதுவில் வளர்ச்சிகண்ட சீர்திருத்தவாத போக்கு லங்கா சமசமாஜக் கட்சியின் சீரழிவிற்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கியது. மிஷேல் பப்லோ, ஏர்னெஸ்ட் மன்டேல் ஆகியோரின் தலைமையில் இத்தகைய சக்திகள் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டதோடு சமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாத தகவமைவையும் கூட ஊக்குவித்தன.

இந்த நீண்ட அரசியல் சீரழிவு 1964ல் அதன் உச்ச கட்டத்தை அடைந்தது. தொழிலாள வர்க்கத்தின் பெருந்தொகையானவர்களின் ஆதரவை இன்னமும் பெற்றிருந்த சமசமாஜக் கட்சி, நெருக்கடியில் மூழ்கிப் போயிருந்த பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்துகொள்ள உடன்பட்டது. இது இலங்கையினதும் மற்றும் அனைத்துலகக் குழுவினதும் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. நான்காம் அகிலத்தைப் பொறுத்தவரையில், முதலாளித்துவத்துடன் ஒரு பிற்போக்கு அரசியல் கூட்டுக்குள் லங்கா சமசமாஜக் கட்சி நுழைந்தமை, பப்லோவின் சீர்திருத்தவாதத்தின் எதிர்ப் புரட்சிகர பண்பை அம்பலப்படுத்தியது. இலங்கையின் நிலையை எடுத்துக்கொண்டால், இந்தக் கூட்டணியின் ஸ்தாபிதமானது 20 ஆண்டுகளுக்குள் உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கு மாற்றமின்றி வழிவகுத்த நடவடிக்கைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தது.

கீர்த்தி பாலசூரியவின் கல்வி நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அனுபவங்களின் அரசியல் படிப்பினைகளை கிரகித்துக்கொள்வதையே குறியாகக் கொண்டிருந்தன. இந்த முன்னெடுப்புகளில் அனைத்துலகக் குழு மையப் பாத்திரத்தை வகித்தது. 1953ல் நான்காம் அகிலத்தினுள் தலைநீட்டிய பப்லோ மற்றும் மண்டேலுக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் விளைவாக ஸ்தாபிக்கப்பட்ட அனைத்துலகக் குழு, இலங்கையின் அபிவிருத்திகளை அவதானித்ததுடன் சமசமாஜக கட்சி மேலும் மேலும் சந்தர்ப்பவாதத்திற்குள் நுழைவது தொடர்பாகவும் கவனம் செலுத்தியது.

சமசமாஜக் கட்சி கூட்டரசாங்கத்திற்குள் நுழைந்ததன் பின்னர், பிரித்தானியாவில் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஜெரி ஹீலியின் தலைமைத்துவத்தின் கீழ் லங்கா சமசமாஜக் கட்சிக்கு எதிராக முன்னெடுத்த அரசியல் தாக்குதல், இலங்கையில் ட்ரொட்ஸ்கிச மாணவ இளைஞர்களின் சிறந்த பகுதியினர் மத்தியில் பிரதிபலிப்பை பெற்றுக்கொண்டது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த அரசியல் தெளிவுபடுத்தும் வேலை, 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபிக்க வழிவகுத்தது. கீர்த்தி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

பெரும் அரசியல் பரீட்சையை எதிர்கொள்ள புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கும் (பு...) தோழர் கீர்த்திக்கும் வெகுகாலம் செல்லவில்லை. சமசமாஜக் கட்சி இழைத்த துரோகம், தொழிலாள வர்க்க இயக்கத்தை பலவீனப்படுத்தியதோடு தொழிலாளர்களிடம் இருந்து விவசாயிகளை பிளவுபடுத்த உதவியது. அத்துடன் அது பெரும் அரசியல் குழப்பத்தை தோற்றுவித்ததோடு விவசாயிகள் மற்றும் மாணவ இளைஞர்களின் கணிசமான பகுதியினர் மத்தியில் மாவோவாத செல்வாக்கு வளர்ச்சிகாண சாத்தியமான சூழ்நிலையையும் உருவாக்கி விட்டது. இது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஸ்தாபிக்கப்படுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் வழி வகுத்தது.

இந்த அமைப்பு, ஒரு மூர்க்கமான ஏகாதிபத்திய விரோத போராளிக்குணத் தோற்றத்தை தீட்டியது. ஜே.வி.பி. யின் புரட்சிகர வாய்வீச்சுக்களுக்குள் மறைந்துகொண்டுள்ள, அடிப்படையில் குட்டி முதலாளித்துவ பிற்போக்கு அரசியல் முன்நோக்கை வெளியில் கொண்டுவரவும் அதை அம்பலப்படுத்தவும் அரசியல் துணிவு, மார்க்சிச நுண்ணறிவு ஆகிய இரண்டும் தேவைப்பட்டது.

1970ல், ஜே.வி.பி. யின் அரசியலும் வர்க்க சுபாவமும் என்ற கட்டுரையை கீர்த்தி எழுதினார். ஜே.வி.பி. யின் குட்டி முதலாளித்துவ மற்றும் மார்க்சிஸ விரோத பண்பை இந்தக் கட்டுரை தெளிவாக ஸ்தாபித்தது. அதன் தலைவரான விஜேவீர, ஜே.வி.பி. ஆட்சிக்கு வரும்போது கீர்த்தியை தூக்கிலிடுவதாக அச்சுறுத்தினார்.

ஆனால் 1971ல், கூட்டரசாங்கம் ஜே.வி.பி. க்கும் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் இருந்த அதன் ஆதரவாளர்களுக்கும் எதிராக கொடூரமான அடக்குமுறையை முன்னெடுத்தது. ஜே.வி.பி. உடனான சமரசம் காணமுடியாத வேறுபாடுகள் இருந்த போதிலும், பு... அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியலின் அடிப்படைப் பண்பை ஜே.வி.பி. யும் கூட ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டது. விஜேவீர சிறையில் இருந்து விடுதலையான பின்னர், கட்சி முன்னெடுத்த பிரச்சாரத்திற்கு தனது பாராட்டைத் தெரிவிக்கும் முகமாக தனிப்பட்ட முறையில் பு... தலைமை அலுவலகத்திற்கு சென்றார். (இது 1980களின் கடைப்பகுதியில் பு... உறுப்பினர்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்வதில் இருந்து ஜே.வி.பி. யை தடுக்கவில்லை.)

