Print Version|Feedback
Millions defy brutal crackdown by Spanish police to vote in Catalan referendum
கட்டலான் சர்வஜனவாக்கெடுப்பில் வாக்களிப்பதற்கு மில்லியன் கணக்கானோர் ஸ்பெயின் போலிசின் கொடூர ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்கின்றனர்
By Alejandro López and Alex Lantier
2 October 2017
ஸ்பெயினில் இருந்து பிரிந்து செல்வது குறித்த கட்டலான் அரசாங்கத்தின் சர்வஜனவாக்கெடுப்பை முடக்குவதற்காக அனுப்பப்பட்ட ஸ்பெயின் தேசியப் போலிசின் கொடூரமான மற்றும் கண்மூடித்தனமான ஒடுக்குமுறைக்கு எதிராக பிராந்திய மக்களின் பெரும்பகுதியினர் அணிதிரண்ட நிலையில் ஞாயிறன்று வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் கட்டலோனியாவைச் சூழ்ந்தன. வாக்குச் சாவடிகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்த அல்லது வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த இளம்வயதினர் மற்றும் முதியவர்கள் உள்ளிட அமைதியாக இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சிவில் கார்டு கலகத் தடுப்பு போலிசார் தாக்குவதைக் காட்டுகின்ற தொலைக்காட்சி செய்திகளை உலகெங்கிலும் மில்லியன் கணக்கானோர் திகிலுடன் கண்ணுற்றனர்.
வாக்குச் சாவடிகளை மூடவும், வாக்குப் பெட்டிகளை கைப்பற்றவும், வாக்காளர்கள் மீது தாக்கவும் பிரதமர் மரியானோ ரஹோயின் மக்கள் கட்சி (PP) அரசாங்கம் சுமார் 16,000 போலிசை அனுப்பியது. போலிஸின் லத்தி அடிகளிலும் சுடப்பட்ட ரப்பர் புல்லட்டுகளிலும் பிராந்தியமெங்கிலும் குறைந்தபட்சம் 844 பேர் காயமடைந்தனர். ஆயினும் போலிஸ் நடவடிக்கையால் மக்கள் எதிர்ப்பை வெற்றி காண முடியவில்லை. கருத்துவாக்கெடுப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2,315 வாக்குச் சாவடிகளில் 90 சதவீதம் திறந்திருந்ததாக கட்டலான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிறன்று காலையில், பிராந்திய பிரதமர் கார்லெஸ் புய்க்டெமொன்ட் (Carles Puigdemont) இன் வாக்குச்சாவடி அமைந்திருந்த Sant Julià de Ramis க்கு ஒரு ஹெலிகாப்டரும் கிட்டத்தட்ட 100 சிவில் கார்டுகளும் வந்திறங்கினர். வாக்குச்சாவடியாக இருந்த உள்ளூர் விளையாட்டு மையத்தின் கதவை மறித்து நின்றிருந்த நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் “நாங்கள் வாக்களித்தே தீருவோம்” என்று கோஷமிட்டனர், ஆனால் ஒரு சுத்தியலைப் பயன்படுத்தி கண்ணாடியை உடைத்து கட்டிடத்துக்கு உள்ளே சென்ற போலிஸ் வாக்காளர்களை அடித்து வெளியே இழுத்து வந்தது.
பிராந்தியத் தலைநகரான பார்சிலோனாவைச் சுற்றிய பள்ளிகளிலும் மற்ற வாக்குச் சாவடிகளிலும் போலிஸ் வாக்காளர்களைத் தாக்கியது, அடித்தது. வாக்குச் சாவடிகளில் அமர்ந்திருந்த மக்களை அதிகாரிகள் எட்டி உதைப்பது, பெண்களை முடியைப் பிடித்து இழுத்து வருவது ஆகிய காட்சிகளைக் கொண்ட காணொளிகள் வெளியாயின. Escola Infant Jesús School வாக்குச்சாவடியில், போலிஸ் மரியா ஜோஸ் மொலினா என்ற 64 வயதுப் பெண் மீது தாக்கியது, மண்டையில் இருந்து இரத்தம் சொட்டிய நிலையில் அந்தப் பெண் நின்றிருந்தது இணையத்தில் பரபரப்பாக சுற்றிவந்தது.
