Print Version|Feedback
Germany: SPD and Christian Democrats initiate exploratory talks on new government
ஜேர்மனி: சமூக ஜனநாயக கட்சியும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளும் புதிய அரசாங்கம் அமைப்பதற்கான நிலைமைகளை ஆராயும் பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றனர்
By Peter Schwarz
13 December 2017
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) இவற்றின் தலைவர்கள் ஒரு புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முதல் சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக நேற்றிரவு சந்தித்தனர். கூட்டாட்சி தேர்தல் முடிந்து 80 நாட்கள் கடந்த பின்னரும், இரு தரப்பும், பேச்சுவார்த்தைகள் "முடிவடையவில்லை" என்று வலியுறுத்துகின்றன. “நிலைமைகளை ஆராயும் பேச்சுவார்த்தைகள் முன்நகருமா என்பதைக் காண்பதே" பிரச்சினையின் பணயத்தில் இருப்பதாக சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (CDU) தெரிவித்தார்.
மூன்று கட்சிகளும் இன்னமும் அரசாங்கத்தில் உள்ளன, சில பிரதிநிதிகள் கடந்த நான்காண்டுகளாக ஒவ்வொரு வாரமும் ஒருவரிடம் இருந்து ஒருவர் மந்திரிசபை மேசையில் மாறிக் கொள்கின்றனர் என்பதை ஒருவர் கருத்தில் கொள்ளும் போது, இந்த தந்திரோபாய அணுகுமுறை முற்றிலும் அர்த்தமற்றதாக தெரிகிறது. இது ஏனென்றால் மகா கூட்டணியின் கொள்கைகள் மக்கள் மத்தியில் ஆழமாக செல்வாக்கிழந்துள்ளன என்ற உண்மையினால் ஆகும். சமூக ஜனநாயகக் கட்சியின் பல அங்கத்தவர்களும், CSU மற்றும் CDU இல் சிலரும் கூட, மகா கூட்டணியைத் தொடர்வது அவர்களது கட்சிகளின் சரிவைத் தீவிரப்படுத்துமென அஞ்சுகின்றனர். செப்டம்பரில் நடந்த கூட்டாட்சி தேர்தலில் இந்த மூன்று கட்சிகளுமே 70 ஆண்டுகளில் அவற்றின் மிக மோசமான தேர்தல் முடிவுகளைச் சந்தித்தன.
இந்த காரணத்தினால் தான், மகா கூட்டணியைத் (GroKo) தொடர்வதற்குப் பக்கவாட்டில் ஏனைய பிற சாத்தியக்கூறுகளும் விவாதிக்கப்படுகின்றன. இவற்றில், ஒரு சிறுபான்மை அரசாங்கத்தைச் சகித்துக் கொள்வது மற்றும் சில குறிப்பிட்ட தலைப்புகளில் மட்டும் உடன்பாட்டை எட்டுவதற்கான "கூட்டுறவு கூட்டணி" (KoKo) என சமீபத்தில் முன்மொழியப்பட்ட ஒன்று ஆகியவை உள்ளடங்கும், இவற்றுடன் பிற முன்முயற்சிகளும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படலாம்.
மகா கூட்டணி (GroKo), கூட்டுறவு கூட்டணி (KoKo) அல்லது ஒரு சிறுபான்மை அரசாங்கம் ஆகியவற்றின் மீதான விவாதங்களின் நோக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுமக்களிடையே குழப்பத்தை விதைப்பது தான். ஒரு பலமான கூட்டணியிலிருந்து விலகிய வேறெந்த ஏற்பாடும், எதிர்நோக்கப்படும் பரந்த எதிர்ப்பின் முன்னிலையில், அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பணிகளைச் செய்ய மிகவும் ஸ்திரமின்றி இருக்கும் என்பதை பல வல்லுனர்களும் மற்றும் சான்சிலரும் கூட ஒப்புக் கொள்கிறார்கள். இது இல்லாமல், அனைத்து கட்சிகளும் புதிய தேர்தல்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் மீது உடன்படுகின்றன, ஏனென்றால் திரைக்குப் பின்னால் அவர்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் வலதுசாரி கொள்கைகள் மீது ஒரு பகிரங்க விவாதத்தை அவை விரும்பவில்லை.
