Print Version|Feedback
US politicians, intelligence move to cut French neo-fascists’ ties to Russia
பிரெஞ்சு நவ-பாசிஸ்டுகளுக்கு ரஷ்யாவுடனான தொடர்புகளை துண்டிக்க அமெரிக்க அரசியல்வாதிகளும், உளவு முகமைகளும் நடவடிக்கை எடுக்கின்றன
By Alex Lantier
7 January 2017
வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக வாஷிங்டனில் கடுமையான அரசியல் உட்சண்டை நடைபெற்று வருவதன் மத்தியில், அமெரிக்க உளவு சமூகத்தின் பிரிவுகள் பிரான்சின் நவ-பாசிச ஜனாதிபதி வேட்பாளரான மரின் லு பென்னுக்கு ரஷ்யா உடனான தொடர்புகளைத் துண்டிப்பதற்கு மூர்க்கமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வெற்றி பெறச் செய்வதற்காக ரஷ்யா தலையீடு செய்ததாக குற்றம் சாட்டி ஒரு வெறித்தனமான பிரச்சாரத்தை அமெரிக்க ஊடகங்களும் உளவு எந்திரமும் நடத்திக் கொண்டிருக்கின்றன. இதேசக்திகள் லு பென்னின் தேசிய முன்னணிக் கட்சிக்கு நிதியாதாரம் கிடைப்பதையும் ரஷ்யாவுடனான லு பென்னின் உறவுகளையும் துண்டிப்பதற்கு தலையீடு செய்கின்ற நிலையில், அமெரிக்காவிலும் மற்றும் ஐரோப்பாவிலும் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரத்தின் கீழமைந்திருக்கும் புவி-மூலோபாயப் போட்டிகள் மேலெழுந்து பார்வைக்கு வருகின்றன.
ரஷ்யாவுடனான FN இன் உறவுகள் குறித்து எச்சரித்து அவை உளவுக் கமிட்டியின் ஒஹியோ குடியரசுக் கட்சி உறுப்பினரான மைக் ரேர்னர் நவம்பர் 28 அன்று அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநரான ஜேம்ஸ் கிளப்பருக்கு கடிதம் எழுதியிருந்தார் என டிசம்பர் 18 அன்று நையாண்டி வார இதழான Canard Enchaîné வெளிப்படுத்தியிருந்தது.
ரேர்னர் குறிப்பிட்டிருந்தார்: “கிரெம்ளினுடன் தொடர்புகள் உடைய ஒரு ரஷ்ய வங்கியிடம் இருந்து 9.8 மில்லியன் டாலர் கடனுதவி பெற்றதாய் FN பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறது, பிரெஞ்சு பத்திரிகை செய்திகளின் படி அங்கீகரிக்கப்பட்ட ரஷ்ய நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் இதில் மத்தியஸ்தராய் செயல்பட்டிருந்தார்.... FN தலைவரான மரின் லு பென்னின் 2017 பிரச்சாரத்திற்கு நிதியாதாரமாக 30 மில்லியன் டாலர் கடனுதவியை 2016 பிப்ரவரியில் FN ரஷ்யாவிடம் கேட்டிருந்தது.” கிரிமியா மீதான ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு லு பென் ஆதரவளித்திருந்தார் -அதன்பின் உக்ரேனில் இருந்த அமெரிக்க-ஆதரவு ஆட்சி லு பென்னை persona non grata என அறிவித்து, உக்ரேனுக்கு பயணம் செய்வதற்கு தடை செய்யப்பட்டவராக்கியது- என்பதையும் ரேர்னர் குறிப்பிட்டிருந்தார்.
இறுதியாய், “ரஷ்யாவின் நலன்களுக்கு எதிரான நலன்களைக் கொண்ட அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான தகவல் போரின்” இந்த ”விரிந்த பிரச்சாரம்” குறித்து “மேலதிக விபரங்களை” கண்டறிய வேண்டும் என்றும் ரேர்னர் கிளப்பரிடம் வலியுறுத்தியிருந்தார்.
லு பென் -இவர் ட்ரம்ப்பின் தேர்வையும் அவரது பாதுகாப்புவாதக் கொள்கைகளையும் “சுதந்திரத்தின் வெற்றி” என்று பாராட்டியவர் என்பதோடு வெள்ளை மேலாதிக்கவாதியான ஸ்டீபன் பானனை ஒரு தலைமை ஆலோசகராக ட்ரம்ப் தேர்வு செய்ததையும் பாராட்டியவராவார்- ஆரம்பத்தில் ரேர்னரின் கடிதத்திற்கு ஆவேசத்துடன் பதிலிறுப்பு செய்தார்.
