Print Version|Feedback
Campaign builds for grand coalition in Germany
ஜேர்மனியில் மகா கூட்டணிக்கான பிரச்சாரம் கட்டமைக்கப்படுகிறது
By Peter Schwarz
2 December 2017
சாத்தியமானளவில் விரைவாக ஒரு ஸ்திரமான அரசாங்கம் அமைக்க பேர்லினில் அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், ஒரு மகா கூட்டணியைத் தொடர்வதற்காக கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் (SPD) தலைவர்களை சமாதானப்படுத்துவதற்காக வியாழனன்று அவர்களை சந்தித்து பேசினார்.
ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் (CDU) ஒரு புதிய மகா கூட்டணியை நிறுவுவதற்கு அறிவுறுத்தி வருகிறார். CDU/CSU இன் பல முன்னணி அரசியல்வாதிகள் சாத்தியமானளவுக்கு விரைவாக கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு SPD ஐ அழுத்தத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
உயர்மட்ட அரசியல்வாதிகளுடன் பெரு வணிகங்களின் முன்னணி பிரபலங்கள் சந்தித்த ஜேர்மன் தொழில் வழங்குனர்களது கருத்தரங்கு, கட்சிகள் வெகு விரைவில் ஓர் உடன்பாட்டிற்கு வருமாறு புதனன்று கோரியது: “தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் அரசாங்கம் அமைப்பதற்கான பொறுப்பை ஏற்க தயாராக இருக்க வேண்டும்,” என்று தொழில் வழங்குனர்கள் மாநாட்டு தலைவர் Ingo Kramer தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களும் ஒரு மகா கூட்டணியை ஊக்குவித்து வருகின்றன. ஜேர்மன் தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவர், ரெய்னர் ஹொஃப்மான் (Reiner Hoffmann) ஒரு ஸ்திரமான அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தார். ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நவீனமயமாக்கலுக்கான உடனடி தேவையே ஒரு மகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது என்றவர் தெரிவித்தார். கட்சிகள் ஒரு ஸ்திரமான அரசாங்கம் அமைக்கும் இலக்குடன், இறுதியாக நிலைமையை ஆராய்ந்து முழு மூச்சுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குமென அவர் எதிர்பார்ப்பதாக வேர்டி (Verdi) தொழிற்சங்க தலைவர் பிராங்க் பிஸிர்ஸ்க தெரிவித்தார்.
ஒரு புதிய மகா கூட்டணியை நிறுவுவதானது, 2005-2009 மற்றும் 2013-2017 இல் ஜேர்மனியை ஆட்சி செய்த முந்தைய இரண்டு கூட்டணிகளின் ஒரு தொடர்ச்சியாக இருக்கப் போவதில்லை. அது இன்னும் அதிக ஆக்ரோஷ வலதுசாரி திட்டநிரலைப் பின்தொடரும். எதிர்கால அரசாங்கத்தின் கொள்கைகளானது, நிதியியல் சந்தைகளின் ஸ்திரமின்மை, சீற்றம் மிக்க வர்த்தக போர், ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஜேர்மனியின் மோதல்கள், மற்றும் அதிகரித்து வரும் போர் அபாயங்கள் என உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியால் தீர்மானிக்கப்படும்.
வேறெதையும் விட மேலாக ஜேர்மனிக்கு ஸ்திரப்பாடு அவசியப்படுவதாக மகா கூட்டணியை வலியுறுத்துபவர்கள் வாதிடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆளும் உயரடுக்கின் நலன்களை விடாப்பிடியாக அமலாக்கும் ஆற்றல் கொண்ட ஒரு பலமான அரசாங்கத்தை அர்த்தப்படுத்துகிறார்கள்.
