Print Version|Feedback
Madrid rejects Puigdemont’s call for talks in Catalan referendum crisis
கட்டலான் கருத்துவாக்கெடுப்பு நெருக்கடியில் பேச்சுவார்த்தைக்கான புய்க்டெமொன்ட்டின் அழைப்பை மாட்ரிட் நிராகரிக்கிறது
By Alex Lantier and Alejandro López
17 October 2017
அக்டோபர் 1 கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்பில் “சுதந்திரம் வேண்டும்” என்ற வாக்களிப்பு கிட்டியிருப்பதன் பின்னர் மாட்ரிட் உடன் இரண்டுமாத கால பேச்சுவார்த்தை காலத்திற்கு கட்டலான் முதல்வரான கார்லெஸ் புய்க்டெமொன்ட் விடுத்திருந்த அழைப்பை திங்களன்று ஸ்பெயினின் மக்கள் கட்சி (PP) அரசாங்கம் நிராகரித்தது. ஸ்பானிய இராணுவப் படைகளும் ஆயிரக்கணக்கான போலிசும் நடவடிக்கைக்குத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ஸ்பெயின் கட்டலோனியாவில் இராணுவச் சட்டம் மற்றும் ஒரு இராணுவ ஒடுக்குமுறையின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது.
சுதந்திரத்தைப் பிரகடனம் செய்வதற்கான உரிமையை கட்டலோனியா வென்றிருப்பதாக அக்டோபர் 10 அன்று புய்க்டெமொன்ட் அறிவித்திருந்ததன் பின்னர், அவர் உண்மையில் கட்டலான் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்திருந்தாரா என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஸ்பெயினின் பிரதமர் மரியானோ ரஹோய் அக்டோபர் 16 வரை கெடு விதித்திருந்தார். ஒரு மோதலைத் தவிர்க்கும் வெளிப்பட்ட முயற்சியில், புய்க்டெமொன்ட் ஆம் அல்லது இல்லை என்பதான எந்த பதிலையும் வழங்காத நிலையில், PP திங்களன்று இந்த மோதலை தீவிரப்படுத்தியது. கட்டலானின் சுயாட்சியை நிறுத்திவைப்பதற்கான தனது மிரட்டலை மீண்டும் வலியுறுத்தி, அது கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகளை சிறையிலடைத்ததோடு அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்பை ரஷ்ய-ஆதரவுடனான ஆத்திரமூட்டலாகக் கூறிக் கண்டனம் செய்தது.
ஒரு கடிதத்தில் புய்க்டெமொன்ட் தெரிவித்தார்: “அக்டோபர் 10 அன்று, ஏராளமான சர்வதேச, ஸ்பானிய மற்றும் கட்டலான் ஸ்தாபனங்கள் மற்றும் மக்களிடம் இருந்தான வேண்டுகோள்களை ஒட்டி, பேச்சுவார்த்தைக்கு நேர்மையாக ஒரு யோசனையை நான் முன்வைத்தேன் என்றால், அது பலவீனத்தின் வெளிப்பாடாக அல்ல, மாறாக, பல வருடங்களாக முறிவு கண்டிருக்கக் கூடிய ஸ்பானிய அரசுக்கும் கட்டலோனியாவுக்கும் இடையிலான உறவுக்கு ஒரு தீர்வு காண்பதற்கான ஒரு நேர்மையான பதிலிறுப்பாகவே ஆகும்.”
இரண்டு மாத கால பேச்சுவார்த்தைக் காலத்திற்கு அழைத்த அவர் கூறினார்: “எங்களது அத்தனை வலிமைகளுடனும், பேச்சுவார்த்தைக்கான ஒரு வழியைக் காண்பதே எனது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கிறது.” “அக்டோபர் 1 அன்று அமைதியாயிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான போலிஸ் வன்முறை”யை விமர்சித்த அவர் “கட்டலான் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் மீதான ஒடுக்குமுறையை திரும்பப் பெறும்படி” மாட்ரிட்டைக் கேட்டுக்கொண்டார்.
