Print Version|Feedback
War and Revolution: 1914–1917
போரும் புரட்சியும்: 1914-1917
By Nick Beams
10 April 2017
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் அங்கத்தவரான நிக் பீம்ஸ் ஏப்ரல் 8 சனிக்கிழமையன்று வழங்கிய ஒரு உரையின் எழுத்துவடிவத்தை இங்கே நாங்கள் வெளியிடுகிறோம். 1917 அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டைக் குறிக்கும் விதமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வழங்கப்பட்டு வருகின்ற சர்வதேச இணையவழி உரைகள் ஐந்தின் வரிசையில் இது மூன்றாவதாகும்.
டேவிட் நோர்த் இந்த உரைத்தொடரை தொடங்கி வைக்கும்போது கூறிய ஒரு மிக முக்கியமான புள்ளிதான் போரும் புரட்சியும்: 1914-1917 என்ற எனது இன்றைய உரையின் அச்சாக இருக்கிறது.
ரஷ்யப் புரட்சியை ஏன் கற்க வேண்டும் என்பதற்கான 10 காரணங்களில் ஏழாவதாக, அவர் பின்வரும் அவதானிப்பைக் கூறியிருந்தார்:
“ரஷ்ய புரட்சி விஞ்ஞானபூர்வ சமூக சிந்தனையின் அபிவிருத்தியில் ஒரு இன்றியமையாத அத்தியாயமாக முக்கியத்துவத்துடன் அதை கற்கக் கோருகிறது. 1917 இல் போல்ஷிவிக்குகளது வரலாற்று சாதனையானது விஞ்ஞானரீதியான சடவாத மெய்யியலுக்கும் புரட்சிகர நடைமுறைக்கும் இடையிலான அத்தியாவசியமான உறவை விளங்கப்படுத்தியும் நடைமுறைப்படுத்தியும் காட்டியது.
இந்த அணுகுமுறையானது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மூன்று காரணங்களுக்காக இன்றியமையாததாகும்.
முதலாவதாய், முதலாம் உலகப் போரின் தன்மை, அதன் மூலங்கள், அதன் அடித்தளமான காரணங்கள், அத்துடன் நம்முடைய காலத்திற்கு அது கொண்டிருக்கும் நீடித்த முக்கியத்துவம் மற்றும் பொருத்தம் ஆகியவற்றை புரிந்து கொள்வதற்கு ஒரு சடவாத அணுகுமுறை முக்கியமானதாக இருக்கிறது.
இரண்டாவதாய், போரை உருவாக்கியிருந்த உலக முதலாளித்துவத்தின் அதே உருமாற்றங்களில் இருந்தே எழுந்திருந்த ரஷ்ய புரட்சியின் புறநிலைக் காரணங்களை கண்டறிவதற்கு அது நமக்கு வழிவகை செய்து தருகிறது.
மூன்றாவதாக, 1917 நவம்பரில் போல்ஷிவிக்குகளின் தலைமையில் தொழிலாள வர்க்கம் வெற்றிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் விளைந்த, எல்லாவற்றுக்கும் மேல் லெனினால் அபிவிருத்தி செய்யப்பட்ட புரட்சிகர மூலோபாயத்தின் அடிப்படையான உள்ளடக்கத்தை புரிந்து கொள்வதற்கு அது நமக்கு வழிவகை செய்து தருகிறது.
இங்கே சற்று சுருக்கமான வடிவத்தில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய புள்ளிகள், நிகழ்வுகள் மற்றும் லெனினின் அரசியல் பகுப்பாய்வினை நாம் ஆராயும்போது தெளிவாகும் என்று நான் நம்புகிறேன்.
போரும் புரட்சியும்: 1914-1917
முதலாம் உலகப் போரின் புறநிலைக் காரணங்கள்
முதலாம் உலகப் போரின் பற்றிய பிரச்சினைக்குத் திரும்புவோம். 1914 ஆகஸ்ட் 4 அன்று அது வெடித்து நூறு வருட்ங்களுக்கு மேலாகியும் கூட, அதன் மூலகாரணங்கள் குறித்த பிரச்சினை இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. காரணம் என்னவென்றால் இந்தப் பிரச்சினை சமகால நிகழ்வுகள் குறித்த பகுப்பாய்வுக்கு நேரடியான பொருத்தம் கொண்டதாகும்.
மார்க்சிசத்தின் நிலைப்பாடு மற்றும் முதலாளித்துவ தாராளவாத கல்வியறிவின் பல்வேறு வடிவங்களது நிலையிலிருந்து பொதுவாக இரண்டு எதிரெதிர் நிலைப்பாடுகள் இருப்பதாய் குறிப்பிடலாம்.
மார்க்சிச பகுப்பாய்வின் படி, பரந்த வார்த்தைகளைக் கொண்டு சுருக்கமாகச் சொல்வதானால், போர் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் புறநிலையான மற்றும் தீர்க்கவியலாத முரண்பாட்டில் —அதாவது பொருளாதாரத்தின் உலகளாவிய தன்மைக்கும் இலாப அமைப்புமுறை அடித்தளமாக கொண்டுள்ள தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலானது— வேரூன்றியிருக்கும் மோதல்களது விளைபொருளாக இருந்தது.
எதிரெதிரான தத்துவங்களோ, போர் என்பது அரசியல் தவறுகளாலும், தப்புக்கணக்குகளாலும், பல்வேறு முதலாளித்துவ அரசியல்வாதிகளின் தவறான கணிப்புகளாலும் வந்தது, புத்திசாலித்தனமான தலைவர்கள் இருந்திருந்தால் அது எப்படியேனும் தவிர்க்கப்பட்டிருக்க முடியும் என்ற கருத்தில் வந்து முடிவதாக இருக்கின்றன.
அரசியல் விடயங்கள் இந்த எதிரெதிரான மதிப்பீடுகளுடன் உடனடிப் பிணைப்பு கொண்டவையாக இருக்கின்றன. மார்க்சிச பகுப்பாய்வு சரியென்றால், முதலாளித்துவ தனியார் இலாபம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவராமல், ஒரு புதிய சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கை உருவாக்காமல், போர் மற்றும் பாரிய அழிப்பின் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்ட முடியாது என்பதே அதில் இருந்து பிறக்கின்ற முடிவாய் இருக்கிறது.
அதனால் தான், ஆரம்பத்தில் இருந்தே, முதலாளித்துவ அரசியல்வாதிகள், நான்காண்டு காலப் போரினால் மனிதகுலத்திற்கு இழைக்கப்பட்டிருந்த மனித வரலாற்றின் மாபெரும் அழிப்புக்கு தலைமை தாங்கியிருந்த நிலையிலும், அவர்களுக்கோ அல்லது அவர்கள் தலைமை கொடுத்திருந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கோ எந்தப் பொறுப்பும் இல்லை என்று கைதுறப்பு செய்ய முனைந்தனர். போர்க்கால பிரிட்டிஷ் பிரதமர் லோயிட் ஜோர்ஜ் கூறுவதன் படி, அது கிட்டத்தட்ட யாரும் கவனிக்காமல் வந்து விட்டிருந்தது. போர் என்பது பெரும் சக்திகள் “கவனியாமல் நகர்ந்திருந்த, அல்லது கண்டு திகைத்திருந்த மற்றும் தட்டுத்தடுமாறிச்சென்ற” ஒன்றாக இருந்தது. தேசங்கள் “போரெனும் கொதிக்கும் கலனின் விளிம்புக்கு கட்டுப்பாடின்றி விரைந்து வழுக்கிச் சென்று கொண்டிருந்தன.”[1]
முதலாளித்துவ அரசியல்வாதிகளை அடியொற்றி முதலாளித்துவ வரலாற்றாசிரியர்களும், உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளது ஒரு வன்மையான வெடிப்பே முதலாம் உலகப் போர் என்ற மார்க்சிச பகுப்பாய்வை மறுதலிக்கும் முயற்சியிலான எந்தவொரு முனைப்பையும் விட்டுவைப்பதில்லை. உதாரணத்திற்கு, பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரான நைய்ல் ஃபேர்குசன் சொல்வதன்படி, தொழிலதிபர்கள் போரை விரும்பினார்கள் என்பதற்கு ஆதாரம் அதிகமில்லையாம்; உண்மையில், அவர்கள் அதன் பின்விளைவுகளைக் கண்டு அஞ்சினார்களாம். ஆகவே, போரின் மூலங்கள் குறித்த மார்க்சிச பொருள்விளக்கமானது, “அதனை உருவாக்கிய ஆட்சிகள் அநேகமானவற்றுடன் சேர்த்து, வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் போடப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்துகிறார்.[2] எந்த தொழிலதிபரும் மந்தநிலையையும் பொருளாதார நெருக்கடிகளையும் விரும்புவதில்லை, என்றாலும் அவை நிகழ்கின்றன என்று ஒருவர் பதிலளிக்கலாம்.
அது எல்லாமே தவறுகளின், தப்புக்கணக்குகளின், தவறானகணிப்புகளின் விளைபொருள்தான் என்றால், பின்னர் ஏன், ”அனைத்து போர்களையும் முடித்து வைப்பதற்கான போர்” முடிந்து இரண்டு தசாப்தங்கள் தான் கடந்த நிலையில் அதனினும் பெரிதான ஒரு பேரழிவு 1939 இல் இரண்டாம் உலகப் போரின் வடிவத்தில் எழுந்தது? இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்ற ஒரு நிலையுடன் அதிர்ச்சியூட்டும் ஒப்புமை கொண்டதான ஒரு நிலைக்கு —ஒரு சிலவற்றை மட்டும் பெயர் குறிப்பிடுவதென்றால், கிழக்கு ஐரோப்பாவில், தென் சீனக் கடலில், கொரியாவில், மத்திய கிழக்கில் எண்ணிலடங்கா வெடிப்பு புள்ளிகள், பெரும் முதலாளித்துவ சக்திகள் இடையில் அதிகரித்துச் செல்லும் பதட்டங்கள்— இன்று உலகம் முகம்கொடுத்து நிற்பது ஏன்?
‘போர் என்பது அரசியலை வேறு வழிமுறைகளின் மூலம் தொடர்வதாகும்’ என்று 19 ஆம் நூற்றாண்டில் ஜேர்மன் தத்துவாசிரியரான கிளவ்ஸ்விற்ஸ் முன்வைத்த அவதானிப்பின் மீதே மார்க்சிசம் போர் குறித்த பகுப்பாய்வுக்கான தனது அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது.
அப்படியானால் முதலாம் உலகப் போரின் வெடிப்புக்கு இட்டுச் சென்றதும், அது எழுவதற்கு காரணமாக இருந்த அக்காலகட்டத்தில் நிலவிய அரசியல் உறவுகள் என்னவாய் இருந்தன?
இறுதி ஆய்வில், அரசியல் உறவுகளை முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொருளாதார அபிவிருத்திகளில் வேர்கொண்டுள்ள ஒரு விஞ்ஞானபூர்வ, அதாவது சடரீதியான பகுப்பாய்வின் மூலமாக மட்டுமே அவை புரிந்து கொள்ளப்பட முடியும்.
போருக்குச் செல்வதான முடிவு உள்ளிட்ட முடிவுகளை முதலாளித்துவ அரசியல்வாதிகள் தான் எடுக்கிறார்கள் என்பது உண்மையே. போர் இந்த குறிப்பிட்ட நாளில் வெடித்தாக வேண்டும் என்று கூறுகின்றதான பொருளாதார விதி ஒன்றும் கிடையாது.
ஆனால் அவர்களது முடிவுகள் அவர்கள் தொழிற்படுகின்ற அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பினால் —இதன்மூலமாகவே அவர்கள் தாங்கள் தலைமை கொடுக்கின்ற முதலாளித்துவ தேசிய-அரசுகளது நலன்களை முன்னெடுப்பதற்கு முனைகிறார்கள்— உருக்கொடுக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட புள்ளியில், அது எத்தனை விருப்பத்திற்குரியதாய் இருந்தாலும் சரி அல்லது விருப்பமில்லாததாய் இருந்தாலும் சரி, போருக்குச் செல்லும் முடிவுதான் தாம் எதிர்கொள்ளும் ஆகக்குறைந்த மோசமான தெரிவாக அவர்கள் முகம்கொடுக்கின்றனர்.
நாம் ஒரு விரிந்த பார்வையை எடுத்துப் பார்த்தால், முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்வருகின்ற காலகட்டம் இரண்டு தனித்துவமான சகாப்தங்களாக பிரிந்து நிற்பதைக் காணலாம்.
1789-1793 சிறப்புமிக்க பிரெஞ்சுப் புரட்சி ஒரு புதிய வரலாற்று சகாப்தத்தை திறந்து விட்டது: காலாவதியான நிலப்பிரபுத்துவ ஆட்சிகள் தூக்கிவீசப்பட்டு, முதலாளித்துவ தேசிய-அரசுகள் அபிவிருத்தி காண்பதற்கான பாதை அமைத்துத் தந்ததாய் இருந்தது.
1789 முதல் 1871 வரையான காலகட்டம், தேசிய அளவிலான போர்கள் மற்றும் புரட்சிகளது ஒரு வரிசையின் மூலமாக, முதலாளித்துவ தேசிய-அரசுகளின் நவீன கால கட்டமைப்பு உருவாக்கப்படுவதைக் கண்டது, பிராங்கோ-பிரஷ்ய போரின் முடிவில் பிஸ்மார்க் மூலம் ஜேர்மன் தேசிய அரசு உருவாக்கப்பட்டதில் இது உச்சம் கண்டது.
அமெரிக்க உள்நாட்டுப் போருடன் —இது தொழிற்துறை வடக்கு வெற்றிபெறுவதில் முடிந்தது— சேர்ந்து, இந்த தேசிய அரசுகள் முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி சக்திகள் அபிவிருத்தி காண்பதற்கு ஒரு வலிமையான உந்துவேகத்தை அளித்தன. ஆயினும், அதே நிகழ்ச்சிப்போக்கு ஒரு புதிய சகாப்தத்திற்கும் பிறப்பளித்தது.
