Print Version|Feedback
Spanish government vows to impose military-backed regime in Catalonia
கட்டலோனியாவில் இராணுவ-ஆதரவுடனான ஆட்சியைத் திணிக்க ஸ்பானிய அரசாங்கம் சூளுரைக்கிறது
20 October 2017
Alex Lantier
ஸ்பானிய அரசாங்கம் நாளை கட்டலான் பிராந்திய தன்னாட்சியை நிறுத்திவைக்கிற ஸ்பானிய அரசியல்சட்டத்தின் பிரிவு 155 ஐ அமல்படுத்த திட்டம் கொண்டிருப்பதாக நேற்று அறிவித்தமையானது ஒரு அரசியல் திருப்பமான நிகழ்வும், ஸ்பெயினில் மட்டுமல்லாது ஐரோப்பாவிலும் சர்வதேச ரீதியாகவும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு அவசரமான எச்சரிக்கையும் ஆகும்.
ஒரு முக்கியமான மேற்கு ஐரோப்பிய நாட்டில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன், ஆளும் வர்க்கமானது எதேச்சாதிகார ஆட்சியை நோக்கிய ஒரு திருப்பத்திற்கான திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. பிரிவு 155 ஐ கொண்டு வருவதன் மூலமாக, 1936-1939 ஸ்பானிய உள்நாட்டுப் போரின் சமயத்தில் பிரான்சிஸ்கோ பிராங்கோவால் உருவாக்கப்பட்ட பாசிச ஸ்பானிய ஆட்சி முடிவுக்கு வந்த 1978க்குப் பின்னர் முதன்முறையாக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டலான் அரசாங்கத்தை மாட்ரிட் இடைநீக்கம் செய்ய இருக்கிறது. அதன்பின் அது ஸ்பானிய போலிஸ் மற்றும் ஆயுதமேந்திய படைகளை நிலைநிறுத்தி அவற்றின் ஆதரவுடன் வேறொரு பிராந்திய நிர்வாகத்தைப் பலவந்தமாகத் திணிக்கும்.
அக்டோபர் 1 கட்டலான் கருத்துவாக்கெடுப்பில் “சுதந்திரம் வேண்டும்” என்ற வாக்களிப்புக்குப் பின்னர் கட்டலோனியா சுதந்திரத்தை அறிவித்திருந்ததா என்பதை கூறுவதற்கு கட்டலான் பிராந்திய முதல்வரான கார்லஸ் புய்க்டெமொன்ட்டுக்கு பிரதமர் மரியானோ ரஹோய் நேற்று காலை 10 மணி வரை கெடு விதித்திருந்தார்.
“இல்லை” என்று வெளிப்படையாக பதிலளிக்காமல் -இது அவரது சொந்த அரசாங்கம் நிலைகுலைய இட்டுச் சென்றிருக்கும்- புய்க்டெமொன்ட் கட்டலான் நாடாளுமன்றத்தில் அவர் அக்டோபர் 10 அன்று வழங்கிய உரையில் சுதந்திரத்தை அறிவிக்கவில்லை என்பதை தெளிவாக்கினார். மாட்ரிட் உடனான பேச்சுவார்த்தைகளுக்கு அவர் விண்ணப்பித்தார்: “மக்கள் வாக்களிப்பின் விளைவுகளை நிறுத்திவைப்பதற்கு நான் ஆலோசனை வைத்தேன். பேச்சுவார்த்தைக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குவதற்காக நான் இதனைச் செய்தேன்”. ஆயினும், “ஸ்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை முடக்கி ஒடுக்குமுறையைப் பயன்படுத்துமேயானால், கட்டலான் நாடாளுமன்றம், அது அனுகூலமானது என்றால், அக்டோபர் 10 அன்று அது வாக்களிக்காத உத்தியோகபூர்வ சுதந்திர அறிவிப்பின் மீது வாக்களிக்கக் கூடும்” என்று அவர் எச்சரித்தார்.
