Print Version|Feedback
EU summit endorses Spain’s threat of police-military occupation of Catalonia
கட்டலோனியாவில் போலிஸ்-இராணுவ ஆக்கிரமிப்புக்கான ஸ்பெயினின் மிரட்டலை ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு வழிமொழிகிறது
By Alex Lantier
21 October 2017
புரூசெல்ஸில் நேற்று முடிவடைந்த இரண்டு நாள் ஐரோப்பிய ஒன்றிய அரசுத் தலைவர்களின் உச்சிமாநாடு, ஸ்பானிய போலிஸ் மற்றும் இராணுவப்படை பிரிவுகளின் துணைகொண்டு ஒரு புதிய கட்டலான் பிராந்திய அரசாங்கத்தை திணிக்கும் வகையில் ஸ்பானிய அரசியல்சட்டத்தின் 155வது பிரிவைக் கொண்டுவருவதற்கான மாட்ரிட்டின் திட்டங்களை ஒரேகுரலில் வழிமொழிந்தது.
கட்டலான் நெருக்கடி, உச்சிமாநாட்டின் உத்தியோகபூர்வ திட்டநிரலில் இருக்கவில்லை. இருந்தும் கூட ஸ்பானிய பிரதமரான மரியானோ ரஹோய், அக்டோபர் 1 கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்பின் மீது ஒரு கொடூரமான போலிஸ் ஒடுக்குமுறையை நடத்தியிருந்ததன் பின்னரும், “அணுத் தெரிவு” என்பதாய் அழைக்கப்படுகின்ற 155வது பிரிவைக் கொண்டுவருவதை நியாயப்படுத்துவதற்கான ஒரு உரையை வழங்க அனுமதிக்கப்பட்டார். ஸ்பெயின் நெருக்கடி குறித்த ஒரு திட்டமிட்ட பொய்மைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு ரஹோய் வழங்கிய உரை ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும் சக்திகளது உற்சாகமான ஆதரவைப் பெற்றது.
கட்டலான் அரசாங்கத்தின் முதல்வரான கார்லெஸ் புய்க்டெமொன்ட் உடனான மேலதிக பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கும் விதமாக, “பிரிவு 155 நாளை அமல்படுத்தப்பட இருக்கிறது” என்று ரஹோய் அறிவித்தார். ஆயினும் இந்த நெருக்கடிக்கான முழுப் பழியையும் கட்டலான் அரசாங்கம் மற்றும் கட்டலோனியாவில் இருக்கும் “தீவிரக்குழுவினரது” பிடிவாதமாகச் சொல்லப்படுவதன் மீது சுமத்தினார்: “இன்று நடப்பதற்குப் பொறுப்பானவர்கள் அவர்களே. வெளிப்படையாகச் சொல்வதானால், கட்டலோனியா அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உதவிகளையும் தாண்டி, தனது நிலைமைகளை மிகவும் தகுதியற்ற வகையில் பாதுகாத்தது.”
ரஹோய் தொடர்ந்தார், “நாங்கள் மிகவும் முன்னெச்சரிக்கையைக் கடைப்பிடித்திருக்கிறோம், ஒரு சிரமமான சூழ்நிலையை உருவாக்கி விடக் கூடாது என நாங்கள் முயன்றோம், ஆனால் சட்டங்கள் உதாசீனப்படுத்தப்படுகையில், உத்தரவாதங்கள் இல்லாமல் கருத்துவாக்கெடுப்புகள் நடத்தப்படுகையில்... மக்கள் சட்டத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் காற்றில் பறக்க விடுகையில் அது கடினமாகி விடுகிறது. நாங்கள் நிலைமையின் விளிம்புக்கு வந்துசேர்ந்திருக்கிறோம். நீங்கள் தீவிரப்போக்கினரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வீர்களாயின், இப்போது நடந்து கொண்டிருப்பது தான் நிகழும்.”
ரஹோயின் வாதங்கள், கட்டலோனியாவில் ஒரு மூர்க்கமான இராணுவ-போலிஸ் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக புனையப்பட்ட, அப்பட்டமான பொய்களது ஒரு அடுக்காக இருக்கிறது. இந்த நெருக்கடியைத் தூண்டுவதற்கான பெரும்பொறுப்பை மாட்ரிட்டும் ஐரோப்பிய ஒன்றியமுமே ஏற்கவேண்டும் என்பதுடன், ஒவ்வொரு ஒடுக்குமுறைக்கும் மக்கள் மத்தியில் பெருகும் அரசியல் எதிர்ப்பைக் கையாளுவதற்கு எதேச்சாதிகார நடவடிக்கைகளை நோக்கித் திரும்புவதற்குமான ரஹோயின் முனைப்பை ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ஆதரித்து நிற்கின்றன.
அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்பினால் தூண்டப்பட்ட நெருக்கடியானது, கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக கொடுமையான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள், சமூக நிலைமைகளை நாசம் செய்து கண்டமெங்கிலும் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களை வேலைவாய்ப்பற்ற நிலையில் விட்டிருந்ததன் பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியின் விளைபொருளாக இருக்கிறது.
2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர் மாட்ரிட் உடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த சமூக வெட்டுகளை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து மாட்ரிட்டுக்கும் பார்சிலோனாவுக்கும் இடையில் மோதல் பெருகிச் சென்று கொண்டிருந்ததன் மத்தியில் தான் இந்த கருத்துக்கணிப்புக்கு அழைப்புவிடப்பட்டது. இதற்குமுன்பு -சமீபத்தில் 2014 நவம்பரில்- இதேபோன்ற கட்டலான் கருத்துவாக்கெடுப்புகள் அமைதியாக நடத்தப்பட்டு வந்திருக்கின்றன என்ற நிலையில் மாட்ரிட் இந்த ஆண்டு வன்முறையாக எதிர்வினையாற்றியது. அது அக்டோபர் 1 வாக்களிப்பை நசுக்கும் பொருட்டு, வாக்குச்சீட்டுகளை பறிமுதல் செய்ததோடு, நூற்றுக்கணக்கான மேயர்கள் மற்றும் பிற அதிகாரிகளைக் கைது செய்ய முயன்றது, அத்துடன் ஒரு அரசியல் அச்சுறுத்தல் பிரச்சாரத்தையும் தொடக்கியது.
அக்டோபர் 1 அன்று, வாக்களிப்பு இடங்களைப் பாதுகாப்பதற்கு கட்டலான் மக்கள் பாரிய வகையில் அணிதிரண்ட நிலையால் திகைத்து விட்டிருந்த 16,000 சிவில் கார்ட் போலிஸ், அமைதியான வாக்காளர்கள் மீது கொடூரமான ஒரு தாக்குதலைக் கொண்டு பதிலளித்தது. சிவில் கார்ட் போலிசார் பள்ளிகளை உடைத்து உள்ளே நுழைவது, வாக்களிக்கத் தரையில் காத்திருந்த மக்களை எட்டி உதைப்பது, அத்துடன் 800 பேருக்கும் அதிகமாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்த ஒரு கொடூரத் தாக்குதலின் போது ஒரு வயது முதிர்ந்த பெண்ணையும் கூடத் தாக்குவது ஆகியவற்றின் காணொளிகளைக் கண்டு உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் அதிர்ச்சியடைந்தனர், மிரட்சி கண்டனர்.
சுதந்திரத்திற்கு ஆதரவாக 90 சதவீத வாக்களிப்பு கிட்டியும் கூட, புய்க்டெமொன்ட் அக்டோபர் 10 அன்று வழங்கிய உரையில் சுதந்திரத்தை அறிவிப்பதை தள்ளி வைத்ததோடு, அதன்பின் மாட்ரிட் உடனான பேச்சுவார்த்தைக்காய் விண்ணப்பித்து வந்திருந்தார், ஆனால் பயனில்லை. மறுபக்கத்தில் மாட்ரிட் சூழ்நிலையை மேலும் தீவிரமாக்கியிருக்கிறது — கட்டலான் இணையத் தளங்களை மூடியது, கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகளைக் கைதுசெய்தது, அத்துடன் அவசரகாலநிலை ஆட்சியை அமல்படுத்துவதற்கும் அச்சுறுத்தியது. இது கட்டலான் தலைநகரான பார்சிலோனாவில் நூறாயிரக்கணக்கான மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் இறங்கத் தூண்டியது.
புரூசெல்ஸில் நேற்று பேசிய ரஹோய், அவரது கொள்கையின் சர்வாதிகாரத் தன்மையை தணித்துக் காட்டுவதற்கும் இன்னும் இரத்தக்களரியான ஒரு ஒடுக்குமுறை வரக்கூடும் என்ற முழு நியாயமான அச்சங்களுக்கு எதிர்வாதம் செய்வதற்கும் முயற்சி செய்தார். “பிரிவு 155 ஐ பயன்படுத்துவது என்றால் பலவந்தத்தைப் பிரயோகிப்பது என்பது கட்டாயமில்லை” என்ற அவர், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் வலது-சாரி குடிமக்கள் கட்சி, மற்றும் ரஹோயின் சொந்த மக்கள் கட்சி (PP) ஆகியவற்றுடனான கூட்டுப் பேச்சுவார்த்தைகளின் மூலமாக அவரது அரசாங்கம் முடிவெடுக்க இருப்பதாக மேலும் சேர்த்துக் கொண்டார்.
