Print Version|Feedback
Washington seethes with rumors of an anti-Trump “palace coup”
ட்ரம்ப்-விரோத “அரண்மனை சதி" குறித்த வதந்திகளால் வாஷிங்டன் கொந்தளிக்கிறது
Joseph Kishore
13 October 2017
நவீன அமெரிக்க வரலாற்றில் முன்னுதாரணமில்லா ஓர் அரசியல் நெருக்கடியில் வாஷிங்டன் சுற்றிசூழப்பட்டுள்ளது. அரசின் உயர்மட்டத்தில் அதிகரித்தளவிலான கடுமையான கன்னை மோதல்களுக்கு இடையே, மந்திரிசபை உறுப்பினர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் ட்ரம்பை பதவியிலிருந்து நீக்குவது குறித்து இரகசிய விவாதங்கள் நடத்தி வருவதாக ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.
செனட் சபையின் வெளியுறவு குழு தலைவர் செனட்டர் பாப் கோர்க்கர், வட கொரியாவுக்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள், அமெரிக்காவை "மூன்றாம் உலக போருக்கான பாதையில்" கொண்டு சென்று கொண்டிருப்பதாக அறிவித்ததும், இவ்வாரம் ட்ரம்ப் நிர்வாகத்தினுள்ளும் குடியரசுக் கட்சிக்குள்ளும் அரசியல் சண்டை தீவிரமடைந்தது. கோர்க்கர் ட்வீட்டர் பதிவு ஒன்றில், ஜனாதிபதியை தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டியிருப்பதால், வெள்ளை மாளிகையை ஒரு "வயோதிபர் பராமரிப்பு மையம்" என்று குறிப்பிட்டார்.
ட்ரம்பை ஒரு "பித்துப்பிடித்தவராக" குறிப்பிட்ட வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சனின் இந்த கருத்து, ஜனாதிபதிக்கும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான ஜூன் மாத கூட்டத்தின் பின்னர் வந்திருப்பதாகவும், அக்கூட்டத்தில் ஜனாதிபதி அமெரிக்க அணுஆயுதங்களை பத்து மடங்காக அதிகரிக்க அறிவுறுத்தியிருந்தார் என்றும் NBC குறிப்பிட்டது. NBC மூடப்படும் என்று அச்சுறுத்தியதன் மூலமாக ட்ரம்ப் இச்செய்திக்கு விடையிறுத்தார். “பத்திரிகைகள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற விதம் வெறுக்கத்தக்கதாக இருப்பதாக" அவர் குறிப்பிட்டார்.
புதனன்று Vanity Fair இதழில் காப்ரியேல் ஷேர்மன் எழுதினார், “அதிகரித்தளவில் ஒழுங்கமைவற்ற குரூர மனோபாவத்தைக் கொண்டிருப்பதாக தெரியும் ஒரு ஜனாதிபதியை ஆலோசகர்கள் கட்டுப்படுத்த போராடி வருகின்ற நிலையில், ஓர் அரை டஜன் பிரபல குடியரசு கட்சியினரும் ட்ரம்ப் ஆலோசகர்களும்… அனைவரும் வெள்ளை மாளிகை ஓர் நெருக்கடியில் இருப்பதாக விவரிக்கின்றனர்.” ட்ரம்ப் அவரின் நீண்டகால பாதுகாப்புத்துறை தலைவர் கீத் ஷ்செல்லரிடம், “வெள்ளை மாளிகையில் உள்ள ஒவ்வொருவரையும் நான் வெறுக்கிறேன்! ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கிறார்கள், ஆனால் அவர்களையும் நான் வெறுக்கிறேன்!” என்று கூறியதாக சாடப்படுகிறது.
ட்ரம்ப் அவரின் தனியதிகாரங்களைப் பயன்படுத்தி வட கொரியாவுக்கு எதிராக அணுஆயுதங்களை பிரயோகிப்பதன் மூலம் அவர் உள்சிக்கல்களுக்கு விடையிறுக்கக்கூடுமென உயர்மட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகள் கவலை கொண்டிருப்பதாக ஷேர்மன் சுட்டிக்காட்டுகிறார். “[வெள்ளை மாளிகையின் முப்படைகளுக்கான தலைமை தளபதி ஜோன்] கெல்லியும் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸூம் ட்ரம்ப் முதலில் அணுஆயுத தாக்குதலுக்கு உத்தரவிட்டால் அவர்கள் என்ன செய்வது என்பதைக் குறித்து விவாதித்திருப்பதாகவும் கூட ஒரு முன்னாள் அதிகாரி ஊகம் தெரிவித்தார். 'அவர்களால் அவரை சமாளிக்க முடியுமா?' என்றும் அந்நபர் தெரிவித்தார்.”
