Print Version|Feedback
Catalan government in turmoil over Spain’s suppression of autonomy
சுயாட்சி மீதான ஸ்பெயின் ஒடுக்குமுறையால் கட்டலான் அரசாங்கத்தில் கொந்தளிப்பு
By Paul Mitchell
24 October 2017
அக்டோபர் 1 கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்து வாக்கெடுப்பு மீதான ஒடுக்குமுறைக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், சனிக்கிழமையன்று, ஸ்பானிய பிரதம மந்திரி மரியானோ ரஹோய் கட்டலான் சுயாட்சியைப் பறிப்பதற்கு ஸ்பானிய அரசியலமைப்பின் ஷரத்து 155 ஐ பயன்படுத்தினார்.
ஷரத்து 155 இன் கீழ் திணிக்கப்படக்கூடிய ஜனநாயக-விரோத நடவடிக்கைகள் கட்டலான் மக்களுடன் ஒரு வன்முறையான மோதலைத் தூண்டும் என்பதற்கு அறிகுறியாக, அந்நடவடிக்கை அந்நாளின் மாலையே பார்சிலோனாவில் 450,000 பேரை ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு இழுத்து வந்தது.
இந்த முன்னுதாரணமற்ற நடவடிக்கைகள் கட்டலான் முதல்வர் கார்லெஸ் புய்க்டெமொன்ட் மற்றும் அவர் அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்கவும், பிராந்திய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கும் உரிமை பெறவும், கட்டலோனிய பொருளாதார அமைப்புகள் மீதும், பிராந்திய பொலிஸ் படையான Mossos d’Esquadra மற்றும் கட்டலான் பொது ஊடகங்கள் மீதும் கட்டுப்பாட்டை ஏற்கவும் ஸ்பானிய மக்கள் கட்சி (PP) அரசாங்கத்தை அனுமதிக்கும். நடைமுறையளவில் ஒரு பொலிஸ்-இராணுவ ஆக்கிரமிப்பை நிறுவுவதற்கு சிவில் கார்டுகள் மற்றும் துருப்புகளை அனுப்புவதற்கான திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த வெள்ளிக்கிழமை, ரஹோயின் நடவடிக்கைகள் ஒப்புதலுக்காக ஸ்பானிய செனட் முன் கொண்டு வரப்படும், அங்கே மக்கள் கட்சிக்கு முழுப் பெரும்பான்மை உள்ளது. அவர்களுக்கு ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் குடிமக்கள் கட்சியின் ஆதரவும், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவும் உள்ளன.
மக்கள் கட்சியின் தாக்குதலுக்கு முன்னால், கட்டலான் பிராந்திய முதலாளித்துவ வர்க்கம் கொந்தளிப்பில் உள்ளது. உத்தியோகபூர்வ வழிமுறைகளுக்கு வெளியே வெடிக்கும் ரஹோய்க்கான விடையிறுப்பைத் தடுக்கும் முயற்சியில், அது பேச்சுவார்த்தைக்காக மக்கள் கட்சிக்கும் PSOE க்கும் மற்றும் தலையீடு செய்யுமாறு ஸ்பானிய நீதித்துறைக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் முறையீடு செய்யும் ஒரு கொள்கையை பின்தொடர்கிறது. ஐரோப்பிய ஆணைக்குழுவோ, கட்டலோனியாவை நோக்கிய அதன் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை திங்களன்று மீண்டும் வலியுறுத்தியது. “இந்நிலைப்பாடு நன்கு தெரிந்ததே,” என்று ஆணைக்குழுவின் ஒரு செய்தி தொடர்பாளர் அறிவித்தார். “நாங்கள் எப்போதுமே ஸ்பெயினின் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வ வழிவகைகளை மதிக்கிறோம் என்பதை கூறி வந்துள்ளோம்” என்றார்.
