Print Version|Feedback
The US on the brink of war with North Korea
அமெரிக்கா வடகொரியாவுடனான போரின் விளிம்பில் நிற்கிறது
Peter Symonds
12 October 2017
அமெரிக்கா வடகொரியாவுடனான மோதலுக்கு தயாரிப்புகளை முடுக்கி விட்டிருப்பதன் மத்தியில், நேற்று இரவு நேரத்தில் இரண்டு B-1B குண்டுவீச்சு விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பறந்ததானது முழுவீச்சிலான போருக்கான யுத்தக்காரணமாய் பயன்படுத்தத்தக்க ஒரு கொரியப் பதிலடியை சீண்டிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
முதன்முறையான இரவு-நேர கூட்டுப் பயிற்சி ஒத்திகைக்காக, இந்த சூப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களுடன் ஜப்பானிய மற்றும் தென்கொரிய ஃபைட்டர் ஜெட் விமானங்களும் இணைந்து கொண்டன, இந்த ஒத்திகையில் தென்கொரியாவின் கிழக்குக் கரையிலும், அதன்பின் மேற்குக் கரையிலும் விண்ணில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைப் பயிற்சிகளை நீர்ப்பரப்பில் மேற்கொள்வது இடம்பெற்றிருந்தது. வடகொரியாவுடனான போருக்கான இந்த ஒத்திகையில் இன்னுமொரு முதன்முறையான விடயமும் இடம்பெறுகிறது, சென்ற மாதத்தின் பிற்பகுதியில் இரண்டு பி1-பி குண்டுவீச்சு விமானங்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பிந்தைய காலத்தில் முதன்முறையாக வட கொரியக் கடற்கரையையொட்டி அதிகதூரம் வடக்குப் பகுதியில் பறந்திருந்தது.
அதேநேரத்தில், கொரியத் தீபகற்பத்தைச் சுற்றி ஒரு கடற்படைக் கப்பல் வரிசையையும் பென்டகன் ஒன்றுதிரட்டுகிறது. அணு ஆயுத நீர்மூழ்கியான USS Tuscon சனிக்கிழமையன்று தென்கொரியா வந்துசேர்ந்தது. USS ரொனால்ட் ரீகன் விமானந்தாங்கிக் கப்பலும் அதன் தாக்குதல் விமான வரிசைகளும் தென் கொரிய கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிக்காக இந்த மாதத்தின் பின்பகுதியில் வந்துசேரவிருக்கின்றன. இரண்டு ஆஸ்திரேலிய ஆயுதக்கப்பல்களும் கொரிய நீர்ப்பரப்புக்கு வந்து கொண்டிருக்கின்றன.
ட்ரம்ப் நிர்வாகத்தின் முரட்டுத்தனமான அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்களது இடைவிடாத பிரச்சாரமானது, சீனா மற்றும் ரஷ்யா போன்ற பெரும் சக்திகளையும் இழுக்கக் கூடிய அணுஆயுதப் போராக மாறத்தக்க ஒரு பேரழிவுகரமான போரின் அபாயம் உண்மையானதும் நிச்சயமானதுமாய் இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது. சொந்த நாட்டில் பெருகும் அரசியல் நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி, வடகொரியாவுடனான போரை தனது நிர்வாகத்தைக் கரைசேர்ப்பதற்கும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை நசுக்குவதற்குமான ஒரு வழிவகையாகக் காண்கிறார்.
இராணுவத் தர்க்கத்தின் பார்வையில் இருந்து பார்ப்போமாயின், அமெரிக்கா பியோங்கியாங் ஆட்சியை திட்டமிட்டு ஒரு சாத்தியமில்லாத சூழ்நிலையில் இருத்தியிருக்கிறது. சென்றமாதத்தில் ஐக்கியநாடுகள் சபையில் காட்டிய தனது பாசிச ஆவேசத்தில், ட்ரம்ப், வடகொரியா அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு முழுமையாக சரணாகதி அடையவில்லை என்றால் அது “முற்றுமுதலான அழிவு”க்கு முகம்கொடுக்கும் என்று அறிவித்தார். இராஜதந்திர கண்ணிய சமிக்கைகளை அனுப்பி “நேரத்தை வீணடிப்பதற்காக” வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனை அவர் கண்டித்த போது பியோங்கியாங் உடனான எந்த பேச்சுவார்த்தைகளையும் அவர் மொத்தமாய் நிராகரித்தார்.
