Print Version|Feedback
අන්තර් විශ්ව විද්යාල ශිෂ්ය බල මන්ඩලයේ තවත් උගුලක්
இலங்கை: அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இன்னுமொரு சூழ்ச்சிப் பொறி
By Kapila Fernando
31 December 2016
இலங்கையில் கல்வி தனியார்மயமாக்கத்தை முன்னெடுத்துச் செல்வதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றை மையமாகக் கொண்டு, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (அ.ப.மா.ஒ.) கொழும்பு தேசிய நூலகத்தில் டிசம்பர் 15 அன்று கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதலாளித்துவ கட்சிகள் மற்றும் போலி-இடது அமைப்புகளை ஒன்றிணைத்துக் கொண்ட ஒரு மேடையாக இருந்த இது, பரந்த எதிர்ப்பு இயக்கம் ஒன்றின் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து கல்வி உரிமையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற மாயையைச் சூழ மாணவர்களை சிறைப்படுத்தும் இன்னொரு பொறியாகும்.
அரசாங்கத்தின் இந்த அறிக்கையின் மூலம், நாட்டின் உயர் கல்வித் துறையை முழுமையாக தனியார் முதலீட்டாளர்களின் கைகளில் ஒப்படைக்கும் திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. அடிப்படை மற்றும் இரண்டாந்தர கல்விக்குள்ளும், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளுக்குள்ளும் தனியார் துறைக்கு இடம் கொடுத்துள்ளதனால், பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதற்கும் தனியார்துறைக்கு இடம் கொடுக்க வேண்டும் என அறிக்கை கூறுகின்றது.
இத்தகைய பிற்போக்கு வேலைத் திட்டத்தை நியாயப்படுத்துவற்காக, இந்த அறிக்கையானது நாட்டின் சுகாதாரத்துறையில் காணப்படும் கடும் வைத்தியர்கள் பற்றாக்குறையையும் அதனால் கிராமப்புற பிரதேசங்களிலும் போரினால் நாசமாக்கப்பட்ட பிரதேசங்களிலும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மிகவும் வஞ்சத்தனமாக சுரண்டிக்கொண்டுள்ளது. 2012 புள்ளி விபரங்களின் படி, நாட்டுக்குள் இருக்கும் வைத்தியர்களின் எண்ணிக்கை 17,129 என்றும், அது உலக சுகாதார அமைப்பின் முடிவுக்கு ஏற்ப நாட்டுக்குள் இருக்க வேண்டிய வைத்தியர்களின் எண்ணிக்கையான 40,000 என்ற தொகையுடன் ஒப்பிடும்போது, 25,000 வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டு, மக்களின் பிரச்சினை பற்றிய ஒரு போலி அனுதாபத்தைக் காட்டுகின்றது.
எவ்வாறெனினும், நாட்டின் கல்வி மற்றும் சுகாதார சேவையின் சீரழிவு பற்றிய புள்ளி விபரங்கள் அடங்கிய இந்த அறிக்கை, இலங்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஏழு தசாப்தகால ஆட்சி பற்றிய ஒரு சுய குற்றப் பத்திரிகையாகும்.
தொழிலாள வர்க்கத்தின் கடந்த கால வெற்றியான மட்டுப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி, 1960களின் கடைப்பகுதியில் இருந்து ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களாலும் தொடர்ச்சியாக சீரழிக்கப்பட்டதன் விளைவாக, இப்போது கலை, வணிகம், விஞ்ஞானம் மற்றும் கணித துறையில் உயர் கல்வியை கற்பதற்கு தகுதி பெறும் மாணவர்களில் நூற்றுக்கு 85 வீதமானவர்களுக்கு அரச பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஒரு ஆண்டுக்கு மருத்துவ பீடங்களில் 1,000 என்ற குறைந்த எண்ணிக்கையிலான வைத்தியர்களே உருவாக்கப்படுகின்றனர்.
“இன்று நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு ஏற்ப, நாட்டில் அதிகரித்துவரும் தேவையை நிரப்புவதற்கு அவசியமான புதிய மருத்துவ பீடங்களை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்திடம் வசதி இல்லை” என அறிக்கை கூறுகின்றது. இது உலகம் பூராவும் ஆளும் வர்க்கங்கள் மக்கள் சேவையை வெட்டுவதற்கும் தனியார்மயத்தை வேகப்படுத்துவதற்கும் மேற்கொள்ளும் போலி தர்க்கமாகும். தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதன் மூலம் குவித்துக்கொள்ளும் பிரமாண்டமான இலாப பொதி, பெரும் வர்த்தகர்கள் மற்றும் வங்கி உரிமையாளர்கள் ஒரு சிலரின் கையில் குவிகின்ற நிலைமையின் கீழ், நாட்டின் தேசிய வருமானத்தில் மிகப் பெருமளவு நாட்டு மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் வரிகள் மூலம் பெறப்பட்டாலும், அரச செலவில் பாதிக்கும் அதிகமான தொகை கடன்களுக்கான வட்டியை செலுத்தவும், தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை அடக்குவதை இலக்காகக் கொண்ட பாதுகாப்பு செலவுகளுக்குமே செலவாகின்றது.