Sant Julià de Ramis இல் ஒரு வயதான பெண்ணை சிவில் கார்ட் கலகத் தடுப்பு போலிசார் இழுத்துச் செல்கிறார்கள்
La Vanguardia நாளிதழிடம் பேசிய மொலினா, கதவில் இருந்து பல மீட்டர் தூரத்தில் தனது கணவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த தன்னை கலகத் தடுப்பு போலிசார் தோள்பட்டைகளையும் காலையும் பிடித்துத் தூக்கி கொண்டு சென்றார்கள் என்றார். “நான் மெல்லிய உடம்புக்காரி” என்ற அவர், போலிஸ்காரர்கள் ”என் முகம் தரையில் பட” தூக்கி வீசினார்கள் என்றார்.
Escola Infant Jesús வாக்களிக்கும் பள்ளிக்கு வெளியே மரியா ஜோஸே மொலினா
பிராந்தியம் எங்குமான நகரங்களுக்கு போலிஸ் சென்றபோது, அதனைப் பரிகாசம் செய்த மற்றும் அது உடனே அகல வேண்டும் என்று கோரிய பெரும், விரோதமான கூட்டங்கள் தன்முன் நிற்பதை துரிதமாகக் கண்டுகொண்டது. கிரோனாவில், போலிஸ் Escola Verd de Girona வாக்குச்சாவடியில் வாக்குப்பெட்டிகளை கைப்பற்ற முயன்றபோது, கூட்டம் பிரதான வாயிலை மறித்தபடி “நாங்கள் வாக்களிக்க வேண்டும்! நாங்கள் வாக்களிக்க வேண்டும்” என்று முழக்கமிட்டது. பின் போலிஸ் கூட்டத்தினர் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து கூட்டம் “கொலைகாரர்கள்! கொலைகாரர்கள்!” என்று முழக்கமிடத் தொடங்கியது.
போலிஸ் ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பு பிராந்தியம் முழுக்க விரிந்தது, இதில் சுதந்திரத்திற்கு எதிரான பகுதிகளும் கூட அடக்கம். கட்டலோனியாவின் இரண்டாவது நகரமும், 1960களில் கட்டலோனியாவுக்கு புலம்பெயர்ந்து வந்திருந்த ஸ்பானிய மொழி பேசும் தொழிலாளர்களின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையின் தாயகமுமான L’Hospitalet de Llobregat இல் போலிஸ் சென்றபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்பானிய மொழியில் “ஆக்கிரமிப்புப் படையே வெளியில் போ!” என்றும் “நாங்கள் வாக்களிக்க வேண்டும்” என்றும் முழக்கமிட்டனர்.
கலகத் தடுப்பு போலிசாருக்கும் வாக்காளர்களுக்கும் இடையிலான மனிதக் கேடயங்களை உருவாக்குகின்றவர்களாக ஆகியிருந்த தீயணைப்புப் படை வீரர்கள், மற்றும் பிராந்தியத்தின் போலிசான Mossos d'Esquadra உள்ளிட கட்டலான் அதிகாரிகளுடனும் ஸ்பெயின் போலிஸ் மோதலில் ஈடுபட்டது.
நேற்று கட்டலோனியா எங்கிலும் ஸ்பெயின் போலிஸ் அட்டூழியம் நிகழ்த்தியதன் பின்னர், மாட்ரிட்டுக்கும் பார்சிலோனாவுக்கும் இடையிலான வெடிப்பான மோதல் இன்று மேலும் தீவிரமடைய இருக்கிறது. கட்டலான் கருத்துவாக்கெடுப்பு வெற்றி என்று கூறி புய்க்டெமொன்ட் நேற்றிரவு பிரிவினைக்கு அழைப்பு விடுத்த அதேநேரத்தில், மாட்ரிட்டில் இருந்த ஸ்பானிய அதிகாரிகள் கட்டலோனியா மக்களுக்கு எதிரான தங்கள் தாக்குதலை கல்நெஞ்சத்துடன் பாதுகாத்துப் பேசியதோடு கட்டலான் நிர்வாகம் தமது உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் கோரினர்.
