Print Version|Feedback
Move to Spanish military rule in Catalonia exposes bankruptcy of Podemos
கட்டலோனியாவில் ஸ்பானிய இராணுவ ஆட்சியை நோக்கிய நடவடிக்கை பொடெமோஸின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது
By Alejandro López and Alex Lantier
24 October 2017
கட்டலோனியாவில் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத, எதேச்சாதிகார ஆட்சியை திணிப்பதற்காக ஸ்பானிய அரசியல்சட்டத்தின் பிரிவு 155 ஐ மாட்ரிட் கொண்டுவந்துள்ளமையானது பொடெமோஸ் கட்சியின் திவால்நிலையை அம்பலப்படுத்தியிருக்கிறது.
பொடெமோஸ் கட்சி அதன் பொதுச் செயலாளர் பப்லோ இக்லெஸியாஸ் உள்ளிட்ட ஸ்ராலினிசப் பேராசிரியர்களாலும் மற்றும் குட்டி-முதலாளித்துவ Anticapitalistas இயக்கத்தின் அங்கத்தவர்களாலும் 2014 இல் தொடங்கப்பட்ட ஒரு ஜனரஞ்சகவாதக் கட்சியாகும். ஆரம்பத்தில் அது, ஸ்பானிய மக்களை நாசம் செய்து கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டவும், “ஸ்பானிய ஜனநாயகத்திற்கு புத்துயிரூட்ட”வும், அத்துடன் மக்கள் கட்சி (PP) மற்றும் ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) ஆகியவற்றைக் கொண்ட பழைய ஆளும் “தட்டினரை” எதிர்த்துப் போராடவும் சூளுரைத்தது. இப்படியான வாய்வீச்சு, மாட்ரிட், பார்சிலோனா, வலன்சியா, காடிஸ், சரகோஸா மற்றும் சான்டியாகோ டி கம்போஸ்டிலா உள்ளிட ஸ்பெயின் எங்கிலுமான நகரங்களின் உள்ளாட்சிப் பதவிகளில் அது தேர்ந்தெடுக்கப்பட அதற்கு உதவியாக இருந்தது.
சென்ற தேசியத் தேர்தலில், இக்லெஸியாஸ் அடிக்கடி சுட்டிக் காட்டுவதைப் போல, பொடெமோஸ் 5 மில்லியன் வாக்குகளைப் பெற்றது. இந்த ஆதரவினை, 1978 இல் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற இராணுவ ஆட்சியெனும் மரண அபாயத்திற்கு எதிராக அணிதிரட்டுவதற்கு அது என்ன செய்திருக்கிறது? எதுவுமில்லை என்பதே பதிலாய் கிடைக்கும்.
அக்டோபர் 1 கட்டலான் சுதந்திரக் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் மீதான கொடூரமான போலிஸ் ஒடுக்குமுறைக்குப் பின்னர், ஒவ்வொரு அடியெடுப்பிலும் பொடெமோஸ் இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு திருப்பத்தை அது எதிர்க்கப் போவதில்லை என்பதை சமிக்கையளித்திருக்கிறது. தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவதில் தான் அது கவனம் குவித்திருக்கிறது. மாட்ரிட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டுமே பிராங்கோ சகாப்தத்தின் எதேச்சாதிகாரக் கொள்கைகளுக்குத் திரும்புவதை நோக்கி துரிதமாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பொடெமோஸ் அது எதிர்த்துப் போராடுவதாய் கூறிக்கொள்கின்ற ஐரோப்பிய ஒன்றியம் - PP - PSOE “தட்டினருடன்” திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு அவற்றுக்கு கையாலாகாத சில பகிரங்க விண்ணப்பங்களையும் விடுத்தது.
செப்டம்பர் இறுதியில், அக்டோபர் 1 பிரிவினைவாத கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்கு முன்பாக, பொடெமோஸ் சகவாழ்வு மன்றம் (Assembly of Coexistence) என்று அழைக்கப்பட்ட ஒன்றை அமைத்தது. “[கட்டலான் பிரிவினைவாதிகளுடன்] பேச்சுவார்த்தையை தொடக்குவதற்கும், கட்டலான் மக்கள் தங்களை வெளிப்படுத்த இயலுகின்ற வகையில், அசாதாரண நடவடிக்கைகளைக் கைவிட்டு ஜனநாயகக் கோட்பாடுகளை மதிப்பதற்கும்” மக்கள் கட்சியை (PP) வலியுறுத்துகின்ற ஒரு அறிக்கையை வரைவு செய்வதே அதன் பணியாக இருந்தது.
