Print Version|Feedback
India’s 1-percent grabs nearly a quarter of all income
இந்தியாவின் 1-சதவிகிதம் ஒட்டுமொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட ஒரு கால் பங்கை அபகரிக்கிறது
By Saman Gunadasa and Kranti Kumara
6 November 2017
உலகெங்கிலும் உள்ள பெருநிறுவன பத்திரிகைகள் வெகு காலமாக இந்தியாவை ஒரு எழுச்சி பெற்றுவரும் பொருளாதார நட்சத்திர நாடாகவும் அதன் மொத்த மக்கள் தொகையில் அல்லது குறைந்தபட்சம் அதிலொரு கணிசமான பகுதி விரைவான முதலாளித்துவ வளர்ச்சியினால் பயனடைந்து வருவதாக சித்தரித்துள்ளன. எனவேதான், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள், “நடுத்தர வர்க்க” வருமானத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் நமக்கு கூறப்பட்டுள்ளது.
பிரெஞ்சு பொருளாதார வல்லுநர்களான லூக்கா சான்செல் மற்றும் தோமஸ் பிக்கெட்டி ஆகியோரின் சமீபத்திய அறிக்கை இந்த திரிக்கப்பட்ட மற்றும் விசமத்தனமான சித்தரிப்பை அம்பலப்படுத்துகிறது, கடந்த மூன்று தசாப்தங்களாக இருந்து வரும் பொருளாதார வளர்ச்சியானது இந்திய வருமானம் ஈட்டுபவர்களில் உச்சத்தில் இருக்கும் 10 சதவிகிதத்தினர் அதிலும் குறிப்பாக உச்சத்தில் உள்ள 1 சதவிகிதத்தினர் தான் மிகப்பெருமளவு நன்மை அடைந்துள்ளதாக காட்டுகிறது.
சான்செல் மற்றும் பிக்கெட்டி தங்களது பகுப்பாய்வை ஒரு 50 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் வழங்கியுள்ளனர், இந்திய வருமான சமத்துவமின்மை, 1922-2014: பிரிட்டிஷ் இராஜ்யத்தில் இருந்து கோடீஸ்வரர் இராஜ்யம் வரை?, இதன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு செப்டம்பரில் வெளியிடப்பட்டது.
பிரிட்டிஷ் இந்தியாவின் காலனித்துவ பெரும் பிரபுக்கள் வருமான வரியை அறிமுகப்படுத்திய வருடமான 1922 இல் இருந்து தொடங்கிய வரி தரவுகளை பயன்படுத்தி, சான்செல்லும், பிக்கெட்டியும் கடந்த நூற்றாண்டில் ஒருபோதும் இல்லாத அளவை விட தற்போது வருமான சமத்துவமின்மை அதிமாக இருப்பதாகக் காட்டுகின்றனர்.
வருவாய் ஈட்டுபவர்களில் உச்சத்தில் உள்ள ஒரு சதவிகிதத்தினர் ஒட்டுமொத்த வருமானத்தில் 23 சதவிகிதத்தை கைப்பற்றி விடுகின்றனர், இது 1980 களின் தொடக்கத்தில் இருந்து அவர்கள் ஈட்டிவரும் வருமான பங்கீட்டை விட கிட்டத்தட்ட நான்கு மடங்காகும், மேலும் உச்சத்திலுள்ள 10 சதவிகிதத்தினர் ஒட்டுமொத்த வருமானத்தில் சரிபாதிக்கு மேல், அதாவது 55 சதவிகிதத்தை கைப்பற்றி விடுகின்றனர்.
இதற்கிடையில், 705 அமெரிக்க டாலர் (US $705) மதிப்பிலான சராசரி வருடாந்திர வருவாயில் தங்களது வாழ்க்கைக்கு வகை தேடும் ஏழ்மை நிலையிலுள்ள 50 சதவிகித இந்தியர்கள் வெறும் 15 சதவிகித வருவாய் பங்கீட்டுடன் வாழ வேண்டியள்ளது.