வங்காள விடுதலை இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் உத்தேசத்துடன், கிழக்குப் பாகிஸ்தானுக்கு துருப்புக்களை அனுப்ப இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த முடிவுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசக் கட்சியான சோசலிச தொழிலாளர் கழகம் எடுத்த நிலைப்பாடு தொடர்பான கீர்த்தியின் விமர்சனம், அவரின் அரசியல் உறுதிப்பாட்டையும் சிறப்பியல்புகளின் பலத்தையும் மேலும் கணிசமானளவு வெளிப்படுத்தியது. சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் (தொழிலாளர் புரட்சிக் கட்சியின் முன்னோடி) மைக்கல் பண்டாவால் எழுதப்பட்டு 1971 டிசம்பர் 6ம் திகதி பிரசுரிக்கப்பட்ட அறிக்கை, "பங்களாதேசுக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க இந்திய முதலாளித்துவ அரசாங்கம் எடுத்த முடிவை நாம் விமர்சனத்துடன் ஆதரிக்கின்றோம்," எனப் பிரகடனம் செய்தது.

பு... எடுத்த நிலைப்பாடு, சோசலிசத் தொழிலாளர் கழகம் எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிர்மாறானதாக இருந்தது. 1971 டிசம்பர் 8ம் திகதி பு... பிரசுரித்த அறிக்கை பிரகடனப்படுத்தியதாவது: "பாட்டாளிகளின் புரட்சிகர நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ட்ரொட்ஸ்கிச இயக்கம், இத்தகைய இயக்கங்கள், போராட்டங்கள் மற்றும் முரண்பாடுகள் சம்பந்தமாக சோசலிசத்திற்கான பாட்டாளிவர்க்க போராட்ட நோக்குநிலையில் இருந்து அதன் நிலைப்பாட்டை வறையறுக்கின்றது. பாட்டாளிகளின் பணி, முதலாளித்துவத்தின் ஏதாவதொரு யுத்தம் செய்யும் பிரிவினருக்கு ஆதரவளிப்பது அல்ல, மாறாக, சோசலிசக் குடியரசு ஒன்றியங்களை அமைக்கும் முன்நோக்குடன் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக வர்க்க எதிரியின் முகாமில் உள்ள ஒவ்வொரு முரண்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்வதாகும். சோசலிசக் குடியரசு ஒன்றியங்களை அமைப்பதன் மூலம் மட்டுமே துணைக்கண்டத்தில் உள்ள மில்லியன் கணக்கான உழைப்பாளிகளின் சமூக மற்றும் தேசிய அபிலாஷைகளை திருப்திபடுத்த முடியும்."

இன்று உள்ள வேகமான தொலைத்தொடர்பு சேவைகள் அன்று இல்லாத நிலையில், சோசலிச தொழிலாளர் கழகம் அதன் சொந்த அறிக்கையை வெளியிடும் போது அதன் நிலைப்பாடு பற்றி பு... அறிந்திருக்கவில்லை. சோசலிச தொழிலாளர் கழக அறிக்கை கொழும்புக்கு கிடைத்தபோது, பு... அதன் சொந்த நிலைப்பாட்டை பகிரங்கமாக விநியோகிப்பதை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என பு... க்கு அறிவுரை செய்தார். அவர் அவ்வாறு செய்ததற்குக் காரணம், நா...கு. செயலாளர் கிளிஃப் சுலோட்டருக்கு அவர் எழுதியிருந்தது போல், "எல்லாவற்றையும் விட அனைத்துலகக் குழுவுக்குள் இருக்கவேண்டிய தெளிவு மிக முக்கியமானதாகும்," மற்றும் "அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்பப் போராடாமல் தேசிய பகுதியைக் கட்டியெழுப்புவது எங்களுக்கு சாத்தியமாகாது." எவ்வாறெனினும், சோசலிச தொழிலாளர் கழகத்துடன் பு... உடன்பாடு காணாததை விளக்குகையில், சுலோட்டருக்கு 1971 டிசம்பர் 16ம் திகதி எழுதிய கடிதத்தில் கீர்த்தி வார்த்தைகளை அளக்கவில்லை.

"இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தை எதிர்க்காமல் வங்காள மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதும் சோசலிச அடித்தளத்தில் இந்தியாவை சுயாதீனமாக ஐக்கியப்படுத்துவதும் சாத்தியமற்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குள் இருந்து யுத்தத்தை எதிர்க்காமல், ஐக்கியப்படுத்தப்பட்ட சோசலிச இந்தியாவைப் பற்றி பேசுவது முற்றிலும் கேலிக்கூத்தாகும். ஐக்கிய சோசலிச இந்தியாவில் மட்டுமே இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பல தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை காக்க முடியும்."

1972 ஜனவரி 11ம் திகதி, கீர்த்தி லண்டனுக்கு இன்னுமொரு கடிதத்தை அனுப்பிவைத்தார். இம்முறை இந்திரா காந்தியின் தலையீட்டுக்கு மைக் பண்டா வழங்கிய உற்சாகமான ஆதரவுக்கு பதிலாக அது இருந்தது. முன்னர் பப்லோவாதிகளுக்கு எதிராக நா...கு. பாதுகாத்துவந்த ட்ரொட்ஸ்கிச அடிப்படைகளில் இருந்து பண்டாவின் நிலைப்பாடு பின்வாங்கியிருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

"பங்களாதேஷ் சம்பந்தமான அனைத்துலகக் குழுவின் போலி அரசியல் நிலைப்பாட்டின் தர்க்கம், காலனித்துவ நாடுகளில் உள்ள வெகுஜனங்களின் போராட்டம் தொடர்பான மார்க்சிச இயக்கத்தின் கடந்த கால அனுபவங்கள் அனைத்தையும் கைவிட வழிவகுக்கும் மற்றும் வழிவகுத்துள்ளது. 1961-63 காலகட்டத்தில் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிரான போராட்டத்தில் சோசலிச தொழிலாளர் கழகத் தலைமைத்துவத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நன்மைகளையும் மீளாய்வு செய்யும் திசையை நோக்கியே இத்தகைய முயற்சிகள் நகர்கின்றன என்பது இப்போது தெளிவு. நீங்கள் டிசம்பர் 27ம் திகதி அனுப்பி வைத்த கடிதம், மார்க்சிசத்தில் இருந்து முழுமையாக வேறுபட்ட ஒரு அரசியல் நிலைப்பாட்டை பாதுகாக்கும் முயற்சியைத் தவிர வேறு ஒன்றும் அல்ல. அதைப் பாதுகாப்பதன் பேரில் நீங்கள் மார்க்சிசத்தை திரிபுபடுத்தி, நீங்களே குழப்பத்துக்குள் மூழ்கிப்போவதோடு உங்களது அரசியல் வங்குரோத்தையும் அம்பலப்படுத்திக் கொண்டுள்ளீர்கள்."