மேலும், மாட்ரிட்டுக்கு அதன் விடையிறுப்பை வரையறுக்க வியாழனன்று காலை கட்டலோனிய நாடாளுமன்றத்தின் ஒரு முழு அமர்வு கூட்டப்படுமென திங்கிட்கிழமை கட்டலோனிய நாடாளுமன்றம் குறிப்பிட்டது. கட்டலான் இடது குடியரசு (Catalan Republican Left - ERC) செய்தி தொடர்பாளர் செர்ஜி சாப்ரியா, கடந்த வாரம் சுதந்திர பிரகடனம் அறிவிக்காமல் புய்க்டெமொன்ட் வழங்கிய "பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை" “சிதைத்துக் கொண்டிருப்பதாக" மக்கள் கட்சி, சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடிமக்கள் கட்சிகளைக் குற்றஞ்சாட்டினார். “ஷரத்து 155 மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு" சரியான பதில் சுதந்திர பிரகடனம் செய்வது தான் என்றவர் தெரிவித்தார்.
குட்டி-முதலாளித்துவ பிரிவினைவாத கட்சியான மக்களின் வேட்பாளர்கள் கூட்டணி (CUP), உடனடியாக சுதந்திரத்தை அறிவிக்குமாறு கோரி வருவதுடன், இல்லையானால் "பாரியளவில் மக்கள் ஒத்துழையாமையை" ஏற்படுத்த அச்சுறுத்தி வருகிறது.
வெளியுறவு விவகாரங்களுக்கான கட்டலோனியாவின் அமைச்சர் ரௌல் ரோமெவா, பிபிசி க்கு கூறுகையில், கட்டலான் அமைப்புகள் எதிர்த்து அறைகூவல் விடுத்து விடையிறுக்கும் என்றார். அப்பிராந்திய மக்களைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், “இது தனிநபர் முடிவல்ல. … இது 7 மில்லியன் மக்களின் முடிவு,” என்றார்.
அவர் தொடர்ந்து கூறினார்: “கட்டலோனியாவில் உள்ள எல்லா பொதுத்துறை பணியாளர்களும் இப்போது பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபூர்வ துறைகள் வழங்கும் உத்தரவுகளை பின்பற்றுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்றார்.
பிராந்திய பொலிஸ் படையினது ஒரு பிரிவின் செய்திதொடர்பாளர் அல்பேர்ட் டொனெய்ர் "சுதந்திரத்திற்காக Mossos” க்கு அழைப்புவிடுத்ததுடன், ஷரத்து 155 நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக மற்றும் ஸ்பானிய உள்துறை அமைச்சகம் Mossos மீது கட்டுப்பாட்டை எடுப்பதற்கு முன்னதாக கட்டலான் குடியரசை பிரகடனப்படுத்துமாறு பிராந்திய அரசாங்கத்தை வலியுறுத்தினார். Mossos, “[கட்டலான்] நாடாளுமன்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசமாக" இருக்குமென டொனெய்ர் அறிவித்தார்.
சிறையில் அடைக்கப்பட்ட கட்டலான் நடவடிக்கையாளர்கள் Jordi Sànchez மற்றும் Jordi Cuixart ஐ "உடனடியாக" விடுவிக்க கோரி, “குடியரசுக்கான பல்கலைக்கழகங்களின்" குழு அக்டோபர் 26 அன்று ஒரு மாணவர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஷரத்து 155 ஐ பயன்படுத்தி இருப்பதானது, சோசலிஸ்ட் கட்சியின் (PSOE) கட்டலான் பிரிவான கட்டலோனிய சோசலிஸ்ட் கட்சியில் (PSC) நெருக்கடியை உருவாக்கி உள்ளது. 1990 களில் அது செல்வாக்கு பெற்றிருந்தபோது, கட்டலான் நாடாளுமன்றத்தில் 135 ஆசனங்களில் 52 ஆசனங்களை PSC கொண்டிருந்தது மற்றும் கருத்துக்கணிப்புகளில் சுமார் 38 சதவீதம் ஆதரவு பெற்றிருந்தது. ஆனால் கடந்த 2015 தேர்தலில், 13 சதவீத வாக்குகளுடன் PSC பிரதிநிதிகளின் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது, இது பெரும்பாலும் பிராந்திய கூட்டணி அரசாங்கத்தின் பாகத்திலிருந்து அது திணித்த சிக்கன நடவடிக்கை மீதான கோபத்தினால் ஆகும்.
