Print Version|Feedback
Pentagon sends advanced surveillance team to train Sri Lanka’s military
இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி கொடுக்க பென்டகன் உயர்தர கண்காணிப்பு குழுவை அனுப்புகிறது
By Pradeep Ramanayake
22 December 2016
அமெரிக்க கடற்படை அதிகாரிகள் குழு ஒன்று, இந்த மாத தொடக்கத்தில், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை சிப்பாய்களுடன் ஒரு வாரகால பயிற்சியை நடத்திய பின்னர், தென் இலங்கையில் அம்பாந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பறந்தது.
அமெரிக்க கடற்படை அதிகாரிகள் வெளியேறி இரண்டு நாட்களுக்குப் பின்னர், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் டிசம்பர் 13 அன்று அறிக்கை ஒன்றை வெளியிடும் வரை, இந்த வருகை பற்றிய எந்த தகவலும் வெளியிடப்பட்ட்டிருக்கவில்லை.
இந்த பயிற்சிகள், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கும் அமெரிக்க இராணுவத்துக்கும் இடையே விரிவடைந்து வரும் இராணுவ உறவுகளின் ஒரு பகுதியாகும்.
இந்த அமெரிக்க கடற்படை அதிகாரிகள், புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் நிலைகொண்டுள்ள ரோந்து படை 10 (Patrol Squadron 10) அல்லது "ரெட் லேன்சர்" (Red Lancers) இருந்து இருந்து வந்ததாக தூதரகம் கூறியது. இந்த விஜயம் வான் மற்றும் கடல் ரோந்து செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது உட்பட பிரதான கடல் பாதைகள் மற்றும் வர்த்தக பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் "இந்தோ-ஆசிய-பசிபிக்குக்கான ஒரு வழக்கமான நிலைகொள்ளல் ஆகும்" என்று அது கூறியது.
அமெரிக்க தூதரகம், இந்த படைப் பிரிவின் மூத்த அதிகாரியான லெப்டினன்ட் அன்டனி பெரிஸை மேற்கோள் காட்டியது. அமெரிக்கா, "இலங்கை அரசாங்கத்திலும் ஆயுதப் படைகளிலும் உள்ள எங்கள் நண்பர்களுடன் பங்காளர்களாக” இருக்கவும் “பி 8A இன் திறன்களை வெளிப்படுத்துவதோடு நிபுணத்துவ ஆலோசனைகளை பறிமாறிக்கொள்ளவும்” விரும்புகிறது என அவர் அறிவித்தார்.
இந்தக் குழு பி-8A பொசெய்டன் (P-8A Poseidon) விமானத்திலேயே இலங்கைக்கு பயணித்திருந்தது. இதுவே பயிற்சிகளின் போது பயன்படுத்தப்பட்டதுடன், இது உலகின் மிகவும் உயர்தரமான கண்காணிப்பு-போர் விமானமாக கருதப்படுகிறது. பி8 பொசெய்டனை தயாரிக்கும் போயிங் நிறுவனம், இந்த விமானம் "நீண்ட தூர நீர்மூழ்கி-எதிர்ப்பு போர் நடவடிக்கை; வெளிப்பரப்பு போர்; மற்றும் புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டது," என தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கம், அமெரிக்க உடனான அதன் இராணுவ ஒத்துழைப்பின் பகுதியாக, அதே விமானத்தின் முந்தைய பதிப்பான பி 8Is விமானங்களில் நான்கை கொள்வனவு செய்வதற்கு, 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையில் போயிங் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அது ஏற்கனவே அதில் எட்டு விமானங்களை வைத்துள்ளது. இந்த விமானம் "கொடூராமான ஹார்பூன் (Harpoon) ஏவுகணைகள், பாரம் குறைந்த கடற்கணைகள் மற்றும் ராக்கெட்டுகளுடன்" ஆயுதபாணியாக்கப்பட்டுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை, இந்து சமுத்திரத்தில் “ஒரு கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள்ள” பி-8I விமானத்தை "பரந்தளவில் பயன்படுத்தி" வருவதோடு அது, "இலங்கையில் தரித்திருந்த சீனாவின் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் உள்ளிட்ட ஏராளமான சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தையும் அது கண்டிருக்கிறது," என்று அந்த செய்தித்தாள் கூறியது.
இந்தியாவின் இராணுவத் திறனை வாஷிங்டன் விரிவாக்குவதற்கு ஏற்ப, அமெரிக்காவானது இலங்கை ஆயுதப் படைகளுடன் இராணுவ இணைச் செயலாற்றலை ஸ்தாபிக்கும் அதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்தின் கடல்பாதைகளுக்கு அருகில் அமர்ந்துகொள்கின்றது (பார்க்க: "அமெரிக்கா இலங்கையுடனான இராணுவ உறவுகளை ஆழமாக்குகிறது").
