Print Version|Feedback
අධ්යාපන අයිතිය වෙනුවෙන් සටන් වැදි සිසුන් සහ දෙමාපියන් ගොරතර පාවාදීමකට හසු කෙරෙයි
இலங்கை: கல்வி உரிமைக்காகப் போராடிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மோசமாக காட்டிக்கொடுக்கப்பட்டனர்
By Socialist Equality Party (Sri Lanka)
16 November 2017
மாலம்பேயில் அமைந்துள்ள சைட்டம் (South Asian Institute of Technology and Medicine -SAITM) தனியார் மருத்துவக் கல்லூரியை “இரத்துச் செய்யுமாறு” கோரி, அரச பல்கலைக் கழகங்களில் மருத்துவ மாணவர்கள் பத்து மாதங்களுக்கும் மேலாக முன்னெடுத்த வகுப்பு பகிஷ்கரிப்பு, அந்த மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த “சாகும் வரை உண்ணாவிரதம்” உட்பட அனைத்து எதிர்ப்புகளுக்கும் கடந்த வியாழக் கிழமை முடிவுகட்டப்பட்டது.
சைட்டம் நெருக்கடியை தீர்ப்பதற்கான ஜனாதிபதிக் குழுவின் தலைவரும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் சம்பந்தமான பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா உடன் மருத்து மாணவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த எதிர்ப்புக்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. அன்று காலை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றி, சைட்டம் மருத்துவக் கல்லூரியை “இரத்துச்” செய்வதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஹர்ஷ டி சில்வா, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.
சைட்டம் “இரத்துச்” செய்வதன் வெற்றியைக் கொண்டாடி, அன்று மாலை கொழும்பில் நடத்திய கூட்டமொன்றில், மருத்து மாணவர் நடவடிக்கை குழுவின் அழைப்பாளர் ரயன் ஜயலத், தமது குழுவின் தலைமைத்துவத்தால் முன்னெடுக்கப்பட்ட வகுப்பு பகிஷ்கரிப்புகளை நிறுத்துவதாக அறிவித்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு (அ.ப.மா.ஒ.) தலைமைத்துவம் கொடுக்கும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) துமிந்த நாகமுவ, பின்நவீனத்துவ பிரக்ஸிஸ் குழுவின் விதர்சன கன்னங்கர, முதலாளித்துவ மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) வசந்த சமரசிங்க மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்டாலின் உட்பட அனைவரும் அரசாங்கத்தின் “சைட்டம் ரத்தை” பிரமாண்டமான வெற்றியாக தூக்கிப் பிடித்தனர்.
எவ்வாறெனினும், இந்த கொண்டாட்டத்துக்கு ஒரு சில மணித்தியால ஆயுட் காலமே இருந்தது. பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, தனது முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பை எழுதி முதல் நாள் நடந்ததை தெளிவுபடுத்தினார். உண்ணாவிரதம் மற்றும் வகுப்பு பகிஷ்கரிப்புக்கு முடிவுகட்ட தீர்மானித்தபோது என்ன நடந்தது என்பது பற்றி “அநேக அர்த்தப்படுத்தல்கள்” இருப்பதாக கூறிய அவர் பின்வருமாறு தெரிவித்தார்: “சைட்டம் நெருக்கடிக்கு தீர்வை முன்வைத்து அரசாங்கம் விடுத்த அறிக்கையின், சைட்டம் இரத்துச் செய்வது பற்றிய பிரிவை தெளிவுபடுத்துவதையே நான் செய்தேன்…. (சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான) அனைத்து சொத்துக்கள் மற்றும் வளங்களும், அதே போல் அங்கு கல்வி கற்கும் மாணவர்களும் அரச-சார்பற்ற மற்றும் இலாபம் பெறாத நிறுவனத்திடம் கையளிக்கப்படும். இப்போதைக்கு அதனுடன் (சைட்டத்துடன்) சம்பந்தப்பட்டுள்ளவர்களும் (நிர்வாகக் குழு, பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்) அதேபோல் கடன் கொடுத்துள்ள நிதி நிறுவனங்களும் புதிய நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்பாட்டின் அடிப்படையிலேயே, இது முன்னெடுக்கப்படும்.”
மருத்துவக் கல்லூரி சம்பந்தமான குறைந்த பட்ச தரங்களை வர்த்தமானிப்படுத்தி, இந்த மாதக் கடைசியில் பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதாகவும் இந்த ஆண்டு முடிவதற்கு முன்னர் இந்த தரத்திற்கு ஏற்ப அரச-சார்பற்ற (அதாவது தனியார்) இலாபம் பெறாத நிறுவனத்துக்குள் சைட்டம் மாணவர்களை அனுப்புவதாக சில்வா மேலும் கூறுகின்றார்.
