ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Place of the October Revolution in World History and Contemporary Politics

உலக வரலாற்றிலும், சமகால அரசியலிலும் அக்டோபர் புரட்சியின் இடம்

By David North
13 November 2017

1914 ஆகஸ்டில், போர் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி வாக்களித்ததை, ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் ஆகியோருடன் சேர்ந்து, எதிர்த்திருந்த மாபெரும் சோசலிச வரலாற்றாளரும், பத்திரிகையாளரும், தத்துவவியலாளருமான ஃபிரான்ஸ் மெஹ்ரிங் (Franz Mehring), 1917 ஆம் ஆண்டின் கடைசி நாளில், அதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னர்தான் பெட்ரோக்கிராட்டில் போல்ஷிவிக்குகள் தலைமையிலான கிளர்ச்சி முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்திருந்த நிலையில், பெட்ரோகிராட் நிகழ்வுகளைக் குறித்து மதிப்பீடு செய்தார். போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் ஆழ்ந்த அரசியல் தாக்கங்களை உணர்ந்து கொண்ட மெஹ்ரிங், அதேவேளையில் பெட்ரோக்கிராட்டில் என்ன நடந்ததோ, அதுவொரு நீடித்த மற்றும் சளைக்காத போராட்டத்தின்     தொடக்கமாக மட்டுமே இருக்கும் என்பதை சரியான நேரத்தில் அது நிரூபிக்குமென அழுத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதினார்:

புரட்சிகள் நீண்ட காலத்திற்கு உயிர் வாழும், அவை நிஜமாகவே புரட்சிகளாக இருந்தால்; பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலேய புரட்சி மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டு பிரெஞ்சு புரட்சிக்காக தனித்தனியாக சுமார் நாற்பதாண்டு காலமாவது அதுபற்றி படித்தறியவேண்டியிருந்தது. ரஷ்ய புரட்சி எதிர்கொண்ட மாபெரும் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டால் ஆங்கிலேய புரட்சியும், பிரெஞ்சு புரட்சியும் எதிர்கொண்ட சவால்கள் ஏறக்குறைய மிகச் சுலபமாக இருந்தன. [1]


ஃபிரான்ஸ் மெஹ்ரிங்

உண்மையில், பெட்ரோக்கிராட்டில் ஏறக்குறைய இரத்தமின்றி சாதிக்கப்பட்டிருந்த, அந்த அதிகார கைப்பற்றலுக்குப் பின்னர் உடனடியாக தொடர்ச்சியான அரசியல் நெருக்கடிகள் வந்தன. முதலாவதாக, ஓர் அரசு அமைப்பதன் மீது அங்கே மோதல் நிலவியது. இதை பின்தொடர்ந்து விரைவிலேயே, அரசியலமைப்பு சபையைக் கலைக்க போல்ஷிவிக்குகள் முடிவெடுத்ததும், அது தொடர்பான மோதல் எழுந்தது. பின்னர் ஜேர்மனியர்களுடனான பேச்சுவார்த்தைகள் மீதும் மற்றும் —போல்ஷிவிக் தலைமைக்குள் நிலவிய கடுமையான பிளவுகளுக்கு இடையே— ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகள் கோரிய கண்டிப்பான விட்டுக்கொடுப்புகளை ஏற்பதன் மீதும் மற்றும் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதன் மீதும் முடிவெடுப்பதில் கடுமையான கருத்து முரண்பாடுகள் எழுந்தன. 1918 இளவேனில் கால வாக்கில், சோவியத் ரஷ்யா முழு அளவில் உள்நாட்டு போரால் சூழப்பட்டு வந்தது. ஜூலை மாதம், ஒரு படுகொலை முயற்சியில், சோசலிச புரட்சிக் கட்சி அங்கத்தவர் ஒருவரால் லெனின் இரண்டு முறை சுடப்பட்டு, அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இவ்வாறிருக்கையிலும், மிகவும் அறிவார்ந்த விளக்கங்களையும் கூட அலட்சியப்படுத்தியவாறு, எண்ணற்ற வரலாற்று சொல்லாடல்களில், போல்ஷிவிக்குகள் இரத்தத் தாகமெடுத்த வெறியர்களாக காட்டப்படுகிறார்கள். மறுபுறம், அவர்களின் எதிர்ப்பாளர்களோ, குறிப்பாக மென்ஷிவிக்குகள் மத்தியில் இருந்தவர்கள், சமாதானத்தின் உத்தமர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதற்கும் யதார்த்தத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லை. முதலில் நாம் கிளர்ச்சிக்குப் பிந்தைய நெருக்கடிகளை ஆராய்வோம்.

உலக வரலாற்றிலும், சமகால அரசியலிலும் அக்டோபர் புரட்சியின் இடம்

மென்ஷிவிக் கட்சியும் சோசலிச புரட்சி கட்சியும் ஒன்றாக, போல்ஷிவிக்குகள் அவர்களின் "சாகசத்தை" நிறுத்தி விட்டு, அதிகாரத்தை விட்டுக் கொடுக்க வேண்டுமென கோரின. கிளர்ச்சியை ஒழுங்கமைத்திருந்த புரட்சிகர இராணுவக் குழுவை நிராயுதபாணி ஆக்கவில்லையென்றால் அவர்கள் போல்ஷிவிக்குகளுடன் பேச்சுவார்த்தையில் கூட ஈடுபட போவதில்லை என்றும், (ட்ரொட்ஸ்கி போன்ற) அதன் தலைவர்களின் தலைவிதி அரசியலைப்பு சபையின் எதிர்வரும் அமர்வில் தீர்மானிக்கப்படும் வரையில், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு தற்காலிக உத்தரவாதங்களையே பெற்றிருப்பார்கள் என்றும் அவர்கள் அறிவித்தனர்.[2] அவர்களின் ஆணவம்மிக்க கோரிக்கைகளின் அடிப்படையில் தீர்மானித்தால், உண்மையில் அவர்கள் பெட்ரோகிராட்டில் நிலவிய அதிகார சமநிலையைப் புரிந்து கொண்டிருக்கவில்லை என்று தெரிகிறது.

இரயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தினது (Vikzhel என்றழைக்கப்படும்) வலதுசாரி தலைமையால் ஆதரிக்கப்பட்டிருந்த "மிதவாத" சோசலிச கட்சிகள் எனப்படுவதன் விட்டுக்கொடுக்காததன்மை, போல்ஷிவிக் மத்திய குழுவிற்குள் லேவ் காமனேவ் தலைமையிலான ஒரு குறிப்பிடத்தக்க கன்னையால் ஊக்குவிக்கப்பட்டது, இவர்கள் அரசாங்க அடித்தளத்தை விரிவாக்குவதற்காக பாரிய விட்டுக்கொடுப்புகளை வழங்க தயாராக இருந்தனர். புதிய கூட்டணி அரசாங்கத்தின் தலைமை பதவிகளில் இருந்து லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி நீக்கப்பட வேண்டுமென்ற “மிதவாத" சோசலிசவாதிகளின் மற்றும் நகர டூமா (City Duma) இன் கோரிக்கைக்கு விடையிறுத்து, போல்ஷிவிக் மத்திய குழு, “கட்சி நியமனங்களில் சில பரஸ்பர விட்டுக்கொடுப்புகள் அனுமதிக்கப்படும்,” என்று (புரட்சியின் இரண்டு பிரதான தலைவர்கள் இல்லாத போது) அறிக்கை வெளியிட்டது. [3]


லேவ் காமனேவ்

வரலாற்றாளர் அலெக்சாண்டர் ராபினோவிட்ச் விவரித்தவாறு, லேவ் காமனேவின் ஓர் அறிக்கையில் வெளிப்படையாக வலியுறுத்தப்பட்ட மத்திய குழுவின் நிலைப்பாடானது, “லெனினும் ட்ரொட்ஸ்கியும் தொடமுடியாதளவுக்கு தலையாயவர்கள் கிடையாது, சகல சோசலிச கட்சிகளையும் உள்ளடக்கிய ஓர் அரசாங்கத்தில் போல்ஷிவிக் பெரும்பான்மையே கூட அவசியமானதில்லை என்பதற்கு ஒரு சமிக்ஞையாக இருந்தது.”[4] லெனினும் ட்ரொட்ஸ்கியும் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட வேண்டுமென்ற மென்ஷிவிக்குகளின் கோரிக்கை, சாராம்சத்தில், தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியிலும் ஸ்தூலமாகவும் முடமாக்குவதற்கான ஓர் அழைப்பாக இருந்தது. சொல்லப்போனால், மென்ஷிவிக் கட்சியின் பிரதான தலைவர்களில் ஒருவரான தேடோர் டான், பெட்ரோகிராட் தொழிலாளர்களை நிராயுதபாணியாக்க அழைப்புவிடுத்தார்.

“மிதவாத" சோசலிசவாதிகளின் போல்ஷிவிக்-எதிர்ப்பு ஆவேசத்தால், மார்டோவ் தலைமையிலான மிகவும் இடதுசாரி மென்ஷிவிக்-சர்வதேசவாதிகளின் ஒரு பிரிவுக்கு உதறலெடுத்தது. இந்த கன்னையின் ஒரு பிரதிநிதி, A. A. Blum, வலதுசாரி "மிதவாதிகளிடம்" கேள்வி எழுப்பினார்: “போல்ஷிவிக்குகளின் தோல்வி எதனை அர்த்தப்படுத்துமென ஏதேனும் சிந்தித்தீர்களா? போல்ஷிவிக்குகளின் நடவடிக்கை, தொழிலாளர்களின் மற்றும் சிப்பாய்களின் நடவடிக்கையாகும். அந்த பாட்டாளி வர்க்க கட்சியுடன் சேர்ந்து தொழிலாளர்களும் சிப்பாய்களும் நசுக்கப்படுவார்கள்.”[5]

போல்ஷிவிக் மத்திய குழுவிற்குள் சரணடையும் மனோபாவம் நிலவிய போதினும், பெட்ரோகிராட் தொழிலாளர்களிடையே சோவியத் அதிகாரத்திற்கு பலமான ஆதரவு இருந்தது. லெனின், கிளர்ச்சியை பாதுகாப்பதிலும், ஒரு உண்மையான புரட்சிகர அரசாங்கத்தை நிறுவுவதிலும் உறுதியாக இருந்தார். நவம்பர் 1, 1917 இல் ஒரு வெடிப்பார்ந்த மத்திய குழு கூட்டத்தில், லெனின் காமனேவுக்கு எதிராகவும் கட்சி தலைமையில் இருந்த ஏனைய சரணடைவாளர்களுக்கு எதிராகவும் சீற்றமான வார்த்தை கணைகளைக் கட்டவிழ்த்தார். மாஸ்கோவில் பிடிக்கப்பட்ட சிப்பாய்கள் மீது முதலாளித்துவ ஜூங்கர் இராணுவ அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்த செய்திகளை அவர் மேற்கோளிட்டார், அங்கே முதலாளித்துவ வர்க்கத்தின் படைகள் கடுமையாக புரட்சியை எதிர்த்து வந்தது. தோல்வியடைந்து இரத்தத்தில் மூழ்கிய தொழிலாள வர்க்க எழுச்சிகளின் கதியைச் சுட்டிக்காட்டி, லெனின் குறிப்பிடுகையில், “[ஒருவேளை] முதலாளித்துவ வர்க்கம் வென்றிருந்தால், அது 1848 மற்றும் 1871 இல் நடந்து கொண்டதைப் போலவே தான் நடந்து கொண்டிருக்கும்,” என்று நினைவூட்டினார். [6] இது, ஜூன் 1848 இல் தளபதி கவன்னியாக் (Cavaignac) ஆல் பாரீஸ் நகர தொழிலாளர்கள் கொல்லப்பட்டமை, மே 1871 பாரீஸ் கம்யூன் ஒடுக்குமுறையின் போது வேர்சாய் அரசாங்கத்தின் முதலாளித்துவ இராணுவம் குறைந்தபட்சம் 10,000 தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றமை ஆகியவற்றைக் குறித்த வரலாற்று குறிப்புகளாகும்.


அக்டோபர் 1917 ல் தொழிலாளர்கள் மற்றும் இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டம்

இடைக்கால அரசாங்கத்தை ஆதரித்திருந்த அதே கட்சிகளுடன் சமரசம் செய்து கொண்டு கூட்டணி அமைப்பதென்பது அக்டோபர் புரட்சியைக் கைத்துறப்பதற்கு ஒப்பானதாக இருந்தது. மத்திய குழு அங்கத்தவர்கள் அனைவரிலும், ஒரேயொருவர் மட்டுமே கிளர்ச்சியை எதிர்த்தவர்களுடன் கூட்டணி வைக்க கூடாதென்ற லெனினின் மறுப்பைத் தங்குதடையின்றி, பலமாக பாதுகாத்தார்: “முக்கியமாக, நல்லிணக்கத்தைக் குறித்து நான் பேசக்கூட விரும்பவில்லை,” என்று அறிவித்த லெனின், “ஒற்றுமை சாத்தியமே இல்லை என்பதை நீண்டகாலத்திற்கு முன்னரே ட்ரொட்ஸ்கி தெரிவித்திருந்தார். ட்ரொட்ஸ்கிக்கு இது புரிந்திருந்தது, அப்போதிருந்து அவரை விட சிறந்த போல்ஷிவிக் யாரும் கிடையாது.” [7]


சினோவியேவ்

தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க, அதன் தலைமையாக, கட்சி கடமைப்பட்டுள்ளதை லெனின் வலியுறுத்தினார். வலதுடன் சமரசம் கோருவதில் மீண்டுமொருமுறை காமனேவுடன் அணி சேர்ந்திருந்த சினோவியேவ் இற்கு பதிலளிக்கையில், லெனின் குறிப்பிட்டார்: 

நாம் சோவியத் அதிகாரம் கிடையாது என்று சினோவியேவ் கூறுகிறார். சமூக புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் தனிமைப்படுத்தப்பட்டதற்குப் பின்னர் இருந்து, இப்போதும், இனியும், உங்களுக்கு விருப்பமானால், நாம் மட்டுமே போல்ஷிவிக்குகள். ஆனால் அவர்கள் தனிமைப்பட்டதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் சோவியத்துக்களின் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். இதுவொரு புது வகையான அமைப்பு. யாரெல்லாம் போராட விரும்புகிறார்களோ இதில் நுழைகிறார்கள். இது மக்களை உள்ளடக்கி இல்லை; பெருந்திரளான மக்கள் பின்தொடரும் முன்னணிப் படையை உள்ளடக்கி உள்ளது. நாம் களைத்துப்போனவர்களை நோக்கி அல்ல, மிகவும் செயலூக்கத்துடன் இருப்பவர்களை நோக்கிச் செல்கிறோம். கிளர்ச்சியை இப்போது விரிவாக்குவதற்கு பதிலாக அதிலிருந்து விலகுவதென்பது இந்த களைத்துப் போனவர்களிடம் [சரணடைவதாக] இருக்கும், ஆனால் நாம் முன்னணிப் படையுடன் உள்ளோம். சோவியத்துக்கள் [போராட்டத்திலிருந்து] வடிவெடுக்கும். சோவியத்துக்கள், பெருந்திரளான பாட்டாளி வர்க்க மக்களின் முன்னணிப் படையாகும். [8]