ஆயினும் மாட்ரிட் ஆளும் ஸ்தாபகமானது உண்மையில் கட்டலான் மக்களுக்கு எதிராக பாரிய ஒடுக்குமுறையைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்பதை ரஹோய் தெளிவாக்கினார். அக்டோபர் 1 அன்றான வன்முறையைக் கண்டு அவர் அஞ்சினாரா என்று கேட்கப்பட்டபோது, கருத்துக் கூற மறுத்த ரஹோய் மாறாக இன்னும் அதிகமான வன்முறைக்கு போலிசுக்கு ஒரு வெற்றுக் காசாலோயைக் கையளித்தார், அவர் கூறினார்: “ஸ்பெயின் மற்றும் அதன் பிரதமரின் முழு ஆதரவும் பாதுகாப்புப் படைகளுக்கு உள்ளது.”
பிரிவு 155 ஐ அமல்படுத்துவது என்பது, 1978க்கும் -தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில்- பிரான்சிஸ்கோ பிராங்கோவால் உருவாக்கப்பட்ட ஸ்பானிய பாசிச ஆட்சியின் உருக்குலைவுக்கும் பின்னர் இதுவரை கண்டிராத அளவில் கட்டலான் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் ஒரு மோதலைத் தொடுப்பதைக் கருத்திற் கொண்டதாகும். கட்டலோனியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இடைநீக்கம் செய்துவிட்டு, மாட்ரிட்டினால் உத்தரவிடப்பட்ட, சிவில் கார்ட் போலிஸ் மற்றும் இராணுவ அலகுகளின் ஆதரவைக் கொண்ட ஒரு புதிய அரசாங்கத்தை பலவந்தமாக அமர்த்துவது என்பது அதன் அர்த்தமாயிருக்கும். ஒரு ஒடுக்குமுறையில் அணிதிரட்டப்படத்தக்க இராணுவ அலகுகளில் சிலவற்றின் பெயர்களும் கூட —பார்சிலோனா மற்றும் Sant Climent Sescebes இல் இருக்கும் வாகனரக சிப்பாய் படையணிகள்— ஸ்பானிய ஊடகங்களில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.
பார்சிலோனாவில் ஏற்கனவே வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்து வருகின்ற நிலையில், ஸ்பானிய ஊடகங்கள், கட்டலோனியாவில் மாட்ரிட்டின் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி கையிலெடுக்கத்தக்க, இன்னும் அதிகமான வெடிப்பைத் தூண்டக் கூடிய, சிக்கன நடவடிக்கைகள், கட்டலான் அரசுத் தொலைக்காட்சியை மூடுவது, மற்றும் பள்ளிகளில் கட்டலான் மொழி விடயங்களை அகற்றுவது ஆகியவை கொண்ட ஒரு சர்வாதிகார திட்டநிரல் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றன. ஸ்பானிய பாதுகாப்பு மற்றும் இராணுவப் படைகளில், அக்டோபர் 1 ஒடுக்குமுறையைக் காட்டிலும் அதிக இரத்தக்களரியான ஒடுக்குமுறைக்கு செயலூக்கத்துடன் திட்டமிடப்பட்டு வருகிறது தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 116வது பிரிவைக் கொண்டுவந்து ஸ்பெயின் எங்கிலும் ஒரு அவசரகாலநிலையை திணிப்பது குறித்தும் மாட்ரிட் விவாதித்துக் கொண்டிருக்கிறது.
புரட்சிகரத் தாக்கங்களுடனான ஒரு நெருக்கடி, கட்டலோனியாவிலும் ஸ்பெயினிலும் மற்றும் முழு ஐரோப்பாவிலும் எழுந்து கொண்டிருக்கிறது. சர்வாதிகாரத்திற்கு திரும்புவதற்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தில் ஒரு ஆழமான, வரலாற்றில்-வேரூன்றியதொரு எதிர்ப்பு இருக்கிறது, வெகுஜன ஒடுக்குமுறையின் மூலமாக பார்சிலோனாவில் ஒரு சட்டத்திற்கு புறம்பான எடுபிடி அரசை அமர்த்துவதற்கு மாட்ரிட் செய்யும் முயற்சியானது, ஐரோப்பாவெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பெரும் கோபத்தைத் தூண்டும். கட்டலோனியாவிலும் அத்தோடு ஸ்பெயின் முழுமையிலும் சர்வாதிகார ஆட்சியைத் திணிப்பதற்கான மாட்ரிட்டின் முனைப்பை எதிர்ப்பதற்கான ஒரே வழி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கட்டலோனியாவிலான ஒடுக்குமுறைக்கும் எதிராக, அரசியல் ரீதியாக சுயாதீனமானதொரு புரட்சிகரப் போராட்டத்தில் ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது மட்டுமேயாகும்.
