Print Version|Feedback
Week one of the Trump administration: A government of war and social reaction
ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் வாரம்: போர் மற்றும் சமூகப் பிற்போக்குத்தனத்தின் ஒரு அரசாங்கம்
By Joseph Kishore
28 January 2017
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வாரமாகியிருக்கிறது, புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் உத்தரவுகளும் அடுத்த நான்கு வருடங்களில் அதனிடம் இருந்து தொழிலாள வர்க்கம் எதனை எதிர்பார்க்கலாம் என்பதையே தெளிவாக்குகின்றன.
ட்ரம்ப்பின் “முதலில் அமெரிக்கா” திட்டநிரலின் மையத்தில் இராணுவ நடவடிக்கையின் ஒரு பாரிய அதிகரிப்பு இருக்கிறது. வெள்ளிக்கிழமையன்று புதிய பாதுகாப்புச் செயலரான ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜேம்ஸ் மாட்டிஸின் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில், ட்ரம்ப் இராணுவத்தின் ஒரு பெரும் “மீள்கட்டுமானத்தை” தொடக்குவதற்கான ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அமெரிக்க அணுஆயுத திறனை மேம்படுத்துவதற்கான ஒரு கொள்கையை தயாரிப்பதற்கும் “கிட்டத்தட்ட சமமான போட்டியாளர்களுடன்” —பாரம்பரியமாய் சீனா மற்றும் ரஷ்யாவை குறிப்பிட பயன்பட்டு வந்திருக்கும் ஒரு பதம்— மோதலுக்குத் தயாரிப்பு செய்வதற்கும் இந்த உத்தரவு மாட்டிஸுக்கு உத்தரவிடுகிறது.
வெளியுறவுச் செயலராய் ஆகவிருக்கும் எக்சான்மொபில் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான றெக்ஸ் ரில்லர்சன், ஒரு போர் அறிவிப்புக்கு நிகரான இராணுவ நடவடிக்கைகளை சூசகம் செய்கின்றவகையில், தென் சீனக் கடலில் உள்ள தீவுகளுக்கு சீனாவின் அணுகலை அமெரிக்கா தடை செய்ய முனையும் என்று கூறியதை ட்ரம்ப்பின் ஊடகச் செயலரான சீன் ஸ்பைசர் மறுஉறுதி செய்ததை பின்தொடர்ந்து இந்த நடவடிக்கை வந்துசேர்ந்திருக்கிறது.
சிரியாவில் “பாதுகாப்பான மண்டலங்களை” ஸ்தாபிக்கவும் ட்ரம்ப் உறுதிபூண்டிருக்கிறார், அதனுடன் சேர்த்து முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏராளமான நாடுகளில் இருந்து குடியேறுவதற்கான ஒரு தற்காலிக தடையும் கைகோர்க்க இருக்கிறது. ரஷ்யா விடயத்தில் “மிகவும் மென்மையாக நடந்து கொள்வதற்காக” ட்ரம்ப்பை ஜனநாயகக் கட்சியினர் கண்டனம் செய்திருக்கின்றனர் என்ற அதேநேரத்தில், தேர்தல் சமயத்தில் கிளிண்டன் பிரச்சாரத்தினர், பஷார் அல்-அசாத்தின் சிரிய அரசாங்கத்திற்கு ரஷ்யா ஆதரவளிப்பதை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியின் பகுதியாய், அமெரிக்க இராணுவ விமானங்களின் கண்காணிப்பின் கீழ் ”பாதுகாப்பான” பறக்கத் தடைகொண்ட பிராந்தியங்களை அமைப்பதற்கு அழைத்திருந்தனர். சிஐஏ தலைமையகத்தில் நிகழ்த்திய ஒரு உரையில், ட்ரம்ப் ஈராக்கில் அமெரிக்கா “எண்ணெயை எடுத்திருக்க வேண்டும்” என்று கூறியதோடு அவ்வாறு செய்வதற்கு சிஐஏ க்கு இன்னொரு வாய்ப்பு கிட்டும் என்றும் வாக்குறுதியளித்தார்.