ட்ரொட்ஸ்கி, லெனினின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக, அரசியல் யதார்த்தத்தின் தெளிவான மற்றும் உணர்ச்சிவசப்படாத ஒரு மதிப்பீட்டை வழங்கினார்:

நாம் மேலெழும்ப திராணியற்றவர்கள் என்று நம்மிடம் கூறப்படுகிறது. அவ்வாறானால், நமக்கு எதிராக சரியாக போராடுபவர்களிடம் நாம் கேள்வியின்றி அதிகாரத்தை ஒப்படைத்து விட வேண்டியிருக்கும். ஆனால் ஏற்கனவே நாம் பிரமாண்டமாக உழைத்துள்ளோம். துப்பாக்கிமுனைகளில் நம்மால் அமர்ந்திருக்க முடியாதென நமக்கு கூறப்படுகிறது. ஆனால் துப்பாக்கிமுனைகள் இல்லாமல் நம்மால் நிர்வகிக்க முடியாது. இங்கே அமர்ந்திருப்பதற்காக நமக்கு துப்பாக்கிமுனைகள் தேவைப்படுகின்றன. ஏற்கனவே நமக்கு கிடைத்திருக்கும் அனுபவம் நமக்கு சிலவற்றை கற்றுத் தந்துள்ளது என்பதை ஒருவர் நினைத்து பார்க்க வேண்டும். மாஸ்கோவில் ஒரு போர் நடந்துள்ளது. ஆம், அங்கே ஜூங்கர்களுடன் [Junkers - படைப்பிரிவு அதிகாரிகள்] ஒரு தீவிர போர் நடந்தது. ஆனால் இந்த ஜூங்கர்களுக்கு, Vikzhel இன் (தொழிற்சங்கம்) அல்லது மென்ஷிவிக்குகளுடன் விசுவாசமான கூட்டு உள்ளது. Vikzhel உடனான நல்லிணக்கம், முதலாளித்துவ வர்க்கத்தின் ஜூங்கர் படைப்பிரிவுகளுடனான மோதலைத் தவிர்த்துவிடாது. கிடையாது. எதிர்காலத்திலும் நம்மீது தொடர்ந்து ஒரு குரூரமான வர்க்க போராட்டம் தொடுக்கப்படும். இப்போது எந்தவொரு தரப்பும் எடுக்க திராணியற்றுள்ள இந்த சகல நடுத்தர-வர்க்க ஒட்டுண்ணிகளும், நமது அரசாங்கம் மிகவும் பலமானது என்பதை காணும் போது, அவை Vikzhel உடன் சேர்ந்து, நம் தரப்பிற்கு வந்துவிடும். [தளபதி] கிரஸ்னொவ் இன் கொசாக்குகளை நாம் பீட்டர்ஸ்பேர்க்கில் நசுக்கினோம் என்ற உண்மை தெரிந்தபோது, அதற்கடுத்த நாளே நமக்கு வாழ்த்து தந்திகள் வந்து குவிந்தன. குட்டி-முதலாளித்துவத்தினர் தங்களை யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அந்த சக்திகளை நாடிச் செல்வர். இதை யாரெல்லாம் புரிந்து கொள்ள தவறுகிறார்களோ அவர்களால் உலகில், அனைத்திலும் குறைந்தபட்சமாக, அரசு எந்திரத்திலும் எந்தவொன்றையும் சிறிதும் புரிந்து கொள்ள முடியாது. புதிய வர்க்கத்தால் கேள்விக்கிடமின்றி பழைய எந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை கார்ல் மார்க்ஸ் 1871 இல் அப்போதே தெரிவித்தார். இந்த எந்திரம் அதன் சொந்த நலன்களையும், பழக்க-வழக்கங்களையும் கொண்டுள்ளது, இதற்கு எதிராக நாம் செயல்பட வேண்டியுள்ளது. அது தகர்க்கப்பட்டு, பிரதியீடு செய்யப்பட்டால் மட்டுமே, நம்மால் பணியாற்ற முடியும்.

அது அவ்வாறு இல்லையென்றால், பழைய ஜாரிச எந்திரம் நமது புதிய நோக்கங்களுக்குப் பொருத்தமாக இருக்குமென்றால், பின் ஒட்டுமொத்த புரட்சியும் ஒரு வெற்று முட்டை ஓட்டுக்குக் கூட பெறுமதியாகாது. சொல்லப் போனால், பெருந்திரளான மக்களின் பொதுநலன்களை எந்திரத்திற்கு அவசியமான நலன்களுக்கு மேலாக நிறுத்தக்கூடிய ஒரு எந்திரத்தை நாம் உருவாக்க வேண்டும்.   

வர்க்கங்கள் மற்றும் வர்க்க போராட்டம் சம்பந்தமான கேள்வியை நோக்கி முற்றிலும் புத்தக மனோபாவத்தைக் கொண்டவர்கள் நம்மிடையேயும் பலர் உள்ளனர். யதார்த்தத்தில் புரட்சிக் காற்று வீசத் தொடங்கியதும், அவர்கள் வேறு மொழியை [அதாவது, போராட்டத்தின் அல்ல, நல்லிணக்கத்தின் மொழியைப்] பேசத் தொடங்கினார்கள்.  

இப்போது நாம் மிகவும் ஆழ்ந்த சமூக நெருக்கடியினூடாக வாழ்ந்து வருகிறோம். தற்போது பாட்டாளி வர்க்கம் நடைமுறையில் அரசு எந்திரத்தை தகர்த்து, அதை பிரதியீடு செய்து வருகிறது. அவர்களின் தரப்பிலிருக்கும் எதிர்ப்பு நமது வளர்ச்சியின் நிகழ்ச்சிப்போக்கினை பிரதிபலிக்கிறது. நம் மீதான அவர்களின் வெறுப்பை எந்த வார்த்தைகளாலும் தணிக்க முடியாது. அவர்களின் வேலைத்திட்டமும் நம்முடையதைப் போன்றதே என்று ஊகிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு சில ஆசனங்களை வழங்குங்கள், அனைத்தையும் அது தீர்த்துவிடும் என்று நமக்கு கூறப்படுகிறது… இல்லை. முதலாளித்துவ வர்க்கம் அதன் அனைத்து வர்க்க நலன்களின் உள்ளார்ந்த ஆற்றலுடன் நமக்கு எதிராக அணிதிரண்டுள்ளது. Vikzhel உடனான நல்லிணக்க பாதையை தேர்ந்தெடுத்தால், அதை கொண்டு நாம் என்ன சாதிப்போம்? … நாம் ஆயுதமேந்திய வன்முறையை முகங்கொடுத்துள்ளோம், இதை நம் சொந்த தரப்பிலிருந்து நடத்தும் வன்முறை மூலமாக மட்டுந்தான் நாம் கடந்து செல்ல முடியும். இரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதாக லூனாசார்ஸ்கி கூறுகிறார். என்ன செய்வது? இதை ஒருபோதும் நாம் தொடங்கவில்லை என்பது கண்கூடாகவே தெரியும்.

அவ்வாறிருக்கையில், இந்தளவுக்கு மிகப்பெரிய தவறு அக்டோபரால் நடத்தப்படவில்லை, மாறாக வரவிருந்த உள்நாட்டு போர் சூழலில் நாங்கள் நுழைந்த போது பெப்ரவரியின் முடிவில் அது எங்களால் தான் நடத்தப்பட்டது என்பதை நீங்கள் ஏன் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை. [9]


லெனின்

போல்ஷிவிக் தலைமைக்குள் ஒரு வாரத்திற்கும் அதிகமாக போராட்டம் நடந்தது. மென்ஷிவிக்குகள், சோசலிச புரட்சியாளர்கள் மற்றும் அக்டோபர் 24-25 இல் நடந்த போல்ஷிவிக்-தலைமையிலான கிளர்ச்சியை எதிர்த்த ஏனைய எதிர்ப்பாளர்களும் இணைந்த ஒரு கூட்டணி அரசாங்கத்திற்கான முறையீடுகளைக் கடந்து செல்ல, ட்ரொட்ஸ்கியின் ஆதரவுடன், லெனினுக்கு மிகப் பெரும் முயற்சி தேவைப்பட்டது.

கட்சியை மீண்டுமொருமுறை உடைவின் விளிம்பிற்குக் கொண்டு வந்த, போல்ஷிவிக் கட்சி மோதலின் அடியில் இருந்ததென்ன—மத்திய குழுவின் ஒரு கணிசமான பிரிவு அக்டோபரில் அதிகாரம் கைப்பற்றப்பட்டதற்கு மட்டுமல்ல, மாறாக ஏப்ரல் 1917 இல் ரஷ்யாவுக்கு லெனின் திரும்பிய பின்னர் அவர் அறிமுகப்படுத்திய ஒட்டுமொத்த அரசியல் நோக்குநிலைக்கும் எந்தளவுக்கு எதிராக இருந்தது என்பதே அதன் அடியில் இருந்தது. புதிய அரசாங்கத்தின் பதவிகளில் லெனினையும் ட்ரொட்ஸ்கியையும் தவிர்க்க வேண்டியிருப்பதாக அர்த்தப்பட்டாலும், போல்ஷிவிக் கட்சி, ஒரு கூட்டணிக்கு இணங்க வேண்டுமென்ற காமனேவின் கோரிக்கை, பெப்ரவரி புரட்சிக்குப் பின்னர் உடனடியாக, ஸ்ராலினுடன் சேர்ந்து அவர் முன்னெடுத்திருந்த நிலைப்பாடுகளுக்குள் மீண்டும் சரணடைந்தது.

லெனின் திரும்புவதற்கு முந்தைய நிலைமையை நாம் நினைவுகூர்வோம், போல்ஷிவிக் கட்சி —காமனேவ் மற்றும் ஸ்ராலின் தலைமையின் கீழ்— பெப்ரவரி புரட்சிக்குப் பின்னர் உடனடியாக மேலெழுந்திருந்த அரசியல் ஒழுங்கமைப்புகளுக்குள் தன்னை தகவமைத்துக் கொண்டது. அது முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் அதிகாரங்களை ஏற்றுக் கொண்டது. புதிதாக உருவாக்கப்பட்ட சோவியத், ஜனநாயகரீதியில் மீளமைக்கப்பட்ட முதலாளித்துவ அரசு கொள்கைகளை உருவாக்குவதில் இடதுசாரி செல்வாக்கு செலுத்தும் முயற்சியைத் தவிர வேறெதையும் கூடுதலாக செய்யவில்லை. முதலாளித்துவ ஆட்சியைத் தட்டிக் கழிக்காமல் ஏற்றுக் கொள்வதென்ற முடிவானது, ஜார் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பின்னர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போர் என்று மறுவடிவம் கொடுக்கப்பட்ட ஏகாதிபத்திய போரில் ரஷ்யா தொடர்ந்து பங்கெடுப்பதற்கு ஆதரவளிப்பதாக இருந்தது.

பெப்ரவரி மேலெழுச்சிக்கான இந்த ஆரம்ப போல்ஷிவிக் விடையிறுப்பின் அடியிலிருந்த அரசியல் முன்னோக்கு, ரஷ்யா ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, இதன் நோக்கம் பிரிட்டனிலும் அல்லது பிரான்சிலும் இருப்பதைப் போன்றவொரு நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிறுவுவதாகும் என்பதேயாகும். தொழிலாளர்களின் ஓர் அரசாங்கத்திற்கான போராட்டம் —அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டம்— வரலாற்றுரீதியிலும் பொருளாதார ரீதியிலும் முதிர்ச்சி அடையவில்லை என்றும், பொருளாதார ரீதியில் பின்தங்கியதும் மற்றும் பெரும்பான்மை விவசாயிகளைக் கொண்டதுமான ரஷ்யா, சோசலிசத்திற்கு தயாராகவில்லை என்றும் நிராகரிக்கப்பட்டது. காமனேவும் மற்றும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்த பிற போல்ஷிவிக் தலைவர்களும் நேர்மையாக, பெப்ரவரி புரட்சிக்கான தங்களின் விடையிறுப்பானது நீண்டகாலத்திற்கு முன்னர் பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரத்திற்கான போல்ஷிவிக் வேலைத்திட்டத்தை அடித்தளத்தில் கொண்டிருந்தது என்பதை நியாயபூர்வமாக கூறிக்கொள்ளலாம்.


ட்ரொட்ஸ்கி

இந்த வேலைத்திட்டம், ஜார் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்ததன் அடித்தளத்தில் எழவிருந்த ஆட்சியின் வர்க்க இயல்புக்கு, மிகப் பொருத்தமாக இருந்தது என்றாலும், தெளிவின்றி இருந்தது. அனைத்திற்கும் மேலாக, பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகார வேலைத்திட்டம், 1905 புரட்சிக்குப் பின்னர் உடனடியாக ட்ரொட்ஸ்கியால் நெறிப்படுத்தப்பட்ட நிரந்தரப் புரட்சி முன்னோக்கிலிருந்து அடிப்படையிலேயே முரண்பட்டதாகும். நாம் நன்கறிந்தவாறு, ஜாரிசத்திற்கு எதிரான ஜனநாயகப் புரட்சியானது, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த கரங்களில் அதிகாரத்தைக் கையிலெடுத்து, சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொடங்கி, முதலாளித்துவ வர்க்கத்தின் முதலாளித்துவ சொத்துக்களை ஆழமாகவும், தவிர்க்கவியலாதவாறும் பறிமுதல் செய்வதை அவசியப்படுத்தி, ஒரு சோசலிச புரட்சியாக விரைவில் வடிவெடுக்குமென ட்ரொட்ஸ்கியின் தத்துவம் முன்னுணர்த்தியது.

வரவிருந்த ரஷ்ய புரட்சி ஒரு சோசலிச இயல்பைப் பெறும் என்ற ட்ரொட்ஸ்கியின் முன்கணிப்பு, போல்ஷிவிக்குகள் உட்பட இடதில் இருந்த அவரது அரசியல் சமகாலத்தியவர்கள் அனைவராலும், தோற்றப்பாட்டளவில், ரஷ்ய நிலைமைகளைக் குறித்த யதார்த்தமற்ற மதிப்பீடு என்றும், கற்பனாவாத மதிப்பீடு என்றும் கூட, நிராகரிக்கப்பட்டது. சோசலிச நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான அளவுக்கு பொருளாதாரத் தயாரிப்பில்லா ஒரு நாட்டில், தொழிலாள வர்க்கம் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அறிவுறுத்துவது நிச்சயமாக சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டது. 