புய்க்டெமொன்ட் ஸ்பானிய அரசியல்சட்டத்திற்கு கீழ்ப்படிய எவ்வாறு நோக்கம் கொண்டிருக்கிறார் என்பதைக் கூறுவதற்கு, அவருக்கு அக்டோபர் 19 வரை இரண்டாவதாய் ஒரு கெடு அளித்திருக்கும் PP அரசாங்கம், சரமாரியான மிரட்டல்களைக் கொண்டு பதிலிறுத்தது. ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு முன்கண்டிராத தாக்குதலில், ஸ்பானிய நீதிமன்றங்கள் கட்டலான் தேசிய சட்டமன்றத்தின் தலைவரான ஜோர்டி சான்ஞ்சேஸ், மற்றும் Omnium Cultural ஸ்தாபனத்தின் தலைமையில் இருக்கும் ஜோர்டி குய்ஸார்ட் ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையிலடைத்துள்ளன. இரண்டு தேசியவாத அரசியல்வாதிகளுமே அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்புக்கு முந்தைய ஸ்பானிய போலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பை ஊக்குவித்ததாக கூறி, தேசத்துரோக குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளனர்.
துணைப்பிரதமரான Soraya Sáenz de Santamaría புய்க்டெமொன்ட் ஐ ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேலி செய்தார்: “அவர் சுதந்திரத்தை அறிவித்தாரா இல்லையா என்பதற்கு ஆம் இல்லை என்பதைக் கூறுவது அத்தனை கடினமான ஒன்று அல்லவே”.
கட்டலானின் பிராந்திய சுயாட்சியை நிறுத்திவைக்கின்ற ஸ்பானிய அரசியல்சட்டத்தின் 155வது பிரிவை அமல்படுத்துகின்ற தனது மிரட்டலை ரஹோய் தனிப்பட்ட முறையில் மீண்டும் வலியுறுத்தினார், “அரசியல்சட்ட சாதனத்தைக் கொண்டுவருவதற்கு பொறுப்பானவராக புய்க்டெமொன்ட் ஒரே ஒருவர் தான் இருப்பார்” என்று அவர் அறிவித்தார். “நிச்சயமற்ற இந்த நிலையை நீட்டிச் செல்வதானது பொது அமைதியைக் குலைக்கவும் கட்டலோனியாவுக்கு ஒரு தீவிரப்பட்ட மற்றும் ஒட்டாண்டியாக்குகின்ற திட்டத்தை திணிக்கவும் முயலுகின்றவர்களுக்குத் தான் சாதகமாகும்” என்று ரஹோய் மேலும் சேர்த்துக் கொண்டார்.
பிரிவு 155 ஆனது ஒரு முற்றுகைநிலையை அறிவிக்கவும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைக்கவும் மற்றும் இராணுவ ஆட்சியை நிலைநிறுத்தவும் பிரிவு 116 உடன் சேர்த்து அமல்படுத்தப்படக் கூடும். பாதுகாப்பு அமைச்சரான María Dolores de Cospedal கிரோனா அருகில் உள்ள Sant Climent de Sescebes மற்றும் பார்சிலோனா அருகே உள்ள புரூச் அகிய இடங்களில் இருக்கும் Arapiles படைப்பிரிவு மையங்களுக்கு நாளை விஜயம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். கட்டலான் மக்களுக்கு எதிராக மாட்ரிட் இராணுவ நடவடிக்கைகளைத் தொடுக்கும்பட்சத்தில் அது அணிதிரட்டக் கூடிய இராணுவப் படைகளாக சென்ற வாரத்தில் El País இவற்றை அடையாளம் கண்டது குறிப்பிடத்தக்கது.