எதிர்பார்த்த வகையில், மாட்ரிட் அந்த அறிக்கையை உதாசீனம் செய்ததோடு, கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை வன்முறை கொண்டு ஒடுக்க முன்னேறிச் சென்றது. 14 கட்டலான் அரசாங்க அதிகாரிகளைக் கைதுசெய்தது, மில்லியன் கணக்கான சுவரொட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் துண்டறிக்கைகளைப் பறிமுதல் செய்தது, 144க்கும் அதிகமான இணைய தளங்களை மூடியது, அச்சகங்களிலும் செய்தித்தாள் அலுவலகங்களிலும் சோதனைகள் மேற்கொண்டது, சுயநிர்ணயம் குறித்த கூட்டங்களைத் தடைசெய்தது, அத்துடன் கருத்துவாக்கெடுப்பை ஆதரிப்பதற்காக 700க்கும் அதிகமான நகரசபை முதல்வர்களை வழக்குகளைக் கொண்டு மிரட்டியது.
கட்டலான் மக்களது பாரிய அணிதிரட்டலின் காரணத்தால் இறுதியில் அக்டோபர் 1 அன்று கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடந்தபோது, 16,000 சிவில் பாதுகாப்பு படையினர்கள் மற்றும் தேசிய போலிசை அனுப்பிய PP, வாக்களிப்பு மையங்களைப் பாதுகாக்க முயன்ற மற்றும் வாக்களிக்க முயன்ற அமைதியான எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது, இதில் 800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
போலிஸ் சப்பாத்து கால்களால் அமைதியான வாக்காளர்களை தாக்குவதையும் வயதுமுதிர்ந்த பெண்களையும் இரத்தம்கொட்ட அடிப்பதையும் காணொளியில் கண்டு உலகெங்குமான மில்லியன் கணக்கான மக்களைத் திகைக்கச் செய்த இந்த ஒடுக்குமுறைக்குப் பின்னரும் கூட, பொடெமோஸ் அளவுமீறிச் சென்று ஐரோப்பிய ஒன்றியமும் PSOEம் எப்படியாவது ரஹோயை தடுத்தி நிறுத்தி விடுவார்கள் என்பதான பிரமைகளை ஊக்குவித்தது.
அதன் ஐந்து ஐரோப்பிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஒடுக்குமுறைக்கு அடுத்த நாள் ஐரோப்பிய ஆணையத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினர், அதில் “வன்முறை மற்றும் ஒடுக்குமுறை இன்றி ஒரு அரசியல் பிரச்சினையை சமாளிக்க திறனற்றதாக இருக்கின்ற ஒரு அங்கத்துவ நாட்டு அமைப்பு முறையின் நாசத்தை தவிர்க்கும் பொருட்டு” ஸ்பெயினில் தலையீடு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடிதத்தில் இருந்த மை காய்வதற்கு முன்பே, புரூசெல்ஸ் புதிய ஒடுக்குமுறைகளையும் எதேச்சாதிகார நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்கு ரஹோயுடன் மும்முரமாக வேலைசெய்து கொண்டிருந்தது. ஐரோப்பிய ஆணையம், லண்டன், பாரிஸ் மற்றும் பேர்லின் மற்றும் அனைவரும் PP அரசாங்கத்திற்கு தமது வெளிப்படையான ஆதரவை அறிவித்தனர். ஆணையத்தின் தலைவரான ஜோன் குளோட் ஜூங்கர் ரஹோயுடன் தினசரி தொடர்பில் இருப்பதாக ஐரோப்பிய ஆணையம் பெருமையடித்தது.
PP கட்டலோனியாவில் தலையீடு செய்வதற்கான இராணுவத் திட்டங்களை வகுத்துக் கொண்டும் பிரிவு 155 ஐக் கொண்டுவருவதற்கு PSOE உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டும் இருக்கையில், இதேசக்திகளை வலியுறுத்தி ஒடுக்குமுறையை நிறுத்தி விடலாம் என்பதாக பொடெமோஸ் தொடர்ந்தும் கூறிக் கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அது, வெகுஜன ஒடுக்குமுறைக்கு வெறித்தனமாகத் தயாரித்துக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்புகளை அதை நிறுத்துமாறு மரியாதையுடன் பெரும்பாலும் ட்விட்டரின் வழியான ஒரு சில செய்திகளில் கேட்டுக் கொள்வதன் மூலமாக அதன் பாதையை முற்றுமுழுக்க மாறுவதற்கு இணங்கச் செய்துவிடலாம் என்பதாக கூறிவந்தது.
