Print Version|Feedback
Trump threats on South China Sea heighten risk of nuclear war
தென் சீனக் கடல் குறித்த ட்ரம்ப்பின் மிரட்டல்கள் அணு ஆயுதப் போரின் அபாயத்தை அதிகரிக்கின்றன
By Peter Symonds
25 January 2017
பதவியேற்று சில நாட்களில், ட்ரம்ப் நிர்வாகமானது இராணுவ மோதல்கள் மற்றும் போருக்கு அச்சுறுத்துகின்ற வகையில் தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடனான ஒரு மோதலுக்கு பாதை அமைத்திருக்கிறது.
வெளியுறவுச் செயலர் பதவிக்கு நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் எக்ஸான் மொபில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான றெக்ஸ் ரில்லர்சன், தென் சீனக் கடலில் சீனாவால் கட்டப்பட்டு வருகின்ற குறுந்தீவுகளுக்கு, சீனாவின் அணுகலை அமெரிக்கா தடை செய்யும் என முன்னர் விடுத்திருந்த திட்டவட்டங்களை, செவ்வாயன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஊடகச் செயலரான சீன் ஸ்பைசர் ஆதரித்துப் பேசினார்.
தனது முதல் முழு ஊடகச் சந்திப்பில், ஸ்பைசர் இவ்வாறாய் வெளிப்படையாய் அறிவித்தார்: “நமது நலன்கள் அங்கே பாதுகாக்கப்படுவதை அமெரிக்கா உறுதி செய்யவிருக்கிறது.” சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளைக் குறிப்பிட்டு அவர் தொடர்ந்து கூறினார்: “அத்தீவுகள் முறையாக சீனாவின் பகுதியா உண்மையில் சர்வதேச நீர்ப்பரப்பின் பகுதியா என்பது குறித்த கேள்வி அது, அவ்வாறாயின், சர்வதேசப் பிராந்தியங்கள் ஒரு நாட்டினால் கைப்பற்றப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்யவிருக்கிறோம்.”
ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களது பொறுப்பற்ற தன்மையானது வாஷிங்டன் போஸ்டின் செய்தித்தலைப்பின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டதாக இருந்தது: “ட்ரம்ப் தென் சீனக் கடலில் போருக்கு தயாராய் இருக்கிறாரா, அல்லது அவரது அணி தெளிவற்றுப் பேசுகிறதா?” தெளிவற்ற அல்லது தவறாகக் கூறிய கருத்துகள் தான் பிரச்சினை என்பதாக வாஷிங்டன் போஸ்ட் கூறிய வேளையில், ஸ்பைசரின் கருத்துகள் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்பாக ரில்லர்சன் கூறிய கருத்துக்களுடன் முழுமையாக ஒரேவரிசையில் இருந்தன.
அவரது நாடாளுமன்ற ஊர்ஜிதப்படுத்தல் அமர்வின் போது, ரில்லர்சன், சீனாவின் மீது கடுமையாக தாக்கினார், தென் சீனக் கடலில் அதன் நில மறுஉரிமை நடவடிக்கைகள் “ரஷ்யா கிரீமியாவை எடுத்துக் கொண்டதைப் போன்றது” என்று அறிவித்தார். சீனாவின் தீவுக் கட்டுமானங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்த அவர், “அந்தத் தீவுகளுக்கான அணுகல் அனுமதிக்கப்படப் போவதில்லை” என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.
ஓரளவுக்கு குறைந்தபட்சம், பிராந்திய உரிமைகோரல் மோதல்களில் எந்த நிலைப்பாடும் எடுக்காமல், ஆனால் தென் சீனக் கடலில் “தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திர”த்தை உறுதி செய்வதில் தனது “தேசிய நலன்” இருந்ததாக அறிவித்திருந்த, வாஷிங்டனின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து ஒரு தீர்மானகரமான மாற்றத்தைக் குறிப்பதாக இந்த கருத்துக்கள் இருக்கின்றன. ஒபாமா நிர்வாகத்தின் கீழ், மூன்று சந்தர்ப்பங்களின் போது, சீனத் தீவுகளைச் சுற்றி 12 கடல் மைல் பிராந்திய சுற்றுவரம்புகளுக்குள்ளாக ஆத்திரமூட்டும் வகையில் ஏவுகணை அழிப்புக் கப்பல்களை அமெரிக்க கடற்படை அனுப்பியிருந்தது.
