ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ජීවන කොන්දේසි තලා දමමින් ආන්ඩුව අත්‍යවශ්‍ය භාන්ඩ මිල ඉහල දමයි

இலங்கை அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரித்து வாழ்க்கை நிலைமையை நசுக்குகின்றது

By Kapila Fernando 
10 October 2017

இலங்கை அரசாங்கம் சமையல் எரிவாயு கூட்டுத்தாபனத்துக்கு 12.5 கிலோ எரிவாயு சிலின்டரை 110 ரூபாவால் அதிகரிப்பதற்கு செப்டெம்பர் 25ல் அனுமதியளித்தது. இந்த விலை அதிகரிப்பானது எரிவாயு பயன்படுத்தும் குடும்பங்களின் செலவை அதிகரிக்கச் செய்ததோடு பேக்கரி உற்பத்தி மற்றும் ஹோட்டல்களில் விற்கும் உணவுகளினதும் விலைகளை நூற்றுக்கு 20 வீதம் அதிகரிக்கச் செய்ததன் மூலம், தொழிலாளர்களதும் வறியவர்களதும் வாழ்க்கை நிலைமை மேலும் நசுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம், தொழிலாளர்களதும் வறியவர்களதும் வாழ்க்கை நிலைமையை வெட்டிச் சரிப்பதற்காக, கடந்த இரண்டு மாதங்களாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலையை அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாத கடைசியில் அரசாங்கம் இலங்கையில் பிரதான உணவான அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்கியது. அத்துடன் அரிசியின் விலை நூற்றுக்கு ஐந்து வீதத்தில் இருந்து நூற்றுக்கு 12 வீதம் வரை அதிகரித்திருந்தது. செப்டெம்பர் 25 அன்று ஜனாதிபதி சிறிசேனவின் கட்டளையின் பேரில், பெரிய வெங்காய இறக்குமதி மீது விசேட வரி விதிக்கப்பட்டது. இது இலங்கையில் வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கு என சாக்குப்போக்கு கூறப்பட்டது. நாடு பூராவும் தேங்காயின் விலை 75 ரூபா முதல் 100 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இலங்கை-இந்திய எண்ணெய் கம்பனி விரைவில் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக இப்போது அறிவித்துள்ளது. அரசாங்கம் திணித்துள்ள அதிக வரியின் காரணமாக, பெற்றோல் ஒரு லீட்டர் 17 ரூபாவாலும் டீசல் ஒரு லீட்டர் 14 ரூபாவாலும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கம்பனி அறிவித்துள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனமும் அதன் படி விலை அதிகரிப்பைச் செய்வதற்கு திட்டமிடுகின்றது. நூற்றுக்கு 20 வீத விற்பனை வரியில் அகப்பட்டுள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பைச் செய்யாவிட்டால் நட்டம் ஏற்படும் என, லாஃப் எரிபொருள் நிறுவனமும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

இடைவிடாது மேற்கொள்ளப்படும் விலை அதிகரிப்பு காரணமாக பணவீக்கம் அதிகரித்துச் செல்கின்றது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின் படி, ஜூலை மாதம் 6.3 வீதமாக இருந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 7.2 வீதம் வரை அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இருந்த நூற்றுக்கு 4 வீதத்தை விட நூற்றுக்கு 2 வீதமளவான அதிகரிப்பாகும். ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை வீக்கம் பரவலாக அதிகரித்திருந்தது.

வாழ்க்கை நிலைமைகள் உக்கிரமடைந்து வருவதை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வருகின்ற நிலைமையின் கீழ், தாம் சலுகை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறும் பாசாங்கில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஐந்து இலட்சம் மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதாகவும், சதொச விற்பனை நிலையத்தில் அரிசியை குறைந்த விலையில் பெற முடியும் என்றும், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஒரு கிலோவை 65 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என்றும் செப்டெம்பர் 25 அன்று ஜனாதிபதி செயலகத்தில் விலைவாசி பற்றி நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தை அதன் பொறுப்பில் இருந்து விடுவிப்பதற்காக சிறிசேன அங்கு மொத்த விற்பனையாளர்கள் அதிக இலாபத்தை எதிர்பார்த்து விலைவாசியை கூட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். எவ்வாறெனினும் சாதாரண சந்தைகளை விட கொஞ்சமேனும் குறைந்த விலையில் சதொச வில் கிடைப்பது, தரத்தில் குறைந்த இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி மற்றும் நெத்தலி போன்ற ஒரு சில உணவுப் பொருட்களே.

