Print Version|Feedback
ජවිපෙ වතු කම්කරුවන් ගැන කිඹුල් කඳුලු හෙලයි
இலங்கை: ஜே.வி.பி. தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றது
By M. Thevarajah
19 November 2017
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமாக முதலைக் கண்ணீர் வடிப்பதன் பின்னணியில் இருப்பது, வாழ்க்கை நிலைமகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக அவர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளும் சந்தர்ப்பவாத கபடத்தனமான குறிக்கோளே ஆகும்.
ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டிலான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தினால் (அ.இ.தோ.தொ.ச.) அண்மையில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான வேலை மற்றும் சமூக நிலைமகள் பற்றி முதலைக் கண்ணீர் வடித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் கண்களில் மண் தூவும் இலக்குடன் அவர்களது தீர்க்கப்படாத பிரச்சினைகள் பற்றி அவர்களே பேசும் மொழி நடையில் எழுதப்பட்டுள்ள அந்த துண்டுப் பிரசுரத்தில் கூறப்படுவதாவது: “மூன்று பரம்பரையாக இருந்து வரும் எமது பிரச்சினைகள் கிளை பரப்பி வளர்ந்துள்ளதே தவிர, எதுவுமே தீர்க்கப்படவில்லை. அந்த பிரச்சினைகளுடன் வாழத் தள்ளியுள்ள ஆட்சியாளர்கள், எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாறாக அன்றாடம் எம்மை ஏமாற்றியே வந்துள்ளனர். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக பழைய தொழில், பழைய வீடுகள் மற்றும் பழைய சூழலுடன் கூடிய பழைய வாழ்க்கைக்கு மாறாக புதிய வாழ்க்கை ஒன்று அவசியம். புதிய வாழ்க்கை ஒன்று வேண்டுமெனில் போராட வேண்டும்.”
ஜே.வி.பி. மற்றும் அ.இ.தோ.தொ.சங்கத்தின் இந்த அறிக்கை முற்றிலும் வஞ்சத்தனமானதாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) உட்பட ஏனயை தோட்டத் தொழிற்சங்கங்களுடன் வேலைகளை பங்குப் போட்டுக்கொண்டு, முதலாளித்துவ அரசாங்கத்தினதும் தோட்டக் கம்பனிகளதும் தாக்குதல்களுக்கு தோட்டத் தொழிலாளர்களை அடிபணியச் செய்வதற்கு செயற்பட்டு வருகின்றது.
குறைந்த சம்பளம் மற்றும் கடினமான வேலை நிலைமைகளுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் வெடித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அ.இ.தோ.தொ.சங்கமானது ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து அந்த போராட்டங்களை கரைத்து விடுவதையே செய்துவந்துள்ளது. அநியாயமாக வேலை பழுவை அதிகரிப்பதற்கும் தம்மை குத்தகை விவசாயிகளாக மாற்றும் வருமானப் பங்கீடு என்ற புதிய முறைக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த போராட்டங்களை காட்டிக் கொடுப்பதற்காக, ஏனைய தொழிற்சங்களுடன் சேர்ந்து அ.இ.தோ.தொ.ச. ஆற்றிய பாத்திரம், அது பற்றிய அண்மைய உதாரணம் ஆகும்.
இந்த போராட்டங்கள் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு வெளியில் தொழிலாளர்களின் சுயாதீன சம்பவங்களாகவே வெடித்தன. அ.இ.தோ.தொ.ச. ஏனைய சங்கங்களுடன் சேர்ந்து அந்த போராட்டங்களை தனிமைப்படுத்திக் காட்டிக் கொடுத்தது. வேலைப் பழுவை அதிகரிப்பது மற்றும் புதிய சம்பள முறையை நடைமுறைப்படுத்தும் நிபந்தனைகளுடன், கூட்டு ஒப்பந்தம் என கூறப்படுவதில் இ.தொ.கா., NUW, LJEWU, ம.ம.மு. ஆகிய தொழிற்சங்கங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைச்சாத்திட்டன. தோட்டக் கம்பனிகளுடன் கைச்சாத்திட்ட அந்த உடன்படிக்கை மூலம், தோட்டத் தொழிலாளர்களை கம்பனிகளின் திட்டங்களுக்கு அடிபணியச் செய்தனர். அ.இ.தோ.தொ.ச. வழமை போல் ஒப்பந்தத்தை தாம் எதிர்ப்பதாக போலியாக காட்டிக்கொண்டது.