அக்டோபர் 3 அன்று மன்னர் ஆறாம் பிலிப் வழங்கிய அபாய அறிகுறி உரைக்கான -கட்டலோனியாவை ஸ்பெயினின் சட்ட பாதுகாப்பில் இருந்து நீக்கப்பட்ட பிராந்தியம் என்று முத்திரையிட்ட அவர், கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பைக் கண்டனம் செய்ததோடு ஸ்பெயின் அரசு அப்பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்றும் கோரினார்- பதிலிறுப்பில் பொடெமோஸ் தலைவர் இனிகோ எரெஹோன் (Íñigo Errejón) இவ்வளவு மட்டுமே எழுதினார்: “தீர்வின் பாகமாக இருக்கக் கிடைத்த வாய்ப்பை மன்னர் தொலைத்து விட்டார். ஒரு பேச்சுவார்த்தைக்கான அழைப்போ அல்லது ஆலோசனையோ அங்கே இருக்கவில்லை. இது என்னை கவலைக்குள் ஆழ்த்துகிறது.”
ரஹோயும் கட்டலான் பிராந்திய முதல்வரான கார்லஸ் புய்க்டெமொன்ட்டும் சந்திக்க வேண்டும் என்றும் “ஒரு பேச்சுவார்த்தையை தொடக்கக் கூடிய ஒரு மத்தியஸ்த அணி என்ற ஒற்றைப் புள்ளிக்கு உடன்பட வேண்டும்” என்றும் அக்டோபர் 6 அன்று, பொடெமோஸ் அமைப்புச் செயலரான பப்லோ எச்செனிக்கே வலியுறுத்தினார்.
புய்க்டெமொன்ட் அக்டோபர் 10 அன்று வழங்கிய ஒரு உரையில் கட்டலான் சுதந்திர அறிவிப்பை நிறுத்தி வைத்து மாட்ரிட் உடனான பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, கட்டலோனியாவில் “உரிமைகளை நிறுத்திவைக்கக் கூடாது” என்று இக்லெஸியாஸ் ரஹோயை கேட்டுக் கொண்டார். அது ஒரு “வரலாற்றுப் பிழையாகி விடும்” என்றும் அவர் ரஹோய்க்கு தெரிவித்தார்.
இத்தகைய கையாலாகாத விண்ணப்பங்கள், ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவதற்கு ரஹோய்க்கும் அதி-வலதுக்கும் துணிச்சலூட்ட மட்டுமே செய்தது. அடுத்த நாளில், ஸ்பானிய நாடாளுமன்றத்தில் வழங்கிய ஒரு மூர்க்கத்தனமான, அச்சுறுத்தும் தொனியிலான உரையில், பிரிவு 155 ஐ தான் நடைமுறைக்கு கொண்டுவர இருப்பதாக ரஹோய் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில், பொடேமோஸின் சார்பில் இக்லெஸியாஸ் ஒரு கோழைத்தனமான மற்றும் சிடுமூஞ்சித்தனமான பதிலை அளித்தார். அவர், ரஹோயிற்கு எதிராக நிற்பது தனது வேலை இல்லை என்றார். அவர் ரஹோயிடம் கூறினார், “இன்று தர்க்கவிவாதம் செய்வதற்கான நாளல்ல. நான் உங்களுடன் சேர்ந்து பிரதிபலிக்க விரும்புகிறேன். உங்கள் குழு 7.9 மில்லியன் ஸ்பானிய மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.... நீங்கள் PSOE மற்றும் குடிமக்கள் கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ளீர்கள், உங்களை நான் வாழ்த்துகிறேன்.” ரஹோய் “பொறுப்புடன்” நடந்து கொள்ள வேண்டும் என்றும் புய்க்டெமொன்ட் உடனான ”பேச்சுவார்த்தைகளின் முன்வரிசை”யில் தன்னை அமர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் இக்லெஸியாஸ் தொடர்ந்து கூறினார்.