இத்தீவுகள் மீதான சீனாவின் கட்டுப்பாட்டை ட்ரம்ப்பின் நிர்வாகம் நேரடியாக சவால் செய்கிறது. அமெரிக்கா சீன அணுகலை தடை செய்யும் அதன் அச்சுறுத்தலை எவ்வாறு முன்னெடுக்க இருக்கிறது என்று கேட்டபோது, சூழ்நிலை அபிவிருத்தி காணும்போது “அது விடயமான கூடுதல் தகவல்கள் எங்களிடம் இருக்கும்” என்று ஸ்பைசர் தெரிவித்தார்.
பல்வேறு ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல, தென் சீனக் கடலில் கடல் வழி மற்றும் வான்வழித் தடைகளை ஏற்படுத்துவது தான் சீனாவைத் தடை செய்வதற்கான ஒரே வழியாக இருக்க முடியும். சர்வதேச சட்டத்தின் ஒரு தெளிந்த மீறலாக இருக்கக் கூடிய அத்தகையதொரு நடவடிக்கை, ஒரு போர் நடவடிக்கையாகவே கருதப்படும்.
தென் சீனக் கடலில் இருக்கும் தீவுகள் “சர்வதேசப் பிராந்தியங்கள்” அல்ல, மாறாக பல்வேறு நாடுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு நீண்டகாலமாக உரிமைகோரல் சண்டைகளுக்கு ஆட்பட்டு வந்திருப்பவை ஆகும். வாஷிங்டனின் சிடுமூஞ்சித்தனமும் கபடவேடமும் திகைப்பூட்டுகின்றன. பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா மற்றும் தாய்வான் போன்ற உரிமைகோரும் போட்டி நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தீவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அது எந்த ஆலோசனையும் முன்வைக்கவில்லை.
இத்தீவுகள் விடயத்தில் சீனா “சவால் செய்ய முடியாத இறையாண்மை” கொண்டிருப்பதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் நேற்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்தது, அத்துடன் “எமது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றும் எச்சரித்தது. தென் சீனக் கடலில் அமெரிக்காவுக்கு எந்த நேரடியான உரிமைகோரலும் இல்லை என்பதை சுட்டிக் காட்டிய செய்தித்தொடர்பாளர் ஹூவா சுன்யிங் “இந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் சேதம் ஏற்படுத்துவதை தடுக்க, எச்சரிக்கையுடன் பேசவும் செயல்படவும் வேண்டும்” என்று அமெரிக்காவை வலியுறுத்தினார்.
முன்னதாக சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு தலையங்கம், சீனாவை அதன் தீவுகளை அணுக விடாமல் தடுக்கும் எந்த முயற்சியும் “பெரிய அளவிலான போர்” சம்பந்தப்பட்டதாய் இருக்கும் என்று அறிவித்ததோடு, ரில்லர்சன் “ஒரு பெரும் அணு ஆயுத சக்தியை அதன் சொந்த பிராந்தியங்களில் இருந்து பின்வாங்க வைக்க விரும்புகிறாராயின், அவர் அணுசக்தி மூலோபாயங்கள் குறித்து விடயத் தேர்ச்சி பெறட்டும்” என்றும் ஆலோசனை கூறியது.
ஒரு அணு ஆயுத சக்தியை அச்சுறுத்துவதற்கும் ஒரு அணு ஆயுத மோதல் பற்றவைப்பு அபாயத்தில் இறங்குவதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் விருப்பத்துடன் இருப்பதற்கு வெறுமனே வலது-சாரி வாய்வீச்சாளர் டொனால்ட் ட்ரம்ப் அல்லது அவரது நிர்வாகத்தில் இருக்கும் இராணுவவாத மற்றும் பாசிச தனிநபர்களின் கண்ணோட்டம் அல்லது உளவியல்நிலை தான் காரணம் என்று கூறிவிட முடியாது. ட்ரம்ப் அதிகாரத்திற்கு எழுந்தமையானது உலக அரசியலில் பண்புரீதியான ஒரு மாற்றத்தைக் குறித்து நிற்கிறது என்ற அதேவேளையில், சீனாவுடன் விஸ்வரூபமெடுக்கும் மோதலுக்கான அடிப்படையை ஒபாமா நிர்வாகத்தின் மூர்க்கமான “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யே அமைத்துத் தந்திருந்தது. இந்த “முன்னிலை” மூலோபாயத்தின் தலைமை வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஹிலாரி கிளிண்டன், வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்திருப்பாரேயானால், அவரது நிர்வாகமும், பாணியிலும் காலத்திலும் மற்றும் தந்திரோபாயத்திலும் என்ன வித்தியாசங்கள் இருக்கின்ற போதிலும், அதே போர்க் கூச்சல் பாதையையே அடிப்படையாகப் பின்பற்றியிருக்கும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதும் அமெரிக்காவால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற “சர்வதேச விதிகளின் அடிப்படையிலான முறை”க்கு சீனாவை கீழ்ப்படியச் செய்ய வைப்பதும் தான் ஒபாமாவின் “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யின் நோக்கமாக இருந்தது. ட்ரம்ப்பின் ஆலோசகர்கள் இந்த நோக்கத்தில் உடன்பாடின்மையை வெளிப்படுத்தவில்லை, மாறாக அந்த நோக்கங்களை சாதிப்பதில் “முன்னிலை” மூலோபாயம் தோல்வி கண்டதையே கடுமையாக கண்டனம் செய்து வந்திருக்கின்றனர்.