உள்நாட்டுக் கொள்கை விடயத்தில், ட்ரம்ப் அனைத்து கூட்டரசாங்க தொழிலாளர்கள் பணியமர்த்தலையும் நிறுத்தி வைக்கின்ற, Keystone and Dakota Access எண்ணெய் குழாய்த்திட்டத்தின் நிறைவுக்கு குறுக்கே நிற்கின்ற அரசாங்க விதிமுறைகள் அனைத்தையும் நிறுத்துகின்ற மற்றும் அத்தனை முட்டுக்கட்டைகளையும் அகற்றுகின்ற வரிசையான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். வார ஆரம்பத்தில், மிகப்பெரும் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் சந்தித்த அவர், “விதிமுறைகளை 75 சதவீதம் குறைக்கவும்” வணிகச் சூழலை “உண்மையாகவே தரிசாகி போயிருக்கும் நிலையில் இருந்து மிகவும் உபசரிப்புமிக்க நிலைக்கு” மாற்றுவதற்கும் வாக்குறுதியளித்தார்.
புதன்கிழமையன்று, அமெரிக்க-மெக்சிகோ எல்லை முழுக்க ஒரு சுவர் எழுப்பும் நடவடிக்கையை தனது நிர்வாகம் முன்னெடுக்கவிருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார், கைது மற்றும் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளுக்காய் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் குறிவைத்து ஒரு ஒடுக்குமுறைத் திட்டநிரலும் தொடக்கப்படுகிறது. நவம்பரில் மக்கள் வாக்களிப்பு எண்ணிக்கையில் ட்ரம்ப் தோல்வியடைய மில்லியன் கணக்கான மக்களின் “வாக்காளர் மோசடி” காரணமாய் இருந்ததாக —வாக்களிக்கும் உரிமை மீது ஒரு மேலதிக தாக்குதலை நிகழ்த்துவதற்கான நிலைமைகளை உருவாக்கும் நோக்கம் கொண்ட ஒரு கூற்று— முற்றிலும் முகாந்திரமில்லாமல் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குள் ஒரு “பெரும் விசாரணை”க்கு வெள்ளை மாளிகை முனையவிருப்பதாகவும் அதே நாளில் அவர் தெரிவித்தார்.
அதீத பொருளாதார தேசியவாதக் கொள்கையின் பகுதியாக, இந்த வார ஆரம்பத்தில், பசிபிக் கடந்த கூட்டில் அமெரிக்கா நுழைவதைத் தடுக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார் என்பதுடன் வட அமெரிக்க சுதந்திர வணிக ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதற்கும் உறுதியளித்தார்.
புதனன்று இரவு ABC News தொகுப்பாளர் டேவிட் முயர் உடன் ட்ரம்ப் அளித்த நேர்காணலில், உள்வந்திருக்கும் நிர்வாகத்தின் பல கொள்கைகள் கோடிட்டுக் காட்டப்பட்டன, நேர்காணலில் ட்ரம்ப் போர், சித்தரவதை மற்றும் ஒடுக்குமுறை ஆகியவை குறித்த சர்வசாதாரணமான மிரட்டல்களுடன் தனது சொந்த பிரபலம் குறித்தும் பதவியேற்பின் அளவு குறித்துமான பொய்யான கூற்றுகளையும் இடையிடையில் செருகினார். Oval Office இல் (அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாகத் துறை) இருக்கும் ஒரு அடாவடியாளர் போன்றும், அமெரிக்க முதலாளித்துவ சமூகத்தில் ஊழலடைந்தும் அவலட்சணமாகவும் இருக்கும் அத்தனையையும் பிரதிபலிக்கின்ற ஒரு நிழலுலகத்தால் அதிகாரம் கைப்பற்றப்பட்டிருப்பதையும் போன்றே அந்த நேர்காணலின் போது ட்ரம்ப் மீதான ஒட்டுமொத்த படிமமானது ஏற்பட்டது.
