Print Version|Feedback
US defence secretary threatens to shoot down any North Korean missile
வடகொரிய ஏவுகணை எதனையும் சுட்டுவீழ்த்துவதற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அச்சுறுத்துகிறார்
By Peter Symonds
11 January 2017
ஞாயிறன்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர், வடகொரியாவின் அணுஆயுதங்களும், குண்டுவீசும் ஏவுகணைத் திட்டங்களும் அமெரிக்காவுக்கு ஒரு "கடுமையான அச்சுறுத்தலை" ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தார். நிறுவப்பட்டுள்ள எந்தவொரு வடகொரிய ஏவுகணையும் "எங்களது பிராந்தியத்தினை நோக்கியோ அல்லது எங்களது நட்பு மற்றும் கூட்டணி நாடுகளின் பிராந்தியத்தினை நோக்கியோ வந்திருக்குமானால்" அவற்றை சுட்டுவீழ்த்துவதற்கு அமெரிக்க இராணுவம் தயாரான நிலையில் இருந்தது என்று அவர் எச்சரித்தார்.
ஜனவரி 1 அன்று வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன், அமெரிக்க கண்டம் அளவிலான கண்டத்தை தாக்குவதற்கு தகைமை கொண்ட ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) ஏவுகணையினை சோதனை செய்வதற்கு தனது நாடு திட்டமிட்டிருந்தது என்ற ஒரு அறிவிப்பினை அவர் வெளியிட்டதைத் தொடர்ந்தே கார்ட்டரின் குறிப்பு வெளிவந்தது. கடந்த ஞாயிறன்று, வடகொரிய வெளியுறவு அமைச்சகம், "உச்ச தலைமையகம்" நிர்ணயித்தவாறு "எந்த நேரத்திலும், எந்த இடத்திலும்" ஒரு ICBM நிறுவப்படலாம் என்று அறிவித்தது.
"பல தசாப்தங்களாக DPRK (வடகொரியாவை) நோக்கியிருக்கும் காலவரிசையில் தவறான கொள்கைக்கு விரோதமான அதன் போக்கின்" ஊடாகவே ஒரு ICBM அபிவிருத்தியினை முன்னெடுக்கும் நிலைமைக்கு வடகொரியாவை அமெரிக்கா தள்ளுகிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அமெரிக்காவை குற்றஞ்சாட்டினார். கடந்த காலத்தைப் போலவே, அமெரிக்க தலைமையிலான இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையையும், நாட்டின் பொருளாதார முற்றுகையையும் உடைக்கின்ற ஒரு முயற்சியில் பியோங்யாங் புதிய ஆயுத அமைப்புக்களின் அபிவிருத்தியை உபயோகப்படுத்த முயன்றுவருகிறது.
வாஷிங்டன் கிழக்கு ஆசியாவில் அதன் இராணுவ கட்டமைப்பினை நியாயப்படுத்தும் விதமாகவும், சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் பலமுறை நிகழ்த்தப்பட்ட வடகொரியாவுடனான அதிகரித்துவரும் அழுத்தங்களுக்கு நிச்சயமாக வாஷிங்டன் தான் பொறுப்பாளியாக உள்ளது. எனினும், பியோங்யாங் ஆட்சியின் இராணுவவாத விடையிறுப்பானது போர் அபாயத்தினை மட்டுமே உயர்வடையச் செய்வதுடன், சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்குள் பிளவுகளை விதைத்து அமெரிக்காவின் கைகளில் நேரடியாக சிக்கிக்கொள்கிறது.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க தயாராகவுள்ள நிலையில், அமெரிக்காவும், சர்வதேச ஊடகங்களும் வடகொரியாவை நிராயுதபாணியாக்குவதற்கு தகுந்த வர்ணனைகளுடன் செயலாற்றிவருகின்றன. ஒரு வடகொரிய ICBM சோதனை "நடைபெறாது" என்று ட்ரம்ப் தானே tweet செய்துள்ளார், ஆனால் அவரது நிர்வாகம் எவ்வாறு தொடர விரும்புகிறது என்பது பற்றி எந்தவித சமிக்ஞையும் காட்டவில்லை.