ஷரத்து 155 ஐ PSOE ஆதரிப்பதன் மீது PSC பிளவுபட்டுள்ளது. PSC தலைவர் Miguel Iceta ஷரத்து 155 ஐ திணிப்பதை "நேரடியாக" எதிர்க்க கட்சிக்குள் இருந்து வந்த அழைப்புகளை நிராகரித்துள்ளார். அதற்கு பதிலாக, புய்க்டெமொன்ட் ஐ சந்தித்த அவர், புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுப்பதால் அரசாங்கம் கலைக்கப்படுவதையும் பலவந்தமாக தேர்தல்கள் நடத்தப்படுவதையும் தடுக்கலாம் என்று கூறி புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்குமாறு அவருக்கு அழுத்தமளித்து வருகிறார். “நாங்கள் ஜனாதிபதி புய்க்டெமொன்ட் ஐ நோக்கி இரட்டை வாய்ப்புடன் திரும்புகிறோம்: தற்போதைய சட்டபூர்வத்தன்மையின் அடிப்படையில் தேர்தல்களுக்கு அழைப்புவிடுப்பது அல்லது ஒரு பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவை வழங்க செனட் விசாரணை நடைமுறையைப் பயன்படுத்துவது. இதுதான் எங்களின் நிலைப்பாடு,” என்று Iceta விளக்கமளித்தார்.
ஆனால் கட்டலான் இடது குடியரசு (ERC) கட்சியோ PSC உடன் கூட்டணி ஏற்பாடுகளை முறித்துக் கொள்ளுமாறு அதிகப்படியான நகராட்சிகளுக்கு அழைப்புவிடுத்து வருகிறது. ERC இன் துணைத் தலைவர் காப்ரியால் ரூஃபியன் கூறுகையில், “அரசின் காட்டுமிராண்டித்தனத்தில் பங்கெடுப்பவர்களுடன் சேர்ந்து நம்மால் ஆட்சி நடத்த முடியாது. நாம் PSC/PSOE உடனான நகராட்சி மட்டத்திலான உடன்படிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்,” என்றார்.
ஸ்பானிய PSOE இன் ஆதரவுடன் மக்கள் கட்சியின் கடுமையான கொள்கைக்கு, PSC “ஒரு மாற்றீட்டு பெரும்பான்மை அரசாங்கத்தைக் கட்டமைப்பதற்கான பல ஆண்டுகால முயற்சிக்கு ஏற்கனவே விடைகொடுத்துவிட்டது,” என்று கூறி, ஞாயிறன்று, PSC இன் தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் ஏழு பேர் கையெழுத்திட்ட ஓர் அறிக்கை, "துஷ்பிரயோகமாகவும் நேரடியாகவும்" ஷரத்து 155 ஐ பயன்படுத்துவதை நிராகரித்தது.
PSC இன் துணை-ஸ்தாபகரும் PSOE பிரதம மந்திரி Felipe González (1982-1986) இன் கீழ் முன்னாள் தொழில்துறை அமைச்சராக இருந்தவருமான Joan Majó, கட்டலான் சுதந்திர இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளாமல், “கட்டலோனியாவுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகள் சம்பந்தமான" PSC இன் பல கொள்கைகளுடன் அவர் "அதிகரித்தளவில் உடன்படவில்லை" என்று கூறி இராஜினாமா செய்தார்.
