Print Version|Feedback
The extreme right and the turn toward militarism in Germany
ஜேர்மனியில் தீவிர வலதும், இராணுவவாதத்தை நோக்கிய திருப்பமும்
6 December 2017
இனவெறிமிக்க, புலம்பெயர்ந்தோர்-விரோத தீவிரவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) இன் கடந்த வாரம் நடந்த கட்சி மாநாடு, ஜேர்மனியில் பாசிசவாத அரசியலுக்குச் சட்டப்பூர்வத்தன்மை வழங்குவதில் ஒரு புதிய கட்டத்தை குறித்தது. ஹிட்லர் சர்வாதிகாரம் வீழ்ச்சி அடைந்து ஏழு தசாப்தங்களுக்குப் பின்னர், ஜேர்மன் ஊடகங்கள் பாசிசவாதிகளின் அந்த மாநாட்டை ஒரு மிகப்பெரிய சட்டபூர்வ அரசியல் நிகழ்வாக பாவித்தன. அதேவேளையில் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்காக இரண்டு AfD தலைவர்களை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து ஒரு காட்சியை அரங்கேற்றினார்.
Björn Höcke இன் கீழ் அமைந்த வலதுசாரி தீவிரவாத மக்கள்வாத தேசியவாத கன்னை அம்மாநாட்டில் மேலாதிக்கம் செலுத்திய போதினும் கூட, ஸ்தாபக ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அதன் அதீத இராணுவவாதம் மற்றும் இனவெறி குறித்தல்ல, மாறாக அது தம்முள் ஐக்கியப்படாமல் இருப்பதற்காக அதை விமர்சித்தனர்.
திங்களன்று ஜேர்மன் நாளிதழ் Süddeutsche Zeitung குறைகூறியதைப் போல, AfD “ஒரு தர்மசங்கடமான குழப்பத்தை" வெளிப்படுத்தியது. இதற்கு பின்னர், அதன் நாடாளுமன்ற குழு தன்னை "அரசியல்ரீதியில் ஐக்கியப்பட தகைமை கொண்டதாக" எடுத்துக்காட்டியது. Frankfurter Allgemeine Zeitung குறிப்பிடுகையில், “மிதவாதிகள் மட்டுமல்ல, மாறாக தீவிர கொள்கையினரும் வெறுமனே ஒரு தலைமையற்ற கட்சியின் பார்வையாளர்களாக இருந்தனர்” என்று குறைகூறி, அதேபோன்றவொரு கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியது. அம்மாநாட்டை Phoenix காணொளியில் நேரடியாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய நிலையில், பல்வேறு கட்சி கன்னைகளுக்கு இடையிலான முரண்பாடுகள் ஒரு விளையாட்டு போட்டியைப் போன்று இருந்ததாக கருத்துரைத்தது.
AfD மாநாட்டை மிகவும் அரசியல் முக்கியத்துவத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜேர்மனியில் நீண்டகாலத்திற்கு முன்னர் அருவருக்கத்தக்கதாக கருதி கைவிடப்பட்ட இனவாதம், மக்கள்வாத தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை அறிவுறுத்தும் AfD, அதிவலது சக்திகளின் ஒரு வாகனமாகும். அக்கட்சியின் புதிய துணை-தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அலெக்சாண்டர் கௌலான்ட், "இரண்டு உலக போர்களில் ஜேர்மன் சிப்பாய்களின் சாதனைகளை" கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது பாராட்டிய இவர், துருக்கிய வழிவந்த ஒரு ஜேர்மனியரும் மற்றும் மத்திய அரசின் மக்கள் ஒருங்கிணைவுக்கான கண்காணிப்பாளராக Aydan Özoguz ஐ துருக்கிக்கு "அனுப்பி வைக்குமாறு" கோரினார். பொருளாதார பேராசிரியர் Jörg Meuthen, கட்சி தலைவராக அவர் பதவியில் உறுதி செய்யப்பட்டார்.
இவ்விதத்தில், கட்சிக்குள் அதிவலது தீவிரவாத அணியுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டுள்ள இரண்டு பிரமுகர்களால் AfD வழி நடத்தப்பட உள்ளது. இவ்விருவருமே, 1920களில் மக்கள்வாத தேசியவாதிகளுக்கும் பின்னர் நாஜிக்களுக்கும் ஒரு சந்திப்பு இடமாக இருந்த, கைய்சர் சகாப்த நினைவிடமான Kyffhäuser இல், Höcke ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் பங்கெடுத்தனர். 2016 இல், Höcke அங்கே —கௌலான்ட் மற்றும் Meuthen இருக்கையிலேயே —"டெய்டொனிக் சீற்றம்" (Teutonic fury - ஜேர்மனியின் போர்த்தந்திரம்) குறித்தும் மற்றும் ஜேர்மானியர்களுக்கான ஒரு "புதிய புராணம்" உருவாவதைக் குறித்தும் சீறி இருந்தார்.