அமெரிக்க பசுபிக் கட்டளை தளத்தின் (PACOM) தலைவர் அட்மிரல் ஹரி பி.ஹரிஸ், கடந்த மாத இறுதியில் இலங்கையில் காலியில் நடந்த ஒரு பாதுகாப்பு மாநாட்டில் பேசும் போது, பென்டகனானது ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய அதன் மற்ற இரண்டு முக்கிய ஆசிய-பசிபிக் இராணுவ நட்பு நாடுகளுடன், இந்தியாவை ஒரு "முன்னணி அரசாக" ஒருங்கிணைத்து, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான ஒரு வலுவான கடற்படை கூட்டணியை கட்டியெழுப்பி வருகின்றது, எனத் தெரிவித்தார்.
ஹாரிஸ், இலங்கையின் கிழக்கு கடற்கரையில் ஒரு மூலோபாய ஆழ்கடல் துறைமுகமான திருகோணமலை உள்ள கடற்படைத் தளத்துக்கும் விஜயம் செய்திருந்தார். PACOM தற்போது இலங்கை கடற்படை சிப்பாய்களுக்கும் மற்றும் கடற்சார் படைகளுக்கும் பயிற்சி அளிக்கின்றது. PACOM தளபதியின் வருகைக்கு முன்பு, யுஎஸ்எஸ் சம்மர்செட் கப்பலும் மூன்று நாட்கள் திருகோணமலையில் தரித்து நின்று, இலங்கை கடற்படை உறுப்பினர்களுக்கு அடிப்படை இராணுவ மற்றும் சிறு படகு இயக்கப் பயிற்சிகளை வழங்கியது.
இந்து சமுத்திரத்தில் அதன் சீன விரோத இராணுவ கூட்டணியை விரிவாக்கும் அதேவேளை, அமெரிக்கவானது தென்சீனக் கடலில் சீனா உரிமை கோரும் தீவுகளுக்கு அருகே ஆத்திரமூட்ல்களை தொடர்ந்து மேற்கொண்ள்கின்றது.
போலியான "நடமாட்ட சுதந்திரம்" என்ற கூற்றின் கீழ், தென்சீனக் கடலில் சீனா உரிமை கோரும் நீர்நிலைகளுக்கு PACOM பல போர்க் கப்பல்களை அனுப்பி, வாஷிங்டனுக்கும் சீனாவுக்கும் இடையில் பதட்டங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த வெள்ளியன்று, ஒரு சீனக் கப்பல், தென் சீனக் கடலில் நீருக்கடியில் செல்லும் ட்ரோனை (ஆளில்லா விமானம்) கைப்பற்றியது –இதை அமெரிக்கா சட்ட விரோதமான செயல் என முத்திரை குத்தியது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை தனிமைப்படுத்தும் அதன் மூலோபாய சதி வேலைகளின் பாகமாக அமெரிக்கா, சீனாவில் இருந்து தனது அரசாங்கத்தை தூர விலக்கிக்கொள்ளுமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை நெருக்கி வந்தது.
இந்தப் பிரச்சாரத்தில், இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க அணுசரனையிலான தீர்மானத்தை கொண்டுவந்தமையும் அடங்கும். இது வாஷிங்டன் திட்டமிட்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையில் உச்சக் கட்டத்தை அடைந்தது. 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தல் மூலம், இராஜபக்ஷ அகற்றப்பட்டதோடு அமெரிக்க சார்பு மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கையின் வெளிநாட்டு கொள்கையை அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு ஆதரவாக மாற்றியதோடு பென்டகனின் நிகழ்ச்சி நிரலுடன் இலங்கை இராணுவத்தின் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிடுகின்றனர்.
எவ்வாறெனினும், சாதாரண செயல்பாடாக இந்த மாற்றத்தை முன்வைக்க முயற்சிக்கும் அரசாங்கம், இது இலங்கை ஆயுதப் படைகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கூறி வருகின்றது. இலங்கை சீனாவிற்கு எதிரான அமெரிக்க யுத்த திட்டங்களுடன் எந்தளவு நெருக்கமாக பிணைக்கப்பட்டு வருகிறது என்பது அம்பலத்துக்கு வந்தால் அது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த எதிர்ப்பைத் தூண்டி விடும் என்று கொழும்பு ஸ்தாபனம் கவலை கொண்டுள்ளது.