Print Version|Feedback
As crackdown looms in Catalonia, Spain’s Popular Party calls protest in Barcelona
கட்டலோனியாவில் ஒடுக்குமுறை விசுவரூபம் எடுக்கும் நிலையில், ஸ்பெயினின் மக்கள் கட்சி பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது
By Alejandro López
9 August 2018
பிராந்திய கட்டலான் அரசாங்கம் பிரிவினை குறித்த ஒரு சர்வஜனவாக்கெடுப்பை நடத்திய ஒரு வாரத்திற்குப் பின்னரும், பிரிவினைவாத சக்திகள் செவ்வாய்கிழமையன்று ஒருதரப்பாக சுதந்திரப் பிரகடனம் செய்யும் சாத்தியத்திற்கு முகம்கொடுத்திருக்கும் நிலையிலும், நேற்று வலது-சாரி அரசியல் சக்திகள் பார்சிலோனாவில் அழைப்பு விடுத்திருந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் நூறாயிரக்கணக்கானோர் அணிவகுத்தனர்.
கட்டலோனியாவில் சென்ற வார இறுதியில் நடந்த சுதந்திரம் மீதான சர்வஜனவாக்கெடுப்பை வன்முறையாக ஒடுக்க முயற்சி செய்திருந்த மாட்ரிட்டின் ஆளும் உயரடுக்கு பிராந்தியத்தில் ஒரு ஒடுக்குமுறையையும் மற்றும் இராணுவ ஆட்சியையும் நோக்கி துரிதமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
“போதும், மீண்டும் நல்ல புத்தியை மீட்டெடுப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் 350,000 முதல் 400,000 வரையானோர் பார்சிலோனா வீதிகளில் பேரணி நடத்தினர். பலரும் ஸ்பானிய கொடிகளையும், ஸ்பெயினின் அரச கொடியையும், ஐரோப்பிய கொடியையும் அத்துடன் சென்யரஸ் (கட்டலோனியாவில் பிரிவினை-கோராதவர்களின்) கொடியையும் அசைத்தபடி சென்றனர்.
கட்டலான் சிவில் சொசைட்டி அமைப்பினால் (Societat Civil Catalana) அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆளும் மக்கள் கட்சி (PP) மற்றும் குடிமக்கள் கட்சி உள்ளிட்ட வலது-சாரி கட்சிகளின் ஆதரவும், சோசலிஸ்ட் கட்சியின் பாதி-உத்தியோகப்பூர்வ வழிமொழிவும் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் பாசிச சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஃபலாஞ்ச் (Falange), கட்டலோனியாவுக்கான மேடை (Platform for Catalonia), ஒரு குடிமை கட்டலோனியாவுக்கான மேடை (Platform for a Civic Catalonia), Somatemps, VOX, மற்றும் பிற அதி-வலது குழுக்களும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டன.
Societat Civil Catalana க்கு ஒரு சில ஆயிரம் அங்கத்தவர்கள் தான் இருக்கிறார்கள் என்றாலும், அது பிரிவினைவாத கட்டலான் தேசிய சட்டமன்றத்திற்கான ஒரு பிரிவினைவாத-எதிர்ப்பு மாற்றினைக் கட்டியமைக்க விரும்புகிறது. அதி-வலதுகளுடன் இந்த அமைப்பு கொண்டிருக்கும் தொடர்புகள் நன்கறிந்தவையாகும். 2014 இல் நடந்த அதன் ஸ்தாபக காங்கிரசுக்கு அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களில் சாண்டியகோ அபாஸ்கல் (VOX), பிரான்சின் தேசிய முன்னணியின் ஒரு பிரதிநிதிக் குழு, பிரான்சிஸ்கோ பிராங்கோ தேசிய அறக்கட்டளையின் ஒரு பிரதிநிதிகள் குழு, மற்றும் கிரீசின் கோல்டன் டோன் கட்சியின் சகோதரக் கட்சியான நவ-நாஜி சமூக குடியரசு இயக்கம் ஆகியவற்றில் இருந்து இடம்பெற்றிருந்தனர்.
