Print Version|Feedback
Economic nationalism and the breakdown of the post-war order
பொருளாதார தேசியவாதமும், போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பின் உடைவும்
Nick Beams
11 January 2017
2016 க்கு முரண்பட்ட விதத்தில், புத்தாண்டு ஒப்பீட்டளவில் உலகளாவிய நிதியியல் சந்தைகளின் ஸ்திரத்தன்மையோடு தொடங்கியுள்ளது. ஓராண்டுக்கு முன்னர், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களில் 0.25 சதவீத புள்ளிகளை உயர்த்துவதென்று முடிவெடுக்கப்பட்டிருந்த சூழலில், எண்ணெய் விலையில் ஒரு கூர்மையான வீழ்ச்சி மற்றும் வங்கி பங்குகளின் சரிவு ஆகியவற்றுடன், சந்தைகள் கணிசமானளவிற்கு கொந்தளிப்பைக் கண்டன.
2017 இல் இதுவரையில், நிதியியல் முகப்பில் அனைத்தும் அமைதியாக உள்ளது, அமெரிக்க சந்தைகள் டிசம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியால் தூண்டிவிடப்பட்ட உயர்வில் அவை எட்டிய சாதனை அளவிற்கான உயரங்களைச் சுற்றியே தொடர்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் ஒப்பீட்டளவிலான இந்த அமைதியான தோற்றத்திற்கு பின்னால், நிதியியல் சந்தைகளுக்கு மட்டுமல்ல, மாறாக மிகப் பரந்தளவில் உலக பொருளாதாரத்தின் மீதே நீண்டகால தாக்கங்களை கொண்டிருக்கும் பிரதான மாற்றங்கள் நடந்துள்ளன.
2016 இன் மிகவும் முக்கிய அம்சங்களில் ஒன்று, பொருளாதார தேசியவாதத்தின் வளர்ச்சியும், வலதுசாரி தேசியவாத மற்றும் வெகுஜன இயக்கங்களின் வளர்ச்சியுமாகும். பொருளாதார தேசியவாதத்தை நோக்கிய திருப்பம் உலகின் பல பகுதிகளில் பிரதிபலிக்கிறது என்றாலும், அது வரவிருக்கும் ஜனாதிபதி ட்ரம்ப் தழுவியுள்ள "முதலிடத்தில் அமெரிக்கா" கொள்கைகள் மற்றும் மைய இலக்குகளில் ஒன்றாக சீனாவை வடிவமைத்திருப்பதுடன் இந்த திட்டநிரலை பகிரங்கமாக முன்னெடுக்கும் நபர்களை அவரது அமைச்சரவையில் நியமித்திருப்பதிலும் அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டுள்ளது.
அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நிலைநோக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம், ஆழ்ந்த வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. 1930 களின் தசாப்தத்தில், நாணய மற்றும் வர்த்தகக் கூட்டுக்களாக உலக பொருளாதாரம் பிளவுபட்டு இரண்டாம் உலக போருக்கு இட்டுச் சென்றபோது, அது உருவாக்கிய பேரழிவுகளை தொடர்ந்து, என்ன விலை கொடுத்தாவது பாதுகாப்புவாதத்தை நீக்கிவிட்டு, போருக்கு பிந்தைய ஒழுங்கமைப்பை சுதந்திர வர்த்தகத்தின் மீது அமைப்பது அவசியம் என்பதே அமெரிக்க ஆளும் உயரடுக்குகள் பெற்ற படிப்பினைகளில் ஒன்றாக இருந்தது.
“சுதந்திர" வர்த்தக திட்டநிரல் என்று எது அழைக்கப்பட்டதோ, அது, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதி சீரழிந்திருந்ததற்கு முரண்பட்ட வகையில், இரண்டாம் உலக போரின் மனிதயின படுகொலைகளில் இருந்து ஒப்பீட்டளவில் பாதிப்பின்றி எழுந்திருந்த அமெரிக்க முதலாளித்துவத்தின் சவாலுக்கிடமற்ற உலகளாவிய பொருளாதார மேலாதிக்கத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த போர், அமெரிக்க தொழில்துறை மற்றும் நிதிகளின் ஏற்கனவே மேலோங்கிய நிலைமைகளை இன்னும் ஊக்குவித்தது. அமெரிக்க முதலாளித்துவம், அதன் ஏற்றுமதிகள் மற்றும் முதலீடுகளுக்காகவும் மற்றும் அமெரிக்க பெருநிறுவனங்கள் இலாபமீட்டுவதை அனுகூலமாக்கவும் உலக சந்தையை திறந்துவிட்டு ஸ்திரப்படுத்துவதற்காக, டாலர் அடிப்படையிலான பிரெட்டன் வூட்ஸ் நாணய முறை, இறக்குமதி/ஏற்றுமதி வரி மற்றும் வர்த்தகம் மீதான பொது உடன்பாடு (GATT), மார்ஷல் திட்டம் என பல திட்டங்கள் மற்றும் அமைப்புகளை ஸ்தாபிக்க ஊக்குவித்தது.
