Print Version|Feedback
Trump, Iran and the US drive for world hegemony
ட்ரம்பும், ஈரானும், உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலும்
Keith Jones
16 October 2017
வெள்ளிக்கிழமை ஓர் ஆத்திரமூட்டும் நேர்மையற்ற உரையின் முடிவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கோரிக்கைகளுக்கு ஏற்ப 2015 ஈரான் அணுசக்தி உடன்படிக்கையை மாற்றி எழுதாவிட்டால் அதை முறித்துக் கொள்ள அறைகூவல் விடுத்தார்.
அந்த உரை அமெரிக்க ஆளும் உயரடுக்கின் ஆணவத்திற்கும் குற்றத்தன்மைக்கும் உதாரணமாக இருந்தது. "மத்திய கிழக்கு எங்கிலும் மற்றும் அதற்கு அங்காலும், மோதல், பயங்கரம் மற்றும் கொந்தளிப்பை" ஈரான் பரப்பி வருவதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். அக்கருத்துக்கள் யாரிடமிருந்து வருகின்றன என்றால், மத்திய கிழக்கு மக்களை வார்த்தையில் கூறவியலா பயங்கரங்களுக்கு உட்படுத்தி உள்ளதும், ஒட்டுமொத்த சமூகங்களையும் அழித்துள்ள ஆக்ரோஷ போர்களை நடத்தியுள்ளதும், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்ததும், பல மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் வீடுகளை விட்டு தப்பியோட நிர்பந்தித்ததுமான ஒரு நாட்டின் தலைவரிடம் இருந்து வருகின்றன.
1979 ஈரானிய புரட்சியைக் கண்டித்த ட்ரம்ப், ஈரானின் முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சியை சர்வதேச சட்டங்களை மீறி செயல்படும் ஆட்சியாகவும், அமெரிக்காவை ஈரானிய மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பாதுகாவலராகவும் சித்தரித்தார்.
1953 இல் ஈரானிய மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி Mohammad Mossaddegh ஐ பதவியிலிருந்து அகற்றி, அதற்கடுத்த கால் நூற்றாண்டு வாஷிங்டனே அதிகாரம் பேணும் வகையில் ஷாவின் காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரத்தை நிறுவிய 1953 ஆட்சிக்கவிழ்ப்பு சதியை சிஐஏ தான் ஏற்பாடு செய்தது என்பதையோ அல்லது ஈரானைத் தாக்குவோம் என்று மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியும், எட்டாண்டு கால (1980-1988) ஈரான்-ஈராக் போரில் பாக்தாத்தை ஆதரித்தும், ஒபாமாவின் கீழ் முற்றுமுதலான பொருளாதார போர் நடவடிக்கையாக போய் முடிந்த தண்டிக்கும் பொருளாதார தடையாணைகளை திணித்தும், அமெரிக்கா கடந்த நாற்பதாண்டுகளாக இடைவிடாது ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்துள்ளது என்பதையோ ஈரானிய மக்கள் மறந்துவிட்டதாக ட்ரம்ப் நினைக்கிறார் போலும்.
அந்த அணுசக்தி உடன்படிக்கையில் உள்ள "பல குறைபாடுகளை" “சீர்செய்வதற்கான" அவர் கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு இடமற்றவை என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தினார். இக்கோரிக்கைகள், தெஹ்ரானை ஒருதலைபட்சமாக நிராயுதபாணியாக்கி, அதேவேளையில் பாரசீக வளைகுடாவில் அமெரிக்க போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவதற்கும், அதன் சவூதி மற்றும் இஸ்ரேல் கூட்டாளிகளை முழுமையாக ஆயுதமயப்படுத்துவதற்கும் ஒப்பான ஓர் இறுதி எச்சரிக்கையாக உள்ளன. ஈரான் அதன் இறையாண்மை மீதான நிரந்தர மீறலை ஏற்றுக்கொண்டு, நடைமுறையளவில் ஒரு ஏவல் அரசின் அந்தஸ்திற்கு குறைக்கப்படுவது இதற்கு அவசியமாகிறது.
அந்த உடன்படிக்கையின்படி, பதினொரு ஆண்டில் காலாவதியாக உள்ள ஈரானின் படைத்துறைசாரா அணுசக்தி திட்டம் மீதான கடுமையான கட்டுப்பாடுகளை நிரந்தரமாக்குவது; ஈரானிய இராணுவ தளங்களை சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் கட்டுப்பாடின்றி அணுகுவதற்கு அனுமதிப்பது; ஈரானின் தொலைதூர ஏவுகணை திட்டங்களைக் கலைப்பது ஆகியவை அந்த கோரிக்கைகளில் உள்ளடங்குகின்றன.
வாஷிங்டன் ஓர் உலகளாவிய அணுஆயுத போட்டியைத் தூண்டிவிட்டு, மத்திய கிழக்கிலும் கொரிய தீபகற்பத்திலும் போர் அபாயத்தை உயர்த்தி வருவதாகவும், அமெரிக்காவிற்காகவே சட்டம் என்பது போல நடந்து கொள்வதாகவும், ஐரோப்பிய தலைவர்கள் வாஷிங்டனை சீற்றத்துடன் கண்டித்தனர். ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் கூறுகையில், அமெரிக்கா இதே வழியில் சென்றால் அது "ஐரோப்பியர்களை அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு எதிராக ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஒரு பொதுவான நிலைப்பாட்டில் கொண்டு சேர்க்கும்" என்று எச்சரித்தார்.
அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாக இல்லை. பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ், வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச். ஆர். மெக்மாஸ்டர் என ட்ரம்பின் சொந்த உயர்மட்ட ஆலோகசர்கள் உட்பட அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் பெரும்பான்மையினர் ஈரான் உடன்படிக்கையை கைவிடுவதற்கு எதிராக ட்ரம்புக்கு அறிவுறுத்தியுள்ளனர். மாட்டீஸூம் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி அலுவலக தலைவர் ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்டும், இருவரும் கடந்த வாரம் காங்கிரஸிற்கு முன் விளக்கமளிக்கையில், ஈரான் அணுசக்தி உடன்படிக்கையை முறையாக பின்பற்றி இருப்பதாக ஒப்புக் கொண்டதுடன், அந்த உடன்படிக்கை அமெரிக்காவின் நலன்களுக்கேற்பவே இருப்பதாக அவர்கள் நம்புவதாக தெரிவித்தனர்.
உலகின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பிரதேசமாக உள்ளதும், ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே மூலோபாய முக்கியத்துவம் கொண்டதுமான மத்திய கிழக்கு மீது அமெரிக்க மேலாதிக்கத்தை பேணுவதிலும், ஈரானை மண்டியிடச் செய்வதிலும், ட்ரம்பின் தளபதிகள் உறுதி குறைந்திருக்கிறார்கள் என்பது கிடையாது.
ட்ரம்பின் ஜனநாயகக் கட்சி விமர்சகர்களும் மற்றும் ஊடக விமர்சகர்களும் கூட இதிலிருந்து வேறுபட்டவர்கள் கிடையாது. நியூ யோர்க் டைம்ஸூம் வாஷிங்டனும் போஸ்டும், சிரியாவில் அமெரிக்க ஆதரவு இஸ்லாமிய படைகளை தோற்கடிப்பதில் தெஹ்ரான் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்த நிலையில், மீண்டும் மீண்டும் ஈரானுக்கு எதிராக இன்னும் அதிக ஆக்ரோஷமான அமெரிக்க இராணுவ மற்றும் இராஜாங்க தாக்குதலை வலியுறுத்தியவையாகும். “ட்ரம்ப் ஈரானை நோக்கி ஒரு அபாயகரமான போக்கை எடுத்துள்ளார்,” என்ற சனிக்கிழமை தலையங்கம் ஒன்றில் வாஷிங்டன் போஸ்ட், ஜனாதிபதியை “புவி-அரசியல் முட்டாள்" என்று குற்றஞ்சாட்டியதுடன், “இஸ்ரேல் உடன் ஒரு புதிய மோதலைச் சீண்டிவிட அச்சுறுத்தி வருகின்ற சிரியாவில் ஈரானின் இராணுவம் பலமாக வேரோடி இருப்பதைக் கவனிக்க, தெளிவான திட்டம் எதுவும் இல்லையென" அவரைக் குறித்து வேதனைப்பட்டது.
இந்த உடன்பாடின்மைகள், கூர்மையாக இருந்தாலும், முற்றிலும் தந்திரோபாயமானவை ஆகும். அவை அடுத்த அமெரிக்க போருக்கு உரிய இலக்கு மற்றும் தருணம் மீதான கேள்விகளைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன, இதற்கிடையே ஈரானுடன் பலப்பரீட்சை நடத்துவது, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதல்களைக் குறுக்கறுக்கும் என்பதுடன், குறிப்பாக ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவை உலகளாவிய சக்தியாக காட்டுவதில், நேட்டோ மூலமாக தொடர்ந்து ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வரும் அமெரிக்காவின் பாரம்பரிய ஐரோப்பிய கூட்டாளிகளுடனான உறவுகளை சிக்கலுக்கு உள்ளாக்குமென்ற பரந்த அச்சங்களும் உள்ளன.
ஈரான் உடனான உடன்படிக்கையை கைதுறக்கும் ட்ரம்ப்பின் திட்டங்களுக்கு எதிர்ப்பானது, வாஷிங்டனில் நடந்து வரும் முன்னொருபோதும் இல்லா அரசியல் சண்டையில் ஒரு காரணியாக உள்ளது. இச்சண்டை இப்போது ட்ரம்பை நீக்குவதற்கு அமெரிக்க அரசியலமைப்பின் 25 ஆம் சட்டத்திருத்தத்தை பயன்படுத்துவது மீது பொது விவாதம் நடத்தும் புள்ளியை எட்டியுள்ளது.