”[கட்டலான் பிராந்திய முதல்வர் கார்லஸ்] புயுக்டெமொன்ட் ஜெயிலுக்குப் போகட்டும்”, “நான் ஒரு ஸ்பானிஷ்”,”ஸ்பெயின் வாழ்க, கட்டலோனியா வாழ்க, சிவில் கார்ட்டுகள் வாழ்க” மற்றும் “பேச்சுவார்த்தையா? கிடையாது. ஜெயிலுக்குப் போ” போன்றவை பேரணியின் பிரதான முழக்கங்களாய் இருந்தன. பேரணி Via Laietana இல் உள்ள தேசிய போலிஸ் தலைமையகத்தின் வழியாகச் சென்றபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளைத் தட்டியபடி “நீங்கள் தனியாயில்லை” என்று முழக்கமிட்டனர். அதேசமயத்தில் பிராந்திய கட்டலான் போலிசான Mossos d'Esquadra ஐ “துரோகிகள்” என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
ஆயிரக்கணக்கிலான வலது-சாரி மற்றும் அதி-வலது சாரி அனுதாபிகள் — இவர்களில் பலரும் இரயில்கள், கார்கள் மற்றும் கட்டலான் சிவில் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த நூற்றுக்கணக்கான பஸ்கள் மூலமாக வந்திருந்தனர்—மற்றும் பார்சிலோனாவின் வசதியான பகுதிகளைச் சேர்ந்த உயர்-நடுத்தர வர்க்க அடுக்குகள் மட்டுமன்றி, பார்சிலோனாவின் “சிவப்புப் பகுதி”யில் இருந்தான தொழிலாள வர்க்கத்தின் அடுக்குகளையும் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஈர்த்திருந்தன.
El Confidencial குறிப்பிட்டது: ”இன்று பார்சிலோனாவின் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் இருந்தும், Lleida மற்றும் Tarragona நகர்ப்புறங்களில் இருந்தும், அத்துடன் Sarrià போன்ற ‘பிரபுக்கள்” நிரம்பிய அண்மைப்பகுதிகளில் இருந்தான குடும்பங்களுமாய் ஆயிரக்கணக்கான கட்டலானியர்கள் வந்திருக்கின்றனர். Santa Coloma de Gramenet போன்ற தொழிலாள வர்க்கப் பகுதிகளில் இருந்து வந்த பொதுப் போக்குவரத்து வாகனங்கள் கொடிகளுடன் வந்த மக்களால் நிரம்பி வழிந்தன.
Lleidaவில் இருந்து வந்த ஒரு தொழிலாளி El Confidencial இடம் கூறினார்: “[பிரதமர்] ரஹோயை பாதுகாக்க வந்தது போல் தெரிவதை நான் விரும்பவில்லை என்பதால் முடிவெடுக்க எனக்கு சிரமமாகவே இருந்தது....ஆனாலும் என்னால் வீட்டில் உட்கார்ந்திருக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் செவ்வாய்கிழமை சுதந்திரத்தைப் பிரகடனம் செய்ய இருக்கிறார்கள்.”
பார்சிலோனாவின் சிவப்புப் பகுதியில் PPக்கு ஆதரவு மிகவும் குறைவே, அத்துடன் பிரிவினைவாத-எதிர்ப்பு குடிமக்கள் கட்சியின் வளர்ச்சி என்பது கடந்த ஆண்டுகளில் சோசலிஸ்ட் கட்சிக்கான ஆதரவு 2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்வந்த ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்து சென்றதின் மூலம் கிட்டியதாகும். மிக சமீபத்திய தேர்தல்களில், இந்தப் பகுதியின் கட்டுப்பாட்டை பொடெமோஸ் கையிலெடுத்தது.
1939 முதல் 1978 வரையில் பிராங்கோவின் கொடூரமான பாசிச சர்வாதிகாரத்தின் பாதிப்பைக் கண்டிருந்த ஒரு நாட்டில் அதி-வலது அரசியலுக்கும் பாசிசத்துக்கும் பரந்த எதிர்ப்பு இருக்கிறது. பாசிசத்திற்கு எதிரான பரவலான மக்களின் வெறுப்பைப் பிரதிபலிக்கின்ற விதமாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் “அரசியல்சட்டத்திற்கு முந்தைய கொடிகளை” (அதாவது பிராங்கோயிசக் கொடிகள்) கொண்டுவர வேண்டாம் என்று ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர். கட்டலோனியாவில் உள்ள வலது-சாரி குடிமக்கள் கட்சியின் தலைவரான Inés Arrimadas, பாசிசக் கொடிகளை “ஊடகங்கள் முன்னால்” காட்ட வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொள்கின்ற ஒரு சர்ச்சையான ட்வீட் செய்தார்.
ஆயினும், பிராந்தியத்தில் பிரிவினைவாதத்திற்கும் பரவாலான எதிர்ப்பு இருக்கிறது, கட்டலான் நிதியாதரவுடனான கருத்து ஆய்வுகள் மையம் (CEO) நடத்திய கடைசி கருத்துக்கணிப்பில், “கட்டலோனியா ஒரு தனி சுதந்திர அரசாக மாற வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்ற கேள்விக்கு 49.4 சதவீத கட்டலானியர்கள் “இல்லை” என்று பதிலளித்தனர், 41.1 சதவீதம் பேர் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக பதிலளித்தனர்.
குடும்ப வருமானம் 900 யூரோவுக்குக் குறைவாக உள்ள கட்டலானியர்களில் 32 சதவீதம் பேர் மட்டுமே சுதந்திரத்தை விரும்புகின்றனர் என்பதையும் அதே கருத்துக்கணிப்பு அமைப்பு காட்டியது. மாதத்திற்கு 1,800 யூரோவுக்கு அதிகமாக —மாதம் 1,400 யூரோ என்ற பிராந்திய சராசரிக்கு இது நன்கு அதிகம்— சம்பாதிக்கும் கூடுதல் நடுத்தர-வர்க்க அடுக்குகளில் மட்டுமே பிரிவினைவாதத்திற்கு ஆதரவு 40 சதவீதத்தைத் தாண்டுகிறது. மாதத்திற்கு 4,000 யூரோவுக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் மத்தியில், 54 சதவீதம் பேர் ஸ்பெயினில் இருந்தான சுதந்திரத்தை விரும்புகின்றனர்.
வலதுகள் மற்றும் அதி-வலதுகளது தலைமையில் ஆர்ப்பாட்டங்களுக்கு இத்தனை பெரிய எண்ணிக்கையிலான மக்களைக் கூட்ட முடிகிறது என்ற உண்மையானது, பல ஆண்டுகளாக சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை நடத்தி வந்ததால் மாட்ரிட்டின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு எதிராக ஸ்பெயினின் தொழிலாள வர்க்கத்துக்கு எந்த உருப்படியான விண்ணப்பத்தையும் செய்யத் திறனற்றதாகி விட்டிருக்கும் கட்டலான் தேசியவாதிகளது திவால்நிலைக்கு சாட்சியமளிப்பதாக இருக்கிறது.
அதேபோல பிரிவினையைத் தடுப்பதற்கு கட்டலோனியாவில் வன்முறையான போலிஸ் ஒடுக்குமுறைக்கே அவசியம் இருக்கவில்லை என்பதையும் இது தெளிவாக்குகிறது. கட்டலோனியாவிலும் ஸ்பெயின் முழுமையிலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான வன்மையான ஒடுக்குமுறைக்குரிய நிலைமைகளை உருவாக்குவதே இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.
குடிமக்கள் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் மாட்ரிட்டில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இராணுவ ஒடுக்குமுறைக்கு பரந்தவொரு எதிர்ப்பு அங்கே இருக்கிறது என்ற நிலையிலும், எந்தவொரு கட்சியும் கூட தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஸ்பெயினிலும் கட்டலோனியாவிலுமான ஒரு பொதுப் போராட்டத்தில் அணிதிரள்வதற்கு தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்கவில்லை.
கட்டலான் பிரிவினைவாதிகள் அவர்களது சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்காக தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளால் வெறுக்கப்படுபவர்களாக உள்ளனர். அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் 2009 முதல் 2015 வரையில், இப்பிராந்தியம் சுகாதாரப் பராமரிப்பு செலவினத்தில் 31 சதவீத வெட்டினையும் சமூகச் செலவினத்தில் 26 சதவீத வெட்டையும் கண்டிருக்கிறது.
சென்ற வாரத்தின் கருத்துவாக்கெடுப்பு செவ்வாய்கிழமை அவர்கள் ஒருதரப்பாக சுதந்திரத்தைப் பிரகடனம் செய்வதற்கான அபரிமிதமான உத்தரவைக் கொடுத்திருக்கவில்லை. வாக்களித்தவர்களில் 90 சதவீதம் பேர் பிரிவினையை ஆதரித்தனர் என்று அவர்கள் அறிவித்தனர்; ஆயினும், 42 சதவீதம் பேரே மொத்தம் வாக்களித்தனர் என்பதால், இது மொத்தமாய் பதிவுசெய்த வாக்காளர் எண்ணிக்கையான 5.3 மில்லியனில் வெறும் 2.26 மில்லியன் பேரை மட்டுமே குறிக்கிறது. வாக்களிக்க ஊக்கமளிக்கப்பட்டவர்கள் சுதந்திரத்திற்கு ஆதரவு காட்ட முனைந்துள்ளனர்.
பிராந்திய சட்டமன்றத்தில் தீர்மானிக்க இயலும்விதத்தில் 10 ஆசனங்களைக் கொண்டிருக்கிற குட்டிமுதலாளித்துவ மக்கள் ஐக்கிய வேட்புக் கட்சி (CUP) புயுக்டெமொன்ட் உடனடியாக சுதந்திரத்தைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. அதன் தலைவர்களில் ஒருவரும் CUP இன் நாடாளுமன்ற உறுப்பினருமான Eulalia Reguant, துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் உள்ளிட கட்டலோனியாவின் பிராந்திய கட்டுப்பாட்டை கைப்பற்றுவதற்கான ஆலோசனைகளுக்கு அழைத்துள்ளார்.
அத்தகைய ஒரு சூழல் ஆளும் PP ஆல் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கிறது, அது ஒரு இராணுவ-போலிஸ் ஒடுக்குமுறைக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. சனிக்கிழமையன்று, பிரதமர் மரியானோ ரஹோய் El País யிடம் கூறினார், “ஸ்பெயின் பிரியாது, தேசிய ஒற்றுமை பாதுகாக்கப்படும். அதைச் செய்வதற்கு, சட்டஅமைப்பு எங்களுக்குக் கொடுத்துள்ள அத்தனை சாதனங்களையும் நாங்கள் பயன்படுத்துவோம். முடிவை எடுத்து அதனை சரியான சமயத்தில் செய்து முடிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக உள்ளது.”
பிராந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மாட்ரிட் கைப்பற்றுவதற்கும், சமூக எதிர்ப்பை ஒடுக்குவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்தும் சாத்தியத்திற்கும் அவர் பிரிவு 155 ஐ அமல்படுத்துவாரா என்று கேட்டபோது அவர் பதிலளித்தார்: “சட்டம் கூறுகின்ற எதனையும் நான் ஒதுக்கி வைக்கவில்லை.”
அதேபோல PSOE இன் முன்னாள் பிரதமரான பிலிப் கோன்சலேஸும் -சான்சலர் வில்லி பிராண்ட் மரணமடைந்த 25வது ஆண்டை அனுசரிக்க வார இறுதியில் அவர் பேர்லினில் இருந்தார்- பேர்லினில் இருந்தபடி அவர் விடுத்த செய்தி அறிக்கைகளில் பிரிவு 155 ஐ அமலாக்க ஆதரவளித்தார்.
போலி-இடது பொடெமோஸ் கட்சிக்குள்ளான பிளவுகளையும் கட்டலான் நெருக்கடி அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. தேசிய மட்டத்தில், அது PSOE மீது பிரமைகளை இன்னும் பராமரித்துக் கொண்டிருக்கிறது, சிறுபான்மை மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு பொதுச் செயலாளர் Pedro Sánchezkக்கு அது விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறது. கட்டலான் பிரிவினைவாதிகளுக்கும் ரஹோய் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை என்ற ரஹோய் தொடர்ந்து நிராகரித்து வருகின்ற ஒன்றுதான் பொடெமோஸின் பிரதான அணிதிரட்டல் அழைப்பாக இருக்கிறது.
பொடெமோஸின் கட்டலோனியா பிரிவு இப்போது பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாய் வந்துள்ளது. அதன் தலைவரான டாண்டே ஃபச்சின், ஒருதரப்பான சுதந்திரப் பிரகடனத்தை அவர் ஆதரிப்பார் என்று கட்டலான் நாளிதழான naciodigital.cat இடம் தெரிவித்தார். “புயுக்டெமொண்ட் ஒரு [கட்டலான்] குடியரசுக்கும் அதற்கான நிகழ்முறைக்கும் அழைப்பாரேயானால், நாங்கள் அதில் ஈடுபடுத்திக் கொள்வோம்” என்றார் அவர்.
சென்ற வார இறுதியில் கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்பின் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறையையும் இராணுவ ஆக்கிரமிப்பு மூலமாக இந்தப் பிராந்தியத்தை தனது எல்லைகளுக்குள் வைத்திருக்க மாட்ரிட் போடும் திட்டங்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கண்டனம் செய்கிறது. அதேசமயத்தில், அது கட்டலான் மற்றும் ஸ்பானிய தேசியவாத அரசியலை இடதின் பக்கத்தில் இருந்து எதிர்க்கிறது.
“ஸ்பானிய மற்றும் கட்டலான் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான வர்க்க மூலோபாயம்!” என்ற அதன் அறிக்கையில் அது எழுதியவாறாக, ஸ்பெயின் முழுமையிலுமான தொழிலாளர்கள் “இந்த நெருக்கடியில் சுயாதீனமாக தலையீடு செய்வதன் மூலமாக தமது வர்க்க நலன்களைத் திட்டவட்டம் செய்ய வேண்டும். மாட்ரிட்டின் நடவடிக்கைகளை தீர்க்கமாக எதிர்ப்பது மற்றும், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரானதும் அத்துடன் ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்குள்ளான ஒரு தொழிலாளர்களின்’ ஸ்பெயினுக்கு ஆதரவானதுமான ஒரு பொதுப் போராட்டத்தில் தங்களுடன் இணைந்து கொள்வதற்கு கட்டலோனியாவிலுள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளை வலியுறுத்துவது என்பதே இதன் அர்த்தமாகும்.”