ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Robert Mugabe resigns as president of Zimbabwe

சிம்பாப்வே ஜனாதிபதி பதவியிலிருந்து ரோபர்ட் முகாபே இராஜினாமா செய்கிறார்

By Chris Marsden
22 November 2017

அவருக்கு எதிராக முதலில் சிம்பாப்வே இராணுவம் முன்நகர்ந்ததற்கு ஆறு நாட்களுக்குப் பின்னர், செவ்வாயன்று ஜனாதிபதி பதவியிலிருந்து ரோபர்ட் முகாபே இராஜினாமா செய்தார். ஆளும் கட்சியான சிம்பாப்வே ஆபிரிக்க தேசிய ஐக்கிய-தேசப்பற்று முன்னணியில் (ZANU-PF) அவருக்கு எதிரான கோஷ்டி எதிர்ப்பாளர்கள் தொடங்கிய பதவிநீக்க குற்றவிசாரணை மீது ஒரு நாடாளுமன்ற விவாதம் நடந்து கொண்டிருந்ததற்கு இடையே, அவர் இராஜினாமா அறிவிக்கப்பட்டது.

கடந்த புதனன்று இராணுவம் அவர் மனைவி கிரேஸ் முகாபேயின் ஜி40 அணி இலக்கு வைத்தும் மற்றும் முன்னாள் துணை பிரதம மந்திரி எமர்சன் நான்காக்குவாவை (Emmerson Mnangagwa) ஆதரித்தும் நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், 37 ஆண்டுகளாக அந்நாட்டின் தலைமையில் இருந்து வரும் 93 வயதான முகாபே பதவியிலிருந்து இறங்க மறுத்திருந்தார். ஞாயிறன்று காலைதான் அவர் கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய நாளே உயர்மட்ட இராணுவ பிரமுகர்கள் பக்கவாட்டில் இருக்கையில் ஒரு தொலைக்காட்சி உரையில் இராஜினாமா செய்ய அவர் மறுத்ததுடன், அதற்கு பதிலாக அடுத்த மாதம் ஒரு கட்சி மாநாட்டைக் கூட்ட முன்மொழிந்தார்.

முகாபேயின் இராஜினாமா செய்தி கிடைத்ததும் ஹராரேயில் பரவசமான காட்சிகள் நிலவின என்பதுடன் பேரணிகளும் நடத்தப்பட்டன என்றாலும், அவரது இராஜினாமா, முகாபே ஐ விட ஊழலில் சற்றும் குறையாத முதலாளித்துவ சக்திகளது அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களால் கட்டளையிடப்பட்ட ஓர் அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் விளைவாகும்.

இறுதியில் முகாபே நாடாளுமன்றத்திற்கான ஒரு கடிதத்தில் அவர் இராஜினாமாவைச் சமர்பித்தார், அது சபாநாயகர் ஜேகப் முடென்டாவால் கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. இராணுவமும் ஊடக பிரிவுகளும் எதை உண்மையான மக்கள் எழுச்சி என்று அறிவித்தனவோ அத்தகைய ஒன்றிலிருந்து எந்தளவுக்கு அரசியல் பதவிக்கவிழ்ப்பு தவிர்க்கப்பட்டது என்பதற்கு அந்த சபையில் எழுந்த உற்சாக கூச்சல் ஓர் அறிகுறியாக இருந்தது. அவரின் முதிர்ந்த வயதுதான் அவர் மனைவியை "அதிகாரத்தைக் கைப்பற்ற" அனுமதித்தது என்று முகாபே மீது சுமத்தப்பட்டு, விசாரிக்கப்பட இருந்த குற்றச்சாட்டுக்களே கூட, எந்தவொரு துணைவிளைவுகளையும் மட்டுப்படுத்தும் நோக்கத்தைப் பிரதிபலித்தது.

முகாபேயின் மாற்றீடாக உள்ள நான்காக்குவா, தசாப்தங்களாக அவர் யாருக்காக அமுலாக்க அதிகாரியாக செயல்பட்டாரோ அவரிடமிருந்து கோட்பாட்டுரீதியில் வேறுபட்டவர் இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னர் முகாபேயால் இவர் நீக்கப்பட்ட பின்னர்தான், இவர் தனது முன்னாள் எஜமானருக்கு எதிராக நகர்ந்தார், பின்னர் "Gucci Grace” ஐ [முகாபேயை ஊடகங்கள் குறிப்பிடும் பட்டப்பெயர்] சுற்றி இருந்த இளம் முதலாளித்துவ வர்க்க அடுக்கிற்கு ஆதாரவாக, இராணுவத்திற்கு நெருங்கமாக இருந்த "பழைய படையின்" பிற அங்கத்தவர்களை ஓரங்கட்டினார்.