மாட்ரிட்டுக்கும் பார்சிலோனாவுக்கும் இடையிலான மோதலில், ஐரோப்பிய ஒன்றியம் தலையிட்டு அமைதியாகத் தீர்த்து வைக்கின்ற வரை மக்கள் காத்திருக்கலாம் என்று ஸ்பெயினின் பொடேமோஸ் கட்சி போன்ற சக்திகளால் முன்னெடுக்கப்படுகின்ற வாதங்கள் அபத்தமானவை, அவை நிராகரிக்கப்பட வேண்டும். மாட்ரிட் பிராந்தியத்திற்கான பொடேமோஸ் செயலாளரான ரமோன் எஸ்பினார் Públicok க்கு விடுத்த ஒரு அறிக்கையில், நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு முக்கியமானதாய் அவர் கண்ட “மத்தியஸ்தம் மற்றும் பேச்சுவார்த்தையின் அவசியம் குறித்து... பரந்த சர்வதேச கருத்தொற்றுமை” ஏற்பட்டதை பாராட்டினார்.
இத்தகைய பிரமைகள் வெகுஜனங்களை தூங்க வைக்க தாலாட்டுப் பாடுவதைத் தவிர்த்து வேறெந்த நோக்கத்திற்கும் உதவுவதில்லை. ஐரோப்பிய ஒன்றியமே —இது கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால “பயங்கரவாதத்தின் மீதான போர்” மற்றும் ஒரு தசாப்த கால ஆழமான சிக்கன நடவடிக்கைகளின் பின்னர் போலிசும் இராணுவமும் பிரம்மாண்டமான பாத்திரங்களை வகிக்கின்றதான திவாலான ஆட்சிகளைக் கொண்டிருக்கிறது— பிரான்சின் அவசரகாலநிலை போன்ற ஆட்சிமுறைகளைக் கொண்டு அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒழித்துக்கட்டுவதை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கட்டலான் மக்கள் மீதான தாக்குதலுக்கு இது தனது ஆதரவை சமிக்கை செய்கின்றதென்றால், அதன் காரணம் இதேபோன்ற தாக்குதல்களை ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்துவதற்காய் அது தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதால் தான்.
புரூசெல்ஸ் உச்சிமாநாட்டில் முக்கியமான ஐரோப்பிய அரசுகளின் தலைவர்கள் அனைவருமே ரஹோயின் சர்வாதிகார திட்டநிரலை ஆதரித்தனர். “ஸ்பானிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று அறிவித்த ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்க்கெல், பின்னர் “ஸ்பானிய அரசியல்சட்டத்தின் அடிப்படையில்” நெருக்கடியின் விளைவில் இருந்தான வெளியேற்றத்திற்கு ரஹோயின் அழைப்புகளை எதிரொலித்தார்.
அதேபோல, பிரிட்டிஷ் பிரதமரான தெரசா மே நேற்று தெரிவித்தார், “இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பேசியது போல இன்று காலையும் நான் மரியானோ ரஹோயுடன் பேசினேன், ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாடு மிகத் தெளிவாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினேன். மக்கள், சட்டத்தின் ஆட்சிக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், ஸ்பானிய அரசியல்சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
டச்சு பிரதமரான மார்க் ரூட், கட்டலான் நெருக்கடியை “ஸ்பெயினின் ஒரு உள்நாட்டு விவகாரம்” என்று அழைத்தார், பிரெஞ்சு ஜனாதிபதியான இம்மானுவல் மக்ரோன் வியாழனன்று, ஐரோப்பியத் தலைவர்கள் “ஸ்பெயினைச் சுற்றிய ஐக்கியத்தின் ஒரு செய்தியை அனுப்புவார்கள்” என்று அறிவித்த பின்னர் ரஹோயுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார்.
மாட்ரிட்டுக்கான ஆதரவின் ஒரு அசாதாரண வெளிப்பாடாக, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரான ஜோன் குளோட் ஜூங்கர், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவரான டொனால்ட் டஸ்க், மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவரான அண்டோனியா தஜனி அனைவரும் உச்சிமாநாட்டுக்குப் பின்னர் நேற்று, ஸ்பெயினில் உள்ள Oviedo நகருக்குப் பயணம் செய்து, ஸ்பெயின் மன்னரான ஆறாம் பிலிப் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு Princess of Asturias பரிசை வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்குகொண்டனர். கட்டலோனியா ஸ்பெயினின் ஒரு “அத்தியாவசியமான பகுதி” என்று பார்வையாளர்களிடம் இருந்து இடைவிடாத கைதட்டலைப் பெற்ற ஒரு கருத்தை மன்னர் அறிவித்த போது அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.