Print Version|Feedback
Indian economy in a downward spiral
கீழ்நோக்கிய சுழற்சியில் இந்திய பொருளாதாரம்
By Kranti Kumara
11 October 2017
இந்திய பொருளாதாரம் ஒரு தீவிர மற்றும் நீடித்த சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மற்றும் ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கான சாத்தியம் கூட உள்ளது என்ற கவலைகள் நரேந்திர மோடி மற்றும் அவரது தீவிர-வலதுசாரி, இந்து வகுப்புவாத பிஜேபி அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான உற்சாகமூட்டும் தலைவர்கள் மத்தியில் கூட, ஏற்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், தனது அரசாங்கம் இந்தியாவை 8 சதவிகிதத்திற்கு அதிகமான வளர்ச்சியுடன் மீட்டெடுத்ததாக மோடி பெருமையடித்துக் கொண்டார், ஆனால் அதற்கு மாறாக, கடந்த 6 காலாண்டுகளில் ஒவ்வொன்றிலும் வளர்ச்சி விகிதம் சரிவையே கண்டுள்ளது. அதாவது, நடப்பு நிதி ஆண்டு 2017-18 இன் முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜுன்), சென்ற நிதி ஆண்டு 2016-17 இல் இதே காலகட்டத்தில் 7.9 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி விகிதம் தற்போது வெறும் 5.7 சதவிகிதத்திற்கு சரிவடைந்துள்ளது.
நேற்று, சர்வதேச நாணய நிதியம் (IMF), இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடுகளை வெட்டியள்ளது. 2017 இற்கான திட்ட மதிப்பீட்டை 0.5 சதவிகிதத்திற்கு குறைத்து 6.7 சதவிகிதமாகவும் மற்றும் 2018 இல் 0.3 சதவிகிதத்திற்கு குறைத்து 7.4 சதவிகிதமாகவும் வளர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டுள்ளது.
எதிர்கால வளர்ச்சியின் முக்கிய குறிகாட்டியான தனியார் மூலதன அமைப்பு, 21 ஆம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகளில் இருந்தே இதுவரை காணப்படாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Center for Monitoring Indian Economy-CMIE) என்ற தனியார் மைய மதிப்பீடுகளின்படி, மோடியும், அவரது பிஜேபி யும் 2014 மே மாதத்தில் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து இந்த ஆண்டு வரையிலான மூலதன செலவினங்கள் (CapEx – Capital Expenditure) குறித்த திட்ட நிறைவு மிக மோசமானதாக இருக்கும் என்பதோடு, முந்தைய இரண்டு ஆண்டுகளில் இருந்ததை விட மூன்றிலொரு பங்காக குறைந்து 62 பில்லியன் அமெரிக்க டாலர் (US $62 billion) ஆக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
தனியார்மயமாக்கல், மற்றும் ஆலை மூடல்கள் மற்றும் பணிநீக்கங்களுக்கும் எதிரான தொழிலாளர் சட்ட பாதுகாப்புகளை விரைவாக அகற்றுவது போன்றவற்றின் மூலமாக முதலீட்டாளர் சார்பு நடவடிக்கைகளை அரசாங்கம் அழுத்தமாக முன்னெடுத்து செல்லாமல் இருப்பது தொடர்பாக, எச்சரிக்கும் வர்ணனைகளையும், அதிகரித்துவரும் கடுமையான விமர்சனங்களையுமே பெருநிறுவன செய்தி ஊடகங்கள் தற்போது கொண்டுள்ளன.
மோடி இத்தகைய விமர்சனங்களுக்கு முகம்கொடுப்பதில் நீண்டகாலமாக ஆழ்ந்த மௌனம் சாதித்து வந்த போதிலும் இறுதியில், முந்தைய பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சராக பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா கடந்த மாதம் இறுதியில் வெளியிட்ட ஒரு கருத்தில் இந்திய பொருளாதாரத்தின் “கடுமையான வீழ்ச்சி” பற்றி எச்சரித்த பின்னர் அவர் கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். அவரது வழமையான வெற்று ஆரவார வாய்சவடால்கள் பக்கம் திரும்பி அதிகரித்துவரும் விமர்சனங்களை மோடி நிராகரித்தார், மேலும் தொடர்ந்து, “நாட்டை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் அளவிற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும்” என முழங்கினார்.
