Print Version|Feedback
Tensions rise again as North Korea tests missile
வடகொரியாவின் ஏவுகணை சோதிப்பை அடுத்து பதட்டங்கள் மீண்டும் அதிகரிக்கின்றன
By Peter Symonds
29 November 2017
வட கொரியா இன்று நெடுந்தூரம் சென்று தாக்கும் ஏவுகணை ஒன்றை சோதித்தது, அது அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசி உள்ளிட அமெரிக்காவின் அநேக பகுதிகளில் தாக்கும் சாத்தியம் கொண்ட அளவுக்கான தூரம் பாய இயலும் என்பதாகக் கூறப்படுகிறது. வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை கட்டமைப்புகளை அழிப்பதற்கு இராணுவ வலிமையை பயன்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் விடுத்த மிரட்டல்களால் கொரிய தீபகற்பத்தில் உயர்ந்த அளவில் பதட்டங்கள் தூண்டப்பட்டிருந்ததன் மத்தியில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) உள்ளூர் நேரப்படி அதிகாலை சுமார் 3 மணியளவில், தலைநகர் பியோங்கியாங்கிற்கு வடகிழக்கில் இருக்கும் நகரமான பியோங்ஸோங்கைச் சுற்றிய பகுதியில் இருந்து வட கொரியா ஏவியது. சுமார் 53 நிமிடங்களுக்கு மேல்நோக்கிப் பறந்து, கிட்டத்தட்ட 4,500 கிலோமீட்டர் உயரத்தை எட்டிய இந்த ஏவுகணை, ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹோன்சுவின் வடக்கிலிருந்து 960 கிலோமீட்டர் தூரத்தில் தரையிறங்கியது.
மிக அதிக தூரத்திற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு கோணத்தில் இந்த ICBM ஏவப்பட்டிருந்தால், 12,500 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான தூரத்திற்கு அது பாய்ந்திருக்கும் என மதிப்பிடப்படுகிறது, அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை மற்றும் வாஷிங்டன் டிசியை எட்ட இயலும் தூரத்திற்கு அது இருந்திருக்கும். அவ்வளவு தூரத்திற்கு, ஒரு அணுகுண்டு போன்ற கனமான பொருளை அந்த ஏவுகணை தாங்கிச் செல்ல இயலுமா என்பது தெரியவில்லை.
இதேபோன்று ஜூலையில் சோதனை செய்யப்பட்ட இரண்டு வடகொரிய ICBMகள் முறையே 37 நிமிடங்கள் மற்றும் 47 நிமிடங்கள் உயரத்தில் தொடர்ந்திருந்தன. ஏவுகணையின் என்ஜின் முந்தைய ஹுவாசாங்-14 சோதனைகளில் பயன்படுத்தப்பட்டதைக் காட்டிலும் கணிசமாய் கூடுதல் சக்திவாய்ந்ததாக இல்லை என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்ததாக அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்திநிறுவனத்திடம் தெரிவித்தார்.
வடகொரியா ஏவுகணையில் எதனையும் ஏற்றாமல் செலுத்தியிருந்தது என்று அக்கறைகொண்ட விஞ்ஞானிகள் சங்கத்தை (Union of Concerned Scientists) சேர்ந்த டேவிட் ரைட் ஒரு வலைப் பதிவில் கூறினார். “அது உண்மையாயின், அது ஒரு அணு குண்டினை இவ்வளவு தூரம் தாங்கிச் செல்லும் திறன் கொண்டிருக்காது என்றே அர்த்தமாகும், ஏனென்றால் அத்தகையதொரு அணுகுண்டு மிகக் கனமானதாயிருக்கும்” என்று அவர் எழுதினார்.
புற வெளியில் இருந்து பூமியின் காற்றுமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும் போது உருவாகக் கூடிய தீவிரமான வெப்பம் மற்றும் அழுத்தங்களின் போது ஒரு அணுப் பொருளை பாதுகாக்கும் திறன் கொண்ட ஒரு மறு-நுழைவு வாகனத்தை வட கொரியா உருவாக்கியிருக்கிறதா என்பதிலும் சந்தேகங்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சரான இட்சுனோரி ஒனோடிரா கூறுகையில், ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் தரையிறங்கும் முன்பாக ஏவுகணை நொருங்கியது என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மாட்டிஸ் உடன் அளித்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஒப்பீட்டளவில் சத்தமற்ற ஒரு எதிர்வினையளித்தார். “நாங்கள் அதைப் பார்த்துக் கொள்வோம்” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். “இது நாங்கள் கையாளத்தக்க ஒரு சூழ்நிலை”.