தெஹ்ரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடையாணைகளை திணிப்பதற்காக ஐரோப்பியர்களை மிரட்டுவதற்கு, ட்ரம்ப், உலகளாவிய வங்கி அமைப்பில் வோல் ஸ்ட்ரீட்டின் மேலாதிக்கத்தையும், அமெரிக்க சந்தையை அணுகுதலையும் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்ற நிலையில், ஈரான் விவகாரமோ அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே, குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜேர்மனிக்கு இடையே, ஏற்கனவே நிலவும் கடுமையான வர்த்தக மோதலில் கூடுதலாக விஷமேற்ற அச்சுறுத்துகிறது. ஏற்கனவே ஐரோப்பிய சக்திகள் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து பேசி கொண்டிருக்கின்றன.
ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் ஒன்றும் சூறையாடுவதில் வாஷிங்டனுக்குச் சளைத்தவர்கள் அல்லர். ஈரானுக்கு எதிரான பொருளாதாரப் போரில் அவர்கள் முக்கிய பங்காளிகளாக இருந்தனர். ஆனால் தெஹ்ரானுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட இந்த அமெரிக்க முனைவானது, உலகின் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் வள நாடாகவும் மற்றும் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வள நாடாகவும் விளங்கும் ஈரானைப் பொருளாதாரரீதியில் சுரண்டுவதற்காக பில்லியன்களை முதலீடு செய்யும் அவர்களது திட்டங்களை அச்சுறுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக, மத்திய கிழக்கு அவர்களுக்கு அருகாமையில் இருப்பதும் மற்றும் மத்திய கிழக்கு எண்ணெய்களை அவர்கள் சார்ந்திருப்பதாலும், மற்றொரு அமெரிக்க போரானது — அதுவும் ரஷ்யா மற்றும் சீனா போன்ற அணுஆயுத சக்திகளை விரைவிலேயே உள்ளிழுக்கக்கூடிய ஒரு போரால் ஏற்படும் ஸ்திரமின்மை வீழ்ச்சி குறித்து அவர்கள் அஞ்சுகின்றனர்.
ட்ரம்ப் ஓர் ஊக்குவிப்பாளர் தான், ஆனால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து ஆக்கிரமிப்பு போர்களைத் தொடுப்பதன் மூலமாக வாஷிங்டன் அதன் பொருளாதார அதிகார வீழ்ச்சியை ஈடுகட்டுவதற்காக தொடங்கிய நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன என்பதே, ஈரானை நோக்கிய அமெரிக்காவின் கொள்கை மீதும் மற்றும் அதன் பரந்த ஏகாதிபத்திய மூலோபாயத்தின் மீதும் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் நிலவும் பிளவுகளுக்கு மூலக் காரணமாகும்.
உலகளாவிய மேலாதிக்கத்தை பின்தொடர்வதற்காக, அமெரிக்கா மத்திய கிழக்கை தரைமட்டமாக்கி உள்ளது. அமெரிக்க துருப்புகள் ஈரானின் அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய இரண்டின் மீதும் படையெடுத்ததுடன், அமெரிக்க ஆக்கிரமிப்பின் பிரதான இலக்காக ஈரான் இருந்துள்ளது. இருப்பினும் ஈரானால் அதன் செல்வாக்கை விரிவாக்க முடிந்தது என்பதுடன், ரஷ்யாவும் சீனாவும் இரண்டும் மத்திய கிழக்கில் இப்போது பிரதான பொருளாதார மற்றும் புவிஅரசியல் பங்களிப்பாளர்களாக இருக்கின்ற நிலையில், இவ்விரு விடயங்களாலும், வாஷிங்டன் லிபியாவில் வெற்றிகரமாக செய்ததைப் போல, இஸ்லாமிய பினாமி படைகளைப் பயன்படுத்தி சிரிய அரசாங்கத்தைப் பதவி கவிழ்க்கும் அதன் திட்டங்கள் செயல்குலைத்துள்ளன.
சீனா மற்றும் ரஷ்யாவில் தொடங்கி, பிரதான போட்டியாளர்களை இலக்கில் வைத்து அதன் போர் திட்டங்களைத் தீவிரப்படுத்துவதே இத்தகைய பின்னடைவுகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விடையிறுப்பாக உள்ளது. ஐரோப்பாவும் ஜப்பானும் அதன் பங்கிற்கு, அமெரிக்காவை எதிர்ப்பதில் அவர்களின் சொந்த ஏகாதிபத்திய நலன்களை வலியுறுத்த வெறித்தனமாக மீளஆயுதமேந்தி வருகின்றன.
மனிதயினம் இம்முறை அணுஆயுதங்களை பயன்படுத்தத்தக்க ஒரு மூன்றாம் உலக போருக்குள் ஏகாதிபத்திய சக்திகளால் இழுத்து வரப்படும் நிஜமான நிகழ்கால அபாயத்தை முகங்கொடுத்துள்ளது.
எந்தவொரு பிரதான சக்திகளின் ஆளும் வர்க்கத்திலும் "சமாதானத்திற்கான" கன்னை எதுவும் கிடையாது. போர், சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்தின் ஆதாரமாக விளங்கும் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதை நோக்கி திரும்பிய ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணித்திரட்டப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கமே, ஓர் அணுஆயுத மனிதயின பேரழிவுக்குள் வீழ்வதை தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), இந்த புரட்சிகர அடிப்படையில் ஒரு பாரிய சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடி வருகிறது.