விலைவாசி அதிகரிப்பிற்கு இலங்கையில் கடந்த நாட்களில் தாக்கத்தை ஏற்படுத்திய வறட்சி மற்றும் வெள்ளமே காரணம் எனக் காட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. வெள்ளம் மற்றும் வறட்சி பண்டப் பற்றாக்குறைக்கும் விலை அதிகரிப்பிற்கும் ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு காரணம் மட்டுமே. கடந்த 27ம் திகதி மத்திய வங்கி விடுத்த ஊடக அறிக்கையில், “வரி சூத்திரத்தின்படி மேற்கொள்ளப்பட்ட ஒப்பீடுகளுக்கு மேலாக, காலநிலை மாற்றங்களின் காரணமாக திட்டமிடலில் ஏற்பட்ட நெருக்கடிகள் மற்றும் சர்வதேச பண்டங்களின் விலை அதிகரிப்பு” 2017ம் ஆண்டில் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணமாகியது என குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி ரூபாயின் மதிப்பு விற்பனைச் சந்தையில் தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டமை நிரந்தரமாக பண்ட விலைகள் அதிகரிப்பதற்கான காரணியாக இருந்துள்ளது.

பண்ட விலைகள் சந்தைகளில் தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படுவது, அரசாங்கத்தின் கொள்கையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10 அன்று எகோனமி நெக்ஸ்ட் வலைத் தளத்திற்கு இராஜாங்க நிதி அமைச்சர் பின்வருமாறு கூறினார். “சந்தை சுதந்திரமாக செயற்படுவதே தாராண்மை மயப்படுத்தல் சிந்தனையின் ஒரு பகுதியாகும். அது பொறுப்புடன் இயங்குவது எமக்கு அவசியமாகும்.” குறிப்பிட்ட தொகைக்கு மேல் விலை அதிகரிக்கப்பட முடியாத பொருட்கள் 17 இருப்பதாக கூறிய அவர், “அதுவும் முறையாக அகற்றப்படுவதை நீங்கள் காணமுடியும். அதையும் நாங்கள் அகற்றுவோம்,” என விக்ரமரட்ன கூறினார். விலை அதிகரிப்பு மற்றும் அதிகரிக்கச் செய்வதானது அரசாங்கம் வேண்டுமென்ற நடைமுறைப்படுத்தும் கொள்கையினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

1970களில் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கத்தின் தேசியவாத முதலாளித்துவ கொள்கை வீழ்ச்சியடைந்து வந்த நிலைமையின் கீழ், நிதி மூலதனத்தின் தேவையின் படி, ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம், திறந்த பொருளாதார கொள்கையை தொடங்கியது. 2008ல் நிதி பொறிவின் மூலம் சமிக்ஞை செய்யப்பட்டுள்ள முதலாளித்துவ நெருக்கடியின் புதிய காலகட்டத்துக்குள் இந்த தாக்குதல் புதிய மட்டத்தில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அரசாங்கம் அன்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய புதிய வரிச் சட்டம் உட்பட சிக்கன நடவடிக்கைகளை பாராட்டி, ஜாவூ லீ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று, செப்டெம்பர் 29 அன்று கொழும்பில் ஊடக மாநாட்டை நடத்தி, கடன் மதிப்பீடு பற்றிய மூடி நிறுவனம் முன்வைத்த புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உக்கிரமடைந்து வரும் கடன் நெருக்கடியின் மத்தியில் இன்னும் அதிக சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும், என தெரிவித்தது. இந்த தரவுகளின் படி இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணை, 2019ல் நான்கு பில்லியன் டாலராக இருப்பதோடு, 2019 முதல் 2022 வரை அது 13.8 பில்லியனாக அதிகரிக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, “கடன் முகாமைப்படுத்தல் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையுடனான எரிசக்தி விலைக் கட்டுப்பாட்டை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினதும் இலங்கை மின்சார சபையினதும் நஷ்டத்தை குறைப்பதற்கு, விலை அதிகரிப்பு பற்றி ஜாவு லீ அங்கு நேரடியாக சுட்டிக் காட்டியதுடன், தனியார் துறை முன்னிலை வகிக்கும் பொருளாதார வளர்ச்சி பற்றிய ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதாக மேலும் தெரிவித்தார்.

இதன் அர்த்தம், விரைவில் எண்ணெய் மற்றும் எரி பொருள் விலை அதிகரிக்க உள்ளது என்றும் “நட்டத்தில் இயங்குகின்றது” என்ற போலிக் காரணங்களைக் கூறிக்கொண்டு இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீர்வழங்கல் சபை, துறைமுகம் போன்ற அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தி, விலையை அதிகரித்து அந்த நிறுவனங்களில் ஊழியர்களை வெட்டிக் குறைப்பதுமே திட்டம் ஆகும்.

இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியம் எல்லா நாடுகளிலும் அமுல்படுத்தியுள்ள திட்டமாகும். நிதி மூலதனத்தின் தலைமை நிறுவனமான சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையானது இராட்சத வங்கிகள், நிதி நிறுனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் தமது இலாபத்தை குவித்துக்கொள்வதற்காக தொழிலாள வர்க்கத்தின் அனைத்து சமூக உரிமைகளையும் அழிக்க வேண்டும் என்பதாகும். இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த, தற்போதைய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் இதே கொடூரமான சிக்கன கொள்கைகளையே நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதிகரித்துவரும் விலை அதிகரிப்பு சம்பந்தமாக சிலாபத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியை உலக சோசலிச வலைத் தளத்திடம் பின்வருமாறு கூறினார். “கடந்த மாதம் 20ம் திகதி எடுத்த சம்பளம், கடையில் கடனைச் செலுத்திய பின்னர் நேற்று செப்டெம்பர் 30 ஆகும் போது முடிந்துவிட்டது. நாம் இப்போது சோறு சமைக்கவும் கொஞ்சம் தண்ணீர் சுட வைக்க மட்டுமே எரிவாயுவை இப்போது பயன்படுத்துகின்றோம். காலையில் எனக்கும் கணவருக்கும் வேலைக்குச் செல்வதற்கு ஏனைய கறி வகைகளை விறகு அடுப்பிலேயே சமைத்துக்கொள்கிறோம். அது அந்தளவுக்கு இலகுவானதல்ல. இந்த நிலைமையின் கீழ் எண்ணெய் விலையும் மின்சாரக் கட்டணமும் அதிகரித்தால் நாம் மேலும் கஷ்டத்தில் விழுவோம்.”

கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் தனது வாழ்க்கைப் போராட்டத்தை பற்றி கூறியதாவது: “மாஹாபொலவில் (புலமைப்பரிசில் நிதி) கிடைக்கும் தொகையை தங்குமிடத்துக்கு கொடுத்துவிடுவேன். மிச்சப் பணத்தை தேடுவதற்கு, பாதுகாப்பு உத்தியோகத்தர் தொழிலையும் செய்கின்றேன். அங்கு வேலை செய்துவிட்டு வந்து பகல் நேரத்தில் விரிவுரைகளுக்கு சமூகமளிப்பேன். விலை அதிகரிப்புடன் சேர்த்து, தங்குமிட கட்டணம் உட்பட அனைத்துமே எதிர்காலத்தில் அதிகரிக்கும் போல இருக்கின்றது. இப்போது ஏற்படும் நிலையில் பகல் நேரத்திலும் பகுதி நேர தொழில் செய்ய வேண்டிய நிலை வரலாம்.”

எமது நிருபருடன் பேசிய மொரட்டுவைப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியரான சந்திரானி, “அரசி, தேங்காய், வெங்காயம் போன்ற அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களது விலை அதிகரிப்புடன் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது, எரிவாயு விலை அதிகரித்தால், சாப்பாட்டு பொதி தொடக்கம் அனைத்தினதும் விலை அதிகரிப்பு ஏற்படும்” எனத் தெரிவித்தார். “அனைத்துப் பொருட்களதும் விலை ஒரே விதத்தில் அதிகரித்துள்ளது. எனக்கு ஒரு பிள்ளைதான் உள்ளது. அவளின் வகுப்புச் செலவுமட்டும் மாதம் 8,000. எனது பெற்றோர்களைப் பராமரிப்பதும் நான்தான். பிள்ளைகளதும் முதியவர்களதும் மருந்து பொருட்கள் முந்தைய விலைக்கு கிடைப்பதில்லை. நான் வீடு கட்டுவதற்கும் பல்வேறு தேவைகளுக்காகவும் எடுத்த கடனுக்காக செலுத்தும் தவணைகளின் மொத்தம் ரூபாய் 25,000 ஆகின்றது. அது எனது ஊதியத்தில் பாதிக்கும் அதிகம்,” என அவர் மேலும் கூறினார்.

சுதந்திர வர்த்தக வலயத்தின் நெஸ்ட் தொழிற்சாலையின் ஊழியரான தினேஷ், தான் மேலதிக வேலை செய்து மாதம் பெறும் 60,000 ரூபா வருமானம் வங்கி கடன், குடும்பச் செலவு, சாப்பாடு மற்றும் தங்குமிட கட்டணம் போன்றவற்றுக்கு போதவில்லை எனக் கூறினார். எந்தவொரு பாராளுமான்ற கட்சி மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என அவர் தெரிவித்தார்.

ஹட்டன் ஸ்றதன் தோட்டத்தின் தொழிலாளியான மாணிக்கராஜ் இதற்கு சமாந்தரமான கருத்தை கூறினார். “எங்கள் வாழ்க்கை நிலைமையை தூக்கி நிறுத்தவே நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தோம். ஆனால் இன்று நாங்கள் மிகவும் மோசமான நிலைமையை எதிர்கொள்கின்றோம். நான் கூட்டுறவிலும் ஏனைய இடங்களிலும் பல கடன்களைப் பெற்றேன். நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்தால் நாம் எப்படி வாழ்க்கை நடத்துவது?

“எமது வேலை நிலைமைகள் மேலும் மேலும் மோசமடைந்து வருகின்றது. ஒரு நாளுக்கு 19 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால், 140 ரூபா கொடுப்பனவு அகற்றப்படும். 21 நாட்கள் வேலை செய்யாவிட்டால் 60 ரூபா ஊக்குவிப்புத் தொகை கிடைக்காது. மழை காலங்களில் இந்த கொடுப்பனவைப் பெறுவது கடினம் என்பதால், ஒரு நாளுக்கு 500 ரூபா அடிப்படை சம்பளத்தில் மட்டுமே வாழத் தள்ளப்பட்டுள்ளோம்.”