Print Version|Feedback
වතු සමිති මැදිහත් වී පාර්ක් වත්තේ කම්කරු වර්ජනය කඩාකප්පල් කරයි
இலங்கை: தொழிற்சங்கங்கள் தலையிட்டு பார்க் தோட்டத்தில் தொழிலாளர்களின் போராட்டத்தை நிறுத்தின
By M. Thevarajah
5 January 2017
சம்பள வெட்டுக்கு எதிராக உடபுஸ்ஸல்லாவ தோட்டக் கம்பனிக்கு சொந்தமான கந்தபொல பார்க் தோட்ட தொழிலாளர்கள் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் முன்னெடுத்த வேலை நிறுத்தம், தொழிற்சங்கங்களின் குழிபறிக்கும் நடவடிக்கைகளால் ஜனவரி 3 அன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் இந்த தலையீட்டின் மூலம், அவை தொழிலாளர்களின் அவசியங்களை அன்றி, தோட்டக் கம்பனிகளின் இலாப நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 7 அன்று, புதிய கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் வேலைச் சுமையை அதிகரித்து சம்பளத்தை வெட்டுவதற்கு எதிராகவும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் பார்க் தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் ஆரம்பமானது. தோட்டத்தில் தொழிலுக்காக புதிய தொழிலாளர்களை பதிய வேண்டும், வீடு மற்றும் தண்ணீர் வசதி சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதும் அவர்களது ஏனைய கோரிக்கைகளில் அடங்கும். இந்த வேலை நிறுத்தத்தில் தோட்டத்தில் சுமார் 800 தொழிலாளர்கள் பங்குபற்றினர்.
தொழிற்சங்கங்களுக்கு வெளியில் சுயாதீனமாகவே வேலை நிறுத்தம் தொடங்கியது. ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), அரசாங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் சக்தி தொலைக் காட்சியின் சேவை இயக்குனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே. ஸ்ரீரங்காவின் பிரஜைகள் முன்னணி உட்பட சுமார் ஒரு டசின் தொழிற்சங்கங்கள் இந்த தோட்டத்தில் உள்ளன.
அந்த சகல சங்கங்களும் ஆரம்பத்தில் இருந்து வேலை நிறுத்தத்துக்கு எதிராக இருந்ததோடு வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டு மீண்டும் வேலைக்கு செல்லுமாறு அழுத்தம் கொடுத்ததாக தொழிலாளர்கள் கூறினர். ஒரு மாத கால வேலை நிறுத்தத்தால் சம்பளம் கிடைக்காததாலும், போராட்டத்தை தனிமைப்படுத்துவதற்காக தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே செயற்பட்டதனாலும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல நெருக்கப்பட்டனர். “தொழிற்சங்கங்கள் எமது போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டன. சம்பளம் இன்றி தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்ய முடியாததால் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டு வேலைக்குச் செல்ல நேர்ந்தது” என தொழிலாளர்கள் கூறினர்.
தோட்ட முகாமையாளரான அஜித் பீரிசை மூன்ற மாதங்களுக்குள் வேறு தோட்டத்துக்கு மாற்றுவதற்கு வாக்குறுதி கொடுத்ததன் மூலமே வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அது நிச்சயமாக வேலைச் சுமையை அதிகரிப்பது மற்றும் வேலை இலக்கை பூர்த்தி செய்ய முடியாத தொழிலாளர்களின் சம்பளத்தை வெட்டுவது சம்பந்தமாக, தொழிலாளர்கள் மத்தியில் தோன்றிய எதிர்ப்பு மற்றும் கோபத்தை தணித்து, வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை மீணடும் வேலைக்கு அனுப்புவதற்காக தொழிற்சங்கங்களும் தோட்ட நிர்வாகமும் செய்த சதியே ஆகும். வேலை இலக்கை அதிகரிப்பதும் சம்பளத்தை வெட்டுவதும் வெறுமனே தோட்ட முகாமையாளரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. வேலை சுமையை அதிகரிப்பதும் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் கம்பனிகளால் பிரேரிக்கப்பட்டுள்ள குத்தகை விவசாய முறைக்கு சமமான, உற்பத்தி திறனை அடிப்படையாகக் கொண்ட வருமானப் பகிர்வு சம்பள முறைமையை நடைமுறைப்படுத்துவதும், புதிய கூட்டு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளுக்கு சகல தோட்ட தொழிற்சங்கங்களும் உடன்பட்டன.
உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்களுடன் பேசிய பார்க் தோட்டத்தின் தொழிலாளர்கள், வேலை இலக்குகளை அதிகரித்தல், சம்பளத்தை வெட்டுதல் மற்றும் தொழிற்சங்கங்களின் துரோக நடவடிக்கைகள் சம்பந்தமாக தமது எதிர்ப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.
“கூட்டு ஒப்பந்தத்தில் எமது சம்பளம் 620 ரூபாவில் இருந்து 720 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சகல தொழிற்சங்களும் கூறின. ஆனால் எங்கள் தோட்டத்தில், வேலைச் சுமையை அதிகரித்து பெரும்பாலான தொழிலாளர்களின் ஊதியம் வெட்டப்பட்டுள்ளது. இப்போது ஒரு நாளுக்கு 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். 10 கிலோவுக்கு அதிகமாக பறிக்காவிட்டால், சம்பளத்தில் பாதையைத்தான் தருவார்கள். இப்போது வறட்சி காலநிலை இருப்பதால், எப்படியும் 18 கிலோ பறிக்க முடியாது. அதன் காரணமாக உற்பத்தி கொடுப்பனவு யாருக்கும் கிடைப்பதில்லை. உடன்படிக்கயின் நிபந்தனைகளை எங்களிடம் இருந்து மறைத்து எல்லா தொழிற்சங்கங்களும் எங்களை ஏமாற்றி விட்டன. அதன் காரணமாக நாங்கள் தொழிற்சங்களுக்கு வெளியில் வேலை நிறுத்தத்தில் குதித்தோம்,” என ஒரு தொழிலாளி குறிப்பிட்டார்.
சம்பள வெட்டின் காரணமாக, நவம்பர் மாதம் தமது சம்பளம் 4,100 ரூபாவாக குறைந்தது என தனது சம்பள பத்திரித்தை காட்டி ஒரு பெண் தொழிலாளி கூறினார். “மாதத்தில் 22 வேலை நாட்கள் உள்ளன. நான் 20 நாட்கள் வேலைக்குப் போனேன். 16 நாட்கள் மட்டுமே 10 கிலோவுக்கு மேல் பறிக்க முடிந்தது. ஏனைய நாட்களில் 10 கிலோவுக்கும் கொழுந்து குறைந்ததால் அரை நாளாகவே கணக்கில் எடுத்தனர். ஆனாலும் 8 மணித்தியாலத்துக்கும் அதிகமாக அந்த நாட்களில் நான் வேலை செய்துள்ளேன். ஒரு நாள் கூட 18 கிலோ பறிக்க முடியாமல் போனது. அதனால் உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு கிடைக்கவில்லை. ஒப்பந்தத்துக்கு முன்னரும் இந்த இலக்கை பறிக்க முடியாது. பொருள் விலை அதிகம். இந்த சம்பளத்தில் எப்படியும் மாதம் சாப்பாட்டுச் செலவைக் கூட சமாளிக்க முடியாது,” என அவர் குறிப்பிட்டார்.
தோட்ட இளைஞர்களுக்கு வேலை இன்மை பிரதான பிரச்சினை என தொழிலாளர்கள் கூறினர்.
“படித்த இளைஞர்கள் தோட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு வேலை இல்லாததனால் கொழும்பிற்கு சென்று குறைந்த ஊதியத்துக்கு பல வேலைகளைச் செய்கின்றனர். மற்றையது வீட்டுப் பிரச்சினை. அநேகமான தொழிலாளர்கள் குறைந்த பட்ச வசதிகள் கூட இல்லாத வீடுகளிலேயே வாழ்கின்றனர். தனி லயத்து வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் உள்ளன. போதுமான தண்ணீர் இன்மை பிரதான சிக்கல். தோட்டத்தில் முகாமையாளர் பெருமளவில் மரக்கறி பயிர்ச்செய்கை செய்கின்றார். ஒவ்வொரு ஆண்டும் அவர் அதில் பெரும் இலாபம் பெறுகின்றார். அவற்றுக்கு மிகப்பெருமளவில் தண்ணீர் பயன்படுத்தபடுகின்றது. அவரது மரக்கறி தோட்டத்துக்கு தேவையான தண்ணீர் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர்தான் தொழிலாளர்களுக்கு தண்ணீர் கிடைக்கின்றது.”