சோசலிச தொழிலாளர் கழகம் அனைத்துலகக் குழுவுக்குள் கீர்த்தியின் கடிதத்தை விநியோகிக்கவில்லை. நா...கு. வின் வேலைகள் தொடர்பாக ஒரு சுயாதீனமான மற்றும் விமர்சன ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் இயலுமை பு... க்கு உண்டு என்பதை புரிந்துகொண்ட சோசலிச தொழிலாளர் கழகம், இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும் தோழர் கீர்த்தியையும் தனிமைப்படுத்தத் தயாராகியது.

சோசலிச தொழிலாளர் கழகம் வலதுபக்கம் நெறிபிறழ்ந்த அளவுக்கு, பு... வை தனிமைப்படுத்தும் கேடுகெட்டதும் மூர்க்கமானதுமான முயற்சிகள் வளர்ச்சி கண்டன. 1985ல் பிரித்தானிய அமைப்புக்குள்ளும் மற்றும் அனைத்துலகக் குழுவினுள்ளும் அரசியல் நெருக்கடி வெடித்த பின்னரே, இந்த பெறுமதியான கடிதங்களுக்கு சர்வதேச இயக்கத்தினுள் வாசகர்களை வெற்றிகொள்வது சாத்தியமாகியது.

கிழக்கு பாகிஸ்தானில் இந்திய அரசாங்கத்தின் இராணுவ தலையீடு சம்பந்தமான சோசலிச தொழிலாளர் கழகத்தின் உணர்ச்சியைத் தூண்டும் பிரதிபலிப்பும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்வைத்த விமர்சனம் தொடர்பான அதன் பகைமை உணர்வுடனான எதிர்ச் செயலும், பிரித்தானிய இயக்கத்துக்குள் ஆழமடைந்து வரும் அரசியல் நெருக்கடியை பிரதிபலித்தது. இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளை சோசலிச தொழிலாளர் கழகம் வழங்கிய ஆதரவுக்கு பேச்சாளராக மைக்கல் பண்டா தோன்றியமை தற்செயலானது அல்ல. அவர் பல ஆண்டுகளாக, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் மைய மற்றும் தீர்க்கமான புரட்சிகர பாத்திரத்தை வலியுறுத்தும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் பொருத்தத்தைப் பற்றி சந்தேகங்களை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

வியட்னாமில் கோசிமின், சீனாவில் மாவோ சேதுங் மற்றும் யூகோஸ்லாவியாவில் டிட்டோவின் வெற்றியும் கூட, விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிசத்திற்கான மாற்றுப் பாதையின் சாத்தியத்தை வெளிப்படுத்தவில்லையா? பண்டாவைப் பொறுத்தளவில், நிக்ஸன் நிர்வாகத்தை பகைத்துக்கொள்ளும் செயலான கிழக்குப் பாகிஸ்தானில் பிரதமர் இந்திரா காந்தியின் தலையீடானது, ஏகாதிபத்திய விரோத போராட்டத்தின் இன்னுமொரு வடிவமாகும். பண்டாவின் பார்வையில், ஆசியாவில் உள்ள தேசிய முதலாளித்துவம் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை உடையதாகும். இது ட்ரொட்ஸ்கிச முன்நோக்குடன் முரண்பட்டதாகும்.

அடிப்படை வேலைத்திட்ட விடயங்களில் சோசலிச தொழிலாளர் கழகத் தலைமைத்துவத்தினுள்ளேயேயான ஒரு வெளிப்படையான மோதலில் இருந்து விளையக் கூடிய அமைப்பு ரீதியான பிளவையிட்டு பீதியடைந்த பிரிட்டிஷ் பகுதியின் முக்கிய தலைவரான ஜெரி ஹீலி, அரசியல் வேறுபாடுகள் தொடர்பான ஒரு கலந்துரையாடலை தவிர்க்க முயற்சித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, ட்ரொட்ஸ்கிச முன்நோக்கின் உயிர்நீடிப்பு சம்பந்தமான அவரது சந்தேகத்தில் பண்டா தனிமையில் இருக்கவில்லை. 1960களில், கணிசமான குட்டி முதலாளித்துவ பகுதியினரின் அரசியல் முன்னேற்றம், பப்லோ மற்றும் மன்டேல் போன்றோரால் வழியமைக்கப்பட்ட சீர்திருத்தவாத அரசியலுக்கு கணிசமானளவு சமூக அடித்தளத்தை அதிகரிக்கச் செய்தது. சோசலிச தொழிலாளர் கழகமும் தாமாகவே மாணவ இளைஞர்களின் தீவிர முன்னேற்றத்தில் இருந்து அமைப்பு ரீதியில் நன்மையடைந்தது. சோசலிச தொழிலாளர் கழகம், புரட்சிகர வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கு பற்றிய இன்றியமையாத பிரச்சினைகளில் அதன் முன்னைய பிடிப்பில் இருந்து பின்வாங்கிய அளவுக்கு, புதிதாக தீவிரமடைந்த இளைஞர்களும் குட்டி முதலாளித்துவத்தில் இருந்து வந்த ஏனைய சக்திகளும் நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் அடிப்படைகள் தொடர்பான அவசியமான அறிவைப் பெற்றுக்கொள்ளாமலேயே பிரித்தானிய இயக்கத்துக்குள் இணைந்துகொண்டனர். சோசலிச தொழிலாளர் கழகத்தின் தத்துவார்த்த மற்றும் கல்வி வேலைகளில் பிரதான பாத்திரம் வகித்த, அரசியல் ரீதியில் செல்வாக்கு செலுத்தும் அந்தஸ்த்து கொண்ட கல்விமான்கள், குறிப்பாக மார்க்சிசத்தில் குட்டி-முதலாளித்துவவாதிகள் செய்த பலவித சீர்த்திருத்த வடிவங்களினதும் ஈர்ப்புக்கு எளிதில் வளைந்துகொடுக்கக் கூடியவர்களாக இருந்தனர் என்ற உண்மை இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