இந்த ஆசிரியர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட இந்த வருவாய் தரவு, 2014 ஆம் ஆண்டில் இருந்த மொத்த மக்கள் தொகையான 1.26 பில்லியனில் கிட்டத்தட்ட 780 மில்லியன் பேரை உள்ளடக்கியது, இது இந்திய வயதுவந்தோராக வரையறுக்கப்பட்ட 20 மற்றும் அதற்கு மேற்ப்பட்ட வயதினரை உள்ளடக்குகிறது. உலகிலேயே மிகஅதிக எண்ணிக்கையாக, 5 முதல் 14 வயதிற்கு இடைப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் இருப்பது கவனிக்கப்பட வேண்டும்.
அறிக்கையின் படி, காங்கிரஸ் கட்சி பிரதம மந்திரி ராஜீவ் காந்தி “சுதந்திர சந்தை,” மற்றும் “முதலீட்டாளர்-சினேகமான” கொள்கைகளுக்கு ஒரு திருப்பத்தை 1980 களின் பிற்பகுதியில் தொடக்கி வைத்தபோது, இந்தியாவின் “வளர்ச்சி கதை” பற்றிய குணாம்சத்தை வரையறுப்பதாக அதிகரித்துவரும் சமத்துவமின்மை இருந்து வருகிறது.
ஆனால் 1991 ஆம் ஆண்டிற்கு பின்னர், 1947 இல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்திய முதலாளித்துவம் பின்பற்றி வந்த அரசு தலைமையிலான பொருளாதார அபிவிருத்தி மூலோபாயத்தை, பி.வி. நரசிம்ம ராவின் காங்கிரஸ் அரசாங்கம் வெளிப்படையாகவே முறித்துக் கொண்டதோடு, உலகளாவிய மூலதனத்திற்கான ஒரு மலிவு உழைப்பு புகலிடமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட “புதிய பொருளாதாரக் கொள்கையை” ஏற்றுக்கொண்ட நிலையில் தான், அந்த வருமான சமத்துவமின்மை உண்மையிலேயே அதிகரித்தது.
சராசரி ஆண்டு வருமான பகிர்வு 2014
இந்திய வருமான பகிர்வின் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை முந்தைய அட்டவணையை விட வேறெதுவும் பளிச்சென்று விளக்கவில்லை. 2014 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட நாட்டின் வயதுவந்தோர் மக்கள்தொகையின் பல்வேறு பிரிவுகளுக்கு சராசரி வருடாந்திர வருவாயை இது வழங்குகிறது. இந்த புள்ளிவிவரங்கள் இந்திய ரூபாயிலும், பின்னர் சிவப்பு நிறத்தில் அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலும் காட்டப்பட்டுள்ளன.
இந்தியாவில் உச்சத்தில் உள்ள 0.1 சதவிகிதத்தினர் (சுமார் 778,000 பேர்) 200,000 டாலருக்கு சற்று குறைவான தொகையை சராசரி வருவாயாக கொண்டுள்ளனர், அவர்களிலும் செல்வந்தர்களாக இருக்கும் 0.001 சதவிகிதத்தினர் (சுமார் 7,780 பேர்) வருடத்திற்கு 4.3 மில்லியன் டாலர் தொகையை சராசரியாக ஈட்டுகின்றனர். கீழ்மட்டத்தில் உள்ள 90 சதவிகிதம் பேர், கடும் வறுமையில் உயிர்வாழ்வதற்கே போராடி வருகின்றனர், அதாவது அதிகபட்ச வருமானம் ஈட்டும் 50-90 சதவிகித்ததிற்கு இடைப்பட்ட மக்களில், “நடுத்தர 40 சதவிகிதத்தினர்” என்றழைக்கப்படுபவர்களில் கூட சராசரி வருமானம் வெறும் $1400 ஆக இருக்கிறது.
உச்ச 10 சதவிகிதத்திற்குள் வரும் மக்களின் (சுமார் 77.8 மில்லியன் பேர்) வருடாந்திர வருமானம் கூட 12,500 டாலருக்கும் குறைவாகவே உள்ளது, பெரும்பான்மையை கருத்தில் கொள்ளும்போது, வாழ்க்கை சூழ்நிலையில் சாதாரண இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளை விட மிக உயர்ந்தவர்களாக இருந்தாலும் செல்வ வளத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு உள்ளனர். ஏதேனுமொரு குடும்ப பேரிடர் (வேலை இழப்பு அல்லது நோய்வாய்படுதல்) அவர்களை விரைவிலேயே வறுமையில் வீழ்த்திவிடக் கூடும்.