19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கால்பகுதிக்கும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க தசாப்தத்திற்கும் குணாம்சமாய், நிலவுடமை முடியாட்சியின் எச்சசொச்சங்களுக்கு எதிரான தேசியப் போர்கள் அல்ல, மாறாக மேலெழுந்து வந்த முதலாளித்துவ பெரும் சக்திகளது காலனிகளுக்கான போட்டிகளே இருந்தன. உதாரணமாய், ஆபிரிக்கா 1875 இல் காலனியாக்கப்படுவது அப்போது தான் ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த நூற்றாண்டு முடிவதற்குள்ளான இருபத்தியைந்து ஆண்டுகளில், அது பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தால் கிட்டத்தட்ட முழுமையாக துண்டுபோடப்பட்டு விட்டிருந்தது.
உலகின் அரசியல் கட்டமைப்பு இந்த பொருளாதார அபிவிருத்திகளின் மூலமாக உருமாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், பெரிய பிரித்தானியா மேலாதிக்கமான உலக முதலாளித்துவ சக்தியாக இருந்தது. அது உலகின் தொழிற்பட்டறையாக இருந்து, கடல்களில் ஆதிக்கம் செலுத்தியது.
ஆனால் புதிய போட்டியாளர்கள் எழுந்து கொண்டிருந்தனர்: ஐரோப்பிய கண்டத்தில், பரந்த தொழில்மயமாக்கத்திற்குள் சென்று கொண்டிருந்த ஜேர்மனியின் வடிவத்தில், கிழக்கில் ஜப்பானின் வடிவத்தில், மேற்கில் அமெரிக்காவின் —1898 ஸ்பானிய-அமெரிக்க யுத்தம் மற்றும் அதனையடுத்து பிலிப்பைன்ஸை இணைத்துக் கொண்டது மற்றும் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்ததன் மூலமாக அது காலனிகளுக்கான போட்டிக்குள் காலடி எடுத்து வைத்தது.
இந்த முதலாளித்துவ சக்திகள் ஒவ்வொன்றுமே, ஜேர்மனியில் உருவான சொல்லாடலைப் பயன்படுத்திச் சொல்வதானால், “சூரியனில் தனக்குரிய இடம்” தேடிக் கொண்டிருந்தன. ஆனால் அவ்வாறு செய்கையில் அவை ஒன்றுக்கொன்று எதிர்த்து நிற்க வேண்டியதானது.
ஒருசமயம், ஜேர்மன் தூதர் ஒருவர் பிரிட்டிஷ் தூதர்களிடம், அவர்களது ’மாட்சிமை பொருந்திய அரசாங்கம்’ எங்கு தான் ஜேர்மன் காலனிகள் நிறுவப்படுவதை எதிர்க்காது என்று கேட்டார். ஜேர்மன் காலனிகள் பிரிட்டிஷ் காலனிகளை ஒட்டியோ அல்லது இரண்டு பிரிட்டிஷ் காலனிகளுக்கு நடுவிலோ இல்லாத வரையில் அவை உருவாக்கப்படுவதில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எந்த ஆட்சேபமும் இருக்காது என்பதாய் அந்த பிரிட்டிஷ் தூதர் பதிலளித்தார். அந்த ஜேர்மன் தூதர் பதிலளித்தார், அதாவது வேறு வார்த்தைகளில் சொன்னால், “எங்குமே கிடையாது”.
பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துச் சென்று கொண்டிருந்தன. பிரிட்டனும் பிரான்சும் 1898 இல் ஃபசோடா (Fashoda) சம்பவம் என்று சொல்லப்பட்ட, நைல் நதியின் உயர்மட்டப் பகுதியில் அவர்களது இராணுவங்கள் மோதிக் கொண்டதான சம்பவத்தில், கிட்டத்தட்ட போருக்குச் சென்று விட்டன.
ஜேர்மன் கைசர் தென் ஆபிரிக்காவில் போயர்களுக்கு (Boers) தனது ஆதரவை வெளிப்படுத்திய போது ஒரு மோதல் வெடித்தது. ஆஸ்திரிய-ஹங்கேரிய சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பால்கன்கள், ஆஸ்திரிய ஆட்சிக்கான தேசிய எதிர்ப்பு கொந்தளிக்க —ரஷ்யா மேற்கு நோக்கி தனது நலன்களை முன்னெடுக்கும் முனைப்பில் ஒரு நேரடியான பங்கைக் கொண்டிருந்த ஒரு மோதலாய் அது இருந்தது— ஒரு வெடிக்கிடங்காக ஆகிக் கொண்டிருந்தது.
அரசாங்க அலுவலகங்களிலும் தூதரகங்களிலும், இந்தப் புதிய காலகட்டத்தின் தாக்கங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
1907 இல், பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அலுவலகத்தில் ஒரு துணைச் செயலராய் இருந்த ஏய்ர் குரோவ், வெளியுறவுச் செயலரான லார்ட் கிரே க்கு ஒரு நீண்டதொரு அறிக்கை அளித்தார். ஜேர்மனியின் பொருளாதாரமும் செல்வாக்கும் துரிதமாக விரிவு கண்டு சென்று கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், ஜேர்மனியின் நோக்கங்கள் அமைதிவழியானவையா அல்லது இராணுவரீதியானவையா என்பது குறித்த ஒரு மதிப்பீடு செய்யும் பொறுப்பு குரோவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவர் என்ன முடிவு கூறியிருந்தார் என்றால், ஜேர்மனியின் அபிவிருத்தியும் அதன் உலகளாவிய நலன்கள் விரிவடைவதுமே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு ஒரு அச்சுறுத்தல் தான் என்பதால் இந்த ஆராய்ச்சி அவசியமே அல்ல என்று கூறியிருந்தார். ஆகவே ஜேர்மனியின் நோக்கங்கள் குறித்து என்ன மதிப்பீடு செய்யப்பட்டாலும், பிரிட்டன் போருக்குத் தயாரிப்பு செய்து தான் ஆக வேண்டும். அந்தப் போர் அடுத்த ஏழு ஆண்டுகளின் பின்னர் வெடித்து விட்டது.
1914 ஆம் ஆண்டின் மிகப்பெரும் போரை தொடக்கி வைத்த உடனடி சம்பவமான, ஜூன் 28 அன்று பொஸ்னியா, சராஜேவோவில் ஆஸ்திரிய இளவரசர் ஃபேர்டினாண்ட் ஒரு சேர்பிய தேசியவாதியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தான் ஒரு தற்செயலாகும். அதன்பின் வந்தவை தற்செயலல்ல.
மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த ஆஸ்திரிய ஆட்சியானது உடைவு காணும் அச்சத்தில் இருந்தது. சேர்பியாவினால் முன்னிலை கொடுக்கப்பட்டும் ரஷ்யாவின் வடிவத்தில் அதனினும் பெரியதொரு அச்சுறுத்தலால் ஆதரிக்கப்பட்டும் பால்கன்களில் எழுந்து வந்த தேசியவாத எதிர்ப்பை நசுக்குவதற்கு அது தீர்மானத்துடன் இருந்தது. போரைத் தூண்டுகின்ற நோக்கத்துடன், படுகொலை குறித்த விசாரணை தொடர்பாக சேர்பியாவின் மீது சாத்தியமில்லாத கோரிக்கைகளை வரிசையாக அது சுமத்தியது.
ஆஸ்திரிய சூழலானது ஐரோப்பாவின் பெரும் சக்திகள் அனைத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுடன் பின்னிப்பிணைந்ததாக இருந்தது என்ற உண்மை நிலை அங்கு இல்லாதிருந்திருந்தால் அந்தப் போர் ஒரு பிராந்திய சண்டையின் மட்டத்துடன் நின்றிருந்திருக்கக் கூடும்.
பேர்லினில் இருந்த கோஹென்சோலெர்ன் ஆட்சி, தனது ஆஸ்திரிய கூட்டாளிக்கு, சேர்பியாவுக்கு எதிராக தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு, அது ரஷ்யாவுடன் ஒரு போருக்கு இட்டுச் செல்லக் கூடும் என்றாலும் கூட, ஒரு “வேண்டியதொகை நிரப்பிக் கொள்ளத்தக்க ஒரு காசோலை”க்கு நிகரான ஒரு ஆதரவை அளித்தது. சேர்பியர்கள், ரஷ்யா மற்றும் பிரான்சின் உதவியுடன், ஆஸ்திரிய முடியாட்சியின் ஸ்திரத்தன்மைக்கு அபாயம் விளைவிக்க அனுமதிக்கப்பட்டார்களாயின், அது ஜேர்மனியின் நிலையை பலவீனம் செய்துவிடும் என்று உத்தியோகபூர்வ அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்தது. இன்றியமையாத பொருளாதார நலன்களும் பணயத்தில் இருந்தன.
ஜேர்மன் அரசியல்வாதியான குஸ்ராவ் ஸ்ட்ரேஸமான் 1917 ஐ திரும்பிப் பார்த்து, அவர் யார் சார்பாகப் பேசினாரோ அந்த சக்திவாய்ந்த தொழிற்துறை வட்டாரங்களில் நிலவிய கண்ணோட்டத்தை சுருக்கமாய் கூறினார்: ஜேர்மனி “மற்றவர்கள் உலகைக் கைப்பற்றுவதை” கண்டிருந்தது, “மற்றவர்களின் செங்கோலின் கீழ்” எங்களது “வாழ்க்கையின் பொருளாதார சுவாசம்” மேலும் மேலும் தடைப்பட்டுக் கொண்டிருந்தது.[3]
ஜேர்மனியுடனான மோதலில் ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதில் பிரான்சுக்கும் இதற்கு சளைக்காத இன்றியமையாத பிரச்சினைகள் பங்குவகித்தன. 1871 இல் அல்சாஸ்-லோரெய்ன் மாகாணத்தை ஜேர்மனி இணைத்துக் கொண்டதானது, மார்க்ஸ் மிகக்கூர்மையாக முன்கணித்திருந்தவாறு, பிரான்சுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அவை இணைந்து ஜேர்மனிக்கு எதிராக ஆயுதமேந்தும் வகையான ஒரு கூட்டணிக்கு வழிவகுத்திருந்தது.
ஜேர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதலில், பிரான்ஸ் நடுநிலை வகிக்க முடியவில்லை ஏனென்றால், பிரெஞ்சு ஜனாதிபதி புவான்கரே (Poincaré) பின்னர் விளக்கியதைப் போல, கால் நூற்றாண்டு காலமாய் இருந்து வந்திருந்த ஒரு கூட்டணி உடைவதென்பது “எங்களை தனிமைப்படுத்துவதுடன், எங்களை, எங்களது எதிரிகளின் கருணையில் விட்டுவைப்பதாகி விடும்”.
அதைப் போலவே பிரிட்டனும் இன்றியமையாத மூலோபாய மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருந்தது. அதன் சாம்ராஜ்யத்தை, எல்லாவற்றுக்கும் மேல் இந்தியாவின் மீதான சூறையாடலை அடிப்படையாகக் கொண்ட அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை சவால் செய்யும்படி எந்த தனியானதொரு சக்தியோ அல்லது சக்திகளின் ஒரு குழுவோ எழுந்து விடாமலிருப்பதை உறுதி செய்கின்ற வகையில், ஐரோப்பாவில் அதிகார சமநிலையை பராமரிப்பதையே அதன் கொள்கை அடிப்படையாய் கொண்டிருந்தது.
அப்போது கடற்படையின் முதல் தளபதி பிரபுவாக இருந்த வின்ஸ்டன் சேர்ச்சில், குறிப்பிடத்தக்க அளவிலான ஒரு நேர்மையான மதிப்பீட்டில், அதன் நிலையை கடற்படை செலவினம் குறித்த 1913-14 விவாதம் ஒன்றின் போது சுருங்க எடுத்துரைத்தார்:
”நிலப்பரப்பில் நாம் விரும்பும் அத்தனையும் நாம் பெற்றிருக்கிறோம், பிரதானமாக வன்முறையால் பெறப்பட்டு, பெரும்பாலும் படைவலிமையை கொண்டு காப்பாற்றப்பட்டு வருகின்ற பரந்த மற்றும் அற்புதமான செல்வங்களை பிறர் கைபடாமல் அனுபவிப்பதில் நமக்கு விடப்படும் உரிமையானது, பெரும்பாலும் நம்மைக் காட்டிலும் மற்றவர்களுக்கு நியாயம் குறைந்த விடயமாக தென்படுகிறது.” [5]
அதற்குத் தக்கவாறு, சில இலைமறைவுகாய்மறைவு வசனங்களுக்குப் பின்னர், பிரிட்டன் பிரான்சை ஆதரிக்க முடிவு செய்தது, ஜேர்மனிக்கு எதிராய் போரில் இறங்கியது.
போரின் உண்மையான நோக்கங்கள் ஒருபோதும் சொல்லப்படவில்லை என்பது உண்மையே. ஒரு அரசாங்கம் இலாபங்களுக்காகவும், வளங்கள், காலனிகள் மற்றும் சந்தைகளை கைப்பற்றுவதற்காகவும் தனது இளம் தளிர்களை யுத்தக்களங்களில் இறப்பதற்கும் ஊனமடைவதற்கும் அனுப்புகிறது என்று தன் மக்களிடம் எப்படி அறிவிக்க முடியும்? வல்லரசுகள் வெகுஜன ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட முடிவற்ற ஒருதொடர் பொய்களை கொண்டு உண்மையான நோக்கங்களை மூடிமறைப்பதற்கு முனைந்தன.
ஜேர்மனியில், “தந்தைநாட்டை பாதுகாக்கவும்”, ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக ஜேர்மனியின் கலாச்சாரத்தையும் பொருளாதாரத்தையும் காப்பாற்றவும் போர் புரியப்படுவதாக பிரகடனம் செய்யப்பட்டது.
பிரான்ஸ், கொடுங்கோல் ஜாரிச ஆட்சியுடன் அது கூட்டணி சேர்ந்திருந்தது என்ற உண்மை ஒருபக்கம் இருக்க, பிரஷ்ய எதேச்சாதிகாரத்திற்கு எதிராய் பிரெஞ்சு அரசியல் வாழ்க்கையின் இலட்சியங்களையும், சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகிய பிரெஞ்சுப் புரட்சியின் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கு போரில் இறங்குவதாக அறிவித்தது.
பிரிட்டன், “ஹன்ஸ்” இனத்தவர்களால் ஒட்டுமொத்தமாய் மீறப்பட்டிருந்த “குட்டி பெல்ஜியத்தின்” நடுநிலையைக் காப்பாற்றுவதற்காக —விட்டிருந்தால் பிரிட்டனும் இதைச் செய்திருக்கும் என்பதே உண்மையாக இருந்தபோதிலும்— போரில் இறங்குவதாக அறிவித்தது.
