Print Version|Feedback
Strike wave against austerity spreads in France, Belgium
சிக்கன நடவடிக்கைக்கு எதிரான வேலைநிறுத்த அலை பிரான்ஸ், பெல்ஜியத்தில் பரவுகிறது
By Kumaran Ira
26 May 2016
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தங்களும் உள்ளிருப்புப் போராட்டங்களும் தொடர்கின்ற நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் மீது கலகத் தடுப்புப் போலிசார் தாக்குதல்கள் தொடுக்கின்ற போதும், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் புறக்கணிப்பு போராட்டங்களும் அண்டையிலிருக்கும் பெல்ஜியத்திலும் வெடித்துக் கொண்டிருக்கின்றன. செவ்வாய்கிழமையன்று, பிரதமர் சார்ல்ஸ் மிசேலின் பழமைவாத அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக சுமார் 60,000 தொழிலாளர்கள் புரூசேல்ஸில் பேரணி நடத்தினர்.
நல உதவி அமைப்புமுறையிலான திட்டமிட்ட வெட்டுகள், பொதுசேவை மற்றும் கல்வி நிதியாதார ஒதுக்கீட்டிலான வெட்டுகள் மற்றும் வாரத்திற்கு 45 மணி நேர வேலையை அறிமுகம் செய்வதற்கும் கூடுதல் ஊதியமில்லாமல் மேலதிக நேர வேலையை திணிப்பதற்கும் முதலாளிகளை அனுமதிக்கக் கூடிய தொழிலாளர் சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக இந்த புரூசேல்ஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக, மிசேலின் அரசாங்கமானது மார்ச் 22 அன்று புரூசேல்ஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பின்னர் திணிக்கப்பட்டிருந்த அசுரத்தனமான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியிருந்தது. மார்ச் 22 தாக்குதல்தாரர்களது அடையாளம் குறித்தும் திட்டங்கள் குறித்தும் வெளிநாட்டு உளவு முகமைகள் அளித்திருந்த முன்கூட்டிய எச்சரிக்கைகளை உதாசீனம் செய்திருந்த பெல்ஜிய அரசாங்கம், அதன்பின்னரான பாதுகாப்பு நடவடிக்கைகளை, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்தான எதிர்ப்பை ஒடுக்குவதற்காய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது இப்போது தெளிவாக இருக்கிறது. செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கலகத் தடுப்பு போலிசார் தண்ணீர்ப் பீரங்கிகளையும் கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தியதில் பலரும் காயமடைந்தனர். பத்து பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பெல்ஜியத்தில் சிக்கன நடவடிக்கைக்கு எதிராகப் பெருகிச் செல்லும் இயக்கமானது பிரான்சில் வேலைநிறுத்தங்களின் ஒரு அலை அதிகரித்துச் செல்வதுடன் அதேசமயத்தில் நிகழ்கிறது. PS இன் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டமானது வேலை வாரத்தை வாரத்திற்கு அதிகபட்சம் 46 மணி நேரங்கள் வரை நீட்டிப்பதற்கும் ஊதியங்களை வெட்டுவதற்கும் நிறுவனங்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை அனுமதிக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் பெருவாரியாக எதிர்க்கப்படுகின்ற இந்தச் சட்டமானது, பல தசாப்த கால போராட்டத்தில் தொழிலாளர்கள் வென்றெடுத்திருந்த சமூக உரிமைகள் மீதான ஒரு முறையற்ற தாக்குதலாகவே பரவலாய் பார்க்கப்படுகிறது.