புய்க்டெமொன்ட் அவரிடம் இருந்து கோரப்பட்ட தெளிவான பதிலை வழங்கத் தவறி விட்டதாக அறிவிக்கின்ற ஒரு சுருக்கமான செய்திக்குறிப்பை வழங்கிவிட்டு, ரஹோய் இந்த பதிலை ஓரங்கட்டி வைத்து விட்டார். “அதன் விளைவாக”, அந்த செய்திக் குறிப்பு கூறியது, “கட்டலான் பிராந்தியத்தில் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பதற்காக அரசியல்சட்டத்தின் 155வது பிரிவின் கீழான ஷரத்துகளை ஸ்பானிய அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும்.” ஸ்பெயினின் அமைச்சர்கள் கவுன்சில் சனிக்கிழமையன்று கூடி ஸ்பானிய செனட்டினால் ஒப்புதல் பெறுவதற்கான -பிரிவு 155 ஐ அமல்படுத்த அங்கீகார வாக்கு இது அளித்தாக வேண்டும்- நடவடிக்கைகளை விவாதிக்கும் என்று அது தெரிவித்தது.
ஸ்பெயினில் இராணுவ-போலிஸ் ஆட்சியை நோக்கிய திருப்பமானது ஸ்பானிய ஆளும் உயரடுக்கின் மீது மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதுமான ஒரு குற்றப்பத்திரிகையாகும். இரண்டு-நாள் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்காக நேற்றிரவு புரூசேல்ஸ் வந்துசேர்ந்த ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் ஜனநாயக உரிமைகள் மீதான மாட்ரிட்டின் தாக்குதல்களை வெளிப்பட ஆதரித்தனர். “ஸ்பானிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று மேர்க்கெல் அறிவிக்க, ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு “ஸ்பெயினைச் சுற்றிய ஐக்கியத்தின் ஒரு செய்தி”யை வழங்கும் என மக்ரோன் வாக்குறுதியளித்தார்.
அக்டோபர் 1 அன்று அமைதியான வாக்காளர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு கொடூரமான போலிஸ் தாக்குதலில் 800 பேருக்கும் அதிகமாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மாட்ரிட் கட்டலான் தேசியவாத வலைத் தளங்களை மூடியது, கட்டலான் தேசியவாதக் கட்சிகளை தடைசெய்வது குறித்து விவாதித்தது, அத்துடன் இரண்டு கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகளை -ஜோர்டி சான்சேஸ் மற்றும் ஜோர்டி குவிக்ஸார்ட்- கைது செய்தது, அது பார்சிலோனாவில் நூறாயிரக்கணக்கானோரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது.
அரசியல்சட்டத்தின் 116வது பிரிவை அமல்படுத்துவது குறித்தும் மாட்ரிட் விவாதித்துக் கொண்டிருக்கிறது, இது ஸ்பெயின் எங்கிலும் ஒரு அவசரகாலநிலையை உருவாக்கி, நீதி விசாரணைக்கு, வேலைநிறுத்தம் செய்வதற்கு, அந்தரங்கத்திற்கு மற்றும் நடமாட்ட சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு இருக்கின்ற அரசியல்சட்ட உரிமைகளை நிறுத்திவைக்கும்.
பேர்லின் மற்றும் பாரிஸில் இருந்தான ஆதரவுடன், ஆளும் மக்கள் கட்சி அரசாங்கமானது (PP) ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் குடிமக்கள் கட்சியின் ஒத்துழைப்புடன் சர்வாதிகாரத்தை நோக்கிய திருப்பத்தை அமல்படுத்துவதற்கு வேலைசெய்து கொண்டிருக்கின்ற அதேநேரத்தில், பிராங்கோ ஆட்சியிலான தனது சொந்த வேர்களை தேடிக் கொண்டிருக்கிறது. ஸ்பானிய தேசிய ஐக்கியத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு -இதில் பிராங்கோவின் ஃபலான்ஞ் (Falange) அமைப்பு பங்குபெற்றது- அழைப்பு விடுத்திருந்த பின்னர், ரஹோய் அரசாங்கத்தின் ஒரு செய்தித்தொடர்பாளர், புய்க்டெமொன்ட்டின் கதை 1930கள் சகாப்தத்து கட்டலான் தலைவர் லூயிஸ் கொம்பானிஸ் (Lluís Companys) போல முடியக் கூடும் -1940 இல் பிராங்கோ ஆட்சியால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்- என பெருமைபேசி புய்க்டெமொன்ட்டுக்கு கொலை மிரட்டல் விடுப்பதைப் போல பேசினார்.
