Print Version|Feedback
Crisis election in Catalonia
No to dictatorship and national separatism! For the Unity of Catalan and Spanish workers!
கட்டலோனியாவில் நெருக்கடி தேர்தல்
சர்வாதிகாரம் மற்றும் தேசிய பிரிவினைவாதம் வேண்டாம்! கட்டலான் மற்றும் ஸ்பானிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக!
Alex Lantier
21 December 2017
ஸ்பானிய மத்திய அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட பிரத்யேக பிராந்திய தேர்தல்களில், இன்று டிசம்பர் 21 (“21D”) இல் கட்டலான் மக்கள் வாக்களிக்கின்றனர். கட்டலானில் சுதந்திரத்திற்கான அக்டோபர் 1 வாக்கெடுப்பு மீது நடத்தப்பட்ட மூர்க்கமான பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் அதையடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டலோனிய அரசாங்கத்தை இடைநீக்கம் செய்ய மாட்ரிட் ஸ்பானிய அரசியலைப்பின் ஷரத்து 155 ஐ கையிலெடுத்தமை ஆகியவற்றிற்கு பின்னர் நடத்தப்படும் இத்தேர்தல்கள், ஸ்பெயின் மற்றும் சர்வதேச தொழிலாளர்களுக்கு முக்கிய அரசியல் படிப்பினைகளைக் கொண்டுள்ளன.
சர்வதேச முதலாளித்துவ வீழ்ச்சியில் வேரூன்றிய, உலகெங்கிலுமான ஜனநாயக ஆட்சி வடிவங்களின் பொறிவை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சியால் (PSOE) ஆதரிக்கப்படும் ஸ்பானிய பிரதம மந்திரி மரீனோ ரஹோய் இன் சிறுபான்மை மக்கள் கட்சி (PP) அரசாங்கம், 21D தேர்தல்களை நடத்துவதன் மூலமாக கட்டலான் மக்களின் விருப்பத்தை நிலைநிறுத்த முயலவில்லை. மாறாக, இதன் நோக்கம் பொலிஸ்-அரசு ஆட்சிகளின் முனைவுக்கு ஒரு "ஜனநாயக" திரையை அளிப்பதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் அதிவலது சக்திகளுக்கு மறுவாழ்வளிப்பதும் ஆகும்.
மாட்ரிட்டை எதிர்க்கும் ஒரு அரசாங்கத்தை கட்டலோனிய வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தால், அதன் விளைவாக வரும் அரசாங்கத்தை இடைநீக்கம் செய்ய அது மீண்டும் ஷரத்து 155 ஐ பயன்படுத்துமென மக்கள் கட்சியின் நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர். ஒருமித்த மாட்ரிட் விருப்பங்கள் இருக்கும் வரையில் வாக்காளர்கள் அவர்கள் விரும்பும் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு, "வாய்ப்பு" கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கட்சியும் அதன் கூட்டாளிகளும், அரசியல் கைதிகளைப் பிடித்து வைப்பது மற்றும் பிற எதேச்சதிகார, சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு மக்களைப் பழக்கப்படுத்த முயன்று வருகிறார்கள். பார்சிலோனாவில் பாரிய போராட்டங்களுக்கு இடையே, அவர்கள் அமைதியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக கட்டலான் தேசியவாதிகளான ஜோர்டி க்யூசார்ட் (Jordi Cuixart) மற்றும் ஜோர்டி சான்சேஸ் (Jordi Sánchez) ஆகியோரைக் சிறையில் அடைத்ததுடன், பள்ளிக்கூடங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து கட்டலான் மொழியை நீக்கவும் அச்சுறுத்தினர். கட்டலானில் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தாலும், பதவியிலிருந்து நீக்கப்பட்ட கட்டலான் துணை-முதல்வர் Oriol Junqueras இன்னமும் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் — பதவியிலிருந்து நீக்கப்படும் கதிக்கு உள்ளான கட்டலான் முதல்வர் கார்லெஸ் புய்க்டெமொன்ட், புரூசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த சத்தமில்லாமல் தப்பிச் சென்றதால் மட்டுமே பிழைத்தார்.