பிரான்சில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில், துறைமுகங்களில், பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறையில், ரயில்வேயில், எரிசக்தித் துறையில், போக்குவரத்து மற்றும் கட்டுமானத் துறையில் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மே 19 ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதற்கு பின்னர், இன்று தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
ஒரு வார காலமாய் நடந்து வரும் எண்ணெய் துறை தொழிலாளர் வேலைநிறுத்தம் பிரெஞ்சு பொருளாதாரத்தை முடக்கியிருப்பதோடு பரவலான எரிபொருள் பற்றாக்குறையிலும் விளைந்திருக்கிறது. பிரான்சின் 12,000 எரிபொருள் நிரப்பல் நிலையங்களில் 30 சதவீதம் நிலையங்கள் எரிபொருள் விநியோகமற்றோ அல்லது அதற்கு நெருக்கமான நிலையிலோ இருக்கின்றன.
ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கும் தொழிலாளர்களை கபடத்துடன் கண்டிப்பதன் மூலமாக PS அரசாங்கம் பதிலிறுப்பு செய்திருக்கிறது. “ஜனநாயகம் ஒரு சிறுபான்மையினரிடம் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டிருப்பதாக” பிரதமர் மானுவல் வால்ஸ் கூறினார்.
இது கொஞ்சமும் மனச்சாட்சியற்ற ஆத்திரமூட்டுகின்றதான ஒரு பொய் ஆகும். வெகுஜன எதிர்ப்பு பெருவாரியாக இருக்கும் நிலையில் பிற்போக்குத்தனமான ஒரு சட்டத்தை ஒரு நாடாளுமன்ற வாக்களிப்பு இல்லாமலேயே பிரெஞ்சு அரசியல் சட்டத்தின் ஜனநாயகவிரோதமான 49.3 பிரிவின் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி திணித்திருப்பதன் மூலமாக, PS அரசாங்கம் தான் ஒரு சர்வாதிகாரத்தைப் போல நடந்து கொண்டிருக்கிறது.
வேலைநிறுத்தத்தால் உண்டாகியிருக்கும் சமூகப் பதட்டங்களுக்கும் தொழிற்துறை இடையூறுகளுக்கும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் பிரதமர் மானுவல் வால்ஸுமே பொறுப்பு என்றே பெருவாரியான மக்கள் கருதுகின்றனர். வேலைநிறுத்தக்காரர்கள் அல்ல, மாறாக தொழிலாளர் சட்டத்தைத் திரும்பப் பெற்று PS தான் இறங்கிச் செல்ல வேண்டும் என்பதற்கே சுமார் 70 சதவீத மக்கள் ஆதரவாக இருக்கின்றனர் என்பதை நேற்று வெளியான Elabe கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்திருந்தது.
இந்த வேலைநிறுத்தங்கள் PS அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி அதற்கு ஒரு ஆழமான நெருக்கடியைத் தூண்டிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான அழைப்புகள் PSக்குள் இருந்தும் கேட்கின்றன. தேசிய சட்டமன்றத்தில் PS பிரிவின் தலைவராக இருக்கும் Bruno Le Roux, அரசாங்கம் தொழிலாளர் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். குறிப்பாக அவர், தொழிலாளர் சட்டத்தை மீறிய வகையில் ஒப்பந்தங்களில் தொழிற்சங்கங்கள் கையெழுத்திடுவதையும் அமல்படுத்துவதையும் அனுமதிப்பதாகவும், தொழில்துறை ரீதியான ஒப்பந்தங்களை கோருவதாகவும் இருக்கின்ற பிரிவு 2 ஐ தனிப்படுத்தி குறைகூறினார்.
வால்ஸ் இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் எதிர்த்திருந்தார். “சட்டத்தை திரும்பப் பெறுவதோ அல்லது இந்த மசோதாவின் சித்தாந்தத்தின் இதயத்தானமாக இருக்கக் கூடிய பிரிவு 2 ஐ சவால் செய்வதோ நடவாது” என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
மாறாக, வேலைநிறுத்தங்களையும் எண்ணெய் துறை தொழிலாளர்களின் முற்றுகைகளையும் நசுக்குவதற்கு போலிஸ் ஒடுக்குமுறையைப் பயன்படுத்த PS அரசாங்கம் தீர்மானத்துடன் இருக்கிறது.
