Print Version|Feedback
The social pathology of the Las Vegas Massacre
லாஸ் வேகாஸ் படுகொலையின் சமூக நோய்த்தன்மை
Patrick Martin
3 October 2017
லாஸ் வேகாஸ் பகுதியில் 20,000 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட ஒரு திறந்தவெளி இசை நிகழ்ச்சி, காட்டுமிராண்டித்தனமான தனிநபர் வன்முறையின் மற்றொரு வெடிப்பால், திடீரென ஒரு போர்க்களமாக மாறியது. அதில் குறைந்தபட்சம் 59 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 527 பேர் காயமடைந்தனர்.
குற்றஞ்சாட்டப்படும் துப்பாக்கிதாரி, ஸ்டீபன் பேட்டாக் (Stephen Paddock), சடசடவென இடைவிடாது சுடும் சாதனம் (bump-stock device) என்றறியப்படும் ஒன்றை இணைத்ததன் மூலம், முழு-தானியங்கி பயன்பாட்டிற்கேற்ப மாற்றப்பட்டிருந்த அந்த பல்வேறு பாதி-தானியங்கி ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி (semi-automatic weapons), மண்டாலே பே ஹோட்டல் மற்றும் காசினோவின் 32 ஆம் மாடியில் அவருக்கு வசதியான இடத்தில் இருந்தவாறு அந்த நிராதரவான கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தார். அந்த அட்டூழியத்திற்குப் பின்னர் அவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.
இராணுவ அளவிற்கு, நிமிடத்திற்கு அண்மித்து 100 தோட்டாக்கள் என பேட்டாக் சுட்டிருக்கலாம். அவருக்கருகில் சுமார் 20 ஆயுதங்கள் கண்டறியப்பட்டன, அவற்றில் பல அதிதிறன் வாய்ந்த பாதி-தானியங்கி ரக ஆயுதங்களாகும், அத்துடன் சேர்ந்து படைத்தளவாடங்களும் இருந்தன. துப்பாக்கி சூட்டின் முதல் ஒருசில நிமிடங்களிலேயே புகைக்கான எச்சரிக்கை ஒலி எழுந்ததால், பொலிஸால், அந்த மிகப் பெரிய எண்ணிக்கையிலான 3,300 ஹோட்டல் அறைகளையும் சோதனையிடுவதற்குப் பதிலாக விரைவாக பேட்டாக் இருந்த அறையைக் கண்டறிய முடிந்தது, இல்லையென்றால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்பதை இந்த உண்மை எடுத்துரைக்கிறது.
துப்பாக்கிதாரியின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை, இந்த படுகொலை போக்கில் அவரை மூழ்கடித்தது எது என்பதை அவரது அடையாளம் சிறிது வெளிச்சமிடுகிறது. சில செய்திகளின்படி, 64 வயதான பேட்டாக் அவர் துணைவியாருடன் ஒரு சௌகரியமான வீட்டில், பொருளாதாரரீதியிலும் வசதியாகவே வாழ்ந்திருந்தார். அவர் சகோதரர்களில் ஒருவர் பேட்டாக்கை வீடு/மனை விற்பனை செய்யும் இலட்சாதிபதி என்று விவரித்தார். அவரிடம் விமானம் ஒட்டுவதற்கான உரிமம் இருந்தது என்பதோடு, இரண்டு சிறிய விமானங்களும் இருந்தன. அவர் எந்த அரசியல் கட்சியுடனோ அல்லது மதரீதியிலான குழுவுடனோ வெளிப்படையான தொடர்பில் இல்லை.
மனநோய்க்கான ஒரு குடும்ப வரலாறு உள்ளது—பேட்டாக்கின் தந்தை, ரிச்சர்டு ஹோஸ்கின்ஸ் பேட்டாக், ஒரு வங்கி கொள்ளையர் என்பதோடு, இவர் மனநோயாளியாகவும் இருந்திருக்கிறார். இவர் அண்மித்து ஒரு தசாப்தம் FBI ன் தேடப்படும் முக்கிய நபர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். ஆனால் ஸ்டீபன் பேட்டாக் அவரது ஏழு வயதிலிருந்து தந்தையுடன் தொடர்பில் இல்லை என்பதோடு, இவருக்கு மனநோய் இருந்தது என்பதற்கோ அல்லது அதற்காக ஏதேனும் சிகிச்சை பெற்று வந்தார் என்பதற்கோ எந்த தகவல்களும் இல்லை.
