Print Version|Feedback
Greek Prime Minister Tsipras embraces Trump
கிரேக்க பிரதம மந்திரி சிப்ராஸ் ட்ரம்பை ஏற்றுக்கொள்கிறார்
Alex Lantier
19 October 2017
கிரீஸ் பிரதம மந்திரியும் "தீவிர இடது கூட்டணி" (சிரிசா) தலைவருமான அலெக்சிஸ் சிப்ராஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பு விஜயத்தின் போது, செவ்வாயன்று வாஷிங்டனில் ஒரு இழிவான நிகழ்வு அரங்கேறியது. ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் அமெரிக்க வலதுசாரி ஜனாதிபதியின் முன் சரணாகதி அடைந்த, ஐரோப்பாவின் அந்த நடுத்தர வர்க்க "இடதின்" தலைமை பிரதிநிதி, வோல் ஸ்ட்ரீட் மற்றும் பென்டகனுக்கு கிரீஸ் பாதுகாப்பானது என்று பெருமைப்பீற்றினார்.
கிரீஸிலும் ஐரோப்பா முழுவதிலும் பெருந்திரளான தொழிலாளர்களால் ட்ரம்ப் நிர்வாகம் வெறுக்கப்படுகின்ற நிலைமைகளின் கீழ், கிரேக்க பிரதம மந்திரியோ அமெரிக்க-கிரேக்க உறவுகள் இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பின்னரில் இருந்து, "அவற்றின் சிறந்த நிலையில்" இருப்பதாக அறிவித்தார்.
அண்மித்து மூன்றாண்டுகளாக அவரது அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் படுமோசமான சிக்கன நடவடிக்கைகளை திணித்திருப்பதால், அங்கே கிரீஸில் நிறைய இலாபமீட்டலாமென சிப்ராஸ் தெளிவுபடுத்தினார். சிரிசா அரசாங்கத்தின் "தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளை" ட்ரம்ப் பாராட்டிய போதும் மற்றும் அமெரிக்க தயாரிப்பான F-16 ரக போர்விமானங்களை மேம்படுத்துவது மீது அது 2.4 பில்லியன் டாலர் செலவிடும் என்று அறிவித்தபோதும் புன்னகைத்திருந்த சிப்ராஸ், அவர் ட்ரம்புடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ளும் "பொதுவான ஜனநாயக கோட்பாடுகளை" புகழ்ந்துரைத்தார். கிரேக்க அதிகாரிகள் "அமெரிக்க முதலீடுகளை ஈர்க்க எதிர்நோக்கி இருப்பதாக" அவர் தெரிவித்தார்.
சிப்ராஸ் அமெரிக்க போர் எந்திரத்திற்கும் குழப்பத்திற்கிடமற்ற ஓர் முறையீடு செய்தார். ஏதென்ஸூம் வாஷிங்டனும் சூடா வளைகுடாவின் கீறேற் கிரேக்க தீவில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படைத்தளத்தை மேம்படுத்தவும், சிரியா மற்றும் ஈராக் போல பல்வேறு முக்கிய போர் அரங்கங்களில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்துவதற்காக, அத்தீவின் மற்றொரு இடத்தில் புதிய அமெரிக்க இராணுவத் தளத்தைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளன என்ற உண்மையை சிப்ராஸூம் ட்ரம்பும் சூசகமாக குறிப்பிட்டனர். “பாதுகாப்பு மற்றும் இராணுவத்துறைகளில் நிலவும் அடிப்படை தேசிய அக்கறைகள்" மீது கிரீஸிற்கு வாஷிங்டன் உதவுகிறது என்று கூறிய சிப்ராஸ், சைப்ரஸ் விவகாரத்தில் கிரேக்க-துருக்கிய மோதல்களைத் தீர்க்க உதவுமாறு ட்ரம்பைக் கேட்டுக் கொண்டார்.
சிப்ராஸ் மத்திய கிழக்கு மற்றும் பால்கன் தொடர்பான அமெரிக்க கொள்கையைப் புகழ்ந்துரைத்தார், அங்கெல்லாம் அமெரிக்க போர்கள் மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்துள்ளதுடன், பத்து மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக்கி உள்ளது. அவர் கூறினார், அமெரிக்கா "மத்திய கிழக்கிலும் பால்கனிலும் கூட்டுறவை ஊக்குவிக்கிறது, அது அப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.” கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, ட்ரம்பின் வெற்றி வாய்ப்பை சிப்ராஸ் "தீமையானது" என்று குறிப்பிட்டதை நினைவூட்டிய ஒரு பத்திரிகையாளரை அவர் கண்டுகொள்ளவில்லை. சிப்ராஸ் தெரிவித்தார், “அமெரிக்கா மிகவும் பலமானதொரு சக்தி, நன்மைக்காக தலையிடுவதற்கான அதன் வல்லமை, மிக மிக முக்கியமானது… எங்களிடையே பொதுவான மதிப்புகள் உள்ளன,” என்றார்.