இன்றோ, தசாப்தகால நீடித்த வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்க பொருளாதார மேலாதிக்கம் ஒரு கடந்த கால விடயமாகி உள்ளது மற்றும் அமெரிக்க முதலாளித்துவமே கூட குறிப்பாக சீனாவின் வளர்ச்சியால் அச்சுறுத்தப்பட்டு இருப்பதாக காண்கிறது. அடிப்படையில் இதுதான், போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கின் முறிவையும் மற்றும் கடிவாளமற்ற பொருளாதார தேசியவாதத்திற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் திரும்புவதையும் அடிக்கோடிடுகிறது.
இது, உலகளாவிய பொருளாதார அமைப்புமுறையும், அதனுடன் சேர்ந்து உலக முதலாளித்துவத்தின் ஸ்திரத்தன்மை தங்கியுள்ள இந்த ஒட்டுமொத்த அரசியல் உறவுமுறையும், இப்போது எங்கே போய் கொண்டிருக்கிறது என்பது குறித்து கணிசமானளவிற்கு கவலைகளை அதிகரிக்கிறது.
புதிய அமெரிக்க நிலைநோக்கு மீதான அச்சங்கள், ஜனவரி 6 இல் பைனான்சியல் டைம்ஸ் இன் பொருளாதாரத்துறை செய்தியாளர் மார்டின் வொல்ஃப் இன் ஒரு கட்டுரையில் வெளிப்பட்டன. “உலகளாவிய உருக்குலைவை நோக்கிய நீண்ட மற்றும் வலிநிறைந்த பயணம்" என்று அது தலைப்பிடப்பட்டு இருந்தது.
“வரலாறில் இருந்து மனிதயினம் படிப்பினைகள் பெற முடியாது என்பது உண்மையல்ல,” என்று வொல்ஃப் ஆரம்பித்தார். “அதனால் முடியும், 1914 மற்றும் 1945 க்கு இடையே இருண்ட காலகட்டத்தின் படிப்பினைகளை பொறுத்த வரையில், அதை மேற்கு பெற்றிருந்தது. ஆனால் அது அந்த படிப்பினைகளை மறந்துவிட்டதாக தெரிகிறது. நாம் மீண்டுமொருமுறை கொடூரமான தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 1980 களில் சந்தை திறந்துவிடப்பட்டதன் மூலமாக மற்றும் 1989 மற்றும் 1991 க்கு இடையே சோவியத் கம்யூனிசத்தின் பொறிவு மூலமாக, முன்னேற்றம், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்கான ஒரு துணிச்சலான புதிய உலகம் மீது ஏற்பட்ட நம்பிக்கைகள் சாம்பல்களாக பொசுங்கிவிட்டன,” என்றார்.
நிரந்தர கூட்டணிகளை நிராகரித்து, பாதுகாப்புவாதத்தைத் தழுவும் ஒரு ஜனாதிபதியின் கீழ் அமெரிக்காவிற்கும், கிழக்கில் "பண்பாடற்ற ஜனநாயகம்", பிரிட்டன் வெளியேற்றம் மற்றும் பிரான்சில் மரீன் லு பென் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு ஆகியவற்றை முகங்கொடுத்து நொருங்கி கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் முன்னால் இருப்பது என்ன? என்றவர் வினவினார்.
பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் கிடியோன் ராஹ்மனும் இந்தாண்டின் அவரது முதல் கட்டுரையை இதே நிகழ்வுபோக்குகளுக்காக அர்ப்பணித்தார். “அமெரிக்காவை மீண்டும் தலையாயதாக ஆக்க" ட்ரம்ப் சூளுரைப்பதற்கு முன்னரே, சீனா, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகியவை ஏற்கனவே "பழைய பிரகாசமான தேசியவாதம்" என்று அவர் குறிப்பிட்டதை நோக்கி திரும்பி இருந்ததாக அவர் எழுதினார். ஜப்பானில் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே "தேசிய மீட்சிக்காக" ஒரு பரபரப்பான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார், அதேவேளை இந்தியாவில், பிரதம மந்திரி நரேந்திர மோடி "ஹிந்து பெருமிதம்" மீதான ஒரு முறையீட்டுடன் "இந்தியாவை நவீனமயப்படுத்த" ஒன்றுகலந்த அழுத்தத்தை பிரயோகிக்கிறார்.
