Print Version|Feedback
Trump’s coming confrontation with China
சீனாவுடன் ட்ரம்ப் இன் வரவிருக்கும் மோதல்
Peter Symonds
7 January 2017
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வர்த்தக போர் மற்றும் யுத்த அபாயத்தைக் கொண்ட பொறுப்பற்ற நடவடிக்கைகள் மூலமாக எல்லா விதத்திலும்—இராஜாங்கரீதியிலும், பொருளாதாரரீதியிலும் மற்றும் இராணுவரீதியிலும்—பெய்ஜிங் உடனான வாஷிங்டனின் மோதலை துரிதமாக தீவிரப்படுத்த தயாரிப்பு செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது சீனாவிற்கு எதிரான அவரது ஆத்திரமூட்டும் பொருளாதார அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, தாய்வான், கொரிய தீபகற்பம் மற்றும் தென் சீனக் கடல் என உலகின் சில மிக அபாயகரமான வெடிப்புப்புள்ளிகளில் பெய்ஜிங் உடன் பதட்டங்களைத் தீவிரப்படுத்தும் பல தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் ட்வீட்டர் தகவல்களும் அவரிடமிருந்து வந்தன.
ட்ரம்பின் ஆக்ரோஷமான சீன-விரோத நிலைப்பாடானது, வெளிநாட்டு மற்றும் இராணுவ கொள்கையின் எதிர்கால போக்கின் மீது அமெரிக்க அரசு எந்திரம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்குள் நடக்கும் ஆழ்ந்த மோதலுடன் பிணைந்துள்ளது. சிரியா, ஈராக், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தோல்வி தழுவிய பின்னர், அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த அமெரிக்காவின் எஞ்சிய இராணுவ பலத்தை எவ்வாறு பிரயோகிப்பது, மற்றும் அதன் பிரதான போட்டியாளர்களில் யார் மீது பிரயோகிப்பது—ரஷ்யா மீதா அல்லது சீனா மீதா? என்பதே ஆளும் வட்டாரங்களில் சுழன்று கொண்டிருக்கும் கேள்வியாகும்.
மாஸ்கோ முன்னிறுத்தும் அச்சுறுத்தலை பெரிதும் ஊதிப் பெரிதாக்க மற்றும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரை பலவீனப்படுத்த, ஒரு கன்னை, ரஷ்ய ஊடுருவல் ஜனாதிபதி தேர்தலின் முடிவை ட்ரம்புக்கு சாதகமாக மாற்றியதாக கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைக் கைப்பற்றி உள்ளது. ஆனால் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக சீனாவின் வளர்ச்சியை அமெரிக்க நலன்களுக்கு மிகப் பெரிய அபாயமாக கருதும் பெருநிறுவன, அரசியல் மற்றும் இராணுவ உயரடுக்கின் ஒரு அடுக்கிற்காக ட்ரம்ப் பேசுகிறார்.
நேற்று அவர் உயர்மட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளைச் சந்திக்க தயாரான போது, ட்ரம்ப் மீண்டுமொருமுறை ரஷ்ய ஊடுருவல் குறித்த குற்றச்சாட்டுக்களைக் குறைத்துக்காட்டி, அதற்கு பதிலாக ஒருமுனைப்பை சீனாவின் பக்கம் திருப்பினார். “ஒப்பீட்டளவில் சமீபத்தில், சீனா 20 மில்லியன் அரசாங்க முகவர் பெயர்களை ஊடுவியது,” என்று நியூ யோர்க் டைம்ஸ் க்கு தெரிவித்ததன் மூலம், இரண்டாண்டுகளுக்கு முன்னர் தனிநபர் மேலாண்மை கணினிகளது அமெரிக்க அலுவலகத்தின் பாதுகாப்பு முறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதைக் குறிப்பிடுகிறார். “ஏன் அது குறித்து ஒருவரும் பேசுவதே இல்லை? அதுவொரு அரசியல் வேட்டையாடல்,” என்றார்.
உள்சண்டை தீவிரமாக இருந்தாலும், அவை தந்திரோபாயத்தில் தான் பிளவுபட்டுள்ளன. ட்ரம்பின் "முதலிடத்தில் அமெரிக்கா" எனும் தீவிர தேசிய வெறித்தனம், தெளிவாக அவர் நிர்வாகம் ரஷ்யா உட்பட எந்தவொரு போட்டியாளர்களிடம் இருந்தும் அமெரிக்க பலத்திற்கு எந்தவொரு சவாலையும் சகித்துக் கொள்ளாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அமெரிக்க நலன்களுக்கு சீனாவை அடிபணிய வைப்பதை நோக்கமாக கொண்ட ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்", பிரதான பொருளாதார ஆயுதமான பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையை (TPP), பதவியேற்கும் முதல் நாளிலேயே முடிவுக்குக் கொண்டு வருவதென்ற அவர் உள்நோக்கத்தை ட்ரம்ப் ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளார். எவ்வாறிருப்பினும் TPP ஐ கிழித்தெறிவதன் நோக்கம், இன்னும் ஆக்ரோஷமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதை அமைப்பதற்காகும். ட்ரம்ப் சீனாவை ஒரு செலாவணி மோசடியாளராக முத்திரைக் குத்த மற்றும் சீன பண்டங்கள் மீது 45 சதவீத இறக்குமதி வரி விதிக்க அச்சுறுத்தி உள்ளார்.
