Print Version|Feedback
Socialism and the centenary of the Russian Revolution: 1917-2017
சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017
By David North and Joseph Kishore
3 January 2017
1. உலக முதலாளித்துவத்தை ஒரு ஆவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது: அது ரஷ்ய புரட்சி என்னும் ஆவியாகும்.
இந்த ஆண்டானது, ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சியுடன் தொடங்கி, விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் போல்ஷ்விக் கட்சியால் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு அரசியல் அதிகாரம் கைப்பற்றப்பட்ட ”உலகை உலுக்கிய பத்து நாட்களுடன்” அக்டோபரில் உச்சகட்டத்தை அடைந்த 1917ன் உலக-வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளின் நூறாவது ஆண்டை குறித்து நிற்கிறது. 150 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் முதலாளித்துவம் தூக்கிவீசப்பட்டு வரலாற்றின் முதல் சோசலிச தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்பட்டமையானது, இருபதாம் நூற்றாண்டின் மிகவும் நீண்டகால விளைவுகளைக் கொண்ட நிகழ்வாக இருந்தது. அதற்கு வெறும் 70 ஆண்டுகளுக்கு முன்பாக கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடரிக் ஏங்கல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பிரகடனம் செய்திருந்த வரலாற்று முன்னோக்கினை, இது நடைமுறையில் நிரூபணம் செய்து காட்டியது.
ஒரு வருட காலத்தில், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி, தனக்குப் பின்னால் பத்து மில்லியன் கணக்கான விவசாயிகளை அணிதிரட்டி, நூற்றாண்டுகளாய் இருந்திருந்த ஒரு அரை-நிலபிரபுத்துவ எதேச்சாதிகார பரம்பரை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது மட்டுமல்ல. ரஷ்யா “சாரில் இருந்து லெனினுக்கு” அசாதாரண பாய்ச்சல் கண்டமையானது, தொழிலாளர்’ சபைகளின் (சோவியத்துகள்) அடிப்படையிலான ஒரு அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டமை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் முதலாளித்துவத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் ஒடுக்கப்பட்டிருந்த தொழிலாள வர்க்கம் மற்றும் பரந்த மக்களின் நனவை உயர்த்திய ஒரு உலக சோசலிச புரட்சியின் ஆரம்பத்தை குறித்து நின்றது.
முதலாம் உலகப் போரின் படுபயங்கர படுகொலைகளுக்கு மத்தியில் வெடித்திருந்த ரஷ்ய புரட்சியானது, முதலாளித்துவத்திற்கு அப்பால் சுரண்டலும் போரும் இல்லாத ஒரு உலகின் சாத்தியத்தை நிரூபணம் செய்திருந்தது. 1917 மற்றும் அதன்பின் வந்த நிகழ்வுகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நனவிற்குள் ஆழமாக ஊடுருவியதோடு உலகெங்கிலும் அலையென எழுந்த இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர போராட்டங்களுக்கு அத்தியாவசியமான அரசியல் உத்வேகத்தை வழங்கியது.
2. 1917 இல் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்துக்கான தனது போராட்டத்தின் அடிப்படையாக ஒரு சர்வதேச முன்னோக்கினைக் கொண்டிருந்தது. போல்ஷிவிக் கட்சி ரஷ்யாவில் சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடித்தளமானது இறுதி ஆய்வில், உலக ஏகாதிபத்திய அமைப்புமுறையின் சர்வதேசிய முரண்பாடுகளில், எல்லாவற்றுக்கும் மேல், காலாவதியாகிப்போன தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் நவீன உலக பொருளாதாரத்தின் மிகவும் ஒருங்கிணைந்த தன்மைக்கும் இடையிலான மோதலில் அமைந்திருந்தது என்பதை நன்கு உணர்ந்திருந்தது. ஆகவே, ரஷ்ய புரட்சியின் தலைவிதியானது தொழிலாளர்’ அதிகாரத்தை சோவியத் ரஷ்யாவின் எல்லைகளை தாண்டி விரிவுபடுத்துவதை சார்ந்திருந்தது. இதனை ட்ரொட்ஸ்கி மிகவும் தெளிவுபட பின்வருமாறு விளக்குகின்றார்:
தேசிய வரம்புகளுக்குள்ளாக சோசலிச புரட்சி பூர்த்தியடைவதென்பது நினைத்துப்பார்க்க முடியாததொன்றாகும். முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, அதனால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகள் இனியும் தேசிய அரசின் கட்டமைப்புக்குள் இணங்கிச் செல்ல முடியாததாக இருக்கின்றது என்ற உண்மையாகும். இதிலிருந்துதான், ஒருபக்கத்தில் ஏகாதிபத்திய போர்களும், இன்னொரு பக்கத்தில் முதலாளித்துவ ஐரோப்பிய ஐக்கிய அரசுகள் என்ற கற்பனாவாதமும் பின்தொடர்கின்றன. சோசலிச புரட்சியானது, தேசிய அரங்கில் ஆரம்பித்து, சர்வதேச அரங்கில் கட்டவிழ்ந்து, உலக அரங்கில் பூர்த்தியடைகின்றது. இவ்வாறாக, சோலிசப் புரட்சியானது அந்த வார்த்தையின் ஒரு புதிய மற்றும் விரிந்த அர்த்தத்தில் ஒரு நிரந்தர புரட்சியாக ஆகிறது: நமது ஒட்டுமொத்தக் கோளத்திலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில்தான் அப்புரட்சியானது முழுமை பெறுகிறது. [நிரந்தரப் புரட்சி (லண்டன்: நியூ பார்க் பப்ளிகேஷன்ஸ், 1971), பக். 155]
3. இருபதாம் நூற்றாண்டில் போல்ஷிவிக் கட்சியின், சோவியத் ஒன்றியத்தின் மற்றும் சோசலிசப் புரட்சியின் தலைவிதியானனது இரண்டு சமரசமற்ற எதிரெதிர் முன்னோக்குகளிடையேயான மோதலின் முடிவின் மீது தொங்கிக் கொண்டிருந்தது: 1917 மற்றும் சோவியத் ஒன்றியத்தின் முதலாம் ஆண்டுகளின் போது லெனின், ட்ரொட்ஸ்கியால் வெற்றிகாணப்பட்ட புரட்சிகர சர்வதேசியவாதம், மற்றும் சோவியத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தைத் தட்டிப்பறித்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பிற்போக்குத்தனமான தேசியவாத வேலைத்திட்டம் ஆகியவையே அந்த இரு முன்னோக்குகளாகும். பல தசாப்தகால அதிகாரத்துவ சர்வாதிகாரம் மற்றும் தவறான ஆட்சிக்கு பின்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதிலும் ரஷ்யாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதிலும் உச்சம் கண்டதான சோவியத் ஒன்றியத்திற்குள்ளான நாசகரமான பொருளாதாரக் கொள்கைகளுக்கும், தொழிலாள வர்க்கத்தின் துயரகரமான சர்வதேச அரசியல் தோல்விகளுக்கும் அடித்தளமாக ஸ்ராலினின் “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற மார்க்சிச-விரோத முன்னோக்கு இருந்தது.