ஆனால் ட்ரொட்ஸ்கியை விமர்சித்தவர்கள், அவர் வாதத்தின் கீழமைந்திருந்த காரணங்கள் மீது போதுமான கவனம் செலுத்தவில்லை. ஒரு சோசலிச புரட்சி குறித்த ட்ரொட்ஸ்கியின் முன்கணிப்பு, தேசிய அடிப்படையிலான ரஷ்ய நிலைமைகளின் ஒரு மதிப்பீட்டில் இருந்தல்ல, மாறாக, முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தின் இருபதாம் நூற்றாண்டு அபிவிருத்தி மற்றும் அனைத்து நாடுகளது அரசியல் வாழ்விலும் அதன் தாக்கம் குறித்த ஒரு பகுப்பாய்விலிருந்து பெறப்பட்டிருந்தது. முதலாளித்துவத்தின் உலகளாவிய அபிவிருத்தி, “ஒட்டுமொத்த உலகையுமே ஒரே பொருளாதார மற்றும் அரசியல் அங்கமாக மாற்றியுள்ளது,” என்று ட்ரொட்ஸ்கி 1907 ஆம் ஆண்டிலேயே வாதிட்டிருந்தார். ஒன்றோடொன்று பிணைந்த பொருளாதார உறவுகளின் சிக்கலான வலையமைப்பு, தவிர்க்க முடியாதவாறு அனைத்து நாடுகளையும் "முன்னொருபோதும் இல்லா பரிமாணங்களில் ஒரு சமூக நெருக்கடிக்குள்" இழுத்து வரும். தவிர்க்கவியலாத நெருக்கடியின் வெடிப்பானது, முதலாளித்துவ ஆட்சியின் "உலகந்தழுவிய தீவிர கலைப்புக்கு" இட்டுச் செல்லும். உலகளாவிய நெருக்கடி குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு, ரஷ்ய புரட்சி மீதான அவரின் மூலோபாய கருத்துருவைத் தீர்மானித்தது. முதலாளித்துவ நெருக்கடியின் "சர்வதேச தன்மை", ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கு "பிரமாண்ட சாத்தியக்கூறுகளைத்" திறந்துவிடும். ட்ரொட்ஸ்கி எழுதினார், “ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் நடக்கும் அரசியல் மீட்சியானது,” “ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கு பிரமாண்டமான கருவிகளையும் ஆதாரவளங்களையும் வழங்கி, உலகளவில் முதலாளித்துவத்தை இல்லாதொழிக்கும் முன்முயற்சியாளராக அதை உருவாக்கி, வரலாற்றில் முன்னுதாரணமற்ற உயரங்களுக்கு அதை உயர்த்தி வருகிறது, இதற்கான புறநிலையான அனைத்து முன்நிபந்தனைகளையும் வரலாறு தயார் செய்துள்ளது.” [10]

லெனின், 1914 க்கு முன்னர், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்திலிருந்து ஊற்றெடுத்த மூலோபாய நோக்குநிலையை நிராகரித்திருந்தார். ஆனால் முதலாம் உலகப் போர் வெடிப்பும், அதையடுத்து இரண்டாம் அகிலம் தேசியவாத பேரினவாதத்திற்கு அடிபணிந்தமையும், ரஷ்ய புரட்சி குறித்த லெனினின் கருத்துரு மீது ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏதேனும் ஒரேயொரு சம்பவமே கூட "அனைத்தையும் மாற்றிவிடக்கூடும்" என்பதைப் பொறுத்த வரையில், முதலாம் உலகப் போர் வெடிப்பானது அத்தகையவொரு அபிவிருத்தியாக இருந்தது. ஆகஸ்ட் 1914 இல் இருந்து, முதலாம் உலக போருக்கான காரணங்கள் மற்றும் இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்புக்கான காரணங்கள் குறித்த லெனினின் பகுப்பாய்வு, அனைத்து அரசியல் அபிவிருத்திகள் மீதான அவரின் புரிதலின் அடித்தளமாக இருந்தது. கார்ல் காவுட்ஸ்கி கருதியதைப் போல, போருக்குப் பின்னர், ஒவ்வொன்றும், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ, பழையவாறு ஆகஸ்ட் 1914 க்கு முந்தைய நிலைக்கு திரும்பிவிடும் என்ற விதத்தில், போர் என்பது ஏதோ மேலோட்டமான ஒரு சம்பவமாக இருக்கவில்லை. லெனினைப் பொறுத்த வரையில், உலகப் போரானது உலக அரசியலின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது.

போருக்கு வெறும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் தான், 1912 இல் இரண்டாம் அகிலத்தின் பாசல் மாநாட்டில் (Basel Congress) கலந்து கொண்ட பிரதிநிதிகள், போர் வெடிப்பால் தோற்றுவிக்கப்படும் நெருக்கடியைப் பயன்படுத்தி முதலாளித்துவ அமைப்புமுறையை உலகளவில் இல்லாதொழிப்பதற்கு சூளுரைத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். பரந்த பெரும்பான்மை பிரதிநிதிகள் அத்தீர்மானத்தை, அரசியல்ரீதியில் அர்த்தமற்ற சம்பிரதாய நடைமுறைக்கு கூடுதலாக வேறொன்றுமில்லை என்று பார்த்தார்கள் என்பதை ஒருவர் நிச்சயமாக ஊகிக்கலாம். ஆனால் அத்தீர்மானத்தை லெனின், இரண்டாம் அகிலத்தின் அனைத்து பிரிவுகளையும் பிணைக்கும் ஒரு ஆழ்ந்த கொள்கை அறிக்கையாகப் பார்த்தார்.

அனைத்துக்கும் மேலாக, லெனின் பகுப்பாய்வு செய்ததைப் போல, அப்போரானது தற்செயலானதோ, இந்த அல்லது அந்த தேசிய அரசாங்கத்தின் பிழைகள் மற்றும் தவறான கணக்கீடுகளின் விளைவோ அல்ல. அப்போரானது, முதலாளித்துவ-ஏகாதிபத்திய உலக ஒழுங்கமைப்பின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியலில் அமைப்பு-தழுவிய பெரும் சிதைவு என்பதற்கு குறைவின்றி எதையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. முதலாம் உலகப் போர் வெடிப்பானது, மில்லியன் கணக்கான மக்களைப் பயங்கரம் மற்றும் முன்பில்லாத வன்முறை சுழலுக்குள் இழுத்து வந்து, அமைப்புமுறை-தழுவிய தோல்விக்கு, ஐரோப்பிய முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் காட்டிய விடையிறுப்பாக இருந்தது. அப்போரானது அடுத்து அமைக்கப்படவிருந்த ஒரு புதிய பொருளாதார மற்றும் அரசியல் சமநிலையின் மீது, காலனித்துவ உடைமைகளையும் செல்வாக்கு மண்டலங்களையும் புதிதாக பங்கிட்டுக் கொள்வதை அவசியப்படுத்தி, ஓர் "அமைப்பை மீளமைப்பு" (system reset) செய்வதற்கான அவர்களின் நடைமுறையாக இருந்தது.

முதல் உலகப் போரின்போது Passchendaele போரில் காயமடைந்த படையினர்

முதலாளித்துவ தீர்வுக்கு எதிராக, அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தின் அவசியமான மற்றும் தவிர்க்க முடியாத விடையிறுப்பாக உலக சோசலிசப் புரட்சி இருந்தது. ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்களின் புறநிலையான நடைமுறைகளில் போர் வடிவமேற்ற அந்த அமைப்புரீதியிலான உடைவு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான நடைமுறைகளில் முதலாளித்துவ-எதிர்ப்பு வர்க்க போராட்டம் மற்றும் சோசலிச புரட்சியை தீவிரப்படுத்தும் வடிவம் ஏற்பதாக இருந்தது. போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால், முதலாளித்துவ வர்க்கங்களைத் தூக்கியெறிந்து, முதலாளித்துவ சொத்துடைமை மற்றும் இலாபத்திற்கான இந்த பொருளாதார அமைப்புமுறையை இல்லாதொழித்து, தேசிய அரசை நிர்மூலமாக்க வேண்டியிருந்தது. உலக சோசலிச இயக்கத்தின் கொள்கையானது, வேலைத்திட்டத்திலும் சரி நடைமுறையிலும் சரி, அதன் நோக்குநிலை, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியின் புறநிலை போக்குகள் குறித்த நனவின் வளர்ச்சியாக இருந்தது.

இந்த உலகளாவிய கட்டமைப்புக்குள் ஏகாதிபத்திய போரைப் புரிந்து கொள்ளும் ஒரு நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், ரஷ்யா சோசலிச புரட்சிக்கு "தயார்" ஆகவில்லை என்று —அதாவது உலகப் பொருளாதாரத்தில் ஒரு தனிமைப்பட்ட "தேசிய" பிரிவு என்பதாக— வாதிட்டவர்கள், நிஜமாகவே இப்புள்ளியைத் தவறவிட்டிருந்தனர் என்பது தெளிவாக இருந்தது. லெனின் சோசலிச அடிப்படையில் தேசியளவிலான ஒரு வேலைத்திட்டத்தை அறிவுறுத்தவில்லை. லெனினைப் பொறுத்த வரையில் [நிச்சயமாக ட்ரொட்ஸ்கியைப் பொறுத்த வரையிலும் கூடத் தான்], ரஷ்யா ஓர் உலகளாவிய போராட்டத்தில் ஒரு முக்கிய முனையாக இருந்தது. ஒன்றோடொன்று பிணைந்த சிக்கலான பல சூழ்நிலைகள், ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கு முன்னால், உலக சோசலிச புரட்சியின் முதல் தலையாய முனையைத் திறந்துவிடும் பணியை முன்நிறுத்தி இருந்தது.

லெனின் ரஷ்யாவுக்கு திரும்பியதும், அவர், போல்ஷிவிக் கட்சிக்குள் புரட்சியை ஒரு தேசிய வடிவமைப்பில் பார்த்த அனைத்துப் போக்குகளுக்கு எதிராகவும் ஓர் ஆழ்ந்த அரசியல் போராட்டத்தை நடத்த நிர்பந்திக்கப்பட்டார். ஏப்ரல் 24, 1917 இல், லெனின் பின்வரும் அறிக்கையோடு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் ஏழாவது அகில-ரஷ்ய மாநாட்டைத் தொடங்கி வைத்தார்:

தோழர்களே, ரஷ்ய புரட்சி மற்றும் அதேபோல அபிவிருத்தி அடைந்து வரும் உலக புரட்சி நிலைமைகளின் கீழ், பாட்டாளி வர்க்கத்தின் முதல் மாநாடான இதில் நாம் ஒன்றுகூடி உள்ளோம். உலகப் போர் தவிர்க்கவியலாது புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்று விஞ்ஞான சோசலிசத்தின் ஸ்தாபகர்களது வலியுறுத்துதலும், பாசல் மாநாட்டில் ஒன்றுகூடிய சோசலிசவாதிகளின் ஒருமனதான முன்மதிப்பீடும், ஒவ்வொரு இடத்திலும் சரியென ஊர்ஜிதப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது… 

புரட்சியைத் தொடங்கி வைக்கும் மிகப்பெரும் கௌரவம் ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் மீது விழுந்துள்ளது. ஆனால் அதன் இயக்கமும் புரட்சியும் உலக புரட்சிகர பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பாகமாகவே உள்ளன என்பதை ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் மறந்துவிடக் கூடாது, சான்றாக ஜேர்மனியில், கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் உத்வேகம் அதிகரித்து வருகிறது. இந்த கோணத்திலிருந்து மட்டுந்தான் நாம் நமது பணிகளை வரையறுக்க வேண்டும். [11]

லெனின் தொடர்ந்தார்:

மார்க்சிசத்தின் கண்ணோட்டத்திலிருந்து, ஏகாதிபத்தியத்தை விவாதிக்கையில், அனைத்து முதலாளித்துவ நாடுகளும் நெருக்கமாக ஒன்றோடொன்று பிணைந்துள்ள நிலையில், ஒருவர் தனியொரு நாட்டு நிலைமைகளோடு மட்டுப்படுத்திக் கொள்வது அர்த்தமற்றதாகும். இப்போது, போர்க் காலத்தில், இந்த பிணைப்பு இன்னும் அளவிட முடியாதளவில் பலமடைந்துள்ளது. மனிதயினம் மொத்தமும் ஒரு சிக்கலான இரத்த ஆற்றில் வீசப்படுகிறது, இதிலிருந்து எந்தவொரு நாடும் தானே தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முடியாது. கூடுதலாகவோ குறைவாகவோ முன்னேறிய நாடுகளாக இருந்தாலும், இப்போரானது, ஏதேனும் ஒரு நாடு தனது சொந்த நடவடிக்கையில் செயல்பட்டு இந்த சிக்கலில் இருந்து தப்பிவிடலாம் என்பதை நினைத்தும் பார்க்க முடியாதவாறு, அந்தளவுக்கு பல நூலிழைகளால் எல்லா நாடுகளையும் ஒன்றோடொன்று பிணைத்துள்ளது. [12]

அதிகாரத்திற்காக போராடுவதென்ற முன்னோக்கிற்கு லெனின் கட்சியை வென்றெடுத்த பின்னரும் கூட, அவர் கட்சியின் மூலோபாயம் மீதான சர்வதேச அடித்தளங்களை இடைவிடாது தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ரஷ்யாவில் போரும் புரட்சியும் உலக ஏகாதிபத்திய நெருக்கடியிலிருந்து எழுந்ததை அவர் கட்டுரைகளிலும், பெரும் பேரணிகளின் சொற்பொழிவுகளிலும் மற்றும் மேதைமை பொருந்திய உரைகளிலும் விவரித்தார். மே 4, 1917 இல் “போரும் புரட்சியும்" என்ற தலைப்பில் பேசிய ஓர் உரையில் லெனின் விவரித்தார்:

அனைத்து முதலாளித்துவவாதிகளும் தொடுக்கும் போரை இத்தகைய முதலாளித்துவவாதிகளுக்கு எதிரான ஒரு தொழிலாளர்களின் புரட்சி இல்லாமல் முடிவுக்குக் கொண்டு வர முடியாது. கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையின்றி வெறுமனே வார்த்தையளவில் இருக்கும் வரையில், முதலாளித்துவவாதிகளின் அரசாங்கம் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் ஓர் அரசாங்கத்தைக் கொண்டு பிரதியீடு செய்யப்படாத வரையில், நாம் பேரழிவை, பேரழிவை, பேரழிவையே … நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை இந்த அரசாங்கம் வெறுமனே மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்க சபிக்கப்பட்டிருக்கும்.