வாரயிதழ் Die Zeit கருத்துரைத்தவாறு, “டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்கா, உலக அரசியலின் சீன அங்காடியில் ஒரு காளையைப் போல செயல்பட்டு வரும் இந்த கொந்தளிப்பான தருணத்தில், ஐரோப்பாவில் ஒரு நாடு மாற்றி ஒரு நாடு வெகுஜனவாத செல்வாக்கின் கீழ் வந்து கொண்டிருக்கையில், ஜேர்மனி உறுதியற்ற ஒரு நங்கூரம் இல்லாத நிலையில் இருக்க முடியாது. "
Die Zeit இன் கட்டுரை தொடர்ந்து எழுதியது, “பிரிட்டன் உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால உறவுகள் ஆகட்டும் அல்லது யூரோ மண்டலத்தைக் கூடுதலாக ஒருங்கிணைப்பதாக இருக்கட்டும், ஐரோப்பிய பாதுகாப்பு கொள்கையை ஒருங்கிணைப்பதாக இருக்கட்டும், அகதிகள் வருவதற்கான காரணங்களுக்கு எதிராக போராடுவதாக இருக்கட்டும் எந்த பிரச்சினையானாலும்" அல்லது "ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையே அல்லது சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதலில் மத்தியஸ்தம் செய்வதாக இருக்கட்டும்" ஸ்திரமான உறவுகள் மிக முக்கிய முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒரு பலமான ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சர்வதேச ஆலோசகர்களும் மகா கூட்டணிக்கு அழைப்புவிடுக்கின்றனர். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், CDU/CSU, சுதந்திர ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமை கட்சியினருக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததும் உடனடியாக சான்சிலர் மேர்க்கெலை அழைத்து, “நாம் தான் முன்னெடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார். பேர்லினில் ஒரு நெருக்கடியை பிரான்ஸ் விரும்பவில்லை என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் மார்ட்டின் சூல்ஸ் SPD இளைஞர் இயக்கத்தின் (Jusos) கூட்டாட்சி சபையில் உரையாற்றி கொண்டிருந்த போது, கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் அவருக்கு ஒரு சேதி அனுப்பினார். மகா கூட்டணியை Jusos எதிர்க்கின்ற நிலையில், ஒரு மகா கூட்டணியை அறிவுறுத்துமாறு சூல்ஸூக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
பைனான்சியல் டைம்ஸ், ஜேர்மனியை “இன்றியமையாத நாடாக" வர்ணிக்கும் அளவுக்குச் சென்றது. ஜேர்மனி "திடமாகவும் எதிர்பார்ப்புக்கு இணங்கவும்" இல்லையென்றால் ஒட்டுமொத்த ஐரோப்பிய திட்டமும் தொந்தரவுக்கு உள்ளாகும் என்று கிடியோன் ராஹ்மான் எழுதினார்.
ஸ்ரைன்மையர் பொதுவான பதவியில் இருப்பதால் அவருடைய கட்சி உறுப்பினர் அந்தஸ்தே காலாவதியாகி இருக்கும் நிலையில், ஸ்ரைன்மையரைத் தவிர்த்து, SPD க்குள், வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் மற்றும் ஹம்பேர்க்கின் வலதுசாரி நகர முதல்வர் Olaf Scholz ஆகியோர் ஒரு மகா கூட்டணிக்கான பிரதான ஆலோசகர்களாக உள்ளனர்.
ஸ்ரைன்மையரும் காப்ரியேலும் ஜேர்மன் ஏகாதிபத்தியம் இராணுவ வாதத்திற்கு திரும்புவதற்கு வழி வகுத்தவர்கள். 2014 இல், அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஸ்ரைன்மையர் "இராணுவ கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக" அறிவித்ததுடன், உக்ரேனின் கியேவில் ஒரு ரஷ்ய-விரோத செல்வந்தரின் ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் மிக முக்கிய பாத்திரம் வகித்தார். காப்ரியேல், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுதலை பெற்ற ஒரு சுதந்திரமான ஐரோப்பிய இராணுவம் மற்றும் வெளியுறவு கொள்கைக்காக ஓய்வின்றி பிரச்சாரம் செய்துள்ளார்.