இந்த ஏவுகணை “வெளிப்படையாக, முந்தைய எந்த ஏவல்களை விடவும் மிக உயரத்திற்குச் சென்றது” என்று மாட்டிஸ் அறிவித்தார். அவர் தொடர்ந்தார்: “உலக அமைதிக்கு, பிராந்திய அமைதிக்கு மற்றும் நிச்சயமாக அமெரிக்காவுக்கு அபாயமளிக்கக் கூடிய குண்டுவீச்சு ஏவுகணை அச்சுறுத்தலை ... கட்டியெழுப்புவதற்கான ஒரு தொடர்ச்சியான முயற்சியாக இது இருக்கிறது என்பதே அடிக்கோடிடப்பட வேண்டிய அம்சமாகும்.”
எப்படியிருப்பினும், வட கிழக்கு ஆசியாவில் பதட்டங்களைப் பெருக்குவதற்கான தலைமைப் பொறுப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கே உரியதாகும். ஒபாமாவின் நிர்வாகத்தை அடியொற்றி, ட்ரம்ப்பின் நிர்வாகமும், வட கொரியாவைச் சுற்றிலும் பொருளாதார மற்றும் இராஜதந்திர தடைகளின் கயிற்றை இறுக்கி வந்திருக்கிறது, அத்துடன் பியோங்கியாங் அமெரிக்க கோரிக்கைகளுக்கு முழுமையாக சரணாகதி அடைவது மட்டுமே ஒரு போரைத் தடுத்து நிறுத்தும் என்பதையும் தெளிவாக்கியது.
செப்டம்பர் ஆரம்பத்தில் வட கொரியா அணுப் பரிசோதனையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டை “முற்றிலுமாய் அழித்து விடுவதற்கு” ஐக்கிய நாடுகள் சபையில் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இந்தக் கருத்து, உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவத்தையும் ஆயிரக்கணக்கில் அணு ஆயுதங்களையும் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கும், மிக வரம்புக்குட்பட்ட அணு நுட்பத்தையும் தளவாட அமைப்புகளையும் கொண்டிருக்கின்ற வட கொரியாவுக்கும் இடையில் அமைந்திருக்கக் கூடிய மிகப் பரந்த வேறுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் அமைந்திருக்கிறது.
2017 முழுவதிலும் தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிற கூட்டாளிகளுடன் சேர்ந்து மிகப் பெரும் அளவிலான இராணுவ ஒத்திகைகளின் ஒரு வரிசையை அமெரிக்கா ஆத்திரமூட்டும் வகையில் நடத்தியது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில், அமெரிக்காவின் கடற்படையானது மூன்று விமானந்தாங்கிக் கப்பல்கள், உடன்வந்த நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல்கள், மற்றும் பல்வேறு தென் கொரியக் கப்பல்கள் சகிதமாக ஒரு பயிற்சியில் ஈடுபட்டது.
சனிக்கிழமையன்று தொடங்கவிருக்கும் மிக சமீபத்திய போர் ஒத்திகைகளில் வான் சக்தியின் ஒரு பாரிய காட்சிப்படுத்தலும் இடம்பெறவிருக்கிறது. விஜிலண்ட் ஏஸ் (Vigilant Ace) என்று அறியப்படும் இந்த வான் பயிற்சியில், ஆறு ரப்டோர் கண்கட்டு போர்விமானங்கள் உள்ளிட 230 விமானங்களும், 12,000 அமெரிக்க இராணுவ வீரர்களும் பங்குபெறவுள்ளனர். அமெரிக்க மற்றும் தென் கொரியப் படைகளுக்கு இடையிலான பரஸ்பர செயல்பாட்டுத்தன்மையை மேம்படுத்துவதும் “இரண்டு நாடுகளின் போர்த் திறனை அதிகரிப்பதும்” தான் இதன் நோக்கம் என அமெரிக்க இராணுவம் தெரிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வட கொரியாவுடன் போருக்குத் தயாரிப்பு செய்வது தான் அதன் நோக்கம்.
வட கொரியா இன்று ICBM சோதனையை மேற்கொண்டதை அடுத்து, அமெரிக்க வெளியுறவுச் செயலரான றெக்ஸ் ரில்லர்சன் அறிவித்தார்: “இப்போது வரை இராஜதந்திரத் தீர்வுகள் சாத்தியமானவையாகவும் திறந்த நிலையிலும் இருக்கின்றன. அணுஆயுதமயமாக்கத்தை அகற்றுவதற்கும் வட கொரியாவின் வம்பிழுக்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஒரு அமைதியான பாதையைக் காண்பதற்கு அமெரிக்கா உறுதிபூண்டிருக்கிறது.” வட கொரியாவை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க அமெரிக்காவும் கனடாவும் அடுத்த ஆண்டில் ஒரு சர்வதேச கூட்டத்தைக் கூட்டவிருப்பதாக அவர் அறிவித்தார்.