செவ்வாய்கிழமையன்று மார்சைய் அருகில் உள்ள Fos-sur-Mer எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை முற்றுகையிட்ட தொழிலாளர்களை தாக்குவதற்கு கலகத் தடுப்புப் போலிசார் அனுப்பப்பட்டிருந்த நிலையில், நேற்று வடக்கு பிரான்சில் Valenciennes அருகிலுள்ள Douchy-les-Mines இல் இருக்கும் ஒரு முக்கியமான எண்ணெய் கிடங்கிற்கான போக்குவரத்தை மீண்டும் சீர்செய்வதற்காக போலிஸ் தலையிட்டது. இந்த எண்ணெய் கிடங்கு மே 19 முதலாக CGT உறுப்பினர்கள் மற்றும் Solidaires சங்கங்களின் உறுப்பினர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது.
செவ்வாய்கிழமையன்று தொழிலாளர்கள் மீதான தாக்குதல் காலை சுமார் 5 மணிக்குத் தொடங்கியது. 20 போலிஸ் டிரக்குகள் எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தில் குவிக்கப்பட்டு பாதையை மறித்திருந்த 80 தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதற்கு கலகத் தடுப்புப் போலிசார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர்.
போலிஸ் ஒடுக்குமுறையை மீறி, வேலைநிறுத்தங்கள் பிரான்சின் எண்ணெய் ஆலைகள் முழுமைக்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் எட்டு சுத்திகரிப்பு ஆலைகளுமே வேலைநிறுத்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன. Lyon அருகே Feyzin இல் இருக்கும் Total நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையும் Total நிறுவனத்தின் Normandy ஆலையும் உற்பத்தியை நிறுத்தியிருக்கின்றன. பாரிஸ் அருகேயிருக்கும் Grandpuits ஆலை விரைவில் முழுமையாக இயக்கத்தை நிறுத்தவிருக்கிறது, Nantes அருகேயிருக்கும் Donges பல அலகுகளை மூடவிருக்கிறது. Fos-sur-Mer இல் இருக்கும் La Mèdeம் Marseille பிராந்தியத்தில் இருக்கும் Lavéraம் மிகக் குறைந்த அளவில் இயங்கி வருகின்றன. பிரான்சில் இருக்கும் மொத்தம் 78 எண்ணெய் கிடங்குகளில் டசன்கணக்கான எண்ணெய்கிடங்குகளும் பாதை மறிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் பற்றாக்குறை மோசமடைகின்ற நிலையில், அரசாங்கம் அதன் மூலோபாய எண்ணெய் கையிருப்பில் இருந்து பகுதியாக வெளிவிடத் தொடங்கியிருக்கிறது. பிரெஞ்சு எண்ணெய் துறை குழுமமான UFIP (Union Française des Industries Petrolières) இன் தலைவரான பிரான்சிஸ் ட்யூசெக்ஸ் RMC வானொலியிடம் பின்வருமாறு கூறினார்: “கடந்த இரண்டு நாட்களில், எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளிலான பிரச்சினைகளாலும் எண்ணெய் கிடங்குகள் முற்றுகை பிரச்சினைகளாலும், நாங்கள், அரசாங்க அதிகாரிகளுடன் சேர்ந்து, கையிருப்பு எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்.”
ஆர்ப்பாட்டங்களால் மிரண்டிருக்கும் ஆளும் வட்டாரங்கள், அரசாங்கம் அரசியல்ரீதியாக பாதுகாக்கப்பட்டிருக்கும் வேலைநிறுத்த உரிமையை கழுத்தை நெரித்து தொழிலாளர்களை பலவந்தமாய் வேலைக்கு திரும்பக் கொண்டுவர வேண்டும் என்று கோருகின்றன. எண்ணெய் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப சட்டபூர்வமாய் நிர்ப்பந்திக்கக் கூடிய உத்தரவை எண்ணெய் தொழிலாளர்களுக்கு PS பிறப்பிக்க வேண்டும் என்று வலது-சாரி எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் (LR) கோரி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினரான எரிக் சியோத்தி கூறினார்: “2010 இல் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி செய்ததைப் போல, நாம் அவர்களுக்கு சட்ட உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். இது தேசிய நலன் தொடர்பானதாகும். ஒரு சிறுபான்மை எண்ணிக்கையிலானோரால் நாடு முற்றுகையிடப்பட நாம் அனுமதிக்கக் கூடாது.”