ஆயினும் சோவியத் ஒன்றியத்தின் முடிவானது, ரஷ்ய புரட்சியையோ அல்லது மார்க்சிச தத்துவத்தையோ செல்லுபடியற்றதாக்கி விடவில்லை. உண்மையில், புரட்சி மீதான ஸ்ராலினிசக் காட்டிக்கொடுப்புக்கு எதிரான தனது போராட்டத்தின் பாதையில், லியோன் ட்ரொட்ஸ்கி “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற தேசியவாத வேலைத்திட்டத்தின் பின்விளைவுகளை முன்கணித்திருந்தார். ஸ்ராலினிச அதிகாரத்துவம் தூக்கிவீசப்பட்டு, சோவியத் ஜனநாயகம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டு, உலக முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கிவீசுவதற்கான போராட்டம் புதுப்பிக்கப்படுவதன் மூலமாக மட்டுமே சோவியத் ஒன்றியத்தின் அழிவு தடுத்து நிறுத்தப்பட முடியும் என்று ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலம் எச்சரித்தது.
4. ஏகாதிபத்திய தலைவர்களும் அவர்களது சித்தாந்த உடந்தையாளர்களும் 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்களில் எவருமே இதனை முன்னெதிர்பார்த்திருக்கவில்லை என்ற உண்மையும் கூட அதன் “தவிர்க்கவியலா தன்மை” குறித்து அவர்கள் பிரகடனம் செய்வதை தடுத்து விட முடியவில்லை. தங்கள் மூக்குகளைத் தாண்டி எதையும் காணமுடியாத அவர்கள், தங்களது ஒட்டுமொத்தமான வர்க்க அகம்பாவத்திற்கு பொருத்தமான ஒரு விதத்தில் இருபதாம் நூற்றாண்டிற்கு மறுபொருள்விளக்கம் கொடுக்கின்ற தத்துவங்களை மேலும் மேம்படுத்தினர். ஆளும் உயரடுக்குகள் மற்றும் அவர்களது கல்விச்சாலை கூலியாட்களின் சுய-ஏமாற்று அபத்தம் மற்றும் முட்டாள்தனம் அத்தனையும் தனது மிக அடிப்படையான வெளிப்பாட்டை பிரான்சிஸ் ஃபுக்குயாமாவின் “வரலாற்றின் முடிவு” ஆய்வறிக்கையில் கண்டது. அக்டோபர் புரட்சியானது, இயல்பானதும், ஆகவே காலவரையறை இல்லாததுமான முதலாளித்துவ-மூலதன வரலாற்றின் பாதையில் ஒரு தற்செயலான விலகலைத்தவிர வேறொன்றுமில்லை என்று அவர் வாதிட்டார். முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வடிவில் மனிதகுலமானது அபிவிருத்தியின் மிக உயர்ந்த மற்றும் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டிருந்தது என்றார். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை தொடர்ந்து, தொழிலாளர்’ அதிகாரத்தின் அடிப்படையில் மற்றும் உலகப் பொருளாதாரத்தை சோசலிச ரீதியாக மறுஒழுங்கமைப்பு செய்வது என்ற சிந்தனை ஒரு பக்கம் இருக்கட்டும், முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்று என்பதைக்கூட சிந்தித்து பார்க்கமுடியாது என்றார்.
ஆயுள்முழுவதும் ஒரு ஸ்ராலினிஸ்டாக இருந்திருந்த வரலாற்றாசிரியரான எரிக் ஹோப்ஸ்வாம் ஃபுக்குயாமாவின் வெளிப்பாட்டை வழிமொழிந்து அக்டோபர் புரட்சியை நிராகரித்தார், இவ்விடயத்தில் இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர மற்றும் எதிர்ப்புரட்சிகர எழுச்சிகளை துரதிர்ஷ்டமான விபத்துகளாய் முன்வைத்தார். 1914 (முதலாம் உலகப் போர் வெடிப்பைக் கண்ணுற்ற ஆண்டு)க்கும் 1991(சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு)க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் ”குறுகிய இருபதாம் நூற்றாண்டை”க் கொண்ட தவறாய் வழிநடாத்தப்பட்ட “அதீதங்களின் காலம்” ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. வருங்காலம் என்ன கொண்டுவர இருக்கிறது என்பதையோ இருபத்தியோராம் நூற்றாண்டு குறுகியதாக இருக்குமா அல்லது நீண்டதாக இருக்குமா என்பதையெல்லாம் குறித்து தனக்கு எதுவும் தெரிந்ததாக ஹோப்ஸ்வாம் கூறவில்லை. ஒரு விடயத்தில் அவர் நிச்சயமாய் இருந்தார்: 1917 நிகழ்வுகளுடன் எந்த வகையிலும் ஒப்பிடத்தக்கதான ஒரு சோசலிசப் புரட்சி இனி ஒருபோதும் வரப் போவது கிடையாது.
5. ஃபுக்குயாமா “வரலாற்றின் முடிவை” பிரகடனம் செய்து இருபத்தியைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு விட்டதாகக் கருதப்பட்ட ஆளும் வர்க்கத்திற்கு, முதலாளித்துவம் அது விரும்பிய வகையில் சூறையாட அனுமதிக்கப்படும் பட்சத்தில் அதனால் என்ன சாதிக்க முடியும் என்பதை காட்ட ஒரு சந்தர்ப்பம் கிட்டியிருந்தது. ஆனால் அதன் களியாட்டங்களின் விளைவு என்னவாய் இருக்கிறது? அவற்றின் சாதனைகளின் ஒரு சிறிய பட்டியலை எடுத்தால் அதில் பின்வருவன இடம்பெற்றிருக்கும்: உலகின் மக்கள்தொகையில் ஒரு கடுகளவு எண்ணிக்கையிலானோரிடம் இழிவான வகையில் செல்வம் குவிந்திருப்பது; பரந்த சமூக சமத்துவமின்மையும், பாரிய வறுமையும்; மில்லியன் கணக்கான உயிர்களை பலிகொண்ட முடிவற்ற மூர்க்கத்தன போர்கள்; அரசின் ஒடுக்குமுறை அமைப்புக்கள் இடைவிடாது வலுப்படுத்தப்படுவது மற்றும் ஆட்சியின் ஜனநாயக வடிவங்கள் சிதைவு காண்பது; படுகொலையும் சித்திரவதையும் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை கருவிகளாக ஸ்தாபிக்கப்பட்டிருப்பது; மற்றும் கலாச்சாரத்தின் ஒவ்வொரு அம்சமும் பொதுவாக சீரழிந்து கிடப்பதன் விளைவு ஆகியனவாகும்.
6. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு கால் நூற்றாண்டு காலத்திற்கு பின்னர், ஒட்டுமொத்த உலகமும் ஒரு ஆழமான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்குள் நுழைந்திருக்கிறது என்பதை மறுப்பது சாத்தியமில்லை. கடந்த நூற்றாண்டின் தீர்க்கப்படாத அத்தனை முரண்பாடுகளும் வெடிப்பு மிகுந்த சக்தியுடன் உலக அரசியலின் மேற்பரப்புக்கு மீண்டும் எழுந்து கொண்டிருக்கின்றன. 1917 இன் நிகழ்வுகள் ஒரு புதிய மற்றும் தீவிர சமகால பொருத்தத்தை பெற்று வருகின்றன. ஏராளமான பிரசுரங்களில் முதலாளித்துவ வருணனையாளர்கள் 2017 இன் உலகத்திற்கும் 1917 இன் உலகத்திற்கும் இடையிலான சமாந்திரமான நிலைமைகளை பற்றி பதட்டத்துடன் எடுத்துக்காட்டுகின்றனர்.
"போல்ஷித்தன்மை திரும்புகிறது” என்று எகானாமிஸ்ட் இதழின் புத்தாண்டு முன்னோட்ட கட்டுரையில் அட்ரியான் வூல்ட்ரிட்ஜ் எச்சரிக்கிறார். “ரஷ்ய புரட்சியை உருவாக்கிய உலகத்துடனான ஒற்றுமையான தன்மைகள் மிகவும் நெருக்கமாக இருப்பதை உறுதியாக உணர்ந்துகொள்கின்றன.” அவர் எழுதுகிறார்: “இது துன்பகரமான நூற்றாண்டு தினங்களின் ஒரு காலம். முதலில், 2014 இல், தாராளவாத ஒழுங்கை அழித்த முதலாம் உலகப் போர் வெடிப்பின் நூறாவது ஆண்டு வந்தது. பின் 2016 இல், இராணுவ வரலாற்றின் மிகவும் இரத்தம்பாய்ந்த மோதல்களில் ஒன்றான Somme யுத்தத்தின் நூற்றாண்டு வருடம் வந்தது. 2017 இல், அது ரஷ்யாவில் லெனின் அதிகாரத்தை கைப்பற்றிய 100வது ஆண்டாக இருக்கும்.”
வேறு யாருமல்ல ஃபுக்குயாமாதான், ஒரு காலத்தில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் புனித பீடமாக அவர் புகழ்ந்த அமெரிக்காவை, ஒரு “தோல்வியுற்ற அரசு” என்று இப்போது விவரிக்கிறார். அவர் எழுதுகிறார், “அமெரிக்க அரசியல் அமைப்புமுறை செயலிழந்து விட்டிருக்கிறது” அத்துடன் “நன்கு-ஒழுங்கமைந்த உயரடுக்கினர் தமது நலன்களை பாதுகாப்பதற்காக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வந்ததால் சமீபகாலத்தில் அது சிதைவுக்கும் ஆட்பட்டிருக்கிறது.” இறுதியாக ஃபுக்குயாமா இவ்வாறு எச்சரிக்கிறார்: “ஒரு தலைமுறைக்கு முன்பாக கம்யூனிசத்தின் வீழ்ச்சியுடன் ஒப்பிடத்தக்கவகையான ஒரு அரசியல் குழப்பமான காலத்தின் ஊடாக நாம் வாழ்ந்து கொண்டிருப்பதன் சாத்தியத்தை நம்மால் முன்கூட்டி நிராகரித்து விட முடியாது.”
7. உலக முதலாளித்துவத்தை பொறுத்தவரை, 2016 ஆம் ஆண்டு நரகத்திலிருந்து வந்ததாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் நிறைவு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிந்தைய காலங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த உலக அரசியலின் அத்தனை கட்டமைப்புகளும் சிதறுண்டுபோதலின் ஒரு முன்னேறிய நிலையில் இருக்கின்றன. பொருளாதார பூகோளமயமாக்கலின் விடாதுமுன்னேறும் நிகழ்ச்சிப்போக்குகளுக்கும் தேசிய அரசின் தளைகளுக்கும் இடையிலான முரண்பாடு உலக அரசியலை இயக்கிக் கொண்டிருக்கிறது. பிரெக்ஸிட் வாக்களிப்பு மற்றும் அதி வலது-சாரி தேசியவாதக் கட்சிகளின் வளர்ச்சி ஆகியவற்றில் உதாரணம் வெளிப்பட்டவாறாக 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய உடைவின் வேகப்படல் ஆண்டாகவும் இருந்தது.
கடந்த ஆண்டு இராணுவ பதட்டங்கள் இடைவிடாது தீவிரப்படலையும் கண்டது, எண்ணற்ற புத்தகங்கள், சிற்றிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் ஒரு மூன்றாம் உலகப் போரின் சாத்தியம் -அல்லது இன்னும் அநேகசாத்தியம்- குறித்து பகிரங்கமாக விவாதிக்கப்படும் மட்டத்திற்கு இது இருந்தது. உலகெங்கிலுமான எண்ணற்ற பிராந்திய பதட்டங்கள் மேலும்மேலும் அதிகமாக பெரும், அணுஆயுத சக்திகளிடையேயான நேரடியான மற்றும் பகிரங்கமான மோதலாய் அபிவிருத்தி கண்டு வருகின்றன. யார் யாருடன் சண்டையிடுவார்கள் என்பதை யாராலும் கூற முடியாத நிலை இருக்கிறது. அமெரிக்கா முதலில் சீனாவுக்கு எதிராக களமிறங்குமா, அல்லது அந்த மோதல் ரஷ்யாவுடன் கணக்குத் தீர்க்கப்பட்டு முடியும் வரை தள்ளிவைக்கப்படுமா? இதுதான் அமெரிக்க அரசின் உயர் வட்டங்களுக்குள்ளான கடுமையான மூலோபாய விவாதம் மற்றும் மோதலுக்கான கருப்பொருளாக இப்போது இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நெருக்கமான கூட்டாளிகளது மத்தியிலும் கூட, புவியரசியல் மற்றும் பொருளாதாரப் போட்டியின் உரசலானது கூட்டணிகளை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. ஜேர்மனி அதன் பொருளாதார வலிமையை இராணுவ வலிமையாக மாற்றம் செய்ய முனைந்து கொண்டிருப்பதோடு அதன் நாஜிக்குப் பிந்தைய “அமைதிவாதத்தின்” கடைசி சுவடுகளையும் கைகழுவிக் கொண்டிருக்கிறது.
8. உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியானது அதன் மிகவும் முன்னேறிய வெளிப்பாட்டை அதன் வெகு மையமான அமெரிக்காவில் காண்கிறது. வேறெந்த நாட்டையும் விட அதிகமாய், அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பிரதான ஆதாயதாரராக தன்னைக் கருதியது. அமெரிக்கா சவாலற்ற மேலாதிக்க சக்தியாக செயல்படக் கூடிய வகையிலான ஒரு “புதிய உலக ஒழுங்கு” பிறந்து விட்டதாக ஜனாதிபதி முதலாம் புஷ் உடனடியாகப் பிரகடனம் செய்தார். தனது இராணுவ வலிமைக்கு இணையற்ற நிலையில், அமெரிக்காவானது உலகை தனது சொந்த நலன்களுக்கு ஏற்ப மறுசீரமைத்துக் கொள்ளும் வகையில் “ஒற்றைத்துருவ தருண”த்தை சுரண்டிக் கொள்ள எண்ணியிருந்தது. அதன் மூலோபாயவாதிகள் வெறுமனே ஒரு புதிய அமெரிக்க நூற்றாண்டை அல்ல, மாறாக அமெரிக்க நூற்றாண்டுகளின் கனவுகளுக்கு இடமளித்தனர்! முன்னிலை வெளியுறவுக் கொள்கை மூலோபாயவாதிகளில் ஒருவரான ரோபர்ட் கப்ளனின் வார்த்தைகளில் சொல்வதானால்:
நமது வெளியுறவுக் கொள்கை அதிக வெற்றிகரமாக ஆகும்போது, உலகில் அமெரிக்காவுக்கு கூடுதல் அனுகூலம் கிட்டும். இவ்வாறாக, வருங்கால வரலாற்றாசிரியர்கள் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் அமெரிக்காவை திரும்பிப் பார்க்கையில் அதனை ஒரு சாம்ராஜ்யமாகவும் அதேசமயத்தில் ஒரு குடியரசாகவும் காண்பார்கள் - ரோம் அல்லது வரலாற்றின் ஒவ்வொரு பிற சாம்ராஜ்யத்தில் இருந்து அது எத்தனை வேறுபட்டதாக இருப்பினும் கூட. தசாப்தங்களும் நூறாண்டுகளும் முன்செல்ல முன்செல்ல, அமெரிக்காவின் வரலாற்றில் நாற்பத்தி மூன்றுக்குப் பதிலாக நூறு அல்லது இன்னும் 150 கூட ஜனாதிபதிகள் இருந்து வந்திருக்கக் கூடிய நிலையில், அவர்கள் ரோமன், பைசாண்டின், ஒட்டமான் போன்ற கடந்த கால சாம்ராஜ்யங்களின் ஆட்சியாளர்களை போன்ற நெடிய பட்டியல்களில் இடம்பெறுவர், பழைமையுடனான ஒப்பீடு குறைவதைக் காட்டிலும் அதிகப்படலாம். குறிப்பாக, ரோம், ஒரு ஒழுங்கற்ற உலகில் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்காவது ஒழுங்கை உருவாக்கியதற்காக மேலாதிக்க சக்திக்கான ஒரு முன்மாதிரியாக இருக்கிறது... [Warrior Politics: Why Leadership Demands a Pagan Ethos (New York: Random House, 2002), p. 153.]
9. 2002 இல் எழுதப்பட்ட சாம்ராஜ்யத்திற்கான கப்ளனின் இந்த புகழ்ப்பாட்டு, அமெரிக்க ஆளும் வர்க்கம் “பயங்கரவாதத்தின் மீதான போரை” தொடங்கி 2003 இல் ஈராக் மீதான இரண்டாவது படையெடுப்புக்கு அது தயாரிப்பு செய்த சமயத்தில் அங்கு நிலவிய அரை-நிலைதடுமாறிய மனோநிலைக்கு சாட்சியமளிப்பதாக இருக்கிறது. நெருங்கி கொண்டிருந்த பாதாளத்தை ஒரு வானவில்லாக அமெரிக்க ஆளும் வர்க்கம் தவறாய் புரிந்து கொண்டது. ”ஒற்றைத்துருவ தருணம்” என்பது உண்மையில் வரலாற்றின் சிற்சிறு இடைவெளிக்காலங்களில் மிகச்சிறிய ஒன்று என்பதற்கு மேல் ஏதுமில்லை என்பதாக நிரூபணமானது, புதிய “அமெரிக்க நூற்றாண்டு” ஒரு தசாப்தத்திற்கும் குறிப்பிடத்தக்க அளவு குறைவான காலத்திற்கே நீடித்தது.
சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் காட்டிய பரவசமிக்க பிரதிபலிப்பானது வரலாற்றுச் சூழலை அழிவுகரமான விதத்தில் தவறாகப் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தியது. ஆளும் உயரடுக்கினர் அமெரிக்காவின் பொருளாதார வல்லமை பல தசாப்தங்களாய் வீழ்ச்சியடைவதிலிருந்து மீண்டுகொள்வதற்காக, இதுவரை சோவியத் பதிலடியின் அபாயத்தினால் தடைப்பட்டிருந்த தங்களது இராணுவ வலிமையை பயன்படுத்த முடியும் என்று தங்களுக்குத் தாங்களே நம்பிக்கையூட்டிக் கொண்டனர். இந்த தவறான கணக்கு, ஒரு அழிவுக்கு அடுத்து இன்னொன்றுக்காய் இட்டுச் சென்ற உலகெங்கிலுமான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் பாரிய அளவில் தீவிரப்படுத்துவதற்கான அடிப்படையை உருவாக்கியது. 9/11க்கு பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர், மோசடியான “பயங்கரவாதத்தின் மீதான போர்” மத்திய கிழக்கின் மீது ஆழ்த்தியிருந்த குழப்பநிலையானது, சிரியாவில் அமெரிக்காவின் ஆட்சி-மாற்ற நடவடிக்கை படுதோல்வி கண்டதில் உச்சமடைந்தது.