பொடெமோஸ் உடனான அனுபவமானது வசதியான நடுத்தர வர்க்கத்தின் “மார்க்சிசத்திற்குப் பிந்தைய” ஜனரஞ்சகக் கட்சிகளது பாத்திரம் குறித்த இன்னுமொரு கசப்பான பாடம் ஆகும். இவை தொழிலாள வர்க்கத்துக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் முழுக் குரோதமானவையாக நிரூபணமாகியிருக்கின்றன. பொடேமோஸின் கிரேக்கக் கூட்டாளியான சிரிசா, சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர வாக்குறுதியளித்து 2015 இல் ஆட்சியைப் பிடித்தபின் தன் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக காட்டிக்கொடுத்து கிரேக்க மக்களின் மீது இன்னுமொரு ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைத் தொகுப்பைத் திணித்தது. இப்போது “ஜனநாயக புத்துயிர்ப்பு”க்கு வாக்குறுதியளிக்கின்ற பொடெமோஸ், எதேச்சாதிகார ஆட்சிக்குத் திரும்புவதை நோக்கிய ஸ்பானிய முதலாளித்துவத்தின் நடவடிக்கைகளின் பின்னால் தன்னை நிறுத்திக் கொண்டிருக்கிறது.
பொடெமோஸ் சரணாகதியடைந்தது, போராடுவது சாத்தியமில்லை என்பதால் அல்ல. தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் போராட்டங்களுக்கு மத்தியில் பிராங்கோவாத ஆட்சி உருக்குலைந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், சர்வாதிகாரத்திற்குத் திரும்புவதற்கு ஸ்பெயினிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாளர்கள் மத்தியில் ஆழமான எதிர்ப்பு நிலவுகிறது. இரத்தக்களரியான 1936-1939 ஸ்பானிய உள்நாட்டுப் போரும், நாஜி ஜேர்மனி மற்றும் பாசிச இத்தாலியில் இருந்து கிட்டிய இராணுவ உதவியைக் கொண்டு பிராங்கோவின் பாசிச ஆட்சி வெற்றி பெற்றதும் மறக்க முடியாதவை, மறக்கக் கூடாதவை. கட்டலோனியாவில் நூறாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்திக் கொண்டிருந்த நிலையில், இந்த எதிர்ப்புக்கு விண்ணப்பம் செய்வதற்கு பொடேமோஸுக்கு சந்தர்ப்பங்களுக்கோ அல்லது வாய்ப்புவளங்களுக்கோ பஞ்சமிருக்கவில்லை, ஆனால் அதைச் செய்ய வேண்டாம் என்று அது முடிவெடுத்தது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துக்கும், தத்துவார்த்தரீதியாக நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகள் மார்க்சிசத்தை பின்நவீனத்துவ அடிப்படையில் நிராகரிப்பதில் வேரூன்றி இருக்கும் பொடெமோஸின் குட்டி-முதலாளித்துவ ஜனரஞ்சகவாதத்துக்கும் இடையில் பிரித்துநிற்கின்ற இணைக்கமுடியாத அரசியல் மற்றும் வர்க்கப் பிளவை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் மாட்ரிட்டால் முன்னெடுக்கப்படுகின்ற இராணுவ ஆட்சியின் அபாயத்திற்கு எதிராக, கட்டலான் மற்றும் ஸ்பானியத் தொழிலாளர்களின் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பொதுப் போராட்டத்திற்கு ICFI அழைப்புவிடுத்தது. அது கட்டலோனியாவில், மாட்ரிட்டின் ஒடுக்குமுறையை எதிர்த்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் இராணுவவாத நேட்டோ கூட்டணியிலும் இணைந்து கொள்ளும் நோக்கம் கொண்டிருக்கும் ஒரு தனி கட்டலான் முதலாளித்துவ அரசுக்கான, கட்டலான் தேசியவாத அழைப்புகளை ஆதரிக்காத அதேநேரத்தில், மாட்ரிட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எதேச்சாதிகார ஆட்சிக்குத் திரும்புவது தான் பிரதான அபாயம் என்று அது வலியுறுத்தியது. ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகம் உருக்குலைவதன் மத்தியில், முதலாளித்துவம், போர் மற்றும் எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராகவும், சோசலிசத்துக்காகவும் தொழிலாள வர்க்கம் புரட்சிகரமாக அணிதிரட்டப்படுவது மட்டுமே முன்நோக்கியிருக்கின்ற பாதையாகும் என்று அது வலியுறுத்தியது.
