Print Version|Feedback
US Pacific commander visits Sri Lanka, praising new regime
அமெரிக்க பசிபிக் தளபதி இலங்கைக்கு பயணித்து புதிய ஆட்சியை பாராட்டினார்
By K. Ratnayake
3 December 2016
அமெரிக்க பசுபிக் கட்டளை தளத்தின் (PACOM) தலைவர் அட்மிரல் ஹரி பி. ஹரிஸ், சீனாவிற்கு எதிராக இந்து-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ திட்டமிடலுக்கு தீவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கடந்த மாதம் பிற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது நான்கு நட்சத்திர அமெரிக்க அதிகாரியான ஹரிஸ், இரு நாடுகளுக்கும் இடையே "இராணுவத்திற்கு- இராணுவ உறவுகளை" ஆழப்படுத்த விரும்புவதாக காலியில் நடந்த சர்வதேச கடற்படை மாநாட்டில் தெரிவித்தார். அவர் அமெரிக்கா, இந்தியா, பாக்கிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 42 நாடுகளில் இருந்து மூத்த கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்ட, வருடாந்த பாதுகாப்பு கூட்டத்தில் முக்கிய பேச்சாளராக இருந்தார். இந்த ஆண்டு நிகழ்வில் உத்தியோகபூர்வ தொணிப்பொருள், "மூலோபாய கடல்சார் பங்கான்மையை ஊக்கப்படுத்துவதாக" இருந்தது.
ஹரிசின் வருகையானது 2015 ஜனவரியில் நடந்த தேர்தலில் அமெரிக்க சார்பு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆன பின்னர், இலங்கையுடன் இராணுவ உறவுகளை அதிகரிக்க அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பாகமாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெகளியேற்றி, இலங்கை ஜனாதிபதியாக சிறிசேனவை நியமித்த ஆட்சி மாற்ற நடவடிக்கையில் வாஷிங்டன் முக்கிய கருவியாக செயற்பட்டது.
இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத வழிமுறைகள் மற்றும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடூரமான இனவாத யுத்தத்தை அமெரிக்கா ஆதரித்த அதேவேளை, பெய்ஜிங் உடனான அவரது நெருக்கமான உறவுகளை எதிர்த்தது.
கொழும்பில் புதிய ஆட்சி குறித்து கருத்து தெரிவித்த ஹரிஸ், சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழ் "இலங்கை மக்கள் ஜனநாயகத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைகளின் விளைவுகளை காண்கின்றனர்" என்று அவர்களை பாராட்டினார். புதிய இலங்கை அரசாங்கத்தின் "நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கும் அமெரிக்கா உடனான ஒத்துழைப்புக்கும் தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளதையிட்டு" தான் வியப்படைந்ததாக PACOM தளபதி கூறினார்.
இலங்கையர்கள் "ஜனநாயகத்தின் விளைவுகள் காண்கின்றனர்" என்று கூறுவது அப்பட்டமான பொய் ஆகும். சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கம், சாதாரண இலங்கையரின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் திட்டமிட்டு நசுக்குவதில், இராஜபக்ஷவின் நிர்வாகம் பின்பற்றிய வழிவகைகளையே ஆழப்படுத்தியுள்ளது. வாஷிங்டன் மற்றும் புது தில்லிக்கு ஆதரவாக இலங்கை வெளியுறவுக் கொள்கையை முழுமையாக மாற்றியது மட்டுமே குறிப்பிடத்தக்க மாற்றமாகும். மற்றும் அமெரிக்க இராணுவத்துடன் தீவு தேசத்தின் இராணுவப் படைகள் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்ட்டுள்ளன.
இந்திய மற்றும் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள முக்கிய வர்த்தக பாதைகளின் அருகில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதால் "இலங்கை அமெரிக்காவுக்கு முக்கியமானது," என ஹரிஸ் மாநாட்டில் தெரிவித்தார். "இலங்கைக்கு அருகே செல்லாமல், உங்களால் ஹோர்முஸ்ஸில் இருந்து மலாக்காவுக்கு –அல்லது செங்கடலில் இருந்து தென் சீனக் கடலுக்கு- பயணிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் மலாக்கா நீரிணை உலக எண்ணெய் ஏற்றுமதியில் 25 சதவீதம் கப்பலில் கொண்டு செல்லப்படுவதை காண்பதுடன், தென் சீனக் கடல் உலக வர்த்தகத்தில் ஆண்டுக்கு 5.3 டிரில்லியன் டாலர்களைக் காண்கிறது. நவீன வாழ்க்கையானது எல்லா இடங்களிலும் இந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையில் தங்கியிருக்கின்றது," என்று அவர் அறிவித்தார்.
தென் சீனக் கடல் பற்றிய ஹரிஸின் கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. வாஷிங்டன், தென் சீனக் கடலுக்கு பெய்ஜிங் உரிமை கோருவதை எதிர்க்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, தென் சீனக் கடல் பகுதிகளில் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸின் உரிமை கோரல்களை தீவிரமாக்க அமெரிக்க ஆத்திரமூட்டும் வகையில் ஊக்கம் அளித்து வருவதுடன், சீனாவிற்கு எதிராக அந்த நாடுகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை ஏற்படுத்தி வந்துள்ளது.