சித்திரவதை விடயத்தில், மாட்டிசும் உள்வரும் சிஐஏ இயக்குநரான மைக் பொம்பியோவும் “[வாட்டர்போர்டிங்-நீரில் முகத்தை அமிழ்த்தும் சித்திரவதை] மேற்கொள்ள விரும்பினால், அது சரியே. அவர்கள் அதைச் செய்ய விரும்பினால், அது தொடர்பாக நான் நடவடிக்கை மேற்கொள்வேன்” என்று ட்ரம்ப் அறிவித்தார். வெளிநாடுகளில் இருந்த இரகசியமான சிஐஏ சிறைகளையும் சித்திரவதை மையங்களையும் மீண்டும் திறக்கப்பட இருப்பதாய் வெள்ளை மாளிகையில் ஒரு வரைவு சுற்றறிக்கை வலம்வந்து கொண்டிருக்கிறது.
இது முதல் வாரம்தான். ஜனநாயகக் கட்சியினரது ஆதரவுடன், பில்லியனர்கள், முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் கொண்ட ட்ரம்ப்பின் அமைச்சரவைக்கு ஒப்புதலளிக்க நாடாளுமன்றம் துரிதகதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, மாட்டிஸ், பொம்பியோ மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் தலைவரான ஓய்வுபெற்ற மரைன் தளபதி ஜோன் கெல்லி ஆகியோருக்கு ஏற்கனவே அது ஒப்புதல் வழங்கி விட்டிருக்கிறது. ட்ரம்ப்பின் மற்ற அமைச்சரவை தேர்வுகளும் பொதுக் கல்வியை அழிப்பதற்கு, அடிப்படை சமூக சேவைகளை அழிப்பதற்கு, மெடிக்கேர், மெடிக்கேய்ட் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்றவற்றை இல்லாதுசெய்வதற்கான ஒரு கொள்கைக்கு உறுதி பூண்டிருப்பவர்களாகவே இருக்கின்றனர்.
ட்ரம்ப்பின் தேர்வானது அமெரிக்கத் தேர்தலில் ஒரு முக்கியமான உருமாற்றப்புள்ளியை குறித்து நிற்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், வருங்காலத்தின் வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் காலகட்டத்தை ஆய்வு செய்யும்போது, இதற்கு முன்வந்த காலத்திற்கு, ட்ரம்ப்பின் ஜனாதிபதிக் காலம் எழுவதற்கு வழிவகுத்த நிலைமைகள் மற்றும் சூழல்களின் மீது நேரடிக் கவனம் செலுத்துவார்கள் என்பது தவிர்க்கவியலாததாகும். அமெரிக்காவின் அரசியல் கலாச்சாரத்தில் ஏற்பட்ட அசாதாரணமான சிதைவு, வெளிநாட்டில் முடிவற்ற போர் மற்றும் வன்முறை ஆகியவற்றால் உள்நாட்டில் ஏற்பட்ட பின்விளைவுகள், சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சி மற்றும் ஒரு ஒட்டுண்ணித்தனமான நிதிச் சிலவராட்சியின் எழுச்சி என ஏராளமான காரணிகள் சுட்டிக்காட்டப்பட முடியும்.
ட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவிக்காலம் ஒரு முழுமையான முறிவைக் குறிப்பதைக் காட்டிலும், அளவு பண்பாக உருமாறுவதையே குறித்துநிற்கிறது. இறுதி ஆய்வில், அவர், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தை பீடித்திருக்கும் ஆற்றொணா நெருக்கடியின் விளைபொருளாகவே இருக்கிறார்.
நான்கு தசாப்தங்களாய், அமெரிக்காவில் ஆளும் வர்க்கமானது, முந்தைய தசாப்தங்களில் கடுமையான போராட்டங்களின் மூலமாக தொழிலாளர்கள் வென்றிருந்த அத்தனை தேட்டங்களையும் சிறிதுசிறிதாக அழிப்பதன் மூலமாக, ஒரு சமூக எதிர்ப்புரட்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருந்தது. ஒபாமா நிர்வாகம் இந்த நிகழ்முறைகளை மேலும் முடுக்கி விட்டது. ஒபாமாவின் வெள்ளை மாளிகையானது புஷ் நிர்வாகத்தின் கீழ் தொடக்கமளிக்கப்பட்டிருந்த வங்கிப் பிணையெடுப்புகளை தொடர்ந்தது மற்றும் விரிவுபடுத்தியது என்பதோடு, பெடரல் ரிசர்வின் “பண இறைப்பு” திட்டங்களின் மூலமாக வோல் ஸ்ட்ரீட்டிற்குள் டிரில்லியன் கணக்கான டாலர்களை பாய்ச்சுவதற்கு உதவிய அதேநேரத்தில் 2009 வாகனத்துறை மறுசீரமைப்பில் கண்டதைப் போல, தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்களை வெட்டுவதற்கு வேலைசெய்தது.