கடந்த வார இறுதியில் வாஷிங்டன் போஸ்ட், "வடகொரியாவின் ஏவுகணை திட்டத்திற்கு எதிராக ட்ரம்ப் இராணுவ நடவடிக்கைகளை எடுக்கலாம்" என்பது போன்றே அவரின் tweet பரிந்துரைப்பதாக முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வில்லியம் பெர்ரி கவலைகளை தெரிவிக்கிறார் என்று குறிப்பிடுகிறது. வடகொரியா ஒரு சில ஆண்டுகளில் ஒரு செயல்பாட்டு அணுஆயுத ICBM இனை கொண்டிருக்கும் வாய்ப்புள்ளது என்று முடித்த பின்னர், "முதலில் பேச்சுவார்த்தை நடத்துவோம், பின்னர் கடுமையானதை பின்பற்றலாம்" என்று ட்ரம்பை வலியுறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு பெர்ரி அழைப்புவிடுத்தார். மேலும் பின்வருமாறு நிறைவுசெய்தார்: "நேரத்திற்கு நடவடிக்கை எடுப்பது முக்கியம். நம்மால் ஒரு வழியினை கண்டறிய முடியவில்லை என்றால், விரைவில், வடகொரியாவின் ஒரு அணுஆயுத ICBM எனும் தேடலை நிறுத்துவதற்கு முன்பைவிட மாபெரும் அழிவுகரமான இரண்டாவது கொரியன் போருக்கு வழிவகுக்கும் அளவிற்கு இந்த நெருக்கடி அனைவரையும் எளிதாக கட்டுப்பாட்டை இழக்கச்செய்துவிடும்."
கிளின்டன் நிர்வாகத்தின் ஒரு அங்கமாக பெர்ரி இருந்தது, 1994ல் வடகொரியாவின் அணுசக்தி திட்டங்கள் குறித்து அதனை போரின் விளிம்புக்கு கொண்டு சென்றது, ஆனால் மிகப்பெரிய அளவிலான உயிரிழப்புக்கள் நிகழக்கூடும் என்ற அமெரிக்க இராணுவத்தின் கடைசி நிமிட அறிவுரையின்போது அப்போர் நடவடிக்கை பின்வாங்கப்பட்டது. பேச்சுவார்த்தைகளின் விளைவாக உருவான ஒரு ஒப்பந்த வடிவமைப்பின்கீழ், வடகொரியா இரண்டு அணுசக்தி உற்பத்திக்கான அதன் அணுஆயுத திட்டங்களிலிருந்து பின்வாங்கி அதனை ஒழித்துக்கட்டுவதற்கும், அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகளுக்கும், இராஜதந்திர அங்கீகார குறைப்பிற்கும் ஒப்புக்கொண்டது. அமெரிக்க ஒருபோதும் தனது சார்பிலிருந்து பேரம்பேசுவதற்கு ஒத்துவராது என்ற நிலையில், இந்த ஒப்பந்தம் 2001ல் புஷ் நிர்வாகத்தால் திறம்பட தகர்க்கப்பட்டது.
இருப்பினும், பியோங்யாங் உடன் பேச்சுவார்த்தைக்கு ட்ரம்ப் தயாராக இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை, தவிர வேறு வகையில் சொல்வதானால் வடகொரிய தலைவர் கிம் உடனான ஹாம்பர்கர் பற்றிய ஒரு உரையாடலை தூக்கியெறிவது போன்று இதுவும் ஆகிவிடும். முடக்கம் தரும் பொருளாதார தடைகளின் மூலமாக சீனா தனது நட்பு நாடான வடகொரியாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக பல சந்தர்ப்பங்களில் ட்ரம்ப் சீனாவை குற்றஞ்சாட்டியுள்ளார். வடகொரியா மீதான கடுமையான அபராதமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளுக்கு உடன்படுவதாக கூறினாலும், பியோங்யாங் ஆட்சியில் ஏற்படும் முறிவானது, சீனாவின் வடக்கு எல்லைப் பகுதியில் ஒரு நெருக்கடியையும் உருவாக்கக்கூடும் என்று கருதி நடவடிக்கை எடுப்பதில் பெய்ஜிங் தயக்கம் காட்டியே வருகிறது.
வடகொரியாவின் எந்தவொரு ICBM மும் சுட்டுவீழ்த்தப்படும் என்பது போன்ற கார்ட்டரின் அச்சுறுத்தலை பென்டகனின் ஆயுத சோதனை அலுவலகத்திலிருந்து வந்த சமீபத்திய ஆண்டறிக்கையினை கொண்டு கவனித்தால் அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாட்டின் நிலைப்பாடு சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது. ப்ளூம்பேர்க் இன் நேற்றைய அறிக்கையின்படி, கலிபோர்னியா மற்றும் அலாஸ்காவை தளமாகக் கொண்டு அமைந்துள்ள ராடார் வழிநடத்தும் இடைமறிப்பான்களின் வலைப்பின்னல், "அமெரிக்க தாய்நாட்டைக் காப்பதற்கான ஒரு வரையறுக்கப்பட்ட திறனை" மட்டுமே இந்த குறைந்த எண்ணிக்கையிலான எளிய ICBMகள் கொண்டுள்ளன என்பதை நிரூபித்துள்ளது. மேலும், இந்த செயல்பாட்டிலுள்ள இடைமறிப்பான்களின் "நம்பகத்தன்மையும், கிடைக்கக்கூடிய தன்மையும்" கூட குறைவாக இருப்பதுடன், சோதனையின் போது புதிய செயற்பாட்டுக் குறைகளையும், "செயலிழக்கும் தன்மைகளையும்" வெளிப்படுத்துவதாக இருந்தது எனவும் தெரிவித்தது.
அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் மீதான ஒரு கேள்விக்குறி, வடகொரிய அணுஆயுத மற்றும் ஏவுகணை வசதிகளுக்கு எதிரான முன்கூட்டிய இராணுவ நடவடிக்கைகளுக்கான அழைப்புகளுக்கு ஏற்கனவே வழிவகுத்துள்ளது. மூலோபாயம் மற்றும் சர்வதேச கற்கைகளின் மையத்தில் (Centre for Strategic and International Studies-CSIS) கடந்த மாதம் கொரியாவின் அமெரிக்க படைகளின் முன்னாள் ஜெனரல் வால்டர் ஷார்ப் பேசியபோது, வடகொரிய ஏவுகணைகள் நிறுவப்படுவதற்கு முன்னரும், நிறுவப்பட்ட பின்னரும் என்று இரண்டு வகையிலுமாக கருத்திற்கொண்டு அழிப்பதற்கு ஏற்றதான அதன் செயல்திறனை அமெரிக்கா நீரூபிக்க வேண்டியிருந்தது என்று அறிவித்தார். வடகொரியாவின் எந்தவொரு பதிலடியும் ஒரு பெரும் இராணுவ தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஷார்ப் கருத்து தெரிவித்தார். மேலும் அவர், "நாங்கள் வடகொரிய ஏவுகணைகளில் ஒன்றை வெளியே எடுத்த பின்னர் அவர் (கிம்) அதற்கு விடையிறுத்தால், அவருடைய வழியில் நிறைய வெளிவருவதற்கு வாய்ப்புள்ளது என்பதை அவர் அறிவார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்..." என்றும் தெரிவித்தார்.
வடகொரியாவுடன் போர் நிகழும் பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்க மற்றும் தென் கொரிய இராணுவங்கள் OPLAN 5015 என்ற ஒரு கூட்டு செயல்பாட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த திட்டம் ஒரு பெயரளவிலான தற்காப்பு நிலைப்பாட்டிலிருந்து தாக்குதல் நிலைக்கு மாறிவிட்டது. நவம்பர் 2015ல் ஒப்புக்கொள்ளப்பட்டு, வடகொரிய அணுஆயுத மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீதான முன்கூட்டிய தாக்குதல்களையும் இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது என்று கூறப்படுகிறது, அத்துடன் உயர்மட்ட தலைவர் கிம் உட்பட பியோங்யாங் ஆட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிறப்பு படைப் பிரிவினரால் படுகொலை செய்யப்படுவதற்கு "தலைதுண்டிக்கும்” திடீர் தாக்குதல்களை நிகழ்த்துவதும் இதில் அடங்கும்.
1000 முதல் 2000 வரையிலான அமெரிக்க மற்றும் தென் கொரிய சிறப்பு படையினர் குழுக்களை கொண்டு ஒரு சிறப்பு படுகொலை படைபிரிவின் உருவாக்கம் விரைவுபடுத்தப்படும் என்று ஞாயிறன்று தென்கொரிய யோன்ஹாப் செய்தி நிறுவனம் அறிவித்தது. ஆரம்பத்தில் 2019 ற்கு திட்டமிடப்பட்டது, ஒரு உயர்மட்ட அரசாங்க அதிகாரியின் கருத்தினைப் பொறுத்து "இந்த ஆண்டிற்கு பின் சில காலம் கழித்து" அதனது ஸ்தாபகம் கொண்டுவரப்படலாம். ஒரு போர் காலத்தில் தலைவர்களை அகற்றுவதற்கும், ஆட்சியை முடக்கிவைப்பதற்கும் இந்தப் பிரிவு வடகொரியாவுக்குள் செயல்படும்.
ஒரு வடகொரிய ICBM "நிகழாது" என்று ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஜனரஞ்சக மற்றும் தற்பெருமை கொண்ட வலதுசாரி, தற்போது பதவியேற்க இருப்பதுடன் அதன் வார்த்தைகளை செயல்படுத்தவும் முனையும். பொறுப்பற்றதன்மை மற்றும் இராணுவவாதத்தின் மீதான அவரது நாட்டம் உலகின் மிகுந்த அபாயகர வெடிப்புப் புள்ளியான கொரிய தீபகற்பத்தின் மீது அழுத்தங்களை உருவாக்கி கட்டுப்பாட்டை இழக்கச்செய்வதுடன், பிற சக்திகளையும் உள்ளிழுத்து ஒரு மோதலுக்கு இட்டுசெல்லும் அபாயத்தை மட்டுமே அதிகரிக்கிறது.