1917 ஏப்ரலில் அமெரிக்கா, தனது சொந்த மூலோபாய மற்றும் நிதி நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போரில் குதித்த சமயத்தில், இந்தப் போர் “இந்த உலகத்தை ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்காக” என்று சொல்லி அந்த பொய் மலையில் தன் பங்கையும் சேர்த்துக் குவித்தது.
இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்பு
போரின் வெடிப்பு மார்க்சிச இயக்கத்துக்கு ஆச்சரியமளிக்கவில்லை. சொல்லப் போனால், 1887 வாக்கிலேயே அதன் நிழலாட்டம் பிரெடெரிக் ஏங்கெல்சினால் உணரப்பட்டு விட்டது.
பிரஷ்யா-ஜேர்மனியால் நிகழ்த்தப்பட மீதமிருக்கும் ஒரேயொரு போர் இனி ஒரு உலகப் போர் தான், என்று எழுதிய அவர், அதன் வன்முறை இதுவரை கற்பனைசெய்திராத அளவுக்கு இருக்கும் என்று கூறினார்.
“எட்டு முதல் பத்து மில்லியன் வரையான சிப்பாய்கள் ஒருவர் கழுத்தை இன்னொருவர் குறிவைத்திருப்பார்கள், அந்த நிகழ்ச்சிப்போக்கில் அவர்கள் ஒரு தேன் கூட்டைப் பிய்ப்பது போல ஐரோப்பாவை பிய்த்தெறிவார்கள். முப்பதாண்டுகளது ஒரு போரின் சூறையாடல்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் சுருக்கப்படும், ஒட்டுமொத்த கண்டத்திற்கும் விரிவு காணும்: பஞ்சம், நோய், காட்டுமிராண்டித்தனத்துக்குள் உலகளாவிய பின்னடைவு, இராணுவம் மற்றும் மக்கள் இரண்டுமே பெரும் துயரத்தில் சிக்குவது, மனிதனால் உருவாக்கப்பட்ட வர்த்தகம், தொழிற்துறை மற்றும் கடன் ஆகியவற்றின் அமைப்புமுறை திரும்பவியலாத அளவுக்கு முடமாவது ஆகியவை, கிரீடங்கள் ஏராளமாய் சாக்கடைகளில் உருண்டோடுகின்ற அளவுக்கு உலகளாவிய திவால்நிலையிலும் பழைய அரசுகள் மற்றும் அவற்றின் அரசியல் ஞானம் உருக்குலைவதிலும் முடிவடையும்.”
போர் எப்படி முடியும் யார் வெற்றி பெறுவார் என்பதை முன்கணிப்பது சாத்தியமில்லாதது என்று அவர் தொடர்ந்தார். “ஒரேயொரு பின்விளைவு தான் முழுக்க நிச்சயமானது: உலகளாவிய களைப்பும் தொழிலாள வர்க்கத்தின் இறுதி வெற்றிக்கான நிலைமைகள் உருவாக்கப்படுவதும் தான்.” [6]
மார்க்சிசத்துக்கு அர்ப்பணித்ததாக பிரகடனம் செய்து கொண்ட சமூக-ஜனநாயகக் கட்சிகளை கொண்ட இரண்டாம் அகிலமானது, பெரும் சக்திகளுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் பதட்டங்கள் எழுவதை குறிப்பிட்டு, சந்தைகளுக்கும் இலாபங்களுக்குமான போராட்டத்தில் இருந்து போர் எழுவதன் அபாயங்களை சுட்டிக் காட்டியது.
ஆனால் போரின் வெடிப்பு ஒரு அதிர்ச்சியாக இல்லையே தவிர, அகிலத்தின் முன்னணிக் கட்சிகளின் எதிர்வினை அதிர்ச்சியளித்ததாக இருந்தது.
ஆகஸ்ட் 4, 1914 அன்று, ஜேர்மன் துருப்புகள் பிரான்சை கைப்பற்றும் நோக்கத்துடன் பெல்ஜியத்துக்குள் அணிவகுத்துச் சென்ற நிலையில், அகிலத்தின் முன்னணிக் கட்சியான ஜேர்மன் SPD இன் நாடாளுமன்ற பிரதிநிதிகள், போர் நிதிக்கு ஆதரவாக ஒருமனதாய் வாக்களித்தனர். 92 இல் 14 பேர் அதனை எதிர்த்தபோதும், அவர்கள் கட்சி கட்டுப்பாட்டை ஏற்று நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தனர். பிரான்சின் சோசலிஸ்டுகளும் அதனை அடியொற்றி, தமது சொந்த தேசத்திற்கான ஆதரவை அறிவித்தனர்.
அவர்களது முடிவுகள் இரண்டாம் அகிலத்தின் காங்கிரசுகளில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானங்களுக்கு முழு மறுதலிப்பாக இருந்தது. 1907 இல், ஜேர்மனியின் ஸ்ருட்கார்ட்டில் நடந்த ஒரு காங்கிரசில், அத்தனை கட்சிகளும் போரை நிறுத்துவதற்கு தாங்கள் அவசியமாகக் கருதும் ஒவ்வொரு வழியிலும் “ஒவ்வொரு முயற்சியையும் பிரயோகம் செய்வது” அவற்றின் கடமையாகும் என்று அறிவிக்கும் ஒரு தீர்மானத்தை அகிலம் நிறைவேற்றியிருந்தது.
பின் அந்த தீர்மானம் இவ்வாறு விதித்திருந்தது:
“அத்தனைக்குப் பின்னரும் போர் வெடித்து விட்டதென்றால், அதனை வேகமாக முடிவுக்குக் கொண்டு வரத் தேவையான அளவில் தலையீடு செய்வதும், போரினால் உருவாக்கப்படுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி மக்களைத் தட்டியெழுப்பி அதன்மூலம் முதலாளித்துவ வர்க்க ஆட்சியை ஒழிப்பதை துரிதப்படுத்துவதற்கு தமது சக்திக்குட்பட்ட அத்தனையையும் செய்வதும் அவற்றின் கடமையாகும்.” [7]
போர் மேகங்கள் கூடிநின்ற நிலையில், 1912 இல் நடந்த பாசில் காங்கிரஸ் இந்த தீர்மானத்திற்கு வலுவூட்டியது. அது ஸ்ருட்கார்ட் சொல்லாடல்களை தொடர்ந்து பராமரித்ததோடு, அதன்பின், சொன்னது இன்னும் தெளிவாகப் புரிவதற்காக 1871 பாரிஸ் கம்யூனையும் 1905 ரஷ்ய புரட்சியையும் குறிப்பிட்டுக் காட்டியது.
போருக்கான லெனினின் பதிலிறுப்பு, அது வெடிப்பதற்கு முந்தைய ஆண்டுகளில் அவர் அபிவிருத்தி செய்திருந்த பகுப்பாய்வில் வேரூன்றியதாக இருந்தது. அது காலனிகளுக்கும் இலாபங்களுக்குமான ஒரு ஏகாதிபத்தியப் போர் ஆகும்.
இரண்டாம் அகிலம் காட்டிக் கொடுத்து விட்டதன் அர்த்தம், அது இறந்து விட்டது என்பதாகும் என்று ஆரம்பத்தில் இருந்தே லெனின் வலியுறுத்தினார். அதில் இருந்து அரசியல்ரீதியாகவும், சித்தாந்தரீதியாகவும், அமைப்புரீதியாகவும் முறித்துக் கொள்வது அவசியமாக இருந்தது.
நடந்திருந்ததன் முக்கியத்துவத்தை மூடிமறைப்பதற்கு நடந்த அத்தனை முயற்சிகளுக்கும் எதிராய், இந்த நிலைகுலைவானது “ஒத்துக்கொள்ளப்பட வேண்டும், அதன் காரணங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும், அப்போதுதான் அத்தனை நாடுகளது தொழிலாளர்களின் ஒரு புதிய மற்றும் இன்னும் நீடித்து நிற்கின்ற ஐக்கியத்தை கட்டியெழுப்புவது சாத்தியமாக்கப்பட முடியும்.”
லெனினும் புரட்சிகர தோற்கடிப்புவாதமும்
ஒரு புதிய, மூன்றாம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான லெனினின் மூலோபாய நிலைப்பாடானது, போர் வெடித்ததற்குப் பின்னர் எடுத்துரைக்கப்பட்ட “ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம்” என்ற முன்னோக்கில் சுருங்க விவரிக்கப்பட்டிருந்தது.
“இப்போதைய ஏகாதிபத்தியப் போரை ஒரு உள்நாட்டுப் போராக மாற்றுவது மட்டுமே சரியான பாட்டாளி வர்க்க சுலோகமாகும், அதுவே கம்யூன் இருப்பிலிருந்து வருவதும், பாசல் தீர்மானத்தில் (1912) விவரிக்கப்பட்டிருந்ததும் ஆகும்; மிகவும் அபிவிருத்தி கண்ட முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான ஒரு ஏகாதிபத்தியப் போரின் நிலைமைகள் அத்தனைகளாலும் அது வழிநடாடத்தியதாக இருக்கிறது” என்று 1914 நவம்பரில் வெளியிடப்பட்ட போரும் ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியும் என்ற தலைப்பிலான ஒரு அறிக்கை அறிவித்தது.[8]
அடுத்து வந்த, 1917 அக்டோபரில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதில் உச்சம் கண்ட ரஷ்ய புரட்சிக்கு முந்திய மற்றும் அதன்போதான காலகட்டம் முழுவதிலுமான லெனினின் வேலைகள் அத்தனையுமே, ரஷ்யாவில் மட்டுமல்லாது, அழுத்திச் சொல்லப்பட வேண்டியிருக்கிறது, ஒரு சர்வதேச மட்டத்தில் இந்த முன்னோக்கை முன்னெடுப்பதின் மீதே செலுத்தப்பட்டதாய் இருந்தன.
உலகின் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களையுமே மரணம் மற்றும் அழிவின் சூறாவளிச்சுழலுக்குள் இழுத்து விடக் கூடியதாக இருந்த போரின், ஒரு உலகப் போரின் தன்மையானது, பாட்டாளி வர்க்கத்தின் மூலோபாயமும் தந்திரோபாயமும் ஒரு சர்வதேச மட்டத்திலும் ஒரு பொதுவான முன்னோக்கின் அடிப்படையிலுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும் என்று அர்த்தமளித்தது. பின்னாளில் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, 1914 ஆகஸ்ட் அத்தனை தேசிய வேலைத்திட்டங்களுக்குமான சாவு மணியை அடித்திருந்ததது.
லெனினது வேலைகளது பல தரப்பட்ட பக்கங்கள் மற்றும் அம்சங்களை ஆராய்வதற்கு முன்பாக, ”ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்றுவோம்” என்ற சுலோகம் உண்மையில் எதைக் குறித்தது என்பதில் சில தவறான கருத்துக்களை அகற்றி விடுகிறேன்.
அது ஒரு தீவிரத்தனமான சொல்லாடல் அல்ல. எல்லாவற்றுக்கும் மேல், லெனின், தீவிரத்தன நடவடிக்கையை உரத்து அறிவிப்பது என்ற அராஜகவாத, பாதி-அராஜகவாத மற்றும் தொழிற்சங்க ஆட்சிவாதப் போக்குகளது தனித்துவமான குணமாக இருந்த இந்த வகை குட்டி-முதலாளித்துவ அரசியலுக்கு எதிரானவராய் இருந்தார்.
வீதிக்குப் போய் உள்நாட்டுப் போரின் அவசியத்தைப் பிரகடனம் செய்வது என்பதல்ல அதன் அர்த்தம். அல்லது செயற்கையாக நெருக்கடியை இன்னும் ஆழப்படுத்துவதற்காக சதி வேலைகள் அல்லது அது மாதிரியான “பாலங்களைத் தகர்ப்பது” போன்ற பிற வேலைகளில் என்று லெனின் ஒருமுறை அதனைக் குறிப்பிட்டதுபோல் அவற்றில் ஈடுபடுவது என்பதும் அதன் அர்த்தமல்ல.
சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு, பிரச்சாரத்தின் மூலமாகவும், கல்வியூட்டல் மற்றும் கிளர்ச்சி மூலமாகவும், போரின் வரலாற்று முக்கியத்துவத்தையும் துரிதமாக முகம்கொடுக்கின்ற புரட்சிகரக் கடமைகளையும் தெளிவாக்குகின்றதான அரசியல் வேலைகளது ஒரு வரிசையை விளங்கச் செய்வதாக அது இருந்தது.
இந்த முன்னோக்கு தீவிரத்தன சொல்லாடல் கூச்சல்களில் இருந்து எத்தனை தூரம் தள்ளி இருந்தது என்பதை 1915 மார்ச்சில் லெனினால் உருவாக்கப்பட்ட ஒரு தீர்மானத்தில் இருந்து காணலாம், ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றுவதை நோக்கிய முதல் படிகளை அதில் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். அந்தப் படிகளில் இடம்பெறக் கட்டாயம் பெற்றிருந்தவை: 1) போர் நிதியாதாரத்திற்கு ஆதரவாய் வாக்களிக்க முற்றிலுமாய் மறுப்பது; 2) வர்க்கப்போர் நிறுத்த கொள்கையுடன் முற்றிலுமானதொரு முறிவு; 3) அரசாங்கங்கள் அரசியல்சட்ட சுதந்திரங்களை ஒழித்து இராணுவச் சட்டத்தை அறிமுகம் செய்திருக்கும் இடங்களில் ஒரு தலைமறைவு அமைப்பை உருவாக்குவது; 4) முட்டிக்கொண்டு நிற்கும் தேசங்களது சிப்பாய்களுக்கு இடையில் சகோதரத்துவத்தை பேணுவதற்கு ஆதரவு; 5) தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு புரட்சிகர வெகுஜன நடவடிக்கைக்கும் ஆதரவு. [9]
இவ்வாறான ஒரு புரட்சிகர நடவடிக்கையானது, போர் நடத்திக் கொண்டிருக்கின்ற நாட்டை பலவீனப்படுத்தி அதன் தோல்விக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதை லெனின் தெளிவாக அறிந்திருந்தார். ஆயினும் ஒரு தொழிலாளி-பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன், தனது “சொந்த” ஏகாதிபத்திய வல்லரசு சிதறுவதற்கும் தோல்வியடைவதற்கும் பங்களிப்பு செய்யாமல் தனது “சொந்த” அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வர்க்க அடியைக் கொடுப்பதோ, அல்லது “நமது பக்கத்துடன்” இணைந்து போர் புரிந்து கொண்டிருக்கும் இன்னொரு நாட்டைச் சேர்ந்த தொழிலாளிக்கு கைகொடுப்பதோ முடியாததாகும்.