சமூக சமத்துவமின்மையின் அசாதாரண வளர்ச்சியில் இதன் விளைவுகள் வெளிப்படுகின்றன. பேர்க்கெலி கலிபோர்னியா பல்கலைக்கழக பொருளாதார அறிஞர்களான தோமஸ் பிக்கெட்டி, இமானுவேல் சாயஸ் மற்றும் காப்ரியல் சுஹ்மான் ஆகியோர் வழங்கிய சமீபத்திய அறிக்கை ஒன்றின் படி, 1980க்கும் 2014க்கும் இடையிலான காலத்தில், வரிக்கு முந்தைய தேசிய வருவாயில் அடிமட்டத்தில் இருக்கும் 50 சதவீதம் பேருக்கு சென்றுசேரும் பங்கு 20 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருந்தது, அதேநேரத்தில் உச்சத்தில் இருக்கும் 1 சதவீதம் பேருக்கு சென்றுசேரும் பங்கு 12 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வளர்ச்சி கண்டிருந்தது. மக்கள்தொகையில் செல்வ உச்சத்தில் இருக்கும் 0.1 சதவீதம் மற்றும் 0.01 சதவீதத்தினருக்கான ஆதாயங்கள் இன்னும் கூர்மைப்பட்டவையாக இருக்கின்றன.
அதேபோல ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையும் எங்கிருந்தோ முளைத்ததல்ல. கால் நூற்றாண்டு காலமாய், அமெரிக்க ஆளும் வர்க்கமானது தனது பொருளாதார வீழ்ச்சியை இராணுவ வலிமை மூலமாக ஈடுகட்டும் ஒரு நப்பாசை முயற்சியில், பால்கன்களில், வட அமெரிக்காவில், மத்திய கிழக்கில் மற்றும் மத்திய ஆசியாவில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. பதினைந்து ஆண்டு கால “பயங்கரவாதத்தின் மீதான போர்” பெரும் போட்டியாளர்களுடனான இன்னும் நேரடி மோதலாக உருமாற்றம் கண்டிருக்கிறது. சீனாவின் மீதான ட்ரம்ப்பின் கவனக்குவிப்பு என்பது, உண்மையில், தெற்கு பசிபிக் மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகள் எங்கிலும் அமெரிக்க இராணுவ வளங்களை நிலைநிறுத்துவதை மேற்பார்வை செய்த ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய திரும்புநிலை”யின் தொடர்ச்சியே ஆகும்.
பாசிசம், அதீத தேசியவாதம் மற்றும் எதிர்ப்பை வன்முறை கொண்டு ஒடுக்கும் மிரட்டல் ஆகியவற்றின் தனித்துவமான நாற்றத்தை இந்த நிகழ்ச்சிபோக்களுடன் ட்ரம்ப் சேர்த்திருக்கிறார். தனது பதவியேற்பு உரையில் “அமெரிக்காவுக்கான முழுமையான விசுவாசம் தான் நமது அரசியலின் அடித்தளமாக இருக்கும்” என்று அவர் அறிவித்ததானது, எதிர்ப்பை குற்றமாக்குவதற்கான அச்சுறுத்தலாகும், எதிர்ப்பு தேசதுரோகத்துடன் தொடர்புபடுத்தப்படவிருக்கிறது.