ஷரத்து 155 ஐ PSC ஆதரிப்பதானது பார்சிலோனா மேயர் Ada Colau க்கும் பிரச்சினைகளை உண்டாக்கி உள்ளது, இவரது பார்சிலோனா en Comú கூட்டணியை பதவியில் தக்க வைப்பதற்காக இவர் PSC ஐ சார்ந்துள்ளார். PSC உடனான அவரது நெருக்கமான உறவுகள் குறித்த விமர்சனங்களைத் திசைதிருப்பும் முயற்சியில், அப்பெண்மணி PSOE தலைவர் பெட்ரோ சான்சேஸ் (Pedro Sánchez) இன் "போக்கால்" “கவலை கொண்டிருப்பதாக" தெரிவித்தார். துணை மேயர் Jaume Asens, “ஷரத்து 155 ஐ பயன்படுத்துவதன் தாக்கங்களை" BComú ஆராயும் என்று உறுதியளித்தார்.
ஷரத்து 155 ஐ பயன்படுத்துவது பாஸ்க் பிரதேசத்தையும் அச்சுறுத்துகிறது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் பிராந்திய மக்கள் கட்சியின் தலைவருமான Alfonso Alonso கூறுகையில், அப்பிராந்தியமும் கட்டலோனியாவை போலவே "அதே சூழ்நிலையில்" போய் முடிவதற்குரிய "எல்லா அம்சங்களையும்" கொண்டுள்ளது என்று எச்சரித்தார். இத்தகைய "அம்சங்கள்" ஒன்றோடொன்று கலந்துவிடாமல் "தடுக்கும்" பொறுப்பு அவர் கட்சிக்கு இருப்பதாக அறிவித்தார்.
ஸ்பெயினில் 40 ஆண்டுகால "ஜனநாயகத்தை" குறிக்கின்றதும், பாஸ்க் பயங்கரவாத அமைப்பான ETA “அதன் தோல்வியை அங்கீகரித்து" ஆயுதங்களைக் கைவிட்ட அத்தருணத்தின் ஆறாவது நினைவாண்டைக் குறிக்கின்றதுமான கொண்டாட்டங்களில் Alonso உரையாற்றினார்.
அவர் உரையின் போது, பாஸ்க் தேசியவாத கட்சி (PNV) ஐ குறிப்பிடும் வகையில் Alonso அறிவித்தார், கட்டலோனியாவைப் போலவே, பாஸ்க் பிரதேசத்திலும் "தேசியவாதம் அதிகாரத்தில் உள்ளது" என்றார். அங்கே “இப்போதும் வன்முறையான நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் தீவிர சக்திகள்" உள்ளன என்று தொடர்ந்த அவர், ETA அரசியல் பிரிவான Batasuna இன் ஒரு மறுபிறப்பாக விளங்கும் EH Bildu ஐ சுட்டிக்காட்டினார். “பொடெமோஸ் வெகுஜனவாதிகள் மூன்றாம் சக்திகளாக உள்ளனர்", மற்றும் Gure Esku Dago விவாதக் களம் ஓர் "ஆரம்பக்கட்ட" பாஸ்க் தேசிய சட்டமன்றமாக விளங்குகிறது என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
கட்டலோனியா சம்பந்தமாக “அரசின் எதேச்சதிகார போக்கு" பாஸ்க் பிரதேசத்தையும் “நிச்சயமாக எட்டும்" என்று EH Bildu இன் பொது ஒருங்கிணைப்பாளர் Arnaldo Otegi அறிவித்தார். ஷரத்து 155 ஐ பயன்படுத்துவதை எதிர்க்கும் கட்சிகளிடையே "தேசிய மற்றும் ஜனநாயக ஒற்றுமையை" பாதுகாப்பதற்காக, ஒரு "அவசர அரசியல் கடமைப்பாட்டு நடைமுறைக்கு" அவர் அழைப்புவிடுத்தார்.