ஏகாதிபத்தியத்தின் தன்மை
ஏகாதிபத்தியப் போரை ஒரு உள்நாட்டுப் போராக மாற்றுவது என்ற பாதுகாப்புவாதத்திற்கு எதிரான புரட்சிகர தோற்கடிப்புவாத மூலோபாய விளக்கமானது ஏகாதிபத்தியத்தின் தன்மை குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வில் வேரூன்றியிருந்தது.
ஏகாதிபத்திய பிரச்சினையானது மார்க்சிச இயக்கத்தின் அணிகளுக்குள் இன்னும் விரிவாய் போருக்கு முன் வந்த காலகட்டத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது.
1902 இல் போயர் யுத்தத்திற்குப் பின்னர், இங்கிலாந்தைச் சேர்ந்த சமூக தாராளவாதி ஜோன் ஹோப்சன் ஏகாதிபத்தியம்: ஒரு ஆய்வு என்ற ஒரு மிகவும் தாக்கமிக்க ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
ஏகாதிபத்தியம் என்ற வார்த்தை புதியதாக இருக்கவில்லை. ஆனால் முந்திய காலத்தில் அது ஒரு வலிமையான தேசிய அரசு வலுப்படுத்தப்படுவதை குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருந்தது. “புதிய ஏகாதிபத்தியம்” எவ்வாறு பழையதில் இருந்து வேறுபட்டிருந்தது என்றால் அது “போட்டி போடும் சாம்ராஜ்யங்களது தத்துவம் மற்றும் நடைமுறை” மற்றும் வர்த்தக நலன்களின் மீது நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் ஆகியவை சம்பந்தப்பட்டதாக இருந்தது என்று ஹோப்சன் வரைந்து காட்டினார். இது உற்பத்தி மற்றும் வணிகம் மூலம் அதிகம் இல்லாமல் மாறாக காலனிகளில் இருந்தும் சார்பு பிராந்தியங்களில் இருந்தும் வரக்கூடிய பிரம்மாண்டமான கப்பத்தைக் கொண்டு செல்வம் குவிக்கப்படுவதாய் இருக்கின்ற நிதி ஒட்டுண்ணித்துவத்தின் வளர்ச்சிக்கும், தனது பரந்த செல்வத்தை கீழிருக்கும் வர்க்கங்களுக்கு கையூட்டாய் அளித்து அவற்றை தனது ஆட்சிக்கு இணங்கி நடக்கச் செய்ய வைக்கும் நிதிப் பிரபுத்துவம் உதயமாவதற்கும் இட்டுச் சென்றது.
1910 இல், ஆஸ்திரிய மார்க்சிஸ்டான ருடோல்ஃப் ஹில்ஃபேர்டிங் தனது நிதி மூலதனம் என்னும் படைப்பை வெளியிட்டார், அதில் அவர் மார்க்சின் பகுப்பாய்வை அவரின் இறப்புக்குப் பின்னர் நடந்தேறியிருந்த பிரம்மாண்டமான நிதி வளர்ச்சியையும் கணக்கிலெடுக்கின்ற வகையில் விரிவாக்குவதற்கு முனைந்தார்.
“நிதி மூலதனத்தின் விதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிவு இல்லாமல் இன்றைய தினத்தின் பொருளாதாரப் போக்குகளை, ஆகவே எந்த வகையான விஞ்ஞானரீதியான பொருளாதாரம் அல்லது அரசியலை புரிந்து கொள்வதும் சாத்தியமில்லை” என்று அவர் எழுதினார். [11]
லெனின் தனது முன்னோக்குக்கு தத்துவார்த்த அடித்தளத்தை வழங்க முனைந்து கொண்டிருந்த வேளையில், இந்த இரண்டு படைப்புகளும் அவர் மீது ஒரு பெரும் தாக்கத்தைச் செலுத்தின. குறிப்பாக நிதி ஒட்டுண்ணித்துவம் குறித்த ஹோப்சனின் ஆய்வும், அரசியல் மீது நிதி மூலதனத்தின் தாக்கம் குறித்து ஹில்ஃபேர்டிங் வந்தடைந்திருந்த முடிவுகளும் அவரை ஈர்த்தன.
நிதி மூலதனத்தின் ஆதிக்கமானது, சுதந்திரமான போட்டி மற்றும் ஜனநாயகமயமாக்கத்தை அதிகரிப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட 19 ஆம் நூற்றாண்டின் தாராளவாத முதலாளித்துவ அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து கொண்டிருந்தது என்று ஹில்ஃபேர்டிங் விளக்கியிருந்தார். நிதி மூலதனம் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு புதிய சித்தாந்தத்தை அணிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. “இந்த சித்தாந்தம்... தாராளவாதத்திற்கு முற்றிலும் எதிரானதாகும். நிதி மூலதனத்திற்கு சுதந்திரம் தேவையில்லை, மேலாதிக்கம் தான் வேண்டும்.”
பழைய தாராளவாதமானது சர்வதேச அதிகார அரசியலை எதிர்த்திருந்தது என்ற அதேநேரத்தில், நிதி மூலதனமானது, “உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தலையீடு செய்யத்தக்க ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு முதலீட்டுக்கான கோளமாக மாற்றத்தக்க” ஒரு வலிமையான அரசைக் கோருகிறது.”[12]
இதுவே ஒவ்வொரு பெரும் சக்தியின், அது ஜனநாயகக் குடியரசின் வடிவத்தை எடுத்திருந்தாலும் சரி அல்லது ஒரு சர்வாதிபத்திய ஆட்சியின் வடிவத்தை எடுத்திருந்தாலும் சரி, அரசியலை தீர்மானித்தது. நிதி மூலதனத்தின் அரசியல் என்பது, லெனின் கூறியதைப் போல, ”உச்சி முதல் பாதம்வரை” பிற்போக்குத்தனமானதாக இருந்தது.
லெனின் 1915 ஆம் ஆண்டு முழுமையாக அவர் வேலை செய்திருந்த ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்ட கட்டம் என்ற படைப்பில், போர் வெடித்ததில் இருந்து அவர் அபிவிருத்தி செய்து வந்திருந்த பகுப்பாய்வின் அத்தனை இழைகளையும் ஒன்றுசேர்த்தார். அந்த தரவின் மூலமாக அவர் புதிய சகாப்தத்தின் தன்மையை எடுத்துவைத்தார், போர் என்பது எப்படி சந்தைகள், இலாபங்கள் மற்றும் காலனிகளுக்கான நிதி மூலதனத்தின் வேட்கை முனைப்பின் விளைபொருளாக இருந்தது என்பதை அவர் காட்டினார்.
மகத்தான அத்தனை மார்க்சிசப் படைப்புகளையும் போலவே, லெனினின் ஏகாதிபத்தியம் என்ற படைப்பும் ஒரு விவாதப்படைப்பாகும் (polemic). இது ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் போருக்கு முந்தைய காலத்தின் முன்னணி தத்துவாசிரியராக இருந்த கார்ல் காவுட்ஸ்கி, சமூகப் பேரினவாதத்துக்கான தத்துவார்த்த நியாயப்படுத்தல்களை வழங்குவதில் ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு எதிராக படைக்கப்பட்டதாக இருந்தது.
காவுட்ஸ்கியின் கூற்றுப்படி, ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் அபிவிருத்தியில் ஒரு திட்டவட்டமான கட்டத்தில் இருந்தோ அல்லது நிலையில் இருந்தோ எழவில்லை, மாறாக அது முதலாளித்துவத்தின் சில பிரிவுகளது சாதாரணமான “விருப்பத்திற்குரிய” கொள்கையாக மட்டுமே இருந்தது, தொழிற்துறை நாடுகள் பெரும் விளைநிலப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குப் பாடுபடுவதை அது அடக்கியிருந்தது.
இந்த வரையறையானது தொழிற்துறை மூலதனத்தின் பாத்திரமல்லாது நிதி மூலதனத்தின் பாத்திரமாக இருந்த ஏகாதிபத்தியத்தின் மையமான அம்சத்தை கவனியாது கடந்து சென்றதாக இருந்தது.
மேலும், ஏகாதிபத்தியம் வெறுமனே ஒரு “விருப்பத்திற்குரிய” கொள்கை மட்டுமே, அது முதலாளித்துவ பொருளாதாரத்திலான புறநிலை அபிவிருத்திகளில் வேரூன்றியிருக்கவில்லை என்றாகுமாயின், அதிலிருந்து, தொழிலாள வர்க்க இயக்கமானது வேறொரு கொள்கையை “விரும்பும்” முதலாளித்துவத்தின் இந்த அல்லது இன்னொரு பிரிவுடன் கூட்டணி நாடுவதை நோக்கி செலுத்தப்படுகின்ற அரசியலில் பின்தொடர ஆரம்பிக்கும்.
காவுட்ஸ்கியின் வரையறைகள் ஒரேயொரு மையமான அரசியல் நோக்கத்தையே கொண்டிருந்தன: சோசலிசப் புரட்சி முன்னோக்கை எதிர்ப்பதற்கான நியாயப்படுத்தலை வழங்கவேண்டும்.
ஏகாதிபத்தியம் என்ற நூலில் லெனினின் பகுப்பாய்வானது மூன்று மைய பாகங்களைக் கொண்டிருந்தது:
1. எவ்வாறு போர் என்பது முதலாளித்துவ அபிவிருத்தியின் ஒரு புறநிலையான கட்டத்தில் இருந்து எழுந்திருந்தது, போட்டியில் இருந்து ஏகபோகம் எழுந்திருந்திருந்தது, கொள்ளைநோக்கமுடைய நிதி மூலதனம் ஒரு ”விருப்பத்திற்குரிய” கொள்கையின் மூலம் அல்லாமல் மேலாதிக்கமான ஒரு நிலைக்கு உயர்ந்திருந்தது என்பதை அது காட்டியது.
2. நிதி மூலதனத்தின் மேலாதிக்கமும், உலகளவில் இயங்குகின்ற பகாசுர நிறுவனங்கள், வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்களைக் கொண்டு அதன் ஏகபோக மூலதனமாக உருமாற்றமும் போருக்கு இட்டுச் சென்றது மட்டுமல்ல. இதே நிகழ்ச்சிப்போக்குகள் உற்பத்தியின் சமூக உறவுகளிலும் ஒரு பரந்த மாற்றத்தில் விளைந்திருந்தன, உற்பத்தியும் உழைப்பும் மிகப்பெருமளவில் சமூகமயமாக்கப்பட்டு விட்டிருந்தது.
ஆகவே ஒட்டுண்ணித்தனமான நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்தியமானது வெறும் மரணப்படுக்கையிலிருந்த முதலாளித்துவம் மட்டுமல்ல. அது கொண்டு வந்திருந்த மாற்றங்கள் —உற்பத்தியின் சமூகமயமாக்கம்— முதலாளித்துவ பொருளாதாரத்திற்குள்ளேயும், சோசலிசத்திற்கான உருமாற்றத்தின் தொடக்கத்தைக் குறித்தது. ஆயினும், அந்த உருமாற்றமானது சந்தர்ப்பவாதத்தை, தொழிலாளர்’ இயக்கத்தின் மீதான அதன் மேலாதிக்கத்தை தோற்கடிப்பதன் மூலமாக மட்டுமே அடையப்பட முடியும், நடைமுறைக்கு கொண்டுவரப்பட முடியும்.
3. சந்தர்ப்பவாதமானது வெறுமனே தனித்தனி தலைவர்களது காட்டிக்கொடுப்பின் விளைபொருள் அல்ல. அது ஏகாதிபத்தியத்தில் இருந்து எழுகின்ற புறநிலை நிகழ்ச்சிப்போக்குகளுடன் பிணைந்தது, அத்துடன் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் நலன்களுடன் உயிர்ப்புடன் பிணைந்ததாகும். ஏகாதிபத்தியமானது, முதலாளித்துவ வல்லரசுகள் காலனிகளில் இருந்து அபரிமித-இலாபங்களைப் பெறுவதற்கு இட்டுச் சென்றிருந்தது. இது இந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கங்களை குட்டி முதலாளித்துவ தட்டுகளின் ஒரு சலுகை கொண்ட அடுக்கினை —பத்திரிகையாளர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், சவுகரியமான மற்றும் வசதியான வேலையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தில் ஏகாதிபத்திய விருந்து மேசையில் இருந்தான துணுக்குகளாக பொருளியல் ஆதாயங்களைப் பெற்ற ஒரு சலுகைபெற்ற பிரிவு ஆகியவற்றைக் கொண்டு— உருவாக்குவதற்கு வசதியளித்தது.
இந்தப் பகுப்பாய்வில் இருந்து லெனின் ஆழமான அரசியல் முடிவுகளைத் தேற்றம் செய்தார்.
ஏகாதிபத்தியமானது, தொழிலாள வர்க்கத்தின் உத்தியோகபூர்வ தலைமைகளை முதலாளித்துவ வர்க்கத்தின் பகிரங்கமான முகமைகளாக உருமாற்றம் காண இட்டுச் சென்றிருந்தது. இதுவே ஒரு மூன்றாம் அகிலம் உருவாக்கப்படுவதற்கான சடரீதியான அவசியமாக இருந்தது.
அந்தப் போராட்டம் எப்படி நடத்தப்பட்டது என்பதுதான் அந்த நேரத்தில் முக்கியமான கேள்வியாக இருந்தது.
சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டம்
“தந்தை நாட்டை பாதுகாப்பதற்கு” ஆதரவாய் இருந்த சமூகத்தின் சலுகைமிக்க பிரிவினர் ஒரு சிறுபான்மையாகவே இருந்தன. இன்னும் கீழே ஆழத்திற்கு சென்று “அடித்தட்டு மக்களிடம்”, சந்தர்ப்பவாதத்துடன் முறித்துக் கொள்வதன் அவசியத்தை அவர்களுக்கு விளக்குவதும், அவர்களுக்கு புரட்சிக்கு கல்வியூட்டுவதும் அவசியமாக இருந்தது.