10. கடந்த கால் நூற்றாண்டின் இராணுவ அழிவுகள் அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலையின் சிதைவால் மேலும் சிக்கலாக்கப்பட்டிருக்கின்றன, பரந்த மக்களின் வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியில் இது முன்னினும் நேரடியான வெளிப்பாட்டை கண்டிருக்கிறது. தோமஸ் பிக்கெட்டி, இமானுவேல் சாஸ் மற்றும் காப்ரியல் ஸுக்மான் ஆகியோரது சமீபத்திய அறிக்கை ஒன்றின் படி, அமெரிக்காவில் தேசிய வருவாயில் மக்களின் கீழ்பாதிப்பேரது வரிக்கு முந்தைய பங்களிப்பானது 1980 இல் 20 சதவீதமாக இருந்ததில் இருந்து இன்று 12 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது, அதேநேரத்தில் அதன் தலைகீழாய், மேலேயிருக்கும் ஒரு சதவீதத்தினரின் பங்களிப்பு 12 சதவீதமாக இருந்ததில் இருந்து 20 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நான்கு தசாப்தங்களாக, கீழ் பாதி மக்களது உண்மையான வருவாய்கள் மாறாது இருந்து வந்திருக்கும் நிலையில், மேலிருக்கும் ஒரு சதவீதத்தினரின் வருவாய் 205 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது, அதிலும் மேலிருக்கும் .001 சதவீதம் பேருக்கு மலைக்க வைக்கும் வகையில் 636 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது.
அமெரிக்காவின் இளம் தலைமுறை கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறது, ஒரு குடும்பத்தை தொடங்குமளவுக்கோ அல்லது தங்களது பெற்றோரின் இல்லத்தை விட்டு அகலும் அளவுக்கோ அவர்களால் சம்பாதிக்க இயலாதிருக்கிறது. 1970 இல், 30 வயதானோரில் 92 சதவீதம் பேர் அதேவயதில் அவர்களது பெற்றோர் சம்பாதித்ததை விடவும் அதிகமாக சம்பாதித்து வந்திருந்தனர், 2014 இல் வெறும் 51 சதவீதம் பேர் மட்டுமே இந்நிலைக்கு வர முடிந்திருந்தது. மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் போதுமான ஆரோக்கிய பராமரிப்பு வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் முதன்முறையாக, தற்கொலை, போதை மருந்து உபயோகம் மற்றும் சமூக நெருக்கடியின் பிற வெளிப்பாடுகளின் காரணத்தால் மரணமடைவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பின் காரணத்தால், 2015 இல் ஒட்டுமொத்த ஆயுட்கால எதிர்பார்ப்பு வீழ்ச்சி கண்டது.
11. அமெரிக்க சமூகம் அதிகமான சமத்துவமற்றதாக ஆகியிருப்பதால், ஜனநாயகம் இன்னும் நிலவுவதாக நடிப்பது அதன் சித்தாந்தவாதிகளுக்கு அதிகமான கடினமாய் ஆகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்குள் நிலவுகின்ற ஆழமான வர்க்கப் பிளவுகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவது நிறம், இனம், பாலினம் மற்றும் பால்விருப்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட அடையாள அரசியலின் அத்தியாவசியமான செயல்பாடுகளில் ஒன்றாய் இருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்வானது அமெரிக்காவில் நிதிப்பிரபுத்துவ ஆட்சியின் யதார்த்தத்தை அதன் அத்தனை வெறுக்கத்தக்க நிர்வாணத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆயினும், ட்ரம்ப் ஏதோ, 2016 தேர்தல் தினம் வரையிலும், கொஞ்சம் எசகுபிசகாக இருந்தாலும் கூட அடிப்படையாய் கண்ணியத்துடன் இருந்த ஒரு சமூகத்திற்குள் அத்துமீறி புகுந்து விட்ட அரக்கன் போல் அல்ல என்பது வலியுறுத்தப்பட்டாக வேண்டும். நில சொத்து, நிதித்துறை, சூதாட்டம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளின் குற்றவியல்தனமான மற்றும் நோய்பீடித்த கலவைகளது விளைபொருளான ட்ரம்ப் தான் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உண்மையான முகமாவார்.
12. உள்வரும் ட்ரம்ப் நிர்வாகமானது, அது உள்ளடக்கியிருக்கும் அதன் நபர்களைப்போலவே அதன் நோக்கங்களிலும், நிதிப்பிரபுத்துவத்தின் கிளர்ச்சி தன்மையை கொண்டிருக்கிறது. அழிந்துபோகவுள்ள சமூக வர்க்கம் என்ற வகையில் அதன் முடிவை நெருங்குகின்ற சமயத்தில், வரலாற்றின் அலைகளுக்கு எதிர்த்துநிற்கும் தனது முயற்சியில், அதன் அதிகாரம் மற்றும் தனிச்சலுகைகளை நீண்டகாலமாக அரிப்பதாக அது கருதுகின்றவற்றை மீண்டும் தலைகீழாக்குவதற்கு முயற்சி செய்கின்ற வடிவத்தை அது எடுப்பதென்பது அபூர்வமான ஒன்றல்ல. சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களது தடுத்து நிறுத்தமுடியாத சக்திகள், அதன் ஆட்சியின் அடித்தளங்களை அரித்துத் தின்ன தொடங்கியதற்கு முன்பாக இருந்த நிலைமைகளுக்கு (அல்லது இருந்ததாக அது கற்பனை செய்த நிலைமைகளுக்கு) திரும்புவதற்கு அது முனைகிறது. இங்கிலாந்தில் 1640 இல் புரட்சி வெடிப்பதற்கு முன்பாக 11 ஆண்டுகளுக்கு முதலாம் சார்லஸ் நாடாளுமன்றத்தை கூட்டுவதை தடைசெய்தார். 1789 புரட்சியின் சமயத்தில் பாரிஸில் Etats-General (சட்டமன்ற, ஆலோசனை சபை) கூடிய சமயத்தில், பிரெஞ்சு பிரபுத்துவமானது 1613 முதலாக தேய்ந்து சென்றிருந்த தனது தனிச்சலுகைகளை மீண்டும் ஸ்தாபிக்க நோக்கம் கொண்டிருந்தது. அமெரிக்காவில் உள்நாட்டு போருக்கு முன்பாக தென்பகுதி உயரடுக்கினர் நாடெங்கிலும் அடிமைமுறையை விரிவுபடுத்தும் முயற்சியில் இருந்தனர். 1861 ஏப்ரலில் சம்டெர் கோட்டை மீதான துப்பாக்கிச்சூடு விளைவுரீதியாக அடிமை-உடையவர்களது கிளர்ச்சியின் தொடக்கத்தைக் குறித்து நின்றது.
“அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்க” ட்ரம்ப் அளிக்கும் வாக்குறுதியின் நடைமுறை அர்த்தம், பல தசாப்த கால வெகுஜனப் போராட்டங்களின் மூலமாக எட்டியிருந்த தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை ஓரளவுக்கு மேம்படுத்திய முற்போக்கான சமூக சீர்திருத்தங்களில் எஞ்சியிருக்கும் எதனையும் அழித்தொழிப்பது என்பதாகும். ட்ரம்ப்பின் சொந்த மனதில், “அமெரிக்காவை மகத்தானதாக்குவது” என்பது, 1890களின் நிலைமைகளுக்கு, அச்சமயத்தில் உச்சநீதிமன்றம் வருமானவரி என்பது கம்யூனிச முறை என்றும் அரசியல் சட்டவிரோதமானது என்றும் தீர்ப்பளித்த நிலைமைகளுக்கு திரும்புவதை கொண்டதாகும். 1913 இல் வருமான வரி ஸ்தாபிக்கப்பட்டு, அதனைச் சூழ்ந்து தொழிலாளர்கள், பரந்த மக்கள் மற்றும் சுற்றுசூழல் சுரண்டப்படுவதன் மீது வரம்புகளை அமைத்த சமூக சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் ஸ்தாபிக்கப்பட்டமையானது, ட்ரம்ப்பை பொறுத்தவரை, பணக்காரர்கள் அவர்கள் விரும்பிய அளவுக்கு பணம் சம்பாதிப்பதற்குக் கொண்டிருக்கும் உரிமை மீதான ஒரு தாக்குதலாகும். பொதுக் கல்விக்கு நிதியாதாரம் அளிப்பது, குறைந்த பட்சம் ஊதியம் நிர்ணயிப்பது, சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பராமரிப்பு, மருத்துவ உதவி மற்றும் பிற சமூக நல உதவித் திட்டங்கள் ஆகியவை பணக்காரர்களிடம் இருந்து நிதி ஆதாரங்களை திருப்பிவிடுவதை ஏற்படுத்தியவை. பில்லியனர்களையும் பலகோடி-மில்லியனர்களையும் கொண்ட ஒரு மந்திரிசபையை திரட்டுகின்ற ட்ரம்ப், செல்வந்தர்களால் செல்வந்தர்களுக்காக செல்வந்தர்களின் ஒரு அரசாங்கத்திற்கு தலைமைகொடுக்கும் நோக்கத்தை கொண்டிருக்கிறார்.
தனது கோடீஸ்வர-செல்வந்த சகாக்களுடன் சேர்த்து, முன்னாள் தளபதிகள் மற்றும் அப்பட்டமான பாசிஸ்ட்டுகளது ஒரு குழுவை ட்ரம்ப் தனது மந்திரிசபைக்குள் கொண்டுவந்திருப்பதோடு தனது பிரதான ஆலோசகர்களாகவும் தேர்வு செய்துள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களை கடிவாளமற்ற வகையில் திட்டவட்டம் செய்வதன் அடிப்படையிலான ஒரு வெளியுறவுக் கொள்கையை அபிவிருத்தி செய்வதே, அவர்களின் பணியாக இருக்கும். இதுவே “முதலில் அமெரிக்கா” என்ற சுலோகத்திற்கு புத்துயிரூட்டப்படுவதன் உண்மையான முக்கியத்துவம் ஆகும். அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கம் தேய்ந்து செல்வதுதான் அதன் ஏகாதிபத்திய திட்டநிரலுக்கு மேலும் அதிகமான மிருகத்தனத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. வோல் ஸ்டீரிட் நிதிமுதலைகள் மற்றும் உளவு முகமைகளது ஊழல்மிக்க கூட்டான ஜனநாயகக் கட்சியானது, ட்ரம்ப் மீதான தனது விமர்சனத்தை, ரஷ்யாவை நோக்கி அவர் “மென்மையாக” நடந்து கொள்வதாக கூறப்படுவதன் மீது குவித்துள்ளது. அது கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மோதுகின்ற புவியரசியல்ரீதியான மற்றும்/அல்லது பொருளாதாரரீதியான நலன்களை கொண்ட அத்தனை நாடுகளுடனுமே ட்ரம்ப் நிர்வாகம் மோதலை தொடரவும் தீவிரப்படுத்த இருக்கிறது.
13. சர்வதேசரீதியான வெளிப்பாடுகள் மற்றும் உள்நாட்டுரீதியான வெளிப்பாடுகள் இரண்டிலுமே, ட்ரம்ப்பின் கொள்கைகள் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினரின் வலது நோக்கிய ஒரு உலுக்கும் நகர்வை பிரதிபலிக்கின்றன. ட்ரம்ப்பின் எழுச்சிக்கு இணையாக பிரான்சில் தேசிய முன்னணி, ஜேர்மனியில் பெகீடா, இத்தாலியில் ஐந்து நட்சத்திர இயக்கம் மற்றும் பிரெக்ஸிட்டுக்கான பிரச்சாரத்துக்கு தலைமைகொடுத்த கட்சியான ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அரசியல் செல்வாக்கு பெருகியிருக்கிறது. ஜேர்மனியில், ஆளும் வர்க்கமானது பேர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையின் மீது நடந்த தாக்குதலை AfD (ஜேர்மனிக்கான மாற்று) தலைமையில் நடக்கும் அகதிகள்-விரோதப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதற்காய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கின் அரசியல் மற்றும் பொருளாதார சாரமானது, லெனின் விளக்கியவாறாக, ஏகாதிபத்தியத்தின் தன்மையிலேயே பொதிந்துள்ளது:
ஏகாதிபத்தியம் ஒட்டுண்ணித்தனமானது அல்லது அது சிதைந்து செல்லும் முதலாளித்துவமாகும் என்ற உண்மையானது, எல்லாவற்றுக்கும் முதலில், உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாக இருக்கும் அமைப்புமுறையின் கீழ் ஒவ்வொரு ஏகபோகத்தின் குணாம்சமாக இருக்கின்ற, சிதையும் போக்கில் வெளிப்படுவதாக இருக்கிறது. ஜனநாயகக் குடியரசு முதலாளித்துவம் மற்றும் பிற்போக்கான-முடியாட்சி ஏகாதிபத்திய முதலாளித்துவம் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் எல்லாம் மங்கிப் போய்விடுகிறது ஏனென்றால் இரண்டுமே உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றன... [”ஏகாதிபத்தியமும் சோசலிசத்திலான பிளவும்”, லெனின் நூல் திரட்டு, தொகுதி 23 (மாஸ்கோ: முன்னேற்றப் பதிப்பகம், 1977), பக். 106]
பகாசுர பெருநிறுவனங்களையும் வங்கிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசுகள் ஆதாரவளங்களையும், வர்த்தக வழிப்பாதைகளையும் மற்றும் சந்தைகளையும் கட்டுப்படுத்த சண்டையிடுகின்ற நிலையில், முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்துமே போருக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் வர்க்க மோதல்களை வன்முறையாக ஒடுக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தேசியவாதம் கையிலெடுக்கப்படுகிறது.