சீனாவிற்கு எதிராக தனது "நடமாடும் சுதந்திரத்தை" அமெரிக்க தொடர்ந்தும் வலியுறுத்தும் என்று கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் PACOM தளபதி தெரிவித்தார். "நாம், விதிகளை அடிப்படையாகக் கொண்ட பூகோள இயங்கு முறையை வலியுறுத்துவதற்கு இதேபோன்ற எண்ணம் கொண்ட தேசங்களுக்கு மத்தியில் பங்காண்மையை விரிவுபடுத்த வேண்டும்" என கூறிய அவர், எல்லா தேசங்களுக்கும் "சமமான நுழைவு வசதியை" உறுதிப்படுத்துவதற்கு “ஒரு கொள்கை ரீதியான பாதுகாப்பு வலையமைப்புக்கு" அழைப்பு விடுத்தார்.
"நடமாட்ட சுதந்திரம்" என்ற சொற்றொடரானது எல்லா இடங்களிலும் சவால் அற்ற அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளை, குறிப்பாக பெய்ஜிங்கிற்கு எதிரான இராணுவ மேம்படுத்தல்களை, நியாயப்படுத்தும் ஒரு அரசியல் மூடிமறைப்பே ஆகும்.
அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளம், தென் சீனக் கடலுக்கு பல போர் கப்பல்களை அனுப்பிவைத்து, ஆத்திரமூட்டும் வகையில் சீனா உரிமை கோரும் தீவுகளைகளுக்கு நெருக்கமாக அதன் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை விரிவாக்கியுள்ளது. அக்டோபரில் ஒரு ஏவுகணை அழிப்புக் கப்பலான யுஎஸ்எஸ் டக்காட்டர், சீனா உரிமைகோரம் பிரதேசத்தில் 12 கடல் மைல் பிராந்திய எல்லைக்கு அருகே பயணித்தமை இந்த ஆத்திரமூட்டல்களில் சமீபத்தியதாகும். இந்த ஈவிரக்கமற்ற செயல்கள், ஒரு உலகளாவிய மோதலை விரைவில் தூண்டிவிடக்கூடிய, இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான ஓர் இராணுவ மோதலின் ஆபத்தை முன்கொணர்ந்துள்ளது.
இந்த இராணுவ நிலைகொள்ளல்களின் ஒரு பாகமாக, வாஷிங்டன், சீனாவிற்கு எதிரான ஒரு "முன்னணி அரசாக" இந்தியாவை அணிதிரட்டிக்கொள்ள முயன்று வருகிறது. மார்ச் மாதம் புது தில்லியில் நடந்த ஒரு பாதுகாப்பு உரையாடலில் உரையாற்றிய ஹரிஸ், இந்திய மற்றும் பசிபிக் சமுத்திரங்களில் ஒருங்கிணைந்த கடற்படை ரோந்து நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு இந்தியாவை கேட்டுக்கொண்டார். அவர், அமெரிக்கா மற்றும் அதன் இரு முக்கிய ஆசிய-பசிபிக் இராணுவ நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனும், ஒரு நாற்தரப்பு "பாதுகாப்பு" பேச்சுவார்த்தையில் இந்தியா இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
லெபனான், மாலி, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தென் சூடானிலும் ஐ.நா. நடவடிக்கைகளில் அதன் இராணுவத் தலையீட்டிற்காக இலங்கைக்கு நன்றி தெரிவித்த PACOM தளபதி, கடந்த ஐந்து ஆண்டுகளில் தீவு-தேசத்துக்கான அமெரிக்க கடற்படையின் விஜயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். மார்ச்சில் இருந்து, யுஎஸ்எஸ் ப்ளூ ரிட்ஜ், யுஎஸ்எஸ் நியூ ஆர்லியன்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் போன்றவை கொழும்புக்கு விஜயம் செய்துள்ளன.
கடந்த மாத இறுதியில், யுஎஸ்எஸ் சோமர்செட் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையின் ஆழ்கடல் துறைமுகத்தில் மூன்று நாட்களைக் கழித்தது. யுஎஸ்எஸ் சோமர்செட், இலங்கை கடற்படை மற்றும் கடற்சார் படை உறுப்பினர்களுக்கு, அடிப்படை இராணுவ மற்றும் சிறிய படகு இயக்க பயிற்சிகளை வழங்கி இருந்தது. இந்த பயிற்சிகள் மனிதாபிமான உதவிகள் என்று அழைக்கப்படும் அனர்த்த நிவாரண பணிக்கான பயிற்சிகளாக இருந்தன.
ஹரிஸ் பின்னர் இலங்கையின் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு விஜயம் செய்து, இந்திய மற்றும் அமெரிக்க இராணுவங்களுக்கு ஒரு முக்கிய மூலோபாய சொத்தாகக் கருதப்படும் ஆழ்கடல் துறைமுகத்தை பார்வையிட்டார்.
இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவ படைகள் ஒருங்கிணைப்புக்கு இலங்கை தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் முதுகுக்குப் பின்னால் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் வசதிசெய்துகொடுத்து வருகிறது. வாஷிங்டனின் வளர்ந்து வரும் கட்டுக்கடங்காத புவிசார் மூலோபாய தந்திரங்களுக்கு ஏற்ப, இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு ஏவுதளமாக நாட்டைப் பயன்படுத்த கொழும்பு தீவிரமாக தயாராகி வருகிறது.
சீனாவுடனான ஒரு பெரும் இராணுவ மோதலின் ஆபத்து, தனது நிர்வாகம் சீனாவிற்கு எதிராக தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ள புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கீழ் மேலும் தீவிரமடையும்.