மறுபக்கத்தில் பொடெமோஸ், அடிப்படையில், ஸ்பானிய முதலாளித்துவ அரசின் அரசியல் அதிகாரத்தையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது என்ற PP இன் அதே வர்க்க அச்சில், தனது அடிப்படையைக் கொண்டிருக்கின்ற ஒரு முதலாளித்துவக் கட்சியாகும். இறுதி ஆய்வில், அதனால் தான், ரஹோயிடம் இருந்து தனித்துவப்பட்ட ஒரு கொள்கைக்காக அது போராடவில்லை. கட்டலான் தேசியவாதிகள் மீது வெளிப்படையாக தாக்காமல்விட்டமையானது, தமது வாக்குகளைத் தொலைத்து விடும் என்ற கவலையில் பொடெமோஸ் அங்கத்தவர்கள் இருப்பதாக செய்திகள் வெளிவருவதன் மத்தியில், நேற்று பொடெமோஸ் அங்கத்தவர்களுக்கு அதன் தலைவரான பப்லோ இக்லெஸியாஸ் அனுப்பிய கடிதத்தின் சாராம்சம் இதுவேயாகும்.
1978 இல் பாசிச ஆட்சியில் இருந்து நாடாளுமன்ற ஆட்சிக்கு உருமாறியதன் போது உருவாக்கப்பட்ட அமைப்புமுறையை ஆறாம் பிலிப்பும் PPயும் மதிக்கவில்லை என்பதான கவலையை அந்தக் கடிதத்தில் இக்லெஸியாஸ் வெளிப்படுத்துகிறார். 1970களில், தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டங்களை எதிர்நோக்குகையில், பிராங்கோவாத ஆட்சியானது, ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சியை நசுக்குவதற்காக, PSOE ஐயும் ஸ்ராலினிச ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சியையும் (PCE) பாசிச ஆளும் உயரடுக்கிற்குள் ஒன்றிணைத்ததன் மூலம் தனது பிரதிபலிப்பை காட்டியது. ஆனால் இன்று ஆளும் வர்க்கமானது பொடெமோஸ்க்கும் கட்டலான் முதலாளித்துவ தேசியவாதிகளுக்கும் அவர்களுக்குரிய பங்கைத் தருவதில்லை என இக்லெஸியாஸ் புகாரிடுகிறார்.
அவர் எழுதுகிறார்: “அரசகுடும்பத்தில் தங்கியுள்ள ஆட்சிக்கும்பலிடம் தன் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நடத்த இயலுமளவுக்கு பலப்பிரயோக சாதனங்கள் இருக்கின்றன. ஆயினும், 40 வருடங்களுக்கு முன் நடந்ததைப் போல, குறுகியகால மற்றும் நீண்டகாலப் போக்கில் ஒரு உயிர்வாழக்கூடிய ஒரு அரசியல் மற்றும் பிராந்திய ஒருங்கிணைந்த அலகாக ஸ்பெயினை ஒருங்கிணைக்கின்ற அரசியல் தகமை அதற்கு இல்லாதிருக்கிறது.” எதிரிகள் “நம்மை தேசிய அரசாங்கத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கு தமது ஒட்டுமொத்த பலத்தையும் அணிதிரட்டியுள்ளார்கள்” என்ற உண்மையில் இக்லெஸியாஸ் தனது ஏமாற்றத்தை தொடர்ச்சியாய் வெளிப்படுத்துகிறார்.
“நாம் ஏன் பிரிவு 155 ஐ கொண்டுவருவதை எதிர்க்கிறோம்” என்று கேட்டுக் கொள்ளும் இக்லெஸியாஸ், “ஏனென்றால் அது உருமாற்றத்தின் இன்றியமையாத உடன்பாடுகளில் [1978 அரசியல்சட்டத்தின் அங்கீகரிப்புடன், கட்டலான் சட்டமன்றம் போன்றதொரு குடியரசு ஸ்தாபனத்தை மீட்சி செய்தமையானது, கட்டலோனியாவில் அரசியல்சட்டத்திற்கு கிட்டிய பரந்த சமூக ஆதரவின் அடித்தளங்களில் ஒன்றாக இருந்தது] ஒன்றைத் தகர்த்து விடும்...வைஸ்ராய் ரஹோய் கட்டலோனியாவை ஆட்சி செய்ய விரும்புகிறார், ஆனால் ஒடுக்குமுறையைக் கொண்டும் இன்னும் அதிக சிறையிலடைப்புகளைக் கொண்டுமே அவரால் சமாளிக்கத்தக்க ஒரு எதிர்ப்பை அவர் சந்திப்பார்” என்று பதிலளிக்கிறார்.