பேர்லினில் இவ்வாரம் நடத்தப்பட்ட ஒரு பாதுகாப்பு கருத்தரங்கில், ஜேர்மன் இராணுவ தளபதிகள் புதிதாக நிறுவப்படும் ஒரு மகா கூட்டணியிடம் இருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிவித்தனர்: 1930 களில் ஜேர்மன் இராணுவத்தை (Wehrmacht) மீள்ஆயுதமயப்படுத்தியதை நினைவூட்டும் வகையில் ஒரு மீள்ஆயுதமயமாக்கல் வேலைத்திட்டத்தை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உள்நாட்டு கொள்கையில், சமூக ஜனநாயகக் கட்சியும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை ஒடுக்கும் பாதைக்கு தலைமை அளித்துள்ளது. தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், இவற்றுடன் கட்சி நெருக்கமான உறவுகளை அனுபவித்து வரும் நிலையில், வேலைநீக்கங்கள் மற்றும் சமூக செலவின வெட்டுக்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் சகல எதிர்ப்பையும் மூச்சடைக்க செய்துள்ளது. நீதித்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (SPD), ஏனைய விடயங்களோடு சேர்ந்து, வலையமைப்பு அமலாக்க சட்டத்திற்கு பொறுப்பாளி ஆவார், இது சமூக ஊடகங்கள் மீது கடுமையான தணிக்கையை திணிக்கிறது. இவர் ஜனநாயகக் கொள்கை மீது ஒரு கடுமையான போக்கு கொண்டுள்ள CDU உள்துறை அமைச்சர் தோமஸ் டு மஸியருடன் நெருக்கமாக செயல்படுகிறார்.
தொழில் வழங்குனர்களின் கருத்தரங்கம் ஒரு மகா கூட்டணிக்கு அழைப்புவிடுப்பதற்கு இதுதான் காரணம். பிரதான பெருநிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு புதிய தாக்குதலைத் தொடுக்க தயாராக உள்ளன. சிமென்ஸ், ஏர் பேர்லின் மற்றும் Thyssen Krupp ஆகியவை வழமையான சமூக பாதுகாப்பு வலையத்திலிருந்து வெளியேற்றி, தற்போது ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை வீதியில் வீசியுள்ளது.
ஆனால் மகா கூட்டணியை அறிவுறுத்துபவர்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. இதுபோன்றவொரு கூட்டணி மக்களிடையே ஆழமாக மதிப்பிழந்துள்ளது. INSA கருத்துக்கணிப்புகளின்படி, அதுபோன்றவொரு கூட்டணியை வாக்காளர்களில் வெறும் 22 சதவீதத்தினர் மட்டுமே ஆதரிக்கின்றனர். கூட்டாட்சி தேர்தலில், CDU, CSU மற்றும் SPD உம் வாக்குகளில் கூட்டாக 14 சதவீத புள்ளிகளை இழந்து, வெறும் 53 சதவீத ஆதரவைப் பெற்றன. வாக்களிக்காதவர்களையும் சேர்த்து பார்த்தால், அவை வாக்காளர்களில் வெறும் 40 சதவீதத்தினரின் ஆதரவையே பெற்றன. 20.5 சதவீத வாக்குகளுடன், சமூக ஜனநாயகக் கட்சி 1998 இல் அது பெற்ற வாக்குகளில் வெறும் பாதியளவையே பெற்றது, அப்போது அது 16 ஆண்டுகள் எதிர்கட்சியாக இருந்த பின்னர் அரசு அமைக்க திரும்பி இருந்தது.
சமூக ஜனநாயகக் கட்சி மகா கூட்டணியைத் தொடர்ந்தால், அது மற்ற சமூக ஜனநாயகக் கட்சிகளுடன் சேர்ந்து அதே கதியை அடைந்து, முக்கியத்துவத்தை இழந்து விடுமோ என்றவொரு பலமான பயம் SPD க்குள் நிலவுகிறது. சமூக ஜனநாயகக் கட்சியின் வீழ்ச்சி தொடர்ந்தால், இடதுசாரி மற்றும் சோசலிச சிந்தனைகள் செல்வாக்கு பெறும் என்பது வெறுமனே சமூக ஜனநாயகவாதிகளின் கவலை மட்டுமே அல்ல.