இந்த விதத்தில், மக்கள் கட்சியும் அதன் கூட்டாளிகளும் தொழிலாளர்கள் மீது புதிய தாக்குதல்களைத் தயாரித்து வருகின்றனர். மக்கள் கட்சி நிர்வாகிகள் கூடுதலாக நூறு மில்லியன் கணக்கான யூரோ ஐரோப்பிய ஒன்றிய சமூக வெட்டுக்களைத் திணிக்க அச்சுறுத்தி வருகின்ற நிலையில், ஏற்கனவே கட்டலோனியாவின் நிதிகளைக் கைப்பற்றிய உள்ள அவர்கள், மாட்ரிட் நகர சபைக்கு எதிராக ஷரத்து 155 ஐ பயன்படுத்த அச்சுறுத்தி உள்ளனர். Cara al Sol உட்பட பாசிசவாத பாசுரங்களைப் பாடியும், ஓர் அவசரகால நிலையைத் திணிக்க பகிரங்கமாக விவாதித்தும், இவற்றால் அடையாளப்பட்ட ஸ்பானிய ஒற்றுமைக்கான போராட்டங்களை மக்கள் கட்சி அரசாங்கம் ஆதரித்தது.
ஆனால் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் பொறிவானது, ஸ்பானிய நிலைமைகளின் விளைவல்ல, மாறாக மாட்ரிட்டின் ஒடுக்குமுறைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவால் அடையாளப்படுத்தப்பட்டவாறு, அது ஓர் ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிகழ்வுபோக்காகும்.
அரசு ஒடுக்குமுறைக்கு திரும்புதல், இராணுவவாதத்திற்குப் புத்துயிரூட்டல், அதிவலது சக்திகளின் வளர்ச்சி ஆகியவை ஐரோப்பா எங்கிலும் முன்நகர்ந்து வருகிறது. பிரான்சில், தொழிலாளர்-விரோத தொழிற்சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க பயன்படுத்தப்பட்ட, இரண்டாண்டு கால அவசரகால நிலையின் போது அரசிடமிருந்து பெற்ற முக்கிய பொலிஸ் அதிகாரங்கள், இப்போது சட்டமாக எழுதப்பட்டுள்ளன. பேர்லின் அதன் வெளியுறவுக் கொள்கையில் மீள்இராணுவமயப்படுத்தலை அறிவித்து நான்காண்டுகளுக்குப் பின்னர், ஆஸ்திரியாவில் ஒரு வலதுசாரி அரசாங்கம் பதவியேற்றுள்ளது, மேலும் ஓர் அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு இரண்டாம் உலக போரில் நாஜி தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர் முதல்முறையாக ஜேர்மன் நாடாளுமன்றத்தில் ஆசனங்களை வென்றுள்ளது.
முதலாளித்துவத்தின், தசாப்தங்களாக முதிர்ச்சி அடைந்துள்ள ஒரு சர்வதேச பொறிவிலிருந்து இந்நெருக்கடி பெருக்கெடுக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய இந்த கால்-நூற்றாண்டு, ஏகாதிபத்தியத்திற்கு பிரதான இராணுவ எதிர்பலம் இல்லாததால், போர்கள், பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் சமூக செலவின குறைப்புகளைத் தீவிரப்படுத்தும் ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், ஐரோப்பாவில் முதலாளித்துவ ஜனநாயகமானது, அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க மற்றும் சர்வதேச பதட்டங்களுக்கு இடையே உருக்குலைய தொடங்கி உள்ளது.
ஸ்பெயினின் சமத்துவமின்மை, ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்கள் மீது இந்நெருக்கடியின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. 2008 பொறிவுக்கு அண்மித்து ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், ஸ்பெயினில் வேலைவாய்ப்பின்மை இன்னமும் 17 சதவீதமாக (இதுவே இளைஞர்கள் மத்தியில் 37 சதவீதமாக) உள்ளது, சமூக சமத்துவமின்மையோ மிக அதிகளவில் உள்ளது. இப்போது ஸ்பெயின் செல்வ வளத்தில் 57 சதவீதத்தை உயர்மட்ட 10 சதவீதத்தினர் கொண்டுள்ளனர், அடிமட்ட 50 சதவீதத்தினர் இடையே வெறும் 7 சதவீதமே உள்ளது. உயர்மட்ட 20 சதவீத குடும்பங்கள் அடிமட்ட 20 சதவீதத்தினரை விட 761 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரும் செல்வந்தரான ஸ்பானிய பில்லியனர் Armancio Ortega இன் சொத்து மதிப்பு 77.9 பில்லியன் டாலராகும்.
