Print Version|Feedback
Sri Lankan SEP/IYSSE calls public meetings to mark the centenary of the Russian Revolution
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி / IYSSE ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டின் நினைவாக பொது கூட்டங்களை நடத்துகின்றன
27 October 2017
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும், ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டை குறித்து தொடர் பொதுக் கூட்டங்களை நடத்தவுள்ளன. முதல் கூட்டம், நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன் போது 1917 அக்டோபர் புரட்சியின் அதிகாரபூர்வமான விவரணத் திரைப்படமான ஸார் டு லெனின் திரையிடப்படவுள்ளது.
முதலாளித்துவத்தை தூக்கிவீசி, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி, சோசலிச வழியில் சமூகத்தை மறு ஒழுங்கு செய்வதை மேற்கொள்ள ரஷ்ய தொழிலாள வர்க்கத்தை தூண்டிவிட்ட நிலைமைகள் திரும்பவும் தோன்றியுள்ளன. ஏகாதிபத்திய போரும் மற்றும் பூகோள மோதல்களின் அச்சுறுத்தலும் வறுமை, வளச்சியடையும் சமூக சமத்துவமின்மை மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கங்கள் சர்வாதிகார ஆட்சி முறையை நோக்கி திரும்புவதுமே இன்று உலக நிலைமையை ஆதிக்கம் செலுத்துகிறன. எதிர்காலத்தில் துன்பங்களையும் மிலேச்சத்தனத்தையும் மட்டுமே வழங்கும் ஒரு சமூக அமைப்பு முறையான முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ந்துவருகின்ற நிலைமையில், எல்லா இடங்களிலும் வெகுஜன சமூக போராட்டங்கள் நிகழ்ச்சி நிரலில் அடங்கியுள்ளன.
தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை தேடும் நிலையில், ஆழமடைந்து வரும் நெருக்கடி, சோசலிசத்தின் மீதும் ரஷ்யப் புரட்சி பற்றியும் வளர்ந்துவரும் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், அக்டோபர் புரட்சியின் வரலாற்று படிப்பினைகள், சமகாலத்தில் தீவிரமாக பொருந்துகின்றன. புரட்சி தோன்றிய புறநிலை நிலைமைகள், அனைத்திற்கும் மேலாக, அது எவ்வாறு அரசியல் ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியிலும் தயார் செய்யப்பட்டது என்பதை தொழிலாள வர்க்கம் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். இந்த முறையில் மட்டுமே, புரட்சிகர போராட்டங்களை நடத்துவதற்கு தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக ஆயுதபாணிகளாக முடியும்.
சர்வதேச ரீதியில் உள்ள அவர்களது சமதரப்பினரைப் போலவே, இலங்கையில் உள்ள போலி-இடது அமைப்புகளும், இந்த மாபெரும் வரலாற்று அனுபவங்களை சிறுமைப்படுத்துவதோடு அவற்றின் அரசியல் படிப்பினைகளைப் பற்றிய எந்தவொரு ஆய்வையும் தடுக்க முயற்சிக்கின்றன.
உதாரணமாக, முன்னிலை சோசலிச கட்சி (மு.சோ.க.), அக்டோபர் புரட்சியை ஒரு "தோல்வியுற்ற பரிசோதனையாக" சித்தரிக்கின்றது. இது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர், முதலாளித்துவ வட்டாரங்களில் பரந்தளவில் நிலவிய மதிப்பிழந்த வெற்றி ஆரவாரத்தை எதிரொலிப்பதாகும். அதே சமயம், இந்த போலி இடதுகள், தொழிலாளர்களை போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முதலாளித்துவக் கட்சிகளுடன் கட்டிப்போடும் ஒரு "பரந்த முன்னணியின்" தேவையை மேம்படுத்துவதற்காக 1917 எழுச்சிகள் மீதான ஆர்வத்தை சுரண்டிக்கொள்ள முற்படுகின்றன. இதில் அவர்கள் விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக் கட்சியும் 1917ல் போராடிய கொள்கைகளுக்கு எதிரானவற்றை ஊக்குவித்து வருகின்றனர்.
சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ கூட்டங்களில் மட்டுமே, அக்டோபர் புரட்சி முன்னெடுக்கப்பட்ட அரசியல் முன்னோக்குகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அனைத்து வடிவிலான தேசிய-சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான இடைவிடாத போராட்டத்தின் மூலம், முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடுவதும், சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை, மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிரந்தரப் புரட்சி தத்துவத்தை விரிவுபடுத்துவதும் இதல் அடங்கும்.
21ம் நூற்றாண்டின் போராட்டங்களுக்கு தயார் செய்வதன் பேரில், 20ம் நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வு பற்றிய இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கெடுத்துக்கொள்ள, கொழும்பில் இடம்பெறும் பொதுக் கூட்டத்திற்கு வருகைதருமாறு தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
கூட்ட விவரங்கள்:
நவம்பர் 12, ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 3.00 மணி.
புதிய நகர மண்டபம், கிறீன் பாத், கொழும்பு
மேலும் கூட்டங்கள் அறிவிக்கப்படும்