ட்ரம்புடன் அவர் "பொதுவான மதிப்புகளை" பகிர்ந்து கொள்வதாக கூறும் சிப்ராஸின் கருத்து, சிரிசா மீது மட்டுமல்ல, மாறாக சிரிசாவையும் அதன் 2015 தேர்தல் வெற்றியையும் ஊக்குவித்த செல்வந்த நடுத்தர வர்க்கத்தின் "இடது" கட்சிகள் அனைத்தின் மீதும் ஒரு அவமானகரமான குற்றப்பத்திரிகையாகும். இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு மூலோபாய அனுபவத்திலிருந்து விளைகிறது.
ஸ்பெயினின் பொடெமோஸ் (Podemos), பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA), ஜேர்மனியின் இடது கட்சி மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) போன்று உலகெங்கிலும் உள்ள குட்டி-முதலாளித்துவ "பின்-மார்க்சிச" (post-Marxist) கட்சிகள் ஜனவரி 2015 இல் சிரிசாவின் வெற்றியைப் புகழ்ந்தன. 1968 மாணவர் இயக்கத்திற்குப் பின்னர் எழுச்சி கண்டு, தொழிலாள வர்க்கத்தின் மற்றும் மார்க்சிசத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரிக்கும் பின்நவீனத்துவ வாதத்தைப் பகிர்ந்து கொள்ளும் இவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர பேரம்பேச முடியும் என்ற சிப்ராஸின் பொய் வாக்குறுதிகளை ஊக்குவித்தார்கள்.
ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை வழிநடத்த சிப்ராஸின் பாதையைப் பின்தொடரலாமென அவர்கள் கனவு கண்டனர். பொடெமோஸ் பொது செயலாளர் பப்லோ இக்லெஸியாஸ் சிப்ராஸை ஒரு "சிங்கமென" புகழ்ந்தும், “சிரிசா, பொடெமோஸ், நாங்கள் வெல்வோம்!” என்று முழங்கியும், கிரீஸில் சிப்ராஸ் உடன் பிரச்சாரம் செய்தார். “சிரிசாவின் தேர்தல் வெற்றி, அருமையான செய்தி. இது ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக போராடுகின்ற ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை அளிக்கிறது,” என்று NPA அறிவித்தது. சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO), இதன் கிரேக்க துணை அமைப்புகள் சிரிசாவுக்கு உள்ளேயே இருக்கின்றன என்பதுடன் சிப்ராஸ் அரசாங்கத்திற்குள் சென்றன என்ற நிலையில், சிரிசாவின் வெற்றியை "ஒட்டுமொத்த இடது மற்றும் நமது மக்களின் இறுதி வெற்றிக்கான" ஒரு முன்நிபந்தனையாக குறிப்பிட்டது.
சிரிசா வேலைத்திட்டத்தின் மார்க்சிச-விரோத, முதலாளித்துவ-சார்பு, தேசியவாத குணாம்சம், ஒரு பொறி என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே எச்சரித்தது என்பதுடன், அதற்கு பதிலாக கிரேக்க தொழிலாளர்களின் ஐக்கியத்துடன், சிக்கன நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியில் புரட்சிகரமாக அணித்திரட்டும் முன்னோக்கை முன்வைத்தது. சிப்ராஸ் அவரின் தேர்தல் வாக்குறுதிகளை ஏமாற்றுகரமாக காட்டிக்கொடுத்த போது சிரிசா குறித்த ICFI இன் விமர்சனங்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டன.
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய போராட்டங்களுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கை புரிந்துணர்வை இரத்து செய்ய சூளுரைத்து, சிரிசா பதவிக்கு வந்தது. ஆனால் கிரீசை யூரோ மண்டலத்திலிருந்து வெளியேற்ற பேர்லின் அச்சுறுத்தியதும், சிரிசா ஏறத்தாழ ஒரேயிரவில் அடிபணிந்தது. அது பதவிக்கு வந்து நான்கே வாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய புரிந்துணர்வை மதிப்பதற்கு உடன்பட்டது, பின்னர் ஜூலை 2015 இல் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கை மீதான சிரிசாவின் சொந்த கருத்து வாக்கெடுப்பில் கிரேக்க மக்கள் பெரும்பான்மையாக "வேண்டாம்" என்று வாக்களித்ததை காலடியில் போட்டு நசுக்கியது.
2015 கிரேக்க தேர்தலுக்கு முன்னதாக, சிப்ராஸ் அவரை சர்வதேச முதலாளித்துவ வர்க்கம் நம்பலாம் என்பதற்கு மறுஉத்தரவாதம் வழங்க பிரதான ஏகாதிபத்திய தலைநகரங்களுக்கு விஜயம் செய்தபோது, உலக சோசலிச வலைத் தளம் சிரிசாவின் முதலாளித்துவ-சார்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சார்ந்த வேலைத்திட்டத்தைக் குறித்து எச்சரித்தது.