அங்கே பிரிட்டன் வெளியேறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பிலும் தேசியவாதத்திற்கு ஒரு பலமான முறையீடு இருந்தது, “28 ஐரோப்பிய நாடுகளது ஒன்றியத்தில் வெறுமனே ஒரு அங்கத்துவ நாடாக இல்லாமல், இங்கிலாந்து ஒரு மேலாதிக்க உலக சக்தியாக விளங்கிய காலக்கட்டத்தின் நினைவுகளுக்கு" முறையீடு செய்யும் ஒரு முயற்சியாக, வெளியேறுவதற்கான பிரச்சாரம் ஓர் "உலகளாவிய பிரிட்டன்" குறித்து வலியுறுத்தியது.
ஜேர்மனியில் "மீண்டும் ஜேர்மனியை தலையாயதாக ஆக்குவோம்" என்ற முழக்கத்தின் மீது பகிரங்கமாக பிரச்சாரம் செய்வது அங்கே எந்த கட்சிக்கும் சற்று கடினமானது என்று ராஹ்மன் குறிப்பிட்டார். ஆனால் அந்த கோஷம், குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லையென்றாலும், அதுபோன்ற சக்திகள் அங்கே வேலை செய்து வருகின்றன—அனைத்திற்கும் மேலாக முக்கியமாக வெளியுறவு கொள்கை, இராணுவ மற்றும் கல்வித்துறைசார் வட்டாரங்களில். ஜேர்மன் வெறுமனே ஐரோப்பாவிற்குள் ஒரு சக்தியாக செயல்பட முடியாது, மாறாக உலகளாவிய அளவில் அதன் செல்வாக்கை பிரயோகிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் மீண்டும் மீண்டும் அங்கே கேட்க முடிகிறது.
பொருளாதார தேசியவாதத்திற்குத் திரும்புதல் என்பது ட்ரம்ப், லு பென் அல்லது வேறெந்த ஏனைய அரசியல் தலைவர்களின் தனிமனித பண்புகளிலோ அல்லது மனோபாவத்திலோ வேரூன்றியதல்ல. அல்லது அது, இப்போதிருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்குமுறை மீது சீறிவரும் மக்கள் அதிருப்தியை சுரண்டி, பல்வேறு அரசியல்வாதிகள் தங்களின் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதற்கான வெறுமனே ஒரு கருவியோ கிடையாது.
நிச்சயமாக அதுபோன்ற கணக்கீடுகளும் இருக்கின்றனதான். ஆனாலும் அரசியல் தந்திரங்கள் மற்றும் பிரச்சாரத்தின் அடியில், ஆழ்ந்த புறநிலை சக்திகள் இயங்குகின்றன. அமெரிக்காவை மையமாக கொண்ட 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடியின் வெடிப்புக்குப் பிந்தைய உலக பொருளாதாரத்தின் போக்கை மீளாய்வு செய்வதன் மூலமாக இந்த சக்திகளை அடையாளம் காணலாம். அந்நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தியதைப் போல, இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய நிலைமுறிவல்ல, மாறாக உலக முதலாளித்துவ பொருளாதார இயங்குமுறையின் முறிவாகும்.
உலக பொருளாதாரத்தில் 85 சதவீதத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஜி-20 குழு நாடுகள், 1929 க்குப் பிந்தைய மிக கடுமையான நிதியியல் நெருக்கடியை முகங்கொடுத்திருந்த நிலையில், அவற்றின் தலைவர்கள் 2009 ஆம் ஆண்டு அவர்களது முதல் கூட்டத்தில், 1930 களின் நிலைமைகள் திரும்பி வருவதன் உள்ளார்ந்த அபாயங்களை ஒப்புக் கொண்டனர். ஆரம்பத்தில் இருந்தே, மற்றும் அதற்கடுத்த ஏறத்தாழ எல்லா கூட்டங்களிலும், அவர்கள் பாதுகாப்புவாதம் மற்றும் வர்த்தக போர் நடவடிக்கைகளை தவிர்க்க சூளுரைத்தனர். ஆனால் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முரண்பாடுகள் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் சூளுரைகளைக் காட்டிலும் மிகவும் பலமானதாக ஊர்ஜிதமாகி உள்ளது.
