ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“Google is censoring websites to block dissident views critical of the US establishment”
India: Students and workers in Kolkata oppose Google censorship

“அமெரிக்க ஆளும்வர்க்கத்தை-ஸ்தாபனத்தை- விமர்சிக்கும் கருத்து வேறுபாடுகள் கொண்ட கண்ணோட்டங்களை தடுப்பதற்காக கூகுள் வலைத்தளங்களை தணிக்கை செய்கிறது”

இந்தியா: கொல்கத்தாவில் மாணவர்களும் தொழிலாளர்களும் கூகுள் தணிக்கையை எதிர்க்கின்றனர் 

By Ritwik Mitter and Arun Kumar
19 October 2017

சமீபத்திய வாரங்களில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு / உலக சோசலிச வலைத் தளத்தின் (ICFI / WSWS) இந்திய ஆதரவாளர்கள், இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரம் கொல்கத்தாவில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் உலக சோசலிச வலைத் தளம் மீதான கூகுளின் தணிக்கைக்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் இது தொடர்பாக வெளியிட்டிருந்த பகிரங்க கடிதத்தின் பிரதிகளையும் விநியோகித்தனர்.

ஏப்ரல் 25, 2017 அன்று, கூகுள், “தரம்குறைந்த” தகவல்களாக கருதும் “சதி தத்துவங்கள்” மற்றும் “போலி செய்திகள்” போன்றவற்றை அதன் பயனர்கள் அணுகுவதை கடினமாக்க அதன் தேடுபொறிகளின் நெறிமுறைகளில் மாற்றங்களை அறிவித்தது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் ஏனைய போர்-எதிர்ப்பு, முற்போக்கு மற்றும் இடதுசாரி வலைத் தளங்களுக்கான தேடல் முடிவுகள் தான் கணிசமாக குறைக்கப்பட்டது.

ICFI/WSWS ஆதரவாளர்கள், கொல்கத்தாவிலுள்ள ஜாதாவ்பூர் பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பெரிய பல்கலைக்கழகங்களுக்குச் சென்று மாணவர்களிடம் கூகுள் தணிக்கைக்கு எதிரான WSWS/ICFI இன் பிரச்சாரத்தின் முக்கியத்துவம் பற்றியும், அத்துடன் ஜனநாயக உரிமைகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தாக்குதல்கள் மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதல் பற்றியும் உரையாடினர்.


பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பிரச்சாரகர் ஒருவர் உரையாடுகிறார்

பிரச்சாரகர்கள், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக எழுகின்ற தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தையும் தடுப்பதில் முனைப்புடன் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (Communist Party of India-Marxist – CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India – CPI) ஆகிய இந்தியாவின் பிரதான ஸ்ராலினிச கட்சிகளின் துரோகத்தனமான பாத்திரத்தைப் பற்றியே முக்கியமாக விவாதித்தனர். மேற்கு வங்கத்தில், பிராந்திய வலதுசாரி கட்சியான திரினாமூல் காங்கிரஸ் கட்சி (Trinamool Congress-TMC) மூலமாக 2011 இல் வெளியேற்றப்படுவதற்கு முன்பு வரை 34 வருடங்களாக CPM தலைமையிலான இடது முன்னணி கட்சி தான் அங்கு ஆட்சி புரிந்தது.

மாணவர்கள் WSWS/ICFI இன் பிரச்சாரத்திற்கு தங்களது ஆதரவையும் தெரிவித்து, கூகுளின் தணிக்கையை எதிர்க்கும் WSWS இன் இணையவழி மனுவில் கையெழுத்திடவும் செய்தனர். பலரும் தகவல்களை அணுகும் தங்களது உரிமையை கூகுள் தடுப்பதாக கவலைப்பட்டனர். பிரச்சாரகர்களிடம் மைனக் சர்க்கார் என்பவர் பின்வருமாறு தெரிவித்தார்: “ஒரு மூன்றாவது உலகப் போர் சாத்தியமானால் அது பேரழிவை விளைவிக்கும் என்பதால் அதைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வதை அவர்கள் விரும்பவில்லை போலும்.”


சௌமென் சௌத்ரி

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போர் எதிர்ப்பு இயக்கம் ஒன்றை கட்டமைக்க ICFI/WSWS நடத்தும் பிரச்சாரம் குறித்து சௌமென் சௌத்ரி கருத்து தெரிவித்தார்: “மனிதகுலத்தை காப்பாற்றும் ஒரு சிறந்த நடவடிக்கையாக இது உள்ளது. அரசாங்கங்கள் தான் இந்த தவறான வழிநடத்துதல்களை உருவாக்கி மக்களின் கருத்துக்களில் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அமெரிக்க ஆளும் வர்க்கத்தை விமர்சிப்பதில் கருத்து வேறுபாடுகள் கொண்ட கண்ணோட்டங்களை தடுப்பதற்காக, அவைதான் வலைத் தளங்களையும் தணிக்கை செய்கின்றன.

பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில், ஆர்யமா பட்டாச்சார்யா என்பவர் பின்வருமாறு தெரிவித்தார்: “கூகுளின் இந்த நடவடிக்கை பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதாகும். ஈராக்கில் எண்ணெய் வயல்களை அமெரிக்க அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. ஒரு உலகளாவிய போர் நிகழுமானால், எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மிகவும்மேம்பட்ட ஆயுதங்களையும் அவர்கள் கொண்டுள்ளனர்.”

செப்டம்பர் 5 அன்று பெங்களூரில் ஒரு பெண் பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதை பட்டாச்சார்யா குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி உட்பட, இந்து வலதை அம்பலப்படுத்தவும், கண்டிக்கவும் செய்ததனால் இந்துத்துவ தீவிரவாதிகளின் இலக்காக லங்கேஷ் இருந்தார். அதனால், அவர் கொலை செய்யப்பட்டது கூட இந்து வகுப்புவாதிகளின் வேலையாக இருக்குமென நம்பப்பட்டது.

பட்டாச்சார்யா மேலும் தெரிவித்தார்: “பேச்சுரிமை நசுக்கப்பட்டுவிட்டது. இது லங்கேஷுக்கு மட்டுமல்ல. சில நாட்களுக்கு முன்னர் மணிப்பூரிலும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். இது அரசாங்கத்தின் பலத்தையே நிரூபிக்கிறது. அவர்கள் பெரும்பான்மையுடன் இருப்பதால், “இதுதான், எம்மால் செய்ய முடியும்” என்று அமெரிக்கா கூறுவது போல், அவர்களும், “இதுதான், எம்மால் செய்ய முடியும் !” என்று கூறுகின்றனர். மக்கள் விழித்துக்கொள்ளும் நேரம் வந்து விட்டது.”

பிரசிடென்சி பல்கலைக்கழக மாணவர் உஜன், மேற்கு வங்கத்தில் உள்ள ஸ்ராலினிச இடது முன்னணி மற்றும் திரினாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளைப் பற்றி பின்வருமாறு பேசினார்: “இடது (முன்னணி), கம்யூனிசத்தின் நிலைப்பாட்டை ஒருபோதும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அவர்கள் ஏழை மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை என்பதோடு, அவர்களது வாக்குகளைப் பற்றி மட்டுமே அக்கறை காட்டினர். அவர்கள் “இடதாக” இருப்பதாக மட்டுமே கூறிக்கொண்டனர். திரினாமூல் காங்கிரஸ் மூலமாக CPM தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்த பின்னரும், எதுவும் மாறவில்லை. அவர்கள், CPM இனைவிட வெறும் குறைந்த கல்வியறிவு பெற்றதிலேயே வேறுபாடுடையவர்களாக இருந்தனர். எந்தவித எதிர்ப்பும் அனுமதிக்கப்படவில்லை.”

மோடி அரசாங்கத்தை பற்றி கேட்டபோது, உஜன், “பெருநிறுவன ஊடகங்கள் மூலமாக அற்பத்தனமாக எப்படி விற்பது மற்றும் சந்தைப்படுத்துவது என்பதை அவர் (மோடி) அறிவார். அவரது பிஜேபி அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் நிர்வாக தோல்விகள் மீது கவனம் குவிப்பதை மாற்றுவதற்காக அவர் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டி விடுகிறார். மோடியை எதிர்த்து நிற்கும் எவரும் கீழே தள்ளப்படுகின்றனர். மேலும், அரசாங்கத்தை விமர்சிக்கும் எவரும் தேசத்திற்கு எதிர்ப்பாளராக முத்திரைகுத்தப்பட்டு வருகின்றனர்” என தெரிவித்தார்.

“பெருநிறுவன ஊடக உதவியுடன் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, அவர் பெரிய காரியங்களைச் செய்வதாக பொது மக்கள் முன்பு படம் தான் போட்டுக் காட்டுகிறார். ஆனால் உண்மையில், மோடி நாட்டின் செல்வ வளத்தை உறிஞ்சி வருகிறார் என்பதோடு, முதலீட்டாளர்கள் வசம் அதை ஒப்படைத்தும் விட்டார்” எனவும் தெரிவித்தார்.


உஜன்

உஜன் பத்திரிகையாளர் லங்கேஷின் கொலை பற்றியும் பேசினார். “இது மோடி அரசாங்கத்தின் பாசிசவாத இயல்பையே அடிப்படையில் வெளிப்படுத்தியது. மேலும், அவர்களை எதிர்க்கும் எவரையும் கீழே தள்ளிவிட வேண்டும்! எனவும் அதே மாதிரி, அரசாங்க விரோத கருத்துக்களைக் கொண்ட எவரையும் தேச விரோதி என முத்திரைகுத்தி தாக்கிவிட வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். உண்மையில், மக்களைப் பாதுகாப்பதில் தேசியவாதம் எதையும் செய்துவிடவில்லை. தேசம், எல்லைகள், கொடி மற்றும் தேசியகீதம் இவை எதுவும் மக்களைப் பற்றியதாக இல்லை.”