Moncloa அரண்மனையில் இருந்தபடி பேசிய ஸ்பெயின் பிரதமர் ரஹோய் ”ஒழுங்கற்ற தளவாட ஏற்பாடுகளுடனான ஒரு சட்டவிரோத அணிதிரட்டல்” என்று இந்த கருத்துவாக்கெடுப்பை கண்டனம் செய்ததோடு, கட்டலான் மக்களுக்கு எதிராக தனது போலிசை கட்டவிழ்த்து விடும் அவரது முடிவையும் பாதுகாத்துப் பேசினார். “அரசு உறுதியுடனும் நிதானத்துடனும் பதிலிறுப்பு செய்தது... நாங்கள் என்ன செய்திருக்க வேண்டுமோ அதைச் செய்தோம். நான் அரசாங்கத்தை வழிநடத்துகிறேன், நாங்கள் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியிருக்கிறோம்.”
கட்டலான் அரசாங்கம் கருத்துவாக்கெடுப்பைக் கைவிட வேண்டும் என்று ரஹோய் அப்பட்டமாய் கோரிக்கை வைத்தார்: “அவர்களது பொறுப்பற்ற தன்மையை முடித்துக் கொள்ள வேண்டும், ஒருபோதும் சட்டபூர்வமானதாக இல்லாத ஒன்று இப்போது தெளிவுற அடையமுடியாததாய் இருக்கிறது என்பதையும் இந்த நாடகத்தைத் தொடர்வது அவர்களை எங்கும் இட்டுச் செல்லாது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்... இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். இது நல்லதற்குக் கொண்டுசெல்லாது.”
ஸ்பெயின் அரசு ”கட்டலோனியா உடனான அதன் உறவுகளின் வரலாற்றில் ஒரு அவமானகரமான பக்கத்தை இன்று எழுதி விட்டிருக்கிறது” என்று கூறி நேற்று பின்னரவில் பார்சிலோனாவில் புய்க்டெமொன்ட் பதிலளித்தார். அவர் மேலும் கூறினார், ”ஒரு குடியரசின் வடிவத்தில் உருவாக்கப்படுகின்ற ஒரு சுதந்திரமான அரசுக்கான உரிமையை கட்டலோனியாவின் குடிமக்கள் வென்றிருக்கின்றனர்.... அடுத்ததாக, நாடாளுமன்றம் கருத்துவாக்கெடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்வாறாக செயல்படத்தக்க வகையில், வரும் நாட்களில் எனது அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு எமது மக்களின் கருத்துவெளிப்பாட்டை, இன்றைய தேர்தல் முடிவுகளை அனுப்பும்.”
இந்த நிலைமைகளின் கீழ், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சிறுபான்மையான எண்ணிக்கையானோர் தான் பிரிந்துசெல்ல “வேண்டும்” என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்றாலும் கூட, கட்டலோனியா சுதந்திரத்தை பிரகடனம் செய்து ஸ்பெயினில் இருந்து பிரிந்து செல்ல முடியும் என்றே கருத்துவாக்கெடுப்புச் சட்டம் கூறுகிறது. 2.26 மில்லியன் மக்கள், அதாவது கட்டலோனியாவின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையான 5.34 மில்லியனில் 42 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். இவர்களில் 2.02 மில்லியன் பேர் “வேண்டும்” என்றும் 176,000 பேர் வேண்டாம் என்றும் வாக்களித்தனர்.
