Print Version|Feedback
India strengthens its relations with Bangladesh
பங்களாதேஷுடன் தனது உறவுகளை இந்தியா பலப்படுத்துகிறது
By Rohantha De Silva
11 November 2017
பங்களாதேஷுடனான சீன செல்வாக்கை எதிர்கொள்ளும் வகையில் இந்திய அரசாங்கம் அதனுடனான உறவுகளை பலப்படுத்த ஆர்வமாகவுள்ளது. இந்த போட்டியின் ஒரு பாகமாக, இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் அக்டோபர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் பங்களாதேஷுக்கு விஜயம் செய்தார். அந்த மாத தொடக்கத்தில், இந்திய நிதி மந்திரி அருண் ஜேட்லியும் பங்களாதேஷுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
பெய்ஜிங்கின் செல்வாக்கை இல்லாதொழிக்க இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அதன் புவிசார் அரசியல் நலன்கள் தான் ஊக்கப்படுத்துகின்றன. சீனாவுடன் டாக்கா நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதே புது தில்லியின் முக்கிய கவலையாகவுள்ளது. அக்டோபர் 29 அன்று, பங்களாதேஷின் New Age செய்தித்தாள் அதன் கருத்துப் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டது: “பங்களாதேஷில் பொருளாதார உள்கட்டமைப்பு திட்டங்களை கட்டியெழுப்புவதில் சீனா ஈடுபட்டு வந்ததும், அவற்றில் பலவும் மூலோபாய தன்மையுடையதாக இருந்ததும் தான் இந்தியாவிற்கு கவலை அளிப்பதாக இருந்தது.”
அதே நேரத்தில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான தனது இராணுவ மூலோபாய தாக்குதலுக்குள் நாடுகளை ஒருங்கிணைக்க தீவிரமாக செயல்பட்டு வரும் வாஷிங்டனின் சார்பாகவே புது தில்லி செயல்படுகிறது.
புது தில்லி மற்றும் வாஷிங்டன் இரண்டுமே, தற்போது 60 நாடுகள் ஈடுபடக்கூடிய மற்றும் உலகின் 70 சதவிகித மக்கள்தொகையை உள்ளடக்கிய திட்டமான சீனாவின் ஒரே பாதை ஒரே இணைப்பு (One Belt One Road) திட்டத்தில் பங்களாதேஷும் இணைவது பற்றியே குறிப்பாக திருப்தியற்று உள்ளன.
அக்டோபர் 5 அன்று, பங்களாதேஷ் வெளியுறவு செயலர் ஷாஹிதுல் ஹாக், OBOR திட்டத்திலிருந்து அவரது நாடு விலகுவதாக அறிவித்தார். மேலும், புது தில்லியில் உலக பொருளாதார அரங்கில் (World Economic Forum-WEF) அவர் உரையாற்றிய போது, பங்களாதேஷில் “விரைவாக உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகவுள்ளது, மேலும் எங்களது தலைமுறை அதிகளவு பரஸ்பர தொடர்புகளையும், இணைப்புகளையும் விரும்புகிறது” என்று தெரிவித்தார்.
சுவராஜ் அவருடைய விஜயத்தின் போது, பங்களாதேஷ் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா, வெளியுறவு மந்திரி ஏ.ஹெச். மஹ்மூத் அலி மற்றும் எதிர்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சியின் (Bangladesh National Party – BNP) தலைவரும் முன்னாள் பிரதம மந்திரியுமான கலீடா ஜியா ஆகியோரை சந்தித்தார்.
இந்தியாவிற்கு பங்களாதேஷின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகையில், சுவராஜ் பின்வருமாறு தெரிவித்தார்: “அண்டை நாடுகளுக்கு தான் முன்னுரிமை என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது, அதிலும் அண்டை நாடுகளில் பங்களாதேஷ் மிகவும் முன்னுரிமை வாய்ந்ததாகும்.” மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மூலோபாய கூட்டிற்கும் மேலானது என்றும் அவர் தெரவித்தார்.
சுவராஜ், வருடாந்திர இந்தியா-பங்களாதேஷ் கூட்டு ஆலோசனைக் குழுவில் கலந்து கொண்டார். பங்களாதேஷ் வெளியுறவு மந்திரியை சந்திந்ததற்கு பின்னர், சுவராஜ், இரு நாடுகளும், “அனைத்து மட்டத்திலுமான கொடூரமான தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதில்” ஒருங்கிணைந்து நின்றதாக கூறினார்.
மேலும், “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலமாக வெறுப்பு, வன்முறை மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றின் மீதான அச்சுறுத்தல்களில் இருந்து நமது சமூகங்களை பாதுகாப்பதில் நாம் இருவருமே உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சுவராஜ், கிட்டத்தட்ட 8.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்திய நிதியளிப்புடன் கூடிய 15 வளர்ச்சித் திட்டங்களை அங்கு தொடங்கிவைத்தார். அந்த திட்டங்கள், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், நீர் விநியோகம் மற்றும் சமூக நலன், மற்றும் 11 நீர் பயன்பாட்டு ஆலைகள் மற்றும் 36 சமூக மருந்தகங்கள் உள்ளிட்ட சமூகநல திட்டங்களை உள்ளடக்கியதாகும். அத்துடன் அவர், பல பல்கலைக்கழகங்களின் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத துறைகளுக்கு புத்தகங்கள், கணினிகள் மற்றும் பல்தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்கினார்.
அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்திய நிதி மந்திரியின் விஜயத்தின் போது, இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மற்றும் பங்களாதேஷ் நிதி அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் பிரிவு ஆகியவற்றிற்கு இடையேயான 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் (Line of Credit-LoC) ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்த நிதி, பங்களாதேஷில் மின்சாரம், இரயில்பாதை, சாலைகள், கப்பல் வணிகம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான 17 முக்கிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
ஏப்ரலில் பங்களாதேஷ் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது இந்த LoC ஐ ஒப்புக்கொண்டார். இதனை ஒத்த இரண்டு முந்தைய ஒப்பந்தங்களைப் போலவே, 20 வருட திருப்பிச் செலுத்தும் காலத்திற்கு 1 சதவிகிதம் வருடாந்திர வட்டியை பங்களாதேஷ் செலுத்தும். மேலும், இந்தியாவில் இருந்து சேவைகள், பொருட்கள் அல்லது வேலைகளில் 65 முதல் 75 சதவிகிதத்தை பங்களாதேஷ் வாங்கிக்கொள்ள வேண்டும்.
தோல்வி அடைந்தாலும், முதலீடு செய்வதில் சீனாவுடன் போட்டியிட இந்தியா முயற்சிக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபரில், இந்தியாவின் கோவாவில் நடந்த BRICS உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் வழியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்களாதேஷிற்கும் சென்றார். அப்போது அவர், பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு 21 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளையும் கடன்களையும் வழங்க உறுதியளித்ததோடு, பங்களாதேஷை சீனாவின் ஒரு மூலோபாய பங்காளியாக உருவாக்குவதற்கு ஹசீனாவிடமிருந்து ஒரு வாக்குறுதியையும் பெற்றுக் கொண்டார்.
பங்களாதேஷில் இருந்தபோது, இந்திய வெளியுறவு மந்திரி சுவராஜ், இரு நாடுகளும் “அனைத்து எரிச்சல்களையும் நேர்மையுடன் தீர்த்து வைக்கும்,” என்றும் அறிவித்தார், ஆனால் “எரிச்சலூட்டுபவர்கள்” பற்றி எதையும் குறிப்பிடவில்லை. இரு நாடுகளுக்கும் பொதுவான நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வது குறித்தும் ஒரு நீண்டகால பிரச்சினை உள்ளது.
பங்களாதேஷிற்குள் நுழைவதற்கு முன்னர் இந்தியாவின் மாநிலமான மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதி ஊடாக பாய்ந்துவரும் டீஸ்டா நதி பற்றியும் விஜயத்தின் போது எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேற்கு வங்க முதல் அமைச்சர் மமதா பானர்ஜியின் எதிர்ப்பு இதுவரை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தடுத்துள்ளது.
இந்தியாவை 1948 வகுப்புவாத அடிப்படையில் பிரித்தமை ஆறுகளை தன்னிச்சையாக நாடுகளுக்கு இடையே பிரித்துள்ளது. தற்போதைய பிரதம மந்திரி நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு இந்திய தலைவர்கள் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே தோல்வியுற்றன.
தீர்க்கப்படாத டீஸ்டா பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும், புது தில்லியுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்ள பங்களாதேஷ் தயாராகவுள்ளது. பங்களாதேஷ் அரசாங்கம், தற்போதைய வருடாந்திர வளர்ச்சி விகிதமான 6 சதவிகிதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டிற்குள் 8 சதவிகிதம் வருடாந்திர வளர்ச்சி இலக்கை அடைவதற்கு நிர்ணயித்துள்ளது. அதை அடைவதற்கு, தற்போது 80 சதவிகிதம் ஏற்றுமதி, ஆடை தொழில்துறையை மட்டுமே நம்பியுள்ள நிலையிலிருந்து, அரசாங்கம் நாட்டின் வர்த்தகத்தை பிற துறைகளில் பல்வகைப் படுத்த முனைய வேண்டும். எனவே இந்திய முதலீட்டிற்கும், கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா இடையேயான ஒரு வர்த்தக மையமாக உள்ள டாக்கா அதற்கான வெகுமதியை பெற முடியுமா என்பது பற்றியும் நாட்டம் உருவாகிறது.
புது தில்லி அதன் பிராந்திய போட்டியாளரான சீனாவை நோக்கி தீவிரமாகி வருகிறது. சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் பொருளாதார மற்றும் இராணுவ கட்டமைப்பில் இந்தியா ஒருங்கிணைந்து வருவதுடன், முக்கிய அமெரிக்க கூட்டணி நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடன் நெருக்கமான இராணுவ பாதுகாப்பையும் உருவாக்கி வருகிறது.
இந்த வருடம், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் மும்முனை எல்லைப் பகுதியான டோக்லாமில் சீன மற்றும் இந்திய இராணுவ படையினரிடையே இருந்த மோதல் நிலைப்பாடு இந்தியாவிற்கான பங்களாதேஷின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சீனாவிற்கும் சிறிய ஹிமாலாய முடியரசான பூட்டானுக்கும் இடையேயான ஒரு பிரச்சினைக்கு காரணமாகவுள்ள சும்பி பள்ளத்தாக்கை அணுகுவதற்கு ஏற்ப ஒரு இணைப்பு சாலையை கட்டமைக்க சீனா திட்டமிட்டு வருகிறது.
சும்பி பள்ளத்தாக்கில் இருந்து, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பிற இந்திய பகுதிகளுக்கும் இடையேயான நிலத் தொடர்பாகவுள்ள இந்தியாவின் சிலிகுரி வழித்தடம் சீனாவின் பீரங்கிப் படையின் தாக்குதல் எல்லைக்குள் இருக்கும். ஒருவேளை எந்தவொரு எதிர்கால மோதலிலும் டோக்லாம் பீடபூமி பகுதியை சீனா ஆக்கிரமிக்குமானால், இந்தியா அதன் இராணுவ தேவைகளை முன்னிட்டு போக்குவரத்திற்கு பங்களாதேஷை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படும்.