Print Version|Feedback
Sri Lankan SEP and workers’ action committee oppose attacks on plantation workers
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கின்றன
By our correspondent
28 December 2016
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் டிசைட் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும், இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் சாமிமலை இந்து கலாச்சார மண்டபத்தில், டிசம்பர் 18 அன்று ஒரு முக்கியமான பொதுக் கூட்டத்தினை நடத்தியிருந்தன.
பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிகளுக்கும் இடையில் அண்மையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த உடன்படிக்கை, இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் பிரதான பிரிவினரின் -200,000க்கும் அதிகமானவர்களின்- அடிபடை உரிமைகள் மீது தாக்குதலைத் தொடுக்கின்றது. இதன் மூலம் தொழிலாளர்கள் இதுவரை போராடிப் பெற்ற உரிமைகள் வெட்டித் தள்ளப்படுவதுடன், எதிர்காலத்தில் தோட்டத் தொழிலாளர்களை குத்தகை விவசாயிகளாக மாற்றுவதற்கான பாதையும் திறந்துவிடப்படுகின்றது.
சோ.ச.க. மற்றும் நடவடிக்கை குழுவின் அங்கத்தவர்கள், கூட்டத்துக்கு முன்னர் சில நாட்களாக சாமிமலை மற்றும் மஸ்கெலியா பிரதேசங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரவலான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தனர். “தோட்டத் தொழிலாளர்கள் மீது குத்தகை விவசாய முறைமையை சுமத்துவதற்கு இலங்கைத் தொழிற்சங்கங்கள் உடன்படுகின்றன” என்ற தலைப்பில், சோ.ச.க. வெளியிட்ட அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. அந்த அறிக்கை தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்தியது.
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தினைச் சேர்ந்த ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியதாவது: “சகல தொழிற்சங்கங்களும் வேலைச்சுமையை எம்மீது சுமத்துவதற்கு முகாமைத்துவத்துடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்கின்றன. நாட் சம்பளம் 730 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தொழிற்சங்கங்கள் கூறியது அனைத்தும் பொய் என்பதை நாங்கள் தற்போது உணர்ந்துள்ளோம். 18 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்கும் இலக்கினை அடைய முடியாதவர்களுக்கு அத்தொகை கொடுக்கப்படவில்லை. அந்த இலக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் 16 கிலோவில் இருந்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
லயன் அறைகளை பராமரித்தல், வடிகால் அமைப்புக்களைப் பராமரித்தில் மற்றும் வேறு வசதி வாய்ப்புக்களை வழங்குதலையும் தோட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளதாக சாமிமலை ஓல்டன் தோட்டத்தினைச் சேர்ந்த ஒரு தொழிலாளி தெரிவித்தார். “சோ.ச.க. சொல்வதெல்லாம் சரி” என அவர் கூறினார். “சகல தொழிற்சங்கங்களும் எம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டன எதிர்காலத்தில் நாங்கள் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை.”
“தேயிலை மலைகள் எமது வீட்டில் இருந்து சில தூரத்தில் இருப்பதால், இந்த புதிய (குத்தகை விவசாயிகள் முறைமை) முறை, எங்களுக்கு பெரும் சுமையாக இருக்கப் போகின்றது. சில சமயங்களில் நாங்கள் சில கிலோமீட்டர் தூரத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறான சூழ்நிலைகளில் நாங்கள் எவ்வாறு எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேயிலைச் செடிகளைப் பராமரிக்க முடியும்?. நாங்கள் இரவிலும் இந்த தோட்டங்களை பாதுகாக்க வேண்டிய நிலமை வரும்.
காண்டீபன் உரையாற்றுகிறார்
டிசம்பர் 18 கூட்டத்துக்கு தலமை தாங்கிய சோ.ச.க. மற்றும் நடவடிக்கை குழுவின் அங்கத்தவரான கே. காண்டீபன் பேசும்போது, தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இந்த நிகழ்வு ஒரு முக்கியமான திருப்புமுனையாகும் எனக் குறிப்பிட்டார்.