மக்களுக்கு எதிராய் எங்கெங்கிலும் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற போலிஸ்-அரசு நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு கட்டலான் நெருக்கடியை, மாட்ரிட்டும் ஐரோப்பிய ஒன்றியமும் பற்றிக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும், அத்தனை வண்ணமான அரசாங்கங்களும் இணையத் தணிக்கைக்கு கோரிக்கை வைக்கின்றன, அதேநேரத்தில் பாரிய மின்னணு வேவு நடவடிக்கைகளையும் உள்நாட்டு ஒடுக்குமுறைக்கு இராணுவத்தை அல்லது இராணுவமயமாக்கப்பட்ட போலிஸ் அலகுகளை நிலைநிறுத்துவதையும் முன்னெடுக்கின்றன.
இத்தகைய வழிமுறைகள், அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்பில் வாக்களிப்பதற்காக கட்டலான் மக்களின் பரந்த அடுக்குகள் அமைதியாக அணிதிரண்டதைப் போன்ற வெகுஜன அரசியல் எதிர்ப்புக்கு எதிராகத் திரும்ப முடியும், திரும்பும் என்பதற்கான தெளிவான அறிகுறிகளே ஸ்பெயினிலான நிகழ்வுகள் ஆகும்.
ஸ்பெயின் நிகழ்வுகள், சர்வதேச அளவிலும் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாளித்துவ அமைப்புமுறையின் அதீத நெருக்கடியில் தான் வேர்களைக் கொண்டுள்ளன. கால் நூற்றாண்டு காலமாக அதிகரிக்கப்பட்டு வரும் ஏகாதிபத்தியப் போர், பொருளாதார நெருக்கடி மற்றும் முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றின் விளைபொருட்களே இவை. ட்ரம்ப் வட கொரியாவை இல்லாதொழிக்க அச்சுறுத்தும் நிலையில், அமெரிக்க தலைமையிலான முடிவற்ற போர்கள் ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதல்களாக தீவிரப்பட்டு, உலகப் போராக மாறுவதற்கு அச்சுறுத்துவதோடு, “ஐரோப்பிய ஒன்றிய இராணுவம்” (EU army) மூலம் ஒரு சுயாதீனமான இராணுவத் தொகுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தை எப்படியாயினும் அபிவிருத்தி செய்து விடுவதற்கு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மேலாதிக்கப் பிரிவுகளை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
இராணுவ கட்டமைப்பின் பிரதான இலக்கு தொழிலாள வர்க்கம் ஆகும். 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள், அதிகரித்துச் செல்லும் சமூக சமத்துவமின்மை மற்றும் ஐரோப்பாவெங்கிலும் பாரிய அளவில் பத்து மில்லியன் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பில்லாத நிலை ஆகியவை சமூகக் கோபத்தின் வெடிப்பான நிலைகளுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. ஒரு “பெரிய அளவிலான எழுச்சி” வந்தால் ஐரோப்பிய இளைஞர்களில் பாதிக்கும் மேலானோர் -கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஹங்கேரி, பல்கேரியா மற்றும் ரோமானியாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர்- அதில் இணைவார்கள் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் “தலைமுறை என்ன” (Generation What) கருத்துக்கணிப்பு இந்த ஆண்டில் கண்டறிந்தது.
இந்த உள்ளடக்கத்தில், ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இராணுவ-அரசியல் நிலைப்பாட்டுக்கான ஒரு சகிக்கமுடியாத அச்சுறுத்தலாகவே கட்டலான் கருத்துவாக்கெடுப்பை காண்பதை ஐரோப்பாவின் முன்னணி அரசியல்வாதிகள் தெளிவாக்கிக் கொண்டிருக்கின்றனர். கட்டலான் பிரிவினையானது ஒரு “டொமினோ விளைவு”க்கும் “15 வருடங்களில் 98 அரசுகளைக் கொண்டதாக இருக்கும் ஒரு ஐரோப்பிய ஒன்றியத்துக்கும்” இட்டுச் செல்லக் கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரான ஜோன் குளோட் ஜூங்கர் எச்சரித்ததன் பின்னர், ஜேர்மன் பசுமைக் கட்சி அரசியல்வாதியான ஜோஷ்கா பிஷ்சர் “உள்ளிருந்து ஐரோப்பா மீது தாக்குதல் நடத்துபவர்கள்” என்று தலைப்பிட்டதொரு பத்தியில் இதே விடயத்திற்குத் திரும்பினார்.