வெள்ளை மாளிகையில் வாணிகத்துறை செயலராக வில்பர் ரோஸை, அமெரிக்க வர்த்தகத்துறை செயலராக Robert Lighthizer மற்றும் புதிய தேசிய வர்த்தக கவுன்சிலின் தலைவராக பீட்டர் நவார்ரோவை நியமித்திருப்பது உள்ளடங்கலாக, வர்த்தக கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு சீன-விரோத போர்வெறி கொண்ட மற்றும் பொருளாதார தேசியவாதிகளின் ஒரு கூட்டத்தை ட்ரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்க வரி விதிப்புகளுக்கு சீனா பதிலடி கொடுக்குமென மூத்த சீன அதிகாரிகள் அவருக்கு தெரிவித்திருப்பதாக நேற்று பைனான்சியல் டைம்ஸ் க்கு கூறுகையில் தற்போதைய அமெரிக்க வாணிபத்துறை செயலர் Penny Pritzker தெரிவித்தார். அங்கே "கடுமையாக இருப்பதற்கும் ஒரு வர்த்தக போருக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு" இருப்பதாக அப்பெண்மணி எச்சரித்தார்.
ட்ரம்பின் வர்த்தக போர் அச்சுறுத்தல்கள், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை மாற்றுவதற்கான ஒரு பெரும்பிரயத்தன முயற்சியாகும். ரோஸ், நவார்ரோ மற்றும் லைதிஜைர் போன்ற கருத்தியலாளர்கள் சீனா நியாயமின்றி வர்த்தகம் செய்வதாகவும், அமெரிக்க வேலைகளைத் திருடுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றன. சீனா 2001 இல் உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததில் இருந்து, உலகளாவிய பண்டங்கள் ஏற்றுமதியில் சீனாவின் பங்கு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது, அதேவேளையில் அமெரிக்க பங்கு 30 சதவீதம் சரிந்துள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த வேகமான மாற்றம், உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக சீனாவின் எழுச்சியால், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவின் பல மிகப் பெரிய பெருநிறுவனங்கள் உட்பட உலகளாவிய பெருநிறுவனங்களால் உந்தப்பட்டதாகும்.
வர்த்தக விதிமுறைகளை உடைப்பதாக பெய்ஜிங்கை குற்றஞ்சாட்டுகின்ற அதேவேளையில், ட்ரம்ப் சீனாவிற்கு எதிராக தண்டிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாரிப்பு செய்கிறார், அது உலக வர்த்தக அமைப்பின் நியதிகளுக்கு இயங்கி இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே வர்த்தக போரின் வெடிப்பானது, சீனாவில் பணயம் வைத்துள்ள ஏனைய நாடுகளையும் உள்ளிழுத்து, உலக வர்த்தகம் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி, உலகளாவிய பொருளாதாரம் முழுவதையும் எதிரொலிக்கும். சர்வதேச வர்த்தக விதிமுறைகளை வகுக்க இனியும் பொருளாதார பலமின்றி, அமெரிக்கா ஏற்கனவே ஆசியாவல் அதன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்த, அதுவும் அது சீனாவுடன் போருக்கு இட்டுச் சென்றாலும் கூட, மிக வேகமான இராணுவ கட்டமைப்பைத் தொடங்கி உள்ளது.
ட்ரம்ப் மற்றும் அவர் ஆலோசகர்கள் ஒபாமா "முன்னெடுப்பின்" நோக்கத்தை அல்ல மாறாக அதன் செயல்படுத்த முடியா நிலையைத் தான் விமர்சித்துள்ளனர். அவர்கள் இன்னும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை வழங்குகிறார்கள். ட்ரம்ப் அமெரிக்க இராணுவத்தில் 90,000 வரையிலான சிப்பாய்களையும், கடற்படையின் 40 கப்பல்களை 350 ஆக விரிவாக்கவும் சூளுரைத்துள்ளார். “350 எண்ணிக்கையில், சீனா பசிபிக்கில் எங்களுக்கு இணையாக முடியாது,” என்று நவம்பரில் ட்ரம்ப் ஆலோசகர் ரூடி யூலியானி பெருமைப்பீற்றி உள்ளதுடன், அனைத்திற்கும் மேலாக கடற்படை விரிவாக்கம் சீனாவிற்கு எதிராக நோக்கம் கொண்டுள்ளது.