தனக்கு அல்லது ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க உளவு நடவடிக்கைகளைக் குறித்து எதுவும் குறிப்பிடாமல், நேட்டோ இராணுவக் கூட்டணி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது லு பென் கூரிய தாக்குதல் நடத்தினார். ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் FN மீது நீண்டகாலமாக வைத்து வந்திருக்கக் கூடிய விமர்சனங்களது வரிசையில் இது இருந்தது; அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறுவதற்கும் யூரோ நாணயமதிப்பு குறித்தும் ஒரு கருத்துவாக்கெடுப்பு நடத்தவும் FN அழைப்பு விடுத்து வருகிறது.
கிரேக்க தினசரியான Dimokratia க்கு பேட்டியளித்த அவர், நேட்டோவுக்கு ட்ரம்ப் காட்டும் குரோதத்தை எதிரொலித்தார். “வார்சோ ஒப்பந்தத்தினால் சோவியத் ஒன்றியத்தில் இருந்து கம்யூனிசம் விரிவுகாண அச்சுறுத்திய சமயத்தில் தான் நேட்டோ உருவாக்கப்பட்டது” என்று அவர் மேலும் கூறினார். “ஆனால் சோவியத் ஒன்றியம் இனியும் இல்லை, அதேபோல வார்சோ ஒப்பந்தமும் இல்லை: அமெரிக்கா மட்டும் தான் ஐரோப்பாவில் அதன் நலன்களுக்கு சேவைசெய்யும் பொருட்டு நேட்டோவின் இருப்பைப் பராமரித்துக் கொண்டிருக்கிறது.”
தனது Dimokratia நேர்காணலில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தை மீண்டும் கண்டித்து பின்வருமாறு அறிவித்தார்: “ஃபிரெக்ஸிட் [ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறுவது] எனது வேலைத்திட்டத்தில் இருக்கிறது. நாட்டின் இறையாண்மை மீட்டெடுக்கப்படும் பொருட்டு புருசசெல்ஸின் தொழில்நுட்பரீதியான நிர்வாகிகளால் திணிக்கப்படும் அடிமைத்தனம் மற்றும் அச்சுறுத்தி பணம்பெறுதலில் இருந்து விடுதலை பெறுவதற்கு வாக்களிக்கக் கூடிய வாய்ப்பு மக்களுக்கு இருந்தாக வேண்டும்.”
FN இப்போது Golden Dawn -கிரீசில் புலம்பெயர்ந்தவர்கள், ஓர்பால்விருப்பத்தார் மற்றும் இடது-சாரிகள் மீது அடிக்கடி கொலைவெறி வீதித் தாக்குதல்களுக்கு இழிபுகழ் பெற்றதான ஒரு நாஜி-ஆதரவு கட்சி- உடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும் லு பென் கூறினார்.
ஆயினும், FNக்கு பிரச்சாரத் தொகையை கடனுதவியாக வழங்கிய ரஷ்ய வங்கியான FCRB (முதல் செக் ரஷ்ய வங்கி) திவாலாகி விட்டிருந்தது என்பதும், FNக்கான கடனுதவியை ரஷ்யாவின் நிதி அதிகாரிகள் இடைநிறுத்தி வைத்திருந்தனர் என்பதும் லு பென்னின் நேர்காணலுக்குப் பின்னர் தெரியவந்தது. லு பென் தனது தந்தையும் FN இன் முன்னாள் தலைவருமான ஜோன்-மரி லு பென் உடன் தொடர்புடைய ஒரு நிறுவனமான Cotelec யிடம் இருந்து 6 மில்லியன் டாலர் கடனுதவி எதிர்பார்க்கத் தள்ளப்பட்டிருந்தார் என்பதை டிசம்பர் 31 அன்று வெளியான ஒரு திடீர் அறிவிப்பு வெளிக்கொண்டுவந்தது.