தத்துவார்த்த வழிமுறையிலான உடன்பாடு என்பது ஏனையவற்றையும் விட முக்கியமானது என விவாதிப்பதன் மூலம், வேலைத்திட்டம் சம்பந்தமான தெளிவை ஏற்படுத்திக்கொள்வதற்கான போராட்டத்தை தவிர்த்துக்கொள்வதை சோசலிச தொழிலாளர் கழகத் தலைமைத்துவம் நியாயப்படுத்திவந்த, மேலும் மேலும் இருண்டு வந்த அரசியல் சூழ்நிலையிலேயே இது இடம்பெற்றது. உண்மையில், ட்ரொட்ஸ்கிச இயக்கம் அதன் வரலாறு பூராவும் மேற்கொண்ட அனுகுமுறையை திகைப்படையச் செய்யும் வகையில் மறுவரையறை செய்த ஹீலியும் மற்றும் கோட்பாட்டு விடயங்களில் அவரது கொள்கை ஆலோசகரான கிளிஃப் சுலோட்டரும், வேலைத்திட்டம் சம்பந்தமான உறுதியான கலந்துரையாடல்கள் இயங்கியல் சிந்தனையின் அபிவிருத்திக்கு உண்மையான தடையாக இருந்தன, என விவாதிக்கத் தொடங்கினர். இதன்படி சுலோட்டரால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலகக் குழுவின் ஆவணங்களில் "பிரித்தானியாவில் புரட்சிகர கட்சியை கட்டியெழுப்பிய அனுபவமானது சிந்தனையின் கருத்தியல் வழிகளுக்கு எதிரான தளர்வற்ற கடினமான போராட்டம் அவசியம் என்பதையும், அது வேலைத்திட்டம் மற்றும் கொள்கையில் உடன்பாடு காணும் பிரச்சினையை விட ஆழமாகச் சென்றுள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளது," என்ற கூற்றும் காணப்பட்டது. [Trotskyism Versus Revisionism, Vol. 6, London, 1975, p. 83.]

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்நோக்கின் அபிவிருத்தியில் இருந்து "மார்க்சிச தத்துவத்திற்கான போராட்டத்தை" வேறுபடுத்த இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விதமும் மற்றும் இதே போன்ற சூத்திரங்களும், மார்க்சிச-விரோத புதிய இடதுகளின் குட்டி முதலாளித்துவ சமுதாயச் சூழ்நிலையில் பரந்தளவில் பிரபல்யம் பெற்றுள்ள கருத்துப் போக்குகளுக்கு அரசியல் ரீதியிலும் கோட்பாட்டு ரீதியிலும் சரணடையும் ஆபத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது, என்ற விடயத்தை (பேராசிரியர் கிளிஃப் சுலோட்டர் நிச்சயமாக புரிந்துகொண்டிருந்தாலும்) ஹீலி தெளிவாக புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், எவ்வாறெனினும், புதிய கோட்பாட்டு விவாதங்கள், நான்காம் அகிலத்தின் வரலாற்றுப் பாத்திரத்தைப் பற்றிய ஐயுறவுவாதத்தை பிரதிபலிப்பதோடு ஊக்குவிக்கவும் செய்கின்றது என ஹீலி தனது மனதுக்குள்ளேயே தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்திக் கொண்டார்.

சுலோட்டர் 1972ல் எழுதியவாறு: "நெருக்கடிகளால் உருவாக்கப்பட்ட அரசியல் அபிவிருத்திகளின் களத்திற்குள், வேலைத்திட்டத்தையும் இருந்துகொண்டுள்ள ட்ரொட்ஸ்கிச சக்திகளையும் வெறுமனே கொண்டு செல்வதன் மூலம், தொழிலாளர் வர்க்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவந்து சோசலிசத்தைக் கட்டியெழுப்ப புரட்சிக் கட்சிகளால் முடியுமா? அல்லது, வர்க்கப் போராட்டத்தின் உருமாறிய யதார்த்தத்திற்குள் இயக்கத்தின் கடந்தகால முழு அனுபவங்களையும் கோட்பாட்டையும் நிலைமறுத்து செல்வதற்காக, கோட்பாட்டுக்கான நனவுபூர்வமான போராட்டத்தை முன்னெடுக்கும் அவசியம் இல்லையா?" [அதே நூல், பக்கம் 226]

சுலோட்டரால் முன்வைக்கப்படும் இரு நிலைப்பாடுகளான, தெளிவான சீர்திருத்தவாதத்தையும் அரசியல் ரீதியிலான கலைப்புவாதத்தையும் அம்பலப்படுத்துவதற்கு, இந்த வாக்கியத்தை அதன் வெற்றாரவார பாணியை உரித்துவிட்டு, குட்டி முதலாளித்துவ கல்விமான்களின் ஆதரவுக்குள்ளான அதன் பகட்டான போலி-தத்துவார்த்த வியூகத்தை நிர்மூலமாக்குவது மட்டுமே அவசியமாகியுள்ளது. 1) வரலாற்று ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ட்ரொட்ஸ்கிச இயக்கம், தொழிலாளர் வர்க்கத்தை ஆட்சியை நோக்கி வழிநடத்துவதில் வெற்றி காணாது. 2) "வர்க்கப் போராட்டத்தின் உருமாறிய யதார்த்தமானது" [விருப்பமான பப்லோவாத சொற்றொடர்] இயக்கத்தின் அனைத்து கடந்தகால அனுபங்களையும் தத்துவங்களையும்" "நிலைமறுப்பதை" [அதாவது, ஒதுக்கித் தள்ளுவதை] உள்ளடக்கிய "தத்துவத்திற்கான நனவுப்பூர்வமான போராட்டத்தை" கோருகின்றது.

ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரைப் பொறுத்தளவில், இந்த சூத்திரப்படுத்தல்கள் வெறுமனே சுருக்கமான விவாதத்திற்கான ஒரு விடயமாக இருக்கவில்லை. 1970கள் மலர்ந்த போது, அவர்கள் அந்த சூத்திரப்படுத்தலை பழிவாங்க விரும்பும் விதத்தில் நடைமுறைப்படுத்த முயற்சித்தனர். ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்ட மரபை மேலும் மேலும் ஒதுக்கித் தள்ளிய சோசலிச தொழிலாளர் கழகம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ["தற்போதைய ட்ரொட்ஸ்கிச பலம்"] பகுதிகளை பகைத்துக்கொண்டதோடு புதிய கூட்டுக்களை அமைத்துக்கொள்ளக் கூடிய ஏனைய அரசியல் சக்திகளைத் தேடத் தொடங்கியது. இவை மத்திய கிழக்கில் உள்ள தேசிய இயக்கங்கள் மற்றும் அரசாங்கங்களில் முடிவைத் தேடிக்கொள்ளவதை விளைவாக்கின.

அனைத்துலகக் குழுவுக்குள் கீர்த்தி பாலசூரியவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் எதிர்கொண்ட தீவிரமாகிவந்த தனிமைப்படுதலின் பின்னணியில் இருந்து கொண்டிருந்தது (1973 நவம்பரில் தொழிலாளர் புரட்சிக் கட்சியாகிய) சோசலிச தொழிலாளர் கழகத்தின் இந்த வலதுசாரி மாற்றமேயாகும். 1971 இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்திற்கு சோசலிச தொழிலாளர் கழகத்தின் பிரதிபலிப்பை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விமர்சித்தமை, ட்ரொட்ஸ்கிச அரசியலை கைவிடும் தமது செயலை இலங்கைப் பகுதி ஆதரிக்காது என்பதற்கான அறிகுறியாகவே, ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரும் மிகச் சரியாக புரிந்துகொண்டனர்.

இலங்கை தோழர்கள், நா...கு. உடன் எந்தவொரு ஒருநிலைப்பட்ட நெருக்கமான ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் செயற்படுவது மறுக்கப்பட்ட காரணத்தால் மோசமடைந்திருந்த தமது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தள்ளப்பட்டிருந்த மிகவும் தீவிர சிரமமான நிலைமைகளின் கீழும், பு... ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைகளை தொடர்ந்தும் பாதுகாத்தது. இது சம்பந்தமாக, 1983 ஜூலையில் கொழும்பில் அரசாங்கத்தால் தூண்டிவிடப்பட்ட தமிழர் விரோத படுகொலைகளுக்கு கட்சியின் பிரதிபலிப்பை விசேடமாக குறிப்பிடுவது பெறுமதியானதாகும். கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளின் எதிரில், தமிழர் விரோத பிரச்சாரத்திற்கு எதிராக பு... அச்சமின்றி செயற்பட்டது.

இந்த ஆபத்தான நிலைமைகளின் கீழும், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (தொ.பு..) கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அனைத்துலக இயக்கத்தின் ஆதரவு பு... க்கு கிடைக்கவில்லை. உண்மையில் தொ.பு.. செய்தது என்னவெனில், மைக்கல் பண்டாவால் எழுதப்பட்ட அறிக்கை ஒன்றை அதன் செய்தித்தாளில் வெளியிடுவதாகும். அது சிறிதளவாவது குறிப்பிட்டதாவது: "[இலங்கையில்] பொலிசும் இராணுவமும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தமக்குக் கிடைத்துள்ள எதேச்சதிகாரமானதும் கட்டுப்பாடற்றதுமான அதிகாரங்களை பயன்படுத்தி எங்களது தோழர்களை கொன்று அவர்களது அச்சகத்தை சேதமாக்குவதற்கான சாத்தியம் உள்ளது." எவ்வாறெனினும், அந்த அறிக்கை, இத்தகைய துன்புறுத்தல்களை கண்டனம் செய்யவோ அல்லது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை பாதுகாக்க சர்வதேச பிரச்சாரம் ஒன்றுக்கு அழைப்புவிடுக்கவோ இல்லை.

* * *

1982 அக்டோபர் மற்றும் 1984 பெப்பிரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர் கழகத்தினால் எழுப்பப்பட்ட தீர்க்கமான தத்துவார்த்த மற்றும் அரசியல் விமர்சனங்களை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு அறிவிக்காமல் இருப்பதில் தொழிலாளர் புரட்சிக் கட்சி கவனமாக இருந்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் பாதையின் புதிய விமர்சனங்கள் தொடர்பாக கலந்துரையாடவிருந்த நா...கு. கூட்டத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என 1984 ஜனவரியில் தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு தோழர் கீர்த்தியை லண்டனுக்கு வருமாறு விசேடமாக கேட்டுக்கொண்டது.

எவ்வாறெனினும், நான் லண்டனுக்கு வந்த போது, இலங்கை தோழர்களுடன் தொடர்புகொள்வது சாத்தியமாக இருக்கவில்லை எனவும், அதனால் கீர்த்தி கூட்டத்திற்கு வருகை தரமாட்டார் எனவும் மைக்கல் பண்டா என்னிடம் தெரிவித்தார். அனைத்துலகக் குழுவினுள் அரசியல் வேறுபாடுகள் தொடர்பான கொள்கை ரீதியான கலந்துரையாடல்களைத் தவிர்ப்பதன் பேரில் தொ.பு.. தலைமைத்துவம் எந்தளவுக்கு தயாராகியிருக்கின்றது என்பதை இந்த அப்பட்டமான பொய் அம்பலப்படுத்தியது. உண்மையில், தீர்மானிக்கப்பட்டுள்ள கூட்டத்திற்கு பு... க்கு அறிவிப்பதில்லை என ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரும் தாங்களாகவே தமக்குள் தீர்மானித்திருந்தனர்.