கௌலான்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நேரடியாக Höcke கன்னையின் ஒரு தலையீட்டுடன் பிணைந்துள்ளது. “மிதவாத" வேட்பாளரும் பேர்லினில் Höcke கன்னையைச் சேர்ந்த AfD இன் பேர்லின் மாநில தலைவரான Georg Pazderski தேர்வாவதைத் தடுக்க, வேட்பாளர் போட்டியில் Doris Sayn-Wittgenstein ஐ உள்நுழைத்தார். Schleswig-Holstein இல் AfD க்கான பெண் செய்தி தொடர்பாளர் ஒருவர் ஆத்திரமூட்டும் வகையில் உரையாற்றி, பாசிசவாத-எதிர்ப்பாளர்களை எரிச்சலூட்டியதுடன், நவ-நாஜி அடையாள இயக்கத்தையும் நியாயப்படுத்தினார். அவர் கௌலான்ட் க்கு மட்டும் பாதை அமைத்து கொடுக்கவில்லை, மாறாக ஜேர்மன் உயர்குடி வம்சத்தினர் என்ற அவரின் வர்க்க பாரம்பரியங்களில் நின்றார். அவரின் பாட்டனார்களில் ஒருவரான Heinrich Prinz zu Sayn-Wittgenstein ஜேர்மன் ஹிட்லர் இராணுவத்தில் கவுரவம் மிக்க உயர்பதவியில் இருந்தார். ஏனையவற்றுடன் சேர்ந்து, அவர் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நிர்மூலமாக்கும் போரில் பங்கெடுத்திருந்தார்.
20 ஆம் நூற்றாண்டில் இரண்டுமுறை உலகை பேரழிவுக்குள் மூழ்கடித்த வலதுசாரி தீவிரவாத மற்றும் இராணுவவாத பாரம்பரியங்களும் மற்றும் உட்குழுக்களும் மீண்டும் மிகவும் ஆக்ரோஷமாக தலை தூக்க முடிகிறதென்றால், அவை அரசு எந்திரத்திடமிருந்து ஆதரவைப் பெறுகின்றன என்பதனால் மட்டுமே ஆகும். AfD கட்சி மாநாடு பலமாக ஆயுதமேந்திய பொலிசால் பாதுகாக்கப்பட்டிருந்தது, அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்பீய்ச்சிகளைப் பிரயோகித்த போது AfD பிரதிநிதிகள் அவர்களை நோக்கி உற்சாக குரல் எழுப்பினர். “உறுதியாக நில்லுங்கள். இந்த உத்வேகத்துடன், நீர் பெருகட்டும்! இது எப்போதுமே அதற்குரிய இடத்தை பெறுகிறது,” என்று AfD-இற்கு ஆதரவான ட்ரேஸ்டன் நகர நீதிபதி Jens Maier உற்சாகத்துடன் ட்வீட்டரில் பதிவிட்டார்.
கடந்த வாரம், அரசு தலைவராக, ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் தானாகவே, ஹனோவர் நகரில் ஒரு பொதுக்காட்சியாக வலதுசாரிக்கு அவரது ஆசிர்வாதங்களை வழங்கினார். பெல்வியு மாளிகையில் ஸ்ரைன்மையர் உடனான ஒரு சந்திப்புக்குப் பின்னர், AfD நாடாளுமன்ற தலைவர் Alice Weidel ட்வீட்டரில் குறிப்பிட்டார், “நேற்று, அலெக்சாண்டர் கௌலான்டும் நானும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரின் விருந்தினராக இருந்தோம். அரசாங்கம் அமைப்பது குறித்து நிலைமையை ஆராயும் பேச்சுவார்த்தைகளோடு சேர்ந்து, ஹனோவரில் நமது கூட்டாட்சி நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதும் உரையாடலின் தலைப்பில் இருந்தது.”