புரூசெல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்திடம் இருந்தும் ஆதரவுக்கு புய்க்டெமொன்ட் விண்ணப்பம் செய்தார், ஸ்பெயினின் நடத்தை “ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுகிறது” என்று திட்டவட்டம் செய்த அவர், கட்டலான் பிரச்சினை இனியும் ஸ்பெயினின் “உள்நாட்டுப் பிரச்சினை அல்ல” என்றும் சேர்த்துக் கொண்டார்.
கட்டலோனியாவில் பல வார கால மிரட்டல்கள் மற்றும் போலிஸ் நடவடிக்கைகளுக்குப் பின்னர் தொடுக்கப்பட்ட இந்த ஒடுக்குமுறையானது, PP மீது மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ஸ்பெயின் உயரடுக்கு மற்றும் ஸ்பெயினின் அத்தனை முக்கிய நேட்டோ கூட்டாளிகள் மீதுமான ஒரு அரசியல் குற்றப்பத்திரிகையாகும். ஸ்பெயின் போலிஸ், அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்துவதும் மற்றும் வாக்குப் பெட்டிகளை பறிமுதல் செய்து நிர்வாகிகளைக் கைதுசெய்வதும், மாட்ரிட்டில் உள்ள அரசாங்கம் போலிஸ் துருப்புகளை அனுப்புவதுமாக இருந்தவேளையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உள்ளிட்ட அரசுத் தலைவர்கள் ரஹோயுடன் சந்தித்து ஸ்பெயினின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுகின்ற கூட்டு அறிக்கைகளை விநியோகித்துக் கொண்டிருந்தனர்.
சென்ற இரவில், பிரிட்டனின் வெளியுறவுத் துறை, மக்கள் கட்சியின் (PP) ஒடுக்குமுறையை சுத்தமாய் இருட்டடிப்பு செய்தது. அதன் செய்தித்தொடர்பாளர் கூறினார்: “இந்த கருத்துவாக்கெடுப்பு ஸ்பெயினின் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலானதாகும். ஸ்பெயினின் சட்டமும் அரசியல்சட்டமும் மதிக்கப்படுவதையும் சட்டத்தின் ஆட்சியே நிலைநிறுத்தப்படுவதையும் காண நாங்கள் விரும்புகிறோம்.”
இது ஒரு மோசடியாகும்! மாட்ரிட்டின் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறை ஒரு சட்டபூர்வ நடவடிக்கை அல்ல, மாறாக ஒட்டுமொத்த ஸ்பெயின் பிராந்தியத்தையும் தன் வழிக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் அப்பாவி மக்களுக்கு எதிராக ஏவப்பட்ட ஒரு பயங்கர நடவடிக்கையாகும். ஸ்பெயினின் உள்நாட்டுப் போருக்குப் பின்னரும் மற்றும் பாசிச சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் 40 ஆண்டுகால ஆட்சி 1978 இல் முடிவுக்கு வந்ததன் பின்னரும் நாடு இதுபோன்ற ஒரு நிலையைக் கண்டிருக்கவில்லை.
மாட்ரிட்டிலுள்ள ஆளும் ஸ்தாபகத்தைச் சூழ்ந்திருக்கும் நாற்றம் அமெரிக்காவுக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவுகாண்கிறது. பிராங்கோவின் ஆட்சியின் சமயத்தில் அவை வகித்த --தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு முக்கியமான இராணுவ கூட்டாளியாக அவை கண்ட ஒரு இரத்தக்கறை படிந்த வலது-சாரி ஸ்பானிய ஆட்சியை வழிமொழிவது-- அதே பாத்திரத்திற்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
இந்த ஒடுக்குமுறையானது ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் பொடெமோஸ் (Podemos) ஆகிய ஸ்பெயின் நாடாளுமன்றத்தின் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளின் திவால்நிலையையும் அம்பலப்படுத்தியுள்ளது. 1979 இல் ஒரு வெளிப்படையான மார்க்சிச-விரோத, சமூக ஜனநாயகக் கட்சியாக மறுஸ்தாபகம் செய்யப்பட்ட, ஸ்பானிய அரசு எந்திரத்தின் ஒரு கருவியாகத் திகழ்கின்ற PSOE ரஹோயின் ஒடுக்குமுறையை ஒரேகுரலில் வழிமொழிந்ததில் ஆச்சரியமில்லை.