முகாபேயின் நடவடிக்கைகள் விடுதலை இயக்கத்தின் மாவீரர்களை உதாசீனப்படுத்துவதாக இராணுவம் சித்தரிக்கிறது. 1980 களில் இருந்து பல தசாப்தங்களாக, ஒரு பிரதான பொருளாதார சக்தியாக ஆவதற்கு இராணுவம் அதன் பலத்தை முட்டுக்கொடுத்தது, ஆனால் இது உழைக்கும் மக்களை விலையாக கொடுத்து செல்வந்தர்களை வளர்ச்சியடைய செய்தது. தங்களை விலையாக கொடுத்து நேர்மையற்ற ஓர் இளம் அடுக்கை அவர் ஊக்குவிக்கிறார் என்பதற்காக மட்டுமே தளபதிகள் முகாபே மீது ஆத்திரம் கொண்டிருந்தனர்.

2001 இல் அமெரிக்க தூதர் எழுதிய மற்றும் விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட இரகசிய ஆவணங்களில், நான்காக்குவா சிம்பாப்வேயின் மிகப் பணக்கார மனிதராக குற்றஞ்சாட்டப்படுகிறார். அவர் ZANU-PF இல் நிதித்துறை செயலராக இருந்தபோது முறையற்ற வகையில் பெற்ற ஆதாயங்களும், அத்துடன் காங்கோவில் சட்டவிரோத கனிம வள சுரண்டல்களும், அவர் செல்வவளத்திற்கான ஆதாரங்களில் உள்ளடங்குகின்றன. முகாபேக்கு எதிரான ஒரு நகர்வுக்கு ஆதரவு கோரி அவர் சென்ற முதல் புகலிடம், சிம்பாப்வேயின் மிகப் பெரிய முதலீட்டாளரான பெய்ஜிங் ஆகும், பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் நான்காக்குவா அங்கேதான் பயணித்தார். சுரங்க தொழில்துறை மற்றும் பிற முக்கிய தொழில்துறைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அபராதம் விதித்த, "உள்நாட்டுமயப்படுத்தும்" கொள்கைக்கு முகாபே மீண்டும் திரும்பியதற்கு ஒரு எதிர்ப்பாளராகவும் "ஈடுபாடு கொண்ட"-நண்பராகவும் தன்னை முன்னிறுத்தியதன் மூலமாக, நான்காக்குவா, சீனா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு முறையீடு செய்தார்.

இந்த அரண்மனை ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு உடனடியாக பொறுப்பேற்ற மனிதரும், சிம்பாப்வே தேசிய இராணுவத்தின் தளபதியுமான ஜெனரல் கான்ஸ்டன்டைன் ஷிவென்காவும், ஒரு மிகப் பெரிய நில/மனை விற்பனை துறை பட்டியலுடன், சுமார் 100 நிறுவனங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பவராக, ஒரு தொகுதி ஆடம்பர கார்கள் மற்றும் மலையென குவிந்த நகைகளுடன் மிகப் பெரும் செல்வந்தராவார்.

சம்பவங்களை இராணுவம் எந்தளவுக்கு கையாண்டு வருகிறது என்பது திங்களன்று ஷிவென்கா வெளியிட்ட அறிக்கையில் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது. சிம்பாப்வே விமானப்படை தளபதி பெர்ரன்சி ஷிரி, பொலிஸ் ஆணையர் ஜெனரல் ஆகஸ்டைன் சிஹுரி, சிம்பாப்வே சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகளுக்கான ஆணையர் ஜெனரல் பராட்ஜைய் ஜிமொன்டி மற்றும் மத்திய உளவுத்துறை அமைப்பின் தற்காலிக தலைவர் ஆரோன் நிஹிபெரா ஆகியோர் பக்கவாட்டில் நிற்க, ஷிவென்கா, "அமைதியை, வாழ்வை மற்றும் சொத்துக்களை அச்சுறுத்த" கூடிய எவரொருவரின் எந்தவொரு நடவடிக்கைக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

சிம்பாப்வே மக்கள், அவர் அறிவித்தார், "அமைதியாக, பொறுமையாக, முழுவதையும் கண்காணித்தவாறு நாட்டின் சட்டங்களை மதித்திருக்க" வேண்டும், அதேவேளையில் "உங்களின் பாதுகாப்பு படைகள்... 'ஆபரேஷன் மரபு மீட்டமைப்பு' (Operation Restore Legacy) என்று குறியீட்டு பெயரைக் கொண்ட நடவடிக்கையுடன் முற்றுகையிட்டிருக்கும்." சிம்பாப்வே பல்கலைக்கழகத்தில் போராடி வரும் மாணவர்கள் "அமைதியாக இருந்து, திட்டமிட்டவாறு அவர்களின் கல்வி படிப்புகளை மேற்கொள்ள வேண்டும்" என்று ஷிவென்கா அவர்களை வலியுறுத்தினார்.

ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம் (MDC) என்ற எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் மோர்கன் ஸ்வன்கிராய், குற்றவிசாரணை நகர்வுக்குப் பின்னால் அணி திரண்டுள்ளார். சிம்பாப்வே தொழிற்சங்கங்களின் சம்மேளத்தின் (ZCTU) முன்னாள் தலைவரான இவர், பசியிலிருக்கும் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டுமென்ற அவர் விருப்பமே இப்போது நான்காக்குவா கன்னையுடன் தற்காலிகமாக அணி சேர்வதற்கான காரணம் என்று பேசுகிறார். ஆனால் அவரும், தொழிற்சங்க அதிகாரத்துவமும் சிம்பாப்வேயில் உள்ள முதலாளித்துவ சக்திகளுடனும், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உட்பட பிரதான ஏகாதிபத்திய சக்திகளுடனும் அணி சேர்ந்துள்ளனர்.

1999 இல் அமைக்கப்பட்ட MDC, சர்வதேச நாணய நிதியம் திணித்த கட்டமைப்பு சீரமைப்புக்கான திட்டத்திற்கும் மற்றும் வெள்ளை இனத்தவர் பண்ணைகளது நலன்களுக்கும் பாதுகாவலராக ZANU-PF க்கு எதிராக நின்றது, அப்போது முகாபே அவரது மக்கள் அடித்தளத்தைப் பேணுவதற்காக அவ்விரண்டுக்கும் எதிர்ப்பைக் காட்ட நிர்பந்திக்கப்பட்டார். 1997 இல் South African Mail மற்றும் Guardian உடனான ஒரு பேட்டியில், ஸ்வன்கிராய், சிம்பாப்வேயின் சமூக நெருக்கடியை IMF தான் உருவாக்கியது என்பதை மறுத்ததுடன், "நாங்கள் எங்களின் சக்திக்கு உட்பட்டு வாழவில்லை," என்பதால் தான் அது ஏற்பட்டது என்று வலியுறுத்தினார். அவர் தொடர்ந்து கூறினார்: "நாங்கள் எட்டியிருந்த அந்த கட்டத்தில், கட்டமைப்பில் ஏதோ வகையான சீரமைப்பு வடிவம் தேவைப்பட்டது... நாங்கள் தளர்த்தவும், திறந்து விடவும், வணிகங்கள் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்படவும் அனுமதிக்க வேண்டியிருந்தது."

இதே திட்டநிரலை தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ள MDC, மில்லியன் கணக்கானவர்களைச் சீரழித்த, முடக்கும் வகையிலான தடையாணைகளை உள்ளடக்கிய மேற்கின் இந்நகர்வுகளை, முகாபேயை பதவியிலிருந்து நீக்குவதற்காக ஆதரித்தது.

இலண்டனும் வாஷிங்டனும், நான்காக்குவா தலைமையிலான கன்னை உட்பட ZANU-PF உள்ளிருந்த கன்னைகளுடன் உறவுகளைக் கோரியதுடன் சேர்த்து, காலப்போக்கில் ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கத்தையும் (MDC) ஆதரித்து வந்துள்ளன. பலவீனமான ஸ்வன்கிராய் இன்னமும் சர்வதேச ஆதரவைப் பெற்றுள்ளார் என்பதோடு, அமெரிக்காவும் பிரிட்டனும், MDC மற்றும் பிற எதிர்ப்பு போக்குகளை உள்ளடக்கிய ஏற்பாடுகளுடன் மக்கள் ஆட்சிக்கு இராணுவம் வழிவிட வேண்டுமென வலியுறுத்துகின்றன. ZANU-PF க்குள் உள்ள சீன செல்வாக்கு எதிராக MDC ஒரு முக்கிய அரசியல் நெம்புகோலாக இருக்குமென கருதப்படுகிறது.

பதவியிலிருந்து முகாபே வெளியேறுவது மிக கவனமாக கையாளப்பட வேண்டுமென கவலை கொண்ட மற்றொரு கட்சி, தென் ஆபிரிக்காவில் உள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசாங்கமாகும். “கருப்பினவருக்கான பொருளாதார மேம்பாட்டு" கொள்கைகளிலிருந்து கிடைத்த அரசு பதவிகள் மற்றும் வணிக தொடர்புகள் மூலமாக, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளை சுரண்டுவதில் கிடைக்கும் ஒரு பங்கிற்குப் பிரதிபலனாக, இவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளைத் தீர்க்கமாக காட்டிக்கொடுத்துள்ள ஓர் ஆட்சிக்கு ஜனாதிபதி ஜேகோப் ஜூமா தலைமை வகிக்கிறார். அதிகார மாற்றத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதை விவாதிக்க, அங்கோலாவில் தெற்கு ஆபிரிக்க அபிவிருத்தி சமூகத்தின் (SADC) ஒரு கூட்டத்திலிருந்து இன்று ஹராரே வருகிறார்.