முதல் வரைபடம் வரைவதற்கு ஆதாரமாக இருந்த தரவுகளின் கூடுதல் விபரங்களை பின்வரும் அட்டவணை வழங்குகிறது.
இந்த அட்டவணையினால் பல விடயங்கள் வெளிப்படுகின்றன. வருடாந்திர வருமானத்தில் உச்ச 10 சதவிகிதத்தினருக்குள் வரும் குறைந்த வருமான தொடக்கநிலையில் உள்ளவர்களின் வருமானம் வெறும் 191,713 ரூபாயாக மட்டுமே உள்ளது, 2014 இல் இது 3,100 அமெரிக்க டாலராக இருந்தது. அடிமட்டத்தில் இருக்கும் 50 சதவிகிதத்திற்கு மிகக்குறைந்த தொடக்கநிலையில் வருமானமே கிடையாது, மேலும் அவர்களது உயர்ந்தபட்ச வருமானம் சுமார் 63,000 ரூபாயாக உள்ளது, அதாவது பூஜ்ஜியம் முதல் கிட்டத்தட்ட 1,000 டாலர் வரையிலான வருமான மட்டத்தில் அடிமட்டத்திலுள்ள 50 சதவிகித மக்கள் ஜீவிக்கின்றனர் என்பதாகும்.
அடுத்த 40 சதவிகிதத்தினருக்கான வருமான அளவீடுகள் அமெரிக்க டாலரில் வருடத்திற்கு 1,000 டாலரில் இருந்து 3,100 டாலர் மட்டத்தில் உள்ளது.
இதனால், 90 முதல் 95 விகிதம் வரையிலான வயதுவந்த தொழிலாளர்களின் நிலைமையை, வறுமையின் சமநிலையற்ற பிரிவு என்று மட்டுமே விவரிக்கக் கூடும் அதேசமயம் அடிமட்ட 50 சதவிகிதத்தினரின் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு குறைந்ததல்ல.
இந்த நிறமாலையின் மற்றொரு முடிவில், வருமான செறிவானது தொடர்புரீதியாக உக்கிரமாக உள்ளது, உச்ச 1 சதவிகிதத்தினர் மேலும் குறிப்பாக முதல் 0.1 சதவிகிதத்தினர் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.
1950 இல் தொடங்கி மூன்று தசாப்தங்களின் போதும் வருவாய் சமத்துவமின்மை உண்மையில் குறைந்துள்ளதாக ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தலைமையுடன் இந்திய முதலாளித்துவம், 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் போது தெற்கு ஆசியாவை கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய வெகுஜன ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை நசுக்கியதோடு, 1947 இல் பிரிட்டிஷ் உடனான ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொண்டது, அதன் கீழ் அவர்கள் காலனித்துவ அரசு எந்திரத்தின் பிடியை தக்கவைத்துக் கொண்டனர், மேலும் துணைக்கண்டம் வெளிப்படையாக முஸ்லீம் பாகிஸ்தான் என்றும், மிகப்பெரும்பான்மை “இந்து” இந்தியா என்றும் வகுப்புவாதரீதியாக பிரிக்கப்பட்டது.
இருப்பினும் காங்கிரஸ், முதலாளித்துவ அபிவிருத்தி நலன்களை முன்னிட்டு மிகப்பெரிய ஜமீன்தாரி (நிலப்பிரபுத்துவ) நிலவுடமைகளை ஒழிப்பது போன்ற சிறியளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டது, மேலும் போர்க்குணமிக்க தொழிலாளர் போராட்டங்களையும், சமூக அமைதியின்மையையும் எதிர் கொள்வதில் வரம்புக்குட்பட்ட சமூக நலன்புரி ஒதுக்கீடுகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.
