Print Version|Feedback
Oppose the state crackdown on the Catalan independence referendum!
For working class unity!
No to separatism in Spain!
கட்டலான் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு மீதான அரசு ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!
தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக!
ஸ்பெயினில் பிரிவினைவாதம் வேண்டாம்!
Statement of the International Committee of the Fourth International
30 September 2017
அக்டோபர் 1 இல் கட்டலான் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பின் தறுவாயில், 1970 களின் பாரிய தொழிலாள வர்க்க போராட்டங்களின் மத்தியில் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் பாசிசவாத ஆட்சி பொறிந்ததற்குப் பின்னர், ஸ்பெயின் அதன் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியின் மரணவேதனையில் உள்ளது. ஒரு தசாப்த கால ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி, சமூக சிக்கன நடவடிக்கைகள், ஐரோப்பா எங்கிலும் பாரிய வேலைவாய்ப்பின்மையை அடுத்து, ஸ்பெயின் உடையும் புள்ளியில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா எங்கிலுமான அரசாங்கங்களின் ஆதரவுடன், இந்த சர்வஜன வாக்கெடுப்பைத் தடுக்க மாட்ரிட் மூர்க்கமான பொலிஸ் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையில், ஸ்பெயின் உள்நாட்டு போர் மற்றும் சர்வாதிகாரத்தின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஸ்பெயினின் மக்கள் கட்சி (PP) சிறுபான்மை அரசாங்கம், ஸ்பானிஷ் சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் வலதுசாரி குடிமக்கள் கட்சியின் ஆதரவைச் சார்ந்து நின்று, இந்த சர்வஜன வாக்கெடுப்பைத் தடுக்கவும் வாக்கு மையங்களில் இராணுவ பொலிஸை அணிதிரட்டவும் சூளுரைத்துள்ளது. அது 16,000 பொலிஸ் மற்றும் துணை இராணுவ ஊர்க்காவல் படைகளை அணிதிரட்டியும் கட்டலோனியாவின் நிதிகள் மற்றும் பொலிஸைக் கட்டுபாட்டில் எடுக்க முயன்றும், நடைமுறையளவில் கட்டலோனியாவில் அவசரகால நிலையை திணித்துள்ளது. அதிவலது போராட்டக்காரர்கள் ஸ்பானிய கொடிகளை அசைத்தும், கட்டலோனியாவுக்கு பொலிஸ் புறப்படுகையில் உற்சாகப்படுத்தியும், “ஸ்பெயின் வாழ்க" என்றும் "போய் அவர்களைப் பிடியுங்கள்" என்று கூச்சலிட்டும் பொலிஸ் நிலையங்களைச் சுற்றி குழுமி உள்ளனர்.
பதினான்கு கட்டலான் அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், 144 க்கும் அதிகமான வலைத் தளங்கள் மூடப்பட்டு, மில்லியன் கணக்கான சுவரொட்டிகள் மற்றும் துண்டறிக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அச்சுக்கூடங்கள் மற்றும் பத்திரிகை அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளன, பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு, அந்த சர்வஜன வாக்கெடுப்பை ஆதரித்தால் வழக்கை முகங்கொடுக்க வேண்டியிருக்குமென 700 க்கும் அதிகமான நகர முதல்வர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். பிரிவினைவாத கட்சியான, மக்கள் ஒற்றுமையின் வேட்பாளர்கள் (Candidatura d'Unitat Popular - CUP) கட்சியின் தலைமையகங்களில் உத்தரவாணைகள் இன்றி சோதனை நடத்தப்பட்டு, பொலிஸால் ஆக்கிரமிக்கப்பட்டன.
“அரசியல் குற்றங்களை" தண்டிக்க பிராங்கோவின் கீழ் உருவாக்கப்பட்ட பொது ஒழுங்கிற்கான நீதிமன்றத்திற்கு உட்பட தேசிய நீதிமன்றம், 15 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனைகளுடன் பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக பிரிவினைக்கான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளது. இராணுவத்தில், இராணுவச் சட்டத்திற்கான உணர்வு அதிகரித்து வருகிறது. ஓய்வூபெற்ற தளபதி மானுவல் அல்துலாஈறே (Manuel Altolaguirre) அந்த சர்வஜன வாக்கெடுப்பை "போர்க்கால சட்டநிலையை பிரயோகிக்க அவசியப்படுத்தும் ஒரு மிகப்பெரிய தேசத்துரோக நடவடிக்கையாக" குறிப்பிட்டார்.
ஸ்பானிய பிரதம மந்திரி மரீயானோ ரஹோய் இன் நடவடிக்கைகள் ஒரு பிரிவினைவாத உணர்வைத் தூண்டிவிட்டு வருகின்றன என்று பிரதான ஐரோப்பிய சக்திகள் மற்றும் அமெரிக்காவில் அச்சங்கள் இருந்தாலும், மக்கள் கட்சியின் ஒடுக்குமுறையை அவை ஆதரிக்கின்றன —இவை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ கூட்டணியில் உள்ள ஓர் அங்கத்துவ நாட்டின் உடைவு குறித்து அஞ்சுகின்றன. ரஹோய் அருகில் இருக்க பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவிக்கையில், “ஒரு பங்காளியை ஒரு நண்பரை நான் அறிவேன், அது ஸ்பெயின் ஆகும், ஒட்டுமொத்த ஸ்பெயின்… மீதி எதுவும் எனக்கு அக்கறை இல்லை,” என்றார். இவ்வாரம் வாஷிங்டனுக்கான ரஹோயின் விஜயத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறுகையில், “ஸ்பெயின் ஒரு மிகப்பெரிய நாடு, அது ஒன்றுபட்டு இருக்க வேண்டும்,” என்றார்.