உள்விவாதங்களை எடுத்துரைத்து வரும் பல கட்டுரையாளர்கள், 25வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி ட்ரம்பை நீக்குவதற்கான சாத்தியக்கூறை பகிரங்கமாக எழுப்பினர் —அச்சட்டதிருத்தமானது, ஜனாதிபதி மனரீதியிலோ அல்லது சரீரரீதியிலோ தகுதியற்றிருந்து, அவ்விதத்தில் அவரால் "அதிகாரங்களையும் பதவியில் அவர் கடமைகளையும் செய்யவியலாது" இருந்தால், அவரது மந்திரிசபையின் பெரும்பான்மை வாக்குகளோடு அவரை பதவியிலிருந்து நீக்கலாம் என்று வரையறுக்கிறது.
வாஷிங்டன் போஸ்டின் பழமைவாத "வலது திருப்பம்" பகுதியில் எழுதும் ஜெனீபர் ரூபின், அவரது சமீபத்திய கருத்துரையின் தலைப்பினூடாக “எப்போது நாம் 25 வது சட்டத்திருத்த பகுதியை எட்டுவோம்?” என்று வினவியதுடன், விரைவிலேயே என்று எழுதி முடித்தார். புதனன்று வெளியான மற்றொரு போஸ்ட் கட்டுரையில் பௌல் வால்ட்மன் அறிவித்தார்: “அனேகமாக குற்றவிசாரணை ட்ரம்பிடம் இருந்து நம்மை காப்பாற்றாது. ஆனால் 25 ஆம் சட்டத்திருத்தம் காப்பாற்றக்கூடும்,” என்றார். அவ்விரு கட்டுரைகளுமே, ஜனாதிபதி மீதான பதவிவிலக்கல் சாத்தியக்கூறை எழுப்புகின்ற “ஒரு தகுதியற்ற ஜனாதிபதியை வைத்துக் கொண்டு என்ன செய்வது,” என்ற போஸ்டின் சொந்த தலையங்கத்தை பின்தொடர்ந்து வந்திருந்தன.
இந்த மோதல்களுக்குப் பின்னால் இருப்பது, சர்வதேச கொள்கைகள் மற்றும் உள்நாட்டு கொள்கைகள் இரண்டும் சம்பந்தமான முக்கிய பிரச்சினைகள் மீது ஆளும் வர்க்கத்திற்குள் நிலைவும் ஆழ்ந்த பிளவுகளாகும். குறிப்பாக, வட கொரியாவுக்கு எதிரான ட்ரம்பின் பொறுப்பற்ற அச்சுறுத்தல்கள் வெளியுறவுத்துறை மற்றும் பென்டகனின் கணிசமான பிரிவுகளை பதட்டப்படுத்தி உள்ளது. கொரியா உடனான ஒரு போர் மில்லியன் கணக்கானவர்களை அழிப்பதில் போய் முடியும் என்பதோடு, சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஒரு நேரடி மோதலுக்கும் இட்டுச் சென்று, கோர்க்கர் குறிப்பிட்டதைப் போல மூன்றாம் உலக போரைத் தூண்டிவிடக்கூடியதாகும். ஆனால் ட்ரம்ப் எதிர்ப்பாளர்களின் கவலைகளைப் பொறுத்த வரையில், ஒரு போரானது அமெரிக்காவின் சர்வதேச அந்தஸ்தை சரிசெய்ய இயலாதளவுக்கு பாதிக்கும் என்பதுதான், உயிரிழப்புகளை விட அவர்களுக்கு மோசமானதாக உள்ளது.
ஓர் அரண்மனை சதிக்கான சாதகத்தன்மை குறித்து திரைக்குப் பின்னால் நடக்கும் விவாதங்களின் அடியிலிருக்கும் நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், அதுபோன்றவொரு சூழ்ச்சி —அது வென்றாலும் சரி அல்லது தோற்றாலும் சரி— அமெரிக்க ஜனநாயகம் என்னும் சவப்பெட்டியின் மீதுதான் அதன் இறுதி ஆணியை அறையும்.
ஐயத்திற்கிடமின்றி ட்ரம்ப் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒரு முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பார். ஒரு மூர்க்கமான மோதல் போக்கில், ட்ரம்ப்-ஆதரவு மற்றும் ட்ரம்ப்-எதிர்ப்பு இருதரப்பு கன்னைகளுமே ஆதரவுக்காக இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளுக்கு முறையிடும். எந்த கன்னை ஜெயித்தாலும், இராணுவ உளவுத்துறை முகமைகளே இறுதியில் அமெரிக்காவின் அரசியல் தலைவிதியில் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள். அனைத்திற்கும் மேலாக, ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், பரம-பிற்போக்குத்தனமான துணை-ஜனாதிபதி மைக் பென்ஸ் ஜனாதிபதியாவார்.