இன்னுமொரு அசாதாரணமான மற்றும் அபாயகரமான ஆத்திரமூட்டலாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் PP இன் பேச்சாளராக இருக்கும் எஸ்ரெபான் பொன்ஸ், புய்க்டெமொன்ட் ஐ ரஷ்யாவின் ஒரு கருவி என்று கண்டனம் செய்தார். “தேசியவாத-ஜனரஞ்சகவாத பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்” என்று சக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அங்கத்தவர்களைக் கேட்டுக் கொண்ட அவர் ”கார்லெஸ் புய்க்டெமொன்ட் மற்றும் பிரிவினைவாத இயக்கத்திற்கு ரஷ்ய வலைப்பின்னல்கள் ஆதரவளித்ததற்கான ஆதாரத்தை” அடுத்த வாரத்தில் அவர்களுக்கு வழங்கவும் வாக்குறுதியளித்தார்.
கட்டலான் நெருக்கடியில் ரஷ்யா சம்பந்தப்பட்டுள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்னதாக பொலிட்டிகோ மற்றும் வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களில் கூறப்பட்டு, El País இல் எதிரொலிக்கப்பட்டிருந்தன. ஆயினும், மாட்ரிட் இப்போது வரை அதன் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் இந்தக் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக மறுத்தே வந்திருந்தது.
சென்ற வாரத்தில் ரஷ்யா டுடே இடம் கருத்து கூறிய சமயத்தில், ரஷ்யாவுக்கான ஸ்பெயினின் தூதரான இக்னசியோ இபனேஸ் ரூபியோ கூறினார்: “அதற்கு நேரெதிராய், ஸ்பெயின் ரஷ்யாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வழிமொழிகிறது. இது எங்கள் நாட்டின் ஒரு உள்விவகாரம் என்பதை மிக ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது.” ஸ்பெயினும் ரஷ்யாவும் “மிகச்சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளன.... ஆகவே கட்டலோனியாவிலான நெருக்கடியில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம்.”
ஆனால், இப்போது, மாஸ்கோவுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் வழங்காமல், PP தனது நிலைப்பாட்டில் 180 பாகை திரும்பி விட்டிருக்கிறது. எஸ்ரெபான் பொன்ஸ், ரஷ்யாவுக்கு எதிராகக் கூறுகின்ற ஆத்திரமூட்டுகின்ற குற்றச்சாட்டுகள் குறிப்பிட்டுச் சொல்ல இயலாத ஆனால் மிக வெடிப்பான சாத்தியம் கொண்ட தாக்கங்களைக் கொண்டிருக்கின்றன. தனது பிராந்தியத்தில் பிரிவினை ஏற்படுத்துவதற்காக கட்டலான் பிரிவினைவாதிகளுடன் மாஸ்கோ கூட்டுச் சேர்ந்துள்ளதாக PP உண்மையாக நம்புகின்றதானால், இதனை அது ஸ்பெயினுக்கு எதிரான ரஷ்யாவின் மூர்க்கத்தன நடவடிக்கையாகக் காட்டி, பொதுவான தற்காப்புக்கான நேட்டோவின் ஷரத்துக்களை முன்வைத்து, ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் கூட்டு இராணுவ நடவடிக்கைக்குக் கோர முடியும்.
எல்லாவற்றுக்கும் மேல், இந்தக் குற்றச்சாட்டுகள், கட்டலான் தேசியவாதிகளுக்கு எதிராக ஸ்பானிய மன்னர் ஆறாம் பிலிப்பினால் அவரது அக்டோபர் 3 உரையிலும், மற்றும் ரஹோயினாலும் கூறப்பட்டு வருகின்ற தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை மேலும் தீவிரப்படுத்தும். இது கட்டலோனியாவில் இருக்கும் ஸ்பானியத் துருப்புகளுக்கு இரத்தக்களரிக்கான இன்னுமொரு மேலதிக போலி-சட்டபூர்வ காரணத்தைக் கொடுக்கும் — 1930களில் கட்டலான் பிராந்தியத் தலைவராக இருந்து 1940 இல் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஸ்பானிய பாசிச ஆட்சியால் சுட்டுக் கொல்லப்பட்டவரான லூலிஸ் கொம்பானிஸ் (Lluís Companys) உடன் புய்க்டெமொன்ட் இன் தலைவிதியை ஒப்பிட்டு PP அரசாங்கம் அச்சுறுத்தி வந்திருக்கிறது.
தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டாக வேண்டும்: 1936-1939 உள்நாட்டுப் போர் மற்றும் 1978 வரை அதிகாரத்தை வைத்திருந்த பிராங்கோவாத சர்வாதிகாரத்தின் திணிப்பு ஆகியவற்றுக்குப் பின்னால் ஸ்பெயின் கண்டிராத வகையான ஒரு இராணுவ ஒடுக்குமுறையின் உண்மையான அபாயம் அங்கே இருந்து கொண்டிருக்கிறது. ரஹோயுடன் ஒத்துழைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இத்தகைய ஒரு அரசியல் குற்றத்தை நிறுத்துவதற்கு தலையீடு செய்யப் போவதில்லை. உண்மையில் ரஷ்யாவுக்கு எதிரான பொன்ஸின் குற்றச்சாட்டுக்கள், பார்சிலோனாவில் ஒரு ஒடுக்குமுறைக்கும் ஒரு இராணுவ ஆட்சிக்கு திரும்புவதற்கும் ஆதரவளிப்பதற்கான ஒரு சாக்கை அமெரிக்க ஊடகங்களுக்கு வழங்குவதற்கான ஒரு அரசியல் நடவடிக்கையாக இருப்பதற்கான அத்தனை அறிகுறிகளும் தென்படுகின்றன.
ஒட்டுமொத்த ஆளும் ஸ்தாபகத்தில் இருந்து சுயாதீனப்பட்டும் புரட்சிகரமாக அதற்கு எதிராகவும் அணிதிரட்டப்படுகின்ற தொழிலாள வர்க்கம் மட்டுமே பாரிய ஒடுக்குமுறையை தடுத்துநிறுத்தக்கூடிய ஒரேயொரு சக்தியாகும். மாட்ரிட்டின் உடனடியான இலக்கு கட்டலோனியாவாக இருந்தாலும், 1930களுக்குப் பின் கண்டிராத வகையிலான சர்வதேச முதலாளித்துவ முறிவு நிலைமைகளின் கீழ், விரிந்த வகையில் ஒட்டுமொத்த ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கமும் இலக்கு வைக்கப்படுகிறது.
ஒரு தசாப்த கால ஆழமான சிக்கன நடவடிக்கைகளுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பின்னர் வர்க்கப் பதட்டங்கள் வெடிப்பான மட்டங்களை எட்டிக் கொண்டிருக்கின்றன. பத்து மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பற்று இருக்கும் நிலையில், ஐரோப்பாவெங்கிலுமான நாடுகளில் இருக்கும் பெரும்பான்மையான இளைஞர்கள், நிலவும் ஒழுங்கிற்கு எதிரான ஒரு வெகுஜன எழுச்சியை தாங்கள் ஆதரிப்போம் என்று இந்த ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமுறை என்ன (Generation What) என்ற கருத்துக்கணிப்பில் தெரிவித்தனர். பிரான்சின் அவசரகாலநிலை மற்றும் ஸ்பெயினின் இராணுவ ஆட்சியை நோக்கிய திருப்பம் போன்ற நடவடிக்கைகள், ஐரோப்பாவெங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் புரட்சிகரரீதியாக அணிதிரட்டப்படும் அபாயத்திற்கு எதிராக, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற எதேச்சாதிகார ஆட்சியை நோக்கிய வலிந்த திருப்பத்தின் ஒரு பகுதியே ஆகும்.