1936 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் இரத்தந்தோய்ந்த அனுபவத்திற்குப் பின்னர் மற்றும் அதற்கடுத்த மூன்றாண்டு உள்நாட்டு போரில் பிராங்கோ அதிகாரத்திற்கு வந்த பின்னர், போர் மற்றும் எதேச்சதிகார ஆட்சிக்குள் மீண்டும் நுழைவதற்கு, அங்கே தொழிலாள வர்க்கத்தினுள் ஆழ்ந்த, வரலாற்றுரீதியில் வேரூன்றிய எதிர்ப்பு உள்ளது. கட்டலான் பிரிவினைவாத அரசியல்வாதிகளையும் வாக்காளர்களையும் கைது செய்ய ஸ்பானிய பொலிஸ் வரவழைக்கப்பட்டிருந்த கப்பல்களில் இருந்து, பொருட்களை இறக்க துறைமுக தொழிலாளர்கள் மறுத்தனர், பார்சிலோனா தீயணைப்பு படையினர்கள் பொலிஸிடம் இருந்து வாக்கு மையங்களை பாதுகாக்க சூளுரைத்துள்ளனர். ஆனால், மாட்ரிட் இலுள்ள ஆளும் கட்சியின் கீழோ அல்லது கட்டலான் தேசியவாதிகளின் கீழோ இதற்கான எதிர்ப்பை மேற்கொள்ள முடியாது. இவர்கள் எப்போதும் தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமாகவே இருந்துள்ளனர்.
முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் சமூகத்தை சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பிற்காக ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக போராடுவதே, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரே நம்பகமான கொள்கையென நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வலியுறுத்துகிறது. இதை ஸ்பெயினின் சகல முதலாளித்துவ கன்னைகளுக்கும் எதிரான புரட்சிகர போராட்டத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
ஐரோப்பிய ஒன்றியம், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பிராங்கோவிற்குப் பின்னரான மக்கள் கட்சி ஆகியவற்றிற்க்கான ICFI இன் எதிர்ப்பானது, பிரிவினைவாத தேசியவாதிகளான கட்டலான் ஐரோப்பிய ஜனநாயக கட்சி, கட்டலோனிய இடது குடியரசு மற்றும் குட்டி முதலாளித்துவ CUP ஆகியவற்றிற்கான அதன் எதிர்ப்பிலிருந்து எந்த விதத்திலும் குறைந்ததில்லை. போரை ஆதரிப்பதிலும் சிக்கன கொள்கைகளைத் திணிப்பதிலும் ஒரு நீண்ட வரலாறைக் கொண்ட இந்த கட்சிகள் ஆட்சி செலுத்தும் வகையில், கட்டலோனியாவில் ஒரு புதிய முதலாளித்துவ அரசை கட்டமைப்பதன் மூலமாக ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவது, தொழிலாள வர்க்கத்திற்கு எதையும் வழங்காது. அது மாட்ரிட்டின் தாக்குதல்களுக்கு எதிராக அவர்களின் மிகப்பெரிய கூட்டாளிகளிடம் இருந்து, அதாவது ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திடம் இருந்து, கட்டலான் தொழிலாளர்களை பிரித்துவிடக்கூடியதாகும்.
தொழிலாளர்கள் பலரும் இதை உணர்வதுடன், சர்வஜன வாக்கெடுப்பில் பங்கெடுக்க மாட்டார்கள். வாக்களிக்க தீர்மானிப்பவர்களில் பலரும் அவர்களின் சமூக கோபத்தை பதிவு செய்யவே வாக்களிப்பார்கள். அவ்வாறான ஒரு பிரிவினையின் பேரழிவுகரமான விளைவுகளை தடுப்பதற்கு, இவ்வாக்களிப்பில், இல்லை என வாக்களிக்குமாறு அவர்களுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வலியுறுத்துகிறது.
கட்டலானில் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், அடிப்படையில் தேசிய ஒடுக்குமுறையில் வேரூன்றி இருக்கவில்லை, மாறாக வர்க்க ஒடுக்குமுறையிலேயே வேரூன்றி உள்ளது. கட்டலான் தொழிலாள வர்க்கம் அதன் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட்ட ஒரு போராட்டத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே பொலிஸ்-இராணுவ ஆட்சியின் அச்சுறுத்தலுக்கு விடையிறுக்க முடியும்.