பல நாடுகளிலும் தொழிலாளர்களின் புரட்சி மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழியாகும். இதற்கிடையே, அந்த புரட்சிக்காக நாம் தயாரிப்புகளைச் செய்ய வேண்டும், அதை நாம் வழிநடத்த வேண்டும். [13]

அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கான போல்ஷிவிக் தீர்மானம் அசாதாரண அரசியல் தைரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு என்பதோடு, மிகச் சிறந்த அர்த்தத்தில், அரசியல் "விருப்பத்திற்கும்" (political “will,”) ஓர் எடுத்துக்காட்டு என்பதையும் ஒருவர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வரலாற்று நிலைமையில், "அதிகாரத்திற்கான" போல்ஷிவிக் "விருப்பம்" ஏதோவொரு வகையான அகநிலை தன்னார்வத்தின் வெளிப்பாடாக இருக்கவில்லை, மாறாக புறநிலை யதார்த்தத்துடன் அவசியத்திற்கேற்ப அரசியல் நடைமுறையை இணைப்பதாக இருந்தது. அக்டோபர் புரட்சியின் விமர்சகர்கள், அதன் சோசலிச அபிலாஷைகளுக்கு அனுதாபம் காட்டியவர்களும் கூட, அதிகாரத்தைக் கையிலெடுக்கும் முடிவு பல்வேறு அபாயங்களைக் கொண்டிருந்ததாக வாதிட்டார்கள். உண்மையில், சோவியத் ரஷ்யாவின் தலைவிதி, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் குறிப்பாக ஜேர்மனியில், சோசலிச புரட்சியின் விரிவாக்கத்தைச் சார்ந்திருந்தது என்பதை லெனினும் ட்ரொட்ஸ்கியுமே நம்பினார்கள் என்ற உண்மைக்கு இடையே, மற்றொரு நாட்டின் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மீது போல்ஷிவிக் கட்சியின் கொள்கையை அமைத்தது அபாயமில்லையா, பொறுப்பற்றத்தன்மை இல்லையா? போல்ஷிவிக்குகள், ஜேர்மன் புரட்சியினது வெற்றிகரமான விளைவின் மீது பெரிதும் பணயம் வைக்காமல் இருந்திருக்கலாமே? ஜேர்மனியில் புரட்சிகர இயக்க அபிவிருத்தியில் வெற்றிக்கான வாய்ப்புகளில் பிரச்சினைகள் குறையும் வரையில், ரஷ்யாவில் புரட்சிகர நடவடிக்கையைத் தாமதிப்பது புத்திசாலித்தனமாக இருந்திருக்குமல்லவா? என்றனர்.

இந்த ஐயுறவுவாத கண்ணோட்டம், வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு மற்றும் சர்வதேச புரட்சிகர போராட்டத்தின் இயக்கவியல் இரண்டையும் குறித்த மோசமான புரிதலை எடுத்துக்காட்டுகிறது. “போல்ஷிவிக்குகளால் அரசு அதிகாரத்தைத் தக்க வைக்க முடியுமா?” என்று தலைப்பிட்டு, அக்டோபர் புரட்சிக்கு சற்று முன்னதாக லெனின் எழுதிய ஒரு துண்டறிக்கையில், “சமாதான முறையில், அமைதியாக, எளிதாக மற்றும் துல்லியமான விதத்தில் ஒரு ஜேர்மன் விரைவு இரயில், ஒரு நிலையத்திற்கு வரலாற்றை இழுத்து வருவதால்" மட்டுமே ஒரு சமூக புரட்சியை அனுமதிப்பதற்கு தயாராக இருந்தவர்களை லெனின் கேலி செய்திருந்தார். “ஒரு சாந்தமான நடத்துனர் கதவுகளைத் திறந்து 'சமூக புரட்சி நிலையம் வந்துவிட்டது! எல்லோரும் இறங்குகள் (Alle aussteigen!”)' என்று அறிவிப்பார்,” என்று குறிப்பிட்டார். [14]

அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கு எதிராக பெரும்பாலும் முன்-எழுப்பப்படும் மற்றொரு வாதத்தையும், அதாவது அரசியல் நிலைமை மிகவும் "பிரத்தியேக சிக்கலின்றி" இருந்தால், புரட்சியை நடவடிக்கையின் போக்கில் பெரிதும் பரிந்துரைக்கலாம் என்பதையும் லெனின் மேற்கோளிட்டார். அவரது கிண்டலைக் குறைத்துக் கொள்ளாமல், போல்ஷிவிக்குகள் ஒரு "சிக்கலில்லாத" சூழ்நிலை உருவாகும் வரையில் காத்திருக்க வேண்டுமென வலியுறுத்தும் அந்த "அறிவாளிகளுக்கு" லெனின் பதிலளித்தார்.

அதுபோன்ற புரட்சிகள் ஒருபோதும் நடக்காது, அதுபோன்றவொரு புரட்சிக்காக ஏங்கி நிற்பது, ஒரு முதலாளித்துவ புத்திஜீவிதத்தின் பிற்போக்குத்தனமான புலம்பல்கள் என்பதற்கு அதிகமாக வேறொன்றுமில்லை. மிகவும் சிக்கல் இல்லாததாக தெரியும் ஒரு சூழ்நிலையில் ஒரு புரட்சி தொடங்கினாலும் கூட, புரட்சியின் அபிவிருத்தியானது எப்போதுமே சிக்கலான அசாதாரண சூழல்நிலையையே உருவாக்கும். ஒரு புரட்சி, ஒரு நிஜமான, ஆழமான, ஒரு 'மக்களின்' புரட்சி, மார்க்ஸ் குறிப்பிட்டதைப் பயன்படுத்துவதானால், நம்ப முடியாதளவுக்கு சிக்கலானதாக, பழைய சமூக ஒழுங்கமைப்பின் மரணத்தினதும் மற்றும் புதிய ஒன்றின் பிறப்பினதும், பத்து மில்லியன்கள் கணக்கிலான மக்களின் வாழ்க்கை நிலையின், வலி நிறைந்த நிகழ்ச்சிப்போக்காக இருக்கும். புரட்சியானது மிகவும் ஆழ்ந்த, கொந்தளிப்பான, பெரும்பிரயத்தனமான வர்க்கப் போராட்டமாகும், உள்நாட்டுப் போராகும்...

சூழ்நிலை அசாதாரண சிக்கலுக்குரியதாக இல்லை என்றால், அங்கே புரட்சியும் இருக்காது. ஓநாய்களைக் கண்டு உங்களுக்குப் பயமாக இருந்தால், காட்டுக்குள் போகாதீர்கள். [15]

பொதுவாக வரலாறும், குறிப்பாக புரட்சிகளும், முற்றிலும் அனுமானித்தக்க விளைவுகளுடன் எப்போதும் தெளிவான மாற்றீடுகளை வழங்குமானால், மிகவும் தொலைநோக்கு கொண்ட முற்போக்கான நடவடிக்கைப் போக்குகள் எப்போதும் குறைந்தபட்ச அபாயமும் குறைந்தபட்ச கோரிக்கைகளையும் கொண்டிருக்குமேயானால், அவை மிக எளிய விவகாரங்களாக இருந்திருக்கும். யதார்த்தத்தில், பிரமாண்டமான வரலாற்று திட்டங்கள் தாங்கொணா வலி நிறைந்த பிரச்சினைகளின் வடிவில், வலி நிறைந்த முடிவெடுப்புகளுக்கான கோரிக்கைகளுடன், மாபெரும் அபாயங்களை உள்ளடக்கி, பாரிய தியாகங்களை வேண்டிநிற்கின்றது.

தொழிலாளர்களின் அரசை முதன்முதலில் ஸ்தாபித்த அக்டோபர் புரட்சி, துல்லியமாக அதுபோன்றவொரு, அந்த வார்த்தையை பயன்படுத்திக் கொள்கிறேன், மாபெரும் சிக்கலான திட்டமாக இருந்தது. அக்டோபர் 1917 இன் மற்றும் அதைப் பின்தொடர்ந்து வந்த மாதங்கள் மற்றும் ஆண்டுகளின் சம்பவங்களது போக்கைப் பாதித்த குறிப்பிடத்தக்க முக்கிய நிலைமைகளை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த புரட்சியானது, பூமியின் ஆறில் ஒரு பங்கு நிலப்பகுதியில் பரந்து விரிந்திருந்த, ஒரு பாரிய வெறுக்கப்பட்ட பேரரசின் உடைவைத் துரிதப்படுத்திய உலகளாவிய மோதலுக்கு இடையே நடந்திருந்தது. 1917 இல் ரஷ்யாவில் மேலோங்கி இருந்த புவிசார் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியின் அளவு, பெப்ரவரி மற்றும் அக்டோபருக்கு இடையிலான சம்பவங்களின் மலைப்பூட்டும் அளவிலான வேகத்தைத் தீர்மானித்தது. 1917 இலையுதிர் காலத்தில் லெனின் ஒரு "வரவிருக்கும் பேரழிவை" குறித்து எச்சரித்த போது, அவர் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் மிகைப்படுத்தலின் ஒரு சுவடு கூட இருக்கவில்லை. முதலாளித்துவ இடைக்கால அரசாங்கமும், சோவியத்தில் இருந்த மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிச புரட்சியாளர்களிடையே இருந்த அதன் கூட்டாளிகளும், அதுபோன்றவொரு நிலைப்பேறான முக்கியத்துவம் கொண்ட நெருக்கடியைக் கையாள்வதற்கு எந்தவொரு பொருத்தமான கொள்கைகளையும், நடைமுறைப்படுத்தவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவற்றை நெறிப்படுத்தவும் கூட கிடையாது. அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு குறித்த அவரது ஒரே கருத்துரையில், விளாடிமீர் புட்டின், 1917 நெருக்கடிக்கு மிகவும் ஒரு சமாதானமான தீர்வு காணப்படவில்லை என்ற வருத்தத்தைக் குறிப்பிட்டார்:

அரசமைப்பை அழிக்காமல், மில்லியன் கணக்கானவர்களின் தலைவிதியை ஈவிரக்கமின்றி வீணடிக்காமல், ஆனால் படிப்படியாக, மெதுவான நிகழ்முறையினூடாக, புரட்சியினூடாக அல்ல, பரிணாமத்தின் ஊடாக அபிவிருத்தி செய்வது உண்மையில் சாத்தியமில்லாமல் இருந்ததா? என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். [16]

புட்டின், 1917 இல் இடைக்கால அரசாங்கத்தின் பொலிஸ்-சம்பந்தப்பட்ட ஏதோவொரு துறையில் ஓர் அதிகாரியாக வாழ்ந்திருந்தால், அரசின் பழைய அமைப்புகளை மக்கள் மதியாதிருப்பதன் மீது சீற்றங்கொண்டு, வீதி வன்முறையால் அதிர்ச்சி அடைந்து, ஒழுங்கமைப்பை மீளமைப்பதில் தளபதி கோர்னிலோவ் தோல்வியடைந்ததில் ஏமாற்றமடைந்து, போல்ஷிவிக்குகளுக்கு கடும் விரோதமாக இருந்திருப்பார் என்பதை ஒருவரால் கற்பனை செய்து பார்க்க முடியும்.   

1917 இல் அந்த நெருக்கடிக்கு ஒரு பரிணாமரீதியிலான அமைதியான தீர்வை நிச்சயமாக கண்டிருக்க முடியாது. இடைக்கால அரசாங்கத்தின் மற்றும் அக்டோபருக்கு-முந்தைய சோவியத்துக்களின் "மிதவாத" சோசலிச தலைமையின் ஒட்டுமொத்த சீர்திருத்தவாத முன்னோக்கினது தோல்வியானது, அந்நெருக்கடியை முதலாளித்துவ அடிப்படையிலோ, அல்லது ரஷ்ய தேசியவாத கட்டமைப்பிற்குள்ளேயோ தீர்க்க முடியாது என்ற உண்மையை உறுதிப்படுத்தியது.


லெனின், வெற்றிகரமாக ஆட்சியை கைப்பற்றிய பின்னர் மாஸ்கோவில் பேசுகிறார்

லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த உலக சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டம் மட்டுமே, ஐரோப்பிய போர் வெடிப்புடன் ஆரம்பமாகிய அமைப்புரீதியிலான உடைவுக்கு ஒரே நம்பகமான மூலோபாய விடையிறுப்பாக இருந்தது. போல்ஷிவிக் கொள்கைகள் மீதான குறிப்பிட்ட அம்சங்கள் குறித்த அவரது சொந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, ரோசா லுக்செம்பேர்க் எழுதினார்: “போல்ஷிவிக்குகள் அவர்களின் கொள்கையை முற்றிலும் உலக பாட்டாளி வர்க்க புரட்சியின் அடித்தளத்தில் அமைத்துள்ளனர் என்பது அவர்களின் அரசியல் தொலைநோக்கு பார்வைக்கும் மற்றும் கோட்பாட்டுரீதியிலான உறுதித்தன்மைக்கும், அவர்களது கொள்கைகள் எந்தளவுக்குத் துணிச்சலானவை என்பதற்கும் தெளிவான ஆதாரமாக உள்ளது.” [17]


ரோசா லுக்செம்பேர்க்

வரலாறு போல்ஷிவிக்குகளுக்கு கனிவாக இருந்திருந்தால், அதற்கு முன்னரே ஜேர்மனியில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைப் பிடித்திருக்கும், அல்லது, குறைந்தபட்சம், அக்டோபர் புரட்சி நடந்த அதேநேரத்தில் நடந்திருக்கும். ஆனால், ட்ரொட்ஸ்கி பின்னர் எழுதவிருந்ததைப் போல, வரலாறு கனிவாக இருக்கவில்லை. அது "கொடூரமான மாற்றந்தாயாக" இருந்தது. ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியின் காட்டிக்கொடுப்பு அந்த சாத்தியக்கூறை முன்கூட்டியே பறித்து விட்டிருந்தது. அந்த காட்டிக்கொடுப்பு ஜேர்மன் புரட்சியை தாமதப்படுத்தியதோடு மட்டுமின்றி; அது ஜேர்மன் தொழிலாள வர்க்கத்திற்குள் குழப்பத்தையும் பிளவுகளையும் தோற்றுவித்தது.