இராணுவ சர்வாதிகாரம் மற்றும் வெகுஜன மக்கள் எதிர்ப்பு இரண்டின் சாத்தியம் குறித்தும் பொடெமோஸ் நன்கறிந்தே இருக்கிறது. ஸ்பெயினில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைக்கின்ற ஒரு முற்றுகை நிலையை உருவாக்கக் கூடிய ஸ்பானிய அரசியல் சட்டத்தின் பிரிவு 116 ஐ குறித்துக் குறிப்பிடுகின்ற இக்லெஸியாஸ் எழுதுகிறார்: “இன்று, கட்டலோனியாவில் 155 இன் பாதையானது, அரசாங்கம் குடிமக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளுமாயின், இது 116 இன் பாதைக்கும் தன்னை மாற்றிக் கொள்ளக் கூடும், அரசின் தலைமை சக்திகளிடம் இருந்தான ஒரு பிற்போக்கான தாக்குதலுக்கும் இட்டுச் செல்லக் கூடும்.”
சர்வாதிகாரத்தின் அபாயத்திற்கு முகம்கொடுக்கும் நிலையிலும், இக்லெஸியாஸ், எதிர்ப்பானது இருக்கும் அரசு எந்திரத்திற்குள்ளாக வழிநடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கட்டலான் பிராந்திய அரசாங்கம் மற்றும் மாட்ரிட் இரண்டின் ஆதரவுடனும், கட்டலான் தன்னாட்சி குறித்த ஒரு “உடன்பட்ட கருத்துவாக்கெடுப்பு” என்னும் பெருந்தன்மையான விருப்பத்தை அவர் வெளியிடுகிறார். பிராங்கோவாதத்திற்கும் இரண்டாம் குடியரசை பிராங்கோ தூக்கிவீசியதற்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் பாரம்பரியங்களுக்கு எந்த விண்ணப்பமும் செய்வதன் மீது அவர் தாக்குகிறார். அவர் எழுதுகிறார், “ஸ்பெயின் கணக்கிடமுடியாத மதிப்பு கொண்ட ஒரு ஜனநாயகக் கையிருப்பைக் கொண்டிருக்கிறது, அது இருபதாம் நூற்றாண்டின் அடையாளங்கள் விடயத்தில் தனது பழம்பெருமையை விட்டுத்தள்ள வேண்டியிருக்கும் ஒரு குடியரசு உத்வேகமாகும்.”
இக்லெஸியாஸின் வாதங்கள், PPக்கும் இராணுவ சர்வாதிகார அச்சுறுத்தலுக்கும் எதிராக ஸ்பானிய உழைக்கும் மக்களை போர்க்குணமிக்க எதிர்ப்புக்கு ஆயுதபாணியாக்குவதாக இல்லை. சரணாகதியின் ஒரு பாதையையே அவை காட்டுகின்றன. ஸ்பானிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொடெமோஸ் விரும்புகின்ற தீர்வு -ஒரு கருத்துவாக்கெடுப்புக்கு பார்சிலோனாவுடன் உடன்படுவது- வெகு முன்பே மாட்ரிட் நிராகரித்திருந்த ஒன்றாகும். அதேபோல இப்போது வரை பொடெமோஸ் பின்பற்றி வந்திருக்கின்ற கையாலாகாத கொள்கையானது, மாட்ரிட்டின் பாதையை மாற்றிக் கொள்ள செய்ய இயலாததாக உள்ளது.
மாட்ரிட்டில் இருக்கும் பிராங்கோவாதத்திற்குப் பிந்தைய ஆட்சியானது தனது பிராங்கோவாத வேர்களுக்குத் திரும்புகின்ற நிலையிலும் கூட, தொழிலாளர்கள், 1917 அக்டோபர் புரட்சி மற்றும் ஸ்பானிய உள்நாட்டுப் போரின் சமயத்தில் போன்ற, இருபதாம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாரம்பரியங்களுடன் தங்களுடைய போராட்டங்களை இணைத்து விடக் கூடாது என்பதை இக்லெஸியாஸ் வலியுறுத்துகிறார்.
