Print Version|Feedback
Political crisis in Berlin as coalition talks for German government fail
ஜேர்மன் அரசாங்கம் அமைப்பதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், பேர்லினில் அரசியல் நெருக்கடி
Peter Schwarz
21 November 2017
ஜேர்மனியின் கூட்டாட்சி தேர்தல் முடிந்து எட்டு வாரங்களுக்குப் பின்னர், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம், பசுமை கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சிக்கு (FDP) ஆகியவற்றிற்கு இடையே ஜமைக்கா கூட்டணி எனப்படுவது மீதான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்திருப்பது, பேர்லினில் ஓர் ஆழ்ந்த நெருக்கடியை மட்டும் தூண்டிவிட்டிருக்கவில்லை, அது ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய அரசியலில் ஒரு திருப்புமுனையையும் குறித்து நிற்கிறது.
சமூக ஜனநாயகக் கட்சி, CDU உடனான மாபெரும் கூட்டணியைத் தொடர தயார் என்பதை அது அறிவிக்குமா, ஒரு சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா, அல்லது நெருக்கடியை இன்னும் நீடித்து இட்டுச் செல்லக்கூடிய புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்கப்படுமா என்றுள்ள நிலையில், விடயங்கள் எவ்வாறு முன்நகருமென்பது முற்றிலும் தெளிவாக இல்லை. ஆனால் ஒரு விடயம் தெளிவாக உள்ளது. ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் கருத்துவேறுபாடுகளை மேசையில் அமர்ந்து பேரம்பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற காலம் முடிவடைந்துள்ளது. சான்சிலர் அங்கேலா மேர்க்கெல்லின் சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அரசியல் சூழல் வலி நிறைந்ததாக மாறி வருகிறது, சமூக மோதல்கள் கடினமாகி வருகின்றன, உத்தியோகபூர்வ அரசியல் இன்னும் அதிகமாக வலதுக்கு நகர்ந்து வருகின்றன.
பொருளாதார நெருக்கடிகள், உள்நாட்டு அரசியல் மோதல்கள், மற்றும் தேசியவாத போக்குகளின் வளர்ச்சி மேலோங்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நீண்டகாலமாக ஜேர்மனி ஒரு ஸ்திரப்படுத்தும் சக்தியாக இருந்துள்ளது. இப்போது அது, Spiegel Online வார்த்தைகளில் குறிப்பிடுவதானால், அதன் சொந்த "பிரெக்ஸிட் தருணத்தை" மற்றும் "ட்ரம்ப் தருணத்தை" அனுபவித்து வருகிறது.
இந்நெருக்கடிக்கான காரணம், கடந்த நான்கு வாரங்களாக ஜமைக்கா பேச்சுவார்த்தைகளில் மேலோங்கி இருந்த, மாசு வெளியேற்றும் விகிதங்கள் மீதும், அகதிகளை ஏற்கும் அளவு மற்றும் வரி விகிதங்கள் மீதுமான பூசல்கள் கிடையாது, மாறாக கட்சிகளின் வலதுசாரி வேலைத்திட்டங்களுக்கும் பரந்த பெரும்பான்மை மக்களின் தேவைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி சம்பந்தப்பட்டதாகும்.
கடந்த நான்காண்டுகளாக, ஒரு பாரிய இராணுவ ஆயத்தப்படுத்தலை தொடங்கியுள்ள மாபெரும் கூட்டணி (Grand Coalition), பலவீனமான ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் மீது மிகக் கடுமையான சமூக செலவின குறைப்பு திட்டங்களைத் திணித்ததுடன், ஜேர்மனிக்குள் வறுமை மட்டங்களையும் மூர்க்கமான தொழிலிட நிலைமைகளையும் அதிகரித்தது. இது, உலகளாவிய நிதி நெருக்கடிக்கும், டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து பிரதான சக்திகளுக்கு இடையே அதிகரித்த பதட்டங்களுக்கும் அந்த அரசாங்கம் காட்டிய விடையிறுப்பாக இருந்தது.
இக்கொள்கைகள் மக்களிடையே ஆழமாக மதிப்பிழந்துள்ளன. சமீபத்திய தேர்தலில் CDU, CSU மற்றும் SPD உம் பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளை இழந்தன, இதன் விளைவாக அவை 70 ஆண்டுகளில் அவற்றின் மிக மோசமான தேர்தல் முடிவைப் பெற்றன. இவ்வாறு இருக்கையிலும் கூட, எல்லா கட்சிகளும் இதே கொள்கைகளையே தொடர உறுதி பூண்டுள்ளன. இதுவே, தற்போதைய நெருக்கடியில் அவர்களின் நடவடிக்கையைத் தீர்மானிக்கிறது.
சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இருந்து முறித்துக் கொண்டமை எதிர்பாராத ஒன்றல்ல, நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அது அவ்வாறு செய்ய திட்டமிட்டிருந்ததாக பலர் நம்புகின்றனர். பெருவணிகங்களின் பணக்கார நன்கொடையாளர்களை சார்ந்திருக்கும் இக்கட்சி, ஒருபோதும் பெருந்திரளான மக்கள் செல்வாக்கைப் பெற்றிருக்கவில்லை என்பதுடன், ஜேர்மன் வரலாற்றின் பிரதான மாற்றங்களின் போதெல்லாம் எப்போதுமே ஒரு வழிகாட்டும் பாத்திரம் வகித்துள்ளது.
இரண்டாம் உலக போருக்குப் பின்னர், சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) அரசியல் கட்சிகளுக்குள் அதி வலதுசாரியாக நின்றுள்ளதுடன், பல முன்னாள் தேசிய தாராளவாதிகளையும் நாஜிக்களையும் அதன் பதவிக்களுக்கு ஈர்த்து, CDU இன் கொன்ராட் அடினோவர் (Konrad Adenauer) உடன் ஒரு கூட்டணியை உருவாக்கியது. 1969 இல், தரப்பு மாறிய அக்கட்சி, சமூக ஜனநாயகவாதி வில்லி பிராண்ட் (Willy Brandt) சான்சிலராவதற்கு உதவியது. 1982 இல், FDP மீண்டும் அதன் போக்கை மாற்றி கொண்டு, ஹெல்முட் ஷிமித் இன் SPD தலைமையிலான அரசாங்கத்தை பதவியிலிருந்து கீழிறக்கி, அதற்கடுத்த 16 ஆண்டுகள் CDU இன் ஹெல்முட் கோல் ஆட்சியில் பங்கேற்றிருந்தது.
இப்போது அதன் மூலவேர்களுக்கு திரும்பி வரும் FDP, பிரதான கட்சிகளுக்கான வாக்குகள் பொறிந்ததில் இருந்து இலாபமடைந்து தேர்தல்களில் ஆதாயமடைந்த நவ-பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீட்டை (AfD) நோக்கி, தன்னை தகவமைத்து வருகிறது. நான்காண்டுகளாக FDP க்கு தலைமை கொடுத்துள்ள 38 வயதான கிறிஸ்டியான் லிண்ட்னர், கட்சியை அதிவலதை நோக்கி எடுத்து சென்று கொண்டிருக்கிறார். புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டால், அவர் "தேசிய தாராளவாதிகளை தாண்டிச்சென்று வலதுசாரி குழுக்களின் ஆதரவைப் பெற்று ஒரு புதிய வகையான மக்கள் கட்சியாக மாறுவதற்கு" முயல்வார் என்று Tagesspiegel நாளிதழ் எழுதியது. ஆஸ்திரிய சுதந்திர கட்சியின் (FPÖ) முன்னாள் தலைவர் ஜோர்ஜ் ஹைடரின் பிம்பத்தில் தன்னைத்தானே "ஹைடர்மயப்படுத்தி கொள்வதற்காக", கூட்டணி பேச்சுவார்த்தைகளை துஸ்பிரயோகம் செய்ததாக Süddeutsche Zeitung லிண்ட்னரை குறை கூறியது.
லிண்ட்னர், அவரது வலதுசாரி வேலைத்திட்டத்திற்கு CDU/CSU க்குள் பலமான ஆதரவு கிடைக்குமென்றும் கணக்கிடுகிறார். CSU இல், மார்க்கூஸ் ஷோடர் உம் மற்றும் அலெக்சான்டர் டோபிரிண்ட் உம் CSU தலைவரான ஹோர்ஸ்ட் சீகோவரை வெளியேற்ற தயாரிப்பு செய்து வருகின்றனர். இருவருமே ஒரு கடுமையான பழமைவாத திட்டநிரலைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அங்கேலா மேர்க்கெலும் அவர் கட்சியின் வலதுசாரி பிரிவுகளிடமிருந்து வரும் அழுத்தத்தின் கீழ் உள்ளார், இந்த அரசியல் நெருக்கடியிலிருந்து அவர் தப்பி பிழைப்பாரா என்பதே தெளிவின்றி உள்ளது.
