Print Version|Feedback
Trump’s threats against North Korea signify real danger of war
வட கொரியாவுக்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் நிஜமான போர் அபாயத்தைக் குறிக்கின்றன
Joseph Kishore
9 October 2017
டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவுடன் அணுஆயுத பேரழிவைக் கட்டவழ்த்து விடக்கூடிய ஒரு போரைத் தொடங்க அச்சுறுத்தி, வாரயிறுதி வாக்கில் அவரது எரியூட்டும் அறிக்கை பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.
கடந்த நிர்வாகங்கள் "25 ஆண்டுகளாக வட கொரியாவுடன் பேசி வந்துள்ளன,” என்று சனியன்று மதியம் அமெரிக்க ஜனாதிபதி ட்வீட்டரில் குறிப்பிட்டார். இது "வேலைக்காகவில்லை,” என்ற அவர், “மன்னிக்கவும், ஆனால் ஒரேயொரு விடயம் சரியாக வேலை செய்யும்!” என்று தொடர்ந்து குறிப்பிட்டார்.
இந்த அச்சுறுத்தல்கள் செப்டம்பர் 19 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் அவர் பேசிய வெறிப்பேச்சுக்களுக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர் வந்துள்ளன, அப்போது அவர், 25 மில்லியன் மக்கள் வாழும் ஒரு நாடான வட கொரியாவை "முற்றிலுமாக அழிக்க" அமெரிக்க "தயாராக இருப்பதாக, விரும்புவதாக மற்றும் வல்லமை கொண்டிருப்பதாக" அறிவித்திருந்தார். நான்கு நாட்களுக்குப் பின்னர், ட்ரம்ப் வட கொரிய தலைவரைக் கொல்ல அச்சுறுத்தினார். ஐ.நா. சபையில் வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சு "குட்டையான அந்த ராக்கெட் மனிதரின் [கிம் ஜோங்-யுன்] எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது" என்றால், “அவை நீண்டகாலத்திற்கு இருக்காது!” என்று ட்ரம்ப் எழுதினார்.
வியாழனன்று, ட்ரம்ப் ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க இராணுவ தலைவர்களுடனான வெள்ளை மாளிகை இரவு விருந்து ஒன்று, ஒரு போர் மந்திரிசபை கூட்டத்திற்குரிய அனைத்து அடையாளங்களையும் தாங்கியிருந்தது. அந்த இரவு உணவுக்கு முந்தைய ஒரு புகைப்பட நிகழ்வில், இராணுவ சீருடை அணிந்த தளபதிகளால் சூழப்பட்டிருந்த ட்ரம்ப், “புயலுக்கு முந்தைய அமைதி" என்பதாக சூழலை ஒப்பிட்டார். எந்த புயலைக் குறித்து அவர் பேசி கொண்டிருந்தார் என்று கேட்கப்பட்ட போது, ட்ரம்ப், “விரைவில் உங்களுக்கே தெரியும்,” என்று மட்டுமே பதிலுரைத்தார்.
ட்ரம்பின் வார்த்தைகளை அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கை மற்றும் திட்டங்களின் ஒரு நிஜமான வெளிப்பாடாக பொருள் கொண்டால், உலகம் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிகவும் பேரழிவுகரமான இராணுவ மோதலின் விளிம்பில் நிற்கிறது என்பதே அதன் தவிர்க்க முடியாத தீர்மானமாக இருக்கும். கருத்துக்களும் யதார்த்தமும் அரசியல் நகர்வுடன் பொருந்தி இருக்கின்ற என்றால், தற்போதைய சூழலானது உத்தியோகப்பூர்வமாக ஓர் "உடனடி போர் அபாயமாக" விவரிக்கக் கூடியதாகும்.
ட்ரம்புடன் ஓர் அரசியல் மோதல் கொண்டுள்ள டென்னஸி குடியரசு கட்சி செனட்டர் பாப் கார்கர் கருத்துரைக்கையில், ஜனாதிபதியின் பொறுப்பற்ற அச்சுறுத்தல்கள் அமெரிக்காவை "மூன்றாம் உலக போருக்கான பாதையில்" இட்டுச் செல்வதாக எச்சரித்தார். ஆனால் ஞாயிறன்று கார்கர் கூறிய கருத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் ஊடகங்களுக்குள், நனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே மலைப்பூட்டும் இடைவெளி நிலவுகிறது. வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவரும் பொது அறிவிப்புகளால் ஏதோ எந்த பாதிப்புகளும் இருக்காது என்பதைப் போல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ட்ரம்ப் என்ன கூறுகிறாரோ அதை அவர் கருதவில்லை என்பதுபோல தெரிகிறது. ட்ரம்ப் சர்வசாதாரணமாக உளறிக் கொண்டிருக்கும் ஒரு போரின் விளைவுகள் மிகவும் பேரழிவுகரமானதாக நிரூபணமாக கூடியவையாகும்.