இவ்விடத்தில், மார்க்சிசத்தைப் போல தொனிக்கக் கூடிய சொல்லாடல்களை பயன்படுத்தி சந்தர்ப்பவாதிகளுக்கும் சமூகப் பேரினவாதிகளுக்கும் ஒரு அரசியல் மறைப்பை வழங்கியதன் மூலம் இன்னும் பெரும் ஆபத்தான ஒரு பாத்திரத்தை வகித்தவர்களுக்கு எதிராகத்தான் பிரதான குறி செலுத்தப்பட வேண்டியதாய் இருந்தது. அந்தப் போக்கின் தலைவராய் காவுட்ஸ்கி இருந்தார்.
போரின் தொடக்கத்தில் இருந்தே, போர் நிதிக்கடன்களுக்கு ஆதரவளிப்பதை எதிர்க்க மறுத்து, காவுட்ஸ்கி சமூகப் பேரினவாதத்திற்கு ஒரு சர்வதேசவாத சாயத்தை பூச முனைந்தார்.
1914 அக்டோபரில் அவர் எழுதினார்: “தந்தை நாட்டைப் பாதுகாப்பது ஒவ்வொருவரது உரிமையும் கடமையும் ஆகும். என் நாட்டுடன் போரில் ஈடுபட்டிருக்கும் நாட்டில் இருப்பவர்கள் உள்ளிட அத்தனை நாடுகளையும் சேர்ந்த சோசலிஸ்டுகளுக்கும் இந்த உரிமை இருப்பதை அங்கீகரிப்பதில்தான் உண்மையான சர்வதேசியவாதம் அடங்கியிருக்கிறது.”[13]
வேறு வார்த்தைகளில் சொன்னால், “தந்தை நாட்டை பாதுகாப்பது” என்ற பேரில் ஜேர்மன் தொழிலாளர்கள் பிரெஞ்சு தொழிலாளர்கள் மீதும் பிரெஞ்சு தொழிலாளர்கள் ஜேர்மன் தொழிலாளர்கள் மீதும் சுடுவதை நியாயப்படுத்துவதில் தான் உண்மையான சர்வதேசியவாதம் அடங்கியிருக்கிறது என்றார்.
சந்தர்ப்பவாதத்திற்கு “சர்வதேசியவாத” முலாம் பூசும் இன்னுமொரு முயற்சியானது, 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் தேசிய அரசுகளது உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றிருந்த போர்களை நோக்கி மார்க்ஸ் கொண்டிருந்த மனோபாவத்தை எடுத்துக்காட்டியவர்களால் முன்னெடுக்கப்பட்டதாய் இருந்தது.
அந்த அத்தனை போர்களிலும், மார்க்ஸ் ஒரு சர்வதேசிய நிலைப்பாட்டை எடுத்து, எந்தத் தரப்பு வெற்றி பெற்றால் அது ஜனநாயகத்திற்கு கூடுதல் அனுகூலமானதாய் இருக்கும், ஆகவே தொழிலாள வர்க்கத்திற்கு நன்மை பயப்பதாய் இருக்கும் என்று மதிப்பீடு செய்ய முனைந்திருந்தார். அதே வழிமுறை தான் இந்தப் போரிலும் கையிலெடுக்கப்பட வேண்டும் என்பதாய் வாதிடப்பட்டது. ஒரு “சர்வதேசியவாத” மதிப்பீட்டின் அடிப்படையில், எந்தத் தரப்பு வெற்றி பெற்றால் அது தொழிலாள வர்க்கத்தின் மற்றும் சோசலிசத்தின் நிலைப்பாட்டில் மிகவும் அனுகூலமானதாய் இருக்கும் என்பதைத் தீர்மானிப்பது அவசியமாய் இருந்ததாக சொல்லப்பட்டது.
இத்தகையதொரு நிலைப்பாடு சமூகப் பேரினவாதிகளின் இரைக்கு எப்படி தீனி போட்டது என்பதை அறிவது அத்தனை பெரிய கடினமில்லை. ரஷ்யாவின் கொடுங்கோலாட்சி தோற்பது தான் ஒரு சர்வதேசிய நிலைப்பாட்டில் மிகவும் அனுகூலமானது என்ற கருத்தை ஜேர்மன் சந்தர்ப்பவாதிகள் முன்னெடுத்தார்கள், அதேசமயம் பிரான்ஸின் சந்தர்ப்பவாதிகள், பிரஷ்ய எதேச்சாதிகாரம் தோற்கடிக்கப்படுவது தான் மிகவும் அனுகூலமானது —இதுவும் ஒரு சர்வதேசிய நிலைப்பாட்டில் இருந்து தான்— என்று வாதிடுவார்கள்.
சமூகப் பேரினவாதத்திற்கு ஒரு சர்வதேசியவாத மறைப்பை வழங்கும் இந்த முயற்சியானது, போர் பிரச்சினை குறித்து மார்க்ஸ் எழுதியிருந்ததற்குப் பின்னர் பரந்த மாற்றங்கள் நடந்து முடிந்திருந்ததை முற்றிலுமாய் உதாசீனம் செய்ததாய் இருந்தது.
19 ஆம் நூற்றாண்டின் முதல் ஏழு தசாப்தங்களில், தேசிய போர்கள் முடியாட்சியை தூக்கி வீசுவதுடன் பிணைந்ததாய் இருந்தன, சோசலிசத்திற்கான புற நிலைமைகள் முதிர்ச்சி கண்டிராத இடங்களில் நடந்தன. ஆனால் அதற்குப் பின்வந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்திற்கு, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் ஆளும் வர்க்கங்கள் காலனிகளைச் சூறையாடுவது மற்றும் பிற தேசங்களை ஒடுக்குவது என்ற ஒரு கொள்கையைப் பின்பற்றி வந்திருந்தன. இந்தப் போரிலும் அதே கொள்கை தான் தொடர்ந்து கொண்டிருந்தது, கிளவ்ஸவிற்ஸின் விதியைப் பின்பற்றி, என்று லெனின் எழுதினார்.
இப்போதைய சூழ்நிலையில் எந்தத் தரப்பு வெற்றி பெற்றால் மிகவும் அனுகூலமானதாய் இருக்கும் என்று தீர்மானிப்பதென்பது இந்தியாவை யார் சூறையாடினால் நன்றாயிருக்கும் ஜேர்மனியா அல்லது பிரிட்டனா, சீனாவை யார் கூறுபோட்டால் நன்றாயிருக்கும் ஜப்பானா அல்லது அமெரிக்காவா, ஆபிரிக்கா யாரால் சூறையாடப்பட வேண்டும் பிரான்ஸாலா அல்லது ஜேர்மனியாலா என்று தீர்மானிப்பதைப் போன்றதாகும்.[14]
பாதுகாப்புவாதிகளுக்கு எதிராக
“ஏகாதிபத்தியப் போரை ஒரு உள்நாட்டுப் போராக மாற்றுவோம்” என்ற முன்னோக்கை முன்னெடுக்கையில் லெனின் இன்னும் இரண்டு முக்கியமான வாதங்களை எதிர்கொண்டார்.
“வெற்றியும் இன்றி தோல்வியும் இன்றி” போரை முடிவுக்குக் கொண்டுவருகிறதான சுலோகம் இரண்டு தீர்மானகரமான பிரச்சினைகளை எழுப்பியது.
முதலாவதாய், அது தற்காப்புவாதிகளுக்கு ஒரு அரசியல் மறைப்பை வழங்கியது. எப்படிப் பார்த்தாலும், தமது “சொந்த” அரசாங்கங்களின் போர் முனைப்புகளை ஆதரித்தவர்கள் தோல்விக்கு எதிராக போராடுவதாகத் தானே கூறிக் கொண்டார்கள். முன்னணி வலது-சாரி சமூக ஜனநாயகவாதியான எட்வார்ட் டேவிட் விளக்கியதைப் போல: “நாங்கள் போருக்கு ஆதரவாக இல்லை, மாறாக தோல்விக்கு எதிரானவர்களாய் இருந்தோம் என்பதுதான் எமது ஆகஸ்ட் 4 வாக்களிப்பின் முக்கியத்துவமாகும்.” [15]
வெற்றிக்காக இல்லை, மாறாக தோல்விக்கு எதிராக என்றால், அது தமது “சொந்த” அரசாங்கத்தின் ஒரு இராணுவத் தோல்விக்கு இட்டுச் செல்லத்தக்க ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கு எதிர்ப்பையே மறைமுகமாகக் குறிக்கிறது. ஆகவே அத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் எதிர்க்கப்படுவதானது.
இரண்டாவதாய், “வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை” சுலோகமானது இன்னுமொரு, கூடுதல் முக்கியமான பிரச்சினையை எழுப்பியது. போர் என்பது ஒரு பண்புரீதியான வரலாற்று திருப்பத்தைக் குறித்து நின்றதை அங்கீகரிக்க மறுத்து, மறுபடியும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்கின்றதான ஒரு கருத்தை அது அடிப்படையாகக் கொண்டிருந்தது.
ஓரளவுக்கு அமைதியான உயிரோட்டமான அபிவிருத்தியின் ஒரு ஒட்டுமொத்த சகாப்தமும் ஆகஸ்ட் துப்பாக்கிகளின் மூலம் தவிடுபொடியாக்கப்பட்டிருந்தது. இனி பின்னால் திரும்பிச் செல்வதற்கு எந்த வழியும் கிடையாது.
போரின் வெடிப்பானது 1871-1914 காலகட்டத்தின் பொருளாதார அபிவிருத்தியின் விளைபொருளாய் இருந்தது. அமைதி வந்திருந்தது, ஆனால் இருக்கின்ற சமூக-பொருளாதார ஒழுங்கின் அடித்தளங்கள் அப்படியே தான் இருக்கின்றன என்றால், அப்போது அப்படியான ஒரு “அமைதி” புதிய போர்களுக்கான விளைநிலமாக மட்டுமே ஆகத்தக்கதான ஒரு புதிய சகாப்தம் விடிந்திருந்தது. சர்வதேச சோசலிசப் புரட்சியின் மூலமாக ஒட்டுமொத்த அமைப்புமுறையும் புரட்டிப் போடப்பட வேண்டியிருந்தது.
பரந்த மக்களின் வறுமை ஆழமடைந்து, போரின் உண்மையான தன்மை மேலும் மேலும் வெட்டவெளிச்சமாகிய நிலையில் “அமைதி”யின் சுலோகம் இன்னும் அதிக முக்கியமான இடத்தைப் பிடித்தபோது, இதே பிரச்சினைகள், சற்றே மாறுபட்டதொரு வடிவத்தில் எழுந்தன. 1914 ஆம் ஆண்டின் முடிவுக்குள்ளாக வரிசையாக பல அகழிகள் மேற்கு ஐரோப்பாவெங்கும் விரிந்து சென்று கொண்டிருந்தன, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவை அங்கே இருந்தன. ஒரு துரிதமான முடிவுக்கான சாத்தியம் கலைந்து காணாமல் போய்விட்டிருந்த நிலையில், தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை, பாரிய படுகொலைகளை மட்டுமே கொண்டுவந்தன.
போருக்கு எதிர்ப்பு காட்டியதால் பேர்லின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜேர்மன்-போலந்து புரட்சியாளரான ரோசா லுக்செம்பேர்க் 1915 ஏப்ரலில் எழுதியவாறாக:
“காட்சி முற்றிலுமாய் மாறிவிட்டிருக்கிறது. பாரிஸுக்கான ஆறு வார காலப் படையெடுப்பு ஒரு உலக நாடகமாக ஆகியிருக்கிறது. பாரிய படுகொலை ஒரு அலுப்பூட்டும் வேலையாகி விட்டிருக்கிறது, ஆயினும் கூட இறுதித் தீர்வு அடுத்த அடிக்கு அண்மையிலாக இல்லை. முதலாளித்துவ ஆட்சி அதன் சொந்த வலையில் சிக்குண்டிருக்கிறது. அதன் முதல் சித்தப்பிரமை முடிந்து போயிருக்கிறது... காட்சி முடிந்தது. திரை விழுந்து விட்டது.... கலகலப்பான கன்னிப் பெண்களின் உற்சாகக் குரல்களின் மத்தியில் இருந்து வெளிவருகின்ற கையிருப்புப் படைவீரர்கள் நிரம்பிய இரயில்கள் மீது திரை விழுந்திருக்கிறது.... வெளிறிய பகல்வெளிச்சத்தின் மயக்கம் கலைந்த சூழலில் அங்கே வேறொரு கூட்டுக்குரல் (கோரஸ்) ஒலிக்கிறது; யுத்தக்களத்தில் பருந்துகளும் நரிகளும் எழுப்புகின்ற விநோதமான கரடுமுரடான சத்தம்.... ஆகஸ்டிலும் செப்டம்பரிலும் இரயில்களில் ஏற்றப்பட்ட பீரங்கிக்கு இரையாக்கப்பட்டவர்கள் பெல்ஜியம் மற்றும் வோஜ் (Vosges) இன் யுத்தக்களங்களில் அழுகிக் கொண்டிருக்கின்றன, மரண வயல்களில் இருந்து இலாபங்கள் களைச் செடிகளைப் போல முளைத்தெழுகின்றன.”[16]
போரின் பயங்கரங்கள் ஒன்றின் மீது இன்னொன்றாய் குவியக் குவிய, மோதும் நாடுகளது இன்னும் அதிகமான பரந்த மக்களிடையே அமைதிக்கான விருப்பம் எழுந்ததன் முக்கியத்துவத்தை லெனின் சுட்டிக் காட்டினார். “அந்த மனோநிலையால் உந்தப்படும் எந்த ஆர்ப்பாட்டத்திலும் ஒரு மிக முக்கிய பங்கினை வகிப்பது” சோசலிஸ்டுகளின் கடமை என்று அவர் வலியுறுத்தினார்.
ஆனால் எல்லாவற்றுக்கும் முதலில், ஒடுக்குமுறை, நாடுபிடிப்பு மற்றும் சூறையாடல் இல்லாமல் மற்றும் புதிய போர்களுக்கான கருவை உருவாக்குவதையும் மற்றும் எந்த அமைதியும் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லாமல் உருவாக்க முடியாது என்பது தெளிவாக்கப்பட வேண்டியதாய் இருந்தது.