ஆயினும், நிறுத்துவதற்குப் பதிலாய் நிறுத்துவது —அதாவது, வட கொரியா அதன் அணு சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்துவதற்குப் பிரதிபலனாய் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டுப் போர் ஒத்திகைகளை நிறுத்துவது— என்று சொல்லப்படுகின்ற ஒரு முறையின் மூலம் பேச்சுவார்த்தைகளுக்கான பாதையைத் திறக்குமாறு சீனாவும் ரஷ்யாவும் விடுத்த அழைப்புகளை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியாக நிராகரித்து வந்திருக்கிறது.
மேலும், பேச்சுவார்த்தைகளை தொடக்குவதற்கான எந்த முயற்சியையும் பலவீனப்படுத்துகின்ற கணக்குடனான ஒரு நடவடிக்கையில் சென்ற வாரத்தில் ட்ரம்ப், அமெரிக்க வெளியுறவுத் துறையின் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவை மீண்டும் சேர்த்தார். 2007 இல் கையெழுத்தான ஒரு அணுக்குறைப்பு ஒப்பந்தத்தின் படியான அமெரிக்க உறுதிப்பாடுகளின் பகுதியாக புஷ் நிர்வாகம் பியோங்கியாங்கை 2008 இல் இந்தப் பட்டியலில் இருந்து அகற்றியது. சில மாதங்களுக்குப் பின்னர், கூடுதலாய் மூக்கை நுழைக்கும் சோதனை நடைமுறைகளுக்குக் கோரிக்கை வைத்து இந்த ஒப்பந்தத்திற்கு ஜனாதிபதி புஷ் குழிபறித்தார்.
ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு வட கொரியா கோபத்துடன் எதிர்வினையாற்றியது, அதனை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்த்தது ஒரு “தீவிரமான ஆத்திரமூட்டல் மற்றும் அதன் இறையாண்மை மீதான வன்மையான மீறல்” என்று அது அறிவித்தது. அமெரிக்கா நல்ல நோக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நம்பப்பட முடியாதது என்று பியோங்கியாங் கருதுவதன் இன்னுமொரு சுட்டிக்காட்டலாக இன்றைய ஏவுகணை சோதனை —செப்டம்பருக்குப் பின்னர் எந்த வகையானதிலும் முதலாவது— அமைந்திருக்கிறது.
சமீபத்திய ஏவுகணை சோதனையானது வட கிழக்கு ஆசியாவில் பதட்டங்களை அதிகப்படுத்த மட்டுமே செய்யக் கூடியதாகும். ஆறு நிமிடங்களுக்குப் பின்னர் தென்கொரியா அதன் படை வலிமையை காட்டியது — அதன் இராணுவம், கடற்படை மற்றும் வான் படையில் இருந்து ஏவுகணைகள் ஒரேசமயத்தில் “துல்லியமாய்” சரமாரியாக பொழிகின்ற சோதனையை அது நடத்தியது. அத்தனை ஏவுகணைகளுமே வட கொரிய சோதனைத் தளத்தின் தூரமளவுக்கு இலக்கு வைக்கப்பட்டிருந்தன, ஆயினும் அவை தென் கொரியா மற்றும் ஜப்பான் இடையிலான கடல் பகுதியில் ஏவப்பட்டன.
வட கொரியாவை நோக்கிய அமெரிக்காவின் மூர்க்கமான நிலைப்பாட்டை முழுமையாக ஆதரித்து வந்திருக்கும் ஜப்பானிய பிரதமர் ஸின்ஸோ அபே ட்ரம்ப்பிடம் தொலைபேசியில் பேசினார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார், அது இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக புதன்கிழமை (அமெரிக்க நேரப்படி) ஒரு அவசரகால அமர்வை நடத்தவிருக்கிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் “அதிகப்பட்ச நெருக்குதல்” கொள்கையின் இலக்காக இருப்பது வட கொரியா மட்டுமல்ல, சீனாவும் தான்; ஒரு முழுமையான பொருளாதாரத் தடைக்கு நிகரான ஒன்றை வடகொரியா மீது திணிப்பதற்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளிடம் இருந்து சீனா அழுத்தம் பெற்றுக் கொண்டிருக்கிறது. விளைவு, எந்தவொரு சம்பவமோ அல்லது விபத்தோ ஒரு பேரழிவுகரமான போராய் முடியத் தக்க ஒரு மிக அபாயகரமான சூழல் வந்துசேர்ந்திருக்கிறது.