சரி, அவர் தொடங்கவில்லை என்றால் என்ன? அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களை, வட கொரியா கடுமையாக எடுத்துக் கொண்டால் என்னாகும்? அது அவ்வாறு தான் எடுத்தாக வேண்டும். வட கொரியாவை அவர் அழிக்கவிருப்பதாகவும், இறுதி மணித்துளிகள் வேகமாக நெருங்கி வருவதாகவும் ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், பியொங்யாங் அதன் நாட்டு எல்லைகளுக்கருகில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை எவ்வாறு புரிந்து கொள்ளும்? வட கொரிய வான்பகுதியை நோக்கி அமெரிக்க குண்டுவீசி விமானங்கள் வருவதை அந்த ஆட்சி ஒரு முழு-அளவிலான தாக்குதலின் தொடக்கமென கருதினால், ஒரு முடிவெடுக்க வெறும் ஒருசில நிமிடங்கள் போதாதா? தென் கொரியாவுக்கு எதிராக படுபயங்கரமான ஓர் இராணுவ தாக்குதலைத் தொடங்க கருதுவதைத் தவிர அதற்கு வேறு வாய்ப்பில்லை என்று அது முடிவெடுத்தால்? அது அச்சுறுத்தி உள்ளவாறு, ஜப்பான், குவாம், ஆஸ்திரேலியா, அல்லது அமெரிக்காவை நோக்கியும் கூட, ஏவுகணைகளை வீசினால்?
ட்ரம்ப் அச்சுறுத்தல்களின் வெளிச்சத்தில், முற்றிலும் சட்டபூர்வ நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், வட கொரியா அதுபோன்ற நடவடிக்கைகளை அதன் பாகத்திலிருந்து ஒரு தற்காப்பு நடவடிக்கையாக, ஓர் உடனடி இராணுவ அச்சுறுத்தலுக்கு சட்டபூர்வ விடையிறுப்பாக கூற முடியும்.
பியொங்யாங்கின் கணக்கீடுகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால், பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ ஆட்சிகளும் கட்டவிழ்ந்து வரும் அபிவிருத்திகளை அதிக எச்சரிக்கையுடன் கவனித்து வருகின்றன. அமெரிக்க ஊடகங்கள், அவற்றின் சம்பிரதாயம் போல, ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மெத்தனமாக மற்றும் அசட்டையாக விடையிறுக்கின்ற அதேவேளையில், சீன ஆட்சியோ அவற்றை பேராபத்தான தீவிரத்துடன் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. மொத்தத்தில் ட்ரம்ப் தான் அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ளார். இராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட அவருக்கு அதிகாரம் உள்ளது—சவால்விடுக்க காங்கிரஸிற்கு ஆர்வமில்லை என்பதை அது எடுத்துக்காட்டியுள்ளது.
வட கொரியா மீதான அமெரிக்க தாக்குதல் அதிகரித்தளவில் சீனாவுக்கு ஓர் அச்சுறுத்தலை முன்னிறுத்தும். 1950 ஐ போலவே, வட கொரியாவுக்கு எதிரான ஒரு போரானது—அது ஒரு அணுஆயுத பரிவர்த்தனையாக வேகமாக தீவிரமடையாவிட்டாலும் கூட—38 வது வடக்கு பகுதியைக் கடந்து தவிர்க்கவியலாமல் ஓர் அமெரிக்க ஊடுருவலுக்கு இட்டுச் செல்லும். அமெரிக்க இராணுவம் கடைசியாக வட கொரியா எல்லைக்குள் நுழைந்த போது, சீனா ஒரு பாரிய இராணுவ எதிர்தாக்குதலைக் கொண்டு விடையிறுத்தது. வட கொரியா மீதான ஒரு புதிய அமெரிக்க படையெடுப்பின் முன்னால் பெய்ஜிங்கில் உள்ள இப்போதைய ஆட்சி செயல்படாதிருக்குமென நம்புவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை. அது ஓர் அமெரிக்க படையெடுப்பை, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக நீடித்துள்ள கொரிய தீபகற்பம் மீதான புவி-அரசியல் உடன்பாடு ஏற்கவியலாதவாறு மீறப்படுவதாக பார்க்கக்கூடும்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவும் பதட்டமான நிலைமைகள் பெய்ஜிங்கின் எதிர்நடவடிக்கையில் மேலாளுமை செலுத்தலாம். ஒபாமா நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" கீழ், அமெரிக்கா, தென் சீனக் கடலில் பல ஆண்டுகளாக திட்டமிட்டு அதன் இராணுவ படைகளை ஆயத்தப்படுத்தி உள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கான பிரிவுகள் அமெரிக்க நலன்களுக்கு பிரதான போட்டியாளராக கருதும் சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைப்பதே அதன் நோக்கமாக இருந்துள்ளது. சீனாவின் பிரதான பிராந்திய போட்டியாளரான ஜப்பான், வட கொரியாவுக்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அது முழுமையாக ஆதரிப்பதாக வாரயிறுதி வாக்கில் அறிவித்தது.