14. ஏகாதிபத்திய போரை உருவாக்கும் அதே முதலாளித்துவ நெருக்கடியானது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரப்படலையும் சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியையும் உருவாக்குகிறது. ஆழமான மற்றும் எளிதில் தீர்க்கமுடியாத வர்க்க மோதலால் பின்னப்பட்டிருக்கும் ஒரு நாட்டிற்கு ட்ரம்ப் தலைமை கொடுக்கவிருக்கிறார். உலகெங்கிலும் இதேபோன்ற நிலைமைகள் தான் நிலவுகின்றன. ஐரோப்பாவின் அத்தனை மக்களிலும் கால்வாசிப் பேர், அதாவது 118 மில்லியன் பேர் வறுமையாலோ அல்லது சமூத்திலிருந்து தனிமைப்படுத்தலாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்தது. ஸ்பெயினில் வறுமை விகிதம் 28.6 சதவீதமாக இருக்கிறது, கிரீசில் இது 35.7 சதவீதமாக இருக்கிறது. இந்நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளால் உத்தரவிடப்பட்ட மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு இலக்காகியிருந்த நாடுகள் ஆகும். இந்த ஆண்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களது எண்ணிக்கை 71 மில்லியனாக உயர்ந்தது, இது 2013க்குப் பிந்தைய முதல் அதிகரிப்பாகும். வெனிசூலாவில் பாரிய வறுமையும் மிகைபணவீக்கமும் உணவுக் கலகங்களுக்கு இட்டுச் சென்றுள்ளன. சீனாவில் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் பெருகிச் செல்வதானது வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போராட்ட வடிவங்களது கூரிய அதிகரிப்பில் வெளிப்படுத்தப்படுவதாக உள்ளது. ரஷ்யாவில், முதலாளித்துவ மீட்சியின் அதிர்ச்ச்சியும் அதனை சூழ்ந்த தொழிலாள வர்க்கத்தின் விரக்தியும் புதுப்பிக்கப்பட்ட சமூக போர்க்குணத்திற்கு பாதை அமைத்துக் கொண்டிருக்கின்றன. அதீத சமூக சமத்துவமின்மை நிலையும் புட்டின் தலைமையிலான முதலாளித்துவ ஆட்சியின் பிரபுத்துவ தன்மையும் முன்னெப்போதினும் பெரிய அளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றன.
15. இப்போது வரையிலும், அரசியல் வலதுகள், பேரினவாதத்தின் வாய்வீச்சு சுலோகங்களை பயன்படுத்தி, தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்குள்ளுமான சமூக அதிருப்தியை சுரண்டி வந்திருக்கின்றனர். ஆயினும், பேரினவாத வலதுகளின் பிற்போக்கான கட்சிகளது ஆரம்ப வெற்றிகளானவை ”இடது” என்றபேரில் கடந்துசெல்கின்ற அமைப்புகளது அதாவது சமூக ஜனநாயகக் கட்சிகள், ஸ்ராலினிஸ்டுகள், தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் மற்றும் பசுமைக் கட்சியினர், ஜேர்மனியில் இடது கட்சி, கிரீசில் சிரிசா மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் போன்ற குட்டி-முதலாளித்துவ மார்க்சிச-விரோத கட்சிகளின் அரசியல் சிடுமூஞ்சித்தனம், ஏமாற்று மற்றும் திவால்நிலையின் மீதே சார்ந்திருந்து வந்திருக்கின்றன. அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற அரசு-முதலாளித்துவ மற்றும் பப்லோவாத அமைப்புகளையும் இவற்றுடன் சேர்த்துக் கொள்ளலாம். நடுத்தர வர்க்கத்தின் இந்த பிற்போக்கான அமைப்புகளது அத்தனை அரசியல் ஆற்றலும் தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை மாற்றி முதலாளித்துவத்திற்கு எதிரான அதன் போராட்டம் அபிவிருத்தி காண்பதற்கு முட்டுக்கட்டையிடும் பொருட்டு மார்க்சிசத்தை பொய்மைப்படுத்துவதிலேயே செலவிடப்படுகின்றன.
16. ஆனால் நிகழ்வுகளின் அழுத்தமானது தொழிலாள வர்க்கத்தை இடது நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் இருக்கும் பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில், கோபம் மற்றும் போர்க்குணத்தின் மனோநிலை பெருகிக் கொண்டிருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி மற்றும் சோசலிசம், மார்க்சிசத்தின் ஆர்வத்தில் ஒரு மறுமலர்ச்சி, இரண்டின் அறிகுறிகளும் அங்கே இருக்கின்றன. அமெரிக்காவில், சோசலிஸ்டாக கூறிக் கொண்ட பேர்னி சாண்டர்ஸுக்கு, ஜனநாயகக் கட்சியின் முதனிலைத் தேர்தலில் 13 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள் என்றால் அது அவரது சந்தர்ப்பவாத அரசியலுக்காக அல்ல, மாறாக ”பில்லியனர் வர்க்க”த்தின் மீதான அவரது கண்டனங்களுக்காகவும் ஒரு “அரசியல் புரட்சி”க்கு அவர் விடுத்த அழைப்புகளுக்காகவும் ஆகும். இது உலக முதலாளித்துவத்தின் இயல்பான தன்மையால் உத்தரவிடப்படுகின்ற ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கின் பாகமாகும். வர்க்கப் போராட்டமானது, அது வலிமையும் அரசியல் சுய-விழிப்பும் பெறப்பெற, மேலும் மேலும் அதிகமாக தேசிய அரசுகளின் எல்லைகளைக் கடந்து செல்வதற்கு முனையும். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக், 1988 ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டதைப் போல, “வர்க்கப் போராட்டமானது வடிவத்தில் மட்டுமே தேசியரீதியானது, ஆயினும் சாராம்சத்தில் அது ஒரு சர்வதேசப் போராட்டமாகும் என்பது மார்க்சிசத்தின் ஒரு அடிப்படை முன்மொழிவாக நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கிறது. ஆயினும், முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கொண்டு பார்த்தால், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேச தன்மையை பெற்றாக வேண்டும்.”