இதனிடையே தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக பிரான்சின் மற்ற தொழிற்துறைகளிலும் வேலைநிறுத்தங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. CGT-Energy கூட்டமைப்பு பிரான்சின் அரசு மின்துறை நிறுவனமான EDF இல் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்திருப்பதோடு மின் உற்பத்தியை முடக்கும் வகையில் ஆலை முற்றுகைகளுக்கும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இது நாடெங்கிலும் மின் வெட்டுகளுக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும். நேற்று பாரிஸின் தென்கிழக்கில் இருக்கக் கூடிய Nogent-sur-Seine ஆலை மற்றும் வடக்கில் இருக்கக் கூடிய Gravelines ஆகியவை உள்ளிட பிரான்சில் இருக்கும் 19 அணுசக்தி நிலையங்களில் தொழிலாளர்கள் வியாழனன்று வேலைநிறுத்தத்தில் இறங்குவதற்கு ஆதரவாய் வாக்களித்தனர்.
பிரெஞ்சு தேசிய இரயில்வே தொழிற்சங்கங்கள் (SNCF) நேற்றும் இன்றும் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன என்பதோடு, மே 31 தொடங்கி அன்றாடம் புதுப்பிக்கத்தக்க ஒரு வேலைநிறுத்த நடவடிக்கைக்கான நோட்டிஸை CGT விநியோகித்தது. பாரிஸ் போக்குவரத்து அமைப்பிலும் ஜூன் 2 தொடங்கி PS இன் தொழிலாளர் சட்டத்திற்கும் மோசமான வேலை நிலைமைகளுக்கும் ஊதியங்களுக்கும் எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள், நிர்வாக ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் உட்பட விமான நிலையத் தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பல விமான நிலையங்களிலும் விமானங்கள் இரத்தாகின. ஜூன் 2 க்கும் ஜூன் 5 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர் சட்டத்துக்கு எதிராகவும் ஊழியர் எண்ணிக்கை குறைப்புக்கு எதிராகவும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் மற்றும் பயணிகள் விமானப் போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோரது ஒரு தேசிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
துறைமுக மற்றும் கப்பல் முனைய தொழிலாளர்களும் போராட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கின்றனர். பிரான்சின் இறக்குமதியில் 40 சதவீதத்தைக் கையாளுகின்ற மார்சைய் மற்றும் Le Havre முனையத் தொழிலாளர்கள், Fos-sur-Mer எண்ணெய் ஆலையில் செவ்வாயன்று நடந்த போலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை வரை வேலைநிறுத்தம் செய்வதற்கு வாக்களித்துள்ளனர்.
திங்கள் முதலாகவே, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு செல்லக் கூடிய கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குவதற்கு மார்சைய் முனையத் தொழிலாளர்கள் மறுத்து விட்டிருந்தனர். மார்சையின் துறைமுக வேலையிடங்களிலும் இரண்டு எண்ணெய் முனையங்களை கையாளும் தனியார் நிறுவனமான Fluxel வேலையிடங்களிலும் வெள்ளிக்கிழமை வரையிலும் வேலை நிறுத்தி வைப்புக்கு CGT அழைப்பு விடுத்திருந்ததை அடுத்து கச்சா எண்ணெய் சுமந்து வந்த சுமார் 29 கப்பல்கள் நேற்று கேட்பாரற்று நின்று கொண்டிருந்தன.