இவ்விதத்தில் வட கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் வெடிப்பானது தவிர்க்கவியலாமல் சீனாவை உள்ளிழுக்கும், அது, பதிலுக்கு, ஆசியா மொத்தத்தையும் உள்ளிழுக்கும், அவ்விதத்தில் ஆஸ்திரேலியா இரத்தக்களரியான சூறாவளிக்குள் ஈர்க்கப்படும். ஆசியாவில் அவற்றின் சொந்த நலன்களைக் கொண்டுள்ள ஐரோப்பாவோ இலத்தீன் அமெரிக்காவோ அதிலிருந்து ஒதுங்கி இருப்பதும் சாத்தியமில்லை.
வட கொரியாவுடனான போர் விளைவுகள் குறித்து அமெரிக்க ஊடகங்களில் மிகக் குறைவாக குறிப்பிடப்படுகின்றன. ஏப்ரலில் Newsweek இல் வெளியான ஒரு கட்டுரை, அணுஆயுதங்கள் பயன்படுத்தாத அல்லது வெளியிலுள்ள வேறெந்த சக்திகளும் சம்பந்தப்படாத ஒரு போரில் ஒரு மில்லியன் மக்களாவது கொல்லப்படுவார்கள் என்று முடிவு செய்திருந்தது. கடந்த மாதம் Los Angeles இன் ஒரு கருத்துரையில், ஓய்வூபெற்ற விமானப்படை ப்ரிகேடியர்-ஜெனரல் ரோப் கிவென்ஸ் குறிப்பிடுகையில், அத்தீபகற்பத்தில் நடக்கும் ஒரு போரில், அணுஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட, ஒவ்வொரு நாளும் 20,000 தென்கொரியர்களாவது கொல்லப்படுவார்கள் என்று கணக்கிட்டிருந்தார்.
ட்ரம்ப் நிர்வாகம் அச்சுறுத்தி உள்ளதைப் போல, அப்போர் ஓர் அணுஆயுத தாக்குதலாக அபிவிருத்தி அடைந்தால், விளைவுகள் இன்னும் பேரழிவுகரமாக இருக்கும். ஒரேயடியாக மில்லியன் கணக்கானவர்கள் அல்லது பத்து மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதற்கு கூடுதலாக, காலநிலை மாற்ற வல்லுனர்கள் ஆகஸ்டில் எச்சரிக்கையில், பிராந்திய அளவிலான ஓர் அணுசக்தி போராக இருந்தாலும் கூட அது பூமியை 10 டிகிரி செல்சியஸ் வரை குளிர்வித்து, விவசாயத்துறை உற்பத்தியை அழிக்கக்கூடிய ஓர் உலகளாவிய அணுக் குளிர்காலத்தை உண்டாக்க சாத்தியமுள்ளதாக குறிப்பிட்டனர்.
எந்நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்பதற்கு எல்லா ஆதாரங்களும் இருந்தாலும், அமெரிக்க ஊடகங்கள் விடாப்பிடியாய் அந்த சம்பவங்களை ஆழமாக எடுக்க மறுக்கின்றன.
மக்களை மயங்கடிக்கும் ஊடக முயற்சிக்கு நியூ யோர்க் டைம்ஸ் முன்னுதாரணமாக திகழ்கிறது, அது தளபதிகளின் முன்னால் ட்ரம்ப் கூறிய கருத்துக்கள் மீதான அதன் அக்டோபர் 6 கட்டுரையில் குறிப்பிடுகையில், ட்ரம்ப் "ஆத்திரமூட்டும் கருத்துக்களை கூறும் நாட்டம்" கொண்டிருப்பதாகவும், “மக்களை ஊகிக்க விடுவதில் வெளிப்படையாகவே பெருமகிழ்ச்சி" கொள்வதாகவும் குறிப்பிட்டது. சம்பந்தப்பட்டிருப்பது வெறுமனே வெள்ளை மாளிகை வதந்தியும், புதிர்களும் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் என்பதைப் போல குறிப்பிட்ட டைம்ஸ், “புயலுக்கு முன்னர் அமைதி" கருத்து வெளியான "நேரம்" “குறிப்பாக ஏமாற்றமளிப்பதாக" எழுதியது.