ட்ரம்ப்பின் ஐநா உரைக்கு பதிலிறுத்த வடகொரியாவின் வெளியுறவு அமைச்சர், இது கிட்டத்தட்ட போர்ப் பிரகடனத்துக்கு நிகரானதாகும் என்று அறிவித்ததோடு, சர்வதேச வான்பகுதியில் அமெரிக்காவின் மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை சுட்டுவீழ்த்துவது உள்ளிட எதிர்நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிமை தனது நாட்டுக்கு உள்ளது என்றும் எச்சரித்தார். பென்டகன் அதன்பின்னரும் வடகொரியாவுக்கு மிக நெருக்கத்தில் போர் ஒத்திகைகளை நடத்துவதற்கு பி1-பிக்களை அனுப்பியிருக்கிறது.
ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களுடன் முழுக்க ஆயுதம்தரித்த பூகோளத்தின் மிக சக்திவாய்ந்த இராணுவத்துக்கு முகம்கொடுத்திருக்கும் வடகொரிய ஆட்சி, தனது இராணுவம் முழுமையாக அழிக்கப்படும் முன்னதாக, தனது வரம்புபட்ட அணு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு, தான் முதலில் தாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரக் கூடும். ஒவ்வொரு பி1-பி விமானமுமே பியோங்கியாங் ஜெனரல்களுக்கு உடனடியாக முன்வைக்கும் கேள்வி என்னவாக இருக்கும்: இது இன்னுமொரு ஒத்திகையா, அல்லது ஒரு முழு-நீளத் தாக்குதலின் தொடக்கமா?
வாஷிங்டனில், இராணுவமானது வடகொரியாவுக்கு எதிரான போருக்கு தயாரிப்பு செய்யப்படுகிறது, உருவேற்றப்படுகிறது. திங்களன்று உயர்நிலை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கிய ஒரு முக்கியமான உரையில், பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மாட்டிஸ், “நமது ஜனாதிபதி அவசியப்பட்டால் பிரயோகிக்கத்தக்க இராணுவத் தெரிவுகளை நாம் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிசெய்வதற்கு” இராணுவம் ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க இராணுவப் படைகளின் கட்டளையகத்தின் கமாண்டர் ஜெனரல் ரோபர்ட் அப்ராம்ஸ், “இரண்டாம் உலகப் போர் பாணியிலான ஒரு முழுவீச்சிலான போரில் சண்டையிட அமெரிக்கப் படைகளை அனுப்புவது என்பது துருப்புகள் பெரும் எண்ணிக்கையில் மரணமடையும் என்ற ஒரு கசப்பான யதார்த்தத்திற்கு முகம்கொடுப்பதாகும்” என்பதை வேறுவார்த்தைகளில் கூறியதாக இராணுவ அசோசியேசன் தெரிவித்தது.
“வடகொரியா, அமெரிக்காவையும் அதன் கூட்டாளி நாடுகளையும் அணு ஆயுதங்களைக் கொண்டு அச்சுறுத்துவதை தடுப்பது” உள்ளிட்ட இராணுவத் தெரிவுகளை திறனாய்வு செய்வதற்காக மாட்டிஸும் கூட்டுப்படைத் தலைவரான ஜெனரல் டன்போர்டும் செவ்வாய்கிழமையன்று ட்ரம்ப் உடன் சந்தித்தனர். வேறுவார்த்தைகளில் சொல்வதானால், வடகொரியாவின் சிறிய அணுஆயுதக் கிடங்கு அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்ற ஒரு சாக்கில் அதன்மீது சட்டவிரோதமான ஒரு வலிந்து தாக்கும் போரின் விளிம்பில் ட்ரம்ப்பின் நிர்வாகம் நின்று கொண்டிருக்கிறது.