மாளிகை கவிழ்ப்பு சதிக்கு பல வாரங்களுக்கு முன்னரே தென் ஆபிரிக்காவின் மத்திய உளவுத்துறை அமைப்பிடமிருந்து (CIO) கிடைத்த ஓர் இரகசிய ஆவணத்தை (cable) ராய்டர்ஸ் நேற்று வெளியிட்டது. இராணுவம் ஏற்கனவே அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டது என்பதை அறிந்து முகாபே பதவியிறங்குமாறு, ஜூமா தலைமையில் SADC இன் பதினாறு ஆபிரிக்க தலைவர்களும் அவரை ஊக்குவித்து வருவதாக அந்த இரகசிய ஆவணம் குறிப்பிடுகிறது. அக்டோபர் 23 தேதியிட்ட அந்த CIO ஆவணம், நான்காக்குவா நீக்கப்பட்டால் முகாபே "இராணுவத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பை" சந்திப்பார் என்றும், “கிரேஸின் நியமனத்தை இராணுவம் எளிதில் ஏற்றுக் கொள்ளாது" என்றும் எச்சரிக்கிறது.

அந்த அறிவிக்கை இதையும் சேர்த்துக் கொள்கிறது, “இராணுவத்தின் ஆதரவுடன், ஒரு பரந்த கூட்டணியின் தலைமையில், நான்காக்குவா முகாபேவை வெற்றி கொள்ள திட்டம் தீட்டி வருவதாக செப்டம்பரில்" ராய்டர்ஸ் அறிவித்தது. உலகளாவிய கடன் வழங்குனர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து பல தசாப்தங்களாக தனிமைப்பட்டிருந்த பின்னர் சிம்பாப்வே மீண்டும் உலகுடன் சேர்ந்து செயல்படுவதை அனுமதிக்க, சர்வதேச ஆசிர்வாதங்களுடன், ஓர் இடைக்கால ஐக்கிய அரசாங்கத்தை அந்த திட்டம் ஒழுங்குபடுத்தியது.”

ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர் முதல்முறையாக நான்காக்குவா நேற்று பொதுமக்கள் பார்வைக்கு வந்தபோது, ஒரு "புதிய சிம்பாப்வேக்கான" அவரின் தொலைநோக்குப் பார்வையை வழங்கினார், அது அதன் போக்கில், “கட்சி அரசியல் திட்டமல்லாத, ஒரு தேசிய திட்டத்தையும்", இது "ZANU-PF இன் வேலை மட்டுமல்ல...” என்ற இந்நோக்கத்தையும் விவரித்திருந்தது.

உண்மையில் தங்களுக்கு வாய்ப்புகள் திறந்துவிடப்படும் என்று ஏகாதிபத்தியவாதிகள் கணக்கிட்டு வருகின்றனர். பிரதம மந்திரி தெரேசா மே கூறுகையில், "சிம்பாப்வேயின் மிகப் பழைய நண்பரான" இங்கிலாந்து, சிம்பாப்வே பொருளாதாரத்தை "மீண்டும் கட்டமைக்க" அதனால் ஆனமட்டும் எல்லாவிதத்திலும் உதவும் என்றார்.

பிரிட்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளை உள்ளடக்கி என்னதான் மறுகட்டமைப்பு திட்டமிடப்பட்டாலும், அது தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளை விலையாக கொடுத்தே செய்யப்படும். சிம்பாப்வே தொழிலாள வர்க்கத்திற்கு முன்னிருக்கும் இன்றியமையா பிரச்சினை, முதலாளித்துவ வர்க்கத்தின் எல்லா கன்னைகளிடமிருந்து சுயாதீனமாக அதன் நலன்களை வலியுறுத்துவதாகும். பெருந்திரளான மக்களை ஏகாதிபத்திய மேலாதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கும், உண்மையான மற்றும் நீண்டு நிலைத்திருக்கக்கூடிய சமூக மற்றும் பொருளாதார நிகழ்வுபோக்குக்கான நிலைமைகளை உருவாக்கவும் முகாபே மட்டுமல்ல அந்த வர்க்கமே இலாயக்கற்றது என்பதை நிரூபித்துள்ளது.