கருத்தரங்களில் கருத்து தெரிவித்த அ.ப.மா.ஒ. அழைப்பாளர் லஹிரு வீரசேகர, அ.ப.மா.ஒன்றியமானது “வெகுஜன அமைப்பாக ஏனைய சக்திகளையும் அணிதிரட்டிக்கொண்டு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தோற்கடிக்க” தயாராயாக உள்ளது என வாய்சவடால் விட்டு, அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு பயணத்தால், தேர்தல்களில் வாக்கு தளம் இல்லாமல் போகும் என அரசாங்கத்துக்கு “எச்சரிக்கை விடுத்தே ஆகும்”.
வீரசேகரவின் அழைப்புக்கு, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சம சமாஜக் கட்சியின் திஸ்ஸ விதாரன மற்றும் மக்கள் விடுதலை முன்னணின் (ஜே.வி.பி.) நலிந்த ஜயதிஸ்ஸவும், போலி இடது கட்சிகளான சோசலிசக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியைப் பிரதிநித்துவம் செய்து பேசியவர்களும், ஜோசப் ஸ்ராலின் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களும் ஊக்குவிப்பு வழங்கினர்.
அ.ப.மா.ஒன்றியத்தின் எதிர்ப்பு அரசியலின் வங்குரோத்து மற்றும் பிற்போக்கு குணாம்சத்தை அம்பலப்படுத்தி மாணவர்களிடம் பேசிய, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) இயக்கத்தின் அழைப்பாளர் கபில பெர்னாண்டோ ஆற்றிய உரை, அங்கு பேசிய மாணவர்களையும் சிந்திக்கும் தட்டினரையும் ஈர்த்தது.
“தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கு எதிரான இத்தகைய கூட்டணிகளை உருவாக்கும் அமைப்புகளே கல்வி தனியார்மயமாக்கம் உட்பட முதலாளித்து அரசாங்கத்தின் சகல தாக்குதல்களுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டும். கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட இத்தகையை கூட்டணிகள், தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர வேலை செய்தன. இந்த அமைப்புகள் தம்மை “இடது” என அழைத்துக்கொண்டாலும் இவை போலி-இடது அமைப்புகளாகும். இத்தகைய அமைப்புகள் மார்க்சிசத்துக்கும் சோசலிசத்துக்கும் எதிரான, முதலாளித்துவத்தை ஆதரிக்கும் அமைப்புகளாகும். இதனாலேயே இவை முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இவ்வாறான கூட்டணிகளை அமைத்துக்கொள்கின்றன” என பெர்னாண்டோ கூறினார்.
நெருக்கடியில் மூழ்கியுள்ள முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கிவீசி, சோசலிசத்தை கட்டியெழுப்புவதன் பேரில், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அரசியல் ரீதியில் சுயாதீனப்படுத்துவதற்காக சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் வெளியிடும் முன்னோக்குகளையும் போலி-இடதுகளுக்கு எதிரான அதன் போராட்டங்களையும் கற்றுக்கொள்ளுமாறு பெர்னாண்டோ மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
கூட்ட மண்டபத்துக்கு வெளியில் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. அங்கத்தவர்கள், மார்க்சிச இலக்கியங்களையும் உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைகளையும் விநியோகித்து மாணவர்களுடன் கலந்துரையாடலை வளர்த்தனர். முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவற்றுக்கு சார்பான அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கல்வி உரிமையை பாதுகாக்க முடியாது என்றும், அத்தகைய வேலைத் திட்டங்கள் மூலம் மாணவர்களின் அரசியல் நனவு சீரழிக்கப்படும் விதத்தையும் தெளிவுபடுத்திய அவர்கள், புரட்சி கட்சி ஒன்றின் பணி என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களின் கவனத்தை திருப்புவதில் வெற்றி கண்டனர்.