குறிப்பாக 1917 கோடைகால முடிவில் தளபதி கோர்னிலோவ் முயற்சித்த எதிர்புரட்சிக்குப் பின்னர், இடைக்கால அரசாங்கத்தைத் தூக்கியெறிவதன் மூலமாக மட்டுமே புரட்சியைக் காப்பாற்ற முடியும் என்பது தெளிவாகி இருந்தது. இவ்விதத்தில், போல்ஷிவிக்குகள், அரசியல்ரீதியில் தனிமைப்பட்ட நிலைமைகளின் கீழ், அரசு அதிகாரத்தை ஏற்கும் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். ரஷ்யாவுக்குள் இருந்த எதிர்புரட்சிகர படைகளுக்கு (இது உலக ஏகாதிபத்தியத்தின் ஆதரவைப் பெற்றிருந்த நிலையில்) எதிராக புரட்சியைப் பாதுகாக்கவும், மற்றும் அதேநேரத்தில், உலக சோசலிசப் புரட்சியின் நோக்கத்தை முன்னெடுப்பதற்கு சாத்தியமான அனைத்தையும் செய்வதற்குமென அவர்கள் இரண்டு பணிகளை எதிர்கொண்டனர். அவர்களின் புரட்சிகர கொள்கையின் இவ்விரண்டு பிரிக்கவியலாத அம்சங்களும் செம்படை உருவாக்கப்பட்டதிலும் மற்றும் கம்யூனிச அகிலம் (மூன்றாம் அகிலம்) நிறுவப்பட்டதிலும் வெளிப்பாட்டைக் கண்டது. கம்யூனிச அகிலத்தின் முதல் மாநாடு 1919 மார்ச்சில் மாஸ்கோவில் நடந்தது. அதற்கடுத்த மூன்று மாநாடுகள், ஆண்டுதோறுமாக 1920, 1921 மற்றும் 1922 இல் நடத்தப்பட்டன — இவற்றின் விவாதங்களும் தீர்மானங்களும் இன்றும் புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் தத்துவார்த்த மற்றும் அரசியல் கல்வியின் இன்றியமையா கூறுபாடுகளாக உள்ளன.

குறிப்பாக சோவியத் ரஷ்யாவின் எல்லைகளுக்கு வெளியே தொழிலாள வர்க்கம் தோல்விகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலைமைகளின் கீழ், புரட்சியின் உயிர்வாழ்வு செம்படை உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் சாத்தியமாகி இருந்திருக்காது. இங்கே, போர் ஆணையாளராகவும், செம்படையின் தலைமைத் தளபதியாகவும் ட்ரொட்ஸ்கி வகித்த முக்கியம் பாத்திரம் குறித்து, சுருக்கமாகவேனும், குறிப்பிட்டாக வேண்டும். ஒரு மதிப்பார்ந்த ஆசிரியரான வரலாற்றாளர் ஜொனாதன் டி. ஸ்மெல் (Jonathan D. Smele) ரஷ்ய உள்நாட்டுப் போர்கள் (அவர் பன்மையில் பயன்படுத்துகிறார்) குறித்து எழுதுகையில், “1912 இல் பால்கன்களில் ஒரு போர் செய்தி அறிவிப்பாளராக இருந்த ஒருசில மாத கால அனுபவங்களுடன், ட்ரொட்ஸ்கி ஒரு பிரச்சாரகராக இருந்ததில் இருந்து பல மில்லியன் பலமான இராணுவத்தை ஒழுங்கமைப்பவராக மாறியமை குறிப்பிடத்தக்கதாக இருந்தது,” என்கிறார். “விசுவாசத்தை ஏற்படுத்துவதற்கான ட்ரொட்ஸ்கியின் திறமையையும்", “புத்திசாலி ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்கும்" அவர் "திறமையையும்" அவரது தலைமைக்கான முக்கிய குணாம்சங்களாக ஸ்மெல் கவனத்திற்குக் கொணர்கிறார். [18]

மற்றொரு ஆய்வில், [அமெரிக்க போர் கல்லூரியில் கல்வி புகட்டும்] கேர்னல் ஹரோல்ட் டபிள்யு. நெல்சன் (Colonel Harold W. Nelson) ஓர் இராணுவ மூலோபாயவாதியாகவும் தலைவராகவும் ட்ரொட்ஸ்கியின் தனித்துவமான திறமைகளை வலியுறுத்துகிறார். “அவர், தந்திரோபாய வெற்றிகளைக் காட்டிலும் வேகத்தின் அவசியத்தை மிகவும் துல்லியமாக புரிந்து வைத்திருந்தார், மேலும் அரசியல் நோக்கங்களை ஏற்பதற்காக துருப்புகளைப் பிரிப்பதை விட முக்கிய அரங்கில் துருப்புகளை ஒன்று குவிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்.” பால்கன் போர்களைக் குறித்த அவரது ஆரம்ப கால எழுத்துக்களில், சண்டையிடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டவர்கள் மீதான போரின் தாக்கம் குறித்து அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ட்ரொட்ஸ்கி "போரில் மனிதர்கள் என்ன செய்தார்கள் என்பதை அறிய விரும்பினார். போர், மோதல் மனிதர்களுக்கு என்ன விளைவித்தது என்பதை அவர் கண்டறிய கருதினார். அவருடையது வெறுமனே பயனற்ற பார்வையாளரின் ஆர்வமாக இருக்கவில்லை, மாறாக தீவிர ஆர்வம் கொண்ட மாணவரின் ஆர்வமாக இருந்தது... அதிமுக்கிய சமூக பிரச்சினைகள் மீதான இந்த தீவிர ஆர்வமே ட்ரொட்ஸ்கியின் இயல்பாக இருந்தது, அவர் இதே உள்ளார்ந்த விருப்பத்துடன் போர் குறித்து ஆராய்ந்தார், அது பொருளாதாரம், மொழிகள் மற்றும் புரட்சிகர தத்துவத்துடன் அவரது ஆரம்ப கால தொடர்புகளை ஏற்படுத்தியது.” [19]

ட்ரொட்ஸ்கியிடம் அசாதாரண நிர்வாகமும், அமைப்புரீதியிலான திறமைகளும் நிறைந்திருந்தன. ஆனால் செம்படை மீதான ட்ரொட்ஸ்கி தலைமையின் முக்கிய அம்சம் என்னவென்றால், ரஷ்யாவுக்குள் செயல்பட்டு வந்த சமூக சக்திகளுக்கும், உலக ஏகாதிபத்திய அமைப்புமுறைக்குள் செயல்பட்டு எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் புவிசார் அரசியல் பொருளாதார நலன்கள் மற்றும் விரோதங்களுக்கும், வெவ்வேறு நாடுகளுக்குள் வர்க்க போராட்டம் மீதும் மற்றும் ஒட்டுமொத்தமாக உலக சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியின் மீதும் இந்த அனைத்து உலகளாவிய நிகழ்ச்சிப்போக்குகளும் செலுத்தும் செல்வாக்கிற்கும் இடையிலான ஒன்றோடொன்று பிணைந்த சிக்கலான தொடர்பு குறித்த அவரது ஈடிணையற்ற வரலாற்று மற்றும் அரசியல் புரிதலாக இருந்தது. அனைத்துக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிப்போக்கிற்குள், தொழிலாள வர்க்கத்தின் போராட்டமும், அதுவும் குறிப்பாக, மார்க்சிச முன்னணிப்படையின் அரசியல் நடவடிக்கைகளும், ஒரு குறிப்பிட்ட பிரத்தியேக நிலைமைகளின் கீழ், உலக வரலாற்று போக்கைத் தீர்மானிப்பதில் தீர்க்கமான பாத்திரம் வகித்தன.

பல்வேறு எதிரிகளுக்கு எதிராகவும் மற்றும் ஆயிரக் கணக்கான மைல்களுக்கு விரிந்திருந்த பல்வேறு இராணுவ போர்முனைகள் நெடுகிலும் அவர் செம்படையின் போராட்டத்தை வழிநடத்திய போதினும், ட்ரொட்ஸ்கி தொடர்ந்து அக்டோபர் புரட்சியின் இடத்தை சோசலிச புரட்சியின் உலகளாவிய அபிவிருத்திக்குள் நிலைநிறுத்தி புரிந்து கொள்ள தொடர்ந்து முயன்றிருந்தார். உலகப் புரட்சிகளின் பரந்த போர்களங்களின் ஒரு பகுதியில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும், ஊடுருவி செல்வதற்கான மூலபாய வாய்ப்புகள் மற்றொரு பகுதியில் எழும்.

ஜேர்மனி மற்றும் ஹங்கேரி எழுச்சிகளின் தோல்விக்குப் பின்னர், போல்ஷிவிக்குகள், ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சியின் வெற்றியானது ஆரம்பத்தில் அவர் கருதியதைக் காட்டிலும் அதிக நீடித்த நிகழ்ச்சிப்போக்காக இருக்குமென்பதை உணர்ந்தார்கள். ஆனால் கிழக்கில் பெருந்திரளான மக்களின் எழுச்சி போல்ஷிவிக்குகளின் வெற்றியால் அரசியல் வாழ்வை விழிப்படைய செய்து, உலகப் புரட்சிக்கான அபிவிருத்திக்கு புதிய சாத்தியக்கூறுகளை வழங்கியது. ஆகஸ்ட் 1919 இல், ட்ரொட்ஸ்கி அவரது இராணுவ இரயிலில் இருந்து ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் (கட்சியின் பெயர் மாற்றப்பட்டிருந்தது) மத்திய குழுவுக்கு ஒரு நீண்ட சுற்றறிக்கை அனுப்பினார். அவர் எழுதினார்:

நமது செம்படை உலக அரசியலில் ஐரோப்பிய பிரதேசங்களை விட ஆசிய பிரதேசங்களில் மிகவும் பலம் வாய்ந்த ஒப்பிடவியலாத படையாகத் திகழ்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆகவே ஐரோப்பாவில் சம்பவங்கள் எவ்வாறு அபிவிருத்தி அடைகின்றன என்று நீண்டகாலம் வெறுமனே காத்திராமல், மாறாக ஆசிய களத்தில் நடவடிக்கை எடுக்க ஒரு ஐயத்திற்கிடமற்ற சாத்தியக்கூறு இங்கே நம்முன் திறக்கிறது. கிடைத்திருக்கும் இந்த தருணத்தில் இந்தியாவிற்கான பாதை கடந்து செல்வதற்கு மிகவும் சாத்தியமாக இருக்கிறது என்பதையும், இது சோவியத் ஹங்கேரிக்கான பாதையை விட நமக்கு தூரம் குறைந்தது என்பதையும் நிரூபிக்கும். இத்தருணத்தில், ஐரோப்பிய அளவுகோல்களில் பெரும் முக்கியத்துவமற்ற ஒரு வகையான இராணுவம், காலனிகளைச் சார்ந்திருக்கும் ஆசிய உறவுகளின் ஸ்திரமற்ற சமநிலையைக் குளறுபடிக்கு உள்ளாக்கி, ஒடுக்கப்பட்ட பெருந்திரளான மக்களின் பாகத்தில் எழுச்சிக்கு நேரடியாக அழுத்தமளித்து, ஆசியாவில் அதுபோன்றவொரு எழுச்சியின் வெற்றியை உத்தரவாதப்படுத்த முடியும்... 

யூரல் பகுதிகளிலும் சேர்பியாவிலும் நமது இராணுவ வெற்றிகள், ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்பட்ட ஆசியா எங்கிலும் சோவியத் புரட்சியின் கௌரவத்தை தனித்துவமான உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்தும். இந்த காரணியை சாதகமாகப் பயன்படுத்தி, யூரலின் ஏதேனுமொரு பகுதியிலோ அல்லது ஆசிய புரட்சியின் அரசியல் மற்றும் இராணுவ தலைமையிடமான ஒரு புரட்சிகர பயிலகமாக விளங்கும் துர்கிஸ்தானிலோ கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும். இது உடனடியாக எதிர்வரவிருக்கும் காலத்தில் மூன்றாம் அகிலத்தின் நிர்வாகக் குழுவை விட, அதிகளவில் நடைமுறைக்கு உதவக்கூடியதாக மாற்றமடையக்கூடும். [20]

1919 மற்றும் 1921 க்கு இடையிலான காலகட்டத்தில் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கம் அனுபவித்த பின்னடைவுகள், சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியானது போல்ஷிவிக்குகள் நிஜத்தில் எதிர்பார்த்ததை விட மிகவும் நீடித்த நிகழ்வுபோக்காக இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியது. இதற்கு அர்த்தம், பொதுவாக முதலாளித்துவ வரலாற்றாளர்கள் வாதிடுவதைப் போல, ரஷ்யாவில் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கான முடிவு, ஐரோப்பிய நிலைமைகளைக் குறித்த தவறான மதிப்பீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதல்ல. உண்மையில், அக்டோபர் புரட்சி, ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய தீவிரமயப்படலுக்கு பங்களிப்பு செய்ததுடன், [ஜேர்மனியிலும் ஹங்கேரியிலும் போலவே] அங்கேயும் மேலெழுச்சிகள் இருந்தன மற்றும் [இத்தாலியைப் போலவே] பாரிய வேலைநிறுத்தங்கள் இருந்தன. ஆனால் இத்தகைய இயக்கங்களின் தோல்வியானது, புரட்சிகர முன்னோக்கின் குறிப்பிட்ட கூறுபாடுகளில் மீள்திருத்தம் செய்வதை தேவையானதாக்கியது.

அக்டோபர் புரட்சியில் இருந்தும் மற்றும் அதற்குப் பின்னரும் நிச்சயமாக முக்கிய படிப்பினைகள் கிடைத்தன. முதலாவதாக, சோசலிச புரட்சியின் வெற்றி, குறிப்பிட்ட மட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்திற்கு தலைமை வழங்க தகைமை கொண்ட ஒரு புரட்சிகர மார்க்சிச கட்சி இருக்க வேண்டும் என்பதைச் சார்ந்துள்ளது, இது 1914 க்கு முன்னர் குறிப்பிட்டளவு மதிப்பீடு செய்யப்படாமல் இருந்திருக்கலாம். ஒரு நீடித்த அரசியல் காலகட்டத்திற்கான புரட்சியின் தலைவிதி வெறும் ஒரு சில முக்கிய நாட்களுக்குள்ளேயே முடிவெடுக்கப்படலாம் என்பதால் தலைமை பற்றிய பிரச்சினை இதில் பங்களிப்பு செய்கிறது என்ற உண்மை, ஓர் அசாதாரண அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும். இரண்டாவது, அக்டோபர் புரட்சியின் அனுபவம் சோசலிசப் புரட்சி குறித்த முதலாளித்துவவாதிகளின் அச்சத்தை மிகவும் கூர்மைப்படுத்தி இருந்தது.