மேலும், நன்கு கிரகிக்கும் தன்மையுள்ள விமர்சகர்கள் சமூக அமைதியின்மை குறித்து பீதியை எழுப்பியுள்ளனர். வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சிக்கு முன்பே, மோடி அரசாங்கத்தின் கீழ், வேலை உருவாக்கங்கள் என்பது மிகக் குறைவானதாக இருந்தது, நாட்டின் துரிதமாக விரிவடைந்து வரும் தொழிலாளர் சக்தியை உள்ளிழுத்து கொள்வதற்கு ஆண்டொன்றிற்கு உருவாக்க வேண்டிய 10-12 மில்லியன் வேலைகளில் அதிக பட்சமாக ஒரு மிகச்சிறிய பகுதியைத் தான் பொருளாதாரம் உருவாக்கி உள்ளது.
கடந்த ஆண்டு, கடுமையான பெருநிறுவன கடன் மற்றும் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தயாரிப்பு பொருட்களின் தேவையில் ஏற்பட்ட ஒரு செங்குத்து வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக ஏற்கனவே கடுமையான தலைவலிகளை இந்திய பொருளாதாரம் எதிர்கொண்ட போதிலும், மோடி அரசாங்கம், நவம்பர் 2016 இல் பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டும், மேலும் இந்த ஆண்டு ஜுலையில் பின்னோக்கி இழுத்துச் செல்லும் தேசியளவிலான பொருட்கள் மற்றும் சேவை வரி (Goods and Services Tax-GST) விதிப்பை அறிவித்தும் (பார்க்கவும்: “India imposes regressive nationwide sales tax”) அடுத்தடுத்த அதிர்ச்சிகளை வழங்கியது.
எண்ணற்ற ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரமாகவுள்ள பொருளாதார நடவடிக்கைகளை –முன்னையது (பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கை) ஒற்றைத் தொழிலாளர் “தொழில்களை” முடக்கியது, அது உத்தியோகபூர்வ புள்ளிவிபரப்படி, நாட்டின் 52.85 மில்லியன் “நிறுவனங்களின்” சுமார் 41.97 மில்லியன் நிறுவனத் தொழில்களை உள்ளடக்கியது. பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கையின் விளைவாக சிறு தொழில்களில் ஈடுபட்டிருந்த பத்து மில்லியன் கணக்கிலான தொழிலாளர்கள், தங்களது வேலைகளை குறைந்தபட்சம் தற்காலிகமாக இழக்க நேரிட்டது, ஏனென்றால் அவர்களது வர்த்தகத்திற்கு மற்றும் உண்மையில் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்திற்கும் பண பரிவர்த்தனைகள் முக்கியமானதாக உள்ளன.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புழக்கத்திலுள்ள மூலதனத்தை கடுமையாக கட்டுப்படுத்தியதன் மூலம் GST முழு பொருளாதார குழப்பத்தை விளைவித்தது. இவற்றுள் பெரும்பாலனவை, பெரிய நிறுவனங்களுக்கு வழங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உரிய விலைத்தொகையை, சரியான நேரத்தில் பெற முடியவில்லை, அதற்கு காரணம் இரு தரப்பினரும் அவர்களது பரஸ்பர வரி கடமைகளை சரிசெய்து கொள்ள முடியவில்லை.
2014 பொது தேர்தல் பிரச்சாரத்தின் போது, “10 ஆண்டுகள் வேலையற்ற வளர்ச்சி” குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United Progressive Alliance-UPA) அரசாங்கத்தை பிஜேபி கடுமையாக கண்டனம் செய்ததோடு, மக்கள் தீர்ப்பளிக்கும் பட்சத்தில் வேலைகள் மற்றும் வளர்ச்சியை உருவாக்கும் என வாக்குறுதியளித்தது.
எனினும், இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labor and Employment) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அது கண்காணித்து வரும் எட்டு பெரிய பொருளாதாரத் துறைகளில், ஜுன் 2014 முதல் டிசம்பர் 2016 வரையிலும் மொத்தம் வெறும் 624,000 வேலைகள் தான் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் (Prime Minister’s Employment Generation Programme-PMEGP) கீழ் புதிய சுய-தொழில் வாய்ப்புகள் / திட்டங்கள் / நுண் நிறுவனங்கள் ஆகியவை மூலமான முற்றிலும் மோசடியான வேலை உருவாக்கங்கள்” உட்படவும் கூட, Hindustan Times (HT) அறிக்கையின்படி, வெறும் 1.51 மில்லியன் வேலைகள்தான் மொத்தமாக உருவாக்கப்பட்டுள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. இது, HT குறிப்பிடுவது போன்று, அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட 2.47 மில்லியன் வேலைகளில் இருந்து 39 சதவிகிதம் குறைந்துவிட்டது.