“ஒரு நீடித்த மற்றும் ஜனநாயக அமைதியை விரும்பும் எவரொருவரும் அரசாங்கங்கள் மற்றும் முதலாளிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்திற்கு ஆதரவாக நின்றாக வேண்டும்” என்று அவர் எழுதினார். அதாவது அவர்கள் சோசலிசப் புரட்சிக்காக போராட வேண்டும் என்றார்.[17]
இந்த முன்னோக்கை தாக்குவதிலான பிரதான பாத்திரத்தை காவுட்ஸ்கி வகித்தார்.
1912 பாஸல் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த உறுதிப்பாடுகளை மறுதலிப்பதற்கு காவுட்ஸ்கியும் மற்றவர்களும், அத்தீர்மானம் ஒரு புரட்சிகர சூழ்நிலை அபிவிருத்தி காண்பதாய் கற்பனை செய்திருந்ததாக காரணம் கூறினர்.
‘ஆனால் போர் வெடித்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லை —பரந்த மக்கள் ஏகாதிபத்திய போர் முனைப்பில் அகப்பட்டிருந்தனர், ஆகவே அந்த தீர்மானம் கனவு கண்ட நிலைமைகள் பொருந்தாது. ஆகவே சோசலிசப் புரட்சியின் சாத்தியம் என்பது ஒரு பிரமை, கானல்நீர். மார்க்சிசம் ஒரு விஞ்ஞானபூர்வமான முன்னோக்காக நிலைமைகளின் புறநிலையான ஒரு மதிப்பீட்டின் மீது தனக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர மனப்பிரமைகளின் மீது அல்ல’.
மூர்க்க நாடுகளில் அணிதிரட்டல் உத்தரவுகளின் போது மக்களின் பெரும் பிரிவுகள் போர் முனைப்பில் அகப்பட்டு விட்டிருந்தனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பரந்த மக்களின் உளவியலிலான இத்தகைய அபிவிருத்தி மற்றும் போர் வெடிப்பின் போது புரட்சிகர முன்னணிப் படை தனிமைப்படுவதாக தோன்றியமை ஆகியவற்றுக்கான காரணத்தை ட்ரொட்ஸ்கி விளக்கினார்.
அமைதிக் காலங்களில், சோசலிஸ்டுகளின் ஆதிக்கம் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பிரிவுகளை மட்டுமே தொட்டு நிற்கும், செல்வாக்கு செலுத்தும். மக்களின் பெரும் பிரிவுகள் உடனடியான அரசியல் போராட்டங்களுக்கு வெளியிலேயே நிற்கும். ஆனால் போர் வெடித்து அணிதிரட்டல் தொடங்கியதும், அவர்கள் அரசியலுக்குள் இழுக்கப்படுகிறார்கள்.
வாழ்வா சாவா என்பது குறித்த உடனடியான கேள்விகளுக்கு அவர்கள் முகம்கொடுக்கிறார்கள், அச்சமயத்தில் அவர்களின் பாதுகாவலனாக அரவணைப்பாளராக அரசாங்கமும் இராணுவமும் அவர்கள் முன் எழுந்து நிற்கின்றன. மாற்றம், ஒரு மேம்பட்ட நிலைமைக்கான நம்பிக்கைகள் மற்றும் அபிலாசைகள் ஆகியவற்றின் குழப்பமான மனோநிலைகளுடன் இந்த உணர்வுகள் ஒன்றுகலக்கின்றன.
“புரட்சியின் தொடக்கத்திலும் கூட இதேதான் நடக்கிறது” என்று எழுதினார் ட்ரொட்ஸ்கி, “ஆனால் ஒரு அதி-முக்கியமான வித்தியாசத்துடன். ஒரு புரட்சியானது இந்த புதிதாய் தட்டியெழுப்பப்பட்ட கூறுகளை புரட்சிகர வர்க்கத்துடன் இணைக்கிறது, ஆனால் போரோ அவர்களை அரசாங்கம் மற்றும் இராணுவத்துடன் இணைக்கிறது!.”
ஒரு விடயத்தில், குழப்பமான நம்பிக்கைகளும் பாதிப்புகளும் புரட்சிகர ஊக்கத்தில் வெளிப்பாடு காண்கின்றன என்றால், மற்றதன் விடயத்தில் இதே சமூக உணர்ச்சிகள் “தற்காலிகமாக தேசப்பற்று நஞ்சுறலின் வடிவத்தை எடுக்கிறது”, அந்த மனோநிலை சோசலிச தாக்கம் பெற்றவர்கள் உள்ளிட தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை தொற்றக் கூடிய ஒன்றாகும்.” [18]
அத்தகைய நிலைமைகளில், கட்சி உடனடியானதொரு புரட்சிகரப் போராட்டத்தை தொடக்க முடியாது என்று தொடர்ந்தார் ட்ரொட்ஸ்கி. ஆனால், போருக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மையை அறிவிக்க முடியும், போர் நிதிக்கு வாக்களிக்க மறுக்க முடியும், அவ்வழியில், போரின் பாதை தவிர்க்கவியலாமல் கொண்டுவரவிருக்கின்ற பரந்த மக்களின் நனவிலான மாற்றங்களுக்கு தயாரிப்பு செய்ய முடியும்.
அவ்வாறாக நடக்கவில்லை, மாறாக போர் அணிதிரட்டலுக்கான சமிக்கைதான் அகிலத்தின் வீழ்ச்சிக்குமான சமிக்கையாக இருந்தது, அத்தனை சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற் கட்சிகளும் “ஒரேயொரு எதிர்ப்பும் கூட இல்லாமல் தத்தமது அரசாங்கத்தின் பின்னால் அணிவகுத்தன” என்ற உண்மையானது அங்கே ஆழமான காரணங்கள் இருந்தாக வேண்டும் என்று உணர்த்தியது.
மற்ற அனைவரையும் விட லெனின் அந்தக் காரணங்களை முழுமையாக ஆராய்ந்தார், அதன் பாதையில் அவர், தொழிலாள வர்க்கம் வெற்றிகரமாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இட்டுச் சென்ற அரசியல் மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் அபிவிருத்தி செய்தார்.
சந்தர்ப்பவாதிகளைப் பாதுகாக்க முனைந்தவர்கள் போர் வெடிப்பின் நிலைமை குறித்த ஒரு போலியான சித்திரத்தை முன்வைத்து தொடங்கினர்.
1914 அக்டோபரில் எழுதிய காவுட்ஸ்கி, “போரின் வெடிப்பின் சமயத்தில் போல ஒருபோதும் அரசாங்கம் இத்தனை வலிமையாக இருக்கவில்லை, கட்சிகள் இத்தனை பலவீனமாக இருக்கவில்லை” என்று எழுதினார்.
உண்மையில் “அரசாங்கங்கள், போரின் சமயத்தில் இருப்பதுபோல வேறெந்தவொரு சமயத்திலும், ஆளும் வர்க்கத்தின் அத்தனை கட்சிகளது அவ்வாறான ஒரு உடன்பாட்டிற்கும், அல்லது அந்த ஆட்சிக்கு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களது ‘அமைதியான’ அடிபணிவுக்கும், இத்தகைய அவசியத்தில் நிற்பதில்லை” என்று லெனின் பதிலிறுத்தார்.[19]
அவர் மேலும் தொடர்ந்து கூறினார், அரசாங்கங்கள் மிகவும் சக்திவாய்ந்து நிற்பதாகத் தோற்றமளிக்கலாம், ஆனால் “தோற்றம்” அசல்நிலையுடன் ஒன்றாயிருப்பதில்லை, அத்துடன் எவரொருவரும் புரட்சிகர எதிர்பார்ப்புகளை வெறுமனே போரின் வெடிப்புடன் பிணைத்து விட்டு விடவில்லை. அது ஒரு நிகழ்முறையின் தொடக்கம் மட்டுமே என்பதுடன் ஏற்கனவே, லெனின் 1915 இல் எழுதுகிறார், அத்தனை நாடுகளிலும் மக்களின் அதிருப்திகள் பெருகுகின்ற நிலையிலும் அரசாங்கங்கள் மேலும் மேலும் அதிகமாக தியாகங்களைக் கோருகின்ற நிலையிலும் ஒரு புரட்சிகர சூழ்நிலையின் அறிகுறிகள் ஏற்கனவே அபிவிருத்தி கண்டுகொண்டிருந்தன.
“இந்த சூழல் நீடிக்குமா, இன்னும் எத்தனை கூர்மையானதாய் இது ஆகும்? இது புரட்சிக்கு இட்டுச் செல்லுமா? அது நமக்குத் தெரியாது. யாருக்கும் தெரிய இயலாது. புரட்சிகர மனோநிலை அபிவிருத்தி கண்டு அது ஒரு புரட்சிகர சூழ்நிலையாக உருமாற்றம் காண்கிறதொரு சமயத்தில் முன்னேறிய வர்க்கமான பாட்டாளி வர்க்கம் ஈட்டிய அனுபவத்தினால் மட்டுமே அதற்கான பதில் வழங்கப்பட முடியும்.”[20]
மேலும், போர் வெடித்த உடனேயே புரட்சிகரப் போராட்டங்கள் இல்லை என குறிப்பிடுவது தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற ஒரு நிலைமையின் விளைவாகும். ஒவ்வொரு நாட்டிலும் அது தணிக்கைக்கும் இராணுவச் சட்டத்திற்கும் முகம்கொடுத்தது, அதன் தலைமையானது அந்த நடவடிக்கைகளை தொடுக்கும் ஏகாதிபத்திய அரசாங்கங்களுடன் ஒன்றுபட்டதில் அது மேலும் சிக்கலாக்க படுத்தப்பட்டிருந்தது.
சடவாத மெய்யியலும் புரட்சிகர நடைமுறையும்
உடனடி நிலைமையை தாண்டிப் பார்த்தால், லெனினால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் தீவிரமான வழிமுறையியல் ரீதியான (methodological) முக்கியத்துவம் கொண்டவையாகும், ஆகவே அவை நம்மை டேவிட் நோர்த் தனது ஆரம்ப உரையில், “விஞ்ஞான சடவாத மெய்யிலுக்கும் புரட்சிகர நடைமுறைக்கும் இடையிலான அத்தியாவசியமான உறவு” என்று சுட்டிக்காட்டிய ஏழாவது புள்ளிக்கு மீண்டும் அழைத்துச் செல்கின்றன.
லெனினால் வலியுறுத்தப்பட்ட புள்ளி பின்வருமாறு இருந்தது: ஆளும் வர்க்கங்கள் பழைய வழியில் இனியும் ஆட்சி செய்ய முடியவில்லை அதே அளவுக்கு அதிகமாய் பரந்த மக்களும் பழைய வழியில் வாழ்க்கையைத் தொடர முடியவில்லை என்ற விதத்தில் தான் அந்த சூழ்நிலை புறநிலையாக புரட்சிகரமானதாய் இருந்தது. ஆனால் இந்த புறநிலையான புரட்சிகர சூழலானது நடைமுறையில் ஒரு புரட்சிக்கு இட்டுச் செல்லுமா என்பது சிந்தனையின் மூலம் மதிப்பிடப்பட முடியாது, ஒரு புரட்சிகர நடைமுறையின் அபிவிருத்தி மூலமாக மட்டுமே மதிப்பிடப்பட முடியும்.
சூழ்நிலையில் உண்மையாக என்ன அடங்கியிருக்கிறது, அதன் சாத்தியத்திறன் எட்டப்பட முடியுமா ஆகியவை, தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை அபிவிருத்தி செய்ய முனைகின்ற, அதற்கு அது முகம் கொடுக்கின்ற புறநிலை சூழ்நிலையை வெளிப்படுத்திக் காட்டுகின்ற, அபிவிருத்தி காணும் அதன் போராட்டங்களுக்கு அரசியல் அதிகாரத்தை வெற்றி காணுகின்ற நோக்கத்துடனான இறுதி வரை வகுத்தளிக்கப்பட்ட ஒரு தெளிவான வேலைத்திட்டத்தைக் கொண்டு அதனை ஆயுதபாணியாக்குகின்ற புரட்சிகரக் கட்சி என்ற நனவான, அகநிலைக் காரணியின் தலையீட்டைக் கொண்டு மட்டுமே கண்டறியப்பட முடியும்.
சூழ்நிலையை அது எப்படித் “தோற்றமளிக்கிறது” என்பதைக் கொண்டு அல்லாமல் அதன் உண்மையான நிலையை கிரகிப்பதன் மீது லெனின் வலியுறுத்துவதானது மார்க்ஸ் அவரது ஃபயர்பாக் ஆய்வறிக்கைகளில் கூறிய ஒரு இன்றியமையாத புள்ளியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, அதில் மார்க்ஸ் சடவாத மெய்யியலின் தீர்க்கமான அபிவிருத்தியை வரைந்து காட்டினார்.
காவுட்ஸ்கியும் மற்றவர்களும், முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு உள்நாட்டு யுத்தம் மற்றும் புரட்சி என்ற லெனின் மற்றும் அவரது முன்னோக்கின் பிரமையூட்டலுக்கு எதிராக சடவாதக் களத்தில் நிற்பதாய் கூறிக் கொண்டனர்.
ஆனால், அவர்கள் தங்களுக்கு அடித்தளமாக்கிக் கொள்ள முனைந்தது மார்க்ஸின் சடவாதத்தை அல்ல, மாறாக வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் மனித நடவடிக்கை என்னும் செயலூக்கமான பக்கத்திற்கு அழுத்தமளித்த ஜேர்மன் கருத்துவாத மெய்யியலின், எல்லாவற்றுக்கும் மேல் ஹேகலின் மெய்யியலின், அனுகூலங்களை ஒன்றுகூட்டியதன் மூலமாக எந்த சடவாதக் கண்ணோட்டத்தை மார்க்ஸ் கடந்து வந்திருந்தாரோ அந்தக் கண்ணோட்டத்தையே அவர்கள் அடித்தளமாக்கி கொண்டிருந்தனர்.