சாத்தியமான அளவுக்கு விரைவாக ஒரு அரசாங்கம் அமைப்பதன் மீது இப்போது அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பிரதானமாக வெளியுறவு கொள்கை மீதான பரிசீலனைகள் ஆகும்.
சர்வதேச சவால்கள் அழுத்தி வருவதால், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் தலைவருமான சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், சமூக ஜனநாயகக் கட்சியுடன் விரைவாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க திங்களன்று அதற்கு அழைப்புவிடுத்தார். “நாம் நடவடிக்கை எடுக்கும் வரை, உலகம் நமக்காக காத்திருக்காது,” என்றார். ஐரோப்பிய கொள்கை மீது, SPD உடன் "அதிக அளவில்" பொது உடன்பாடு இருந்தது. ஒரு "ஸ்திரமான அரசாங்கம்" பிரான்சுடனும் ஐரோப்பாவிற்காகவும் பணியாற்ற சிறந்த அடித்தளத்தை வழங்குகிறது என்பதை அவர் சேர்த்துக் கொண்டார்.
பெரு வணிகங்களுக்கான முன்னணி ஊதுகுழல்களும், விரைவாக ஓர் அரசாங்கம் அமைக்க அழைப்பு விடுத்து வருகின்றன.
புரூகிங்ஸ் பயிலகத்திலிருந்து Constanze Stelzenmüller, ஒரு தலைமை பாத்திரம் ஏற்க "ஐரோப்பிய மேலாதிக்கமாக அனுமானிக்கப்படும்" ஜேர்மனிக்கு பைனான்சியல் டைம்ஸில் அழைப்புவிடுத்தார். “டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவுடன் போரை பரிசீலித்து வருகிறார், அதேவேளையில் துருக்கி, ஈரான், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய அனைத்தும் ஐரோப்பிய கண்டம் உள்ளடங்கலாக மேற்கால் விடப்பட்டுள்ள அதிகார வெற்றிடத்தை சாதகமாக்கி வருகின்றன. ஜேர்மனி மீண்டும் அதன் பலத்தை பிரயோகிக்க உத்தேசிக்கும் அறிகுறிகளை ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன என ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.” அவர் தொடர்ந்து கூறினார், “கூட்டணிகளின் நன்மை தீமைகளை பேர்லின் தீர்த்துக் கொள்ளும் வரையில், ஐரோப்பிய மற்றும் உலக பிரச்சினைகள் காத்திருக்காது.”
Frankfurter Allgemeine Zeitung (FAZ) கருத்துரைத்தது, “பல்வேறு உலகளாவிய அபிவிருத்திகளின் காரணமாக, ஜேர்மனிக்கு ஒரு செயல்படும் அரசாங்கம் என்பதற்கும் கூடுதலான ஒன்று அவசரமாக தேவைப்படுகிறது. வெளியுறவு கொள்கையில், அதனால் எந்த நம்பகமான கடமைப்பாடுகளுக்குள்ளும் இறங்க முடியவில்லை.” இது குறிப்பாக "பிரிட்டன் வெளியேறியதற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால அபிவிருத்திக்கு" பொருந்துகிறது. பரந்த முடிவுகள் தீர்மானிக்கப்படுவதற்காக காத்திருக்கின்றன என்பதையும் அப்பத்திரிகை சேர்த்துக் கொண்டது.
ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் மேலாதிக்கம் கொண்ட போருக்கு-தயாரான ஒரு இராணுவ கூட்டணிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவாக்குவது என்பதே இதன் மூலம் FAZ அர்த்தப்படுத்துகிறது. குறிப்பாக பசுமைக் கட்சியினரும் சமூக ஜனநாயகக் கூட்டணியும், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உடனான நெருக்கமான கூட்டுறவின் அடிப்படையில் அமைந்த இந்த குறிக்கோளைத் தான் பின்தொடர்ந்து வருகின்றன. இதே இது, சான்சிலர் மேர்க்கெல் மற்றும் CDU இன் பிரிவுகளுக்கும் செல்கிறது, ஆனால் அவை நிதியியல் கொள்கையில், மக்ரோனின் கோரிக்கைகளை SPD ஐ விட சற்று குறைவாக ஏற்றுக் கொள்ள விரும்புகின்றன.