கலந்துரையாடலில் பங்குபற்றிய அ.ப.மா.ஒ. செயற்பாட்டாளர் ஒருவர், அரசாங்கத்துக்கு எதிராக அதிகமான எதிர்ப்பை குவித்துக்கொள்வதற்காக இத்தகைய அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்துக்கொள்கின்றது என்றும், அ.ப.மா.ஒன்றியம் சோசலிசத்துக்காக போராடுகின்ற அமைப்பு அல்ல என்றும் உறுதியாகக் கூறினார்.
கருத்தரங்கிலும் அதற்கு வெளியிலும், அ.ப.மா.ஒன்றியமும் அதற்கு ஒத்துழைக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட ஏனைய போலி இடது கட்சிகளும், கல்வியானது முதலாளித்துவத்துக்குள் எப்போதுமே ஒரு நலன்புரி சேவையாக இருக்க வேண்டியது என்றும் இருக்க முடியும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
பெர்னாண்டோ தனக்கு கிடைத்த குறுகிய காலத்துக்குள் சுருக்கமாகவேனும் இத்தகைய கபடத்தனத்தை கண்டனம் செய்வதற்கு முயற்சி செய்தார். முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் கல்வி, சுகாதாரம் ஆகிய வசதிகள், தொழிலாள வர்க்கத்தின் உழைப்புச் சக்தியை சுரண்டிக்கொண்டு, முலதனத்தை பெருக்கும் நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான உழைப்புச் சக்தியை மீள் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளின் ஒரு பாகமாகவே சேவைகளாக நடத்தப்படுகின்றன. அரச நிறுவனங்களில் போலவே, தனியார் வர்த்தகங்களிலும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் ஏனைய உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கும் அவசியமான மட்டத்துக்கு உழைப்பாளிகளை பயிற்றுவித்தல் என்பதே முதலாளித்துவ கல்விச் சேவையின் அடித்தளமாக இருக்கும் அதேவேளை, அந்த உழைப்பை மீள் உற்பத்தி செய்வதற்காக, அவசியமான மட்டத்துக்கு தொழிலாளர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும் முதலாளித்துவ சுகாதார சேவையின் அடித்தளமாகும்.
2008ல் தொடங்கி வீழ்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, முதலாளித்துவத்தால் இதற்கு மேலும் இத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளைக் கூட பராமரிக் இயலாத நிலைக்கு வந்துள்ளது. கல்வி உட்பட சேவைகளை நாசம் செய்து ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களின் தோற்றுவாய் இதுவே ஆகும்.
இலங்கையிலும் உலக அளவிலும் முதலாளித்துவத்தை வேறோடு தூக்கிவீசாமல், தொழிலாள வர்க்கத்துக்கு கல்வி உட்பட சமூக உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் உறுதிப்படுத்த முடியாது. முதலாளித்துவ அமைப்பு முறையின் பாதுகாவலர்களான அ.ப.மா.ஒ. மற்றும் போலி இடது கட்சிகள், இந்த விஞ்ஞானபூர்வமான மார்க்சிச முன்நோக்கை எதிர்க்கின்றன.
வளர்ச்சியடைந்து வரும் உலகப் பொருளாதார வீழ்ச்சி நிலைமைகளின் கீழ், நாட்டுக்குள் வெளிநாட்டு முதலீடு குறைந்துள்ளதுடன் ஏற்றுமதி வருமானமும் வீழ்ச்சியடைந்து, நாட்டின் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்துள்ள நிலைமையின் கீழ், சர்வதேச நாண்ய நிதியத்தின் கொடூரமான சிக்கன கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும், தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களதும் போராட்டங்களை நசுக்குவதற்கு பொலிஸ் இராணுவ அரச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் அரசாங்கத்தின் ஒரே கொள்கையாக ஆகியுள்ளது. கடந்த நாட்களில் ஹம்பந்தொட்ட துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தாக்குதலில் இந்த விடயமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்விக்காக வளர்ச்சியடைந்து வரும் தேவைக்கும், அரசாங்கத்தின் கல்விக்கான ஒதுக்கீட்டுக்கும் இடையில் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம், அரசாங்கம் கல்விச் செலவை நூற்றுக்கு 30 சதவீதத்தினால் வெட்டியது. இந்த நிலைமைகளின் கீழ், நாட்டில் நிலவும் வைத்தியர்களின் பற்றாக்குறையை பற்றிக்கொண்டு, அரசாங்கமானது கல்வி, சுகாதாரம் ஆகிய இரு துறைகளிலும் பெரும் செலவு வெட்டுக்கே அடியெடுத்து வைத்திருக்கின்றது.