ஆயினும், இந்த இடத்திலும் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் நீண்டகாலத்திலான சிதைவின் அப்பட்டமான வெளிப்பாட்டையே ட்ரம்ப் கொடுத்துக் கொண்டிருக்கிறார். எப்படியாயினும், முறையான நடைமுறைகள் இல்லாமலேயே அமெரிக்கக் குடிமக்களைக் கொல்வதற்கான அதிகாரத்தை பிரகடனம் செய்த ஜனாதிபதியாக ஒபாமாவே வரலாற்றில் இடம்பெற இருக்கிறார். குவாண்டனமோ விரிகுடா, அபு கிரைப், ஆளில்லா விமானங்கள் மூலமான படுகொலைகள், NSA வேவுபார்ப்பு —இந்த நச்சுக் கலவையில் இருந்து தான் அரசியல் நிர்ணயங்களுக்கான ட்ரம்ப்பின் குறிப்பான அலட்சியம் எழுகிறது.
ஜூலை மாதத்தில், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு மாநாட்டில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ட்ரம்ப் முறைப்படி பரிந்துரைக்கப்பட்ட நிலையில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு குறிப்பிட்டது: “ட்ரம்ப்பின் குறிப்பான பாசிச தனிமனிதவியல்புகளானது மூனிச் நகர மதுச்சாவடிகளிலும் முதலாம் உலகப் போரின் பதுங்குகுழிகளில் இருந்தும் உருவானவையல்ல, மாறாக நியூ யோர்க் நகரத்தின் நில, கட்டிட சொத்துக்கள் பேர வணிகச் சந்தையில் இருந்து உருவானவையாகும். அவரது கேசினோ சூதாட்டங்கள், வித்தியாசப்பட்ட பல்கலைக்கழகங்கள் (fictional universities) மற்றும் அவரின் தோல்வியடைந்த வணிகங்களைக் குறித்த முடிவில்லா தம்பட்டம் என இவற்றுடன் அமெரிக்க முதலாளித்துவத்தின் இன்றைய நிலைக்கு, இந்த பெருநிறுவன மோசடியாளரின் உருவடிவத்தை விட மிகப் பொருத்தமான வேறு அடையாளம் இருக்க முடியாது.
அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள்ளாக கூர்மையான மற்றும் கடுமையான பிளவுகள் இருக்கின்றன, ஆனால் இந்தப் பிளவுகள் தந்திரோபாயம் தொடர்பானவையே தவிர, அடிப்படை வர்க்கக் கொள்கை குறித்தவை அல்ல. அரசியல் ஸ்தாபகத்திலும் ஊடகங்களிலும், மற்றும் இது விடயத்தில், உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகைகொண்டிருக்கும் பிரிவுகளுக்குள்ளும் இருந்து தன்னை விமர்சித்துக் கொண்டிருக்கும் பலரையும் தன் வழிக்குக் கொண்டுவருவது ட்ரம்புக்கு அதிக சிரமமான ஒன்றாய் இருக்கப் போவதில்லை.
இத்தகைய சக்திகளில் இருந்து புதிய நிர்வாகத்திற்கான தாக்குப்பிடிக்கும் எதிர்ப்பு அபிவிருத்தி காணப் போவதில்லை, மாறாக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திடம் இருந்தே அபிவிருத்தி காணவிருக்கிறது. புதிய நிர்வாகத்தின் கொள்கையின் தாக்கம் உணரப்படும் போது, “மறக்கப்பட்டு விட்ட மனிதர்”களது பாதுகாவலர் போல ட்ரம்ப் தன்னைக் காட்டிக் கொள்ளும் அபத்தமான நடிப்பு, வெகுசீக்கிரத்திலேயே, கடுமையான வர்க்க மோதலுக்கு வழிவகுக்கவிருக்கிறது. சோசலிஸ்டுகள் இப்போது தொழிலாள வர்க்கத்தின் பரந்த திரளினரை நோக்கியே திரும்பியாக வேண்டும் என்பதோடு, திட்டமிட்ட ஒழுங்கமைப்பு மற்றும் கல்வியூட்டல் மூலமாக, கண்ணுக்கெட்டும் தொலைவில் தெரியும் போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்வதற்கான ஒரு அரசியல் தலைமை உருக்கொடுக்கப்பட வேண்டும்.