கட்சிக்குள்ளாக ஒரு “இடது” என பெரும்பாலும் முன்நிறுத்தப்படுகின்ற PSOE இன் பொதுச் செயலரான பெட்ரோ சான்சேஸ், ரஹோயையும் PPஐயும் பாராட்டினார். ஸ்பெயினின் சட்டத்தின் ஆட்சிக்கும், அதன் விதிகளுக்கும் மற்றும் அதன் ஸ்தாபனங்களுக்கும் எனது முழு ஆதரவையும், இப்போது ஆபத்தில் சிக்கியிருக்கக் கூடிய இந்த நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான PSOE இன் ஆதரவையும் நான் வெளிப்படுத்த விரும்புகிறேன். பொதுநலன் கட்சிகளின் நலனைக் காட்டிலும் முன்நின்றாக வேண்டியதானதொரு தருணத்தில் நாம் இருக்கிறோம்.... இது பகுத்தறிவுக்கான தருணமாகும், பொது அறிவுக்கான தருணமாகும்.”
பொடெமோஸ் ஐப் பொறுத்தவரை, அணிஅணியாக கலகத் தடுப்பு போலிஸ் கட்டலோனியா எங்கிலும் அப்பாவி மக்களை தாக்கி இரத்த சகதியாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், அது PSOE ஐ நோக்கி, மாட்ரிட்டில் இருக்கும் சிறுபான்மை PP அரசாங்கத்துக்கு அது மவுனமாக ஆதரவளிப்பதைக் கைவிட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாய் பொடெமோஸ் உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் கையாலாகாத விண்ணப்பங்களை செய்து கொண்டிருந்தது. முதல் போலிஸ் தாக்குதல்கள் தொடங்கிய உடன், பொடெமோஸ் நிர்வாகிகள் PSOEயிடம் விண்ணப்பம் செய்யத் தொடங்கி விட்டனர். கொள்கை மற்றும் மூலோபாய செயலரான Iñigo Errejón ஒரு ட்வீட்டில் கேட்டார்: “PSOE ஏன் அமைதியாக இருக்கிறது?” நாடாளுமன்றத்தில் பொடெமோஸ் இன் செய்தித்தொடர்பாளராக இருக்கும் Irene Montero கூறினார், “PSOE இன்னும் அதிக ஜனநாயகப்பட்டதாய் இருக்க வேண்டும்”.
பொடெமோஸ் இன் பொதுச் செயலர் பப்லோ இக்லெஸியாஸ் ஊடகங்களிடம் கூறினார்: “PSOE தொடர்ந்து முதுகைத் திருப்பிக் கொண்டிருக்க முடியாது. PP இன் மூலோபாயத்தை ஆதரித்து அவர்கள் ஒரு பெரும் தவறை இழைத்திருக்கிறார்கள். தாமதமாயினும் காலம் இன்னும் முடிந்து விடவில்லை, அவர்கள் திருத்திக் கொண்டு PPஐ வெளியேற்ற எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்.”
PSOE மற்றும் பொடெமோஸ் இன் திவால்நிலை ஒருபுறம் இருந்தபோதிலும், சிறுபான்மை PP அரசாங்கமானது அதன் இரத்தக்களரியான ஒடுக்குமுறைக்குப் பின்னர் நூலிழையில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. பாஸ்க் தேசியவாதக் கட்சி (PNV) --இந்த ஆண்டில் PP அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேறுவதற்கு இதன் ஆதரவு முக்கியமாக இருந்தது-- PP ஐ விமர்சனம் செய்துள்ளதோடு கட்டலான் கருத்துவாக்கெடுப்பை ஆதரித்து சனிக்கிழமையன்று அது பில்பாவில் ஒரு பேரணிக்கும் தலைமை கொடுத்தது.