ஜனவரி 3 அன்று, மரின் லு பென் BFM-TVயில் Jean-Jacques Bourdin உடனான ஒரு நேர்காணலுக்காக தோன்றிய சமயத்தில், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருந்தார் என்பது தெளிவானது. தான் “ஐரோப்பிய-விரோதி அல்ல” என்று பிரகடனம் செய்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதைக் காட்டிலும் ஒரு மறுபேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். பிரெஞ்சு பிராங்க்கு திரும்புவதற்கும் ஜேர்மனி-தலைமையிலான ஐரோப்பிய மத்திய வங்கியுடன் முறித்துக் கொள்வதற்குமான FN இன் அழைப்புகளில் இருந்து வெளிப்பட பின்வாங்கியிருந்த அவர், பிரான்சின் ஒரு தேசிய நாணயமதிப்பு 19 நாடுகளது யூரோ நாணயமதிப்புடன் இணங்கியிருக்க முடியும் என்று ஆலோசனையளித்தார். நேர்காணலின் இந்தப் பகுதி பின்வருமாறு சென்றது:
கே: பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நான், விஷயங்களை தெளிவாக்க விரும்புகிறேன், நான் நேரடியாக உங்களிடம் கேட்கிறேன். ஆம் அல்லது இல்லையா?
மரின் லு பென்: நான் விரும்புவது, இல்லை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேரம்பேசல் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் பிரான்சுக்கு இறையாண்மை திரும்பிக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ....
கே: மறுபேரம்பேசல்?
மரின் லு பென்: நிச்சயமாக எல்லைகள் திரும்பி வர வேண்டும் என்று நினைக்கிறேன், நாணயரீதியான, பொருளாதாரரீதியான மற்றும் நிதிநிலைரீதியான இறையாண்மை...
கே: அப்படியானால், இனி யூரோ கிடையாது?
மரின் லு பென்: ஒரு தேசிய நாணயத்துடன் [சேர்ந்து] ஒரு யூரோ, பொது நாணயமதிப்பு... அது பிரச்சினை உண்டாக்காது. எனக்கு ஒரு தேசிய நாணயமதிப்பு வேண்டும். நான் ஐரோப்பிய-விரோதி கிடையாது, நான் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராய் நிற்கிறேன்.
கே: ஐரோப்பாவை எப்படி பலப்படுத்துவீர்கள்?
மரின் லு பென்: குறிப்பிட்ட நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் மூலமாக பலப்படுத்துவேன்.
FN இன் மிகக் கடுமையான ஐரோப்பிய-விரோத நிலைப்பாடுகளில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக் கொண்டாலும், மரின் லு பென், வியாழனன்று ஆங்கில-அமெரிக்க ஊடக சங்கத்துடனான சந்திப்பின் போது மீண்டும் ட்ரம்பை பாதுகாத்துப் பேசியதோடு ரஷ்ய ஊடுருவல் குறித்த அமெரிக்க குற்றச்சாட்டுகளை தணித்துக் கூறினார்.
”இணையத் தாக்குதல்கள் குறித்த இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் எந்தவொரு கவனத்துக்குரிய ஆதாரமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். உண்மையான வெளிக்கொணரல்களையே நாம் பரிசீலிக்க வேண்டும். எப்படியிருப்பினும், இந்த இணையவழி தாக்குதலுக்குப் பின்னால் [ரஷ்யா] இருந்தது என்று நம்மால் கூறி விட முடியாது” என்ற அவர், “நான் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டதை ஆதரித்ததன் காரணம் அவரது சர்வதேச கொள்கைகள் பிரான்சுக்கு நன்மை பயக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் சர்வதேசக் கொள்கைகள் பிரான்சை பாதிக்குமா? என்பது மட்டுமே எனக்கு அக்கறையுள்ள ஒரே கேள்வி. இதுவரை அந்த விடயத்தில் அவ்வாறில்லை, அதற்கு நேரெதிர் தான்.”
FN ஐ வழிக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க உளவுத்துறை தலையீடு செய்வதானது அமெரிக்க தேர்தலில் ரஷ்யா ஊடுருவல் செய்ததாக ஊர்ஜிதங்களற்ற கண்டனங்களது பிரச்சாரம் நடத்தப்படுவதன் கீழமைந்த வெடிப்பான மோதல்களை சுட்டிக்காட்டுகிறது. இவை ஊடுருவல் தொடர்பான எந்த அர்த்தமுள்ள ஆதாரத்தாலும் செலுத்தப்பட்டவையாக இல்லை - அப்படியான எந்த ஆதாரமும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை- மாறாக நேட்டோ கூட்டணிக்குள்ளான பொருளாதார மற்றும் புவி-மூலோபாய பதட்டங்களாலேயே செலுத்தப்படுகின்றன.