“சம்பளப் போராட்டத்தினை காட்டிக் கொடுத்தும் மற்றும் நாளாந்த வேலை இலக்கினை அதிகரிப்பதற்கும் உற்பத்திறனுடன் இணைந்த புதிய சம்பள முறைமையை சுமத்துவதற்கும் கூட்டு ஒப்பந்தத்தை திணித்த தொழிற்சங்கங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
“நடவடிக்கை குழுவைக் கட்டியெழுப்ப தீர்மானித்ததன் மூலம், தொழிற்சங்கங்களுக்கு எதிரான போராட்டத்துக்கும் தொழிலாளர்களின் தொழில், சம்பளம் மற்றும் வேலை நிலமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சுயாதீனமான தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு ஒரு முன்னோக்கிய பாதையை வழங்குவதற்கும், டீசைட் தொழிலாளர்கள் ஒரு நனவான, அரசியல் வெளிப்பாட்டை வழங்கியுள்ளார்கள்,” என காண்தீபன் கூறினார்,
சோ.ச.க.யின் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பின் இலங்கை அழைப்பாளரான கபில பெணாண்டோ உரையாற்றுகையில், முதலாளித்துவ இலாப முறைக்கு எதிராக போராடாமல், உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் தங்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை வென்றெடுக்க முடியாத்து என்றார்.
“தொழிற்சங்கங்களும் மற்றும் மாணவர் போராட்டங்களில் மேலாதிக்கம் செலுத்தும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், அரசாங்கத்தின் மீது பாரிய அழுதங்களை பிரயோகிப்பதன் மூலம், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என போலியாக கூறிக் கொள்கின்றன…
“ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் வர்க்கங்கள், தொழிலாளர் வர்க்கத்தின் தொழில் மற்றும் வாழ்க்கை நிலமைகள் மீது தாக்குதல் தொடுக்கின்றன. பல தசாப்தங்களாக கடுமையாகப் போராடிப்பெற்ற கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நலன்புரி வசதிகளையும் வெட்டித் தள்ளுகின்றன.”
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மிகவும் அடிப்படையான சுகாதார வசதிகள் கூட மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர், எனக் கூறிய பெர்னாண்டோ, மேலும் கூறுகையில், “தோட்டப் பகுதியில் இருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையான மாணவர்களே சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றுகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் மிகவும் அபூர்வமாகவே பல்கலைக்கழகத்துக்கு நுழைகின்றனர்,” என்றார். தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் சங்கங்கள் இத்தகைய அடிப்படை சமூக உரிமைகளுக்கான போராட்டத்தினைக் கைவிட்டுள்ளன என அவர் கூறியதுடன், கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த இளைஞர்களை ஐ.வை.எஸ்.எஸ்.இ.யில் இணையுமாறு கேட்டுக்கொண்டார்.
நடவடிக்கை குழு அங்கத்தவரான பெண் தொழிலாளியான பூமணி கூட்டத்தில் பேசிய போது, டீசைட் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள கஸ்ட்டமான சமூக நிலமைகளை மதிப்பீடு செய்தார். “போதுமான அளவுக்கு மலசல கூடம் மற்றும் தண்ணீர் வினியோகம் உட்பட, அடிப்படை வசதிகளற்ற பழைய லயன் அறைகளில் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். பொருட்களின் விலைகள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துச் செல்லும் நிலையில், எமது மாதாந்த வருமானம் எமது செலவுகளைச் சமாளிப்பதற்குப் போதுமானதாக இல்லை. எமது பிள்ளைகளுக்கு பொருத்தமான கல்வியை வழங்குவதற்கும் எம்மால் முடியாமல் உள்ளது,” என அவர் கூறினார்.