மார்க்ஸ் அவரது ஃபயர்பாக் மீதான ஆய்வறிக்கைகளில் முதலாவதில் பின்வருமாறு எழுதினார்:
"ஃபயர்பாக்கினது உட்பட இதுவரை இருந்து வருகின்ற சடவாதத்தின் முதன்மைக் கோளாறு என்னவென்றால், பொருள், நிஜம், உணர்மை என்பது புறப்பொருள் வடிவம் அல்லது சிந்தனை வடிவத்தில் தான் யோசிக்கப்படுகிறது, மாறாக, மனித உணர்மையாக, செயல்பாடாக, நடைமுறையாக, அகநிலைரீதியாக யோசிக்கப்படுவதில்லை.” ஆகவே முந்தைய சடவாத மெய்யியலானது, ”’புரட்சிகர’த் தன்மையின், நடைமுறை-இன்றியமையாத நடவடிக்கையின் முக்கியத்துவத்தை” பற்றியிருக்கவில்லை.[21]
காவுட்ஸ்கிக்கு எதிராய் லெனின், அடுத்த போரைக் காட்டிலும் இப்போதைய போரே ஒரு புரட்சியை உருவாக்கிவிடும் என்று ஒருபோதும் எந்தவொரு சோசலிஸ்ட்டும் உத்தரவாதம் அளித்திருக்கவில்லை என்று விளக்கினார். ஒரு புரட்சிகர நிலைமையின் உண்மையான இருப்பை எடுத்துக்கூறுவதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர நனவைத் தட்டியெழுப்புவது சோசலிஸ்டுகளின் கடமையாகும் என்பதே விடயமாகும்.
மார்க்சிசம் எதிர் சமூகப் பேரினவாதம்
சர்வதேச சோசலிசத்தின் மிகவும் புகழ்பெற்ற பிரதிநிதிகள் காட்டிக் கொடுத்ததென்பது எவ்வாறு சாத்தியமானது என்பதே தீர்க்கமான கேள்வியாக இருந்தது. சமூகப் பேரினவாதப் போக்கின் மூலங்கள் குறித்த ஒரு சடவாதப் பகுப்பாய்வில் அதன் பதில் அமைந்திருக்கிறது.
போருக்கு முந்திய காலகட்டத்தில், கிட்டத்தட்ட அதற்கு ஒன்றரை தசாப்தங்கள் முன்வரை நீள்கின்ற ஒரு காலத்திற்கு, சோசலிச இயக்கமானது அதன் முன்னோக்கு தொடர்பாய் ஒரு அடிப்படையான பிளவைக் கொண்டிருந்தது.
சோசலிசம் ஒரு அமைதியான, படிப்படியான வளர்ச்சியின் மூலம், நாடாளுமன்ற மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாய் சீர்திருத்தங்களை பெருகச் செய்வதன் மூலமாக எட்டப்படுமா, அல்லது அது முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு பொறிவின் மூலமாக புரட்சிகரப் போராட்டங்களின் வெடிப்பின் மூலமாக வந்துசேருமா?
1898 இல், ஜேர்மனியின் முன்னிலை சமூக ஜனநாயகவாதியான எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் கட்சியின் அடிப்படை முன்னோக்கில் அடிப்படையான திருத்தம் செய்வதற்கு ஆலோசனை முன்வைத்தார். படிப்படியான வளர்ச்சி என்னும் போக்கின் கண்ணோட்டத்தை சுருக்கமாய் முன்வைத்த அவர், இயக்கம் தான் அனைத்துமே, இறுதி இலக்கு என்று எதுவுமில்லை என்றார். SPD இன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பொறுத்தவரை இந்த திருத்தல்வாதப் போக்கு பின்னால் தள்ளப்பட்டது. ஆனால் அந்தப் போக்கு தனக்கு அடித்தளமாகக் கொண்டிருந்த நடைமுறைகள் —வர்க்க ஒத்துழைப்பு மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் அந்தக் கட்டமைப்பிற்குள்ளாக ஒருங்கிணைவது— தொடர்ந்தும் வலுப் பெற்றுச் சென்றன.
ரஷ்யாவில் 1905 புரட்சிக்குப் பின்னர் இந்தப் பிரச்சினை மீண்டும் பற்றிக் கொண்டது. புரட்சியானது, ஃபிரெட் வில்லியம்ஸ் சில வாரங்களுக்கு முன்பு அவரது உரை இரண்டில் தெளிவுபட எடுத்துக்காட்டியவாறாக, அதன் பாரிய பொது வேலைநிறுத்தங்கள் மற்றும் சோவியத்துகள் அல்லது தொழிலாளர்கள்’ கவுன்சில்கள் உருவாக்கத்துடன், ஐரோப்பிய புரட்சிக்கான கட்டியமாக, அது எடுக்கவிருக்கும் வடிவங்களை முன்னெதிர்பார்த்திருந்ததா, ரோசா லுக்செம்பேர்க் வலியுறுத்தியதைப் போல? அல்லது, அது அவரது எதிர்ப்பாளர்கள், குறிப்பாக தொழிற்சங்கங்களில் இருந்தவர்கள் கூறிவந்ததைப் போல, ரஷ்ய பின்தங்கிய நிலையின் ஒரு வெளிப்பாடாகவும் மற்றும் எந்த விதத்திலும் முன்னேறிய மேற்கு ஐரோப்பாவுடன் தொடர்புடையதில்லை என்றும் இருந்ததா?
இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்பானது இந்தப் பிரச்சினையை வெட்டவெளிச்சமான கவனக்குவிப்புக்குள் கொண்டுவந்தது. சந்தர்ப்பவாத போக்கின் வளர்ச்சியும் அபிவிருத்தியும் தான் அதன் மூலமாக இருந்தது, அது முழு வளர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்று போரில் அதன் சொந்த முதலாளித்துவத்திற்கு நேரடியாக ஆதரவளிக்கும் நிலைக்குச் சென்று விட்டிருந்தது.
இந்தப் போக்கின் சடவாத வேர்கள் குறித்த லெனினின் பகுப்பாய்வு ஆழமான அரசியல் தாக்கங்கள் கொண்டிருந்தது. புதிய அகிலமான மூன்றாம் அகிலமானது, இரண்டாம் அகிலத்தின் எச்ச சொச்சங்களில் இருந்து மறுகட்டுமானம் செய்யப்படவும் முடியாது, அல்லது அதன் தத்துவம் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்படவும் முடியாது என்று அது காட்டியது.
இரண்டாம் அகிலமானது “படிப்படியான” வளர்ச்சிக் காலகட்டத்தில் முக்கியமான தயாரிப்பு வேலையை ஆற்றியிருந்தது என லெனின் விளக்கினார். ஆனால் மூன்றாம் அகிலம் புதிய கடமைகளுக்கு முகம்கொடுத்தது: முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக நேரடியான புரட்சிகரப் போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு உள்நாட்டுப் போர், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல் மற்றும் சோசலிசத்தின் வெற்றி.
அதற்கு, இரண்டாம் அகிலத்தின் காலகட்டத்தில், சோசலிசத்திற்குள்ளான ஒரு “அங்கீகரிக்கப்பட்ட” போக்காக கருதப்பட்டிருந்த சந்தர்ப்பவாதத்தில் இருந்து ஒரு முழுமையான அரசியல், சித்தாந்த, மற்றும் அமைப்புரீதியான பிரிவு அவசியமாக இருந்தது.
ரஷ்யாவில் அந்த அரசியல் மற்றும் அமைப்புரீதியான பிரிவு மென்ஷிவிக்குகள் உடனான பிளவின் மூலம் நடத்தப்பட்டிருந்தது. லெனினைப் பொறுத்தமட்டில், அதன் சர்வதேச முக்கியத்துவம் இப்போது தெளிந்த கவனக்குவிப்புக்குள் வந்து கொண்டிருந்தது.
போல்ஷிவிக்குகளுக்கும் மென்ஷிவிக்குகளுக்கும் இடையிலான பிளவு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் 1903 காங்கிரசில் தொடங்கியது. கட்சி அங்கத்துவத்தில் என்ன அடங்கியிருந்தது என்பது குறித்த ஒரு சொல்லாடலில் தான் அது அபிவிருத்தி கண்டது என்றவிதத்தில் அது சற்று தெளிவற்றதாய் இருந்தது.
1905 புரட்சி வெடித்ததைத் தொடர்ந்து, இந்த பிரிவின் வர்க்க அடிப்படை வெளிப்படத் தொடங்கியது. தாராளவாத முதலாளித்துவத்தை நோக்கிய வெறுப்பும் எதிர்ப்பும் போல்ஷிவிக்குகளது கொள்கையின் அடிப்படையாக இருந்தது. மென்ஷிவிக்குகளுக்கோ தாராளவாத முதலாளித்துவத்துக்கு தக்கபடி வளைந்து கொடுப்பதுதான் அடிப்படையாக இருந்தது, மாஸ்கோ தொழிலாளர்கள் டிசம்பர் கிளர்ச்சியின் போது ஆயுதமேந்தியிருக்கக் கூடாது என்ற பிளெக்ஹானோவின் அறிவிப்பில் இது காட்சிரீதியான வெளிப்பாட்டை பெற்றது.
ஒரு முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிதான், அதாவது நிலப்பிரபுத்துவ முற்றுமுதலாட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதும், ஒரு முதலாளித்துவ ஆட்சி அதிகாரத்துக்கு வருவதும் தான் ரஷ்யாவிலான கடமை என்று அவர்கள் வலியுறுத்தினர். மாஸ்கோ நடவடிக்கைகள் தாராளவாத முதலாளித்துவத்தை அதற்குரிய வரலாற்றுப் பாத்திரத்தை நிறைவேற்றுவதில் இருந்து மேலும் ஒதுங்க வைத்து விடும். ஆகவே முதலாளித்துவ கட்சியான கேடட்டுகள் தொடர்பாக “தந்திர”த்துடன் முன்னேறுவது அவசியமாக இருந்தது என்றார் பிளெக்ஹானோவ்.
இந்த மோதல்கள் 1905க்குப் பின்னரும் தொடர்ந்தன, அகிலத்துக்குள்ளாக அவை ஏதோ ரஷ்யாவுக்கேயுரிய பிரச்சினைகள் என்பதைப் போன்று கருதப்பட்டன. அவர்கள் “மறுபடியும் ஆரம்பித்து விட்டார்கள்” என்பதே ஒரு பொதுவான எதிர்வினையாக இருந்தது.
இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்பானது சந்தர்ப்பவாதம் மற்றும் அதன் பாதுகாவலர்களிடம் இருந்தான ஒரு முழுமையான அமைப்புரீதியான பிரிவின் அவசியத்தை முன்நிறுத்தியது. லெனினைப் பொறுத்தவரை மென்ஷிவிக்குள் உடனான பிளவின் சர்வதேச முக்கியத்துவத்தை அது தெளிவாக்கியது.
ரஷ்யாவில் குட்டி-முதலாளித்துவ சந்தர்ப்பவாத கூறுகளிடம் இருந்து பாட்டாளி வர்க்க இயக்கத்தை முழுமையாக பிரித்தெடுப்பது என்பது இயக்கத்தின் முழு வரலாற்றினால் தயாரிக்கப்பட்டிருந்தது, என்று லெனின் எழுதினார்.
”அந்த வரலாற்றை அலட்சியம் செய்பவர்கள், ‘கன்னைவாத’த்திற்கு எதிராக பிரசங்கம் செய்வதன் மூலமாக, ரஷ்யாவில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி உருவாகின்ற உண்மையான நிகழ்ச்சிப்போக்கை புரிந்து கொள்ளும் திறனற்றவர்களாய் தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள்....”
ரஷ்யாவிலான போராட்டம் சர்வதேச முக்கியத்துவம் கொண்டதாய் இருந்தது ஏனென்றால், அது இறுதி ஆய்வில், இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் விளைந்து 1914 இல் அது காட்டிக் கொடுப்பதற்கும் இட்டுச் சென்றிருந்த அதே நிகழ்ச்சிப்போக்குகளில் தான் வேரூன்றியிருந்தது. குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் சலுகையுடைய அடுக்கு, அதன் “சொந்த” தேசத்தின் குறிப்பிட்ட “வல்லரசு” சலுகைகளை பெறுவதற்கு வழிசெய்த அதே “ஐரோப்பிய” அபிவிருத்தி வகையானது தனது பிரிவினரை ரஷ்யாவில் மென்ஷிவிசத்தின் வடிவில் பெற்றிருந்தது என்று லெனின் எழுதினார்.
ஆனால் ரஷ்யாவில் இந்த சக்திகளுடன் அரசியல்ரீதியாகவும் அமைப்புரீதியாகவுமான ஒரு பிளவு நடத்தப்பட்டு விட்டிருந்தது. இவை “சர்வதேசியவாத” தந்திரோபாயங்களாகவும், சீர்மையான புரட்சிகரத்தன்மை கொண்டவையாகவும் இருந்தன, இவை இப்போது விரிவுபடுத்தப்பட வேண்டியிருந்தது.[22]
சிம்மர்வால்ட் மாநாடு
1915 செப்டம்பர் 5-8 இல் சிம்மர்வால்ட் என்ற மிகச் சிறிய சுவிஸ் கிராமத்தில் நடத்தப்பட்ட சோசலிச போர்-எதிர்ப்பு மாநாடுதான் இந்தப் போராட்டம் தொடங்கிய களமாக இருந்தது. இது இரகசியமாக நடத்தப்பட்டது. விடுதி அறையின் பதிவு, ஒரு பறவைகள் ஆராய்ச்சி அமைப்பின் பெயரில் மேற்கொள்ளப்பட்டது. மனித சிந்தனையின் சில உண்மையான கழுகுகளான, மிகவும் குறிப்பிடத்தக்கதாய் லெனினும் மற்றும் ட்ரொட்ஸ்கியும் பிரசன்னமானதை தவிர வேறு எந்தப் பறவைகளும் அங்கு பிரசன்னமாகி இருக்கவில்லை.
சிம்மர்வால்ட் மாநாடு சுவிஸ் சோசலிஸ்ட்டான ரோபர்ட் கிரிம் மூலம் ஏற்பாடாகியிருந்தது. அவரது முன்னோக்கும் சரி, மொத்தம் 43 பேர் இருந்த அந்த பிரதிநிதிகள் குழுவின் பெரும்பான்மையாக இருந்த அவரது ஆதரவாளர்களது முன்னோக்கும் சரி, லெனினுடையதற்கு வெகு தூரத்தில் இருந்தன.