2013 இல், உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வாஷிங்டனில் உள்ள புரூகிங்ஸ் பயிலகத்திற்கான சிப்ராஸின் முதல் விஜயம் குறித்து எழுதியது, அங்கே அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் சிஐஏ க்கு இணங்கிய கிரேக்க பிரதம மந்திரி அஸ்தஸ்தைப் பெற ஒத்திகை மேற்கொண்டார். சிப்ராஸிற்கு நன்மதிப்பு கிடைத்ததென WSWS குறிப்பிட்டது: சர்வதேச நாணய நிதியம் (IMF) அவரை "ஆக்கபூர்வமானவர், மனமுவந்து செயல்படக்கூடியவர்" என்று குறிப்பிட்டது, மேலும் சிரிசா குறிப்பிடுகையில், சிப்ராஸூம் அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஒரு "பொதுவான மதிப்பீட்டை" எட்டியிருப்பதாக குறிப்பிட்டது. சிப்ராஸ் அவரின் புரூகிங்ஸ் பயிலக பார்வையாளர்களிடையே பேசுகையில், “சிலர் நினைப்பது போல நான் அந்தளவுக்கு அபாயகரமானவர் கிடையாது என்பதில் உங்களை சமாதானப்படுத்தி இருப்பேன் என்று நினைக்கிறேன்,” என்றார்.
இதுபோன்ற செய்திகளை வாசித்த போது சிரிசாவின் குட்டி-முதலாளித்துவ கூட்டாளிகள் மட்டுமே மிகவும் உற்சாகமடைந்தனர். பின்னர் இந்த சக்திகள் அவற்றின் பங்குச்சந்தை துறைகள் மீது ஒரு கண்ணும், அவர்கள் அரசாங்க அமைச்சர்கள் ஆவதற்கான வாய்ப்புகள் மீது மறு கண்ணும் வைத்து, அடுத்தடுத்த மாதங்களில் வங்கிகளுக்கு மறுஉத்தரவாதம் வழங்குவதற்காக சிப்ராஸ் வாஷிங்டன், நியூ யோர்க் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களுக்குச் சென்றபோது, மிகவும் பலமாகவும், திடமாகவும் அவரை ஊக்குவித்தன.
இவற்றிலிருந்து முக்கிய மூலோபாய படிப்பினைகள் எடுக்க வேண்டியுள்ளது. ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து ஒரு கால் நூற்றாண்டு தீவிர ஏகாதிபத்திய போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவம் தோல்வியடைந்துள்ளது. போட்டித்தன்மையை அதிகரிப்பதற்காக சராசரியாக 40 சதவீத சம்பள வெட்டுக்களுக்கு இடையே, 21 சதவீத வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர்களிடையே 42 சதவீத வேலைவாய்ப்பின்மையுடன், மரணப்படுக்கையில் கிடக்கும் கிரேக்க முதலாளித்துவத்தின் நிலை ஒரு பரந்த நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடுகளில் ஒன்று மட்டுமே ஆகும்.
கிரீஸில் சிரிசா காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள் என்ற அதன் 2015 அறிக்கையில் ICFI விவரித்தவாறு, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அக்டோபர் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்த போல்ஷிவிக் கட்சியின் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் புரட்சிகர பாரம்பரியங்களுக்குத் திரும்புவதில் தான் ஒரே உண்மையான மாற்றீடு தங்கியுள்ளது. ICFI அதில் அறிவித்தது:
ஒரு உண்மையான புரட்சிகரக் கொள்கை மூலம், கிரேக்கத்திலும் உலகம் பூராவுமான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே முன்னுள்ள ஒரே முன்னோக்கிய வழியாகும். முதலாளித்துவத்தின் மீதான ஒரு நேரடியான தாக்குதலும், அவர்களது செல்வங்களைப் பறிமுதல் செய்வதும், பிரதான வங்கிகள் மற்றும் உற்பத்தி சக்திகளைக் கைப்பற்றி அவற்றை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதும், ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் அரசை உருவாக்குவதும் இதற்கு அவசியமாய் உள்ளது. சிரிசா போன்ற கட்சிகளுக்கு எதிரான தயவுதாட்சண்யமற்ற போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்துக்கு அரசியல் தலைமை வழங்குவதற்காய் மார்க்சிச கட்சிகளை கட்டியெழுப்புவது இத்தகைய போராட்டங்களுக்கு அத்தியாவசியமாய் உள்ளது.
சிரியாவின் பிற்போக்குத்தனமான வர்க்க தன்மையைக் குறித்த உண்மையைத் தொழிலாளர்களுக்கு கூறிய ஒரே அரசியல் போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) மட்டுமேயாகும், அதன் பிரிவுகளை மார்க்சிஸ்ட் கட்சிகளாக கட்டமைக்க வேண்டும்.