“தொழிற்சங்கங்கள் எமது சம்பளப் போராட்டத்தினைக் காட்டிக் கொடுத்துவிட்டன. தற்பொழுது தோட்ட நிர்வாகம் தினமும் கொழுந்து பறிக்கும் அளவினை 2 கிலோவால் அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலைகளினாலேயே நான் இந்த நடவடிக்கை குழுவில் இணைவதற்கு முடிவெடுத்துள்ளேன்,” என அவர் கூறியதுடன், மற்றைய தோட்டங்களில் வாழுகின்ற தொழிலாளர்களும் இவ்வாறான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
சோ.ச.க. அரசியல் குழு அங்கத்தவர் எம். தேவராஜா கூட்டத்தில் உரையாற்றும் போது, உற்பத்தியை அதிகரிக்கும் கம்பனியின் கோரிக்கைகளுக்கும் தோட்ட நிர்வாகத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிரான டீசைட் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு சோ.ச.க. ஆதரவளித்தன் விளைவே, டீசைட் தோட்டத்தில் ஒரு நடவடிக்கை குழுவின் ஸ்தாபிதமாகும் எனக் கூறினார். (பார்க்க: இலங்கை வேலை நீக்கம் செய்யப்பட்ட டீசைட் தோட்டத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்து).
தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன், தோட்டக் கம்பனியும் பொலிசாரும் இணைந்து, வேலைச் சுமைக்கு எதிரான போராட்டத்துக்கு தலமை தாங்கிய டீசைட் தொழிலாளர்களை எவ்வாறு வேட்டையாடினார்கள் என்பதை தேவராஜா தெளிவுபடுத்தினார். “தொழிற்சங்கங்கள், தாங்கள் தோட்டக் கம்பனிகளதும் அரசாங்கத்தினதும் முகவர்கள் என வெட்கங்கெட்ட முறையில் தாங்களாகவே வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, சோ.ச.க. மட்டுமே டீசைட் தொழிலாளர்களைப் பாதுகாப்தற்குப் போராடியது.” என தேவராஜா கூறினார்.
ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக சர்வதேச நிதி மூலதனத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பூகோள சமூக எதிர்ப்புரட்சி வேலைத்திட்டத்தின் ஒரு பாகமாகவே, டீசைட் தொழிலாள்கள் மீதான தாக்குதல் உள்ளது, என பேச்சாளர் விளக்கினார்.
“தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில்களின் ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வீழ்ச்சியினாலும், தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையிலான போட்டி அதிகரித்துச் செல்கிறதாலும், இத்துறைகள் கடுமையான நெருக்கடிக்குள் சென்றுள்ளன. இதனலேயே இலங்கையில் உள்ள தோட்டக் கம்பனிகள் உறபத்திதிறனை அடிப்படையாகக் கொண்ட சம்பள முறைமையை கொண்டுவர முடிவெடுத்தன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
“இந்த முறைமையை நடைமுறைப்படுத்தும் ஒரு முன்முயற்சியாகவே அக்டோபரில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தினை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்காக தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடனும் மற்றும் அரசாங்கத்துடனும் சதியாலோசனை நடத்தினார்கள்,” என அவர் கூறினார்.
இலங்கையில் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை எவ்வாறு அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்துவதற்கு முயற்சி செய்திருக்கின்றது என்பதை தேவராஜா விளக்கினார்.
“சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள பொருளாதார சீர்திருத்த்திற்கு அமைவாக, அரசாங்கம் தோட்டத்துறையை மறுசீரமைப்பதற்கு முடிவெடுத்தது. அதன் மூலம் பத்தாயிரக் கணக்கான வேலைகள் நிர்மூலமாக்கப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்புகளை அது கொடூரமான முறையில் அடக்கும்.
“அம்பாந்தோட்டை துறைமுகத் தொழிலாளர்கள் தங்களின் தொழில் உரிமையைப் பாதுகாப்பதற்காக போராடியபோது, அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத மட்டத்திற்கு அரச அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருந்தமை, சகல தொழிலாளர் வர்க்த்திற்கும் ஒரு எச்சரிக்கையாகும்.” என பேச்சாளர் கூறினார்.
தேவராஜா தொடர்ந்து பேசுகையில், இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் ஏகாதிபத்திய போர் திட்டங்களின் பின்னால் அணிவகுத்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, மூன்றாவது உலக யுத்த அபாயத்தினை இன்னும் அதிகரித்திருக்கின்றது. அவர் தொடர்ந்து கூறும் போது, இத்தகைய போர், அணுவாயுதப் பாவனைக்கு வழிவகுப்பதோடு, மனிதகுலத்தினை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என அவர் கூறினார்.