மேர்க்கெல் அல்லாமல் வேறெவரேனும் சான்சிலர் பதவியை ஏற்றுக் கொண்டு, புதிய அரசாங்கம் உள்நாட்டு ஒடுக்குமுறையை விரிவாக்கவும், ஜேர்மனியில் உள்ள தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணையவரும் அகதிகள் நாட்டினுள் வருவதை தடுக்கவும் ஒப்புக் கொண்டால், நாடாளுமன்றத்தில் CDU-FDP இன் சிறுபான்மை அரசாங்கத்தை சகித்துக் கொள்ளவதற்கு AfD இன் முன்னணி அரசியல்வாதி அந்திரே பொக்கென்பூர்க் முன்மொழிந்துள்ளார்.
சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) அரசியலும் வேகமாக வலதுக்கு மாறி வருகிறது. இக்கட்சி, குறிப்பாக ஹம்பேர்க் ஜி20 உச்சி மாநாட்டுக்குப் பின்னர், ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயிரூட்டுவதில் முக்கிய பாத்திரம் வகித்ததுடன், பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளைப் பலப்படுத்துவதற்கும் ஆலோசனை வழங்கியுள்ளது. அது, “இடது-சாரி தீவிரவாதத்திற்கு" எதிராக பிரச்சாரம் என்ற பெயரில் இதை செய்தது. இடதிலிருந்து வரும் எதிர்ப்புக்கு ஒரு பாதுகாப்பு அரணை நிறுவும் அதன் பாரம்பரிய நோக்கத்தை சமூக ஜனநாயகக் கட்சி பரிசீலித்து வருகிறது.
இதனால் தான் கட்சிகள் மாபெரும் கூட்டணியைத் தொடர விரும்பவில்லை. சான்சிலர் மேர்க்கெல்லும் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரும் (SPD) சமூக ஜனநாயகக் கட்சிக்கு குறிப்பிடத்தக்க அழுத்தம் அளித்தனர் என்றபோதும், அரசாங்கத்திற்குள் நுழைவதைக் காட்டிலும் எதிர்கட்சியாக இருப்பதற்கே திங்களன்று ஒருமனதாக SPD இன் நிர்வாகக்குழு உடன்பட்டது. CDU/CSU உடன் நெருக்கமாக தொடர்ந்து செயல்பட்டால், ஒரு சோசலிச முன்னோக்கு பார்வையாளர்களை ஈர்த்துவிடும் என்றும், நாடாளுமன்றத்தில் AfD மிகப்பெரிய எதிர்கட்சியாக உருவெடுத்துவிடும் என்றும் அது அஞ்சுகிறது.
இடது கட்சி இந்த போக்கை ஆதரிக்கிறது. அது, புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலமாகவும், CDU/CSU மற்றும் FDP உடனான ஒரு கூட்டணி உருவாவதற்கு பசுமைக் கட்சி பெரும்பிரயத்தனம் செய்து வருகின்ற நிலையில், SPD மற்றும் பசுமைக் கட்சியினருடன் ஓர் அரசாங்கத்தை அமைக்குமாறு முன்மொழிந்தும் இந்த கூட்டணி முறிவுக்கு விடையிறுத்துள்ளது.
இந்நெருக்கடி அடுத்து வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் எவ்வாறு அபிவிருத்தி அடைந்தாலும் சரி, தொழிலாளர்களும் இளைஞர்களும் பாரிய தாக்குதல்கள் மற்றும் வர்க்க போராட்ட தீவிரப்பாட்டிற்குத் தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) தேர்தல் பிரச்சாரத்தின் போது, இத்தேர்தல்கள் ஓர் அரசியல் திருப்புமுனை என்பதையும், அனைத்து கட்சிகளும் "இராணுவவாதத்தை முன்பில்லாதளவில் அதிகரிக்கவும், ஒடுக்குமுறை அரசு எந்திரங்களைப் பலப்படுத்தவும் மற்றும் சமூக வெட்டுக்களுக்கும்" அழுத்தமளிப்பதற்கு செயல்பட்டு வருகின்றன என்பதையும் அறிவித்தது.
அந்த அறிக்கை அறிவித்ததாவது, “முதலாளித்துவத்தின் 'இடது' மற்றும் வலதுசாரி பாதுகாவலர்களை எதிர்க்கும், மற்றும் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதற்காக போராடும்" ஒரே கட்சி SGP மட்டுமேயாகும். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், சோசலிச சமத்துவக் கட்சியையும் மற்றும் ஒரு சோசலிச இயக்கத்தையும் கட்டமைக்க போராடுவது அவசர அரசியல் பணியாகும்.