இதனால் விளைந்துள்ள சமூக கோபமும், உத்தியோகபூர்வ அரசியலில் இருந்து அன்னியப்படலும் முற்றிலுமாக ஆளும் ஸ்தாபகத்தின் ஸ்திரப்பாட்டை நிலைத்தடுமாற செய்துள்ளது. இந்தாண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் “Generation What” கருத்துக்கணிப்பு, ஸ்பானிய இளைஞர்களில் மூன்றில் இரண்டு பங்கினரும், ஐரோப்பிய இளைஞர்களில் பாதிக்கு அதிகமானவர்களும், நடப்பு ஒழுங்கமைப்புக்கு எதிரான ஒரு பாரிய கிளர்ச்சியில் இணையலாம் என்பதைக் கண்டறிந்தது.
முதலாளித்துவத்தினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு, வேறொரு வகையில் அதே கொள்கையை தொடரும் ஏதேனும் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பதன் மூலமாக இந்நெருக்கடியைத் தீர்க்க முடியாது. இந்த திருப்பம் ஸ்பெயின், ஐரோப்பா மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குரியது. சோசலிசத்திற்கான ஒரு சர்வதேசவாத புரட்சிகர போராட்டத்தை நோக்கி திரும்புவதே, பொலிஸ்-அரசு ஆட்சியை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நகர்வுக்கு ஒரே நம்பகமான விடையிறுப்பாகும்.
ஸ்பானிய அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைக்கான எமது எதிர்ப்பானது, அடிப்படையிலேயே கட்டலோனிய இடது குடியரசு (ERC), கட்டலோனியாவுக்காக இணைவோம் (Together for Catalonia) மற்றும் மக்களின் வேட்பாளர்கள் கூட்டணி (CUP) போன்ற அவற்றின் குட்டி-முதலாளித்துவ கூட்டாளிகள் ஆகிய கட்டலான் பிரிவினைவாத கட்சிகளின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கான எந்தவித ஆதரவையும் கொண்டிருக்கவில்லை. அவை கட்டலோனியாவில் தொழிலாளர்கள் மீது பில்லியன் கணக்கான யூரோ ஐரோப்பிய ஒன்றிய வெட்டுக்களைத் திணித்தன. சமூக செலவின குறைப்பைத் திணிப்பதற்கும் ஐரோப்பிய இராணுவவாதத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஒரு கருவியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அவர்களின் ஆதரவே அவர்கள் வகிக்கும் பிற்போக்குத்தனமான பாத்திரத்திற்கு ஒரு பதிலளிக்கவியலா சான்றாக உள்ளது. கட்டலோனியாவில் ரஹோயின் ஒடுக்குமுறையை ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆதரித்த பின்னரும் கூட அவர்கள் இந்த ஆதரவைத் தொடர்கின்றனர்.
ஐபீரிய தீபகற்பத்தின் ஆளும் வர்க்கத்திற்குள் நடக்கும் கன்னை மோதலில், அங்கே எந்த முற்போக்கான கன்னையும் கிடையாது. பிரிட்டனில் ஸ்காட்டிஷ் தேசியவாதிகள்மற்றும் இத்தாலியில் வடக்கு லீக் போன்றே, கட்டலான் தேசியவாதிகளும் கட்டலோனியா ஒரு செல்வ செழிப்பான பிராந்தியம் என்ற உண்மையின் அடிப்படையில் ஒரு சுயநலமான மூலோபாயத்தை முன்னெடுக்கின்றனர். ஸ்பெயினின் மற்ற வறிய பகுதிகளுக்கான அவர்களது நிதி கடமைப்பாடுகளை வெட்டுவதற்கும், கட்டலோனியா தொழிலாளர்களிடம் இருந்து உறிஞ்சப்படும் இலாபங்களில் அதிக பங்கைப் பெறுவதற்கும், மற்றும் சர்வதேச வங்கிகளுடனான அவர்களின் உறவுகளை ஆழப்படுத்துவதுமே சுயாட்சி அல்லது சுதந்திரத்திற்கான அவர்களின் நோக்கமாகும்.