நிதியியல் உருகுதல் மற்றும் நிகழவிருந்த பெரும் பின்னடைவுக்கு விடையிறுப்பதற்கு கொண்டு வரப்பட்ட கொள்கைகள், பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடுவது என்றழைக்கப்பட்டதன் அடிப்படையில் இருந்தன, அதன் கீழ் உலகின் பிரதான மத்திய வங்கிகள் —அமெரிக்க பெடரல், பேங்க் ஆஃப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பான்— நிதியியல் அமைப்புமுறைக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சின. இந்த நடவடிக்கைகள் சீனாவில் அரசு செலவினங்கள் மற்றும் விரைவான கடன் விரிவாக்கம் அடிப்படையில் ஒரு பாரிய ஊக்க உதவிப்பொதியை உள்ளடக்கி இருந்தது.
பிரதான மத்திய வங்கிகளின் கொள்கைகள், முழுமையான நிதியியல் உருகுதலை தடுத்த போதினும், சீன ஊக்கப்பொதியானது இலத்தீன் அமெரிக்காவில் இருந்து ஆபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா வரையிலான பண்டங்கள் ஏற்றுமதி நாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை வழங்கியது. சிறிது காலத்திற்கு, இது, பிரேசில், இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் (BRICS) என்றழைக்கப்படும் நாடுகள் உலக முதலாளித்துவத்திற்கு ஒரு புதிய ஸ்திரமான அடித்தளத்தை வழங்குமென்ற பிரமைகளை ஊக்குவித்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்பு அற்ப காலமே உயிர்வாழத்தக்கது என்பதும் நிரூபணமானது.
நிதியியல் அமைப்புமுறைக்குள் முன்னொருபோதும் இல்லாதளவில் பணத்தை பாய்ச்சியமை பிரதான பொருளாதார நாடுகளில் சிறிதளவே நிஜமான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தது அல்லது ஒன்றுமே ஏற்படுத்தவில்லை, இறுதியில் இந்த பொருளாதார நாடுகளைத்தான் பிரிக்ஸ் நாடுகள் சார்ந்துள்ளன, ஆனால் இந்நடவடிக்கை சர்வசாதாரணமாக உலகளாவிய நிதியியல் செல்வந்த தட்டுக்களைச் செழிப்பாக்கின, அதேவேளையில் பெருந்திரளான பரந்த தொழிலாள வர்க்கம் இதுவரை இல்லா சாதனை மட்டங்களில் சமூக சமத்துவமின்மையின் உயர்வுக்கு இடையே, நிஜமான கூலிகள், சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் வாழ்க்கை தரங்களில் வெட்டுக்கள் மூலமாக அந்த நிதியியல் நன்கொடைகளுக்கு விலை கொடுக்க நிர்பந்திக்கப்பட்டது.
நிதியியல் நெருக்கடியை அடுத்து வந்த ஆண்டுகளில், மத்திய வங்கியாளர்களும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் அவர்கள் எடுத்த நிதியியல் நடவடிக்கைகள் தவிர்க்கவியலாமல் ஒரு பொருளாதார மீட்சியைக் கொண்டு வருமென வலியுறுத்தினர். ஆனால் இந்த கனவு இப்போது முற்றிலும் மற்றும் உண்மையாய் அம்பலமாகி உள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்தியான முதலீடு, நெருக்கடிக்கு-முந்தைய போக்குகளுக்கு குறைவாக நிரந்தரமாக தங்கிவிட்டது. உற்பத்தித்திறன் வீழ்ச்சி அடைந்து வருகிறது. பணச்சுணக்கம் (Deflation) பரவலாகி உள்ளது. மேலும், மிக முக்கியமாக, உலக வர்த்தக வளர்ச்சி குறிப்பிடத்தக்களவிற்கு மெதுவாகி உள்ளது. கடந்த செப்டம்பரில் உலக வர்த்தக அமைப்பு (WTO) குறிப்பிடுகையில், 2016 இல் உலக வர்த்தக வளர்ச்சியானது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு கீழ் வீழ்ச்சி அடையுமென குறிப்பிட்டது, இது போன்று ஏற்படுவது 1982 க்குப் பின்னர் இது இரண்டாவது முறையாகும்.
உலக பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய வளர்ச்சி போக்கில் இருந்ததை விட ஒட்டுமொத்தமாக ஆறில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது என்ற உண்மையால், ஒட்டுமொத்த நிலைமை சித்திரம் போல வெளிப்படுகிறது.