கார்ல் லீப்க்நெக்ட்

போல்ஷிவிக் வெற்றியை இனி மாற்றமுடியாது என்பதையும்,  அதிகாரத்தை இழப்பது என்பது என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதையும் ஆளும் உயரடுக்குகள் உணர்ந்த உடனேயே, அவை அந்த அனுபவம் மீண்டும் ஏற்படாதவாறு என்ன விலை கொடுத்தாவது தடுக்கத் தீர்மானகரமாக இருந்தன. அரசியல் அபாயம் மீது அதிகரித்த இந்த விழிப்புணர்வு, தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் முன்னணிப்படைக்கு எதிரான எதிர்புரட்சிகர வன்முறையை பெருமளவில் ஒன்றுகுவிப்பதற்கு இட்டுச் சென்றது. ஜனவரி 1919 இல் புரட்சிகர ஸ்பாட்டசிஸ்ட் எழுச்சியை இரத்தம்தோய ஒடுக்கியபொழுது, ரோசா லுக்செம்பேர்க்கும் கார்ல் லீப்னெக்ட்டும் பேர்லினில் கொல்லப்பட்டனர். ஐரோப்பா எங்கிலும் பாசிச இயக்கங்கள் கட்டமைக்கப்பட்டன.

ட்ரொட்ஸ்கி ஜூலை 1921 இல் எச்சரித்தார், முதலாளித்துவ வர்க்கம் "அதன் படைகள் மற்றும் ஆதாரவளங்களை, ஏமாற்றுவதற்கான அரசியல் மற்றும் இராணுவ வழிவகைகளை, அச்சுறுத்தல்களை, மற்றும் ஆத்திரமூட்டல்களை மிகப் பிரமாண்டமாக ஒருங்குவிக்கிறது, அதாவது சமூக சிதைவால் அது மிக உடனடியாக அச்சுறுத்தப்படும் அத்தருணத்தில் அதன் வர்க்க மூலோபாயத்தில் இருந்து இவை மலர்கின்றன.” முதலாளித்துவ நெருக்கடி மற்றும் உடைவின் சகாப்தம் முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்புரட்சிகர மூலோபாயம் மலர்வதில் அதன் வெளிப்பாட்டைக் காண்கிறது, இதன் தன்மையை ட்ரொட்ஸ்கி வர்ணித்தார், “பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக, அறிஞர்களது தேனொழுகும் உபதேச அறக்கருத்துக்களில் இருந்து, வேலைநிறுத்தக்காரர்கள் மீது எந்திர-துப்பாக்கி பயன்படுத்துவது வரையில், ஒரு வகையான கூட்டுப் போர் தொடுக்கப்படுகின்றது". [21]

தனது கையிலுள்ள அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி தனது ஆட்சிக்கான அனைத்தது அச்சுறுத்தல்களையும் அழிக்க தீர்மானித்திருக்கும் முதலாளித்துவத்திற்கு தொழிலாள வர்க்கம் எவ்வாறு விடையிறுப்பது? ட்ரொட்ஸ்கி விடையிறுத்தார்: “ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் பணியானது, முதலாளித்துவ வர்க்கத்தின் சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட எதிர்புரட்சிகர மூலோபாயம் முழுவதையும், முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அதைப் போலவே சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட அதன் சொந்த புரட்சிகர மூலோபாயத்துடன் எதிர்கொள்வதை உள்ளடக்கி இருக்கும்.” [22]

* * * * *

1921 மற்றும் 1924 க்கு இடையிலான ஆண்டுகள், சோவியத் ஒன்றியத்தில் அரசியல் மாற்றத்தின் ஒரு முக்கிய காலகட்டத்தைக் குறித்து நின்றது. அதற்கு முந்தைய ஏழு ஆண்டுகளின் போது, 1914 இல் இருந்து 1921 வரையில், ரஷ்யா, அரசியல் மற்றும் சமூக மேலெழுச்சியின் ஒரு மலைப்பூட்டும் மட்டத்தை அனுபவித்திருந்தது. ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் தோல்விகள், சோவியத் ஒன்றியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார தனிமைப்படல் தொடரும் என்பதை அர்த்தப்படுத்தியது. அவ்வாறு இருந்தாலும் கூட, சோவியத் ஒன்றியம் பல தசாப்தங்களுக்கு இல்லையென்றாலும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் தனிமைப்படலை முகங்கொடுக்கும் என்று அப்போதும் நம்பப்பட்டது. மார்ச் 1921 இல் புதிய பொருளாதாரக் கொள்கை (New Economic Policy) அறிமுகப்படுத்தப்பட்டதில், முதலாளித்துவ சந்தை சக்திகளுக்கு கணிசமான விட்டுக்கொடுப்புகளை உள்ளடக்கி இருந்தது, இவை ஒரு அவசியமான பின்வாங்கலாக, முற்றிலும் சட்டபூர்வத்தன்மையோடு, நியாயப்படுத்தப்பட்டன. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு எந்திரத்திற்குள் அதிகரித்த அதிகாரத்துவமயமாக்கலுடன் தொடர்புபட்டு, அதற்கடுத்து முதலாளித்துவ சக்திகள் பலமடைந்ததும், மேற்கு ஐரோப்பாவில் தற்காலிகமாக முதலாளித்துவம் ஸ்திரமடைந்தமையும் குறிப்பிடத்தக்க அரசியல் விளைவுகளை கொண்டிருந்தன. அங்கே 1922 இன் இறுதிவாக்கில், சோவியத் அரசின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்த புரட்சிகர உத்வேகம் குறைந்து வருவதற்கான அதிகரித்த அறிகுறிகள் இருந்தன. இது கட்சித் தலைமைக்குள் தேசிய பேரினவாத போக்குகளின் மீளெழுச்சியில் அரசியல் வெளிப்பாட்டைக் கண்டது.

மே 1922 இல் தீவிர பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட லெனின், அக்டோபர் 1922 வரையில் அரசியல் நடவடிக்கைக்கு திரும்பி இருக்கவில்லை. கட்சி தலைமைக்குள் மாறியிருந்த அரசியல் சூழலைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். ஜோர்ஜிய சோவியத் குடியரசின் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளை ஸ்ராலின் அவமதிப்பாக கையாண்ட விதத்தை பலமாக ஆட்சேபித்த லெனின், அவரை "மாபெரும் ரஷ்ய பேரினவாத அச்சுறுத்தல்" என்று வர்ணித்தார். அவரது கடைசி அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக, மார்ச் 1923 இல், லெனின் ஸ்ராலின் உடனான தனது அனைத்து தனிப்பட்ட உறவுகளையும் துண்டித்துக் கொள்ள அச்சுறுத்தினார். ஆனால் அதற்கு வெறும் ஒருநாள் கழித்து, அவர் பெரியளவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், இத்துடன் அவர் அரசியல் வாழ்வு நிறைவடைந்தது. ஜனவரி 21, 1924 இல் லெனின் மரணமடைந்தார்.

அக்டோபர் 1923 இல், கம்யூனிஸ்ட் கட்சி ஜேர்மனியில் மற்றொரு மிக முக்கிய புரட்சிகர சந்தர்ப்பத்தைச் சிதறடித்தது. மற்றொரு மிக முக்கிய தோல்வி பல்கேரியாவில் ஏற்பட்டது. ரஷ்யாவில் தொடங்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் தொடங்கி இருந்த புரட்சிகர மேலெழுச்சிகளின் காலகட்டம் முடிவுற்றது என்பதாக இந்த தோல்விகள் பரவலாக விளங்கப்படுத்தப்பட்டன. ஒரு பிரதான முதலாளித்துவ நாட்டில் ஒரு வெற்றிகரமான புரட்சியானது ரஷ்யாவின் தனிமைப்படலை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு சோசலிச பொருளாதார அபிவிருத்திக்கு ஆதாரவளங்களை வழங்கும் சாத்தியக்கூறு மீது, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிலும் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டது. 

லெனின் இப்போது காட்சியிலிருந்து அகன்றிருந்த நிலையில், வேறெந்த தலைவரை விடவும் அதிகமாக அக்டோபர் புரட்சிக்கும் உலக சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான தொடர்புக்கு உருவ வெளிப்பாடாக விளங்கிய லியோன் ட்ரொட்ஸ்கி, அதிகரித்தளவில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். 1924 இலையுதிர் காலத்தில் பிரசுரிக்கப்பட்ட அக்டோபரின் படிப்பினைகள் என்ற நூலில் கிளர்ச்சிக்கான அந்த தலைவர், கிளர்ச்சிக்கு முன்னர் போல்ஷிவிக் கட்சிக்குள் நிலவிய அரசியல் போராட்டங்களை மீளாய்வு செய்திருந்த நிலையில், அது ட்ரொட்ஸ்கி மற்றும் நிரந்தரப் புரட்சி தத்துவம் மீதான ஒரு கொடிய அரசியல் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. ஒழுங்கமைப்பதிலும், கிளர்ச்சியின் வெற்றியிலும் ட்ரொட்ஸ்கி வகித்த மத்திய பாத்திரம் மட்டுமல்ல, அதற்கடுத்து எதிர்ப்புரட்சிகர படைகள் மீதான செம்படையின் வெற்றியும் மறுக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவுக்குள் இருந்த அவர் எதிரிகள், —பிரதானமாக காமனேவ், சினோவியேவ், ஸ்ராலின்— அவரது நிரந்தரப் புரட்சி தத்துவம் அப்போது எது "லெனினிசம்" என்று குறிப்பிடப்பட்டு வந்ததோ, அதன் ஒரு திருத்தல் என்றும், அதிகாரத்திற்கான போராட்ட தயாரிப்பில் போல்ஷிவிக் கட்சி பின்பற்றிய மூலோபாயத்துடன் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வாதிட்டனர்.

ஏப்ரல் 1917 இல் காமனேவ் மற்றும் ஸ்ராலினின் போக்குக்கு எதிரான லெனினின் அரசியல் போராட்டம், ஒரு சிறிய பூசல் என்பதற்கு அதிகமாக ஒன்றுமில்லை என்று நிராகரிக்கப்பட்டது. லெனினின் ஏப்ரல் ஆய்வுரைகள் அறிமுகப்படுத்திய முன்னோக்கு, பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரத்திற்கான பழைய போல்ஷிவிக் வேலைதிட்டத்திலிருந்து தர்க்கரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்டதாகவும், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.

“பெரும் பொய்யின்" சகாப்தம் ஆரம்பமாகி இருந்தது. நவம்பர் 1924 இல், ட்ரொட்ஸ்கிசமா அல்லது லெனினிசமா என்று தலைப்பிட்டு, ட்ரொட்ஸ்கியின் மதிப்பைக் கெடுத்து சிறுமைப்படுத்தும் நோக்கில், காமனேவ் அளித்த ஒரு நீண்ட அறிக்கை, தங்குதடையற்ற வரலாற்று பொய்மைப்படுத்தலை தொடங்கி வைத்தது. இது சோவியத் அரசியல் வாழ்வின் தலையாய குணாம்சமாக மாற இருந்தது. காமனேவ் வலியுறுத்தினார், ட்ரொட்ஸ்கி,

ரஷ்ய புரட்சியில் தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான உறவுகளைக் குறித்த லெனினின் தத்துவத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளவில்லை. அவர் அக்டோபருக்கு பின்னரும் கூட அதை புரிந்து கொள்ளவில்லை, விவசாயிகளுடன் எந்தவித பிளவுமின்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எட்டுவதற்கு கட்சி உபாயங்களை மேற்கொண்ட போது, நமது கட்சியின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் அவர் அதை புரிந்து கொள்ளவில்லை. அவரால் “முற்றுமுழுதாக நிரூபிக்கப்பட்டதாக” நம்பப்பட்ட அவரது சொந்த தத்துவத்தால் இதைப் புரிந்து கொள்வதிலிருந்து அவர் தடுக்கப்பட்டிருந்தார், ட்ரொட்ஸ்கியின் தத்துவம் சரியாக நிரூபிக்கப்பட்டிருந்தால், ரஷ்யாவில் எந்தவிதமான சோவியத் அதிகாரமும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருந்திருக்காது என்பதையே அது அர்த்தப்படுத்தி இருக்கும். [23] 

ட்ரொட்ஸ்கி மீதான காமனேவின் தாக்குதல் மற்றும் நிரந்தரப் புரட்சி தத்துவம் மீதான பழியுரையில் இருந்த அரசியல், தத்துவார்த்த சாராம்சம், 1917 இல் நிராகரிக்கப்பட்டிருந்த தேசியரீதியில் நோக்குநிலை கொண்ட முன்னோக்கை, புதிய பொருளாதார கொள்கையின் உள்ளடக்கத்தில் மீட்டமைப்பதற்கான முயற்சியாக இருந்தது. காமனேவ்வின் தாக்குதல், அனைத்துக்கும் மேலாக, தேசியக் கொள்கையை தீர்மானிப்பதில் உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கை முதன்மைப்படுத்த வேண்டுமென்ற ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலுக்கு எதிராக திரும்பி இருந்தது. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம், "ரஷ்யாவின் தொழிலாளர் அரசாங்கத்தை, முற்றிலுமாக மேற்கின் உடனடி பாட்டாளி வர்க்க புரட்சியைச் சார்ந்திருக்க செய்யும்" என்பதால் காமனேவ் அதை நிராகரித்தார்.[24] ட்ரொட்ஸ்கியின் தத்துவத்தில் எது குறிப்பாக ஆட்சேபிக்கத் தக்கதாக உள்ளது என்றால், காமனேவ் வலியுறுத்தினார், ரஷ்யாவின் முதலாளித்துவ அபிவிருத்தி பிரச்சினைக்கு “ஒரு தேசிய புரட்சியின் கட்டமைப்புக்குள்" எந்த தீர்வும் இல்லை என்ற அதன் வலியுறுத்தல் தான். [25]   

1924 நவம்பரில் ட்ரொட்ஸ்கி மீதான காமனேவின் பழியுரை, 1924 டிசம்பரில் ஸ்ராலின், அக்டோபர் புரட்சியின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் மீது வெளிப்படையாகவே தேசியவாத திருத்தல் செய்ய வழிவகுத்தது. “அக்டோபர் புரட்சியும், ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் தந்திரோபாயங்களும்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், ஸ்ராலின், 1906 இல் பிரசுரிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் நமது புரட்சி என்ற துண்டறிக்கை மீது கவனம் செலுத்த அழைப்புவிடுத்தார், அதில் ட்ரொட்ஸ்கி எழுதி இருந்தார்: “ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் நேரடியான அரசு ஆதரவு இல்லாமல், ரஷ்யாவில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தில் இருக்க முடியாது என்பதோடு, அதன் தற்காலிக இடத்தை ஒரு நீடித்த சோசலிச சர்வாதிகாரமாக மாற்ற முடியாது. இதில் ஒரு தருணத்திலும் அங்கே எந்த ஐயமும் கிடையாது.” ஸ்ராலின் தொடர்ந்தார்:

இந்த மேற்கோள் என்ன அர்த்தப்படுத்துகிறது? "ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்திடமிருந்து நேரடியான அரசு ஆதரவில்லாமல்", அதாவது ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர், தனியொரு நாட்டில், இங்கே ரஷ்யாவில், சோசலிசத்தின் வெற்றி சாத்தியமில்லை என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.