இதனால், SPD தலைமை கால அவகாசத்திற்காக விளையாட்டு காட்டி வருகிறது. கட்சியின் செயற்குழு திங்கட்கிழமை தான் அடுத்த நடவடிக்கைகளை குறித்து விவாதிக்கும். பின்னர் வியாழக்கிழமை தொடங்கும் SPD மாநாடு, CDU/CSU உடன் நிலைமையை ஆராய்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாமா வேண்டாமா என்பதை முடிவெடுக்கும். இவை வெற்றிகரமாக நடந்தால் மட்டுந்தான் உண்மையில் கூட்டணி பேச்சுவார்த்தைகளே நடக்கும். இறுதியாக —குறைந்தபட்சம் SPD இன் தற்போதைய விதிமுறைகளின்படி— அங்கத்தவர்கள் அம்முடிவின் மீது வாக்களிக்க வேண்டும்.
ஓர் அரசாங்கம் அமைப்பது என்பது அடுத்த ஆண்டு பெப்ரவரி அல்லது மார்ச் வரையில் கூட ஆகலாம் என இப்போது அனுமானிக்கப்படுகிறது. இடது கட்சி, பசுமை கட்சி, சுதந்திர ஜனநாயகக் கட்சி மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீடு உட்பட அனைத்து கட்சிகளும் எதை தவிர்க்க விரும்புகின்றன என்றால் என்ன விலை கொடுத்தாவது புதிய தேர்தல்களைத் தவிர்க்க விரும்புகின்றன. எதிர்கால அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து மக்களிடையே எந்தவொரு விவாதம் நடப்பதையோ, அல்லது விமர்சனபூர்வ குரல்கள் அவர்கள் செவிகளில் விழுவதையோ அவை விரும்பவில்லை.
அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும், நிகழ்ந்து வரும் நெருக்கடியைச் சாதகமாக்கி, AfD ஐ நெருக்கத்தில் கொண்டுவர முயன்று கொண்டிருக்கின்றன. CSU இல், கட்சி தலைவர் ஹோர்ஸ்ட் சீகோவர், பவேரிய நிதி அமைச்சர் மார்க்குஸ் ஷோடர் மற்றும் அவர் ஆதரவாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டு வருகிறார், இவர்கள் பல பிரச்சினைகளில் AfD உடன் அணி சேர்ந்துள்ளனர். CDU இன் உள்ளிருக்கும் வலதுசாரியும் மேர்க்கெல் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
ஆகவே AfD நாடாளுமன்ற தலைவர் அலெக்சாண்டர் கௌலான்ட் அவர் கட்சிக்கு பொறுத்திருந்து பார்ப்போம் அணுகுமுறையை ஏற்குமாறு ஆலோசனை வழங்கி உள்ளார். அரசு பொறுப்பேற்கும் நாள் வரும் என்று கூறிய அவர், “ஆனால் சுதந்திர கட்சியில் (FPÖ) உள்ள நமது ஆஸ்திரிய பங்காளிகளைப் போல, நாமும் மற்ற கட்சிகளுடன் சமமான களத்தில் நிற்கும் மட்டத்திற்கு வந்தால் மட்டுமே நம்மால் அதை செய்ய முடியும்,” என்றார்.
ஜேர்மனியில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் வலதுசாரி சூழ்ச்சிகளை எதிர்க்கும் ஒரே கட்சி, சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) மட்டுமே ஆகும். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ கட்சிகளின் நிஜமான நோக்கங்களை அம்பலப்படுத்தி, முதலாளித்துவம், போர் மற்றும் சர்வாதிபத்தியத்திற்கு ஒரு சோசலிச மாற்றீட்டைக் கட்டமைப்பதற்காக புதிய தேர்தல்களைக் கோருகிறது.