கிரிம்மின் நோக்கமாக இருந்தது போருக்கு எதிராய் ஒரு புரட்சிகர இயக்கத்தை தொடக்க வேண்டும் என்பதல்ல, மாறாக இரண்டாம் அகிலத்தில் இருந்து ஆகஸ்ட் 4 காட்டிக் கொடுப்பின் கறையை அகற்றி, அமைதி என்ற பொதுவான சுலோகத்தின் கீழ் அதன் போருக்கு-முந்தைய அடித்தளங்களை மீட்சி செய்வதுதான் அவர் நோக்கமாய் இருந்தது.
ஒரு விரிந்த இடது கன்னையும் இருந்தது, அந்த எண்ணிக்கை சிறுபான்மையாக இருந்தது, அதற்குள்ளே இன்னுமொரு சிறிய கன்னை, கிட்டத்தட்ட ஐந்து பேர், லெனினைச் சுற்றி குழுவாகியிருந்தனர்.
அந்த மாநாடு எதனைக் கொண்டுவரப் போகிறது என்பதில் லெனினுக்கு எந்த பிரமைகளும் இல்லை. எத்தனை சிறியதாயினும், உண்மையான மார்க்சிச சக்திகளை சர்வதேசரீதியாக அணிதிரட்டுவதில் ஒரு முன்னோக்கிய அடியாக அவர் அதனைக் கண்டார்.
அந்த மாநாடு நடந்த சமயத்தில் லெனின் மிகவும் கூர்ந்து கவனித்தார், அரிதாகப் பேசினார், அதிகநேரம் பேசாமல் தான் இருந்தார் என்று சுவிஸ் சோசலிஸ்ட் இடது-சாரியான ஃபிரிட்ஸ் பிளாட்டன் நினைவுகூர்ந்தார். ஆனால் அவர் பேசிய சமயத்தில் அந்த வார்த்தைகள் “ஒரு கொடும் மழையின் தாக்கத்தைக் கொண்டிருந்தது”. லெனினின் முன்னோக்கு —அவர் மட்டுமே மாநாட்டிற்கு ஒரு வரைவுத் தீர்மானத்தை வழங்கிய ஒரேயொரு மனிதராக இருந்தார்— அங்கே நடந்த பல விவாதங்களுக்கும் தொனியை உருவாக்கித் தந்ததாக இருந்தது.
”லெனின் வரலாற்று அபிவிருத்தியின் விதிகளை அசாத்தியமான தெளிவுடன் கண்டார் என்ற உண்மையில்தான் அவரது வலிமை அடங்கியிருந்தது” என்பதுதான் பிளாட்டனின் கருத்தாய் இருந்தது. [23]
அந்த விதிகளில் லெனின் செலுத்திய கவனக்குவிப்புத்தான் ஆகஸ்டு 4 கறையை அகற்ற முயலுவதன் மூலம் இரண்டாம் அகிலத்திற்கு புத்துயிரூட்டுகின்ற அத்தனை முயற்சிகளையும் நோக்கிய லெனினின் மனோபாவத்தை தீர்மானித்தது.
இரண்டாம் அகிலத்தின் உருக்குலைவு என்பது வெறுமனே அதன் தலைமையின் காட்டிக்கொடுப்பின் விளைவாக இல்லை. ஒப்பீட்டளவில் அமைதியான அபிவிருத்தி கொண்ட ஒரு முழு வரலாற்று சகாப்தத்தின் முடிவை அது குறித்து நின்றது. போர்கள் மற்றும் புரட்சிகளின் ஒரு புதிய சகாப்தம் பிறந்திருந்தது. புதிய கடமைகளை எதிர்கொள்ளும் வண்ணம், புதிய அடித்தளங்களின் மீது ஒரு புதிய அகிலம் கட்டப்பட வேண்டியதாய் இருந்தது.
அமைதிக்காக என்பது தான் முன்வைக்கப்பட்ட சுலோகமாக இருந்தது. ஆனால் இந்த சுலோகம் அத்தனை பிரச்சினைகளையும் உள்ளடக்கியிருந்தது: முதலாளித்துவ அமைப்புமுறை ஏகாதிபத்தியமாக வரலாற்றுவழியில் அபிவிருத்தி கண்டு போருக்கு இட்டுச் சென்றிருந்த நிலையில் அதனைத் தூக்கிவீசாமல் அங்கே எப்படி அமைதி வர முடியும்? அந்தப் பணியானது தொழிலாளர்கள்’ இயக்கத்திற்குள்ளாக ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறவர்களுக்கு எதிரான தளர்ச்சியற்ற போராட்டம் இல்லாமல், அவர்களிடம் இருந்து முழுமையாக பிரிவு காணாமல் முன்னெடுக்கப்பட முடியாது.
செப்டம்பர் 7 அன்றான மாலை அமர்வில், பிரெஞ்சு பிரதிநிதியான அல்போன்ஸ் மேர்ஹேம் பிரச்சினைகளை சுருங்கக் கூறினார். பெரும்பான்மையினர் பாட்டாளி வர்க்கத்தின் அமைதி நடவடிக்கையை விரும்பினார்களே அன்றி, குறுகிய சூத்திரங்களை அல்ல, என்று அவர் கூறினார். மேர்ஹேம் புரட்சிக்கு எதிராய் நிற்கவில்லை, ஆனால் அவர் வலியுறுத்தினார்: “அமைதிக்காகப் பாடுபடுவதன் மூலமே ஒரு புரட்சிகர இயக்கம் வளர முடியும். தோழர் லெனின், நீங்கள் அமைதிக்காகப் பாடுபடுவதைக் கொண்டு உந்தப்பட்டவராக இல்லை, மாறாக ஒரு புதிய அகிலத்தை அமைக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டிருக்கிறீர்கள். இது தான் நம்மைப் பிரித்து நிற்கிறது.”[24]
ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக ட்ரொட்ஸ்கி வரைவு செய்து அனைவரும் கையெழுத்திட்ட ஒரு அறிக்கை வெளியிட்டது தான் சிம்மர்வால்ட் மாநாட்டின் விளைபயனாக இருந்தது. அது எந்த விதத்திலும் லெனின், அல்லது ட்ரொட்ஸ்கியும் கூட, விரும்பியிருந்ததாக இல்லை. ஆயினும் அது லெனின் சொன்னதைப் போல, ”சந்தர்ப்பவாதம் மற்றும் சமூகப் பேரினவாதத்துடனான ஒரு சித்தாந்தரீதியான மற்றும் நடைமுறைரீதியான முறிவை நோக்கிய” ஒரு சிறு முன்னேற்றம், அடியெடுப்பு. [25]
எதிர்வரவிருந்த மாதங்களில், சிம்மர்வால்ட் மாநாடு போருக்கு எதிராய் விரிவுகாணும் எதிர்ப்புடன் தொடர்புபடுத்தப்படுவதானது, ஏனென்றால் ஏகாதிபத்தியத்தை கண்டனம் செய்கின்ற அந்த அறிக்கையின் உள்ளடக்கமானது பாரிய படுகொலைகள் மற்றும் ஆழமடைந்து சென்று கொண்டிருந்த வறுமை ஆகியவற்றின் மத்தியில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளது நனவுக்குள் ஊடுருவிச் சென்றிருந்தது.
ஒரு புதிய அகிலத்திற்கான அடித்தளங்கள்
ஆனாலும் அந்த மாநாடு நடத்தப்படுவதற்கு அடிப்படையாக கீழமைந்திருந்த பிரச்சினைகள் அப்படியேதான் இருந்தன.
1916 மார்ச்சில் ஒரு புதிய அகிலத்துக்கான அடித்தளங்கள் குறித்து ரோசா லுக்செம்பேர்க் வெளியிட்ட ஒரு தீர்மானத்தில் அவை எடுத்துக்கூறப்பட்டிருந்தன. அமைதியை அடைவதற்காக நிர்ப்பந்திக்கும் ஒரு வெகுஜன நடவடிக்கையை முதல் வார்த்தையாகக் கொண்ட, பரந்த மக்களது புரட்சிகரப் போராட்டங்களது ஒரு விளைவாக மட்டுமே அது பிறக்க முடியும் என்று அவர் எழுதினார்.
“அகிலத்தின் இருப்பும் நம்பகத்தன்மையும் ஒரு அமைப்புரீதியான பிரச்சினை அல்ல, உழைக்கும் மக்களின் எதிரெதிர் அடுக்குகளது பிரதிநிதிகளாய் வரக்கூடிய தனிமனிதர்களது ஒரு சிறிய வட்டத்திற்குள்ளான புரிதல்கள் குறித்த பிரச்சினை அல்ல, மாறாக அது அத்தனை நிலங்களது பாட்டாளி வர்க்கத்தின் வெகுஜன இயக்கம் குறித்த ஒரு பிரச்சினையாகும்.”[26]
இங்கே தான் லெனினின் கருத்தாக்கத்துடனான ஒரு அடிப்படையான வித்தியாசம் அமைந்திருந்தது.
போர், வெகுஜன புரட்சிகரப் போராட்டங்களை தூண்டும் என்பதில் லெனினுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் அந்தப் போராட்டங்களை முன்னெடுக்கும்போது, அங்கே அவசியமான வேலைத்திட்டத்தின் பிரதான கூறுகளை வேலை செய்து வைத்திருக்கின்ற, அத்துடன் மிக முக்கியமானதாக, போரை ஆதரித்திருந்த நிலையில் புரட்சியை தடம்புரளச் செய்ய முயற்சி செய்வதற்கு முன்னால் வரக்கூடிய அத்தனை அரசியல் போக்குகளுக்கும், எல்லாவற்றுக்கும் முதலில், தொழிலாளர் இயக்கத்தில் இருந்து வரக்கூடியவற்றை நோக்கி, தனது குரோதத்தை தெளிவாக காட்டியிருந்த ஒரு புரட்சிகரத் தலைமை அங்கே இருக்கின்றதா என்பதே அதிமுக்கியமான பிரச்சினையாக இருந்தது.
அத்தகைய தயாரிப்பின் அடிப்படையில் மட்டுமே, புரட்சியின் வெடிப்பானது —போருக்கு இட்டுச்சென்ற அதே நிலைமைகளது ஒரு விளைபொருள்— தொழிலாள வர்க்கத்தினால் வெற்றிகரமாக அரசியல் அதிகாரம் கைப்பற்றப்பட இட்டுச்செல்ல முடியும்.
இந்த முன்னோக்கின் சரியான தன்மையானது 1917 இன் பாதையில் நிரூபணம் பெறுவதானது. சிம்மர்வால்ட் மாநாட்டிற்கு வெறும் ஒன்றரை ஆண்டுகளின் பின்னர், பிப்ரவரி புரட்சி வெடித்தது, அதற்கு எட்டு மாதங்களின் பின்னர் அக்டோபர் புரட்சி வெடித்தது.
லெனின் ரஷ்யாவுக்குத் திரும்பும் பயணத்தின் சமயத்தில் சுவிஸ் தொழிலாளர்களுக்கு எழுதிய தனது விடைபெறும் கடிதத்தில் எழுதினார்:
“1914 நவம்பரில் எமது கட்சியானது ‘ஏகாதிபத்தியப் போரை, சோசலிசத்தை அடையும் பொருட்டு ஒடுக்குவோருக்கு எதிரான ஒடுக்கப்படுவோரின் ஒரு உள்நாட்டுப் போராக மாற்றுங்கள்’ என்ற சுலோகத்தை முன்வைத்தபோது, சமூக தேசப்பற்றுவாதிகள் இந்த சுலோகத்தை வெறுப்பு மற்றும் துஷ்டத்தனமான கேலியுடன் எதிர்கொண்டார்கள், சமூக ஜனநாயகத்தின் ‘மத்தி’யானது நம்பமுடியாத, ஐயுறவான, பரிதாபகரமான, அசாதாரணமான அமைதியுடன் எதிர்கொண்டது. இப்போது 1917 மார்ச்சுக்குப் பின்னர், அது சரியான சுலோகம் என்பதை குருடர்கள் தான் காணத் தவறமுடியும். ஏகாதிபத்தியப் போரை உருமாற்றுவதென்பது ஒரு உண்மையாக ஆகிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் தொடங்குகின்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியானது நீடூழி வாழட்டும்.”[27]
Notes:
1. Cited in Hamilton and Herwig, Decisions for War, 1914–17 (Cambridge, 2004), p. 19
2. Niall Ferguson, The Pity of War (Allen Lane, 1998), p. 31
3. Cited in Fritz Fischer, War of Illusions: German Policies from 1911 to 1914 (London: Chatto & Windus, 1975), p. 449
4. Cited in David Stevenson, Armaments and the Coming of War (Oxford: Clarendon Press, 1996), p. 391
5. Cited in Paul Kennedy, The Rise of Anglo-German Antagonism (London: The Ashfield Press, 1987), p. 467
6. Engels, Introduction to Borkheim Abstract, available at https://www.marxists.org/archive/marx/works/1887/12/15.htm
7. Resolution of the Second International Stuttgart Congress, available at https://www.marxists.org/history/international/social-democracy/1907/militarism.htm
8. Lenin, Collected Works Volume 21, p. 34
9. Lenin, Collected Works Volume 21, p. 161
10. Lenin, Collected Works Volume 21, p. 279
11. Rudolf Hilferding, Finance Capital (London: Routledge & Kegan Paul, 1985), p. 22
12. Hilferding, op cit, p.334
13. Cited in Lenin, Collected Works, Volume 21, p.219
14. Lenin, Collected Works, Volume 21, p. 187
15. Cited in Lenin, Collected Works, Volume 21, p. 278
16. Rosa Luxemburg, The Junius Pamphlet: The Crisis in the German Social Democracy in Rosa Luxemburg Speaks(New York: Pathfinder Press, 1970), p. 261–262
17. Lenin, Collected Works, Volume 21, pp. 315-316
18. Leon Trotsky, War and the International, pp. 51-52
19. Lenin, Collected Works, Volume 21, p. 215
20. Lenin, Collected Works, Volume 21, p. 216
21. Karl Marx, Theses on Feuerbach, available at https://www.marxists.org/archive/marx/works/1845/theses/theses.htm
22. Lenin, Collected Works, Volume 21, p. 258
23. Catherine Merriedale, Lenin on the Train (Allen Lane, 2016), p. 86
24. Cited in R. Craig Nation, War on War (Chicago: Haymarket Books, 2009), p. 89
25. Lenin, Collected Works, Volume 21, p. 384
26. Cited in R. Craig Nation, War on War, p.95
27. Lenin, Collected Works, Volume 23, p. 373