ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French prime minister beaten into second place in Socialist Party presidential primary

சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தேர்தலில் பிரெஞ்சு பிரதம மந்திரி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்

By Alex Lantier
23 January 2017

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது பதவியை இராஜினாமா செய்த முன்னாள் பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ், பெனுவா அமோனுக்கு பின்னால் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தேர்தலில் நேற்றிரவு பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் அரசாங்கம் மற்றொரு அவமானகரமான பின்னடைவைச் சந்தித்தது.

முன்னாள் கல்வித்துறை அமைச்சரான அமோன், 36.21 சதவீத வாக்குகள் பெற்றார், வால்ஸ் க்கு 31.19 சதவீத வாக்குகளும், முன்னாள் பொருளாதார மந்திரி அர்னோ மொண்டபூர்க் க்கு 17.62 சதவீத வாக்குகளும் மற்றும் வன்சென் பேயொனுக்கு 6.48 சதவீத வாக்குகளும் கிடைத்தன. மீதமிருந்த வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர்.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு, தேர்தல் மக்களிடையே ஒரு பொதுவான அதிருப்தி நிலவும் சூழலில் நடந்துள்ளது. சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தேர்தலில் சுமார் இரண்டு மில்லியன் வாக்காளர்கள் பங்குபற்றினர், இதற்கு முன்னதாக வலதுசாரி குடியரசுக் கட்சி (LR) வேட்பாளராக பிரான்சுவா ஃபிய்யோன் தேர்வான, அக்கட்சியினது ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தேர்தலில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர். குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலுக்குப் பின்னர் ஃபிய்யோனே ஜனாதிபதியாக வெற்றி பெறுவார் என்று பரந்தளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமோனோ அல்லது வால்ஸோ ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாம் சுற்றுக்கு வருவார்கள் என்றுகூட இப்போது எதிர்பார்க்கப்படவில்லை.

அவர்கள், முறையே, 8 அல்லது 9 சதவீத வாக்குகளே பெற்று, இரண்டாம் சுற்றானது ஃபிய்யோனுக்கும் நவபாசிசவாத தேசிய முன்னணியின் மரின் லூ பென்னுக்கும் இடையே அமையக்கூடும் என்று சமீபத்திய Ipsos கருத்துக்கணிப்பு காட்டியது.

பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் இரண்டு பிரதான அரசாங்க கட்சிகளில் ஒன்றான சோசலிஸ்ட் கட்சியின் உயிர்பிழைப்பே பணயத்தில் இருக்கும் நிலையில், இந்த வாக்குகள் அக்கட்சியில் ஆழ்ந்த நெருக்கடியை தீவிரப்படுத்தும். மிகவும் மக்கள் மதிப்பிழந்த ஜனாதிபதியின் ஐந்தாண்டு கால பதவிக்காலத்திற்குப் பின்னர் சோசலிஸ்ட் கட்சி ஆழமாக பிளவுபட்டுள்ள நிலையில், ஏப்ரல்-மே 2017 தேர்தல்களில் அது சுத்தமாக துடைத்தெறியப்படலாம் என்பதைப் போலவே, ஒரு உடைவாலும் அது அச்சுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இப்போது அரசாங்கத்திற்கு நெருக்கமாக உள்ள சோசலிஸ்ட் கட்சியின் பரந்த பிரிவுகள், கட்சி வேட்பாளர் போட்டியில் வால்ஸை தோற்கடித்து அமோன் வேட்பாளர் ஆனாலும், அமோனை ஆதரிப்பதைக் காட்டிலும் முதலீட்டு வங்கியாளரும் ஹோலாண்டின் முன்னாள் ஆலோசகர் எமானுவெல் மாக்ரோனை ஆதரிக்கக்கூடும்.