17. ஆயினும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர உள்ளாற்றலில் நம்பிக்கை கொள்வதென்பது அரசியல் மெத்தனத்திற்கான நியாயமாக ஆகிவிடாது. முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடி இருக்கின்ற முன்னேறிய நிலைக்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவு இருக்கின்ற நிலைக்கும் இடையில் ஒரு பரந்த இடைவெளி இருக்கிறது என்ற உண்மையை உதாசீனம் செய்வது என்பது பொறுப்பற்ற செயலாக இருக்கும். அவ்விடத்தில்தான் ஒரு பெரும் அபாயம் பொதிந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஒரு சோசலிசப் புரட்சி இல்லாமல், மனித நாகரிகம் தப்பிப்பிழைப்பது என்பதே ஒரு கேள்விக்குறியாகும். இந்த சகாப்தத்தின் அடிப்படையான அரசியல் பணியானது புறநிலை சமூகப்பொருளாதார யதார்த்தத்திற்கும் அகநிலை அரசியல் நனவுக்கும் இடையிலான இடைவெளியை வெற்றிகாண்பதை உள்ளடக்கியதாகும். இது நிறைவேற்றப்பட முடியுமா?
18. வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தக் கேள்வி பதிலளிக்கப்பட முடியும். இருபதாம் நூற்றாண்டின் அத்தனை வெகுஜன எழுச்சிகளுக்கும் மத்தியில், வரலாற்றால் முன்நிறுத்தப்படும் கடமைகளின் மட்டத்திற்கு தொழிலாள வர்க்கம் உயர்ச்சி கண்டதற்கு ஒரு முன்னுதாரணமாக அக்டோபர் புரட்சி இருக்கிறது. இந்த சகாப்தத்தின் மாபெரும் பிரச்சினைகளை முகம்கொடுக்கும் சமயத்தில், அந்த வரலாற்று நிகழ்வினை ஆய்வு செய்வதும் அதன் படிப்பினைகளை உள்வாங்குவதும் அவசியமானதாகும்.
ரஷ்ய புரட்சியின் இந்த நூறாவது ஆண்டில், சமகால அரசியலுக்கும், வரலாற்று அனுபவத்திற்கும் இடையில் ஒரு ஆழமான சந்திப்பும் பரிமாற்றமும் இருக்கிறது. 1917 புரட்சியானது முதலாம் உலகப் போரின் ஏகாதிபத்திய பேரழிவில் இருந்து எழுந்தது. சாரிச ஆட்சி தூக்கிவீசப்பட்டதை தொடர்ந்து எழுந்த அரசியல் சூறாவளியில், தொழிலாள வர்க்கத்திற்குள்ளான செல்வாக்கான சக்தியாக போல்ஷிவிக் கட்சி எழுந்தது. ஆயினும், 1917 இல் போல்ஷிவிக்குகளால் ஆற்றப்பட்ட பாத்திரமானது, தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்காகவும் ஒரு சரியான புரட்சிகர முன்னோக்கை வகுத்தெடுப்பதற்குமான ஒரு நெடிய மற்றும் கடினமான போராட்டத்தின் விளைபயனாகும்.
19. அந்தப் போராட்டத்தின் இன்றியமையாத கூறுகளாக இருந்தவை எவை என்றால்: 1) தொழிலாள வர்க்கத்தின் கல்வி மற்றும் புரட்சிகர நடைமுறைக்கான தத்துவார்த்த அடித்தளமாய், மெய்யியல் கருத்துவாதம் மற்றும் மார்க்சிச-விரோத திருத்தல்வாதம் ஆகியவற்றுக்கு எதிராக இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாதத்தை பாதுகாத்தமை மற்றும் விரித்துரைத்தமை; 2) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்திற்கு முட்டுக்கட்டையிட்ட அல்லது குழிபறித்த சந்தர்ப்பவாதம் மற்றும் மத்தியவாதத்தின் பல வடிவங்களுக்கும் எதிரான தளர்ச்சியற்ற போராட்டம்; மற்றும் 3) 1917 இல் அதிகாரத்திற்கான போராட்டத்தை நோக்கி போல்ஷிவிக் கட்சியை நோக்குநிலை அமைத்திருந்த மூலோபாய முன்னோக்கினை, பல வருட காலத்தில், செதுக்கி உருவாக்கியிருந்தமை. இந்த பிந்தைய நிகழ்ச்சிப்போக்கில், முந்தைய தசாப்தத்தில் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிரந்தரப் புரட்சி முன்னோக்கினை லெனின் ஏற்றுக் கொண்டமையானது, இடைக்கால அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கு இட்டுச் சென்ற மாதங்களில் போல்ஷிவிக்குகளின் மூலோபாயத்தை வழிநடத்திய இன்றியமையாத முன்னேற்றமாக இருந்தது.
20. தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெற்றிகாண்பதென்பது, இறுதி ஆய்வில், தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச கட்சியை கட்டியெழுப்புவதன் மீதே தங்கியிருந்தது என்பதை 1917 அக்டோபரில் சோசலிசப் புரட்சி பெற்ற வெற்றி நிரூபித்துக் காட்டியது. தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கமானது எத்தனை பெரியதாக மற்றும் சக்திவாய்ந்ததாக இருக்கும்போதும், முதலாளித்துவத்தை அது வெற்றி காண்பதற்கு ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச கட்சியின் நனவான அரசியல் தலைமை அதற்கு அவசியமாக இருக்கிறது. சோசலிசப் புரட்சியின் வெற்றியை சாதிப்பதற்கு வேறெந்தவொரு வழியும் இல்லை.
இந்த அரசியல் கட்டாயத்தை அங்கீகரிப்பதே இந்த நூறாவது ஆண்டில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகளை வழிநடத்தவிருக்கிறது. சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியானது மார்க்சிச தத்துவத்திற்கும் அரசியலுக்கும் பரந்த பார்வையாளர்களை உருவாக்குகின்ற வேளையில், ரஷ்ய புரட்சி குறித்த அறிவை விரிவுபடுத்துவதற்கும் நெருக்கடியால் அரசியல் விழிப்பூட்டப்பட்டுள்ள மற்றும் தீவிரமயப்படுத்தப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் புதிய அடுக்குகளுக்கு “அக்டோபரின் படிப்பினைகள்” ஐ படிப்பிப்பதற்கும் அனைத்துலகக் குழு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்.
2017 ம் ஆண்டு ஆரம்பிக்கின்ற நிலையில், புரட்சிகர போராட்டத்தில் செயலூக்கத்துடன் பங்கேற்பதற்கும் நான்காம் அகிலத்தில் இணைந்து சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக அதனைக் கட்டியெழுப்புவதற்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை நாங்கள் அழைக்கிறோம். இதுவே ரஷ்ய புரட்சி மற்றும் 1917 அக்டோபர் வெற்றியின் நூறாவது ஆண்டை கொண்டாடுவதற்கான மிக பொருத்தமானதும் மிகவும் ஆக்கபூர்வமானதுமான வழியாகும்.