லயன் அறைகளைச் சூழ துப்புறவு செய்யும் போது முதலில் அதற்கு ஊதியம் வழங்கப்பட்டாலும் இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் லயன் அறைகளைச் சூழ புல் வளர்ந்து நுளம்புகள் பரவுவது உட்பட பல நோய் காரணிகள் தோன்றியுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். “அதன் காரணமாக அடிக்கடி பிள்ளைகள் நோய்வாய்ப்படுகின்றனர்.” செலவு வெட்டின் பாகமாக, தோட்டத்தில் வைத்தியசாலையில் இருந்த பார்மசி மூடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மூன்று வைத்தியர்கள் மூன்று தோட்டப் பிரிவுகளுக்கும் இருந்தனர். இப்போது ஒருவர்தான உள்ளார். அதனால் லயன் வீடுகளுக்கு வந்து நோய் பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
“நாம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவே வேலை நிறுத்தம் செய்தனர். ஆனால் தோட்ட முகாமையாளர்களுடன் தொழிற்சங்கங்கள் கூட்டுச் சேர்ந்து வேலை நிறுத்தத்தை குழப்பிவிட்டன,” என ஒரு தோட்டத் தொழிலாளி குற்றம் சாட்டினார்.
வேலை நிறுத்தம் நடந்து 20 நாட்கள் சென்றிருந்த நிலையில், தொலை பேசியில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுடன் பேசிய NUW தலைவர் பி. திகாம்பரம், அவர்களை அசிங்கமான வார்த்தைகளில் திட்டி, தோட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை கொடுக்க உடன்பட்டுள்ளதால் முரண்டு பிடிக்காமல் மீண்டும் வேலைக்குச் செல்லுங்கள், எனக் கூறியுள்ளார். அதே வேளை இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம், தொழிலாளர்களின் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு தனது தொழிற்சங்கஙம் முதலில் எதிர்பார்திருந்தாலும், ஏனைய சங்கங்கள் தலயீடு செய்திருப்பதனால் அமைதியாக இருப்பதாகவும், அவர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் போனால் இ.தொ.கா. தலையிடும் என்றும் கூறியுள்ளார். வேலை நிறுத்தத்தை முடிப்பதற்கு, LJEWU செயலாளர் வடிவேல் சுரேஷ் பல தடவை முயற்சித்துள்ளார். ஆனாலும் தொழிலாளர்கள் அதை நிராகரித்துள்ளனர்.
ஸ்ரீரங்கா, சக்தி தொலைக் காட்சியின் சேவை இயக்குனராக இருந்திருந்தாலும், வேலை நிறுத்தத்தைப் பற்றி எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை என தொழிலாளர்கள் கூறினர். அது தற்செயலானது அல்ல. அத்தகைய செய்தி வெளியானால், போராட்டம் ஏனைய தொழிலாளர்கள் மத்தியில் விரிவடையக் கூடிய சாத்தியம் பற்றி அவர் விழிப்பாக இருந்துள்ளார்.
தொழிற்சங்க தலைவர்கள், தோட்ட நிர்வாகிகளதும் அரசாங்கத்தினதும் முகவர்களாவர். அதனால், தொழிற்சங்கங்களால் தொழிலாளர்களது எந்த கோரிக்கையும் வெற்றிகொள்ள முடியாது. அது மட்டுமன்றி; தொழிலாளர்கள் கடுமையான போராட்டங்களின் ஊடாக வென்ற சிறிய சமூக சலுகைகளும் கூட மீண்டும் பறிக்கப்படுவதற்கு அவர்கள் ஒத்துழைக்கின்றனர்.
தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தமது போராட்டத்தை ஒழுங்கு செய்துகொள்வதன் மூலம் மட்டுமே தோட்டத் தொழிலாளர்களுக்கு தமது தொழில், சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் பற்றிய பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதற்காக நடவடிக்கை குழு உட்பட தொழிலாளர்களின் வாக்குகளில் ஜனநாயக முறையில் ஸ்தாபித்துக்கொள்ளும் புதிய அமைப்புகள் தொழிலாளர்களுக்கு அவசியமாகும்.
முதலாளித்துவ அரசாங்கத்தினதும் முதலாளிகளதும் தாக்குதல்களுக்கு எதிராக, ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவதும் முதலாளித்துவ இலாப முறைமையை தூக்கி வீசுவதற்காக சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை அடிப்டையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதும் நடவடிக்கை குழுக்களின் பணிகளாகும்.
சாமிமலை டீசைட் தோட்டத் தொழிலாளர்கள், நடவடிக்கை குழுவுக்குள் ஒழுங்கமைந்து, தொழிலாள வர்க்கத்தின் அத்தகைய சுயாதீன அரசியல் இயக்கம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களோடு ஐக்கியப்பட்டு அதற்காகப் போராடுவதற்கு பார்க் தோட்டத் தொழிலாளர்களும் முன்னணிக்கு வர வேண்டும்.