ஸ்ரைன்மையர் ஒரு வலதுசாரி அரசாங்கத்தை நிறுவும் அவர் முயற்சியில், AfD ஐ புகழ்கிறார் என்பது வெறுமனே தற்செயலானதல்ல. 2014 இல் ஸ்ரைன்மையர் அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது, "இராணுவ கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாக" பிரகடனப்படுத்தினார், உக்ரேனில் வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் பலமாக தலையிட்டார். இராணுவவாதம் மற்றும் போருக்கு ஆழமாக வேரூன்றிய மக்கள் எதிர்ப்பை முறிப்பதற்காக, அவர் வழிகாட்டுதலின் பேரில் தான், வெளியுறவுத் துறை அமைச்சகம் மீளாய்வு நிகழ்முறை எனப்பட்ட ஒன்றை தொடங்கியது. ஜேர்மன் தலைமையின் கீழ் ஐரோப்பிய இராணுவமயமாக்கலை அறிவுறுத்திய மூலோபாய ஆவணங்களை எழுதிய ஸ்ரைன்மையர், “ஜேர்மனியின் புதிய உலகளாவிய பாத்திரம்" குறித்து தொடர்ச்சியாக உரைகளிலும் கட்டுரைகளிலும் பெருமைபீற்றினார்.
AfD இன் இராணுவவாத நிலைப்பாடுகள், அரசு மற்றும் இராணுவத்தில் உள்ள முன்னணி உயரதிகாரிகளது நிலைப்பாடுகளுடன் ஒத்துப் போகின்றன, இவை பெரும்பாலும் சகல நாடாளுமன்ற கட்சிகளாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. AfD அதன் வேலைத்திட்டத்தில், “ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் புதிய புவிசார் அரசியல் நோக்குநிலை தற்போது அச்சுறுத்தல்களை முகங்கொடுக்கின்ற" நிலையில், “ஆயுதப்படைகள் மீண்டும் போரிடுவதற்கு தயாராக வேண்டுமென" கோருகிறது. “அவற்றின் போரிடும் தயார்நிலையானது அதிக உயர்மட்ட தீவிரத்தன்மையில் நிலைநிறுத்துவதற்கு உத்தரவாதப்பட்டுள்ளது என்ற விதத்தில் சீர்திருத்தம்" செய்யப்பட வேண்டும். இதற்கு, கட்டமைப்பிலும், இராணுவ பதவிகளிலும் மற்றும் தளவாடப் பொருள்களிலும் மாற்றங்கள் பரந்தரீதியில் இன்றியமையாது உள்ளன.”
AfD இன் கட்சி மாநாட்டுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர், ஜேர்மன் ஆயுதப்படை இராணுவச் சேவைகளின் பொது ஆய்வாளர் ஒரு குழு விவாதத்தில் தோற்றப்பாட்டளவில் இதே அர்த்தத்தில் பேசியிருந்தார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) செப்டம்பர் 2014 இல் அப்போதே ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகைக்குப் பின்னால் இருக்கும் புறநிலை உந்துசக்திகளைப் பகுத்தாராய்ந்து ஒரு தீர்மானத்தில் எச்சரித்தோம், “நாஜிக்களின் கொடூரமான குற்றங்களில் இருந்து ஜேர்மனி படிப்பினைகளை எடுத்து, 'மேற்கை வந்தடைந்து', ஒரு சமாதானமான வெளியுறவு கொள்கையை தழுவி, ஒரு ஸ்திரமான ஜனநாயகத்தை அபிவிருத்தி செய்துள்ளது என்ற போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பிரச்சாரம், பொய்களாக அம்பலமாகி உள்ளன. ஜேர்மன் ஏகாதிபத்தியம், வரலாற்றுரீதியில் அது உருவெடுத்தவாறே, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் முழு ஆக்ரோஷத்துடன் மீண்டுமொருமுறை அதன் நிஜமான நிறங்களைக் காட்டி வருகிறது.
இந்த ஆய்வு முடிவு இப்போது உறுதி செய்யப்பட்டு வருவதுடன், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியைக் (SGP) கட்டமைக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிடுகிறது. இடது கட்சி முன்னணியில் இருக்க, ஏனைய சகல கட்சிகளும் புதிய தேர்தல்களை எதிர்க்கின்றன ஏனென்றால் வலதுசாரியின் வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாக தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச அபிவிருத்தியைக் குறித்து அவை அஞ்சுகின்றன. SGP மட்டுமே இந்த பைத்தியக்காரத்தனத்தை எதிர்க்கும் ஒரே கட்சியாகும். முதலாளித்துவம், பாசிசம் மற்றும் போருக்கு எதிராக ஒரு சோசலிச மாற்றீட்டைக் கட்டமைக்க நாம் புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்கிறோம்.