ரஷ்யா தொடர்பாக ட்ரம்ப்புக்கும், ஜனநாயகக் கட்சி, சிஐஏ மற்றும் அமெரிக்க ஊடகங்களின் பகுதிகளுக்கும் இடையிலான மோதலானது தவிர்க்கவியலாமல் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான மோதல்களுடன் தொடர்புடையதாக ஆகிறது. ரஷ்யாவுக்கு எதிரான மிகவும் மூர்க்கத்தனமான மூலோபாயத்தில் இருந்து விலகி, அமெரிக்காவின் பாரம்பரியமான “ஒரே சீனா” கொள்கையை மறுப்பதன் அடிப்படையில் சீனாவுடனான ஒரு மோதலின் மீது கவனம் குவிப்பது குறித்து தான் பரிசீலிக்கக் கூடும் என்பதை ட்ரம்ப் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது புவியரசியல் மூலோபாயவாதிகளின் வருணனைக்கு மட்டுமல்ல, ஐரோப்பாவின் முன்னணி முதலாளித்துவ அரசியல்வாதிகளது கணக்குகளுக்குமான ஒரு கருப்பொருளாக ஆகியிருக்கிறது.
சென்ற மாதத்தில், வெளியுறவு தொடர்பான ஐரோப்பிய கவுன்சிலின் ஆசிய நிபுணரான பிரான்சுவா கோட்மெண்ட், அமெரிக்காவின் அதிக மூர்க்கமான “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யானது ஐரோப்பாவில் எக்குத்தப்பான விளைவுகளைக் கொண்டிருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். ஐரோப்பா, “ஒரு ஒத்திசைவான வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை இல்லாதிருப்பதுடன் ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய இரண்டு பிராந்திய சக்திகளுடன் பரிதாபகரமான உறவுகளைக் கொண்டிருக்கிறது” என அவர் குறிப்பிட்டார். “இந்த அர்த்தத்தில், ஐரோப்பாவுக்கு ஒரு அனுகூலமாக ரஷ்யா மீது என்றென்றைக்குமாய் தடைகளை திணிப்பதைக் காட்டிலும் சீனாவின் அபிலாசைகளுக்கு வரம்பிடும் பொருட்டு ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடனான ஒரு கூட்டணியை உருவாக்குவதே ட்ரம்ப்பின் அமெரிக்காவுக்கு கூடுதல் மதிப்பு வாய்ந்ததாக அமையக் கூடும்.”
இந்த அர்த்தச்சூழலில், ரஷ்யாவில் இருந்து விலகி சீனாவை நோக்கி “திரும்புவதற்கு” அழைக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகத்தின் பிரிவுகளுக்கும் இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் பிரான்சின் ஜனாதிபதி தேர்தலது முன்னிலை வேட்பாளர்கள் பலருக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட அணிவரிசை உருவாகி வருகிறது.
பின்கூறிய இந்த வேட்பாளர்கள் ஒரு ரஷ்ய-ஆதரவு, தேசியவாத மற்றும் பாதுகாப்புவாத நோக்குநிலையை எடுத்துக் கொண்டிருக்கின்றனர், அத்துடன் இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னிலை பொருளாதார சக்தியான ஜேர்மனி குறித்து கடும் விமர்சனப் பார்வை கொண்டிருக்கின்றனர். லு பென்; கன்சர்வேடிவ் வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோன் -ரஷ்ய-ஆதரவாளரும் விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட நண்பருமான இவர் ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபித்த மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தவர்; மற்றும் இடது முன்னணியின் முன்னாள் தலைவரான ஜோன்-லுக் மெலன்சோன் ஆகியோரும் இவர்களில் அடங்குவர்.
புட்டின் உடனான உறவுகள் தொடர்பாக Paris-Normandie தினசரி நேற்று கேட்டபோது, ஃபிய்யோனுடன் “ஒரு சர்வதேசிய புவியரசியல் பார்வை”யை பகிர்ந்து கொள்வதாக லு பென் குறிப்பிட்டார், அவர் மேலும் கூறினார்: “நேட்டோவின் ஒருங்கிணைந்த உத்தரவிடல் அமைப்புக்கு பிரான்ஸ் திரும்புவதை நானாயிருந்தால் ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டேன். அதையும் தாண்டி, எந்த அந்நிய சக்திக்கும் நான் கட்டுப்பட்டவளல்ல, பிரான்சின் நலன்களை மட்டுமே நான் சிந்தித்துப் பார்க்கிறேன்.”