இந்திய தொழிலாளர்களும், உழைப்பாளர்களும் முகம்கொடுக்கும் நிச்சயமற்ற நிலைமைகள் மேலும் பொருளாதார மந்தநிலையால் தற்போது அதிகரித்து வருகின்றன, இது பற்றி இந்திய தரகு நிறுவனமான Ambit Capital வெளியிட்டுள்ள அப்பட்டமாக காட்டும் அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் வருடாந்திர தலா வருமானம் 1,850 டாலராக ($1,850) உள்ள பரிதாபகரமான நிலையை இது குறிப்பிடுகிறது. அதிலும், மக்கள் தொகையில் ஏழ்மை நிலையிலுள்ள பாதிப் பகுதியினர், சுமார் 660 மில்லியன் பேர், வெறும் 400 டாலரை மட்டும் வருடாந்திர தலா வருமானமாக பெறுகின்றனர். இதற்கு மாறாக, உயர்மட்ட பிரிவினரில் ஒரு சதவிகிதத்தினர், அதாவது 13 மில்லியன் பேர் 53,700 டாலர் மதிப்பிலான தொகையை தங்களது வருடாந்திர தலா வருமானமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்னும் அதிர்ச்சியூட்டும் விடயமாக இருப்பது என்னவென்றால் உலகளாவிய பெருநிறுவன பத்திரிகைகள் இந்த நாட்டை ஒரு வளர்ந்துவரும் பொருளாதார பேராற்றல் மிக்க நாடாக மீண்டும் மீண்டும் கூறிவரும் போது, ஏழ்மை நிலையிலுள்ள 50 சதவிகித இந்திய மக்களின் தனிநபர் வருமானம், தற்போதைய 16 ஆண்டு கால அமெரிக்க ஆக்கிரமிப்பு உட்பட, பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போர்களினால் சூறையாடப்பட்டிருக்கும் நாடான ஆப்கானிஸ்தானின் தனிநபர் வருமானத்தை (561 டாலர்கள்) விட கணிசமாக குறைந்த அளவிலேயே உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India-SBI) கடந்த மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கை, இந்த நீடித்த பொருளாதார சரிவு என்பது, “தொழில்நுட்ப ரீதியாக குறுகியகால இயல்பினதாகவோ அல்லது நிலையற்றதானதோ இல்லை” என பகிரங்கமாக எச்சரித்தது, அதாவது, மோடி அரசாங்க செய்தித் தொடர்பாளர்கள் பொதுமக்கள் மத்தியில் வலியுறுத்தி வருவது போன்று, இதற்கு வெறுமனே பணம் செல்லாததாக்கப்பட்டதோ அல்லது GST விதிப்போ காரணமல்ல.
இந்த அறிக்கை, உள் கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வது அல்லது சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு கிடைக்கக்கூடிய மலிவான கடன்களை உருவாக்குவது போன்ற வகையில் அரசாங்க செலவு மூலம் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது.
“பொருளாதாரத்தை மீட்க அரசாங்கம் நிதிய கொள்கையை ஒரு கருவியாக பயன்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதையே இந்த சூழ்நிலை கோருகிறது” என SBI அறிக்கை தெரிவிக்கிறது.
எவ்வாறாயினும், வருடாந்திர வரவு-செலவுத் திட்டத்தில் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் கடன்பெறப்பட்ட நிதியாகவே உள்ளது என்ற நிலையில், சிறந்த சூழ்நிலைகளில் கூட இந்திய அரசாங்கத்தின் நிதித்திறன் அற்பமானதாகவே உள்ளது. இந்த நடப்பு நிதியாண்டில், வரவு-செலவுத் திட்ட செலவு மதிப்பீடு 21.5 டிரில்லியன் ரூபாயில் ($330 billion), கடனாக பெறப்பட்ட தொகை 5.5 டிரில்லியன் ரூபாய் ($85 billion) ஆகும்.