கட்டலான் பிரிவினைவாதமானது, மொத்த அளவில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமமாக அல்லது அதனை விஞ்சியதாக இருக்கக் கூடிய அமெரிக்கா மற்றும் ஆசியாவில் இருக்கக் கூடிய உலகளாவிய போட்டியாளர்களை சவால் செய்வதில் இருந்து ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை தடுப்பதாகவே தான் கருதியதாய் ஃபிஷ்சர் வலியுறுத்தினார். அவர் எழுதினார், “ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இருபத்தியோராம் நூற்றாண்டில் பிரிவினைவாதம் மற்றும் ஒற்றுமைக்குலைவின் ஒரு கட்டத்திற்குள் நுழைவதென்பது வரலாற்றுரீதியாக அபத்தமானதாக இருக்கும். மற்ற உலகளாவிய போட்டியாளர்களின் அளவை எடுத்துக் கொண்டால் -சீனா, இந்தியா, அமெரிக்கா எதுவும் சளைத்ததல்ல- அது ஐரோப்பாவின் சமூக உறவுகளிடையேயான வலிமையையும் ஐரோப்பாவின் ஆழமான ஒருங்கிணைப்பையும் இன்னும் அதிக அவசியமாக்குவதாகவே இருக்கிறது.”
தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டாக வேண்டும்: தொழிலாள வர்க்கத்தினைத் தூங்கவைக்கத் தாலாட்டுப் பாடுகின்ற ஒரு முயற்சியில் பொடேமோஸ் கட்சி கூறுவதைப் போல, ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு PP அரசாங்கத்தை ஊக்குவிக்க உதவுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் தலையிடப் போவதில்லை. ஐரோப்பிய ஒன்றியமானது, தனது ஏகாதிபத்திய கணக்குகளின் அடிப்படையில், பிராங்கோவாதத்திற்கு மறுஅங்கீகாரம் அளிப்பதற்கும் சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்புவதற்குமான ரஹோயின் உந்துதலின் பின்னால் அணிவகுத்து நின்று கொண்டிருக்கிறது.
இது, கட்டலோனியாவிலும், மீதி ஸ்பெயினிலும், ஐரோப்பாவெங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் இருக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் முறை ஆகும். இவை எங்கெங்கிலும் எதேச்சாதிகார ஆட்சி, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆழமான, வரலாற்று ரீதியாக வேரூன்றிய எதிர்ப்பு நிலவுகிறது. ஆயினும், இந்த புறநிலைரீதியன எதிர்ப்பானது சோசலிசத்துக்கான, ஐரோப்பாவெங்கிலுமான நாடுகளில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்துக்கு வருவதற்கான மற்றும் ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு நனவான, ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தில் அணிதிரட்டப்பட்டாக வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் என்பதே இன்றியமையாத கேள்வியாகும். புய்க்டெமொன்ட்டைச் சுற்றிய கட்டலான் முதலாளித்துவ வர்க்கத்தின் சுதந்திர-ஆதரவு கன்னையானது ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டிற்கு முனைந்து கொண்டிருக்கிறது என்பதோடு, தொழிலாளர்களுக்கு குரோதமானதாகவும் இருக்கிறது என்பதில் தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டாக வேண்டும். ஒரு சோசலிச இயக்கமானது ஸ்பானிய மற்றும் கட்டலான் முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளில் இருந்தும் சுயாதீனமாகக் கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும்.
ஆயினும், மாட்ரிட் தயாரித்துக் கொண்டிருக்கும் கட்டலோனியா மீதான இரத்தக்களரியான ஒடுக்குமுறையையும், தொழிலாள வர்க்கம் திட்டவட்டமாக எதிர்த்தாக வேண்டும். ஆயுதவலிமையைக் கொண்டு ஸ்பெயினின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற ரஹோய் செய்யும் முயற்சிக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமே ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கில் அணிதிரட்டப்படுகின்ற ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் கட்டியெழுப்பப்பட முடியும்.
ஐரோப்பாவில் வர்க்க-நனவான தொழிலாளர்களின் வழிகாட்டி கோஷங்கள் என்னவாக இருக்கவேண்டும் என்றால்: ஸ்பெயினில் சர்வாதிகாரமும் இராணுவ ஆட்சியும் வேண்டாம்! ஸ்பானியத் துருப்புகள் கட்டலோனியாவை விட்டு வெளியேறு! ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக போராடு!