சமீபத்திய இந்த சர்வஜன வாக்கெடுப்புக்கான அழைப்பும், ஆம் வாக்குகள் பிரிவினைக்கு இட்டுச்செல்லும் என்ற பிரகடனமும் ஒரு அழுகிப்போன தந்திரமாகும். மாட்ரிட்டில் இரண்டு பொது தேர்தல்கள் தொங்கு நாடாளுமன்றத்தை உருவாக்கிய பின்னர், கடந்த ஆண்டு, மாட்ரிட் எட்டு மாதங்களுக்கு ஓர் அரசாங்கமின்றி இருந்தது. பார்சிலோனாவில், கட்டலோனியாவில் சிக்கன கொள்கைகளைக் கொண்ட 2016 மற்றும் 2017 வரவு-செலவு திட்டத்தை CUP ஆதரித்தது. CUP, தனது தொழிலாளர்-விரோத கொள்கைகளுக்கு ஒரு போலியான, “தீவிரவாத" நிறத்தை பூசுவதற்காக, மாட்ரிட்டின் சொந்த பிற்போக்குவாத பாத்திரம் மீது பழிபோடும் முயற்சியில், பிரிவினைவாத கோரிக்கையை அப்போது முன்னெடுத்தது.
CUP பரிந்துரைத்தவாறு, பிரிவினைவாத கோரிக்கை பின்னர் ஏனைய கட்டலான் தேசியவாத கட்சிகளால் கையிலெடுக்கப்பட்டது. ஸ்பானிய முதலாளித்துவ வர்க்கம் முன்னொருபோதுமில்லாத ஒரு ஆட்சி நெருக்கடியை முங்கொடுத்துள்ள நிலையில், வேலைவாய்ப்பின்மை மற்றும் சிக்கன கொள்கைகள் மீது அதிகரித்து வரும் சமூக அதிருப்தியை தேசியவாத வழிகளில் திருப்புவதே அதன் நோக்கமாகும்.
ஸ்பானிய மற்றும் கட்டலான் இருதரப்பிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக-பொருளாதார கவலைகளை, ஒரு தேசியவாத வீராவேச சூறாவளி பேச்சுக்களின் கீழ் மூடிமறைக்க, இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஆளும் வர்க்கத்திற்கு உதவியது. இது நனவுபூர்வமான திட்டமிட்ட மூலோபாயமாக பின்பற்றப்பட்டது. வணிகங்களுக்கான தனிப்பொறுப்பில் உள்ள தற்போதைய கட்டலான் ஆளுனர் Santi Vila, அரசியல்வாதிகள் மற்றும் வணிக பெருமக்களின் ஒரு கூட்டத்தில் எரிச்சலூட்டும் விதத்தில் கூறுகையில், கட்டலோனியா "தேசியவாதத்தை அடிப்படையாக கொண்ட ஓர் விவாதத்தை கட்டவிழ்த்துவிடாதிருந்தால், 6 பில்லியன் யூரோவிற்கும் அதிகமான வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை அது எவ்வாறு சமாளித்திருக்கும்?” என்றார்.
இதுமட்டுமின்றி கட்டலான் நெருக்கடி மீண்டும் பொடெமோஸ் கட்சியின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை அம்பலப்படுத்தி உள்ளது. 2015 இல் பதவியேற்ற சிரிசா, கிரீஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கொள்கைகளை திணித்ததை பொடெமோஸ் ஆதரித்திருந்த நிலையில், கட்டலோனியாவில் மக்கள் கட்சி (PP) இன் தாக்குதல்களை PSOE ஆதரிக்கின்ற போதினும், அதனுடன் ஒரு கூட்டணி அமைக்க அது இப்போதும் அழைப்புவிடுத்து வருகிறது. கட்டலோனியாவுக்கு மிக அதிக பொலிஸை அனுப்பியதன் மூலம், மக்கள் கட்சி ஸ்பெயினை பாதுகாக்க தவறிவிட்டதாக அதன் சட்டம் ஒழுங்கு விமர்சனங்களுடன், பொடெமோஸ், இந்த நெருக்கடியின் தீவிரத்தைக் குறைக்க முயற்சிக்கவும், கட்டலான் தேசியவாதிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டவும், ஒரு மாற்று அரசாங்கத்தை அமைப்பதற்கு அது தயாராக இருப்பதாக அது ஆளும் வர்க்கத்திற்கு சமிக்ஞை காட்டி வருகிறது.
அதுபோன்றவொரு அரசாங்கம், அமைக்கப்பட்டாலும், தற்போது மக்கள் கட்சியால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சர்வாதிகாரத்திற்கும் சிக்கனக் கொள்கை முனைவுக்கும் எந்த மாற்றீட்டையும் அது வழங்கப் போவதில்லை.
உண்மையில், அவர்கள் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளைப் பயன்படுத்துவார்கள் என்பதை அவர்களின் சொந்த முன்நடவடிக்கைகளே தெளிவுபடுத்துகின்றன. 2010 இல் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்க PSOE அரசாங்கம் இராணுவத்தை அணிதிரட்டியது. கட்டலான் தலைநகர் பார்சிலோனாவில் பொடெமோஸ் ஆதரவிலான நகர முதல்வர் Ada Colau, போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்கினார், விமானநிலைய பாதுகாப்பு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஒடுக்க கடந்த மாதம் அவர் ஊர்க்காவல் படைகளை அணிதிரட்டினார். பொடெமோஸ் அதிகாரத்திற்கு வந்தால், கிரீஸில் சிரிசாவைப் போலவே, வேலைநிறுத்தங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்புக்கு அது பொலிஸ் அரச நடவடிக்களைக் கொண்டு விடையிறுக்கும்.