ஹோலாண்டின் சிக்கனக் கொள்கைகள் மீதான அதிருப்திகளுக்கு முறையிட்டும் மற்றும் பிரான்சில் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச அனைவருக்குமான வருவாயை ஏற்படுத்துவதற்கான வீராவேச வாக்குறுதிகளைக் கொண்டும் போட்டியிட்ட அமோன், இவ்வாரம் ஞாயிறன்று சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் தேர்வின் இரண்டாம் சுற்றில் மீண்டும் தனக்கு வாக்களிக்குமாறு அவர் வாக்காளர்களுக்கு அழைப்புவிடுத்தார். “இடதுசாரி வாக்காளர்கள், அவர்தம் கருத்துக்களைப் பதிவு செய்வதற்காகவே வாக்களித்தார்கள், பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக கிடையாது என்பதே எனது நம்பிக்கை” என்று வாக்களிப்புக்குப் பிந்தைய ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “முதல் சுற்றில் அணித்திரட்டியதை இப்போது நாம் இன்னும் பலப்படுத்த அதை பரவலாக்க வேண்டும்,” என்றார்.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தேர்தல்களின் இரண்டாம் சுற்றில் அமோனுக்கு வாக்களிக்குமாறு தனது வாக்காளர்களுக்கு முறையிட்டு போட்டியிலிருந்து விலகி கொண்ட மொண்டபூர்க்கிற்கும் அமோன் நன்றி தெரிவித்தார்.

வாக்களிப்புக்கு முந்தைய நாட்களில் முதலிடத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு ஆனால் இரண்டாம் சுற்றில் அமோனிடம் தோற்று போன வால்ஸ், இரண்டாம் இடத்தில் வந்ததன் குறித்து அவர் முகத்தில் ஆச்சரியத்தை மறைக்க முயன்றதுடன், டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் தேசிய முன்னணியை எதிர்க்க அவர் மட்டுமே ஒரே நம்பகமான வேட்பாளர் என்று வாதிட்டார். “இந்த மாலையில் இருந்து ஒரு புதிய பிரச்சாரம் தொடங்குகிறது,” என்றார். “ஒரு மிக தெளிவான வாய்ப்பு இப்போது நம்மிடையே, மற்றும் உங்களிடையே முன்வைக்கப்படுகிறது. நிச்சயமான தோல்வி மற்றும் சாத்தியமான வெற்றிக்கு இடையிலான தேர்வு, நிறைவேற்ற முடியாத மற்றும் தகுதியற்ற வாக்குறுதிகளுக்கும் மற்றும் நமது நாட்டிற்கு பொறுப்பேற்கும் ஒரு நம்பகமான இடதுசாரிக்கும் இடையிலான தேர்வு உள்ளது,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறினார், “நம் நாட்டை அழித்துவிடக்கூடிய தீவிர வலதிற்கு முன்னால், அல்லது முன்னொருபோதும் இல்லாதளவில் தீவிரமான சுதந்திர சந்தையை, மற்றும் டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்கா மற்றும் விளாடிமீர் புட்டினின் ரஷ்யாவை முகங்கொடுக்கையில், அதன் கொள்கையில் பழமைவாதத்தைக் கொண்ட பிரான்சுவா ஃபிய்யோன் தலைமையிலான வலதுசாரிக்கு முன்னால் பிரெஞ்சு மக்களின் தலைவிதியை விட்டுவிட என்னால் அனுமதிக்க முடியாது” என்றார்.

சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலர் ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் அந்த வாக்குகளை "வெற்றியாக" வாழ்த்தியதுடன், சோசலிஸ்ட் கட்சியும் அதன் வாக்காளர்களும் "அந்நேரத்தின் உத்வேகத்தை எதிர்க்கலாம்" மற்றும் அவரது கட்சியின் ஒரு முழுமையான பொறிவைத் தவிர்க்கலாம் என்பதற்கான ஆதாரமாக வரவேற்றார். இருப்பினும், சோசலிஸ்ட் கட்சியின் எதிர்கால வாய்ப்புவளங்களை விவரிக்கையில் அவராலும் ஒரு அவநம்பிக்கை தொனியை தவிர்க்க இயலவில்லை.