ஆயினும், தசாப்தத்துக்கும் மேலாக இருந்து வந்த சந்தர்ப்பவாதத்தின் உச்சக்கட்டமாக, இழிவான அவதூறுகள் வெளிப்பட்டமையும் தொ.பு.. க்கு உள்ளேயான உக்கிரமடைந்த அமைப்பு ரீதியான நெருக்கடியும் அனைத்துலகக் குழுவுக்குள் அரசியல் கலந்துரையாடல்களை தடுப்பது தொடர்ந்தும் தொ.பு.. தலைமைத்துவத்திற்கு சாத்தியமானதாக இருக்கவில்லை. 1985 அக்டோபர் கடைசியில், ஆஸ்திரேலிய பகுதியின் உதவியுடன் கீர்த்தி லண்டனுக்குப் பயணமானார். அவர் அங்கு சென்று ஏறத்தாழ உடனேயே மைக்கல் பண்டாவின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். ஹீலி சம்பந்தப்பட்டிருந்த பாலியல் அவதூறின் காமவிகாரமான விபரங்களை கீர்த்தியின் முன்னிலையில் பண்டா விவரிக்கத் தொடங்கினார். பண்டா இறுதியாக சோர்வடைந்தவுடன் கீர்த்தி அவரிடம் கேள்வியெழுப்பினார்: "தோழர் மைக், ஜெரி ஹீலியுடன் உங்களுக்கு உள்ள தீர்க்கமான அரசியல் வேறுபாடுகள் என்ன?" இந்தக் கேள்வியில் பண்டா ஆட்டங்கண்டு போனதாக தெரிந்தது. சொந்த பதிலை கூறமுடியாமல் இருந்த பண்டா, 1984 பெப்பிரவரியில் நடந்த நா...கு. கூட்டத்திற்கு நான் வழங்கிய அறிக்கையின் பிரதியொன்றை கீர்த்தியிடம் கொடுத்தார். அந்த அறிக்கையில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் பாதையின் விவரமான விமர்சனம் உள்ளடங்கியிருந்தது.

1985 அக்டோபர் 20ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை, என்னை தொலைபேசியில் தொடர்புகொண்ட பண்டா, தொ.பு.. பத்திரிகையான நியூஸ் லைனில் ஹீலியை வெளியேற்றுவதாக அறிவிக்கும் அறிக்கை ஒன்று பிரசுரிக்கப்படப் போவதாக அறிவித்தார். இந்த முடிவு அனைத்துலகக் குழுவில் எந்தவொரு கலந்துரையாடலும் இன்றி எடுக்கப்பட்டிருந்தது. அநேகமாக பின்னர் சிந்தித்துப் பார்த்து, கீர்த்தியும் ஆஸ்திரேலிய பகுதியின் செயலாளர் நிக் பீம்ஸும் லண்டனில் இருப்பதாக பண்டா என்னிடம் கூறினார். நான் அவர்களுடன் பேச முடியுமா எனக் கேட்டேன். பண்டாவின் தட்டிக்கழிக்கும் விதத்திலான பதில், அவருடன் அந்த விடயத்தைப் பற்றி தொடர்ந்தும் பேசுவதில் பயன் இல்லை என்பதை உடனடியாக எனக்கு உணர்த்தியது.

தொலைபேசியை வைத்துவிட்டு, நான் வேறு ஒரு தொலைபேசியில் தொ.பு.. அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு நிக் உடனும் கீர்த்தியுடனும் பேச முடியுமா எனக் கேட்டேன். தொலை பேசியை எடுத்த கீர்த்தி, "நான் உங்களது விமர்சனங்களை வாசித்தேன், நான் உங்களுடன் உடன்படுகின்றேன்" என ஒரே தடவையில் தெரிவித்தார். தொ.பு.. யில் வெடித்துள்ள நெருக்கடியில் எழுப்பப்பட்டுள்ள அரசியல் விடயங்களை கலந்துரையாடி, அனைத்துலகக் குழுவுக்குள் ஒருங்கிணைக்கப்பட்ட பதிலை அபிவிருத்தி செய்யவேண்டியது அவசியம் என நிக், கீர்த்தி மற்றும் நானும் உடன்பட்டோம். அன்று மாலையே நான் லண்டனுக்கு சென்றேன். 1970களின் முற்பகுதியில் இருந்தே நான் கீர்த்தியை அறிந்திருந்தாலும், நா...கு. உள்ளேயான போராட்டம் வெடித்த போதுதான் அந்த அசாதாரணமான மனிதனுடனான எனது அரசியல் ஒத்துழைப்பு உண்மையில் தொடங்கியது.

அடுத்து வந்த மாதங்களிலும் வாரங்களிலும் கட்டவிழ்ந்த அரசியல் போராட்டங்கள் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறித்தன. கடந்த இரு தசாப்தகால ஆவேசமான எழுச்சிகளின் போதும் அனைத்துலகக் குழுவால் வெளிப்படுத்தப்பட்ட அரசியல் பலத்தின் தோற்றுவாய், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நெருக்கடி மற்றும் பிளவை விபரமாக ஆராய்வதன் அடிப்படையில் அடையப்பட்ட கோட்பாட்டுத் தெளிவு மற்றும் வேலைத்திட்ட உடன்பாட்டின் உயர்ந்த மட்டத்திலேயே காண முடியும். இந்தப் பிளவினுள் இருக்கும் அரசியல் மற்றும் கோட்பாட்டுப் பிரச்சினைகள் இந்தளவுக்கு ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வேறு போராட்டங்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் இருக்கவில்லை எனக் கூறுவது மிகைப்படுத்தலாகாது.

இந்த காலகட்டத்திற்குள் கீர்த்தி இட்டு நிரப்பிய பாத்திரம் முற்றிலும் தீர்க்கமான பண்பைப் பெற்றிருந்தது. புரட்சிகர சோசலிச இயக்கத்தின் வரலாறு பற்றி அவருக்கு இருந்த பரந்த அறிவு, அரசியல் ஆய்வுகளை மேற்கொள்வதில் அவரது தனிச்சிறப்பான இயலுமையுடன் ஒன்றிணைந்திருந்தது. 1973 மற்றும் 1985 இடைப்பட்ட காலத்தில் தொ.பு.. வெளியிட்ட அரசியல் அறிக்கைகளை பொறுமையாக வாசித்து, மார்க்சிசத்தில் இருந்து பின்வாங்கும் தீர்க்கமான பந்திகளை கீர்த்தி கண்டுகொண்டார். கீர்த்தி அவதானத்தை குவிமையப்படுத்திய பந்திகளின் முக்கியத்துவம் எப்பொழுதும் உடனடியாக தெளிவாகவில்லை. அவர் அப்போது அதை மிகவும் தெளிவான சொற்களில் அதன் நடைமுறைக்குரிய உட்பொருள்களை தெளிவுபடுத்தத் தொடங்குவார்.