வர்த்தக மற்றும் நாணயமதிப்பு பிரச்சினைகள், இணைய-வேவு நடவடிக்கைகளாக சொல்லப்படுபவை, மற்றும் வடகொரியா மற்றும் தாய்வான் ஆகிய உலகின் மிக ஆபத்தான தீப்பற்றும் புள்ளிகளில் சில மற்றும் தென் சீனக் கடல் ஆகிய சகல விவகாரங்கள் தொடர்பாகவும் சீனாவுடன் மோதும் நோக்கம் கொண்டிருப்பதை ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே தெளிவாக்கியிருந்தார். போர் அச்சுறுத்தலுடனான தனது கோரிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவத்தை, அதன் அணுசக்தித் திறன் உள்ளிட, பரந்த அளவில் விரிவாக்குவதற்கு அவர் வாக்குறுதியளித்திருக்கிறார்.
உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஒரு அடிப்படையான முக்கிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ட்ரம்ப்பின் தேர்வானது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கு இறுதியாக முறிந்திருப்பதை மற்றும் பொறிந்திருப்பதைக் குறிக்கிறது. ஒபாமாவின் “முன்னிலை”யின் பொருளாதார மூலபாகமாய் இருந்த பசிபிக் கடந்த கூட்டை (TPP) கிழித்தெறியும் ட்ரம்ப்பின் முடிவானது, ”சுதந்திர வர்த்தகம்” மற்றும் பன்முகத்தன்மையின் சகாப்தத்தின் முடிவை அறிவிக்கிறது. ட்ரம்பின் “முதலில் அமெரிக்கா” கொள்கையின் அர்த்தம், தண்டனை வர்த்தக நடவடிக்கைகளுக்கு, முதல் நேர்வாய் சீனாவுக்கு எதிராக, திரும்புவதும், இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச் சென்ற 1930களின் “உனது-அண்டைநாட்டை-பிச்சைக்காரனாக்கு” கொள்கைகளுக்கு திரும்புவதும் ஆகும்.
ட்ரம்ப் பதவியில் அமர்ந்து விட்ட பின்னர் அவரது கண்ணோட்டங்களில் கண்ணியம் தோன்றி விடும் என்பதாக உலகெங்கிலும் ஊடகங்களாலும் அரசாங்கங்களாலும் கருதப்பட்டு வந்த ஊகம் திகைப்பாகவும் அச்சமாகவும் துரிதகதியில் மாறிக் கொண்டிருக்கிறது. முக்கிய தலைநகரங்களில், தேசிய நலனை சிறந்த வகையில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்று கணக்குகள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஐரோப்பா அதன் சொந்த நலன்களை வரையறை செய்ய வேண்டும் என ஜேர்மனியின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரான சிக்மார் காப்ரியல் அறிவித்தார், அமெரிக்கா சீனாவுடன் ஒரு வர்த்தகப் போரை தொடங்குமாயின் ஐரோப்பா சீனாவை நோக்கித் திரும்ப வேண்டும் என்று அவர் சூசகம் செய்தார். சீனாவை நோக்கிய எந்த திருப்பமும், குறிப்பாக ஐரோப்பிய சக்திகளது எந்த திருப்பமும், அமெரிக்காவின் முரட்டுத்தனமான வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தும், அது தன் புவி-அரசியல் வலுநிலை நழுவிக் கொண்டிருப்பதாக உணர்ந்து எண்ணியதை விடவும் விரைவாக செயலில் இறங்க வேண்டும் என்ற முடிவுக்கு வரும்.