இந்நிலைமைக்கான விடையிறுப்பில், உலக வர்த்தக அமைப்பு குறிப்பிட்டதைப் போல, கடந்த பத்தாண்டுகள், குறிப்பாக பிரதான பொருளாதார நாடுகள் அவற்றின் வாக்குறுதிகளில் நிற்கவியலாமல், அவை அனைத்திற்கும் முரணாக பாதுகாப்புவாத நடவடிக்கைகளை அதிகரித்தளவில் பிரயோகிப்பதைக் கண்டுள்ளன. இந்த பரந்த பொருளாதார உள்ளடக்கத்திற்குள்தான், ட்ரம்ப் மற்றும் அவரது "முதலிடத்தில் அமெரிக்கா" திட்டநிரலையும், மற்றும் ஏனைய பிரதான சக்திகளது இதேபோன்ற பொருளாதார தேசியவாத கொள்கைகளுக்கு திரும்புவதையும் நிறுத்த வேண்டும்.
பகுப்பாய்வின் இறுதியாக, நிரந்தர பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் திட்டமிடுவதற்கான அவர்களது இலாயகற்றத்தன்மைக்கு இவைதான் ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பாக உள்ளது. இதன் விளைவாக, உலகச் சந்தையானது அதிகரித்தளவில் ஒரு போர்க்களமாக மாறி வருகிறது —இந்த அபிவிருத்தி வரவிருக்கும் ஆண்டில் இன்னும் அதிக வெளிப்படையாக மாறும்.
இங்கே மலைப்பூட்டும் வரலாற்று சமாந்தரங்கள் உள்ளன. முதலாம் உலக போருக்கு இட்டுச் சென்ற பொருளாதார உடைவுக்குப் பின்னர், போருக்கு முந்தைய வளமான சகாப்தத்தை (belle époque) மீட்டமைப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிட அங்கே 1920 களின் தசாப்தத்தில் எண்ணற்ற முயற்சிகள் இருந்தன. அவை எல்லாம் தோல்வியடைந்தன, உலக சந்தையின் சுருக்கத்திற்கு பிரதான சக்திகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று எதிராக போரைக் கொண்டு விடையிறுத்தன, இது இறுதியில் இரண்டாம் உலக போருக்கு இட்டுச் சென்றது.
இன்றைய நிலைமைக்கும் 90 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைக்கும் இடையே அங்கே நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும், அடிப்படை போக்குகள் ஒன்றுபோலவே உள்ளன. உண்மையில், ஒரு சுதந்திர உலகளாவிய பொருளாதாரத்தின் அபிவிருத்தி மற்றும் ஒன்றுக்கொன்று எதிர்விரோத மோதல் கொண்ட தேசிய அரசுகளாக அது பிளவுபட்டிருப்பதற்கு இடையிலான அடிப்படை முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.
இது, பூகோளமயமாக்கத்தின் உடைவு குறித்து மார்ட்டீன் வொல்ஃப் போன்ற முதலாளித்துவ பொருளாதார விமர்சகர்களின் புலம்பல்களில் எதிரொலிக்கிறது. வெறும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், தேசிய-அரசு அமைப்புமுறையின் உடைவுக்கு சர்வதேச முதலாளித்துவ உயரடுக்குகள் மனிதயினத்தின் மீது உலகப் போர் கொடூரங்களை கட்டவிழ்த்துவிட்டு அவற்றின் விடையிறுப்பை நடைமுறைப்படுத்தியது. ஆனால் அதற்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னர், சர்வதேச தொழிலாள வர்க்கம், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையில், போல்ஷ்விக் கட்சி வழங்கிய நனவுபூர்வமான தலைமை மூலமாக அந்த நெருக்கடிக்கு அதன் விடையிறுப்பை வழங்கியது —அதாவது உலக சோசலிச புரட்சியின் முதல் அடியாக ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சி நடந்தது.
உண்மையில், வரலாற்றுப் படிப்பினைகள் உள்வாங்கப்பட வேண்டும். மனிதயினம் மற்றொரு பேரழிவைத் தடுக்க வேண்டுமானால், தற்போதைய பொருளாதார, அரசியல் ஒழுங்கமைப்பிற்கு ஆழமடைந்துவரும் சமூக எதிர்ப்பானது, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவுபூர்வமான போராட்டத்திற்குள், அதுவும் ஏதோ விதமான தொலைதூர நம்பிக்கையாக இல்லாமல், மாறாக நம்பகமான நாளாந்த நடைமுறை வேலைத்திட்டமாக மாற்றப்பட வேண்டும்.