மகா கூட்டணியின் பிரதான ஆதரவாளர்களில் ஒருவரான, தற்காலிக பதவியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் (SPD) டிசம்பர் 5 அன்று Körber அமைப்பின் வெளியுறவு கொள்கை விவாதக்குழுவுக்கு வழங்கிய ஓர் உரையில், இந்த திசையை அபிவிருத்தி செய்தார். “பிரான்சில் ஆக்ரோஷமான ஒரு ஐரோப்பிய-சார்பு ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று கோணத்தில் நிஜமாகவே அதிருஷ்டத்தின் தாக்கம் தான்,” என்று குறிப்பிட்ட அவர், தார்மீக மதிப்புகளில் கட்டுண்டு இல்லாமல் இராணுவ பலத்தைப் பிரயோகிக்கும் அடித்தளத்தில் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவுக்கான நலன்களின் அடிப்படையில் ஒரு வல்லரசு கொள்கைக்கு வெளிப்படையாகவே அறிவுறுத்தினார்.
ஒரு மகா கூட்டணிக்கு அழுத்தமளித்து வரும் காப்ரியேலும் ஏனைய அரசியல்வாதிகளும், இந்த குறிக்கோளை எட்டுவதற்கான வாய்ப்பு கதவு வேகமாக மூடி வருவதாக கருதுகிறார்கள். தேசியவாத கொள்கைகளின் பெயரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைவை தீர்க்கமாக நிராகரிக்கின்ற வலதுசாரி கட்சிகள், பல ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்து வருகின்றன.
போலாந்து மற்றும் ஹங்கேரியில் அதுபோன்ற கட்சிகள் சில காலமாக இருந்து வருகின்ற நிலையில், “செக் நாட்டின் ட்ரம்ப்", ஆண்ட்ரிஜ் பாபிஸ், கடந்த வாரம் பிராக் பிரதம மந்திரியாக பதவியேற்றார். ஆஸ்திரியாவில், வலதுசாரி தீவிரவாத சுதந்திர கட்சியின் (FPÖ) ஓர் அங்கத்தவரை வெளியுறவு அமைச்சராக பதவியில் அமர்த்தும், பழமைவாத ஆஸ்திரிய மக்கள் கட்சிக்கும் (ÖVP) சுதந்திரக் கட்சிக்குமான ஒரு கூட்டணி, அனேகமாக அடுத்த வாரம் அதிகாரத்திற்கு வருமென தெரிகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் 4 இல் திட்டமிடப்பட்டுள்ள இத்தாலிய தேர்தல்களில் ஒரு வலதுசாரி கூட்டணி வெற்றி அடையக்கூடும். பிரான்சில், CDU/CSU இன் சகோதரத்துவக் கட்சியான குடியரசுக் கட்சி சமீபத்தில் லோரன்ட் வோக்கியேவை (Laurent Wauquiez) அதன் புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது. அவர் பாசிசவாத தேசிய முன்னணியுடன் பல்வேறு வலதுசாரி நிலைப்பாடுகளைப் பகிர்ந்து கொள்கிறார், மேலும் அவற்றுடன் அவர் ஓர் ஆளும் கூட்டணியை உருவாக்க முடியுமென கருதப்படுகிறது.
ஒருபுறம் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தழுவி நிற்கும் மகா கூட்டணியின் ஆதரவாளர்கள், மத்திய கிழக்கு சம்பவங்களாலும் உந்தப்பட்டு வருகின்றனர். அங்கே ஐரோப்பிய நலன்கள் அதிகரித்தளவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவின் நலன்களுடன் மோதலில் உள்ளன.
செவ்வாயன்று Süddeutsche Zeitung ஒரு கருத்துரையில், அமெரிக்கா பின்வாங்கியதால் ஏற்பட்ட இடத்தை ரஷ்யாவும் சீனாவும் ஆக்கிரமித்து வருகின்றன என்றும், “அவற்றின் சொந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார திட்டநிரலை" பின்தொடர்கின்றன என்றும் எச்சரித்தது. இது "பெரும்பாலும் ஐரோப்பிய நலன்களுடன் பொருத்தமின்றி" இருப்பதாக அப்பத்திரிகை குறிப்பிட்டது.