“ஒரு முதலாளித்துவ நாட்டை தனியாக எடுத்துக் கொண்டால்" அதில் சோசலிச வெற்றிக்கான சாத்தியக்கூறு குறித்த லெனினின் ஆய்வுரைகளுக்கும் இந்த "தத்துவத்திற்கும்" இடையே பொதுவாக இருப்பது என்ன?

தெளிவாக, இதில் எதுவுமே பொதுவாக இல்லை. [26]

ஸ்ராலின், புரட்சிகர சர்வதேசியவாதத்தின் இடத்தில் தேசிய மீட்சிவாதத்தின் (messianism) ஒரு வடிவத்தைக் கொண்டு பிரதியீடு செய்வது, ட்ரொட்ஸ்கியின் கண்ணோட்டங்கள் மீதான பின்வரும் குற்றச்சாட்டில் தொகுத்தளிக்கப்பட்டது:

நமது புரட்சியின் பலம் மற்றும் ஆற்றல்கள் மீது நம்பிக்கையின்மை, ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் பலம் மற்றும் ஆற்றல் மீது நம்பிக்கையின்மை — இதுவே "நிரந்தர புரட்சி" தத்துவத்தில் வேரூன்றியுள்ளது. [27]

கட்சி தேசிய தற்காப்புவாதத்தை (national defensism) ஏற்பதை உடைக்கவும், ஏகாதிபத்திய போருக்கு எதிராக சர்வதேச புரட்சிகர போராட்டத்தை நோக்கி நேரடியாக கவனம் செலுத்தச் செய்யவும் லெனின் போராடிய போது, அவர் எதை எதிர்த்து போராடி இருந்தாரோ அந்த தேசியவாத போக்குகள் மீளெழுச்சி பெற்றதையே, ட்ரொட்ஸ்கி மீதான 1924 தாக்குதலும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை மறுதலித்தலும் குறித்தன. தனியொரு நாட்டில் சோசலிசம் வேலைத்திட்டத்தின் வெளியீடானது, எதிலிருந்து சோவியத் ஒன்றியம் எழுந்ததோ அந்த உலக சோசலிச புரட்சியிலிருந்து அது அன்னியப்பட்டதில் ஒரு தீர்க்கமான படியைக் குறித்து நின்றது. ட்ரொட்ஸ்கி எச்சரித்தவாறு, வேகமாக அதிகரித்து வந்த அதிகாரத்துவ உயரடுக்கில், அரசியல் ஆதரவைக் கண்ட இந்த தேசியவாத பின்னோக்கியதன்மை, சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியை உலக சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து பிரித்தது. உலக சோசலிசப் புரட்சியின் மத்திய மூலோபாய தலைமையகமாக 1919 இல் ஸ்தாபிக்கப்பட்ட கம்யூனிச அகிலம், சோவியத் ஒன்றியத்தின் எதிர்ப்புரட்சிகர வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு தொங்குதசையாக கீழிறக்கப்பட்டது. 1929 இல் சோவியத் ஒன்றியத்திலிருந்து ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்பட்டமை, அதிகாரத்துவ ஆட்சிக்கும் உலக சோசலிச புரட்சிக்கும் இடையிலான முறிவை அடையாளப்படுத்தியது. ஸ்ராலின், அவரது கிரெம்ளின் அலுவலகத்தில் பாதுகாப்பு புடைசூழ, இரகசிய பொலிஸ் ஆதரவுடன் ஒரு தேசிய அரசை ஆட்சி செய்தார். ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கி, நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரது சிந்தனைகள் மற்றும் அவரது பேனா என்ற மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் உலக சோசலிசப் புரட்சிக்கான வரலாற்று நிகழ்ச்சிப்போக்கை தொடர்வதற்கு தலைமையேற்று, அதற்காக அர்ப்பணித்திருந்தார்.

* * * * *

ஸ்ராலினின் துரோகத்தனமான மற்றும் நோக்குநிலை பிறழ்ந்த கொள்கைகள், 1930 களின் போது, ஜேர்மனியிலும், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இன்னும் பல நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தை சீரழித்த தோல்விகளுக்கு இட்டுச் சென்றன.

சோவியத் ஒன்றியத்திற்குள் எதிர்ப்புரட்சிகர தேசியவாத பிற்போக்குத்தனத்தால், மார்க்சிச-கல்வியூட்டப்பட்ட தொழிலாளர்கள், கட்சி நடவடிக்கையாளர்கள், புரட்சிகர புத்திஜீவிகள் மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் அரசியல்ரீதியில் கல்வியூட்டப்பட்டிருந்த கலைஞர்களின் ஒட்டுமொத்த தலைமுறையும் சீரழிந்த வடிவத்தை ஏற்றது. 1936 மற்றும் 1940 க்கு இடையே மாஸ்கோ விசாரணைகள் மற்றும் மாபெரும் பயங்கரம் (Great Terror) ஆகியவை அரசியல் படுகொலையின் ஒரு வடிவமாக இருந்தன, குறிப்பாக அவை சர்வதேசியவாத வேலைத்திட்டத்துடனும் மற்றும் சோவியத் அரசு எதன் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டதோ அந்த புத்திஜீவித கலாச்சாரத்துடன் அடையாளம் காணப்பட்ட அனைவரையும் சரீரரீதியில் நிர்மூலமாக்க இலக்கு வைத்திருந்தன.

1917 அக்டோபர் புரட்சிக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான உறவைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். பிந்தையது முந்தையதில் இருந்து உருவானது. ஆனால் அக்டோபர் புரட்சியும் சோவியத் ஒன்றியமும் சரிசமமான நிகழ்வுப்போக்கல்ல. அக்டோபர் புரட்சி, உலக சோசலிசப் புரட்சியின் வரலாற்று சகாப்தத்தின் தொடக்கத்தை குறித்தது. சோவியத் ஒன்றியத்தின் வரலாறு அந்த சகாப்தத்தின் ஒரு மிகப் பெரிய அத்தியாயமாக இருந்தது. அக்டோபர் புரட்சியை, ஒரு சகாப்தத்தின் வெளிப்பாடாகவும் சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கத்தை, ஒரு விஷேடமான அரசியல் காலகட்டமாக நோக்குவதற்கும் இடையிலான வித்தியாசத்தை அங்கீகரிப்பது அரசியல் மொழியில் பிரதிபலித்தது. முதலாளித்துவ அமைப்புமுறை எதிர்காலத்தில் தங்களின் நாடுகளிலும் தூக்கியெறியப்படுமென முன்அனுமானித்த புரட்சியாளர்கள், அவர்களின் எதிர்கால "சோவியத் ஒன்றியத்தைக்" குறித்து பேசியிருக்கமாட்டார்கள், மாறாக அவர்களின் "அக்டோபரை" குறித்துத்தான் பேசியிருப்பார்கள்.

நிச்சயமாக, சோவியத் ஒன்றியத்திற்குள் புரட்சியின் சாதனைகள் அளப்பரியது தான். அக்டோபர் புரட்சி, ரஷ்ய பேரரசாக இருந்ததை அதிவேகமாக மாற்றியது. புரட்சிக்கு முன்னர், மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதத்தினர் படிப்பறிவின்றி இருந்தனர். குறிப்பிடத்தக்க விதத்தில் ஒரு தலைமுறைக்கும் குறைந்த காலத்திற்குள், கல்வியறிவின்மை நடைமுறையளவில் களைந்தெறியப்பட்டது. அக்டோபர் புரட்சியின் ஒரு விளைவாக உற்பத்தி கருவிகளின் தேசியமயமாக்கல், குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றங்களை சாத்தியமாக்கியது. முதலாளித்துவம்-அல்லாத அடித்தளத்தில் ஒரு முன்னேறிய சமூகத்தை நிறுவுவது சாத்தியமே என்பதை சோவியத் ஒன்றியம் 74 ஆண்டுகால வரலாற்றின் போக்கில் எடுத்துக்காட்டியது.

சோவியத் ஒன்றியம் ஒரு சோசலிச சமூகமாக இருக்கவில்லை. காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சியில் ட்ரொட்ஸ்கி விவரித்தவாறு, அது முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையே, ஒரு இடைமருவு ஆட்சியாக, அதன் தலைவிதி இன்னமும் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாக இருந்தது. காட்டுமிராண்டித்தனமான பயங்கரத்தின் அடிப்படையில் ஸ்ராலின் நடைமுறைப்படுத்திய தேசியவாத கொள்கைகள், முடிவெடுக்கும் நிகழ்ச்சிப்போக்கில் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டைக் கோரும் சோசலிச திட்டமிடலை கேலிக்கூத்தாக்கியது. ட்ரொட்ஸ்கி எதை “மக்கள் மீதான அதிகாரத்துவத்தின் பொறுப்பற்ற கொடுங்கோன்மை" என்று வர்ணித்தாரோ, அது, தேவையில்லை என்ற அளவுக்கு மூர்க்கமாக மற்றும் ஆதார வளங்களை முரட்டுத்தனமாக சீரழித்ததுடன், மனித உயிர்களை கொடூரமாக வீணடித்தது.

சமூகத்திற்குள் தனக்கென ஒரு தனிச்சலுகை கொண்ட இடத்தை உறுதிப்படுத்தி வைப்பதற்காக அரசு ஒடுக்குமுறை அங்கங்கள் மீது அதன் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, உரிமையின்றி அரசு அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம், சோசலிச சமத்துவவாதத்தின் மிக அடிப்படைக் கோட்பாடுகளையும் மீறியது. முன்னாள் தோழர்களையும் எண்ணற்ற மார்க்சிச புரட்சியாளர்களையும் சித்திரவதை மற்றும் படுகொலை செய்வதை நோக்கி தனிப்பட்டரீதியில் உத்தரவிட்டிருந்த ஸ்ராலின், வரலாற்றிலேயே மிக மோசமான குற்றவாளிகளின் தரவரிசையில் இடம் பெறுகிறார்.   

1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட நான்காம் அகிலம், அக்டோபர் புரட்சியின் ஒரு விளைவாக சாதிக்கப்பட்ட சமூக வெற்றிகள் அனைத்தையும் பாதுகாத்தது. ஆனால் ரஷ்ய புரட்சியால் சாத்தியமாக்கப்பட்ட சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் கூறுபாடுகளான அத்தகைய சாதனைகள் மீதான அதன் பாதுகாப்பு, ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்பின் அடிப்படையிலேயே, அதை அரசியல்ரீதியில் தூக்கியெறிவதற்காக போராடுவதனூடாகவே நடத்தப்பட்டது. 

* * * * *

இந்தாண்டு நாம் எதை நினைவுகூர்ந்துள்ளோம் என்றால் உலக சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டை ஆகும். பெப்ரவரி மற்றும் அக்டோபர் 1917 க்கு இடையே ரஷ்யாவில் நடந்த அதிமுக்கிய சம்பவங்களை, இந்த வரலாற்று உள்ளடக்கத்தில் தான், ஆய்வு செய்து விவரித்துள்ளோம். இந்த சொற்பொழிவுகள், பிற்போக்கு கல்வியாளர்கள் மற்றும் சோசலிச-விரோத வெகுஜன ஊடகங்களின் முடிவில்லா பொய்மைப்படுத்தல்கள் மற்றும் அவதூறுகளுக்கு ஒரு இன்றியமையா அரசியல் மற்றும் புத்திஜீவித மாற்று மருந்தை வழங்கி உள்ளன.

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது, அது உலக முதலாளித்துவத்தின் ஒரு முக்கியத்துவமான வெற்றியாக புகழப்பட்டது. நீண்டகாலமாக இருந்து வந்த கம்யூனிச மற்றும் சோசலிச ஆவியுரு வேருடன் களைந்தெறியப்பட்டு விட்டதாகவும், வரலாறு முடிவுக்கு வந்து விட்டதாகவும்!, அக்டோபர் புரட்சி அழிவில் போய் முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. நிச்சயமாக, அதுபோன்ற பிரகடனங்கள், அதற்கு முந்தைய 74 ஆண்டுகளில் என்ன நடந்திருந்ததோ அவற்றைக் குறித்த ஒரு கவனமான ஆய்வால் ஆதரிக்கப்பட்டிருக்கவில்லை. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியின் தோல்வியில் சோவியத் ஒன்றியம் வகித்த மத்திய பாத்திரம் உட்பட, சோவியத் ஒன்றியத்தின் பிரமாண்டமான சாதனைகள் மட்டுமல்ல, மாறாக சோவியத் மக்களின் சமூக மற்றும் கலாச்சார நிலைமைகளில் அது ஏற்படுத்திய அளப்பரிய முன்னேற்றங்கள் எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இருபதாம் நூற்றாண்டு வரலாற்றின் முக்கிய பொய்மைப்படுத்தல்கள், சோவியத் சாதனைகளின் ஒட்டுமொத்த நினைவுகள் அனைத்தையும் மீண்டும் சேகரிக்கப்படுவதைத் துடைத்தழிக்க முயன்றதற்கு அப்பாற்பட்டு, அவை சோசலிசத்தின் தலைவிதியை ஒரு தேசியவாத அக்டோபர் புரட்சியின் சொல்லாடல்களின் அடிப்படையில் அமைக்க முயன்றன. அதிகாரத்தை போல்ஷிவிக்குகள் கைப்பற்றியமையானது, ரஷ்ய வரலாற்றில் நடந்த ஒரு நெறிபிறழ்ந்த, சட்டத்திற்கு புறம்பான, குற்றகரமான சம்பவம் என்றும் கூட இவற்றில் சித்தரிக்கப்படுகிறது. அதையொட்டி, அக்டோபர் குறித்த நிஜமான போல்ஷிவிக் கருத்துரு ஏளனப்படுத்தப்பட்டது அல்லது புறக்கணிக்கப்பட்டது. நீடித்து நிலைத்திருக்கும் வரலாற்று அரசியல் தொடர்புகள் எதுவும் அக்டோபர் புரட்சிக்கு ஒப்படைக்கப்படவில்லை.

எவ்வாறிருப்பினும், அக்டோபர் புரட்சியின் சகல சட்டபூர்வத்தன்மையையும் தொடர்புகளையும் இல்லாதாக்கும் நோக்கில், இந்த பிற்போக்குத்தனமான சொல்லாடல்கள், ஒரு சிறிய விடயத்தைச் சார்ந்திருந்தன: இருபதாம் நூற்றாண்டில் போர் மற்றும் புரட்சியை முன்கொண்டுவந்த நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் உலக முதலாளித்துவ அமைப்புமுறை தீர்த்து கடந்து வந்துவிட்டது என்பதே அது.