மோடி அரசாங்கம் அதன் வணிக சார்பு நோக்குநிலை குறித்து இதுவரை பாராட்டப்பட்டு வந்துள்ள போதும், தற்போது இந்திய பொருளாதாரம் எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகள் குறித்து எச்சரிக்கை அடைந்துள்ள அதன் பெருவணிக ஆதரவாளர்களிடம் இருந்து கூட கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.
Indian Express பத்திரிகையில் வெளிவந்த யஷ்வந்த் சின்ஹாவின் கடுமையான கருத்துக் கட்டுரை முக்கியமாக குறிப்பிடத்தக்கது. இதில் அவர், மோடியும், அவரது நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் இந்திய பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததாக குற்றம் சாட்டினார்: “கடினமானதொரு வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது போல் உள்ளது. மூடி மழுப்பலும் பிதற்றலும் பாராளுமன்ற மேடையில் நன்றாக இருக்கிறது, அது யதார்த்தத்தின் எதிரே ஆவியாகி விடுகிறது.” மேலும் இறுதியாக, சின்ஹா குறிப்பிடுகையில் “பிரதம மந்திரி அவரது நெருங்கிய வட்டத்திற்குள் ஏழ்மையை கண்டுள்ளதாக கூறுகிறார். அனைத்து இந்தியர்களும் அவர்களது நெருங்கிய வட்டத்திற்குள் அதை காண்பதை உறுதி செய்வதற்காக அவரது நிதி மந்திரி கூடுதல் நேரம் பணி புரிகிறார் ” எனக் கூறினார்.
சின்ஹாவின் விமர்சனத்தை ஜேட்லி சலிப்புடன் நிராகரித்ததோடு, “80 வயதில் ஒரு வேலை விண்ணப்பதாரர் அவர் தனது சொந்த பதிவுகளை மறந்துவிட்டார்” என்று அவரை அழைத்தார். மேலும் “பொருளாதார மந்தநிலை என அழைக்கப்படுவது” நேரடி வரி வசூல் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டார். அது 15.7 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
ஆனால் ஜேட்லியின் கூற்றுக்கள், வங்கி கடன்களின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் “ரெபோ-விகிதத்தை” குறைக்க வேண்டுமென, மோடி அரசாங்கம், பெருவணிக நிறுவனங்கள், குறிப்பாக உற்பத்தியாளர்கள் நாட்டின் மத்திய வங்கியான RBI (Reserve Bank of India) க்கு கொடுக்கும் கடுமையான அழுத்தத்துடன் முரண்படுகின்றன. வணிக கடன்கள் மற்றும் அடமானங்களின் மதிப்பை குறைப்பதன் மூலமாக வட்டிக் குறைப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என அவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் சமீபத்திய நாணய கொள்கை குறித்து RBI, கடந்த வாரம் நடத்திய கூட்டத்தில் வட்டி விகிதத்தை நிலையாக வைத்திருந்தது, அதற்கு நுகர்வோர் பணவீக்கத்தில் ஒரு ஏற்பட்டுள்ள அதிகரிப்பு மற்றும் ஏற்கனவே மூழ்கிவரும் ரூபாயின் மதிப்புக்கு மேலும் ஏற்படக்கூடிய பாதிப்பை காரணம் காட்டியது, இவ்வாறாக வர்த்தக பற்றாக்குறையும், பெருநிறுவன டாலர்-குறியீட்டுடனான கடன் சுமையும் அதிகரிக்கும் என்ற கவலையும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய வணிகங்கள், அதன் மிகப் பெரிய நிறுவனங்கள் பலவும் உட்பட, பெரும் கடன் சுமைகளில் ஏற்கனவே சிக்கியுள்ளன, மற்றும் அவை புதிய முதலீடுகளுக்குள் தீவிரமாக இறங்காமல் இருப்பதற்கான ஒரு பெரும் காரணமாகவும் அது உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வங்கியியல் துறையும் ஒரு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன, அதற்கு காரணம், 150 பில்லியன் டாலர் மதிப்பிற்கும் அதிகமான “அழுத்தத்திற்குட்பட்ட சொத்துக்கள்,” அதாவது செயல்படாத மற்றும் மறுகட்டமைக்கப்பட்ட கடன்கள்.