ஒடுக்குமுறைக்கும் இராணுவ ஆட்சிக்குமான ரஹோய் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்கள் ஆளும் உயரடுக்கில் எந்த எதிர்ப்பையும் காணப் போவதில்லை என்பதையே ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் பொடேமோஸ் இன் பதிலிறுப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. PSOE மற்றும் PP “இடையிலான உறவு பிரிவினைவாத சவாலுக்கு எதிரான எங்களது கூட்டுப் பதிலில், நெகிழ்வானதாகவும் சீரானதாகவும் உள்ளது” என்று PSOE இன் பொதுச் செயலரான பெட்ரோ சான்சஸ் El Diario விடம் தெரிவித்தார்.
மேலும் மேலும் அதிகமாய் PP இன் ஒரு அரசியல் தொங்குதசையாக தன்னை மாற்றி வருகின்ற PSOE, ரஹோயின் கட்சியை விடவும் அதிகமாக, கட்டலோனியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவான இன்னும் அப்பட்டமான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறது. PSOE இன் செய்தித்தொடர்பாளரான Oscar Puente அறிவித்தார்: “திரு. புய்க்டெமொன்ட்டின் பதிலின்மை முற்றிலும் ஏற்கமுடியாததாகும்...இந்த மனோபாவத்துடன், திரு புய்க்டெமொன்ட் பிரிவு 155 ஐ அமல்படுத்துவது அல்லாத வேறேதேனும் வழியை விட்டுவைப்பாரா என்பது எங்களுக்கு சந்தேகமாகவே இருக்கிறது.”
பிரிவு 155 ஐ கொண்டுவருவதில் PSOE மற்றும் PP நெருக்கமாக ஒன்றிணைந்து வேலைசெய்து வருவதை வெளிப்படுத்துகின்ற விதமாக, அது “உடன்பட்ட வகையிலும் பேசி முடிக்கப்பட்ட” வழியிலும் கொண்டுவரப்படும் என்பதாக Puente மேலும் சேர்த்துக் கொண்டார்.
புய்க்டெமொன்ட்டின் அறிக்கை மீதான PSOE-PP இன் நிலைப்பாட்டை பொடெமோஸ் (Podemos) இன்று விமர்சித்துள்ளது என்றாலும், அது ஒரு ஒடுக்குமுறைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் என்பதையும் தொடர்ந்து சமிக்கையளித்து வருகிறது. கட்டலான் சுதந்திரம் குறித்த ஒருதரப்பான அறிவிப்பு ஏதுமில்லை என்பதை புய்க்டெமொன்ட் ”மறுபடியும் தெளிவாக்கிவிட்டிருக்கிறார்” என்று பொடேமாஸ் அமைப்புச் செயலரான பப்லோ எச்செனிக்கே தெரிவித்தார். பார்சிலோனாவுடன் மோதலைத் தீவிரப்படுத்துகின்ற வகையில் PSOE மற்றும் PPக்கும் இடையில் “முன்கூட்டிய ஒரு முடிவு எடுக்கப்பட்டு விட்டிருந்தது” என்று அவர் புகார் தெரிவித்தார்.
ஆயினும், 155வது பிரிவை அமலாக்குவது மற்றும் துப்பாக்கி முனையில் கட்டலோனியாவில் திடீர் தேர்தலை நடத்துவது ஆகியவற்றின் மூலம் இந்த நெருக்கடி தீர்க்கப்படுகின்ற சாத்தியத்தை எச்செனிக்கே திறந்தே வைத்தார். இந்த விளைவு ”கெட்டதுமில்லை நல்லதுமில்லை” என்று கூறிய அவர், புதிய தேர்தல் “ரஹோய் மற்றும் புய்க்டெமொன்ட்டைக் காட்டிலும் சிறந்த பேசித்தீர்க்கும் கூட்டாளிகளை” உருவாக்கக் கூடும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.