அவர்களின் பங்கிற்கு, ஜனநாயகக் கட்சியினரோ அமெரிக்க அரசியலில் ரஷ்ய தலையீடு என்று அவர்களின் நவ-மக்கார்த்தியிச பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி, இந்நெருக்கடிக்கு விடையிறுத்துள்ளனர், அவர்கள் அதிகரித்தளவில் ஒருமுகப்பட்டிருப்பது வெறுமனே ட்ரம்ப் தேர்வானதற்கு ரஷ்யா உதவியது என்ற இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களின் மீது மட்டுமல்ல, மாறாக மாஸ்கோ அமெரிக்காவுக்குள் "பிளவுகளை விதைத்து" வருகிறது என்பதிலும் ஒருமுகப்பட்டுள்ளனர். இணையத்தைத் தணிக்கை செய்யவும் மற்றும் அரசு கட்டுப்பாட்டைக் கொண்டு வரவும், அனைத்து சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பையும் "வெளிநாட்டு எதிரியின்" தீய தலையீட்டின் விளைவு என்பதாக கரும்புள்ளி குத்துவற்கும், அவற்றை நியாயப்படுத்தும் வாதங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ஜூன் மாதம் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) எச்சரித்ததைப் போல, ட்ரம்பின் ஆளும் வர்க்க எதிர்ப்பாளர்களின் அணுகுமுறைகள் "அடிப்படையில் ஜனநாயக-விரோதமானவை என்பதுடன், இராணுவ/உளவுத்துறை ஸ்தாபகம் மற்றும் பெருநிறுவன நிதியியல் உயரடுக்கின் கூறுபாடுகளுடன் பின்புல சூழ்ச்சிகளை உள்ளடக்கி உள்ளன.
ஒன்றன்பின் ஒன்றாக உலகளாவிய புவிஅரசியல் நெருக்கடிகள், பொருளாதார, இராணுவ மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு எந்த தீர்வுமின்றி, ட்ரம்பின் ஆளும் வர்க்க விமர்சகர்கள் அவற்றிற்கு விடையிறுக்க பெரும்பிரயத்தனத்துடன் ஏதேனும் வழியைத் தேடி வருகின்றனர். காரணம் ட்ரம்ப் கிடையாது, மாறாக அவர் ஆளும் வர்க்கத்தின் நோக்குநிலை பிறழ்ந்த அவநம்பிக்கையின் ஓர் அதீத அடையாளமாக உள்ளார்.
ஆளும் உயரடுக்கின் இத்தகைய போட்டி முகாம்களிடம் இந்நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு விடுவதை விட மிக அபாயகரமானது வேறொன்றும் இருக்காது. ஆளும் செல்வந்த தட்டுக்களின் அனைத்து கன்னைகளும், எவ்வளவு தான் அவர்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான சக்தியாக எழுச்சியுறுவதைத் தடுக்க தீர்மானமாக உள்ளனர். அவர்கள் அவர்களது உலகளாவிய நலன்களைப் பாதிக்காத அல்லது அதிகாரம் மீதான அவர்களின் பிடி தளராத விதத்தில் இந்நெருக்கடிக்கு தீர்வு காண விரும்புகிறார்கள்.
இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. வர்க்க ஆட்சியின் நெருக்கடியின் அவசியமான தர்க்கரீதியான விளைவாக, வர்க்க போராட்டம் வளர்ச்சியுறுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி அதன் ஜூன் மாத அறிக்கையான “அரசியல் சதியா அல்லது வர்க்க போராட்டமா: வாஷிங்டனின் அரசியல் நெருக்கடியும், தொழிலாள வர்க்க மூலோபாயமும்” என்பதில் எழுதியவாறு:
அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் இரண்டிலும் பெருகுகின்ற புறநிலை நெருக்கடியின் நிலைமைகள், பரந்த சமூக நனவு தீவிரப்படுவதுடன் சந்திக்கையில், வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பில் வெளிப்பாடு காணும். வர்க்கப் போராட்டமானது பல தசாப்தங்களாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தாலும், ஜனநாயகக் கட்சியாலும் மற்றும் அடையாள அரசியலின் பல்வேறு வடிவங்களை முன்னெடுக்கின்ற வசதியான பிரிவுகளாலும் ஒடுக்கப்பட்ட நிலையானது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆளும் உயரடுக்கின் சமூக எதிர்ப்புரட்சியானது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு எழுச்சியை எதிர்கொள்ள இருக்கிறது. வேலையிடங்களிலும், சமூகங்களிலும் மற்றும் ஒட்டுமொத்த நகரங்களிலும் சமூக எதிர்ப்பின் பல்வேறு வேறுபட்ட வடிவங்களும் முன்னெப்போதினும் தனித்துவமான தொழிலாள வர்க்க அடையாளத்தையும், முதலாளித்துவ-எதிர்ப்பு நோக்குநிலையையும் சோசலிசத் தன்மையையும் பெறவிருக்கின்றன. தனித்தனியான வேலையிடங்கள் மற்றும் சமூகங்களில் நடக்கும் போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளது ஐக்கியப்பட்ட போராட்டமாக உருமாறும்.
முக்கிய கேள்வி என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் இந்த இயக்கத்தை அதன் நோக்கங்களில் நனவுபூர்வமாக்குவதும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இந்த போராட்டங்களை வழிநடத்தக்கூடிய ஓர் அரசியல் தலைமையைக் கட்டமைப்பதும், அவற்றின் தர்க்கரீதியிலான மற்றும் இறுதி முடிவாக முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசி சோசலிசத்தை ஸ்தாபிப்பதுமே ஆகும்.