“இந்த ஜனநாயக நடைமுறை இடதை ஒருங்கிணைத்து வைக்கும் என்று நான் சமாதானமடைகிறேன்,” என்று கம்படெலிஸ் அறிவித்தார். “இன்றைய வாக்கெடுப்பால் ஜோடிக்கப்பட்டு, ஒரு புதிய கூட்டணி பிறந்து கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். … ஜனாதிபதி தேர்தல் இன்னும் முடிந்துவிடவில்லை என்றும் நான் நம்புகிறேன்,” என்றார்.

சோசலிஸ்ட் கட்சியை சூழ்ந்து வரும் நெருக்கடியானது, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் அரசியல் அமைப்புகளின் பொறிவின் மற்றும் மதிப்பிழந்த நிலையின் பரந்த சர்வதேச குணாம்சத்தை குறித்து நிற்கிறது. 1980 கள் மற்றும் 1990 களில் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவை கட்டமைப்பதற்காக அழுத்தமளிப்பதில் சோசலிஸ்ட் கட்சி ஒரு மத்திய பாத்திரம் வகித்தது. லு பென்னின் கட்சி மற்றும் குடியரசு கட்சி (LR) உடன் ஒப்பிடுகையில், அது இப்போதும் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களில் எந்தவொரு பிரதான கட்சியினதும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய விரோத நிலைப்பாட்டையும் விட சற்று குறைவாகவே எடுக்கிறது.

எவ்வாறிருப்பினும், மித்திரோனின் ஜனாதிபதிக் காலம், மித்திரோனின் முக்கிய கரமான லியோனல் ஜோஸ்பன் தலைமையிலான பன்முக இடது அரசாங்கம் மற்றும் இப்போது ஹோலாண்டின் பதவிகாலம் என சோசலிஸ்ட் கட்சி பல முறை வெற்றிகரமாக அரசாங்கங்கள் அமைத்த போதினும் மக்களின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிய பின்னர், அது அரசியல்ரீதியில் உடைந்து வருகிறது. ஹோலாண்ட் தற்போது கருத்துக்கணிப்புகளில் 4 சதவீத செல்வாக்கில் இருக்கிறார்.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் இருந்து ஈவிரக்கமின்றி கட்டளையிட்டு வந்த ஏனைய ஐரோப்பிய சமூக-ஜனநாயகக் கட்சிகளை போலவே, கிரேக்கத்தின் பாசொக் அல்லது ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி போலவே, பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியும் இப்போது பொறிவுக்கான சாத்தியக்கூறை அல்லது வாக்காளர்களிடம் இருந்து அன்னியப்பட்ட நிலையை முகங்கொடுக்கிறது.. இதுபோன்றவொரு பொறிவின் புவிசார் மூலோபாய பங்கு வேறைதையும் விட மிகப்பெரியளவில் இருக்கும், அத்துடன் பிரிட்டன் வெளியேற்றத்தாலும் மற்றும் ட்ரம்ப் பதவி ஏற்பதற்கு முன்னரே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனிக்கு பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்தி இருப்பதாலும் ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, சோசலிஸ்ட் கட்சியின் கலைப்பானது கூடுதல் அடியைக் கொடுக்கும்.

இந்த சூழலில், சோசலிஸ்ட் கட்சியின் இரண்டு பிரதான வேட்பாளர்களாக வால்ஸ் மற்றும் அமோன் முன்னுக்கு வந்திருப்பது, சோசலிஸ்ட் கட்சியினது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினது மிகவும் பரந்தளவிலான திவால்நிலைமையை எடுத்துக் காட்டுகிறது.

சோசலிஸ்ட் கட்சியின் சமூகரீதியிலான பிற்போக்குத்தனமான குணாம்சத்திற்கு வேறு எவரையும் விட வால்ஸ் சரியான உருவடிவாக உள்ளார். பெயரில் "சோசலிஸ்ட்" என்று இருப்பதையும் கூட நீக்கிவிட சோசலிஸ்ட் கட்சிக்கு சர்வசாதாரணமாக அழைப்புவிடுத்த ஒரு அரசியல்வாதியான அவர், ஹோலாண்டின் பதவிக்காலத்தில் மிகவும் பிற்போக்குத்தனமான கொள்கைகளுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளார். அவர் தொழிலாளர் சட்டம் மற்றும் பொறுப்புறுதி உடன்படிக்கை போன்ற சிக்கன நடவடிக்கைகளையும், அவசரகால நிலை ஆகியவற்றையும், சட்டம் ஒழுங்கு மற்றும் முஸ்லீம்-விரோத முறையீடுகளின் அடிப்படையில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பொலிஸ் மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் முன்பினும் நெருக்கமான ஒருங்கிணைப்பையும் பாதுகாக்கிறார்.