வடகொரியா மீதான அமெரிக்காவின் ஒரு தாக்குதல் தவிர்க்கவியலாமல் சீனா மற்றும் ரஷ்யாவுடனும் ஒரு மோதலுக்கு இட்டுச் செல்லும், இந்நாடுகள் பதட்டங்களை தணிப்பதற்கும் மறுபடியும் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புவதற்கும் தொடர்ந்து அழைத்து வந்திருக்கின்றன. அவர்களது எல்லைகளில் ஒரு போர் நடத்துவதும் பியோங்கியாங்கில் அமெரிக்காவின் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதும் ஆசியாவிலான இந்நாடுகளின் மூலோபாய நலன்களின்மீது நேரடியாகக் குறுக்கிடும். மேலும் வடகொரியாவை அடிமைப்படுத்துவது என்பது, ஆசியாவிலும் மற்றும் உலகிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிசெய்வதற்காக சீனாவைப் பலவீனப்படுத்தவும், சுற்றிவளைக்கவும், அத்துடன் தேவைப்பட்டால், அதனுடன் போருக்குச் செல்லவுமான அமெரிக்காவின் விரிந்து பரந்த நோக்கத்தின் பகுதியாக இருக்கிறது.
சீனாவுக்கு எதிராக ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவில் முன்னிலை” என்பதாக அழைக்கப்பட்ட ஒன்றினை இராஜதந்திரரீதியாக, பொருளாதாரரீதியாக மற்றும் இராணுவரீதியாக என ஒவ்வொரு முனையிலும் ட்ரம்ப் முடுக்கி விட்டிருக்கிறார். பிராந்தியம் முழுக்க அமெரிக்க உறவுகளைப் பலப்படுத்தியிருக்கிறார், வர்த்தகப் போரைக் கொண்டு சீனாவை அச்சுறுத்தியிருக்கிறார், அத்துடன் பெய்ஜிங்கை இராணுவரீதியாக கொரிய தீபகற்பத்தில் மட்டுமன்றி தென் சீனக் கடலிலும் எதிர்த்து நிற்கிறார். அமெரிக்காவின் கடற்படை தாக்குதல்கப்பல் ஒன்று சீனாவின் ”மிதமிஞ்சிய கடற்பகுதி உரிமைகோரல்”களை சவால் செய்வதற்கு சீனாவின் பராசல் தீவுகள் அருகில் செவ்வாய்கிழமையன்று இன்னுமொரு ஆத்திரமூட்டும் ஊடுருவலை செய்தது.
போருக்கான அமெரிக்க முனைப்பு என்பது வெறுமனே பாசிச வகைப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்பின் விளைபொருள் மட்டுமன்று. மாறாக, இராணுவ வலிமையை மூர்க்கத்தனமாக பயன்படுத்துவதைக் கொண்டு தனது வரலாற்று வீழ்ச்சியை சரிக்கட்ட நப்பாசையுடன் முனைந்து வருகின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆழமடைகின்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடே ட்ரம்ப் ஆவார். மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் ஒன்றுக்கடுத்த ஒன்றாய் அடுத்தடுத்து நாசங்களை உருவாக்கி விட்டிருப்பதற்குப் பின்னர், வாஷிங்டன் இன்னும் அதிக அபாயகரமாகிக் கொண்டிருக்கிறது, அதன் முக்கிய எதிரிகளுடன், முதலில் சீனா மற்றும் ரஷ்யாவுடன், ஒரு நேரடியான மோதலுக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.
வெள்ளை மாளிகை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளும், இன்னும் விரிவாக, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைக்கான வெகுஜன எதிர்ப்புக்குள்ளும் நிலவுகின்ற தீவிரமான குழப்பங்கள் மற்றும் மோதல்களால் போர் அபாயம் மேலும் அதிகப்படுத்தப்படுகிறது. டில்லர்சன் மற்றும் மாட்டிஸ் இருவரும் வடகொரியாவுடனான எந்தத் தாக்குதலுக்கும் முன்பாக இராஜதந்திர முயற்சிகள் அனைத்தும் பிரயோகித்துத் தீர்க்கப்படுவது அவசியம் என்று ஆலோசனையளித்து வருவதற்கு —இவர்கள் போருக்கு எதிரானவர்கள் என்பதால் அல்ல, மாறாக வேடமணியாது அமெரிக்கா வலிந்து தாக்கும் பட்சத்தில் அது ஒரு வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கத்தை உடனடியாக எழச் செய்து விடும் என்று அவர்கள் அஞ்சுவதால்— ட்ரம்ப் பகிரங்கமாக முரண்பட்டு நிற்கிறார்.