வெளியுறவு கொள்கை திட்டநிரலில் வட கொரியா முதன்மை இடத்தில் வைக்கப்படும் என்பதை ஏற்கனவே ட்ரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார். அமெரிக்க கண்டத்தை எட்டும் தகைமை கொண்ட ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பரிசோதிக்க வட கொரியா தயாரிப்பு செய்து வருவதாக அதன் அறிவிப்புக்கு, ட்ரம்ப், “அது நடக்காது" என்று திட்டவட்டமாக அறிவித்து இவ்வார ஆரம்பத்தில் விடையிறுத்தார். அதைத் தொடர்ந்து அவர் சீனா "வட கொரியாவிற்கு உதவுவதை" நிறுத்தாததற்காக அதை அவர் விமர்சித்தார்—வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பியொங்யாங் அதன் அணுஆயுதங்களை இல்லாதொழிக்க வேண்டுமென்ற அமெரிக்க கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய அதனை பொருளாதாரரீதியில் மிரட்டுவதாகும். வட கொரியாவிற்கு எதிராக குறிப்பிடாத நடவடிக்கையைக் கொண்டு அச்சுறுத்துவதன் மூலமாக, ட்ரம்ப் பியொங்யாங்கின் ஒரே கூட்டாளியான சீனாவைக் கவனத்தில் கொண்டு வருகிறார்.
மிக அடிப்படையாக, ட்ரம்ப் 1979 க்குப் பின்னர் இருந்து அமெரிக்க-சீன உறவுகளின் ஒட்டுமொத்த அடித்தளத்தை—அதாவது தாய்வான் உட்பட மொத்த சீனாவிற்கும் பெய்ஜிங்கை ஒரே சட்டப்பூர்வ ஆட்சியாளராக அங்கீகரிக்கும் வாஷிங்டனின் ஒரே சீனா கொள்கையைத் தகர்க்க அச்சுறுத்தி உள்ளார். அவர் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்னிடமிருந்து கடந்த மாதம் ஒரு தொலைப்பேசி அழைப்பை ஏற்றதன் மூலம், சீன ஆட்சியை கோபமூட்டினார்—இது அண்மித்து நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் தாய்வான் தலைவர்களுக்கு இடையிலான முதல் நேரடி தொடர்பாக இருந்தது.
தாம் ஒரே சீனா கொள்கைக்கு கட்டுப்பட்டிருப்பதாக உணரவில்லையென அவர் அறிவித்ததன் மூலம், ட்ரம்ப் வர்த்தகம் மற்றும் வட கொரியா விவகாரங்களில் மட்டுமல்ல, மாறாக "அவர்கள் தென் சீனக் கடலின் மத்தியில் ஒரு பாரிய படையரணைக் கட்டமைத்து செய்யக்கூடாததை செய்து கொண்டிருப்பதற்காகவும்" சீனாவை விளாசினார். அவர் தென் சீனக் கடலில் சீனாவை இன்னும் அதிக ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளவிருப்பதையே அவர் கருத்துக்கள் சமிக்ஞை செய்கின்றன, அங்கே ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே கடல் போக்குவரத்து நடவடிக்கைகளின் சுதந்திரம் என்றழைக்கப்படுவதன் மீது சீனா உரிமைகோரும் கடல் எல்லைகளுக்குள் அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்பியதன் மூலம் கடற்படை மோதல் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர் போருக்குத் தயாரிப்பு செய்து வருவதைக் குறித்து அங்கே ஏதேனும் ஐயமிருந்தால், கிறிஸ்துமஸ் க்கு முந்தைய ட்ரம்பின் ட்வீட் செய்தியான அமெரிக்கா "அதன் அணு [ஆயுத] ஆற்றலை விரிவாக்கி பிரமாண்டமாக பலப்படுத்தப்பட" வேண்டும் என்பது அவரது பொறுப்பற்ற மற்றும் இராணுவவாத உள்நோக்கத்தின் சிலிப்பூட்டும் எச்சரிக்கையாகும். ட்ரம்ப் மற்றும் அவர் ஆலோசகர்கள் கூறும் வர்த்தகப் போரின் தர்க்கம், அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போரை நோக்கிய தவிர்க்கவியலாத பாய்ச்சலாக உள்ளது. போரை முன்னுக்குக் கொண்டு வரும் சமூக ஒழுங்கமைப்பான முதலாளித்துவம் மற்றும் போட்டி தேசிய அரசுகளாக உலகை பிளவுபடுத்தி உள்ள அதன் பழமைப்பட்ட பிளவுமுறை ஆகியவற்றிற்கு முடிவு கட்ட ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஐக்கியப்பட்ட ஒரு சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே, போர் உந்துதலைத் தடுக்க தகைமை கொண்ட ஒரே சமூக சக்தியாகும்.