பாகிஸ்தானுக்கு எதிரான மோடியின் போர்குணமிக்க பிரச்சாரம் குறித்து பேசுகையில், உஜன், தேசியவாதத்தை தூண்டிவிடுவதற்கும் உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கும் இடையே ஒரு தொடர்பு இருந்தது எனக் குறிப்பிட்டார். “பாகிஸ்தான் நம்மை தாக்க போவதாக கூறி மக்களை பயமுறுத்த மோடி முயல்கிறார். பாகிஸ்தான் என்றாலே அவர்கள் நமது எதிரி என்று நமது நாட்டில் பகைமை தன்மை வளர்க்கப்பட்டுவிட்டது. இந்த பிரச்சாரம் வகுப்புவாத வெறுப்புக்கு பங்களிப்பு செய்கிறது.”

“தேசியவாதத்தையும், இனவாதத்தையும் தூண்டிவிடுவதன் மூலமாக, மக்களுக்கு எதிரான அவர்களின் ஆக்கிரோஷமான தாக்குதல்களிலிருந்து பொதுமக்கள் கவனத்தை திசைதிருப்ப வேண்டுமென்றே அவர்கள் முயற்சி செய்கின்றனர். இந்த வகுப்புவாத மற்றும் தேசியவாத பிரச்சினைகளில் பிரதான கவனம் செலுத்தப்பட்டாலும், பொருளாதார ரீதியாக நம்மை படிப்படியாக எப்படி இழக்கச் செய்கிறது என்பதை நாம் கவனிப்பதில்லை,” என்றவர் கூறியதோடு, “மோடி அரசாங்கம், பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக மோசடி செய்து அதன் கீழ் பணம் செல்லாததாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, அடுத்து பொருட்கள் மற்றும் சேவை வரியையும் (Goods and Service Tax-GST) அறிமுகப்படுத்தியுள்ளது” எனவும் தெரிவித்தார்.

“அரசியல் கட்சிகள் அனைத்துமே உண்மையில் முதலாளித்துவ கட்சிகளாகிவிட்டதால் அவை எதையும் நான் நம்பவில்லை. இடது மற்றும் வலது இரண்டிற்கும் இடையே அடிப்படையான வேறுபாடு எதுவுமில்லை. இனவாதத்திற்கும், முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் எதிராக போராட இந்த நாட்டில் இடது மாற்று எதுவுமில்லை. ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்குமான ஒரு எழுச்சி இருக்கவேண்டும், ஆனால், CPM அல்லது பிற கட்சிகளின் தலைமையின் கீழ் அதைச் செய்யமுடியாது. இந்நிலையில், புரட்சிகர இயக்கத்திற்குள் தொழிலாள வர்க்கத்தை நாம் தான் இணைக்க வேண்டும்” எனக்கூறி முடித்தார்.

அக்டோபர் 8 அன்று, ICFI ஆதரவாளர்கள், “People’s Film Collective. என்ற கலைக் குழுவால் கௌரி லங்கேஷின் நினைவாக ஒருங்கமைக்கப்பட்ட ஒரு கண்டனவாத திரைப்படத்தை திரையிடுகையில் தலையிட்டனர். அப்போது அவர்கள், லங்கேஷ் படுகொலை பற்றிய உலக சோசலிச வலைத் தள கட்டுரையின் பிரதிகளை அங்கு விநியோகித்ததோடு, கூகுள் தணிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தைப் பற்றியும் பங்கேற்றவர்களுடன் பேசினர்.


பாலாஜி

A.பாலாஜி, வங்கி ஊழியராக இருக்கும் இவர் பின்வருமாறு தெரிவித்தார்: “பேச்சு சுதந்திரம் என்பது எங்கும் அதிகரித்துவரும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த பிரச்சினைப் பற்றி நாம் இன்னும் அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான இந்த பிரச்சாரம், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சார்ந்த மக்கள் மத்தியில் பரந்தளவில் வளர்ச்சியடையவேண்டும். இந்த நாட்டில், மோடி அரசாங்கம் ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்துத்துவ வகுப்புவாதிகளால் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது கூட, பேச்சு சுதந்திரம் மீதானதொரு சமீபத்திய தாக்குதலாவே உள்ளது.”

A. வெங்கட்ரமணா, ஆசிரியரான இவர், ஸ்ராலினிச கட்சிகளின் பங்கு பற்றி கருத்து தெரிவித்தார்: “இடதுசாரிகள் தங்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொண்டுள்ளனர். வகுப்புவாதத்திற்கு எதிராகவும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதிலும் நாம் உண்மையுடன் போராட வேண்டும். ஆனால், இடதுசாரிகளின் நேர்மையற்ற தன்மையின் காரணமாக, இங்கு அவர்களது பரிதாபகரமான நிலைமையையே நாம் காண்கிறோம்.”