வால்ஸ் அமோனைத் தோற்கடிக்க தவறினாலும் கூட, முதலாளித்துவ வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள், பிலிப் டு வில்லியே போன்ற தேசியவாத தீவிர வலதுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள, ஒரு முதலீட்டு வங்கியாளரின் தனிப்பட்ட தேர்தல் இயக்கத்திற்குள் தன்னைத்தானே நடைமுறையளவில் கலைத்துக் கொண்டு, மாக்ரோனுக்குப் பின்னால் அணிவகுப்பதற்காக சோசலிஸ்ட் கட்சிக்குள் அவரது கூட்டாளிகள் மீது அழுத்தத்தை தீவிரப்படுத்தும். வேறு வார்த்தைகளில் கூறினால், தேசிய முன்னணியின் ஒரு எதிர்ப்பு சக்தியாக வால்ஸ் காட்டிக்கொள்வது ஒரு பாசாங்குத்தனமான மற்றும் வெற்று மோசடியாகும்.

அமோன் ஒரு வேட்பாளராக போட்டியிட முடிவெடுத்தமையானது,, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் பொருளாதார சமத்துவமின்மை மீது தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ந்து வரும் ஆழ்ந்த சமூக எதிர்ப்பு மற்றும் கோபத்தைக் குறித்து ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளும் மற்றும் ஊடகங்களும் பரந்தளவில் அறிந்திருப்பதைக் குறிக்கிறது.

எவ்வாறிருப்பினும் அமோனின் முன்மொழிவுகள் தொழிலாளர்களுக்கு மிகக் குறைவானதையே வழங்குகிறது மற்றும், அனைத்திற்கும் மேலாக, அவை ஆழ்ந்த நோக்கம் கொண்டவை அல்ல. மாதந்தோறும் அனைவருக்குமான சம்பளமாக 600 [645$] மற்றும் 800 யூரோவிற்கான [859$] அவரின் திட்டங்கள், வேலைவாய்பற்றோரை வறுமையிலிருந்து வெளியில் எடுக்காது, ஆனால் முதலாளித்துவ வர்க்கம் அதுவே எந்தவொரு புதிய சமூக செலவுகளுக்கும் விரோதமாக இருக்கும் நிலைமைகளின் கீழ், நூறு பில்லியன் கணக்கான யூரோக்கள் இதற்காக செலவு பிடிக்கும்.

மேலும், ஹோலாண்ட் பதவிக்காலம் மிகவும் தெளிவுபடுத்தி உள்ளதைப் போல, முதலாளித்துவ வர்க்கத்தின் சிக்கன கட்டளைகளை சோசலிஸ்ட் கட்சி மட்டுமே நடைமுறைப்படுத்த போவதில்லை, மாறாக அதன் "எதிர்" கன்னைகள் என்று அழைக்கப்படுபவையும், இவைதான் அமோனை வரவேற்கின்றன, வலதுசாரியை அதிகாரத்திலிருந்து விலக்கி வைப்பதற்காக என்று கூறி, எந்தவித நடைமுறையளவிலான எதிர்ப்பையும் காட்டப் போவதில்லை.

இத்தகைய நிலைமைகளின் கீழ், அமோனின் திட்டங்கள் வெறுமனே குப்பை தான், இதைக் கொண்டுதான் அவர் இன்னமும் சோசலிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களின் எஞ்சிய பிரிவுகளின் கண்களில் மண்ணைத் தூவ முடியுமென நம்பியிருக்கிறார்.