இத்தகைய நுழைபுலம் மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றுக்குச் செய்யும் மேற்கோள் காட்டல்களின் மூலம் போசாக்கூட்டும். கலந்துரையாடல் தொடங்கியவுடன், விவாதத்தில் அதிக புள்ளிகளை சேகரித்துக்கொள்வதை விட அதிகமானவை அதில் உள்ளது என்பது தெளிவாகும். நான்காம் அகிலத்தின் உள்ளே சீரழிவை உண்டாக்கிய பப்லோவினதும் மண்டேலினதும் கருத்துக்களுடன் உறவு கொண்டாடும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் கோட்பாடு மற்றும் நடைமுறை பற்றிய விசாலமான விமர்சனத்தை விரிவுபடுத்துவதில் கீர்த்தி ஈடுபட்டிருந்தார்.

இந்த விமர்சனத்தின் இன்றியமையாத முடிவு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கோட்பாட்டு சஞ்சிகையான ஃபோர்த் இன்டர்நஷனலின் 1987 மார்ச் இதழில் வெளியான ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது:

"இவ்வாறு, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நான்காம் அகிலத்தின் மீது தாக்குதல் தொடுத்த திருத்தல்வாதம், ஏகாதிபத்தியத்தின் மாறுபடும் அரசியல் தேவைகளையே பிரதிபலித்த வர்க்க இயல்நிகழ்வாக இருந்தது. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் எழுச்சியை எதிர்கொண்டிருந்த ஏகாதிபத்தியம், தனது நலன்களுக்கும் பாட்டாளிகளின் நலன்களுக்கும் இடையில் ஒரு தாக்குதலைத் தடுக்கும் பொறியின் பணியை ஏற்றுக்கொள்வதற்காக புதிய மத்தியதர வர்க்க தட்டுக்கான வாய்ப்பைத் திறந்துவிடத் தள்ளப்பட்டது. பப்லோவாத திருத்தல்வாதம் ஏகாதிபத்தியத்தின் இத்தகைய அடிப்படைத் தேவைகளையும் மற்றும் குட்டி முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களையும், அந்த தீர்க்கமான கோட்பாட்டு சூத்திரங்களுக்குள் மாற்றியமைத்தது. அத்தகைய சக்திகளுக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அடிபணியச் செய்வதை நியாயப்படுத்தவும் இந்த சூத்திரம் பயன்படுத்தப்பட்டது. பல்வேறுபட்ட மத்தியதர வர்க்க துணைக்குழுக்கள் அன்றி, தொழிலாளர் வர்க்கம் முக்கிய வரலாற்று செயலாற்றும் பாட்டாளி வர்க்க புரட்சியின் மூலம் முதலாவதாக பழைய முதலாளித்துவ அரசை அழிக்காமல், அரச இயந்திரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் குட்டி முதலாளித்துவத்தால் சோசலிசத்தை உருவாக்க முடியும் என்ற அற்ப மாயைக்கு அது முண்டுகோள் கொடுத்தது.

"1951 வரையான காலத்தில், கிழக்கு ஐரோப்பாவுக்குள் முதலாளித்துவத்தை தூக்கிவீசும் தனிச்சிறப்பான சூழ்நிலைகளில் இருந்து பப்லோ பெற்றுக்கொண்ட அநேக விளைவுகள் கொண்ட அரசியல் எளிமைப்படுத்தல்கள், செயல்திட்ட நவீனப்படுத்தலை நோக்கி செயலாற்றின. அவற்றின் திருத்தல்வாத உள்ளடக்கம், சோசலிசத்தை இறுதி முடிவுகாணும் அணுவாயுத போராட்டக் களத்துடன் இணைப்பதற்கும் அப்பால் சென்றது ('யுத்த-புரட்சி' தத்துவம்). பாட்டாளி வர்க்க வெகுஜன இயக்கத்தின் புரட்சிகர நடவடிக்கைகளையோ, அல்லது மார்ஸ்சிஸ்டுகளின் தலைமையிலான சுயாதீனமான பாட்டாளி வர்க்க கட்சியையோ அடிப்படையாகக் கொள்ளாத ஒரு பாதை சோசலிசத்திற்கு உண்டு என்ற நிலைப்பாடு பப்லோவாதிகளுக்கு கல்லில் செதுக்கிய எழுத்தாகியது. ஆயினும், அதன் திருத்தல்வாதத்தின் அச்சாணியாக இருந்தது, வெறுமனே ஸ்ராலினிசம் பற்றிய அதன் மதிப்பீடும் மற்றும் அதன் 'சுய-சீர்திருத்தத்துக்கான' சாத்தியமும் அல்ல. அது பப்லோவாத திருத்தல்வாதத்தின் அசிங்கமான மூஞ்சிகள் பலவற்றில் ஒன்று மட்டுமே.

"பப்லோவாதத்தின் இன்றியமையாத திருத்தமும், அது ஏகாதிபத்தியத்திற்கு அந்தளவுக்கு பிரியோசனமாக இருப்பதற்கும் காரணம், விஞ்ஞானபூர்வமான சோசலிசத்தின் மிகவும் அடிப்படையான மூலக்கூறுகளுக்கு அது தாக்குதல் தொடுத்ததேயாகும். தொழிலாள வர்க்கத்தின் விடுதலையானது தொழிலாள வர்க்கத்திற்கே உரிய கடமையாகும், மற்றும் 1851ம் ஆண்டளவிலேயே மார்க்ஸ் சுட்டிக்காட்டியவாறு, சோசலிசத்தின் பணி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துடனேயே தொடங்குகிறது என்ற விஞ்ஞானபூர்வ அடித்தளத்துடனான உறுதியான நம்பிக்கைக்கு பப்லோவாதம் நேரடியாக சவால் விடும் அதே வேளை, சோசலிசம் பற்றிய அவர்களின் கோட்பாட்டில் முக்கியப் பணி குட்டிமுதலாளித்துவத்திடமே ஒப்படைக்கப்படுகின்றது. பப்லோவாதம் நேரத்துக்கு நேரம் தொழிலாள வர்க்கத்திற்கு உத்தியோகபூர்வமாக மரியாதை செலுத்துகின்ற போதிலும், தொழிலாளர் வர்க்கத்தின் கணிசமான பகுதியினருக்குள் மார்க்சிச கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான பல ஆண்டுகால போராட்டத்தின் மூலம் முன்கொணரப்படும் மிகவும் உயர் மட்டத்திலான கோட்பாட்டு நனவு இன்றி, முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதையோ சோசலிசத்தை கட்டியெழுப்புவதையோ இட்டு நிரப்ப முடியாது என்பதை சுட்டிக்காட்ட அது ஒரு காலமும் சென்றது கிடையாது.