இதன்படி, “சைட்டம் இரத்துச் செய்தல்” என்பது வெறுமனே அதன் பெயரில் இருந்த மருத்துவப் பீடத்தை இரத்துச் செய்து, இன்னொரு பெயரில் அதை நடத்திச் செல்வது மட்டுமே ஆகும். கல்வி தனியார்மயமாக்கம், “இலாபம் பெறாத” மற்றும் “அரச-சார்பற்ற” ஆகிய பல்வேறு சாக்குப் போக்கின் கீழ் முன்னெடுக்கப்படும். மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இங்கு கொண்டாடுவதற்கு ஒன்றும் கிடையாது.
சுமார் ஒரு வருட காலமாக வகுப்பு பகிஷ்கரிப்பு செய்து, நீண்ட ஊர்வலங்கள் சென்று, மீண்டும் மீண்டும் பொலிஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகி, கல்வி தனியார்மயமாக்கலுக்கு எதிராக உறுதிப்பாட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், கல்வி தனியார்மயமாக்கலை இடைவிடாமல் முன்னெடுப்பதாகவும் சைட்டம் அல்லாத வேறு பெயரில் சைட்டத்தை மீண்டும் தொடங்குவதாகவும் அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதிக்கு அடிபணிந்தே, மாணவர் சங்கத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இது அ.ப.மா.ஒ., முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஜே.வி.பி.யினது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இழிவான காட்டிக்கொடுப்பாகும்.
இந்த காட்டிக்கொடுப்பின் வர்க்க உள்ளர்த்தத்தை கிரகித்துக்கொள்வது இன்றியமையாத தாகும்.
ஆழமான அரசியல் நெருக்கடிக்குள் மூழ்கியுள்ள சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், மாணவர்களின் போராட்டம் முன்னோக்கி இழுபட்டுச் செல்வது சம்பந்தமாக கடும் அக்கறை காட்டியுள்ளது. தனது தாக்குதல்களுக்கு எதிராக இடைவிடாமல் போராட்டத்தில் குதித்துவரும் தொழிலாளர்களதும் ஏனைய வறியவர்களதும் போராட்டங்கள், மாணவர்களது போராட்டத்துடன் ஒன்றிணையக் கூடும் என்பதையிட்டு அரசாங்கம் கடும் பீதியடைந்திருந்தது. இதனால் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, எதிர்ப்புக்களை நிறுத்துமாறு அரசாங்கம் இடைவிடாது வேண்டுகோள் விடுத்து வந்தது.
ஒன்பதாம் திகதி, பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, அரசியல் யாப்பு பற்றிய விவாதத்தின் மத்தியில், சபாநாயகரிடம் விசேட அனுமதியைப் பெற்று பாராளுமன்றத்தில் அறிவித்தல் ஒன்றை விடுத்த பின்னர், அவருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பெறுபேறாக, மாணவர் ஒன்றியம் மற்றும் அவற்றுக்கு தலைமைத்துவம் கொடுக்கும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அடிபணிந்தன.
அரசாங்கம் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடியின் மத்தியில், போராட்டத்துக்கு முடிவுகட்டி அ.ப.மா.ஒ. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியும், அரசாங்கத்துக்கு பெரும் ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளது. தனது உழைப்பில் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட அமெரிக்க-சார்பு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு ஒக்ஸிஜன் கொடுத்து எதிர்காலத் தாக்குதலுக்கு அவசியமான சக்தியையும் காலத்தையும் வழங்குவதே இதன் குறிக்கோளாகும்.
தனியார்மயத்தை எதிர்க்கவில்லை என ஆரம்பத்தில் இருந்தே கூறிவந்த அரச மருத்துவர்கள் சங்கம் (GMOA), சிறிசேன முன்வைத்த உத்தேச நடவடிக்கையை “சாதகமானது” என கூறி, முதலில் வேலைநிறுத்த நடவடிக்கைகளைக் கைவிட்டது.
கல்வி தனியார்மயமாக்கத்துக்கு எதிராக, மாணவர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வந்த பலம்வாய்ந்த எதிர்ப்பை, வெறுமனே சைட்டத்துக்கு எதிரானதாக தரம் குறைத்து, மாணவர்களை எதிர்ப்பு அரசியலுக்குள் திசைதிருப்பிவிடுவதற்கு அ.ப.மா.ஒ. மற்றும் மருத்துவ மாணவர் நடவடிக்கை குழுவும் செயற்பட்ட அதேவேளை, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் ஆரம்பத்தில் இருந்தே இந்தப் போராட்டத்தில் தலையீடு செய்து, பலமான மற்றும் விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வுகளையும் முன்னோக்குகளையும் முன்வைத்தன.