கட்டலான் சர்வஜன வாக்கெடுப்பும், முதலாளித்துவ நெருக்கடியும்
ஸ்பெயினில் தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதல்களுக்கு பின்னால், உண்மையில், ஐரோப்பிய முதலாளித்துவ நெருக்கடியும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியுமே காரணமாக அமைந்துள்ளன. 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் ஒரு கால் நூற்றாண்டாக மத்திய கிழக்கு எங்கிலும் நடந்த தீவிர ஏகாதிபத்திய போர்கள் மற்றும் சமூக வெட்டுக்களுக்குப் பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவம் பொறிவின் முன்னேறிய நிலையில் உள்ளது. குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவு மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆளும் உயரடுக்குகள் அனைத்தும் இராணுவ மற்றும் பொலிஸ் முகமைகளைப் பலப்படுத்த முனைந்ததுடன், அதேவேளையில் தொழிலாளர்கள் மீது பேரழிவுகரமான சிக்கன கொள்கைகளை திணித்து வந்துள்ளன.
இது, கிரீஸ், போர்ச்சுக்கல், இத்தாலி, மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகளைப் போலவே, ஸ்பெயினையும் சீரழித்துள்ளது. ஸ்பானிய முதலாளித்துவம் பொருளாதாரரீதியில் மரணப்படுக்கையில் உள்ளது. ஸ்பெயினின் வேலைவாய்ப்பின்மை விகிதம் பாரியளவில் 17.8 சதவீதமாகவும், 25 வயதிற்கு குறைந்தவர்களிடேயே 38.6 சதவீதமாகவும் உள்ளது. வேலைவாய்ப்பற்ற நால்வரில் ஒருவர் குறைந்தபட்சம் நான்காண்டுகளாக வேலையின்றி இருந்திருப்பார். 2.5 மில்லியன் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பற்றோர் பதிவேட்டில் இல்லாமற் போனதற்கான காரணம் ஸ்பெயினில் வேலைகிடைக்காது அவர்கள் வேலையைத் தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்ததனாலாகும்.
இதன் விளைவாக, சமூக சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. மொத்த குடும்பங்களில் பாதி, இப்போது, உத்தியோகபூர்வ வறுமை மட்டத்திற்கு கீழே வருவாய் ஈட்டுகின்றன அல்லது வறுமைக்குட்படும் அபாயத்தில் உள்ளன (வறுமை மட்டம் என்பது, ஒரேயொருவர் சம்பாதிக்கும் குடும்பங்கள் என்றால் 8,010 யூரோ, இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு 16,823 யூரோ). இதற்கு எதிர்முரணாக, நாட்டின் செல்வந்தர்களது சொத்துக்கள் —அதாவது குறைந்தபட்சம் 700,000 யூரோ சொத்துக்கள் வைத்திருப்பவர்கள்— 44 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது; மக்கள் தொகையில் சுமார் 0.4 சதவீதத்தினர் இப்போது ஸ்பெயினின் செல்வவளத்தில் பாதியை உடமையாக கொண்டுள்ளனர். இதில் ஸ்பெயினில் உள்ள 100 மிகப்பெரிய பில்லியனர்களில் மாட்ரிட்டில் உள்ள 25 பேருடன் ஒப்பிடுகையில், கட்டாலனைச் சேர்ந்த அல்லது கட்டலோனியாவில் தங்களின் செல்வங்களை வைத்திருக்கும் 28 பேரும் உள்ளடங்குவர்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும், சமூக சமத்துவமின்மையானது ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்கு பொருந்தாத மட்டங்களை எட்டி வருகின்றன. பாரிய அதிருப்தியை முகங்கொடுத்து, ஆளும் உயரடுக்கு போர் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்கு திரும்பி வருகின்றன. வட கொரியாவுக்கு எதிராக ட்ரம்ப், "முழுமையாக அழிக்கும்" இனப்படுகொலை போர் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்ற நிலையில், அவர்களது நிர்வாகமோ வேர்ஜினியாவின் சார்லட்வில்லில் ஒரு இடதுசாரி போராட்டக்காரரின் படுகொலைக்குப் பொறுப்பான ஹீதர் ஹெயர் என்ற நவ-நாஜியை பாராட்டி, பாசிசவாத உணர்வை தூண்டிவிட்டு ஆதரவளிக்கின்றது.