நடைமுறையளவில் இதுபோன்ற எல்லா துப்பாக்கிச்சூடு சம்பவங்களைப் போலவே, காயப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களில் எவரையும் அந்த துப்பாக்கிதாரிக்கு தெரியாது. அவரைப் பொறுத்த வரையில், அவர்கள் தனிநபர்களாகவே தெரியவில்லை. பேட்டாக் அவருக்கு கீழே, வாகனம் நிறுத்துமிடத்தில் அந்த இசைநிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை சக மனிதர்களாக பார்க்கவில்லை, மாறாக அழிக்கப்பட வேண்டிய பொருள்களாக பார்த்தார். பாதிக்கப்பட்டவர்களின் தலைவிதி குறித்தும், அவர்களை நம்பி காத்திருக்கும் குடும்பமும் நண்பர்களும் வாழ்நாள் முழுவதும் துயரப்படுவார்கள் என்பதன் மீதும் அலட்சியம் கொண்ட, கட்டுப்பாடு இழந்த தனிப்பட்ட வெறுப்பு கொண்ட ஒரு துப்பாக்கிதாரியின் மனம்போன போக்கில் அவர்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தார்கள்.
தெளிவாக, இது ஒரு இயல்பான மனிதரின் நடவடிக்கை அல்ல. ஏதோவிதமான மனநோய், ஒருவேளை முன்னரே கண்டறியப்படாமல் இருந்திருக்கலாம், பேட்டாக்கின் குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொடூரமான சம்பவத்தில் நிச்சயமாக சமூகரீதியில் தூண்டிவிடப்பட்ட ஒரு கூறுபாடும் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதை முற்றிலும் தனிநபரின் தனிப்பட்ட வரையறைகளில் கூறி விட்டுவிட முடியாது. லாஸ் வேகாஸ் படுகொலை ஒரு புதிரான அமெரிக்க குற்றமாகும், இது ஆழமாக தொந்தரவுக்கு உள்ளான சமூகத்தின் ஒரு நோய்வாய்ப்பட்ட சமூக தன்மையிலிருந்து எழுகிறது.
உள்நாட்டு மக்கள் மீதான படுகொலைகளில் இந்த சமீபத்திய அத்தியாயத்தின் சமூக உள்ளடக்கம் என்ன? அமெரிக்கா, கடந்த 27 ஆண்டுகளாக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்துள்ளது. அமெரிக்க அரசாங்கத்தால் குண்டுகள், தோட்டாக்கள், மற்றும் டிரோன் ஏவுகணைகளின் நிர்மூலமாக்கலுக்கான இலக்குகளாக மத்தியக் கிழக்கு, ஆப்கானிஸ்தான், மற்றும் ஆபிரிக்காவில் உள்ள பத்து மில்லியன் கணக்கான மக்கள் இலக்கில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த போர்கள் அமெரிக்க கலாச்சாரத்திற்குள் அழமாக ஊடுருவியுள்ளதுடன், திரைப்படங்கள், தொலைக்காட்சி, இசை மற்றும் விளையாட்டுக்களிலும் கூட முடிவின்றி கொண்டாடப்பட்டன.
அமெரிக்க வரலாற்றிலேயே இதற்கு முந்தைய எந்த காலக்கட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிதமிஞ்சிய பொருளாதார சமத்துவமின்மை அதிகரிப்பால் குணாம்சப்படுத்தப்பட்ட அமெரிக்க சமூக உறவுகள், அலட்சியமான மற்றும் மனித உயிர்கள் மீது முற்றிலும் அவமரியாதை கொண்ட ஒரு கலாச்சாரத்திற்கு எரியூட்டியுள்ளது.
ஒன்றைக் குறிப்பிட்டு கூறுவதானால்: அமெரிக்க வரலாற்றிலேயே பொதுமக்கள் மீதான மிகவும் மோசமான துப்பாக்கிச்சூடு குறித்த செய்திகளால் ஊடகங்கள் நிரம்பியிருந்த அதே நாளில், பங்குச்சந்தைகளோ சளைக்காமல் தொடர்ந்து மேல்நோக்கி உயர்ந்து கொண்டிருந்தன, டோவ்-ஜோன்ஸ் தொழில்துறை சராசரியும் பிற சந்தை குறியீடுகளும் புதிய சாதனைகளை எட்டின. பெருநிறுவன அமெரிக்கா மற்றும் மிகப்பெரும் பணக்காரர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் வரலாற்றிலேயே பெரியளவில் வரி வெட்டுக்களுக்கு அழுத்தமளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் வோல் ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தது.
இடைவிடாத போர் மற்றும் ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மையால் அமெரிக்க சமூகத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு தான், லாஸ் வேகாஸில் மக்கள் மீதான துப்பாக்கிசூடு போன்ற ஒரு முடிவில்லா தொடர்ச்சியான சம்பவங்களில் வெளிப்பாட்டைக் காண்கிறது. உலக மக்கள்தொகையில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமெரிக்கா, மக்கள் மீதான துப்பாக்கிசூட்டில் 30 சதவீத கணக்கை ஏற்கிறது. மேலும் இதுபோன்ற பயங்கரங்களின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், மக்கள் மீதான படுமோசமான துப்பாக்கிச்சூட்டில் நான்கும், ஏழு மிக மோசமானவற்றில் ஆறும் 2007 க்குப் பின்னர் நடந்துள்ளன.
அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அமெரிக்காவில் அடிக்கடி மீண்டும் மீண்டும் நடந்து வரும் இதுபோன்ற அட்டூழியங்கள் மீது பெருநிறுவன ஊடக பண்டிதர்களும் அரசாங்க அதிகாரிகளும் கடமைக்காக அதிர்ச்சி வெளிப்படுத்துவதும், பீதியூட்டுவதையும் தவிர அதற்கதிகமாக வேறெதுவும் செய்ய திராணியற்றுள்ளனர். இதுபோன்ற ஒன்றுக்கும் உதவாத கருத்துக்களை உதிர்ப்பதே ஜனாதிபதி ட்ரம்பிடம் இருந்து அதிகபடியாக எதிர்பார்க்க கூடியதாக உள்ளது, திங்களன்று காலை அவர் கூறிய கருத்துக்கள் வெறும் பிதற்றல்களாகவும், உணரக்கூடியளவிற்கு நேர்மையின்றியும் இருந்தன. “திருமறைகள் நமக்கு என்ன கற்று தருகின்றன?” என்ற வார்த்தைகளோடு வாக்கியத்தைத் தொடங்கும் ஒரு முதிர்ந்த பொய்யரிடம் இருந்து, பெண்-வெறுப்பாளரிடம் இருந்து வரும் அருவருப்பூட்டும் வார்த்தைகளை ஒருவரால் எவ்வாறு ஆழமாக கவனித்தில் எடுத்துக் கொள்ள முடியும்?
லாஸ் வேகாஸ் படுகொலை "முற்றிலும் தீயசக்தியினது" என்ற அவரது முட்டாள்தனமான கருத்தைப் பொறுத்த வரையில், அதுபோன்று குணாம்சப்படுத்துவதானது எதையும் தெளிவுபடுத்தவில்லை. அக்கருத்து ட்ரம்பையே கூட தெளிவுபடுத்துவதாக இல்லை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவரே ஐக்கிய நாடுகள் சபையின் உரையில் 27 மில்லியன் மக்கள் வசிக்கும் வட கொரியாவை அணுஆயுதங்களைக் கொண்டு அழிக்க அச்சுறுத்தினார். இருப்பினும் அவரை துதிபாடும், CNN, லாஸ் வேகாஸ் குறித்து தொலைக்காட்சியில் அவர் குறிப்பிட்ட கருத்துக்களை "சரியான தொனியில்" இருந்ததாக விவரித்தது.
நாடகபாணியையும் பாசாங்குத்தனமான இரக்கவுணர்வையும் சம அளவில் கலந்து போர்த்தோ ரிக்கோவிற்கான அவரது விஜயத்திற்கு ஒரு நாள் பின்னர், ட்ரம்ப் புதனன்று லாஸ் வேகாஸ் விஜயம் செய்யவிருந்தார். அங்கே அவர் மரியா சூறாவளியால் ஏற்பட்ட சீரழிவைப் பார்வையிடுவார் என்றாலும், அதேவேளையில் அந்த பேரழிவுக்கு மிக மோசமாக விடையிறுத்ததாக மத்திய அரசை விமர்சிக்க துணிந்த உள்ளாட்சி அரசு அதிகாரிகளுடன் அவர் காழ்ப்புணர்ச்சியுடன் ட்வீட்டர் கருத்துக்களைப் பரிமாறி வருகிறார்.
9/11 தாக்குதல்களுக்குப் பிந்தைய 16 ஆண்டுகளில், இக்காலக்கட்டத்தில் அமெரிக்க அரசாங்கம் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று கூறப்படும் ஒன்றில் ஈடுபட்டு வந்த போது, சராசரியாக ஆண்டுக்கு ஒரு அமெரிக்கர் வெளிநாட்டு பயங்கரவாதி ஒருவரால் கொல்லப்பட்டுள்ளார். அதே காலக்கட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 10,000 அமெரிக்கர்கள் பிற அமெரிக்கர்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர். அக்காலப்பகுதியில் நடந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட அமெரிக்கர்களை விட ஆறு மடங்குக்கு சமமான அமெரிக்கர்கள், வேர்ஜினியா டெக், நியூடவுன், ஓர்லாண்டோ மற்றும் இப்போது லாஸ் வேகாஸ் போன்ற பாரிய துப்பாக்கிசூடு சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
லாஸ் வேகாஸ் துயர சம்பவத்தின் சூழல்கள் குறித்து கூடுதல் விசாரணைகள் அவசியப்படுகின்றன. ஆனால், மண்டாலே பே ஹோட்டலுக்கு வெளியே கடந்த ஞாயிறன்று இரவு என்ன நடந்ததோ, அது அமெரிக்க சமூகத்தின் ஆழமான நோய்வாய்ப்பட்ட தன்மையின் ஒரு வெளிப்பாடு என்று ஒருவரால் நிச்சயமாக முடிவுக்கு வர முடியும்.