Print Version|Feedback
A resurgence of class struggle
வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சி
By Barry Grey
21 May 2016
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய தொழிற்துறை நாடுகளில் ஒரு கால் நூற்றாண்டு காலமாக செயற்கையாக நசுக்கப்பட்ட வர்க்க போராட்டங்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு அங்கே அதிகரித்த அறிகுறிகள் உள்ளன. பிரான்சில், வலதுசாரி சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் திணித்த ஓர் அவசரகால நெருக்கடி நிலைக்கு கீழ்படியாமல், ஒரு பிற்போக்குத்தனமான தொழிலாளர் "சீர்திருத்த" சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஒரு அலையை சமீபத்திய வாரங்கள் கண்டுள்ளன; கிரீஸில் போலி-இடது சிரிசா கட்சி நடைமுறைப்படுத்திய சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கிரேக்க தொழிலாளர்கள் ஒரு பொது வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்; தொழிற் கட்சியின் ஆதரவுடன் பழமைவாத கட்சி அரசாங்கத்தால் நடத்தப்பட்ட சமூக வெட்டுக்களுக்கு எதிராக பிரிட்டனில் கீழ்நிலை மருத்துவர்களின் வேலைநிறுத்தங்கள் நடந்தன; பெல்ஜியத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் ஒரு வேலைநிறுத்தமும், இந்தியா மற்றும் சீன தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் நடந்துள்ளன.
அமெரிக்காவில், பல ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அமெரிக்க தொழிலாளர் வேலைநிறுத்தமாக, உலகளாவிய தொலைத்தொடர்பு பெருநிறுவனம் வெரிசோனுக்கு எதிராக 39,000 தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தம் இப்போது ஆறாவது வாரமாக நிகழ்ந்துகொண்டிருகின்றது. இது இன்னமும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும் குறிப்பிடத்தக்கதாகும், இது, உலக முதலாளித்துவ மையத்தில், வர்க்க போராட்டம் வளர்ச்சியடைந்துகொண்டிருப்பதன் ஒரு வெளிப்பாடாக உள்ளது. இது டெட்ராய்ட் மற்றும் ஏனைய நகரங்களில் ஆசிரியர்களது தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் மருத்துவ விடுப்பு போராட்டங்களுடன், மிச்சிகன் ஃப்ளிண்ட் இல் நச்சுத்தன்மையுடன் குடிநீர் வினியோகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் மற்றும் நிராயுதபாணியான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பொலிஸ் படுகொலை செய்வதற்கு எதிரான போராட்டங்கள் போன்ற ஒரு சமூக போராட்ட அலையுடன் சேர்கிறது.
இத்தகைய சகல போராட்டங்களும் தொழிற்சங்கங்களின் துரோகம் மற்றும் நாசவேலைகளுக்கு இடையில் தான் நடந்து வருகின்றன. வெரிசோன் தொழிற்சங்கங்களான அமெரிக்க தொலைதொடர்பு தொழிலாளர்கள் சங்கம் (CWA) மற்றும் மின்துறை தொழிலாளர்களின் சர்வதேச சகோதரத்துவம் (IBEW) ஆகியவை வெரிசோன் தொழிலாளர்களை தனிமைப்படுத்தி உள்ளதுடன், நிறுவனம் வேலைநிறுத்தத்தை உடைப்பதை அல்லது பொலிஸ் காவல் மற்றும் பாதுகாப்புடன் கருங்காலிகளைக் கொண்டு மறியலில் ஈடுபடுபவர்கள் மீது வன்முறையாக தாக்குதல்கள் நடத்துவதை எதிர்ப்பதற்கு அவை ஒன்றுமே செய்யவில்லை.
அவை ஒரு காட்டிக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தைத் திணித்து, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வெளிநடப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீவிரமயப்பட்ட உந்துதலின் ஓர் அறிகுறியாக, CWA மற்றும் IBEW இன் கூட்டாளிகளான காங்கிரஸில் உள்ள 88 ஜனநாயகக் கட்சியினர் வியாழனன்று அந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அழைப்புவிடுத்து ஒரு பகிரங்க கடிதம் பிரசுரித்தனர்.
2015 இல், டெட்ராய்டை மையமாக கொண்ட வாகன உற்பத்தியாளர்களுடன் அவை கையெழுத்திட்டு காட்டிக்கொடுத்த ஒப்பந்தங்களுக்கு எதிராக வாகனத்துறை தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சியை ஒடுக்குவதில் வெற்றி பெற, ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்களது தொழிற்சங்கம் (UAW) கடுமையாக போராட வேண்டியிருந்தது. எவ்வாறிருப்பினும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தலையாய முயற்சிகளுக்கு இடையிலும், கடந்த ஆண்டு வேலைநிறுத்த நடவடிக்கைகள், மிதமாக இருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்திருந்தன.