ஆனால் 1991 இல், இந்திய முதலாளித்துவத்தை இறக்குமதி-பதிலீடு மற்றும் பரந்த அரசு உடைமை மூலமாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ அரசு தலைமையிலான வளர்ச்சித் திட்டம் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமான இணக்கத்துடன் பணியாற்றி, இந்திய உயரடுக்கு ஒட்டுமொத்தமாக நவ-தாராளவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொடங்கியது - கட்டுப்பாடுகளை நீக்குதல், தனியார்மயமாக்கல், பெருவணிகத்திற்கும் செல்வந்தர்களுக்கும் வரி வெட்டுக்கள், மானியங்களை திரும்பப் பெறுதல், பொது சேவைகளை குறைத்தல் போன்றன.
அப்போதிலிருந்து, வருமான சமத்துவமின்மை அதிவேகமாக உயர்ந்துள்ளது, அதேசமயம் பெரும்பான்மையான மக்கள் இன்னும் வறுமையில் சிக்கியும், மேலும் பொது மற்றும் சமூக சேவைகளை நீக்குவதன் காரணமாக அதிகரித்த அளவிலான பொருளாதார பாதுகாப்பின்மைக்கு முகம் கொடுத்தும் வருகின்றனர்.
பின்வரும் மூன்று வரைபடங்கள் 1951 ஆம் ஆண்டு முதல் 1980 களின் முற்பகுதியிலும் அடுத்தடுத்த தசாப்தங்களிலும் இருந்த முரண்பட்ட போக்குகளைக் காட்டுகின்றன.
முதல் வரைபடம், 1980 களின் தொடக்கத்தில் “நடுத்தர 40 சதவிகிதத்தினருக்கு” கூட்டு வருமானம் 45 சதவிகிதத்திற்கு சற்று கூடுதலாக அதிகரிப்பதை காட்டுகிறது, அதேசமயம் உச்ச 10 சதவிகிதத்தினரின் கூட்டு வருமானம் கிட்டத்தட்ட 37 சதவிகிதமாக இருந்ததிலிருந்து 1951 இல் 30 சதவிகிதத்திற்கு குறைந்தது. 1990 க்கு பின்னர் இரண்டு போக்குகளும் தலைகீழாக மாறின. 2014 இல் மொத்த வருவாயில் 55 சதவிகிதத்திற்கும் மேலான வருமானத்தை உச்ச 10 சதவிகிதத்தினர் பெற்றுக் கொண்டனர், அதாவது 1980 களின் தொடக்கத்தில் இருந்த அவர்களது பங்கை விட அனேகமாக இரு மடங்காக உயர்ந்தது, அதேசமயம் நடுத்தர 40 சதவிகிதத்தினரின் பங்கு 30 சதவிகிதத்திற்கு சற்று கூடுதலாக வீழ்ச்சியடைந்தது.
“இந்தியாவில் 50 சதவிகிதத்திற்கு கீழுள்ளவர்களின் வருவாய் பங்கீடு: 1951-2014” என்ற இந்த இரண்டாவது வரைபடம், 1980 களின் முற்பகுதியில் அடிமட்ட 50 சதவிகிதத்தினரின் கூட்டு வருமான பங்கீடு கிட்டத்தட்ட 23 சதவிகிதத்தை அடைந்து, பின்னர் தீவிரமாக வீழ்ச்சியடைந்தது, அதிலும் குறிப்பாக 2000 ம் ஆண்டிற்கு பின்னர், 2014 இல் வெறும் 15 சதவிகிதமாக வீழ்ச்சியடைவதையும் காட்டுகிறது.
மூன்றாவது மற்றும் கடைசி வரைபடம் 1922 இல் இருந்த முதல் 1 சதவிகிதத்தினருக்கான வருமான போக்கைக் காட்டுகிறது.
சான்செல்லும், பிக்கெட்டியும் அவர்களது முக்கிய முடிவுகளை பின்வருமாறு சுருக்கமாக வழங்கினர்:
1. நாற்பதுகளின் ஆரம்பத்தில் சமத்துவமின்மையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டது.
2. 1950 இல் இருந்து 1980 களின் முற்பகுதி வரை உயர்ந்தபட்ச வருமான பங்குகளில் குறிப்பிடத்தக்க குறைப்பு இருந்தது, ஆனால் 80 களின் மத்தியில் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது.