“ஆனால் அது சம அளவில் சரியாகவும் தோன்றுகிறது,” என்று குறிப்பிட்ட அக்கட்டுரை, “அதாவது திரு. ட்ரம்ப் ஏதோ நாடகத்தை நடத்த இராணுவ அதிகாரிகளின் பின்புலத்தைப் பயன்படுத்தி, வெறுமனே நாடகமாடுகிறார்,” என்று நிறைவு செய்தது.
இந்த அபாயத்தை குறைத்துக் காட்டுவதற்கான ஊடகங்களின் முயற்சிகள், ட்ரம்ப் நிர்வாகத்தினுள் நிலவும் ஆழ்ந்த பிளவுகளுக்கான அறிகுறிகளால் முரண்படுகிறது. வட கொரிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான ரில்லர்சனின் நகர்வுகளை ட்ரம்ப் கடந்த மாதம் நேரடியாக கீழறுத்ததிலிருந்து வந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ ரில்லர்சன் பலவந்தமாக பதவியிலிருந்து நீக்கப்படுவார் அல்லது இராஜினாமா செய்வார் என்ற வதந்திகள் நிலவுகின்றன. அவர்களின் சீருடையில் இருந்த உயர்மட்ட ஆலோசகர்களுடன் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடந்த கூட்டம், போரை முன்னெடுக்க இராணுவம் அவர் தரப்பில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தி கொள்வதற்கான ட்ரம்பின் ஒரு முயற்சியாக இருந்திருக்கலாம்.
எவ்வாறிருப்பினும் இந்த கருத்துவேறுபாடுகள் குணாம்சத்தில் தந்திரோபாயமானவை. பகுப்பாய்வின் இறுதியில், ட்ரம்ப் வெறுமனே அவருக்காக பேசவில்லை, மாறாக அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்காக பேசுகிறார். ஆளும் செல்வந்த தட்டுக்களில் மேலோங்கிய கன்னைகள், வெளிநாடுகளில் அதன் மேலாதிக்க நிலையை பேணுவதற்காக அதன் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதென்ற அடிப்படை மூலோபாயத்தில் ஒன்றுபட்டுள்ளன.
அமெரிக்க வெளியுறவு கொள்கையை நியாயப்படுத்த ட்ரம்ப் கண்மூடித்தனமாக, கொடூரமாக அசாதாரண மொழியைப் பயன்படுத்துகிறார். ஆனால் அதன் மேலாதிக்க மூலோபாயத்தின் ஆசிரியர் அவர் கிடையாது. அமெரிக்கா ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக தொடர்ந்து போரில் ஈடுபட்டுள்ளது. இந்த வாரயிறுதி ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பின் பதினாறாம் நினைவாண்டை குறித்தது. வழமையாக இராணுவ சிப்பாய்களின் நிலைநிறுத்தல் குறித்து அமெரிக்கர்களுக்குத் தெரிவிக்காமல், பென்டகன் உலகெங்கிலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆபிரிக்க நாடான நைஜரில் நடந்த சண்டையில் கடந்த வாரம் நான்கு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழந்த விடயம் பொதுமக்களுக்கு முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது.
எந்நேரத்திலும் கொரியா உடனான ஒரு போர் வெடிக்கலாம். இது தான் யதார்த்த நிலைமை. ட்ரம்ப் வெறுமனே உளறிக் கொண்டிருக்கிறாரா என்று, ஒன்றும் செய்யாது ஊகித்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, போர் முனைவுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே இன்றைய முக்கிய பணியாகும். அமெரிக்க ஜனாதிபதி ஏளனச்சிரிப்போடு மில்லியன் கணக்கானவர்களை நிர்மூலமாக்க அச்சுறுத்துகிறார் என்ற இந்த உண்மையே கூட, அமெரிக்க அரசியல் அமைப்பு முற்றிலும் நோய்வாய்ப்பட்டு, எந்தவொரு குற்றமும் செய்யக்கூடிய நிலையில் இருப்பதற்கு போதுமான சான்றாக உள்ளது.