அக்கருத்துரை, மத்திய கிழக்கில் ஐரோப்பியர்கள் செயலூக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை அங்கீகரிக்கும் ஜனாதிபதி மக்ரோனை புகழ்ந்தது. ஆனால் மத்திய கிழக்கில் மிகவும் சுதந்திரமான ஐரோப்பிய கொள்கை, "அதன் முன்தேவைகள் குறித்து நாம் நேர்மையுடன் இருந்தால் மட்டுமே வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறை கொண்டுள்ளது. வெறும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நிதியுதவியால் மட்டும் ஒன்றையும் பாதுகாக்க முடியாது,” என்று குறிப்பிட்டது.
வேறெந்த பிராந்தியத்தையும் விட அதிகமாக, அங்கே பெரும் பலமே முடிவெடுக்கும் காரணியாக இருப்பதாக Süddeutsche Zeitung நிறைவுரையில் குறிப்பிட்டது. புட்டின் "மனதில் பதிய வைக்கும் விதத்தில் சிரியாவில் இராணுவ தலையீடு செய்து இதை எடுத்துக்காட்டினார்.” “இராணுவ பின்புலம் இல்லாமல் செல்வாக்கை பெற முடியுமென" யாரொருவர் நம்புகிறாரோ, அவர் "முழுமையாக ஏமாற்றமடைவார்" என்று கருத்துரை தொடர்ந்து குறிப்பிட்டது.
ஜேர்மனியும் ஐரோப்பாவும் தங்களின் வல்லரசு அரசியலை மத்திய கிழக்கிலும் வேறு இடங்களிலும் பலவந்தமாக பின்தொடர வேண்டுமானால் அவை மீள்ஆயுதபாணியாக வேண்டும் என்ற தொனி, இடது கட்சி உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளாலும் ஆதரிக்கப்படுகிறது. இடது கட்சி நாடாளுமன்ற தலைவர் Dietmar Bartsch, “நாங்கள் சிக்மார் காப்ரியேலை ஆதரிக்கிறோம், இது விரைவில் அரசு கொள்கையாக மாறுமென நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டு, காப்ரியேலின் இராணுவவாத உரையைப் பாராட்டினார்.
மகா கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இழுபறியில் இருக்கின்ற நிலையில், நடப்பு அரசாங்கமும் நாடாளுமன்றமும் ஏற்கனவே களத்தில் உண்மைகளை உருவாக்கி கொண்டிருக்கின்றன.
திங்களன்று, வெளியுறவு அமைச்சர் காப்ரியேலும் அவரது ஐரோப்பிய சமபலங்களும் ஐரோப்பிய இராணுவ ஒன்றியத்தின் அபிவிருத்தி உத்தியோகபூர்வமாக தொடங்கப்படுவதை அறிவித்தன. அவை "நிரந்தர கட்டமைப்பு கூட்டுறவு" (PESCO) என்பதன் பாகமாக முதலில் 17 திட்டங்களுக்கு உடன்பட்டன, இது ஐரோப்பிய நாடுகளின் ஆயுத படைகளது கட்டமைப்பை ஐக்கியப்படுத்தும். ஜேர்மன் இராணுவம் நான்கு திட்டங்களுக்கு தலைமை ஏற்கும்.
ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, மத்தியதரைக் கடல் மற்றும் மாலி ஆகிய ஐந்து வெளிநாட்டு தலையீடுகளை மூன்று மாதங்களுக்கு நீடிக்க செவ்வாயன்று ஜேர்மன் நாடாளுமன்றம் பெரும்பான்மையோடு ஒப்புதல் வழங்கியது. CDU, CSU, SPD மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சி இந்த ஐந்து திட்டங்களுக்கும் ஒப்புதல் வாக்களித்தன, அதேவேளையில் பசுமை கட்சி மற்றும் அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு அவற்றில் சிலவற்றை மட்டும் ஆதரித்தன. முடிவுகள் அதன் வாக்குகளைச் சார்ந்து இல்லை எனும் போது எப்போதும் செய்வதை போல, இடது கட்சி அத்திட்டங்கள் அனைத்திற்கு எதிராக வாக்களித்தது.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மட்டுமே இந்த சூழ்ச்சிகளை எதிர்த்து வரும் ஒரே அரசியல் சக்தியாகும். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுப்பதோடு, போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக திரும்பிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்காக போராடுகிறது.