துல்லியமாக இவ்விடத்தில் தான், அக்டோபர் புரட்சியையும் மற்றும் சோசலிசத்தை அடைவதற்கான எதிர்கால முயற்சிகள் அனைத்தையும் மதிப்பிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் உடைந்து விழுகின்றன. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) கலைக்கப்பட்டதற்குப் பின்னர் கடந்து சென்றுள்ள கால் நூற்றாண்டு காலம், தீவிரப்பட்ட சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் குறிக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு நீடித்த போரின் காலகட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 1991 இல் ஈராக் மீதான முதல் அமெரிக்க படையெடுப்புக்குப் பின்னர் இருந்து, அமெரிக்க குண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் அழிக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை மிக எளிதாக ஒரு மில்லியனைத் தாண்டிச் செல்கிறது. புவிசார் அரசியல் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு மூன்றாம் உலகப் போர் வெடிப்பானது மிக அதிகமாக தவிர்க்கவியலாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

2008 பொருளாதார நெருக்கடி, உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஸ்திரமற்றதன்மையை அம்பலப்படுத்தியது. சமூகப் பதட்டங்கள், ஒரு நூற்றாண்டிலேயே அதன் அதிகபட்ச சமூக சமத்துவமின்மை மட்டங்களின் பின்புலத்தில், அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் வாழும் மூன்று மிகப்பெரிய செல்வந்தர்கள், இந்நாட்டு மக்களில் அடிமட்ட 50 சதவீதத்தினரை விடவும் அதிகமாக பெருமளவில் செல்வவளத்தைக் குவித்து வைத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன. செல்வந்தர்கள் "வேறு எவராகவோ" உள்ளனர் என்பது மட்டுமல்ல. அவர்கள், பெருந்திரளான மக்கள் நாளாந்தம் வாழும் யதார்த்தத்தில் இருந்து முற்றிலும் விலகி, கிட்டத்தட்ட முழுமையாக வேறொரு கிரகத்தில் வாழ்கிறார்கள்.

இந்த நிலைமை இவ்வாறே போய் கொண்டிருக்க முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்த சிந்தனைகளும், முன்மாதிரிகளும் மக்களின் நனவில் மிக ஆழமாக உள்ளமைந்துள்ளன. முதலாளித்துவ ஜனநாயகத்தின் பாரம்பரிய அமைப்புகளால், தீவிரமடைந்து வரும் சமூக மோதலின் அழுத்தத்தைத் தாங்க இயலாததால் தான், ஆளும் உயரடுக்குகள் மிக பகிரங்கமாக முன்னிலும் அதிகமாக எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்புகின்றன. ட்ரம்ப் நிர்வாகம், முதலாளித்துவ ஜனநாயகம் உலகளவில் உடைந்துவிட்டதன் வெறும் ஒரேயொரு அருவருப்பான வெளிப்பாடு தான். முதலாளித்துவ அரசை நடத்துவதற்கு இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகள் வகிக்கும் பாத்திரம் முன்னிலும் அதிகமாக பகிரங்கமாக மாறி வருகிறது.

இந்நூற்றாண்டு நெடுகிலும் பதிப்பிக்கப்பட்டுள்ள எண்ணற்ற கட்டுரைகள் மற்றும் நூல்களின் நோக்கம், அக்டோபர் புரட்சியின் மதிப்பைக் கெடுப்பதற்காவே உள்ளது. ஆனால் அக்டோபர் "பொருத்தமற்றது" என்ற அறிவிப்புகள், இத்தகைய பல பழியுரைகளில் மேலோங்கி உள்ள விஷமப் பிரச்சாரத்தின் தொனியால் பொய்யாகிவிடுகின்றன. அக்டோபர் புரட்சி ஒரு வரலாற்றுச் சம்பவமாக அல்ல, மாறாக நீடித்து நிலைத்திருக்கும் அபாயகரமான சமகாலத்திய அச்சுறுத்தலாகக் கையாளப்படுகிறது.

அக்டோபர் புரட்சி மீதான பழியுரைகளின் அடியிலிருக்கும் அச்சம், வரலாற்று பொய்மைப்படுத்தலில் ஒரு முன்னணி கல்வித்துறை நிபுணரான பேராசிரியர் சோன் மக்மீக்கன் (Sean McMeekin) எழுதிய ஒரு சமீபத்திய புத்தகத்தில் வெளிப்பாட்டைக் கண்டது. அவர் எழுதுகிறார்:

1917 இல் தொடங்கிய சித்தாந்த காலத்தில் பிறந்த, லெனினிசம் குறித்த வருந்தத்தக்க உண்மை என்னவென்றால், அணுஆயுதங்களைப் போலவே, அது, ஒருமுறை உருவாக்கப்பட்டு விட்டது, இனி அதை அழிக்க முடியாது. சமூக சமத்துவமின்மையோடு சேர்ந்து, அதை அழிப்பதற்கான சோசலிசவாதிகளின் இலட்சிய தூண்டுதலும், எப்போதும் நம்மிடையே நிலவும்… கடந்த நூறு ஆண்டுகள் நமக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கிறதென்றால், அது நமது பாதுகாப்புகளை இறுக்க வேண்டும் என்பதையும் மற்றும் சமூகத்தை செம்மைப்படுத்துவதற்கு சூளுரைத்து ஆயுதபாணியான தீர்க்கதரிசிகளை எதிர்க்க வேண்டும் என்பதையும் தான்.[28]

அக்டோபர் 27 அன்று நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரமான ஒரு கட்டுரையில், கட்டுரையாளர் ப்ரெட் ஸ்டீபன்ஸ் எச்சரித்தார்:

முதலாளித்துவம் மற்றும் நிதிய சேவைகளை குற்றகரமாக்குவதற்கான முயற்சிகளும் அனுமானிக்கத்தக்க விளைவுகளைக் கொண்டுள்ளன… ஒரு நூற்றாண்டு கடந்த பின்னரும், [சோசலிசம் எனும்] நுண்கிருமி அழித்தொழிக்கப்படவில்லை, அதை எதிர்க்கும் நமது எதிர்ப்பாற்றல் இன்னும் ஐயத்திற்குரியதாவே உள்ளது.

அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு நிறைவில், ஆளும் உயரடுக்கின் மார்க்சிச-விரோத வெறிப் பிரச்சாரம் ஒரு தனித்துவமான கொலைவெறி குணாம்சத்தை ஏற்றுள்ளது. சோசலிசம் பொருத்தமற்றது என்ற 1991 க்குப் பிந்தைய பாசாங்குத்தனத்தை இறுதியில் கைவிட்ட நியூ யோர்க் டைம்ஸ், ஸ்ராலின் புகழ் பாடும் வாழ்க்கை வரலாறை எழுதிய ஆசிரியரான சிமோன் செபாக் மொன்ரெஃபியோரே (Simon Sebag Montefiore) இன் ஒரு கட்டுரையை பிரசுரித்தது. அவர் எழுதினார்: 

சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் விளாடிமிர் லெனின் ஒழுங்கமைத்த அக்டோபர் புரட்சி, சோவியத் ஒன்றியம் உருக்குலைந்த போது, கற்பனை செய்து பார்க்க முடியாததாக இருந்ததுபோலவே இன்னும் அதனுடன் தொடர்புடையதாக இருக்கின்றது.

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரும், அதன் சம்பவங்கள் தொடர்ந்து எதிரொலித்து ஆர்வமூட்டிக் கொண்டிருக்கின்ற வேளையில், 1917 அக்டோபர், வீரசரிதமாக, காவியமாக வசீகரம்மிக்க ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. அது நடந்த விதத்தில் நடந்திருக்க சாத்தியமே இல்லை என்று தோன்றுமளவுக்கு அதன் விளைவுகள் அந்தளவுக்கு பிரமாண்டமாக இருந்தன.

[இடைக்கால] அரசாங்கம் அவரை [லெனினை] கண்டுபிடித்து கொன்றிருக்கலாம், ஆனால் அது அவ்வாறு செய்யத் தவறியது. அவர் வென்றார். [29]

மிகவும் பிரபலமான அந்த அமெரிக்க பத்திரிகையில் பிரசுரமான இந்த அறிக்கையை கொண்டு பார்த்தால், தாராளவாத கம்யூனிச-விரோதத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான வேறுபாடு கிட்டத்தட்ட முழுமையாக அழிந்து விடுகிறது. பாரிய தொழிலாள-வர்க்க இயக்கத்தின் மிகப்பெரும் தலைவரான லெனின், கொல்லப்பட்டிருக்க வேண்டுமாம். நியூ யோர்க் டைம்ஸின் தாராளவாத பதிப்பாசிரியர்களின் ஒப்புதலுடன், மொன்ரெஃபியோரே எழுதுகிறார், லுக்செம்பேர்க் மற்றும் லீப்னெக்ட் ஐ பாசிசவாதிகள் கையாண்டதைப் போல அவரை கையாண்டிருக்க வேண்டுமாம். இதில் உள்ள சேதி என்ன? முதலாளித்துவத்தை சோசலிசம் அச்சுறுத்துகிறது என்றால், சோசலிச இயக்கங்களின் தலைவர்களை வேட்டையாடி, கொன்று தள்ளுங்கள் என்பதுதான். இவ்வளவும், “வரலாற்று முடிவு”க்காக தாராளவாத ஜனநாயகத்தின் வெற்றிக்காக!

மொன்ரெஃபியோரே இன் கருத்துக்களைப் போன்றவை, முதலாளித்துவ சமுதாயத்தின் புத்திஜீவித பாதுகாவலர்களது தார்மீக சீர்குலைவை மட்டுமல்ல, மாறாக அவர்களின் ஒழுக்கக்கேடு மற்றும் அவநம்பிக்கைக்கும் சான்று பகிர்கின்றன.

மார்க்சிசம், சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தை மதிப்பிழக்க செய்ய எத்தனை முயற்சிகள் இருந்தாலும், உழைக்கும் மக்கள் இன்னமும் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீட்டை ஏக்கத்துடன் எதிர்பார்க்கின்றனர். 28 வயதுக்கு குறைந்த அமெரிக்கர்களிடையே (Millennials) பெரும் சதவீதத்தினர் ஒரு முதலாளித்துவ சமூகத்தை விட ஒரு சோசலிச அல்லது கம்யூனிச சமூகத்தில் வாழ விரும்புவதை புதிய கருத்துக்கணிப்பு ஒன்று எடுத்துக்காட்டுகிறது.

ஃபிரான்ஸ் மெஹ்ரிங் சரியாக இருந்தார். புரட்சிகள் நீண்டகாலத்திற்கு உயிர் வாழ்கின்றன. அக்டோபர் புரட்சி, வரலாற்றில் மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் உயிர் வாழ்கிறது.

* * * * *

இந்த நூற்றாண்டு நெடுகிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அக்டோபர் புரட்சியின் தோற்றுவாய்கள் மற்றும் முக்கியத்துவத்தை ஆய்வு செய்தும், விவரித்தும் அதன் நூற்றாண்டை நினைவுகூர்ந்துள்ளது. அக்டோபர் புரட்சி, அதன் அடித்தளத்தில் கொண்டிருந்த சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே அரசியல் போக்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) இந்த முக்கிய வரலாற்றுப் பணியைச் செய்துள்ளது.

நான்காம் அகிலம், உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் சமகாலத்திய வெளிப்பாடாகும். இப்போதைய இந்த தீர்க்கவியலாத முதலாளித்துவ நெருக்கடிக் காலகட்டத்தில், இந்த வேலைத்திட்டம் மீண்டுமொருமுறை ஆழ்ந்த பொருத்தத்தைப் பெற்று வருகிறது.

உலக சோசலிசத்திற்காக போராட எம்முடன் இணையுமாறு உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்புவிடுக்கிறோம்.

அக்டோபர் புரட்சியின் முன்னுதாரணம் நீடூழி வாழ்க!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நீடூழி வாழ்க!

உலக சோசலிசப் புரட்சியின் வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!

********

Notes

[1] “Neujahr 1918,” in Franz Mehring Gesammelte Schriften, Band 15 (Berlin: Dietz Verlag, 1977), p. 759.

[2] Quoted in Alexander Rabinowitch, The Bolsheviks in Power: The First Year of Soviet Rule in Petrograd (Bloomfield: Indiana University Press, 2007), p. 28.

[3] Ibid, p. 27

[4] Ibid

[5] Ibid, p. 29

[6] Session of the Petersburg Committee of the Social Democratic Labor Party of Russia (Bolshevik), November 1 (14), 1917, cited by Leon Trotsky in The Stalinist School of Historical Falsification, accessed at: https://www.marxists.org/archive/trotsky/1937/ssf/sf08.htm

[7] Ibid

[8] Ibid. The bracketed extrapolations are in the transcript published in The Stalin School of Falsification.

[9] Ibid

[10] Leon Trotsky, “Introduction to Ferdinand Lassalle’s Speech to the Jury ,” in Witnesses to Permanent Revolution, edited by Richard B. Day and Daniel Gaido (Leiden and Boston: Brill, 2009), pp. 444-45

[11] Lenin, Collected Works, (Moscow: Progress, 1977), Volume 24, p. 238

[12] Ibid, p. 238

[13] Lenin, Collected Works (Moscow: Progress, 1977), pp. 416-19

[14] Lenin Collected Works (Moscow: Progress, 1977), Vol. 26, p. 119

[15] Ibid, pp. 118-19

[16] https://www.theguardian.com/world/2017/nov/06/revolution-what-revolution-russians-show-little-interest-in-1917-centenary

[17] https://www.marxists.org/archive/luxemburg/1918/russian-revolution/ch01.htm

[18] The “Russian” Civil Wars 1916-1926: Ten Years That Shook the World (Oxford: University Press, 2017), p. 131.

[19] Leon Trotsky and the Art of Insurrection 1905-1917 (London: Frank Cass, 1988), pp. 63-64

[20] The Trotsky Papers 1917-1922, Volume I, edited and annotated by Jan M. Meijer (The Hague: Mouton & Co., 1964), pp. 623-25

[21] The First Five Years of the Communist International, Volume Two (London: New Park, 1974), pp. 2-4

[22] Ibid, p. 7

[23] Trotsky’s Challenge: The “Literary Discussion” of 1924 and the Fight for the Bolshevik Revolution, edited, annotated and introduced by Frederick C. Corney (Chicago: Haymarket, 2017), p. 244

[24] Ibid

[25] Ibid

[26] Ibid, p. 442

[27] Ibid, p. 447

[28] The Russian Revolution: A New History (New York: Basic Books, 2017)

[29] https://www.nytimes.com/2017/11/06/opinion/russian-revolution-october.html