மாட்ரிட்டின் சர்வாதிகார கொள்கைகள் எதை நோக்கி செல்கின்றன என்பதைக் காண ஒருவர் அண்டையில் உள்ள பிரான்சைப் பார்த்தாலே போதுமானது. அவசரகால நிலையின் கீழ் அடிப்படை ஜனநாயக உரிமைகளை காலவரையின்றி இடைநிறுத்தம் செய்திருப்பதானது, தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை இல்லாதொழித்து தொழில்துறை "சீர்திருத்தங்களை" திணிக்கவும் மற்றும் பாரிய பெருந்திரளான மக்கள் எதிர்ப்புக்கு இடையிலும் மருத்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பின்மை சலுகைகளில் வெட்டுக்களைத் திணிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஸ்பெயினின் சமூக நெருக்கடி, 1978 இல் பிராங்கோ மரணத்திற்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் ஒழுங்கமைப்பை உடைத்தழிக்கின்றது. PSOE கட்சியும் ஸ்ராலினிச ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சியும் (PCE) இந்த "இடைமருவு காலத்தை" (“Transition”) அமைதியாக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குத் திரும்புவதற்கான திருப்பமாக புகழ்ந்தன. “மறப்பதற்கான உடன்படிக்கை" மற்றும் பாசிச குற்றங்கள் மீதான 1977 பொதுமன்னிப்பு சட்டம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டமையானது, PSOE மற்றும் PCE ஐ ஆளும் ஸ்தாபகத்திற்குள் உள்ளிணைத்துக் கொண்டதன் மூலமாக அதன் குற்றங்கள் மீதான எந்தவொரு கணக்கெடுப்பையும் தவிர்க்க பிராங்கோ ஆட்சியை அனுமதித்தது.
அந்த இடைமருவு காலத்தின்போது, பழைய பிராங்கோ ஆட்சி, அப்பிராந்திய முதலாளித்துவ வர்க்கம் அரசு எந்திரத்திற்கு காட்டிய அவர்களது விசுவாசத்தை உறுதிப்படுத்தி வைக்க, அவர்களுக்கு கணிசமான விட்டுக்கொடுப்புகளை வழங்கியது. கட்டலான் மொழி பரவலாகவும் பொதுமக்களிடையேயும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இருந்து, அது ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒன்பதாவது மிக பரவலாக பேசும் மொழியாக மாறியுள்ளது. 80 க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்களும் 100 வானொலி நிலையங்களும் கட்டாலனில் இருந்து தினமும் ஒளி/ஒலிபரப்பாகின்றன, உலகில் 150 க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் கட்டலான் மொழியைக் கற்பிக்கின்றன, 400 க்கும் அதிகமான இதழ்கள் அம்மொழியில் பிரசுரமாகின்றன.
பார்சிலோனாவில் உள்ள கட்டலான் முதலாளித்துவ வர்க்கம் பிராங்கோவிற்கு பிந்தைய சகாப்தத்தில் சுயாட்சி மற்றும் பிரிவினைவாத கோரிக்கைகளுடன் ஊடல் கொண்டிருந்தபோதிலும், கட்டலான் முதலாளித்துவ வர்க்கம் பிரிவினை கோராது என்றும் இதற்கு பிரதியீடாக மாட்ரிட் கட்டலான் தேசியவாத உணர்வுகளை ஆக்ரோஷமாக தாக்காது என்பதிலும் அது மறைமுகமாக உடன்பட்டிருந்தது.
இந்த இடைமருவு காலத்திற்கு பிந்தைய ஆட்சி இப்போது உடையத் தொடங்கி உள்ளது, ஸ்பானிய ஆளும் வர்க்கத்திற்குள் ஒரு கடுமையான மற்றும் வன்முறையான கன்னை மோதல் கட்டவிழ்ந்து வருகிறது. வெறும் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பிராங்கோ ஆட்சியை இப்போதும் பல தொழிலாளர்களால் நினைவுகூர முடியும் என்ற ஒரு நாட்டில், மாட்ரிட்டின் மூர்க்கமான ஒடுக்குமுறை ஒரு கூர்மையான எச்சரிக்கையாக உள்ளது. 1930 களுக்குப் பிந்தைய மிக ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடிக்கு இடையே, இடைமருவு காலத்திற்கு பிந்தைய ஆட்சி அது எதிலிருந்து மேலெழுந்ததோ, அதே பிராங்கோயிச ஆட்சியின் சர்வாதிகார கொள்கைகளை நோக்கி அதிகரித்தளவில் மீண்டும் பின்னோக்கி திரும்பி வருகிறது.
கட்டலோனியா மீதான மாட்ரிட்டின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் தொழிலாளர்கள், மக்கள் கட்சியின் ஏதோவொரு ஒடுக்குமுறை நடவடிக்கையை மேலோட்டமாக எதிர்க்கும் வகையில் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது. அவர்கள் முகங்கொடுப்பது என்னவென்றால், ஸ்பெயினின் சிறுபான்மை அரசாங்கத்தின் தோல்வியை அல்ல, மாறாக முதலாளித்துவத்தின் தோல்வியை ஆகும். அவர்கள் ஸ்பெயினிலும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணித்திரட்டுவதன் மூலமாக இந்த அரசாங்கத்தைத் தூக்கியெறிய முனைய வேண்டும்.
கட்டலான் பிரிவினைவாதத்தின் பிற்போக்கு பாத்திரமும், அதன் போலி-இடது ஆதரவாளர்களும்
கட்டலான் பிரிவினைவாதிகள், ஸ்பெயினின் நிதியியல் பிரபுத்துவத்திற்கு எதிராக போராடும் இடதுசாரி சக்திகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக அவர்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் மாட்ரிட்டில் உள்ள மத்திய அரசாங்கம் ஆகிய இரண்டுக்கும் எதிராக அவர்களின் நலன்களை முன்னெடுத்து வரும் ஆளும் வர்க்கத்தின் கன்னைகளை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.