இந்த மாதத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், அமெரிக்காவின் பாரம்பரியமான கூட்டாளிகளிடையே சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும் ஒரு முயற்சியில், அமெரிக்காவிற்கு நேர்மாறாய் “தாராளவாத” முதலாளித்துவ வர்த்தக மற்றும் பொருளாதார ஒழுங்கின் பாதுகாவலராக தனது ஆட்சியை முன்வைத்தார்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் CSBA (மூலோபாய மற்றும் நிதிநிலை மதிப்பீடுகளுக்கான மையம்) சென்ற வாரத்தில் “சமநிலையைப் பாதுகாத்தல்: அமெரிக்காவின் ஒரு யூரோஆசிய பாதுகாப்பு மூலோபாயம்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. யூரோஆசிய நிலப்பரப்பு ஒரு போட்டி சக்தி அல்லது சக்திகளால் மேலாதிக்கம் செய்ய்யப்படுவதை அமெரிக்கா தடுத்தாக வேண்டும் என்று அது அறிவிக்கிறது. “ஐரோப்பாவை அல்லது ஆசியாவை ஒரு ஒற்றை சக்தி மேலாதிக்கம் செய்யும் நிலைக்கு வருமானால், அது அமெரிக்காவை விடவும் கணிசமான அளவில் அதிகமான மனிதவளத்தையும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப செயல்திறனையும் - ஆகவே அதிகமான இராணுவ செயல்திறனையும் - கொண்டதாக ஆகிவிடும். ஆகவே, சாத்தியமானால், அத்தகையதொரு சக்தி எழுவது தடுக்கப்பட்டாக வேண்டும்” என்று அது தெரிவிக்கிறது.
அமெரிக்க நோக்கங்களை சாதிப்பதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட எதுவொன்றையும் அந்த அறிக்கை நிராகரிக்கவில்லை. ”வரம்புபட்ட அணு ஆயுதப் போர் பிரச்சினை குறித்து மறுசிந்தனைக்கு அவசியம் இருக்கிறது” என்று அறிவித்த பின் அது தொடர்ந்து கூறுகிறது: “யூரோஆசிய சுற்றுவட்டமெங்கிலும் பலவிதமான மூலோபாயப் போர் அவசரங்களுக்கும் பதிலிறுப்பு செய்யத்தக்க வண்ணம் அமெரிக்கப் படைகள் தயாரிப்புடன் இருந்தாக வேண்டும். அத்தகையதொரு மோதலை உடனடியாகவும் சாதகமான விதத்திலும் அத்துடன் வருங்காலத்தில் அணு ஆயுதப் பயன்பாட்டை ஊக்கம்குன்றச் செய்யும் வகையிலும் முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமெரிக்க இராணுவம் திறம் படைத்ததாயிருப்பது அமெரிக்காவின் நீண்ட-காலப் பாதுகாப்பிற்கு மிக இன்றியமையாததாக இருக்கக் கூடும்.”
தென் சீனக் கடல் தொடர்பான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தலான மிரட்டல்கள், உலகம் ஒரு அணுப் பேரழிவை நோக்கி வேகமெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்பதன் கூரிய எச்சரிக்கைகள் ஆகும். ஆயினும் உலக முதலாளித்துவத்தை உலகப் போரின் பாதையில் செலுத்துகின்ற அதே நெருக்கடி தான் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை சோசலிசப் புரட்சிக்கான பாதையில் செலுத்துவதாகவும் இருக்கிறது.
இறுதியில் இந்தப் பிரச்சினை, அரசியல் நனவு, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் மற்றும் ஒழுங்கமைப்பு ஆகியவற்றின் மட்டத்தினாலேயே தீர்மானிக்கப்படுவதாக இருக்கும், இவை தொழிலாள வர்க்கத்தில் புதிய அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவதை சார்ந்தவையாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவே அந்தத் தலைமையாகும், அது மட்டுமே ஏகாதிபத்தியப் போரின் மூலமான முதாலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் அடிப்படையில் போருக்கு எதிரான ஒர் சர்வதேச இயக்கத்தினைக் கட்டியெழுப்ப போராடிக் கொண்டிருக்கிறது. ICFI மற்றும் அதன் தேசியப் பிரிவுகளில் இணைந்து அவற்றைக் கட்டியெழுப்ப உதவுவதே அவசரஅவசியமான பணியாகும்.