“சர்வதேச தொழிலாளர் வர்க்கம் மட்டுமே, அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தினை கட்டியெழுப்புவதன் மூலம் இத்தகைய பேரழிவுகளைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு சக்தியாகும்” என அவர் கூறினார்.
இலங்கை தொழிலாள வர்க்கம், சோசலிசக் கொள்கையின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்துக்காப் போராடுவதன் பாகமாகவே தமது உரிமைகளைப் பாதுகாக்க முடியும், என தேவராஜா விளக்கினார். அத்தகைய ஒரு அரசாங்கம், தோட்டங்கள் உட்பட அடிப்படைத் தொழிற்துறைகளை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவரும், என அவர் தொடர்ந்து விளக்கினார்.
இந்தப் போராட்டம், தெற்காசிய மற்றும் சர்வதேச சோசலிசத்துக்கான ஒரு பரந்த போராட்டத்தின் பாகமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட சகல தொழிலாளர்களிடமும், சோ.ச.க.யில் இணைந்து, அதை தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
பிரதான பேச்சாளரைத் தொடர்ந்து, கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் இருந்து வருகை தந்திருந்த ஒரு தொழிலாளி, நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கான அவசியத்துடன் உடன்பட்டார். அவரது தோட்டத்தில் அண்மையில் நடந்த சம்பளப் போராட்டத்துடன் சுமார் 40 தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து வெளியேறினார்கள். ஆனாலும் கடுமையான அழுத்தங்களின் காரணமாக அவர்கள் மீண்டும் அதில் இணைந்து கொண்டார்கள் என அவர் கூட்டத்தில் கூறினார். எவ்வாறு இத்தகைய அழுத்தங்களிலிருந்து தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என அவர் கேட்டார்.
சோ.ச.க. மற்றும் நடவடிக்கை குழு பேச்சாளர்கள் விளங்கப்படுத்தியது போலவே தொழிற்சங்கங்களின் பாத்திரத்தை தெளிவுபடுத்துவதன் மூலமும் தொழிலாளர்களை சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தீவரமாக ஒருங்கிணைப்பதுமே இந்த அழுத்தினை எதிர்ப்பதற்கான ஒரே வழி, என சோ.ச.க. மற்றும் நடவடிக்கை குழு பேச்சாளர்கள் தெளிவுபடுத்தினார்கள். நடவடிக்கை குழுவை ஸ்தாபிப்பதன் நோக்கம், இந்த அரசியல் போராட்டத்தின் அடித்தளத்தில் தொழிலாளர்களுக்கு கல்வியறிவு ஊட்டுவதேயாகும், என பேச்சாளர்கள் கூறினார்கள்.
தோட்டத் தொழிலாளர்களின் உடனடிப் பிரச்சினையை விட, பேச்சாளர்கள் ஏன் சர்வதேச விடயங்களில் கூடுதல் கவனஞ் செலுத்துகின்றார்கள்? என ஒரு ஆசிரியர் கேட்டார். அதற்கு தேவராஜா பதிலளிக்கும் போது, தொழிலாள வரக்கம் ஒரு சர்வதேச வர்க்கமாகும், ஆகவே, ஒரு உலகப் பொருளாதார மற்றும் உலக அரசியல் விடயங்கள் பற்றிய விளக்கம் இல்லாமல், அதன் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒரு அரசியல் இயக்கத்தினை ஒரு நாட்டிற்குள் கட்டியெழுப்ப முடியாது, என விளக்கினார்.
கட்டுரையாளர் கீழ் வரும் கட்டுரைகளைப் பரிந்துரைக்கின்றார்;
துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டத்தினை ஒடுக்குவதற்காக இலங்கை அரசாங்கம் கடற்படையை அனுப்புகின்றது.
[12 December 2016]
இலங்கை டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் நடவடிக்கை குழுவை அமைக்கின்றார்கள்.
[4 November 2016]
இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சோசலிச முன்னோக்கு
[2 December 2015]