1978 அரசியல்சட்டத்திற்கு இணங்கி நடக்கவோ அல்லது இக்லெஸியாஸ் இடும் கட்டளைக்கு இணங்கி நடப்பதற்கோ தொழிலாளர்களுக்கு எவ்வித காரணமும் இல்லை. பாசிஸ்டுகள், PSOE மற்றும் PCE இல் இருக்கும் இக்லெஸியாஸின் முன்னோடிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு பிந்தைய 40 ஆண்டுகளாக செயலற்றுக் கிடக்கின்ற அதன் ஷரத்துக்கள் இப்போது சர்வாதிகாரத்திற்குத் திரும்புவதற்கான பாதை வகுத்துத் தந்து கொண்டிருக்கின்றன என்பதுடன் கட்டலோனியாவில் ஸ்பானிய இராணுவம் ஒரு இரத்தவெள்ளத்தை பாயச் செய்யும் அபாயத்தையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இறுதி ஆய்வில், இக்லெஸியாஸ் விடுத்த கடிதத்தின் முக்கியத்துவம் என்பது, மற்ற எல்லாவற்றையும் விட, பொடெமோஸ் குறித்து அது என்ன கூறுகிறது என்பதில்தான் இருக்கிறது. அரசியல் ஸ்தாபகத்திற்கு சவால்விடுவதாகவும் “ஜனநாயக புத்துயிர்ப்பின்” காவலனாகவும் தன்னைக் காட்டிக் கொண்ட இந்தக் கட்சி, உண்மையில் உருமாற்றத்திற்குப் பிந்தைய அமைப்பின் பகுதியாகும். இக்லெஸியாஸ் கோடிட்டுக் காட்டியது போல பொடேமோஸின் கொள்கையின் அடித்தளமாக இருப்பது, பாசிசம், சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசம் மற்றும் தற்போதைய பப்பலோவாத Anticapitalistas போன்ற அவற்றின் குட்டி-முதலாளித்துவக் கூட்டாளிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலமாக தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கியதைப்போல் ஒரு பிற்போக்கான உடன்பாடுதான் அமைந்துள்ளது.
சர்வாதிகாரத்தை நோக்கிய இந்தத் திருப்பத்திற்கு ஸ்பெயினிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தில் சக்திவாய்ந்த எதிர்ப்பு இருக்கும். பார்சிலோனாவில் இப்போது நடைபெற்று வருகின்ற பாரிய எதிர்ப்புப் போராட்டங்கள் வெறும் அதன் ஆரம்ப அறிகுறி மட்டுமே.
தொழிலாள வர்க்கம் உண்மையாகப் போராடக்கூடிய ஒரு புரட்சிகர முன்னோக்கு என்பதே இன்றுள்ள முக்கிய கேள்வியாகும். ஒரு “தீவிர இடது” கட்சியாக வேடமணிந்து கொண்டிருக்கும் ஸ்பானிய ஆளும் வர்க்கத்தின் ஒரு குட்டி-முதலாளித்துவக் கருவியான பொடெமோஸ் மீது சிறிதும் நம்பிக்கை வைக்கப்பட முடியாது என்பதே இதுவரையான போராட்டத்தில் இருந்து கிடைக்கின்ற ஒரு மையமான படிப்பினையாகும்.
பொடெமோஸ் ஸ்தாபிக்கப்பட்டபோது ICFI செய்த பகுப்பாய்வையே அதன் செயல்வரலாறு செறிந்த வகையில் நிரூபணம் செய்திருக்கிறது, அந்த ஆய்வு எச்சரித்தது: “கல்வியாளரும் தொலைக்காட்சி நெறியாளருமான பப்லோ இக்லெஸியாஸ் தலைமையிலும் முதலாளித்துவ எதிர்ப்பு இடதின் (Izquierda Anticapitalista, IA) முன்முயற்சியிலும் உருவாகியிருக்கும் புதிய கட்சியான பொடெமோஸ் (நம்மால் முடியும்) எல்லாவற்றுக்கும் மேல் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்க முற்படுகிறது.”