ஒரு உயர்நிலை பென்டகன் கூட்டத்திற்குப் பின்னர் டில்லர்சன் இராஜினாமா செய்வதாக மிரட்டியதாகவும் ட்ரம்ப்பை “அரைக்கிறுக்கர்” என்று கூறியதாகவும் சென்ற வாரத்தில் நம்பகமான ஆதாரத்தில் இருந்து கிடைத்த தகவலாக NBC இன் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டிருந்ததானது இந்த உள்மோதலின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் இருக்கிறது.
அத்தனை அணுசக்தி ஒப்பந்தங்களையும் மீறுகின்ற விதத்தில், அமெரிக்காவின் அணு ஆயுதங்களைப் பத்துமடங்காக அதிகரித்து விட்டால், அது கிட்டத்தட்ட எவரும் கிட்டநெருங்க முடியாத ஒரு அரசாக ஆகிவிடும் என்பதாக ட்ரம்ப் வைத்த ஒரு யோசனைதான், டில்லர்சன் இப்படியொரு கருத்தைக் கூறத் தூண்டியது என்று புதன்கிழமையன்று NBC தெரிவித்தது.
வடகொரியாவுக்கு எதிராக இன்னும் மூர்க்கம் தீவிரப்படுவதன் உள்ளடக்கத்தில், என்னவிதமான ஒடுக்குமுறை திணிக்கப்படக் கூடும் என்பதன் ஒரு உறையச் செய்யும் அறிகுறியாக, ட்ரம்ப் ஒரு ட்வீட்டில் இந்தச் செய்தி தொடர்பாக NBCஇன் ஒளிபரப்பு உரிமையை இரத்துசெய்வதற்கு மிரட்டல் விடுத்தார்.
ட்ரம்ப்பின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படுவது குறித்த ஊகங்களுக்கு தீனிபோடும் விதமாய் அமெரிக்க ஆளும் வர்க்கங்களில் நிலவுகின்ற ஆழமான பிளவுகள் செவ்வாய்கிழமையன்று வாஷிங்டன் போஸ்டில் வெளியான “ஒரு பொருத்தமற்ற ஜனாதிபதியைக் கொண்டு என்ன செய்வது” என்ற தலைப்பிலான ஒரு தலையங்கத்தில் சுருங்கக் கூறப்பட்டிருந்தன.
இந்த அரசியல் நெருக்கடியானது, போர் முனைப்பை தடுத்துநிறுத்துவதற்கெல்லாம் வெகுதூரத்தில், அபாயத்தை அதிகப்படுத்த மட்டுமே செய்கிறது. சொந்தநாட்டில் மோதல்களால் சூழப்பட்டிருக்கும் ட்ரம்ப், ஒரு வெளிநாட்டு எதிரிக்கு எதிராக அரசியல் மற்றும் சமூகப் பதட்டங்களை திசைதிருப்பி விடுவதன் மூலமாக தன்னை இதிலிருந்து வெளியில் கொண்டுவந்து விடலாம் என்று உந்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது விமர்சகர்களும் எதிரிகளும் போருக்கு எதிரானவர்கள் அல்ல —இவர்களில் பலரும் கடந்த 25 ஆண்டு காலத்தின்போது அமெரிக்கா செய்து வந்திருந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகளுக்கு குற்றவியல்ரீதியான பொறுப்புகூறத்தக்கவர்கள் ஆவர். கருத்துமாறுபாடுகள் முழுக்க தந்திரோபாயரீதியானவை— எப்படித் தாக்குவது, யாரை முதலில் தாக்குவது என்பது குறித்தவை.
அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்யாமல், போர் என்பது சாத்தியம் மட்டுமல்ல, தவிர்க்கவியலாததும் ஆகும். இத்தகையதொரு இயக்கமானது சக்திகளுக்கு இவ்வாறிருக்கும்படி விண்ணப்பிப்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க முடியாது, மாறாக மனிதகுலத்தை அதலபாதாளத்துக்குக் கொண்டுசெல்ல அச்சுறுத்துகின்ற நோய்பீடித்த முதலாளித்துவ ஒழுங்கை ஒழித்துக்கட்டுகின்ற ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கையே அடிப்படையாகக் கொண்டிருக்க முடியும்.