தொழிலாளர் புள்ளிவிபரங்களுக்கான அமெரிக்க ஆணையம் (BLS) கடந்த பெப்ரவரியில் வெளியிட்ட புள்ளிவிபரங்கள், அமெரிக்காவில் பரந்தளவிலான வர்க்க போராட்டங்களின் திருப்புமுனையைக் குறிக்கின்றன. அவை பிரதான தொழிலாளர் போராட்டங்களில் இழந்த வேலை நாட்களின் எண்ணிக்கை, 2015 இல் 400 சதவீதமாக அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகரித்திருப்பதாக எடுத்துக்காட்டுகின்றன. இந்த பெருகிய அதிகரிப்பு கடந்த ஆண்டு அமெரிக்கா எங்கிலும் 5,000 எண்ணெய் துறை தொழிலாளர்களின் நான்கு மாதகால வேலைநிறுத்தம் மற்றும் பிட்ஸ்பேர்க் ஐ மையமாக கொண்ட Allegheny Technologies நிறுவனத்தின் 2,200 எஃகுத்துறை தொழிலாளர்களின் கதவடைப்பு ஆகியவற்றையும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.
வெரிசோன் வேலைநிறுத்தமானது, 2016 இற்கான தொழிலாளர் வேலைநிறுத்தத்தால் இழந்த வேலை நாட்களின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரிக்கும். இதற்கிடையே, 573,000 தபால்துறை தொழிலாளர்கள், நூறாயிரக் கணக்கான மாநில மற்றும் உள்ளாட்சி அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், நூறாயிரக்கணக்கான சில்லறை விற்பனைத்துறை தொழிலாளர்களது தொழிலாளர் ஒப்பந்தங்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன.
வேலைநிறுத்த நடவடிக்கையின் மட்டம், 1940 களில் இருந்து 1980 கள் வரையில் வழக்கமாக இருந்த வேலைநிறுத்த நடவடிக்கை மட்டத்தை விட குறைவாகவே உள்ளது. 2015 இல், 47,000 தொழிலாளர்களை உள்ளடக்கிய (1,000 அல்லது அதற்கு அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட) 12 பிரதான வேலை நிறுத்தங்கள் நடந்தன, இது அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகமாகும். இது அமெரிக்க வேலைநிறுத்தங்களின் உச்சக்கட்ட ஆண்டான 1952 உடன் ஒப்பிடப்படுகிறது, அப்போது 470 பிரதான தொழில்துறை பிரச்சினைகளில் 2.7 மில்லியன் தொழிலாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.
1981 இல் PATCO விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தத்தை சிதறடித்து, றீகன் அரசாங்கத்தால் 11,000 வேலைநிறுத்தக்காரர்கள் வேலையில் இருந்து நீக்கப்படவும் மற்றும் கரும்புள்ளி குத்துவதற்கும் AFL-CIO மறைமுகமாக ஒத்துழைத்ததில் இருந்து தொடங்கி, பாரிய வேலைநீக்கங்கள், கூலி வெட்டுக்கள் மற்றும் தொழிற்சங்க-உடைப்புக்களுக்கு எதிரான கடுமையான வேலைநிறுத்த அலையை 1980 களில் AFL-CIO காட்டிக்கொடுத்தது. இது, வரலாற்றளவில் அமெரிக்காவில் வேலைநிறுத்தங்கள் குறைந்து போகும் தசாப்தங்களுக்கு இட்டுச் சென்றது. சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியும், பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் சாதனையளவிலான செல்வவள உயர்வும், ஒழுங்கமைக்கப்பட்ட வர்க்க போராட்டத்தின் எந்தவொரு வடிவமும் நடைமுறையளவில் மறைந்து போனதுடன் நேரடியாக பிணைந்ததாகும்.
2008 இல் நிதியியல் அமைப்புமுறையின் பொறிவு மற்றும் அதற்குப் பின்னர் வேலைகள் மீதான, கூலிகள் மற்றும் சமூக திட்டங்கள் மீதான தாக்குதல்கள், தொழிலாள வர்க்கத்தை அதிர்ச்சியூட்டி நிலைநோக்கு பிறழச் செய்தது. ஆனால் உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்கள் கடந்த சமூக வெற்றிகள் அனைத்தையும் துடைத்தழித்து, தொழிலாள வர்க்கத்தை மோசமான வறுமைநிலைக்கு கொண்டு வர இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்ற நிலையில், தொழிலாளர்கள் கடுமையான போராட்டத்தைத் தவிர எந்த மாற்றீடும் இல்லை என்பதை உணரத் தொடங்கி உள்ளனர்.
வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சி, தொழிற்சங்கங்களின் ஆதரவு பெற்ற சகல உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளுக்கு எதிராக, அதாவது பிரிட்டனில் தொழிற் கட்சி, பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி, ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சிக்கு எதிராக, தொழிலாளர்கள் திரும்ப தொடங்கி இருப்பதில் அரசியல் வெளிப்பாட்டைக் கண்டு வருகிறது.
அமெரிக்காவில், தொழிலாள வர்க்க போர்குணம் அதிகரித்திருப்பது ஓர் ஆழ்ந்த அரசியல் தீவிரமயப்படலின் ஆரம்ப கட்டங்களுடன் இணைந்ததாகும். இது ஆரம்பத்தில் பேர்ணி சாண்டர்ஸ் இற்கான பரந்த ஆதரவில் பிரதிபலித்தது. முதலாளித்துவத்தை நிராகரிக்கும் மற்றும் ஒரு தீவிர மாற்றீட்டை எதிர்நோக்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், ஒரு சோசலிஸ்ட் என்று அவர் கோரியதை மிகப்பெரிதாக்கினர். அவரது பிரச்சாரம், வர்க்க போராட்ட வளர்ச்சிக்கும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான புரட்சிகர அரசியல் இயக்க மேலெழுச்சியின் அபாயத்திற்கும், ஒரு முன்கூட்டிய விடையிறுப்பாகும். இத்தகைய இயக்கத்தை ஜனநாயகக் கட்சிக்குள் சிக்க வைப்பதே அதன் நோக்கமாக உள்ளது.
அதே போல டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரமும், இப்போதைய இந்த பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறைக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரித்து வருவதற்கு ஒரு முன்கூட்டிய விடையிறுப்பாகும். இதன் நோக்கம், இந்த இயக்கத்தை பேரினவாத மற்றும் தேசியவாத வரிசையில் திருப்பிவிடுவதும் மற்றும் உள்நாட்டு சமூக பதட்டங்களை ஒடுக்க நேரடியாக முன்பினும் அதிக வன்முறை பிரயோகத்திற்கு நிலைமைகளைத் தயார் செய்வதும் ஆகும்.
வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சி அதன் ஆரம்ப கட்டங்களில் இருக்கலாம், ஆனால் அது வெடிப்பார்ந்த விதத்தில் விரிவடையும். இது, வறுமை, சர்வாதிகாரம் மற்றும் உலகளாவிய அணுஆயுத போர் பயங்கரத்தைத் தவிர வேறெதையும் வழங்காத உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியால் புறநிலைரீதியில் உந்தப்பட்டு வருகிறது. எல்லா போராட்டங்களும், அது வேலைநிறுத்தம் ஆகட்டும் அல்லது சமூக போராட்டங்கள் ஆகட்டும், புரட்சிகரமான பிரச்சினைகளை எழுப்புவதுடன், அரசியல் அதிகாரத்திற்கான பிரச்சினையை முன்கொண்டு வருகிறது.
தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் முதல் பணி, இந்த பிற்போக்குத்தனமான முதலாளித்துவ-சார்பு தொழிலாளர் அதிகாரத்துவங்களில் இருந்து உடைத்துக் கொள்வது அவசியமாகும். ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டமான இடைமருவு வேலைத்திட்டத்தில் (Transitional Program) விளக்கியவாறு, இந்த பணிக்கு ஒத்துழைக்கும் பலம் வாய்ந்த புறநிலை சக்திகள் அங்கே உள்ளன:
- பெருந்திரளான மக்களின் நிலைநோக்கு முதலாவதாக சிதைந்துவரும் முதலாளித்துவத்தின் புறநிலைமைகளாலும், இரண்டாவதாக தொழிலாளர்களது பழைய அமைப்புகளின் துரோகத்தனமான அரசியலாலும் தீர்மானிக்கப்படுகிறது. இந்த காரணிகளில், முதலாவது நிச்சயமாக தீர்க்கமான ஒன்றாகும்: வரலாற்று விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விட பலமானவை.
வெவ்வேறு போராட்டங்கள் அனைத்தையும் ஒரே வர்க்க போராட்டத்திற்குள் ஐக்கியப்படுத்த மற்றும் அதற்கு ஒரு புரட்சிகர அரசியல் முன்னோக்கை வழங்க ஒரு புரட்சிகர மார்க்சிச தலைமையைக் கட்டமைப்பது அவசரமான மற்றும் அத்தியாவசியமான தேவையாக உள்ளது.