எண்ணற்ற பல குட்டி-முதலாளித்துவ "இடது" குழுக்கள் இல்லாது போயிருந்தால் சமூக அதிருப்தியில் பெரும்பான்மை அவர்களது சொந்த கொள்கைகளாலேயே உருவாக்கப்பட்டவை என்ற நிலையில், அவர்களால் சமூக அதிருப்தியை ஒன்றுதிரட்டவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மாட்ரிட்டிற்கு எதிரான எதிர்ப்பிலிருந்து இலாபமடையவும் பிரிவினைவாதிகள் திராணியற்று இருந்திருப்பர். இந்த இடைமருவு காலத்திற்கு பிந்தைய ஸ்பெயினில் PCE மற்றும் பொடெமோஸில் உள்ள ஸ்ராலினிச சக்திகளையும் மற்றும் PSOE ஐ ஏற்றுக் கொண்ட இத்தகைய கட்சிகள், பல தசாப்தங்களாக வர்க்க போராட்டத்திற்கு ஒரு மாற்றீடாக தேசியவாதத்தை ஊக்குவித்துள்ளன.
நேரத்திற்கேற்ப மீண்டும் மீண்டும், இத்தகைய போலி-இடது குழுக்கள் வலதுசாரி முதலாளித்துவ இயக்கங்களுடனான கூட்டணியை நியாயப்படுத்தவும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டங்களை நசுக்கவும் "சுயநிர்ணயத்திற்கு" ஆதரவை பிரகடனப்படுத்தி உள்ளன — லிபியா மற்றும் சிரியாவில் ஏகாதிபத்திய பினாமி போர்களுக்கான அவற்றின் ஆதரவை நியாயப்படுத்தவும் கூட இதை பயன்படுத்தி உள்ளன.
பிரிவினைவாதத்தை ஆதரிக்கவும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் அவர்கள் மீண்டும் தலையீடு செய்து வருகின்றனர். பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் பிரதான பத்திரிகையான International Viewpoint, “கட்டலானில் ஒரு வெற்றி என்பது ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளின் வெற்றியாக, மக்கள் அனைவரது வெற்றியாக இருக்கும்,” என்று வாதிடுகிறது.
மோரேனோவாத தொழிலாளர்களின் புரட்சிகர போக்கு (Workers’ Revolutionary Current) என்ற அமைப்பானது அந்த சர்வஜன வாக்கெடுப்பில் பாரிய அணிதிரள்வுக்கு அழைப்புவிடுக்கிறது, “அது அந்த ஆட்சிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்", அவ்விதமாக "கட்டலோனியாவிலும் ஸ்பெயினினால் நாசமடைந்துள்ள ஏனைய பகுதிகளிலும் ஓர் அரசியலமைப்பு நிர்ணய நிகழ்ச்சிப்போக்கு தொடங்கும்,” என்றது குறிப்பிடுகிறது. இது "மிகப்பெரிய ஜனநாயக மற்றும் சமூக கோரிக்கைகளைத் தீர்க்கும்" என்று கூறலாம் என்பதையும் அது சேர்த்துக் கொள்கிறது.
வேலைகள், சம்பளங்கள் மற்றும் நிலைமைகளை அடிமட்டத்திற்கு கொண்டு வரும் போட்டியில், உலகளாவிய மூலதனம் தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவரை எதிரெதிராக நிறுத்துவதற்கு அனுமதிக்கும் வகையில், ஸ்பெயினை பால்கன் மயப்படுத்துவது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு "வெற்றியாக" இருக்காது.
பிரிக்கப்பட்ட நாடுகளுக்கான மிகவும் கூறத்தக்க முன்னுதாரணம், மிகப்பெரிய முன்னாள் யூகோஸ்லாவிய கூட்டாட்சி குடியரசின் "சிதைவுகளில்" இருந்து எழுந்தவையாகும். அங்கே அங்கத்துவ நாடுகளை துண்டாடி முதலாளித்துவ மீட்சி செய்வதற்காக, இரத்தக்களரியில் போய் முடிந்த ஏகாதிபத்தியத்தின் உந்துதலை ஆதரிக்க போலி-இடது குழுக்கள் வஞ்சகமாக "சுய நிர்ணய உரிமையை" துணைக்கு இழுத்து பயன்படுத்தின. 1991 இல் இருந்து 2001 வரையில், ஒரு தசாப்தம் நீடித்திருந்த தொடர்ச்சியான இனங்களுக்கிடையிலான போர்களில், 140,000 பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு மில்லியன் பேர் இடம்பெயர்ந்ததாகவும் மதிப்பிடப்படுகிறது. இது சேர்பியாவுக்கு எதிரான 1999 நேட்டோ போரில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இன்று அண்மித்து இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர், ஒட்டுமொத்த அப்பிராந்தியமும் சீரழிந்து போயுள்ளது.