கல்வி உரிமை வெட்டப்படுவது சர்வதேச சூழல் என்றும், வீழ்ச்சியடைந்து வரும் இலாபத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தே, கல்வி உட்பட சமூக நலன்புரி சேவைகளுக்கான செலவுகளை வெட்டிக் குறைத்து, அவற்றை இலாபம் சுரண்டும் தொழிற்துறைகளாக ஆக்கிக்கொள்வதற்கு செயற்பட்டு வருகின்றது என்றும், சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் சுட்டிக் காட்டி வந்தன.
2008ல் அமெரிக்காவில் பிரமாண்ட நிதி நிறுவனங்களின் பொறிவில் தொடங்கி, உலகம் பூராவும் பற்றிப் படர்ந்த உலக முதலாளித்துவ வீழ்ச்சியின் புதிய காலகட்டத்துக்குள், அனைத்து நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், உழைக்கும் மக்கள் தமது போராட்டங்களின் மூலம் கடந்த காலத்தில் வென்றெடுத்த வாழ்க்கை மற்றும் சமூக உரிமைகளை அபகரித்தே நெருக்கடியை தீர்த்துக்கொள்ள முயற்சிக்கின்றன என சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் தமது பகுப்பாய்வுகளின் மூலம் தெளிவுபடுத்தின.
கல்வி உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக சோசலிச வேலைத் திட்டத்திற்காக போராடு! என்ற தலைப்பில், 2017 மார்ச் 7 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் நாம் பின்வருமாறு சுட்டிக் காட்டினோம்: “அ.ப.மா.ஒ. மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் முன்னெடுக்கும் எதிர்ப்புகளில், இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கான எந்தவொரு முன்னோக்கும் கிடையாது. அழுத்தம் மற்றும் பரந்த அழுத்தங்களை கொடுத்து சைட்டத்தை மூடிவிடுவதற்காக அரசாங்கத்தை நெருக்கும் முயற்சியே அவர்கள் முன்வைத்துள்ள வேலைத் திட்டமாகும். இது திட்டமிட்டே கல்வியை தனியார்மயப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தை அடியில் போட்டு மூடுவதற்கான முயற்சியாகும்.
அரசாங்கத்தினதும் முதலாளித்துவ வர்க்கத்தினதும் தனியார்மயமாக்கல் கொள்கையை தோற்கடிக்காமல் கல்வி உரிமையை பாதுகாக்க முடியாது என்றும், அதற்காக தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்திலான அரசியல் போராட்டம் ஒன்று அத்தியாவசியமானது என்றும் நாம் இடைவிடாமல் சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.
எனினும், தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி முன்னெடுக்கும் அத்தகைய அரசியல் போராட்டத்தின் முழு விரோதிகளான முன்னிலை சோசலிசக் கட்சியும் அ.ப.மா.ஒன்றியமும், அதற்கு பதிலாக பிற்போக்கு சக்திகளின் பக்கமே திரும்பின. கல்வி தனியார்மயமாக்கத்தை ஆதரிக்கும் முதலாளிகள் உட்பட படுபிற்போக்காளர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் போலி வேலைத் திட்டங்களை தூக்கிப் பிடிப்பவர்களை அணிதிரட்டிக்கொண்டு, “மாணவ மக்கள் அணிதிரள்வு” மற்றும் “சைட்டம்-விரோத மக்கள் அமைப்பு” போன்ற பல்வேறு பெயர்களில் உருவாக்கிக் கொண்ட முதலாளித்துவ கூட்டணிகளுக்குள் இவை தம்மை இணைத்துக்கொண்டன. இந்த கூட்டணி, தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்கு நேர்மையான அக்கறையுடன் முன்னணிக்கு வரும் அனைத்து தரப்பினரையும் அரசியல் ரீதியில் அடைத்து வைக்கும் ஒரு பொறிக்கிடங்காகியது.
இதன் நன்மையை முழுமையாக சுரண்டிக்கொண்டது, தனியார்மயமாக்கலை கொள்கையாக நடைமுறைப்படுத்தி சைட்டம் நிறுவனத்தை தொடங்குவதற்கு அவசியமான அனைத்து சூழல்களையும் ஏற்படுத்திக் கொடுத்த மற்றும் கல்வி உட்பட சமூக உரிமைகளைப் போலவே ஜனநாயக உரிமைகளுக்கு அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் “கூட்டு எதிர்க் கட்சியே” ஆகும். முன்னிலை சோசலிசக் கட்சி அமைத்துக் கொடுத்த மேடையில் ஏறிக்கொண்ட இந்த கும்பல், இலவசக் கல்வியின் பாதுகாவலர்களாக காட்டிக்கொண்டன.
இந்த கூட்டணிகளில் நன்மை பெற்ற இன்னொரு குழு, ஜே.வி.பி. ஆகும். தற்போதைய அரசாங்கம் உட்பட முதலாளித்துவ ஆட்சிகளை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு சேவை செய்த, அவற்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தோள் கொடுத்த ஜே.வி.பி., அதன் காரணமாக தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய வறியவர்கள் மத்தியில் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. “சைட்டம்-விரோத” மேடையில் ஏறிக்கொண்ட ஜே.வி.பி. தலைவர்கள், இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான போராட்டத்தின் வழிநடத்துனர்களைப் போல் வாய்ச்சவடால் விடுத்தனர்.
இத்தகைய முதலாளித்துவ கூட்டணிகளுக்குள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சிறைவைத்து, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தை தடுத்து, முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாக்கும் ஒப்பந்தத்தை இந்த போலி-இடதுகள் உலகம் பூராவும் பொறுப்பெடுத்துள்ளன. சர்வதேச மூலதனத்தின் கட்டளைகளுக்கு இணங்க, தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பரந்த சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து, இன்று கிரேக்கத்தில் ஆட்சி செய்யும் சிரிசா அமைப்பு, போலி-இடதுகளால் புகழப்படும் அத்தகைய ஒரு முதலாளித்துவ கூட்டணியாகும்.
அதேபோல், ஸ்பெயினில் கட்டலான் பிராந்தியம் ஸ்பெயினில் இருந்து பிரிந்த ஒரு தனி அரசாக இருக்க வேண்டும் என்ற கருத்து, அங்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் வென்ற பின்னர், அங்கு மக்களுக்கு எதிராக மட்ரிட் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூரமான அடக்குமுறைகளுக்கு ஸ்பெயின் ஒற்றை ஆட்சியைப் பாதுகாத்தல் என்ற பெயரில் ஒத்துழைப்பு கொடுக்கும் பொடெமோஸ் அமைப்பும், இந்த-போலி இடதுகளால் புகழப்படும் அத்தகைய இன்னொரு அமைப்பாகும்.
முன்னிலை சோசலிச கட்சியும் சில காலத்துக்கு முன்னர், இலங்கைக்கும் சிரிசா மற்றும் பொடெமோஸ் போன்ற அமைப்புகள் அவசியம் எனக் கூறியது. மாணவர்-மக்கள் அணிதிரள்வானது, இலங்கையிலும் சிரிசா மாதிரியை உருவாக்க முன்னிலை சோசலிசக் கட்சி மேற்கொண்ட ஒரு முயற்சியே ஆகும்.
இந்த முதலாளித்துவ கூட்டணிகள் மற்றும் எதிர்ப்பு அரசியலுக்கு எதிராக, சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் தமது வேலைத் திட்டங்களை பின்வறுமாறு தெளிவுபடுத்தின:
“சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் சர்வதேச சோசலிசத்தின் பாகமாக, இலங்கையில் சோசலிச வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும், அதாவது வெளிநாட்டு கடன் செலுத்தலை இரத்துச் செய்யும், பெரும் தோட்டக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள்மயப்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு மாணவர்கள் போராட வேண்டும் என சுட்டிக் காட்டுவது, இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வு அது மட்டுமே என்பதாலேயே ஆகும். அது சர்வதேச சோலிசத்துக்காக நடத்தும் போராட்டத்தின் பாகமாகும்.
“முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கிவீசி, பொருளாதாரத்தை சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்யக் கூடிய ஒரே புரட்சிகர சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும். தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி, அதை இந்த புரட்சிகர பணிக்காக அணிதிரட்டும் போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அணிதிரள வேண்டும். கல்வி உரிமை வெட்டு, முதலாளித்துவ அரசாங்கம் தொழிலாளர்களதும் வறியவர்களதும் உரிமைகளைச் சிதைப்பதற்காக கட்டவிழ்த்து விடும் தாக்குதலின் ஒரு பாகமாகும். தொழிலாள வர்க்கம் அதற்கு எதிரான போராட்டத்திற்காக மாணவர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்து தலைமைத்துவத்தை எடுக்க வேண்டும்.”
அ.ப.மா.ஒ. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியும் செய்துள்ள இந்த காட்டிக் கொடுப்பில், அவர்கள் தூக்கிப்பிடிக்கும் எதிர்ப்பு அரசியலின் முழு வங்குரோத்தும் போலி இடதுகளின் முதலாளித்துவ சார்பு பண்பே மிகவும் அடைப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் மேலே முன்வைத்துள்ள வேலை திட்டத்தின் அடிப்படையில் போராடாமல், கல்வி உரிமையை பாதுகாத்துக்கொள்ள முடியாது என்பது இந்த காட்டிக் கொடுப்பின் மிகவும் அடிப்படையான படிப்பினை ஆகும். இந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போராடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உடன் சேருமாறு கல்வி உரிமையைப் பாதுகாக்கும் போராட்டத்தால் ஈர்க்கப்படும் அனைவரிடமும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.