அ.இ.தோ.தொ.ச. உட்பட தோட்டத் தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பில் பலம்பெற்ற கம்பனிகளால் கொழுந்து பறிக்கும் அன்றாட இலக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு வருமானத்தைப் பங்கிடும் புதிய சம்பள முறை இப்போது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, சம்பள வெட்டு மற்றும் வருமானத்தை பங்கிடும் குத்தகை விவசாய முறை பற்றியும், அதே போல் மாதச் சம்பளம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஏனைய வசதிகள் பற்றியும் ஜே.வி.பி. மற்றும் அ.இ.தோ.தொ.ச. விடுக்கும் அறிக்கைகள் மோசடியானவையாகும்.
இலங்கை, கென்யா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உட்பட தேயிலை உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளுக்கு இடையில், உலகச் சந்தையில் போட்டியை தீவிரமாக்கி, தேயிலைக் கம்பனிகளின் இலாபம் மற்றும் அரசாங்கத்தின் அந்நிய செலாவணி வருமானம் வீழ்ச்சியடைந்து வரும் நிலைமையின் கீழேயே, புதிய சம்பள முறை மூலம் உற்பத்தித் திறனை உயர்த்தும் திட்டத்தை அரசாங்கமும் தோட்டக் கம்பனிகளும் நடைமுறைப்படுத்துகின்றன. உழைப்பை சுரண்டுவதை உக்கிரமாக்கி உற்பத்திச் செலவை குறைப்பதன் மூலம், நட்டத்தை தொழிலாளர்களின் செலவில் தீர்த்துக் கொள்வதே அரசாங்கத்தினதும் தோட்டக் கம்பனிகளதும் பிரதான குறிக்கோளாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச்சஸ் காணித் துண்டை கொடுப்பதன் மூலம், அரசாங்கமும் கம்பனிகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கி வந்த அற்ப சமூக நலன்புரி சேவைகளையும் கூட வெட்டித் தள்ளுவதற்கு தீர்மானித்துள்ளன. தோட்ட வீடுகளில் இருந்து தொழிலாளர்களை அகற்றும் மற்றும் அவர்களுக்கு இப்போது வழங்கப்படும் பற்றாக்குறையான சுகாதார மற்றும் கல்வி வசதிகள் கூட வெட்டப்பட வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக தோட்டக் கம்பனிகளால் சுட்டிக் காட்டப்பட்டு வருகின்றது. அக்டோபர் மாத முதல் கிழமையில் நடந்த, இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் 163வது ஆண்டு கூட்டத்தில், சங்கத்தின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட இந்த அவசியத்தை வலியுறுத்தினார்.
“எமக்கு புதிய பெருந்தோட்ட சமூகம் அவசியப்படுகின்றது. தோட்டங்களில் 200,000 தொழிலாளர்கள் மற்றும் வீடு மற்றும் சுகாதார வசதிகள், கல்வி மற்றும் போசாக்குப் பெறும் பத்து இலட்சம் அளவிலான அவர்களது குடும்பங்கள் வாழ்கின்றன. நான் நினைப்பது போல்… எமது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சுதந்திரம் கொடுப்பதில் நாம் தோல்விகண்டுள்ளோம்,” என அவர் அங்கு குறிப்பிட்டார்.
பெத்தியாகொட கூறும் “சுதந்திரம்”, தோட்டத் தொழிலாளர்களுக்காக கம்பனிகளால் செய்யப்படும் அனைத்து செலவுகளையும் வெட்டித் தள்ளுவதையும் அவர்களுக்கு தொழில் வழங்கும் பொறுப்பில் இருந்து விடுதலை பெற்று, திறந்த சந்தைக்குள்ளான போட்டியில் அவர்களை இழுத்துப் போடுவதையும், இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை தோட்டங்களில் இருந்து வெளியேற்றுவதையும் முன்னெடுக்கும் திட்டமாகும். அத்துடன் அவர்கள் ஒழுங்கமைந்து தனித் தொழிலாளர் படையாக இருப்பதை கலைத்து, சிதறடிக்கப்படுவர்.
மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு தற்போதைய அரசாங்கத்தால் காணி உரிமையுடன் 7 பேர்ச்சஸ் காணித்துண்டும் வீடும் பெற்றுக்கொடுக்கும் மோசடியின் கீழ் இப்போது அமுல்படுத்தப்படும் வேலைத் திட்டம் இதன் ஒரு பாகமே ஆகும்.
தோட்டத் தொழிற்சங்கங்களின் முழு ஒத்துழைப்புடனேயே அரசாங்கமும் தோட்டக் கம்பனிகளும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. “காணி உரித்துடனான நில உரிமையுடன் அணி திரளுமாறு” அழைக்கும் அ.இ.தோ.தொ.சங்கமும் இதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. அ.இ.தோ.தொ.ச. அறிக்கையின் முடிவில், “எமக்கும் சுதந்திரமாக வேலை செய்ய, சுதந்திரமாக வாழ்வதற்கு, சிறந்த வசதிகளுடன் வாழ்வதற்கான அவசியம் இருக்கின்றது. அதனால் நாம் அ.இ.தோ.தொ.சங்கத்தில் இணைவோம்,” என பிரேரித்துள்ளது.
ஜே.வி.பி. மற்றும் அ.இ.தோ.தொ.சங்கத்தின் இந்த ஏமாற்று கதைகளில் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாறக் கூடாது. ஜே.வி.பி. என்றும் தோட்டத் தொழிலாளர்களின் மற்றும் பொதுவில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முன்நின்ற அமைப்பு அல்ல. அத்துடன் தோட்டத் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடினமான வேலை மற்றும் சமூக நிலைமைகளுக்கு ஜே.வி.பி. யும் அரசியல் ரீதியில் பொறுப்புச் சொல்ல வேண்டும். தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக சிங்களப் பேரினவாதத்தை அடிப்படையாக் கொண்ட, சந்தர்ப்பவாத குட்டி முதலாளித்துவ அமைப்பாகவே ஜே.வி.பி. தோற்றம் பெற்றது.
ஜே.வி.பி. அதன் ஆரம்ப காலத்தில் நடத்தி வந்த 5 வகுப்புகள் என்றழைக்கப்பட்ட விரிவுரைகளில், நகர்ப்புற தொழிலாளர்களின் போராட்டங்களை “கஞ்சிக் கோப்பை போராட்டங்கள்” என கூறியதோடு, இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களை “இந்திய விஸ்தரிப்பு வாதம் மற்றும் இந்திய கலாச்சார ஆக்கிரமிப்பின்” ஏஜன்டுகள் என தாக்குதல் தொடுத்து, “தேசப் பற்றின்” பெயரில், கிராமப்புற விவசாயிகள் மத்தியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான இனவாத இயக்கம் ஒன்றை கிளறிவிடுவதற்கு முயற்சித்தது.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ், பிரித்தானிய தோட்ட உரிமையாளர்களால் அடிமை உழைப்பில் ஈடுபடுத்துவதற்காக இந்திய வறியவர்கள் இந்த நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்பதை மூடி மறைத்து, பல்வேறு புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக இலங்கையில் சிங்களத் தொழிலாளர்களை விட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் எல்லா வகையிலும் அதிக வசதிகளை அனுபவிப்பவர்கள் என சித்தரிப்பதற்கு ஜே.வி.பி. இழிவான முயற்சியில் ஈடுபட்டது.
1927ல் பதினாறாயிரம் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை, 1930களில் 735,000 வரை அதிகரித்ததாகவும் அரிசி பாவனையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களையும் விஞ்சி, தோட்டத்தொழிலாளர்களின் அரிசி பாவனை நூற்றுக்கு 78 வீதம் வரையான உயர்ந்த மட்டத்தில் இருந்ததாக ஜே.வி.பி. புள்ளிவிபரங்களில் காட்டியிருந்தது.
ஆறு நாள் வேலை வாரம், இலவச வீடு, வாராவாரம் அரசி கடனுக்கு வாங்கும் வசதி, குழந்தைகளுக்கு ஒரு வருடம் வரை இலவச பால், இலவச சுகாதாரசேவை, ஆஸ்பத்திரிக்கு போக இலவச போக்குவரத்து வசதியும் கூட அவர்களுக்கு உள்ளதாக மிகைப்படுத்திக் காட்டி, ஜே.வி.பி. தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இனவாத பிரச்சாரத்தை மேலும் மேலும் முன்னணிக்கு கொண்டு வந்தது.
தோட்ட நிர்வாகிகளால் தொழிலாளர்களுக்கு இந்த மட்டுப்படுத்தப்பட்ட அற்ப வசதிகள் வழங்கப்பட்டது, தீவிரமான உழைப்புச் சுரண்டலுக்கான நிலைமைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கே அன்றி, அவர்கள் மீதான விசேட அனுதாபத்தினால் அல்ல.
1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக, தேசப்பற்று வலதுசாரி இயக்கம் என்ற பெயரில், நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் அவரகளது அமைப்புகளுக்கு எதிராக ஜே.வி.பி. முன்னெடுத்த பயங்கரவாத இயக்கத்துக்கு சமாந்தரமாக, தோட்டப் புறங்களில் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு தீ மூட்டி, ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் ஜீவனோபாயம் சீரழிக்கப்பட்டது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்கும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை கொடூரமாக நசுக்கி, சிங்கள மேலாதிக்க ஒற்றை ஆட்சியின் அதிகாரத்தை தீவின் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் மீண்டும் ஸ்தாபிக்கும் திட்டங்களின் ஒரு பாகமாகவே இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில் நுட்பட உடன்படிக்கைக்கு (ETCA) எதிரான பிரச்சாரத்தில், ஜே.வி.பி.யின் இந்திய மற்றும் இந்திய தொழிலாள விரோதம் மீண்டும் தலை நீட்டியது. எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட்டால், குறைந்த சம்பளம் பெறும் இந்திய தொழிலாளர்கள் இலங்கைக்கு பெருக்கெடுப்பதன் மூலம், இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் போகும் என, இலங்கை தொழிலாளர்கள் மத்தியில் இந்தியத்தொழிலாளர் விரோதத்தை கிளறி விடுவதற்கு சலுகை பெற்ற தொழில் வல்லுனர்கள் மற்றும் தீவிரவாத சக்திகளுடன் ஜே.வி.பி. அணிதிரண்டது.
மேலும் மேலும் வலது பக்கம் சென்று, முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்துடன் ஓட்டிக்கொண்ட கட்சியாக மாறியுள்ள ஜே.வி.பி., தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் முதலாளித்துவ அரசின் மற்றும் ஏகாதிபத்திய மூலதனத்தின் அரசியல் கருவியாகும்.
தோட்டத் தொழிலாளர்களின் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் துன்பங்களுக்காக முன் நிற்பதாக காட்டிக்கொண்டு, ஜே.வி.பி. மற்றும் அதன் தொழிற்சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் பின்னணியில் இருப்பது, மைத்திரிபால சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் வெகுஜன எதிர்ப்பினை தனது அரசியல் இலாபத்துக்காக சுரண்டிக்கொள்ளும் மற்றும் அவர்களது போராட்டங்களை அரசியல் ரீதியில் தடம்புரளச் செய்து முதலாளித்துவ அரசை பாதுகாக்கும் முயற்சியே ஆகும்.
முதலாளித்துவ அரசாங்கத்தின் மற்றும் தோட்டக் கம்பனிகளின் தாக்குதல்களுக்கு எதிராக, நகர்ப்புற தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கி வீசுகின்ற போராட்டத்தின் மூலம் மட்டுமே தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த சமூக சேவை நிலைமைகளை வெற்றிகொள்ள முடியும்.