கட்டலான் தேசியவாதிகளின் பிற்போக்குத்தனமான, தொழிலாள வர்க்க விரோத கொள்கை, யூகோஸ்லாவிய போர்களின் போது ICFI ஆல் வகுத்தளிக்கப்பட்ட முதலாளித்துவ தேசியவாத மதிப்பீட்டின் சரியான தன்மைக்கு மற்றொரு நிரூபணமாகும்.
தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை புறநிலைரீதியில் பலப்படுத்தி, ஒரு உலக சோசலிச பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்குகளின் முன்பில்லாத வகையிலான உலகளாவிய ஒருங்கிணைப்பின் தாக்கங்களை ஆராய்ந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே எச்சரிக்கையில், இதே நிகழ்வுகள் "இப்போதிருக்கும் நாடுகளை பிரிக்க முனையும் ஒரு புதிய வகையிலான தேசியவாத இயக்கங்களுக்கு ஒரு புறத்தூண்டுதலை" வழங்கும். “உலகளாவிய அளவில் இடம்பெயரும் மூலதனம், சிறிய பிராந்தியங்களும் கூட நேரடியாக உலக சந்தைக்குள் தங்களை இணைத்துக் கொள்ளும் தகைமையை வழங்கியுள்ளது. […] போதுமான போக்குவரத்து இணைப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் மலிவு கூலி வினியோகம் கொண்டுள்ள ஒரு சிறிய கடலோர நிலப்பகுதி கூட, குறைந்த உற்பத்தி நிலங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய நாட்டை விட பன்னாட்டு மூலதனத்திற்கு மிகவும் ஈர்க்கத்தக்க அடித்தளத்தை வழங்கலாம்,” என்று குறிப்பிட்டது.
கட்டலோனியா, ஸ்பெயினின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கை பிரதிநிதித்துவம் செய்து, அந்நாட்டின் மிகச் செல்வச்செழிப்பான பிராந்தியமாக விளங்குகிறது. தற்போது மத்திய அரசுக்கு செலுத்தும் வரிகளைச் செலுத்தாமல் நிறுத்திவிட்டு, அதேவேளையில் உலகளாவிய வங்கிகள், பன்னாட்டு பெருநிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் நேரடி உறவுகளை ஸ்தாபிக்கும், ஒரு புதிய குட்டி-அரசை உருவாக்க பிரிவினைவாத கட்சிகள் நோக்கம் கொள்கின்றன. அவை தொழிலாள வர்க்கத்தின் மீது படிப்படியாக சுரண்டலை அதிகரிக்கும் அடிப்படையில், கட்டலோனியாவை ஒரு குறைந்த வரி கொண்ட சுதந்திர வர்த்தக பகுதியாக மாற்றலாமென கருதுகின்றன.
கட்டலான் தேசியவாதிகளும் அவர்களது போலி-இடது ஆதரவாளர்களும் தங்களை முற்போக்கானவர்கள் போல காட்டிக் கொள்கின்றனர். ஆனால் கட்டலான் பிரிவினைவாதத்தை, ஐக்கிய இராஜ்ஜியத்தின் (UK) ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சி, அல்லது இத்தாலியின் Northern League மற்றும் பெல்ஜியத்தின் Vlaams Belang போன்ற வெளிப்படையாக வலதுசாரி குணாம்சம் கொண்ட ஐரோப்பா எங்கிலும் உள்ள அதேபோன்ற பிரிவினைவாத உருவாக்கங்களில் இருந்து எதுவும் வித்தியாசப்படுத்தவில்லை. இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்திலும், பிரிவினைவாதம் அந்தந்த நாடுகளின் ஏனைய பகுதிகளைவிட ஏதோவகையில் பொருளாதார சலுகைகளை அனுபவிக்கும் அப்பிராந்தியங்களிலேயே அந்தந்த உள்ளூர் முதலாளித்துவம் தனது சொந்த இலாபங்களை சுரண்டிக்கொள்வதற்காகவே மேலெழுந்துள்ளன.
ஒரு "சுதந்திரமான" கட்டலான் குடியரசு, அது ஸ்தாபிக்கப்பட்டாலும் கூட, சுதந்திரமானதாக இருக்கப்போவதில்லை. அது, ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள பிரதான சக்திகளை இன்னும் அதிகமாக சார்ந்திருக்க வேண்டியே இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டணியில், அது கடுமையான சிக்கனக் கொள்கை, கல்வி, மருத்துவக் கவனிப்பு மற்றும் பிற சமூக தேவைகளுக்கான நிதிகளை வெட்டுதல், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை ஒடுக்க பொலிஸைப் பயன்படுத்துவது என மாட்ரிட் உடனான அவர்களது கூட்டணியில் கட்டலான் பிரிவினைவாத கட்சிகள் பின்பற்றிய அதை கொள்கைகளையே பின்தொடரும். அது தொழிலாளர்களுக்கு ஒரு முட்டுச்சந்தாகவே இருக்கும்.
போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக
மாட்ரிட்டின் பொலிஸ் ஒடுக்குமுறையும், பிரிவினைக்காக கட்டலான் தேசியவாதிகளின் முனைவும் இரண்டுமே, முதலாளித்துவத்தின் மரணகதியிலான நெருக்கடிக்கு ஆளும் வர்க்க கன்னைகளது விடையிறுப்புகளாகும். ஆளும் உயரடுக்கு மக்களிடையே அதிகரித்து வரும் புரட்சிகர உணர்வால் பீதியுற்றுள்ளது. ஐரோப்பாவில் 34 வயதிற்குக் கீழிருக்கும் ஐரோப்பிய இளைஞர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் —ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்— இப்போதிருக்கும் அமைப்புமுறைக்கு எதிரான ஒரு "பாரிய மேலெழுச்சியில்" இணைய இருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சொந்த 2017 “Generation What” என்ற கருத்துக்கணிப்பு கண்டறிந்துள்ளது.
ரஷ்யாவில் விளாடிமீர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் போல்ஷிவிக் கட்சி, முதலாளித்துவத்தை தூக்கிவீசிய 1917 அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டில், ஐரோப்பா எங்கிலுமான தொழிலாள வர்க்க போராட்டங்களின் ஒரு பாரிய எழுச்சியை நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் முன்நகர்ந்து கொண்டிருக்கிறது. எவ்வாறிருப்பினும், இந்த அபிவிருத்தியின் புறநிலைப்போக்கு, ஒரு நனவார்ந்த அரசியல் மூலோபாயமாக மாற்றப்படவேண்டும்.
மாட்ரிட்டும் பார்சிலோனாவும் பரிமாறி வருகின்ற அச்சுறுத்தல்கள் ஒரு கூர்மையான எச்சரிக்கையாகும். தொழிலாள வர்க்கம் பாரிய போராட்டத்திற்குள் நுழைவதற்கு முன்னரே, அது உள்நாட்டு மோதல் அபாயத்தையும் ஐரோப்பாவின் இதயதானத்தில் போர் மூள்வதற்கான அபாயத்தையும் முகங்கொடுக்கிறது. தொழிலாளர்கள், வன்முறை அச்சுறுத்தல்களையும், தேசிய மோதல்களை தூண்டிவிடுவதற்காக தீவிரப்படுத்தப்பட்டு வரும் முயற்சிகளையும் எதிர்க்க வேண்டும், ஆனால் ஸ்பெயின் நெருக்கடியை தீர்க்க தனித்தனியான தன்னிச்சையான நடவடிக்கைகள் இதற்கு போதுமானதல்ல.
கட்டலோனியாவில் நிலவும் மோதல் ICFI இன் வலியுறுத்தலை ஊர்ஜிதப்படுத்துகிறது, அது, அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதென்பது போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக, மற்றும் சோசலிசத்திற்காக, தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான சர்வதேச புரட்சிகர இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டுமென்பதை அர்த்தப்படுத்துகிறது என்று வலியுறுத்துகிறது.
இதற்கு, அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்க போராட்டங்களுக்கு தலைமை கொடுக்க ஒரு புதிய சோசலிச அரசியல் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இதற்கு என்ன அவசியமென்றால், ICFI ஆல் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் மற்றும் போல்ஷிவிக் கட்சியின் சமரசமற்ற போராட்டத்தின் பாரம்பரியங்களுக்குத் திரும்புவது அவசியமாகிறது.
முதலாளித்துவத்தின் கீழ் ஏற்பட்டுள்ள வாழ்வின் அனைத்து சமூக அவலங்களுக்கும் எதிரான போராட்டங்களை, சிக்கன கொள்கைகள், போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்துடன் இணைத்து, ஸ்பெயினிலும் ஐரோப்பா எங்கிலும் உள்ள தொழிற்சாலைகள், வேலையிடங்கள், தொழிலாள வர்க்க மாவட்டங்களிலும், பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் விவாதிக்க வேண்டும். இது, வணிகம் சார்ந்த கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக சுயாதீனமாக, வேலையிட மற்றும் குடியிருப்புகளில் மக்கள் குழுக்களின் ஒரு வலையமைப்பை உருவாக்குவதற்கு அடித்தளம் அமைத்து, தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைகளின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கு செய்வதற்காக அரசு அதிகாரத்தைக் கையிலெடுக்க ஒரு சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்யும்.
முதலாளித்துவ ஸ்பெயின் மற்றும் ஒரு முதலாளித்துவ கட்டலோனியாவின் உருவாக்கத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கட்டமைக்க அழைப்புவிடுக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் அரசாங்கங்களை உருவாக்கி ஒரு சோசலிச அடிப்படையில் ஐரோப்பாவை ஒருங்கிணைப்பது மட்டுமே சமூக பிற்போக்குத்தனம் மற்றும் போருக்குள் இறங்குவதில் இருந்து தடுக்கும் என்பதோடு, அதுவே ஐரோப்பிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஐரோப்பாவின் ஒரேசீரான பொருளாதார வளர்ச்சியை அனுமதிக்கும். இந்த அறிக்கையுடன் உடன்படுகின்ற அனைத்து தொழிலாளர்களும் இளைஞர்களும் ICFI இன் ஆவணங்களை வாசித்து வினியோகிக்குமாறும், ஸ்பெயினில் ICFI இன் ஒரு பிரிவைக் கட்டமைக்கும் போராட்டத்தில் இணைய உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்புகொள்ளுமாறும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுக்கிறது.