ஸ்பெயினின் ஏனைய பகுதிகளை நோக்கிய கட்டலான் தேசியவாதிகளது நாசப்படுத்தும் மனோபாவத்தின் தன்மை, ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளைக் கோபமூட்டி எதிர்க்க தூண்டுகின்ற இது, ரஹோய் மற்றும் அவர் கூட்டாளுக்கு ஸ்பானிய தேசியவாதத்தை முடுக்கி விடுவதை சுலபமாக்குகிறது.
ஒவ்வொரு மிகப்பெரும் நெருக்கடியைப் போலவே, கட்டலான் நெருக்கடியும் "இடது" வாய்சவுடால் அம்பலப்பட்ட பொடெமோஸ் போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகளை அம்பலப்படுத்தி உள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான கொள்கையைப் பின்தொடர்வதிலிருந்து விலகி, பொடெமோஸ் இரண்டு முதலாளித்துவ முகாம்களுக்கு இடையே தந்திரமாக செயல்பட முனைந்துள்ளது. அதன் கட்டலான் பிரிவான பொதுவான கட்டலோனியா (CeC), ஸ்பானிய தேசியவாதத்திற்கும் கட்டலானுக்கும் இடையிலான மோதலில் நடுநிலைமை வகிப்பதாகவும், அதற்கு பதிலாக சமூக பிரச்சினையை முன்னெடுக்கவும் கோருகிறது. அது PSOE இன் ஷரத்து 155 க்கு ஆதரவான கட்டலான் பிரிவுக்கும் மற்றும் பிரிவினைவாத ERC க்கும் இடையிலான ஒரு கூட்டணிக்கு ஆதரவளிக்க முன்மொழிகிறது.
ஒவ்வொன்றையும் —பிராந்தியவாதம் மற்றும் தேசியவாதம், ஷரத்து 155 மற்றும் ஜனநாயக உரிமைகள், அனைத்திற்கும் மேலாக, முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிலாளர்களை— இணக்கமாக்க முடியுமென பொடெமோஸ் வாதிடுகிறது. அது அதன் கிரேக்க சகோதரத்துவக் கட்சியான சிரிசாவுடன் (“தீவிர இடதின் கூட்டணி”) நிறைய விடயங்களைப் பொதுவாக பகிர்ந்து கொள்கிறது. இதுவும் சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து ஒரு ஜனநாயக மாற்றீடாக தன்னை முன்னிறுத்தியது. ஆனால் 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே, அது சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியதோடு, இப்போது தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதில் செயலூக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் பாகமாக, ஸ்பானிய மற்றும் கட்டலான் தேசியவாத சக்திகள் இரண்டுக்கும் எதிராக ஸ்பானிய மற்றும் கட்டலான் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டமே, முன்நோக்கிய பாதையாகும்.
ஒவ்வொரு நாட்டிலும் போலவே ஸ்பெயினிலும், ஒரு புரட்சிகர, சோசலிச மற்றும் சர்வதேசவாத முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் மறுநிலைநோக்குயே ஒரே நம்பகமான பதிலாகும். ஸ்பானிய மற்றும் கட்டலான் மொழி பேசும் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக, நிதியியல் பிரபுத்துவத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் பாகமாக ஸ்பெயினில் ஒரு தொழிலாளர் அரசை கட்டியெழுப்புவதற்காக தொழிலாள வர்க்கத்தால் அதிகாரம் கையிலெடுக்கப்படுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.
இந்த முன்னோக்கிற்கான போராட்டத்திற்கு, ஸ்பெயினிலும் ஐரோப்பா எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகள் என்ற வடிவத்தில் ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகிறது.