Print Version|Feedback
Sri Lankan SEP and IYSSE commemorate Russian Revolution at Peradeniya University
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSE பேராதனை பல்கலைக்கழகத்தில் ரஷ்ய புரட்சியை நினைவுகூர்ந்தன
By our correspondents
11 November 2017
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், இலங்கையில் மத்திய மாகாண தலைநகர் கண்டியில், பேராதனை பல்கலைக்கழக கலை அரங்கத்தில் ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு பற்றிய ஒரு வெற்றிகரமான பொதுக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தியது.
இந்த நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். பல்கலைக் கழகத்தின் நுண்கலைத் துறையின் ஆதரவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டம், இந்த பல்கலைக்கழகத்தில் ஒரு தசாப்தத்தின் பின்னர் சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. நடத்திய முதல் கூட்டமாகும்.
பல்கலைக்கழக கூட்டத்தில் பங்குபற்றிய ஒரு பகுதியினர்
கூட்டத்திற்கு முன்னர் பல்கலைக்கழகத்திலும் அயல் பகுதிகளிலும் சோ.ச.க. / ஐ.எஸ்.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் அக்டோபர் புரட்சியின் அரசியல் படிப்பினைகள் பற்றிய நீண்ட கலந்துரையாடல்களை நடத்தி பரந்த பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் ரஷ்யப் புரட்சியை ஏன் கற்க வேண்டும் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் அக்டோபர் புரட்சியின் பாதுகாப்புக்காக ஆகிய நூல்களின் சிங்கள மொழி பெயர்ப்பின் பிரதிகள் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் விற்கப்பட்டன.
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் பிற முற்போக்கு இணைய வெளியீடுகள் மீதான தணிக்கைக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு திறந்துள்ள இணையவழி மனுவில் பல மாணவர்கள் கையெழுத்திட்டனர்.
பிரச்சாரகர்கள், போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) தலைமையிலான, பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட ஜனநாயக விரோத அச்சுறுத்தலை எதிர்த்தனர். பிரச்சாரத்தை முன்னெடுக்க தம்மிடம் அனுமதி பெறவேண்டும் என்று மாணவர் சங்கத் தலைவர்கள் கூறினர்.
இந்த கூட்டத்தில் நான்கு அம்சங்கள் உள்ளடங்கியிருந்தன: ரஷ்ய புரட்சி பற்றிய ஒரு விரிவுரை, ஜாரில் இருந்து லெனினுக்கு விவரணத் திரைப்படம் திரையிடல், ரஷ்ய புரட்சியை ஏன் கற்கவேண்டும்? நூலின் சிங்கள பதிப்பு அறிமுகப்படுத்தல், கேள்வி-பதில் நிகழ்வு.
இந்த நிகழ்வின் தலைவரான சோ.ச.க. உறுப்பினர் லொஹான் குணவீர, வாய்ப்பளித்து உதவியமைக்காக நுண்கலைத் துறைக்கு நன்றி தெரிவித்தார். "நாங்கள் இந்த கூட்டத்தை ரஷ்ய புரட்சியை பற்றிய ஒரு ஞாபகார்த்த சடங்கு கொண்டாட்டமாக அல்லாமல், இன்று யுத்தத்திற்கும் சமூக எதிர் புரட்சிக்கும் எதிரான போராட்டத்தில், மனித வரலாற்றில் இந்த அசாதாரண அத்தியாயத்தின் பெரும் மூலோபாய படிப்பினைகளை கிரகித்துக்கொள்வதற்காகவே நடத்துகிறோம்," என அவர் அறிவித்தார்.
பானி விஜேசிறிவர்தன
சோ.ச.க. அரசியல் குழுவின் உறுப்பினர் பானி விஜேசிறிவர்தன விரிவுரையை வழங்கினார். இந்த கூட்டம், 1917 அக்டோபரில் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய 100வது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்படுகின்றது என சுட்டிக்காட்டிய அவர். இந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியானது முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து, வரலாற்றில் முதலாவது தொழிலாள அரசை நிறுவிய, உலக சோசலிசப் புரட்சியின் முதல் படியாகும், என விளக்கினார்.
1917 பெப்ரவரியில், பல நூற்றாண்டுகள் பழமையான ஜாரிச மன்னர் ஆட்சியை புரட்சிகரமாக தூக்கிவீசியதை ஒரு "தேசிய விவகாரமாக" சில வரலாற்றாசிரியர்களும் போலி-இடதுகளும் சித்தரிக்கும் அதேவேளை, அக்டோபர் புரட்சியில் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியமை ஒரு “சர்வதேச நிகழ்வு” என விஜேசிறிவர்தன சுட்டிக்காட்டினார்.
1917 ஏப்ரல் மாதம் லெனின் ரஷ்யாவுக்கு திரும்பிய பின்னர் நடத்திய கடுமையான அரசியல் போராட்டத்தின் முக்கியத்துவத்தை பேச்சாளர் விளக்கினார். போல்ஷிவிக் கட்சியை மறுநோக்குநிலை படுத்திக்கொள்ளவும், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்தைக் கைப்பற்ற தயார் செய்வதுமே லெனின் போராட்டமாக இருந்தது என விஜேசிறிவர்தன தெரிவித்தார்.
சமீபத்தில் டேவிட் நோர்த் உலக சோசலிச வலைத் தளத்துக்கு எழுதிய முன்நோக்கில், அக்டோபர் புரட்சியை உலக சோசலிசப் புரட்சியின் புதிய சகாப்தத்தின் முதல் அத்தியாயம் என விவரித்திருந்ததை விஜேசிறிவர்தன சுட்டிக்காட்டினார். "நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ அமைப்பு முறை மீண்டும் ஒரு பேரழிவு உலக யுத்தத்தை நடத்த அச்சுறுத்துகிறது. அதனாலேயே நாம் இந்த சகாப்தம் இன்னும் முடிவடையவில்லை என்ற நிலைப்பாட்டை நாங்கள் முன் வைத்திருக்கிறோம்," என விஜேசிறிவர்தன தெரிவித்தார்.
ரஷ்ய புரட்சி மீது முதலாளித்துவ ஊடகங்கள், கல்வியியலாளர்கள் மற்றும் போலி இடதுகளும் மேற்கொள்ளும் உலக அளவிலான தாக்குதலைக் குறிப்பிட்ட பேச்சாளர், அக்டோபர் புரட்சியை ஒரு "தோல்வியடைந்த பரிசோதனை" என இலங்கையில் முன்னிலை சோசலிசக் கட்சி சித்தரிப்பதாக குறிப்பிட்டார். இந்த கூற்றுகளுக்கு மாறாக, விஜேசிசிவர்தனே "அக்டோபர் புரட்சியை மனிதகுலத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் நாம் கருதுகிறோம்," என்றார்.
விரிவுரையும் ஜாரில் இருந்து லெனினுக்கு விவரண படம் திரையிடலும் ஒரு உயிரோட்டமான விவாதத்தை தூண்டிவிட்டன.
ஒரு பல்கலைக் கழக விரிவுரையாளர், தொழிலாளர் அரசாங்கம் ரஷ்யாவின் நிலப் பிரச்சினையை எவ்வாறு தீர்த்தது என கேட்டார்.
கூட்டத்தின் பின்னரான கலந்துரையாடல்
போல்ஷிவிக் அரசாங்கத்தின் "விவசாயிகளின் நிலங்களின் ஆணை" என்பதை மேற்கோளிட்டு பதிலளித்த விஜேசிறிவர்தன, செல்வந்த நில உரிமையாளர்களுக்கு எந்தவொரு இழப்பீடும் இல்லாமல் நில உடமை தூக்கிவீசப்பட்டது எவ்வாறு என்பதை விளக்கினார். ஸ்ராலின் மற்றும் சோவியத் அதிகாரத்துவத்தின் தோற்றம், புரட்சியின் சமூக மற்றும் பொருளாதார சாதனைகள் மற்றும் 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை உட்பட ஏனைய விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் பல மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். ரஷ்யப் புரட்சியை ஏன் கற்க வேண்டும் நூலின் பத்துக்கும் மேற்பட்ட பிரதிகளும் ஏனைய பிரசுரங்களும் விற்பனையாகி இருந்தன.
பி. மலியகொட
மூன்றாம் ஆண்டு கலைப்பீட மாணவி பி. மலியகொட தெரிவித்ததாவது: "நான் ரஷ்ய புரட்சியைப் பற்றி ஓரளவிற்கு வாசித்திருக்கிறேன், ஆனால் விரிவுரை மற்றும் திரைப்படத்தையும் பார்த்த பின்பு என் அறிவு விரிவடைந்துள்ளது. ரஷ்ய புரட்சியைப் பற்றி மக்கள் மத்தியில் அதிக அறிவு இல்லை, எனவே நீங்கள் இதைப் போன்ற நடவடிக்கைகளால் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்."
புரட்சியின் படிப்பினைகள் சமகால நிலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன என கூறிய அவர், "மூன்றாம் உலக யுத்தத்திற்கான அச்சுறுத்தல் இருப்பதோடு முதலாளித்துவ அரசாங்கங்கள் மக்களின் ஒவ்வொரு உரிமையையும் நசுக்கி வருகின்றன. இலங்கையில் அரசாங்கம் இலவசக் கல்வி மற்றும் ஏனைய உரிமைகளை அபகரித்து வருகிறது, எனவே மக்களை ஒன்றுபடுத்துவதற்கு தெளிவான திட்டம் தேவைப்படுகிறது" என மேலும் கூறினார்.
பல்கலைக் கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை தடுக்க மாணவர் சங்கம் மேற்கொண்ட முயற்சிகளை கண்டனம் செய்த அவர் தொடர்ந்தார்: "எங்களுக்கு அவர்களுடன் [மாணவர் சங்கம்] பிரச்சினைகள் உள்ளன. அவர்களோடு உடன்படாத மாணவர்களை அவர்கள் தொந்தரவு செய்கின்றனர்." சர்வதேசிய சோசலிச முன்னோக்கைப் பற்றி மேலும் அறிய WSWSஐ தொடர்ந்தும் வாசிப்பதாக மலியகொட தெரிவித்தார்.
தில்ஷான்
இறுதி ஆண்டு கலைப்பீட மாணவரான தில்ஷான்: "ரஷ்ய புரட்சியை பற்றி எனக்குத் தெரியாது, அதனால் நான் என்ன நடந்தது என்பதை அறிய வந்தேன். கூட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, படமும் கூட அப்படித்தான். மக்கள் ஒரு புரட்சியில் எவ்வாறு போராடினார்கள் என்பது பற்றிய ஒரு அறிவைப் பெற்றேன். கூட்டத்தில் விவரிக்கப்பட்டபடி, மூன்றாம் உலகப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கம் அவசியம்."
ஒரு சுவரொட்டியைப் பார்த்த பின்னர், கண்டியில் இருந்து வந்த மின்சார சபை பணிப்பாளர் ஹசான் மதுஷங்க, "போர் மற்றும் சமூக நெருக்கடி அச்சுறுத்தலை ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே எதிர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார். "இந்த நிகழ்வு என் உற்சாகத்தை தூண்டிவிட்டுள்ளது. நான் சில புத்தகங்களை வாங்கினேன், பணம் கிடைக்கும்போது இன்னும் கொஞ்சம் வாங்க எதிர்பார்க்கின்றேன். உங்கள் கட்சி கூட்டங்களை ஏற்பாடு செய்யும் போது எனக்குத் தெரியப்படுத்துங்கள்."
மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்தும் அவர் பேசினார். "சமீபத்திய போராட்டத்திற்குப் பின்னர் மின்சார சபை தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் உண்மையான அர்த்தம் ஒரு கையால் கொடுத்து மறுகையில் பிடுங்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தின் இன்றியமையாத தேவை இன்று எனக்கு புரிகிறது."