"பப்லோவாதிகள் பயன்படுத்தும் உபாயங்கள் எப்பொழுதும் பண்புமயப்படுத்தும் கட்டுப்பாடற்ற சந்தர்ப்பவாதம், சோசலிசத்தின் தொழிலாள வர்க்க அடிப்படையை அவர்கள் நிராகரிப்பதில் இருந்தே கட்டுப்பாடின்றி ஊற்றெடுக்கின்றது. அதன் நீண்டகால வரலாற்று பணிகள் பற்றி விஞ்ஞானபூர்வமாக சரியாக புரிந்துகொள்ளும் வகையில் தொழிலாள வர்க்கத்தை பயிற்றுவிப்பதானது, கொள்கை ரீதியான வேலைத்திட்டத்தை கோருகின்றது என்பதை மார்க்சிஸ்ட் புரிந்துகொள்வர். அதனால், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தெளிவை ஆபத்தில் தள்ளி பெற்றுக்கொள்ளும் குறுகிய கால வெற்றிகளைக் காட்டிலும் தற்காலிக தனிமைப்படுத்தலை அவர்கள் மிகவும் விரும்புவார்கள். ஆயினும் பப்லோவாதி அத்தகைய காரணங்களில் அக்கறை செலுத்தும் போது "கட்டுப்பாடற்றவர்" ஆவார். அவரது உபாயங்கள், மக்கள் இயக்கத்தின் மீது தற்காலிகமாக ஆதிக்கம் செலுத்துகின்ற ஏதாவொதொரு தொழிலாளர் வர்க்கம் அல்லாத சக்திக்கு தொழிலாளர் வர்க்க சுயாதீனத்தை கீழ்ப்படுத்தும் திசையிலேயே செலுத்தப்படுகின்றன." [பாகம் 14, இல.1, மார்ச் 1987, பக்கம் 3-4]

தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட வேலைகள் அசாதாரணமான முறையில் மும்முரமாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் முன்கொணரப்பட்ட பல ஆவணங்களில் கீர்த்தியுடன் அருகில் இருந்து வேலை செய்யும் தனிச்சலுகையை நான் பெற்றிருந்தேன். அந்த ஆவணங்களை தயாரிப்பதற்கான மணித்தியாலக்கணக்கான கலந்துரையாடல்கள் என் நினைவுக்கு வருகின்றன. ஆனால், என் ஞாபகத்தில் இருப்பது அரசியல் கலந்துரையாடல்கள் மட்டுமல்ல. கீர்த்தியின் ஆர்வம் முழுத் துறை ஊடாகவும் பரந்திருந்தது.

அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, கீர்த்தி இன்னமும் மாணவனாக இருந்த போது, ஒரு கவிஞராக கணிசமான எதிர்பார்ப்புகளை வெளிக்காட்டினார். இலக்கியம், இசை மற்றும் கலை பற்றியும் அவருக்கு பரந்த அறிவு இருந்தது. அவரது புத்திஜீவித உறுதிப்பாட்டுக்கும் மேலாக, கீர்த்தி அவரது தோழர்கள் மற்றும் நண்பர்களுடன் உறவைப் பேணுவதில் இயல்புகடந்த அன்பையும் மனித நேயத்தையும் வெளிப்படுத்தினார். ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமைகள் பற்றி ஆழமாக வேரூன்றியிருந்த அனுதாபம் மற்றும் மனிதகுலத்தின் தலைவிதி பற்றிய அக்கறையில் இருந்தே அவரது சோசலிச உறுதிப்பாடு தோன்றியது.

மறைந்து இருபது ஆண்டுகளின் பின்னரும், தோழர் கீர்த்தி எமது சர்வதேச இயக்கத்தில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் மற்றும் கௌரவமான இருப்பை பெற்றுள்ளார். அவரது மரணத்தின் இரண்டு தசாப்தங்களில், அவர் ஈவிரக்கமின்றி கடுமையாக எதிர்த்துப் போராடிய அரசியல் சக்திகள் ---முதலாளித்துவ தேசியவாதிகள், ஸ்ராலினிஸ்டுகள், மாவோவாதிகள், லங்கா சமசமசமாஜக் கட்சியின் ட்ரொட்ஸ்கிச விரோத ஓடுகாலிகள், தொ.பு.. மற்றும் ஏனைய திருத்தல்வாத போக்குகள்--- நிகழ்ச்சிப் போக்குகளால் அவமதிப்புக்குள்ளாகியுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எதிர்த்தாக்குதல், உண்மையான மார்க்சிசத்தில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மனவெழுச்சி மிக்க ஆர்வத்தை தவிர்க்க முடியாமல் தட்டி எழுப்பும். அனைத்துலகக் குழுவின் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான பிரமாண்டமான வாய்ப்புகள் விரைவில் தோன்றும். ஆனால், இத்தகைய சந்தர்ப்பங்கள் உபாய ரீதியிலான முன்னேற்றங்களை விட, வரலாற்று இலக்குகளை அடைவதற்கான வழியாக புரிந்துகொள்ளப்படல் வேண்டும். உலக சோசலிசப் புரட்சிக்கான முன்நோக்கை தூக்கி நிறுத்துவதற்கான சளைக்காத போராட்டத்தின் ஊடாகவே நாம் தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவுக்கு மதிப்பளித்து அவரது வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றோம்.

முற்றும்