3. சமகாலத்திய இந்தியாவில் வருமான சமத்துவமின்மை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தின் பிற்பகுதியின் போது இருந்ததைவிட மிக அதிகமாக உள்ளது, மேலும் குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டில் மிக அதிகமாக உள்ளது.
தொடர்ந்து, ஆசிரியர்கள் இந்திய நடுத்தர வர்க்கத்தினர் என அழைக்கப்படுபவர்கள் பற்றி பின்வரும் உறைக்கத்தக்க கருத்துக்களை முன்வைக்கின்றனர்:
“இந்த முடிவு, “இந்திய நடுத்தர வர்க்கத்தின் எழுச்சி” என கூறப்பட்டதை சிறப்பாக குணாம்சப்படுத்த நமக்கு உதவ வேண்டும். நமது புதிய வருமான சமத்துவமின்மை தரவு தொகுப்பின் கண்ணோட்டத்தில் இருந்து, “ஒளிரும் இந்தியா” என்பது மக்கள்தொகையில் நடுத்தர 40 சதவிகிதத்தினரைக் காட்டிலும் உச்ச 10 சதவிகிதத்தினருக்கே (2014 இல் தோராயமாக இருந்த 80 மில்லியன் வயதுவந்த தனிநபர்கள்) பொருந்தும். ஒப்பீட்டளவில் பேசுகிறன்போது, நடுத்தர 40 சதவிகித குழுவினருக்கான ஒளிரும் தசாப்தங்கள் என்பது, 1951-1980 காலத்திற்கு பொருந்தியது, அப்போது கடந்த நாற்பது வருடங்களில் அவர்கள் அடைந்ததை விட, ஒட்டுமொத்த வளர்ச்சியில் (49 சதவிகிதம்) உயர்ந்த அளவிலான பங்கை கைப்பற்றினர். 1980 களின் முற்பகுதிகளில் இருந்து, அடைந்த வளர்ச்சி உச்ச 10 சதவிகித குழுவினரிடையே கூட மிகவும் சமமற்ற முறையில் பகிரப்பட்டது. (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது).
பிரிட்டிஷ் இராஜ்யம் முதல் கோடீஸ்வரர் இராஜ்யம் வரையிலும் ஆவணப்படுத்தப்பட்ட மொத்த சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமை, இந்திய முதலாளித்துவம் மற்றும் முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதான - அது பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பிஜேபி முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது CPI ஆகிய இரட்டை ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகள் வரையிலுமான மிகவும் கடுமையான குற்றச்சாட்டாக உள்ளது.
ஸ்ராலினிஸ்டுகள், சோசலிசம் “தொலைதூர அவலக் குரல்” என்று தள்ளுபடி செய்து வர்க்கப் போராட்டத்தை முறையாக ஒடுக்கிய அதேவேளையில், “ஒரு மனிதாபிமான முகத்துடன்” புதிய தாராளவாத சீர்திருத்தத்தை பின்பற்றவது சாத்தியம் எனக் கோரினர். 1991 இல் இருந்து 2008 ஊடாக, அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்களை ஸ்ராலினிஸ்டுகள் ஆதரித்தனர், அவற்றில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தலைமையிலானவை, அவை முதலாளித்துவத்தின் “புதிய பொருளாதார கொள்கையை” அமல்படுத்தின மற்றும் வாஷிங்டன் உடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்தன. மேலும், CPM மற்றும் CPI தாங்கள் ஆட்சி அமைத்திருந்த மாநிலங்களில், தாங்களே “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகள் என அழைத்துக் கொள்பவற்றை திணித்துள்ளனர், அவை வேலைநிறுத்தங்களுக்கு தடை விதிப்பது, சமூக செலவினங்களை குறைப்பது, மற்றும் பெரு-வணிக அபிவிருத்தி திட்டங்களுக்காக நிலங்களை அபகரிப்பது குறித்த விவசாயிகளின் போராட்டத்தை பொலிஸ் மற்றும் குண்டர் வன்முறையை பயன்படுத்தி எதிர்ப்பை அடக்க உத்திரவிட்டனர்.